ஒரு கவிதை:

This entry is part of 43 in the series 20110117_Issue

சுப்ரபாரதிமணியன்


”பங்கரி’லிருந்து வந்த மனிதனை
வரவேற்றேன்.
தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன்
ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்.
அலுவலக நேரத்தில்
அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)
ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது
சாமான்யக் காரியமல்ல
( மெமொ-விளக்கம் தரவேண்டியிருக்கும்
அலுவலத்தண்ணீர்க் குழாயிலிருந்து
இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை
என்மேல் இன்னும் இருக்கிறது)
“பங்கரி”ல் கடவுளையும், சாத்தானையும்
சந்தித்ததாகச் சொன்னார்.
கடவுள் நீங்குகையில் சாத்தானும்
சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாகக்
கற்பனை செய்து கேட்டேன்..
இருவரும் ஒரே நேரத்தில்
“ பங்கர்” குழிக்குள்
அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.
எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்த்திருந்த்து.
கடவுளும், சாத்தானும் “ பங்கரில் “ தூங்குவதில்லை என்பது
வருத்தமாக இருந்தது.
முடிகிறபோது வாருங்கள் என்றார்.
அவரின் அழைப்பு அபரிமிதமானதாகத் தோன்றியது.
ஆனாலும் தலையசைத்தேன்.
எனது அலுவலகப்பகுதியோ
எந்து வீடுள்ள பகுதியோ
நான் காலை நடை போகும் பகுதியோ
இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்.
சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது
வருத்தம் தருகிற விசயமாக இருந்தது.
கடவுளும், சாத்தானும்
என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி
அவ்வப்போது வந்து போகிறது.

Series Navigation