நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.


‘இந்தியா ஒளிர்கிறது ‘, ’45 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத சாதனைகளை எல்லாம் பா.ஜ.க. ஐந்தே ஆண்டுகளில் சாதித்து விட்டது ‘ என்றெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் முழங்கி வருகின்றனர். நாடே தங்களால் சுபிட்சம் பெற்றுவிட்டதாகப் பெருமிதம் அடைகின்றனர். ஒரு சில பத்திரிக்கைகளும் அதைப் பிரதிபலிக்கின்றன. காங்கிரசால் மக்கள் பெரும் அவதியுற்றது போலவும், இந்தியர்களுக்கு தாங்கள் தான் தீர்வு என்பது போன்ற மாயையை பா.ஜ.க. தோற்றுவிக்கிறது. ஆனால், மத்திய அரசை வழிநடத்தும் கட்சி என்ற வகையில் எந்தவிதத்திலும் காங்கிரசை விட மிகவும் சிறப்பாக பா.ஜ.க. செயல்படவில்லை என்பதே உண்மை ஆகும். காங்கிரஸ் செய்த தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்களின் பாணியில் கூறினால், காங்கிரசும், பா.ஜ.க.-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். காங்கிரசின் மிதவாதப் போக்கைவிட பா.ஜ.க.-வின் மதவாதப் போக்கு வருங்கால இந்தியாவுக்கு அச்சுறுத்தலே ஆகும். கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. என்ன மதவாத ஆட்சியா நடத்தியது ? என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுகளிலேயே இருக்கிறது. கூட்டணி ஆட்சி நடத்தும் வரை ராமர் கோயில் பிரச்சினையை அடக்கி வாசிக்கும் தலைவர்கள், தேர்தல் வந்ததும் அது தான் இந்தியாவின் முக்கியப் பிரச்சினை போல பேசுகின்றனர். பா.ஜ.க. பெரும்பான்மை பெறும் போது கோவிலைக் கட்டியே தீருவோம் என்கின்றனர். கல்விக் கொள்கையில் படிப்படியாகக் காவிக்கறை படிய ஆரம்பித்துள்ளது.

ஊழல், பதவியைத் தற்காத்துக் கொள்வதற்காக செய்த ஆயாராம்-காயாராம் வேலைகள், ஆட்சியைப் பிடிப்பதற்காக அள்ளித் தெளித்த வாக்குறுதிகள், தொடர்ந்து பதவியிலேயே இருந்ததால் மக்களிடம் காட்டிய அலட்சியப் போக்கு இதெல்லாம் தான் காங்கிரசின் மீது நாம் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டுக்கள். இதில் ஏறத்தாழ அனைத்துத் தவறுகளையுமே பா.ஜ.க.-வும் இந்த பத்தாண்டுகளிலேயே செய்து இருக்கிறது. புகைப்படக் கருவிகளைச் சாட்சியாக வைத்துக் கொண்டே பா.ஜ.க. தலைவர்கள் தவறான வழியில் பணம் பெற்றுள்ளனர். அந்தத் தவறைக் கூட தனக்குச் சாதகமாக பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது. எல்லாத் தரப்பினருக்கும் தங்கள் கட்சியில் அங்கீகாரம் உண்டு என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, வேண்டா வெறுப்பாய், தலைவர் பதவியில் அமர வைத்த திரு. பங்காரு லட்சுமணனை இதையே சாக்காக வைத்து பதவி நீக்கம் செய்தது. இன்று அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், இதே தவறைச் செய்த சட்டாஸ்கர் மாநிலத்தின் ஜுதேவோ இன்றும் பா.ஜ.க.-வின் செல்லப் பிள்ளை. இந்தத் தவறுகளை அம்பலப்படுத்திய தெஹல்கா நிறுவனத்திற்கு, பா.ஜ.க. அரசு தன் வசம் உள்ள வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை மூலமாகக் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த நிறுவனம் இன்று முடங்கும் நிலையில் இருக்கிறது.

கட்சிகளை உடைப்பதிலும், எதிரணித் தலைவர்களை ஆசை காட்டி தன் பக்கம் இழுப்பதிலும் பா.ஜ.க. காங்கிரசை விடவே திறம்படச் செயல்படுகிறது. நரசிம்ம ராவ் ஆட்சியில் சர்க்கரை ஊழல் செய்தார் என்று கூறி, மத்திய அமைச்சராய் இருந்த சுக்ராம் பதவி விலக வேண்டும் என்று கூறி ஏறத்தாழ ஒரு வார காலம் நாடாளுமன்றத்தையே பா.ஜ.க. முடக்கியது. ஆனால், அடுத்த ஒரு சில மாதங்களிலேயே சுக்ராம் ஆரம்பித்த மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை பா.ஜ.க. எதிர் கொண்டது. அந்த ஒரு சில மாதங்களிலேயே ஊழல்வாதி சுக்ராம், உன்னதத் தலைவராக மாறிவிட்டாரா ? மத்தியப் பிரதேசத்தில் முதன் முறையாக ஆட்சி அமைத்து, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாமல், ஐந்தே ஆண்டுகளில் காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது பா.ஜ.க. புதுடெல்லியிலும் இதே கதை தான்.

உலக நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பது நமக்கு நல்லது என்பதற்காக, கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் எத்தனை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்பதைப் பெருமையாக இன்று பட்டியலிடும் பா.ஜ.க.-வும், சில பத்திரிக்கைகளும், இதே முயற்சிக்காக 1980-களின் இறுதியிலேயே திரு. ராஜீவ் காந்தி பயணம் மேற்கொண்ட போது என்ன கேட்டார்கள் தெரியுமா ? ‘இவர் இந்தியாவுக்குப் பிரதமரா இல்லை மற்ற நாடுகளுக்கா ? ‘ தகவல் தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்கின்றனர். கணினித் துறையில் இந்தியாவின் பங்களிப்பை, முன்னேற்றத்தை இனி யார் இந்தியாவை ஆட்சி செய்தாலும் தவிர்க்க இயலாது. இருப்பினும், கடந்த ஐந்தாண்டுகளில் அடைந்த முன்னேற்றத்திற்கான அங்கீகாரத்தை பா.ஜ.க. பெறலாம். ஆனால், 1980-களின் இறுதிகளிலேயே, உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த காலகட்டம் அது, அதற்கான பெரும்முயற்சி எடுத்த திரு. ராஜீவ் காந்திக்கே இந்த வளர்ச்சியின் பெருமை சேரும் என்பதை யாரும் மறுக்க இயலாது. அன்றே, இந்தியா முழுமைக்குமான தொலைபேசி வசதிக்கான திட்டத்திற்காக வல்லுனர் திரு. சாம் பிட்ராடோ-வை ராஜீவ் அழைத்து வந்தபோது கிண்டலடித்தவர்கள், பின்னாளில் அதே சாம் பிட்ராடாவை அழைத்து வந்தது தனிக்கதை.

பொருளாதாரத் துறையில் வியத்தகு முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளோம் என்கின்றனர். இந்தியா கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளில் பா.ஜ.க. அரசு ஏதாவது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததா ? அதன் மூலம் தான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளோமா ? உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் தவிர்க்க இயலாதவைகள். 1990-களிலேயே திரு. மன்மோகன் சிங் இதை ஆரம்பித்து வைத்து, நல்ல அடித்தளம் அமைத்து விட்டார். பிறகு, திரு. ப. சிதம்பரம் திறம்பட செயல்பட்ட போதும், 1996-99 காலகட்டங்களில் அமைந்த நிலையற்ற ஆட்சிகளால், நம் பொருளாதாரம் தொய்வடைந்தது. பா.ஜ.க. ஆட்சியில் மறுபடியும் அது சீரடைந்துள்ளது உண்மை தான். ஆனால், காங்கிரஸ் அரசால் அடைய இயலாத வளர்ச்சியெல்லாம் எங்களால் தான் சாத்தியாமானது என்பதெல்லாம் சற்றல்ல, கொஞ்சம் அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்ட செய்தியே ஆகும்.

குஜராத் சம்பவங்கள் துயரமானவை, அதற்காக வருத்தப் படுகிறோம் என்று திரு. அத்வானி இன்று (தேர்தல் நேரம் அல்லவா ?) கூறுகிறார். அப்படியென்றால், அந்த சம்பவங்களையே தன் சாதனைகளாக எண்ணி இன்று வரை மகிழ்ந்து கொண்டிருக்கும் அம் மாநில முதல்வர் திரு. மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் அத்வானி ? அது மட்டுமல்ல, பா.ஜ.க.-வின் கொள்கைகள் கூட நீர்த்துப் போய் விட்டதாகவும் அத்வானி கூறியுள்ளார். எதிர்க் கட்சி வரிசையில் நீண்ட காலம் இருந்த போது முழங்கி வந்த கோஷங்களும், கொள்கை கோட்பாடுகளும் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்பது ஆட்சிக்கு வந்த ஐந்தே ஆண்டுகளில் அத்வானிக்கு புரிந்து விட்டது. கட்சித்தாவல் தடைச் சட்டத்தை மேலும் கடுமையாக்கிய பா.ஜ.க. தான், இந்த முறை கட்சிமாறிகளுக்கு அதிக அளவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

மேற்சொன்ன தவறுகள் எல்லாமே காங்கிரஸிலும் உண்டே ? என்று கேட்கலாம். உண்மை தான். அதற்கான பரிசைத் தான் மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக அக் கட்சிக்கு வழங்கி உள்ளார்கள். ஆக, எந்த விதத்திலும், பா.ஜ.க., காங்கிரசுக்கு தீர்வு அல்ல, ‘மாற்று ‘-த் தான். எப்படி கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்திற்கோ, அது போலத் தான் காங்கிரசும், பா.ஜ.க. வும் பாரதத்திற்கு. பலமான எதிர்க் கட்சி இல்லாததால், அலட்சியமாக இருந்த காங்கிரசை பா.ஜ.க., அதன் வளர்ச்சியால் ஆட்டம் காணச் செய்துள்ளது என்பது உண்மை. காஷ்மீரில் அமைதிக்கான முயற்சி, தங்க நாற்கரச் சாலை, எல்லோரையும் அரவனைத்துச் செல்லக் கூடிய பிரதமர், திறமையான இளம் தலைவர்கள் என்பது போன்ற நல்ல செய்திகள் பா.ஜ.க.- வில் உண்டு. பலமான எதிர்க்கட்சி இருக்கிறது என்ற பயமே, இரு கட்சிகளையுமே இனிவரும் காலங்களில் நல்லாட்சி நடத்த வைக்கும் என்பதே நமக்கெல்லாம் நல்ல செய்தி ஆகும்.

— கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.

Series Navigation

கண்ணன் பழனிச்சாமி

கண்ணன் பழனிச்சாமி

நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

கண்ணன் பழனிச்சாமி.


தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்ட நிலையில், தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சில தலைவர்கள் கட்சி மாறியுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தாய்க் கட்சிக்கே திரும்பியுள்ளனர். பல திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். பிரபலமானவர்களை தங்கள் கட்சிக்குள் இணைப்பதில் பா.ஜ.க.-வே முன்னணியில் உள்ளது. பல பிரபலங்கள் கடந்த ஒரு மாதத்தில் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர். இந்தியா ஒளிர்கிறதோ இல்லையோ தங்கள் வாழ்க்கை ஒளிரும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளனர்.

‘நேரு குடும்பமே நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்கிறது. இது ஜனநாயக நாடா ? இல்லை மன்னராட்சி நடக்கிறதா ? ‘ என்று நீண்ட காலமாக கேள்வி எழுப்பிய பா.ஜ.க, இன்று மேனகா காந்தியும், வருண் காந்தியும் தங்களுடன் இணைந்தவுடன், ‘எங்கள் கட்சியுலும் இன்று நேரு குடும்பம் இருக்கிறது ‘ என்று பெருமிதமாகக் கூறுகிறது. இளைய தலைமுறை தலைவர்களில் வருண் காந்தி முன்னணி பெறும் பட்சத்தில், காவிப் படையின் தலைவராக அதன் பிரதம வேட்பாளராக ஒரு நேரு குடும்ப உறுப்பினர் தான் வரப்போகிறார். அப்போது என்ன சொல்லப் போகிறது பா.ஜ.க ? ஆக, சோனியாவையும், பிரியங்காவையும் (அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில்) எதிர்ப்பதற்கு, பா.ஜ.க.வின் கொள்கைகள், தற்போதைய தலைவர்களை விட வருண் காந்தியைத் தான் பா.ஜ.க. நம்புகிறது. நல்ல நிலைப்பாடு தான்( ? ?). ஜனதா தள சட்ட மன்ற உறுப்பினர்கள் 11 பேர் கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்துள்ளனர். ஆரிஃப் முகமது கான், பங்காரப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர். நஜ்மா ஹெப்துல்லாவும் இணைவார் என நம்பப் படுகிறது. ஆனால், இவர்களெல்லாம் தற்போது அதற்கு கூறும் காரணங்கள் தான் சிரிப்பை வரவழைக்கிறது.

ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய முக்கியத்துவத்தை இழக்கும் போது, மாற்று வழியாக அடுத்த கட்சிக்குச் செல்லும் இவர்கள், இப்படியெல்லாம் பேச எந்தத் தகுதியுமே கிடையாது. மறைந்த மத்திய அமைச்சர் திரு. ரங்கராஜன் குமாரமங்கலத்தை இந்த விஷயத்தில் பாராட்டலாம். தன் அரசியல் சூழ்நிலைக்காக கட்சி மாறினாலும், தேவையில்லாமல் காங்கிரஸை அவர் விமர்சனம் செய்யவில்லை. ‘சோனியாவின் அயல் நாட்டவர் என்ற பிரச்னை முக்கியமானதே ‘ என்று இன்று கூறும் நஜ்மாவுக்கு, கடந்த ஆறு வருடங்களாக இது பிரச்னையாகப் படவில்லையா ? கட்சி கொடுத்த பதவியை அனுபவித்துக் கொண்டே அந்தக் கட்சியை (உங்கள் ஆதாயத்திற்காக) விமர்சிக்கும் போது, அந்தக் கட்சியின் தவறுகள் என்று நீங்கள் கூறும் செயல்களுக்கு ஒருவிதத்தில் நீங்களும் பொறுப்பாகிறீர்கள்.

தெலுங்கு தேசத்தில் இருந்து சமீபத்தில் காங்கிரசுக்கு மாறிய சந்திரபாபு நாயுடுவின் தம்பிக்கும் இது பொருந்தும். உத்திரப் பிரதேசத்தில் திரு. கல்யாண் சிங் பா.ஜ.க.-விற்கும், புதுவையில் திரு. கண்ணன் காங்கிரசுக்கும் மீண்டும் திரும்பியது வரவேற்கப்பட வேண்டிய செய்திகள். கல்யாண் சிங்காவது, ஒரு சில சமயங்களில் வாஜ்பாயியையும், அத்வானியையும் தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். ஆனால், பா.ஜ.க.-வில் இணைந்து விடுவார், அதன் புதுவை வேட்பாளரே கண்ணன் தான், இது குறித்து பா.ஜ.க. தலைவர் வெங்கைய நாயுடுவே தொலைபேசியில் பேசி விட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்த போதும், தன் அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறாமல் இருந்த திரு. கண்ணணை வெகுவாகப் பாராட்டலாம். தமிழகத்தின் மூத்த தலைவர் திரு. கருணாநிதி வழக்கம் போல பேசியுள்ளார். ‘பா.ஜ.க. வுடன் உறவு என்றுமே இல்லை. தே.ஜ. கூட்டணியில் தான் இருந்தோம் ‘ என்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, ‘பா.ஜ.க. வைப் பொறுத்த வரையில் மத்தியில் உறவு, மாநிலத்தில் நட்பு ‘ என்றார். மக்களிடம் உங்கள் முடிவை நியாயப் படுத்துவதற்காக, இப்படியெல்லாம் வார்த்தை விளையாட்டு செய்யவே வேண்டாம். அரசியல் கட்சிகள் நீங்களெல்லாம் எப்படியெல்லாம் கூட்டணி வைப்பீர்கள் என்பதை பார்த்து, பார்த்து எங்கள் மனதெல்லாம் பக்குவப்பட்டு ( ? ? ?) நீண்ட காலம் ஆகி விட்டது.

காங்கிரசுடன் நீங்கள் வைத்த அவசரக் கூட்டணிக்கும், நீங்களே அழகாகக் கூறிய பா.ஜ.க. – அ.தி.மு.க. ‘சரணாகதி ‘ கூட்டணிக்கும் சரியாய் போய் விட்டது. ஆகவே, உங்களைத் தேர்ந்தெடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் என்ன செய்வீர்கள் என்பது குறித்து பேசுங்கள். இந்த கூட்டணியை எல்லாம் விட பரபரப்பான செயல்களெல்லாம் தேர்தலுக்குப் பின்பு நடக்கும். எதிரணி அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில், தேச நலனுக்காக ( ? ? ? ?) அணி மாறி, அவர்களுடன் அமைச்சரவையில் பங்கேற்கவும் சில கட்சிகள் தயங்காது என்பதும் எங்களுக்கு தெரியும். ‘மக்கள் பா.ஜ.க. அணிக்கோ அல்லது மாற்றாக காங்கிரஸ் அணிக்கோ வாக்களிக்க வேண்டும். இதைத் தவிர்த்த பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது தேவையற்றது ‘ என்று கூறியுள்ளார். மிகச் சரியான வார்த்தை.

சட்ட மன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில் பா.ஜ.க-விற்கோ அல்லது காங்கிரசுக்கோ தான் வாக்களிக்க வேண்டும். இல்லாவிடில், 1996 – 1999 களில் இருந்த குழப்ப நிலை தான் மிஞ்சும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டன. வழக்கம் போலவே வேட்பாளர் தேர்வில் எல்லாக் கட்சிகளிலும் அதிருப்தி நிலவினாலும், பா.ம.க.-வில் அது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. தங்களின் வழக்கமான அதிரடி நடவடிக்கைகளை கட்சிக்குள்ளேயே காண்பித்துள்ளனர்.

தனித்து நின்றாலே வெல்லக் கூடிய அளவிற்கு செல்வாக்குள்ள தொகுதியை இழந்த போதிலும், தனது கட்சிக்குக் கட்டுப்பட்டு, ‘அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவேன் ‘ என்று கூறியுள்ள திருநாவுக்கரசரை பாராட்டலாம். அவர் அப்படி கூறிய பின்பும், தேவையில்லாமல் அவரைக் கடுமையாக விமர்சிக்கும் அ.தி.மு.க. வினரின் போக்கு கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு தான் குறைகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

— கண்ணன் பழனிச்சாமி.

Series Navigation

கண்ணன் பழனிச்சாமி

கண்ணன் பழனிச்சாமி

நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.


இனி வரப்போகும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இன்று வரை தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செயல் ஆகும். அகில இந்திய அளவில், குறிப்பாக நமது தமிழகத்தில், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் முனைப்புடன் தொடங்கி விட்டன.

தனித்தே ஆட்சி அமைப்பது என்ற நிலையில் இருந்து, கூட்டணி தத்துவத்திற்கு காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது. மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் அணிக்குள் கொண்டு வருவதில் சோனியா காந்தி விரைவாகச் செயல்பட்டு வலுவான அணி ஒன்றை அமைத்துள்ளார். இருப்பினும், உத்திரப் பிரதேசத்தில் முலாயமையோ அல்லது மாயாவதியையோ தனது அணிக்கு கொண்டு வருவதின் மூலம் தான் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், பிரதமர் வாஜ்பாயியைத் தான் அந்த அணி பெரிதும் நம்பி உள்ளது.

தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப் பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். வரிச் சலுகைகள் நிறைந்த 2003-2004-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான யுக்திகள் என்றாலும், வரவேற்கத் தக்கவையே! ஆனாலும், அரசு ஊழியர்கள் பிரச்னையில், அவர்கள் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும், அங்கெல்லாம் குறுக்கிட்டு, பணி நீக்கம் செய்தது சரியே என்றும், அதனால் தமிழகத்திற்கு நன்மையே என்று வாதாடிய தமிழக அரசு, இன்று என்ன சொல்லப் போகிறது ? அரசு ஊழியர்கள் பிரச்னையினால், மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் தாமதமானது. நீதிமன்றத்தின் நேரமும், உழைப்பும் பெரிய அளவில் விரயமாகி உள்ளது. நீதிமன்றம் ஆலோசனை கூறிய போது கூட செவிமடுக்காமல் உறுதி காட்டிய முதல்வர், தேர்தலுக்காக ஒரே நாளில் பணி நீக்க உத்தரவை ரத்து செய்துள்ளார். இதை ஒருசில மாதங்களுக்கு முன்னால் செய்திருந்தால், அரசு மற்றும் நீதிமன்றத்தின் நேரமும், உழைப்பும் வீணாகி இருக்காது. உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இது போன்ற செயல்களில் இனியும் ஈடுபடாதீர்கள். நீதிமன்றம் தமிழக அரசின் இந்த திடார் மனமாற்றத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி செய்யும் அமைச்சரவை மாற்றமே, மிகவும் கேலிக்கூத்தான செயலாக இருக்கிறது.

தன்மானம், கொள்கைப் பிடிப்பு என்றெல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் முழங்கும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக (எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று ஜெ. கூறிய போதும்…), இடைவிடாமல் கொடுத்த பேட்டிகளும், விடுத்த அறிக்கைகளும், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது. இவர்களை விட பிரதமர் ஒரு படி மேலே போய்விட்டார். ‘தமிழகத்திற்காக தன்னையே ஜெ. அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் ‘ என்று கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

‘காற்றுப் போன பலூன் ‘, ‘இளைஞர்களை புகைபிடிக்கத் தூண்டும் மோசமான நடிப்பு ‘ என்றெல்லாம் ரஜினியைப் பற்றி முழங்கிய அரசியல் ‘தொழிலதிபர் ‘ (வியாபாரி என்ற சொல்லை விட சற்று கெளரவமாக இருக்கும், இருப்பினும் பொருள் ஒன்றே!) ராமதாஸ் இன்று என்ன சொல்கிறார் ? ‘ரஜினி ஒரு நல்ல நடிகர்!, ரஜினி ரசிகர்கள் நல்லவர்கள்! ‘. உங்கள் கொள்கைகளை எல்லாம் விடுங்கள், உங்கள் தொழில் திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தி.மு.க. அணியில், லாபகரமான கட்சி உங்களுடையது தான். புதுவையில் சாதிக் கணக்கு போட்டு, எந்தக் கட்சியிடம் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தீர்களோ, அவர்கள் ஆதரவுடன் இப்போது வெற்றி பெற முனைகிறீர்கள். தமிழகத்திலும் நினைத்த தொகுதிகள் கிடைத்து விட்டது. பிறகென்ன ?

புதுவை, நாகர்கோவில் போன்ற தனது வலுவான தொகுதிகளை இழந்திருப்பது காங்கிரஸ’ன் பலவீனமே. ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கொள்கை ரீதியாக வேறுபட்ட கட்சிகளுடன் அமைத்திருக்கும் கூட்டணியும் பலவீனமே. இருப்பினும், வாக்காளர்கள் எதை முன்னிறுத்தி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் இது போன்ற முடிவுகளின் முடிவை அறிய முடியும். வைகோவும் வந்து விட்டார். அண்ணன் – தம்பி பாசம், பரம வைரியான காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் என அவரது நெகிழ்ச்சியான ( ? ? ?), ஆவேசமான ( ? ?) கொள்கை முழக்கங்களுடல் தன் பங்குக்கு வைகோவும் நமக்கெல்லாம் திகைப்பூட்டுவார்!!

தி.மு.க. அணியை விட்டு வெளியேறியதும், அவர்கள் மூலம் வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்காகவும், புதிய ‘அண்ணன் ‘ கிருஷ்ண சாமி அ.தி.மு.க. பக்கம் போனாலும், அ.தி.மு.க. அணிக்கு செல்ல மாட்டேன் என்ற கொள்கை முடிவிற்காகவும், தொல். திருமாவளவனை வெகுவாகப் பாராட்டலாம். சுப்ரமண்ய சுவாமி, (சசிகலா) நடராஜன் எனத் தேர்தலுக்குச் சுவை கூட்டும் மனிதர்கள் தமிழகத்திலும், இந்திய அளவிலும் நிறைய பேர் உள்ளதால், இனி வரும் நாட்களில் பரபரப்பிற்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமிருக்காது.

—- கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.

kannan_vnp@yahoo.com

***

Series Navigation

கண்ணன் பழனிச்சாமி

கண்ணன் பழனிச்சாமி