பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சின்னக்கருப்பன்


சமாச்சார் இணையத்தளத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரையைப் படித்தேன். நல்ல கட்டுரை. கடைசிக்கு சற்றே முந்திய வரியைத் தவிர.

http://samachar.com/tamil/features/110304-Ipa.html

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில்..

‘அங்கைத் தலத்தில் ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழிப்பேன் என்று

செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் சிறு மானிடரைக் காணில் நாணும்

கொங்கைத்தலம் இவை நோக்கி காணீர்! கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்

அந்தக் காலத்து சிநேகர்களும் பழனிபாரதிகளும் இந்த மாதிரிப் பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட முடியாத காரணத்தால் சமயத்தளை பூட்டி தெய்வங்களாக ஆக்கிவிட்டார்கள்

ஆண்டாள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ‘

என்று முடிக்கிறார்.

ஆண்டாளை பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராக அங்கீகரித்தவர்களின் உள்நோக்கம் ஆண்டாளை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதா ? அப்படியென்றால் ஏன் ஆண்டாளை ஆழ்வாராக ஆக்க வேண்டும் ? ஆழ்வாராக அங்கீகரித்து காலமெல்லாம் அந்தப் பாடல்களை ஒவ்வொரு மார்கழியின்போதும் பாடி தெருவில் செல்ல வேண்டும் ? பாடல்களை அழிக்க இதுவா வழி ? இது போன்றப் பாடல்களைக் காட்டித்தானே பெரியார் ‘இதுவா பக்தி ? ‘ என்று கேட்டிருக்கிறார் ?

ஆழ்வாராக அங்கீகரிப்பது சமயத்தளையா ? ஆழ்வாராக அங்கீகரிக்காமல் இருந்தால், அதாவது சமயத்தளை பூணாமல் இருந்திருந்தால், ஆண்டாளின் கவிதைகள் அழிந்திருக்குமா ? அல்லது ஆண்டாள் பெட்ரோல் ஊற்றிக் கொல்லப்பட்டிருப்பாளா ? அல்லது ஆண்டாளின் மறைவு இது போன்றதொரு கொளுத்தலா ? எந்தப் பெண்ணின் இலக்கியம் மதக் காரணங்களால் கொளுத்தப் பட்டிருக்கிறது ? இந்திய தமிழக வரலாற்றில் இதற்கு ஏது ஆதாரம் உண்டா ? ஆதாரம் இல்லையென்றால் இ பா போன்ற மதிப்புக்குரிய பேராசிரியர்கள் இப்படி எழுதலாமா ?

http://www.thinnai.com/ar1120031.html

நாச்சியார் திருமொழி என்ற தலைப்பில் மாலதி எழுதிய கட்டுரையின் சுட்டி மேலே இருக்கிறது.

ராமானுஜரின் மேற்கோளை அதில் எழுதியிருக்கிறார் மாலதி. ‘மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகளல்லர். முலையெழுந்தார் கேட்கவேணும் ‘ என்று.

ராமானுஜர் தமிழ் வைஷ்ணவப்பாரம்பரியத்தின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். இலக்குவனின் அவதாரம் என வைணவர்களால் போற்றப்படுபவர். ஆண்டாள் எப்படி எழுதியிருக்கிறார் என்று கேட்க ஆண்களுக்கு அதிகாரமே கிடையாது என்று இந்த இந்து சமயத்துறவி சொல்கிறார்.

இருந்தும், இந்திரா பார்த்தசாரதி, இப்படிப்பட்ட இந்து சமயத்துறவிகள் ஆண்டாளை கொளுத்த இயலாமல் ( ஏன் இயலாமல் போனது ?) சமயத்தளை போட்டு பூட்டிவிட்டார்கள் என்று கூசாமல் கூறுகிறார்.

எனக்கு சமய இலக்கியங்களில், வைணவ இலக்கியங்களில் இ பா அளவிற்கு ஆழ்ந்த பயிற்சி இல்லை. ஆனால், தீவைத்துக் கொளுத்த முடியாமல் தான் தெய்வமாக்கி விட்டார்கள் என்று இ பா எழுதியிருப்பது கண்டு என்னால் திடுக்கிடாமல் இருக்க முடியவில்லை. இந்து மதக் கலாசாரம் அல்லாத வேறு எந்த மதக்கலாசாரத்தில் அக்கமா தேவியும், மீராவும், ஆண்டாளும் கவிஞர்களாகவும் , தெய்வங்களாகவும் அங்கீகாரம் பெறுவது இருக்கட்டும், குறைந்தபட்சமாக மனிதப் பிறவிகளாகவாவது அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள் ? இஸ்லாத்திலும், கிரிஸ்துவத்திலும், இத்தனை பெண்பாற் கவிஞர்கள் இருந்திருக்கிறார்களா ? இது போன்ற பாடல்களை எழுதியிருக்கிறார்களா ? அப்படிப் பாடிய பாடல்கள் மக்களால் போற்றப்பட்டு தினந்தோறும் பாடப்பட்டிருக்கின்றனவா ?

திருக்குறளில் காமத்துப்பால் சமதையான வாழ்வியல் அங்கீகாரத்துடன் விளங்குகிறது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் காதல் கொப்பளிக்கிறது.

பழனி பாரதிகளும் , சினேகர்களும் மதவாதிகள் அல்ல , அவர்களின் குரல் மதவாதிகளின் குரலுமல்ல. பின் யாருடைய குரல் இவர்களுடையது ?

கடந்த நூற்றாண்டில் Prudishiness -க்கு இலக்கணம் வகுத்த ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. அது பகுத்தறிவு என்ற பெயரில் கலை ரசனையையும், ஒரு ஜனசமூகத்தின் கற்பனை வளத்தில் பொங்கியெழுந்த கதைகளையும் புராணக் குப்பைகள் என்று சமூகவியல் அறிவில்லாமல் தூற்றிய பெரியாரின் இயக்கம். கம்பரசம் என்று கம்பனின் ஆகச்சிறந்த கவிதைகளை வடிகட்டி விட்டு- அப்படி சிறந்த கவிதைகளிலும் சிருங்கார ரசத்தினை ஆபாசம் என்று சுட்டிய – அண்ணாவின் இயக்கம். இ பா பழனிபாரதிகளின் மீது தொடுக்கும் விமர்சனம் நியாயமாக இந்த ரசனை கெட்ட மஞ்சள்கண்ணாடி போட்ட பகுத்தறிவு இயக்கத்தின் மீது வைக்கப் பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்த விமர்சனம் மதத்தின் மீது – இந்து மதத்தின் மீது – பாய்கிறது. அவ்வாறு இந்துமதம் என்றாலே விஷம் என்று பிரச்சாரம் செய்வதை முற்போக்கு பணியாக ஏற்றுக்கொண்ட இடதுசாரி அறிவுஜீவிகள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள இயலும். இபா சொல்லும்போதுதான் எனக்கு ஆச்சரியம் வருகிறது.

இந்து மதத்தின் மீது ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம், ஆனால் prudish என்ற விமர்சனம் வைக்க முடியாது.

பகுத்தறிவு இயக்கம் தான் கற்பு என்ற fetish-ஐ பெருமளவில் தமிழ் நாட்டில் ஸ்தாபித்தது. பகுத்தறிவு இயக்கம் தான் ‘ இங்கிலீசு படிச்சாலும் இந்தத்தமிழ் நாட்டிலே இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பிளே ‘ என்று பாடவைத்த புரட்சியை நடத்தியது. பகுத்தறிவு இயக்கத்தின் பெண் வெறுப்பின் அடிப்படைகள் தனி ஆய்வுக்கு உரியவை. அவையும் செமிட்டிய பாலுறவு உளவியலின் விளைவே என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

***

மேற்கத்திய கலாச்சாரத்தை உயர்வாகப் பிடிக்கும் இடதுசாரி அறிவுஜீவிதத்தின் தொடர்ச்சியை யமுனா ராஜேந்திரனின் திண்ணைக் கட்டுரையில் காணலாம்.

***

http://www.thinnai.com/ar0205047.html

மேற்கண்ட முகவரியில் யமுனா ராஜேந்திரன் திரைப்படத்தில் பாலியற் சித்தரிப்பு பற்றிய சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால், மேற்கத்திய வரலாற்றின் மூலமாக உற்பத்தியான மேல்நாட்டு எழுத்தாளர்கள் எழுதியதை அடியொற்றி இந்திய வரலாற்றையும் இந்திய மத அறவியல்களையும் பார்ப்பதன் அபத்தத்தை தொடர்ந்து செய்கிறார் யமுனா ராஜேந்திரன்.

அவரது கட்டுரையில் ‘ இவ்வகையில்தான் சுதந்திரமான பாலியல்புக்குத் தடையாக இருக்கும் மதம்சார் அறவியல்களை ஒரு படைப்பாளி கேள்விக்கு உட்படுத்துகிறான் ‘.

ஐரோப்பாவிலிருந்து ஈரான் வரைக்கும் இருந்த இஸ்லாமிய மற்றும் கிரிஸ்தவ வரலாற்றில் எவ்வாறு பாலுறவு அரசியல் நடந்திருக்கிறது என்பதை விலாவாரியாக எழுதிய யமுனா ராஜேந்திரன் வெகு விரைவில் இந்திய வரலாற்றைப் பற்றி எழுதாமல் காலனியாதிக்கத்துப் பின்னர் நடந்திருக்கும் வரலாற்றுக்கு வந்துவிடுகிறார்.

கண்ணன் மீது காதல் கொண்டு தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துப் பாடிய இந்துமத ஆண் கவிஞர்களும், பாலுறவை வெளிப்படையாகப் பாடிய சங்கப் பெண்பாற் புலவர்களும், நைடதமும், கொக்கோகமும், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகளை காட்டும் கோவில் சித்திரங்கள் சிற்பங்களும் வழமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டு, இந்து மத உளவியல் ஒரு செமிட்டிய உளவியலாக மாற்றப்படுகிறது யமுனா ராஜேந்திரன் பார்வையில்.

காலனியாதிக்கம் இருந்தபோது, செமிட்டிய பாலுறவு உளவியலின் படி இந்து மதப் பாலுறவு உளவியல் இல்லை என்ற காரணத்தால் மிஷனரிகளிலிருந்து, பெரியார் , திராவிட கழகம், அண்ணா, கருணாநிதி, என்று இன்றும் தொடர்ந்து இந்துமத பாரம்பரியம் கேவலப்படுத்தப்படுகிறது ஒரு புறம்.

மறுபுறம், இன்று, காலனியாதிக்கம் செய்த மேற்கு நாடுகளில், அளவுக்கு மீறி கட்டுப்படுத்தப்பட்ட பாலுறவு உறவுகள் வெடித்து, இன்னொரு திசையில் பயணம் செய்யும்போது, அதே வண்ணத்தில்தான் இந்திய பாலுறவு பற்றிய உளவியலும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பின் கீழ் புது அறிவுஜீவி முழக்கம் இன்று கேட்கிறது. அதன் விளைவே, யமுனா ராஜேந்திரன், அ.மார்க்ஸ் போன்றோரின் சமப்பாலுறவு அங்கீகாரக் கோரல். இரண்டுக்கும் வித்தியாசமில்லை.

இரண்டும், இந்தியாவின் பாரம்பரியம், இந்தியாவின் இன்றைய தேவை, இந்திய வரலாற்றில் பாலுறவு உளவியல் எவ்வாறு இருந்திருக்கிறது, இந்து தத்துவ புரிதல்களில் பாலுறவின் இடம் என்ன, சிற்றின்பம் விலக்கப்படாமல் பேரின்பத்தின் ஞாபகமூட்டும் விஷயமாக அது தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது என்ற ஒரு அறிவும் இல்லாமல், மேற்கின் அறிவே அறிவு என்று அடிப்படையில் எழுந்தவை. அதை விட சரியான வார்த்தை, அடிமை மோகம்.

இன்று சினேகிதர்களும், அறிவுமதிகளும் முகம் சுளிப்பது, காலனியாதிக்கத்தின் விளைவாக நமக்குள் தோன்றிய ‘இந்து பாரம்பரிய பாலுறவு சிந்தனை கேவலம் ‘ என்ற உணர்வின் வெளிப்பாடு. அது பாலுறவு பற்றியே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்ற கலாச்சாரத்தை நம்முள் தோற்றுவித்திருக்கிறது. அதுவே பாலுறவைக் காட்டி வியாபாரம் செய்யும் ஆனந்தவிகடன், குமுதம், பாலகுமாரன், ஜெயராஜ், சரோஜாதேவியாக உருவெடுத்திருக்கிறது.

ஆனால் இந்துத்வ வாதிகள் என்று தங்களைக் கோரிக்கொள்பவர்களும், தங்களை ‘டாஸண்ட் ‘ ஆக காட்டிக்கொள்ள, மேற்கத்திய பாலுறவு புரூடிஸத்தின் அடிமைகளாகவே இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதன் இன்னொரு திசையில் இன்னொரு அடிமைச்சிந்தனை, ஆண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான உறவை மையத்துக்குக் கொண்டுவந்து பேசு என்று கோருகிறது.

ஒரு சமூகத்தில், பாலுறவு எந்த அளவுக்கு மையத்தில் இருக்க வேண்டும் என்பதை சமூகத்தின் தேவைகளே நிர்ணயிக்கின்றன.

ஆணை மோகிக்கும் ஆண் ஒரு மரபணு விபத்து. பெண்ணை மோகிக்கும் பெண் ஒரு மரபணு விபத்து. ஆனால், அவர்களுக்கு சாதாரண வாழ்வுரிமையை உரிமை மறுப்பது ஒரு நல்ல சமூகம் செய்யக்கூடியதல்ல. இது விபத்து என்ற காரணத்தாலேயே இவர்களது எண்ணிக்கை மிக மிகக்குறைவு ஒரு சமூகத்தில். முக்கியமாக அப்படிப்பட்ட உணர்வு தேவைப்படாத இந்தியாவில் இவர்களது எண்ணிக்கை இன்னும் மிக மிகக்குறைவு. கப்பல் வியாபாரத்தை அதிகம் கொண்டிருந்த சமூகங்களில், (அமெரிக்க, ஐரோப்பிய) சமூகங்களில் இவர்களது எண்ணிக்கை விபத்து என்ற அளவைக்கடந்து அதிகம். அது தவறு என்ற மதக்கருத்து இருந்தாலும் கப்பல் தொழிலாளிகளின் உடற் தேவைகள் இந்த கருத்தை பரவலாக்கி விட்டிருக்கின்றன.

கப்பல் வியாபாரம் இல்லாத எந்த நாடுகளிலும், ஆண்கள் மட்டுமே வெகுகாலம் தனித்திருக்கும் சூழ்நிலை இல்லாத எந்த அமைப்பிலும், இது மிகவும் மிகவும் விளிம்பு நிலை அடைவது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. இந்த சமூக காரணிகளை எல்லாம் விட்டுவிட்டு, மேலை நாட்டான் செய்கிறான் ஆதலால் நீயும் செய் என்று பேசுவது எப்படிப்பட்ட அடிமைமோகம் (அதுவும் நம்மை சுதந்திரமானவர்கள் என்று கூறிக்கொண்டு) என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

***

மேற்கத்தியப் பாரம்பரியங்களைக் கொண்டும் மேற்கத்திய மதிப்பீடுகளைக் கொண்டு இந்திய – இந்துப் பாரம்பரியத்தை அளக்க இபா யமுனா ராஜேந்திரன் ஆகியோருக்கு உரிமை உள்ளது. ஆனால்., சினேகர்களும், அறிவுமதிகளும், பழனிபாரதிகளும்கூட இபா, யமுனா ராஜேந்திரன் கட்சியில்தான் இருக்கிறார்கள்.

சினேகர்களும், அறிவுமதிகளும் பழனிபாரதிகளும் இருப்பது செமிட்டிய மதங்களின் ஒழுக்கவியலையும் அதன் பாலுறவு பற்றிய அணுகுமுறையையும் பெண் வெறுப்பையும் தூக்கிப்பிடித்த காலனியாதிக்க கால மேற்கத்திய சிந்தனை. இபாவும், யமுனா ராஜேந்திரனும் இருப்பது அந்த ஒழுக்கவியலுக்கு எதிர்வினையாகத் தோன்றிய இன்றைய மேற்கத்திய சிந்தனை.

இருவருமே சிந்திக்க மறந்தது, இந்தியச் சிந்தனையை.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்