ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சிவஸ்ரீ


யார் கேட்டது
கீறல் கோடிழுக்கும் உன்
பார்வைக் கதிர்வீச்சை ?

யார் சொன்னது
கனிந்து சிரித்தால்
காதல் தானென்று ?

உன்
விருப்புக்குத் தலையாட்ட
என்
சிரிப்புக்குத் தடைபோட்ட
சிநேகிதா… சிநேகிதா!

பெண்
சிரிப்புக்கும் சாயம் பூசாதே
கண்ணீருக்கும் மை பூசாதே

எங்கள்
நேர்கொண்ட பார்வையில்
வேர்கொண்ட தோழமை
புரிந்திடு!

கைதட்டி ஏற்றி விடுவதை விட
கைகொட்டி தூற்றி விடும்
கானல் சுகமுனக்கு
கற்பித்தது யார் ?

வேற்று கிரகத்திலிருந்து
விழுந்து முளைத்தவளில்லை
நேற்று உன் கனவில் வந்த
நீல தேவதையில்லை

உன்னோடு ஒருத்தியான
உயிரோடு உனைத்தந்த
உணர்வுள்ள பிறவி நான்

பெண்ணெனப் பேர் வைத்துப்
பிரித்துப் பார்க்காதே

உலகத்துப் பிரச்சனைகளெல்லாம்
உனக்கும் எனக்கும் ஒன்றே…

உன்னைப் போலவே அவற்றை
சந்திக்க மட்டுமல்ல
சிந்திக்கவும் தெரிந்தவள் தான்!

வழி நடத்த வேண்டாம்
தலைவனில்லை நீ!
வழி தொடர வேண்டாம்
கள்வனில்லை நீ!
செல்லும் வழியில்
சேர்ந்தே நடந்திடு
சகாப்த தூரங்களை
சாதாரணமாய்க் கடப்போம்

உரிமை கோரவில்லை
சுதந்திரம் கேட்கவில்லை
இயல்பாய் இருக்க விடு
இயல்பாய் நடக்க விடு!

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ