பி.கே. சிவகுமார் கவிதைகள்

This entry is part of 46 in the series 20030822_Issue

பி.கே. சிவகுமார்


சிகரெட்டு சொல்வதாக:

தீயிட்டுக் கொளுத்தியென்னை
சாம்பலாகத் தட்டுவதில்
சம்மதம்தான்
ஒவ்வொரு இழுப்புக்கும்
உன் அழுக்கு உடம்புக்குள்
விரவிவரச் சொல்கிறாயே
அதுதான் வலிக்கிறது.

வாழ்க்கைப் பாடம்:

எனக்கென ஏதுமில்லை
அன்புகாட்ட யாருமில்லை

கழிவிரக்கத்தின் விசனத்தில்
கால்போக
நடந்தேன் மெல்ல

குழந்தைகள் பூத்திட்ட
பூங்கா ஒன்றில்
நடைதேய நின்றேன் சற்று
குதூகலத்தைக்
கண்டு ஏங்கி

உற்சாகக் கூச்சலோடு
ஊஞ்சலின் வேகத்தோடு
துருவங்களைத் தொட்டுவந்த
துறுதுறு குழந்தையொருத்தி
திடாரென இறங்கிச் சிரித்தாள்

சிநேகமாய்ச் சொன்னாள் பின்பு
ஐ யம் டன்
இட்ஸ் ஆல் யுவர்ஸ்

பார்வை:

நூறு எழுதினால்
ஒன்று தேறலாம்

அள்ளி வீசினார் பெருங்கவிஞர்
கவிதைக்கான அளவுகோலை

கவனமாய் பொறுக்கிக் கொண்டது
கேட்டு கிறுகிறுத்த
இளங்கவிஞர் கூட்டம்

நூறு யோசித்து
ஒன்று எழுதினால்
எல்லாம் தேறுமென்று
சொல்லியிருக்கலாமோ

முணுமுணுத்துக் கொண்டான்
மைக்செட் கட்ட வந்த
முனுசாமி தனக்குள்

என்ன செய்ய ?:

தூரிகை யெடுத்தவனுக்குத்
துணுக்குக்கவி யெதற்கு

அன்பாய்க் கேட்கின்ற
ஆலோசகரே

நீர்த்துப் போன
நெடுங்கவிதைகளும்
கட்டுடைக்கத் தெரியாத
படிமங்களும்
தூசி படிந்து
தூங்குகின்ற
புத்தக அலமாரியை
என்ன செய்ய ?

***

pksivakumar@att.net

Series Navigation