பொ.கருணாகரமூர்த்தி
அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள்.
எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டு முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷமென்று சொல்லமுடியாது. தெருவிலிருந்து நோக்கையில் வீட்டை மறைத்துக்கொண்டு நிற்கப் போதுமானது. சின்னத்தம்பிப்புலவர் வீட்டுவாசலில் நின்றிருந்த
பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின் பிரபை
வீசு புகழ் நல்லுர்ரான் வில்லவரா யன்கனக
வாசலிடைக் கொன்றை மரம்.
மாதிரிக்கு யாருக்கும் எமது வீட்டை அடையாளங்காட்டிக் குறிப்புச்சொல்லி விடுவதற்கும் உதவியாய் நின்றது அம்மரம்.
அனேகமாக காடுகளை வெட்டும்போது ஒரு காணியின் வீதிப்பக்க எல்லயைிலோ , இரண்டு காணிகளுக்கிடையில் அமையக்கூடிய எல்லை நிரையிலோ வரும் மரங்களைத் தறிக்காது விட்டுவைப்பது வழக்கம்.
அந்தக் காணி காடாக இருந்தபோது அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிய நல்ல மனிதர்;களுக்கு என்னதான் தோன்றியதோ வீட்டுக்குத் தெற்காக நின்ற அந்த மரத்தையும் வளவின் வடகிழக்கு மூலையில் ஒரு கொண்டல் மரத்தையும் விட்டு வைத்துவிட்டார்கள்.
கொண்டலின் கிளை பூராவும் தங்கமஞ்சளாகப் பூத்துத்தொங்குகையில் ஒரு அழகுதான். ‘கொண்டல் வண்ணன் ‘ என்று சிவனை அழைத்ததுவும் ரம்யமானதொரு கற்பனைதான். நன்கு முற்றிய கொண்டல் பழத்தை உடைத்தால் உள்ளே சொக்கிளேற்றுகள் போலும் சிறிய சிறிய வில்லைகள் அடுக்கில் காணப்படும். அதன் தித்திப்போ விபரிக்கமுடியாது. ஆனாலும் சாப்பிடமுடியாது. அன்னமுன்னா பழம் மாதிரித் திகட்டி வயிற்றைப்புரட்டும் ஒரு வகை இனிப்பு.
இந்த ஆத்திமரத்தின் பூ மெல்லிய றோசாவை விரும்பிய கத்தரி நிறத்திலிருக்கும், பெரிய அழகென்று கொண்டாடமுடியாது. அவரைக்காயைப்போல் மெலிதாக புளியங்காய்போல் வளைந்து நுனியில் விரியும் சிறிய ஒலிபெருக்கியைக்கொண்டு தலைகீழாகத் தொங்கும். அவரைக்காயைப் போலவே சற்று வைரமாக இருக்கும் அதன் காயைப் பிடுங்கி வெற்றிலைபோல் வாயிலிட்டுச் சப்பிக் குதப்பிவிட்டுத் துப்புவோம்.
ஆத்தியின் இலையை ஆடுமாடுகளும் விரும்பித் தின்னுகின்றன, இந்தமரம் வேறு தொன் கணக்கில் காய்த்துத்தள்ளுகிறதே, இதன் காயிலிருந்து முழுமனிதகுலத்துக்கும் பயன்படவல்லமாதிரி ஒரு உணவை ஏன் தயாரிக்கமுடியாதென்று அப்போதே எனக்குள்ளிருந்த விஞ்ஞானிக்கு சிந்தனைகள் முகைத்ததுண்டு.
ஆத்தி மரத்தின் புறப்பட்டை தடிமனான தக்கையைக் கொண்டிருக்கும். அத்துடன் அக்கோறைமரம் வாகாக திட்டுகளையும் மொக்குகளையும் தன்னுடலெங்கும் கொண்டிருந்ததால் பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்த நான் அதில் அடிக்கடி ஏறி இறங்குவேன். அம்மரத்தின் கிளைவேர்கள் ஆலமரத்தைப்போல் தரைக்கு வெளியாகவே ஆரம்பித்து நாலு திசையிலும் நீண்டுசென்று தரையுள் புகுந்தன.
அன்றும் மாலையில் அவ்வேர்களினிடுக்கில் சிறு ஓடக் கவிவைப்போலும் உட்கவிந்திருக்கும் சார்மனையில் ஒரு சாக்கை விரித்துப் படுத்துக்கொண்டு வானத்தைப்பார்க்கிறேன். உலகத்திலுள்ள நிறங்களையெல்லாம் கரைத்து யாரோ அங்கே ஊற்றிவிட்டதைப் போலிருக்கிறது.
அதன் கீழாக சில வெண்முகில்கள் ஒன்றையொன்று துரத்தியபடி சென்றுகொண்டிருக்கின்றன. லேசாக வீசிக்கொண்டிருக்கும் காற்று குளிரைக் கொண்டிருக்கிறது. வவுனிக்குளத்திலிருந்தோ பாலியாற்றிலிருந்தோ கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும், கூழைக்கடாக்களும் மன்னார்க் கடலை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன.
‘ மரத்துக்க பாம்பைப்பூச்சியிருந்தாலும் எழும்பி வீட்டுக்குள்ள வா. ‘ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.
எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே ‘ இந்த ஆத்தி பாருங்கோ கோறைமரம்…. பாம்பைப் பூச்சியைக் குடிவரும், தறித்துவிடுங்கோ ‘ என்று தவறாது அறிவுரை சொன்னார்கள்.
அம்மரம் முற்றத்தில் ஏராளமாய் சருகுகளையும் உலர்ந்த காய்களையும் கொட்டிப் பெருக்குவதற்கு சிரமம் பண்ணியதேயல்லாமல் அதன் ஆயுளில் எமக்குப் வேறொரு நட்டணையும் பண்ணி யாமறியோம்.
நான் ஊருக்குப் போயிருந்த ஒரு நாளிரவு அம்மா வைத்துக்கொண்டு படுத்திருந்த தலையணைக்குக் கீழே ஏதோவொன்று நழுக்கு பிழுக்கென்று நழுவிச்சாம். எழுந்து விளக்கை ஏற்றிப்பார்த்தால் கருநாகமொன்று ‘எஸ் ‘ ஸாக வளைந்து படுத்திருக்குதாம்.
அம்மா தும்புக்கட்டையை எடுத்து அடிக்க ஓங்கவும் அது தன் ஓட்டமட்டிக் நிக்கோனை எடுத்துப் படமெடுக்குதாம்.
அம்மாவின் மனத்திலூறிய ஏராளம் ஜீவோபகாரத்துடன் உள்ள மெயின், உப , கடவுளர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தோன்றி பாம்பை அடிப்பதினின்றும் தடுத்தாட்கொண்டுவிட்டனர். அந்தப் பயங்கரமான அனுபவத்தின் பின்னர் ஒரு நாள் அம்மாவும் ‘ஆத்தியைத் தறிக்கத்தான் வேணும் ‘ என்றார்.
அப்பாவுக்கு லோகாயத விஷயங்களில் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் எதுவும் கிடையாது. அவர் பெரும்பான்மையரின் கருத்தை எதிர்த்து மல்லுக்கட்டவெல்லாம் போகமாட்டார்.
ஆத்தியைத் தறிப்பது என்று முடிவெடுத்தான பின்னரும் யாரும் அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டாதிருக்கவே நான் ஒரு நாள் எங்கள் கோடாியை எடுத்து வேருள்ள பக்கமாக போட்டுப்பார்த்தேன்.
அக்கோடரியும் கள்ளி, மொந்தன், பெருங்கதலி இனங்களைத் தறிக்க மட்டுமே தயாரிக்கப்பட்டதாயிருக்கவேணும் , அதன் வெட்டு வாதாரை சுருண்டு திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. மரம் தறித்தல் அப்போதைய பதின்மூன்று வயதுப் பையனுக்கான வேலையாகவும் படவில்லை, அப்போதைக்கு விட்டுவிட்டேன்.
அது 1963ம் ஆண்டு, ஒரு சித்திரை மாதம். காலபோக அறுவடைக்குப் பின்னால் யோகபுரத்தில் எல்லோர் வீடுகளுள்ளும் நெல்லுச்சாக்குகள் நிறைந்திருந்த நேரம். சித்திரை சிறுமாரி என்றே சொல்வார்கள். இது மாறாக ஒருவாரமாகத் தொடர்ந்து வன்னிப் பிரதேசமெங்கும் அடைமழையாகப் பெய்துகொண்டிருந்தது.
அப்போது அது எட்டுப் பத்து வருஷங்களுக்குள்ளான குடியேற்றத்திட்டந்தான்.
இன்று போலவே அன்றும் எங்கும் தார் போடப்படாத பாதைகள் , மழை பெய்தால் டிராக்டரைத் தவிர வேறெந்த வாகனம்தானும் அப்பாதைகளில் செல்லமுடியாது. குறைந்த பட்ஷம் ஒரு டிராக்டர் வைத்துக்கொள்ள வசதி உள்ளவர்கள் மட்டும் வெளியில் வந்து நடமாடித்திரிய ஏனையவர்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு போத்தல் மண்ணெய் வாங்குவதானாற்கூட மூன்று மைல் தொலைவிலுள்ள மல்லாவிக்கோ அன்றேல் ஏழு மைல் தொலைவிலுள்ள வவுனிக்குளக்கட்டுக்குப் போனாலே சாத்தியம். கஞ்சியோ பொங்கலோ ஆக்கிச் சாப்பிட்டுவிட்டு பொழுது சாயவும் ஏதோ ஊரடங்கு அமுலில் இருப்பதைப்போல மக்கள் படுத்துக்கொண்டார்கள்.
சூரியன் தொலைவில் காட்டுக்குள் பதுங்கிவிடவும் வானத்தின் வர்ணங்கள் மெல்ல மெல்ல விடைபெறத்தொடங்கின.
அது வானிலை அவதானிப்புகளோ , அவற்றை மக்களிடம் எடுத்துச்சென்று எச்சரிக்கவல்ல ஊடகங்களோ வளர்ச்சி அடையாதிருந்த நேரம்.
அப்பாவிடம் ஒரு சுருட்டுக்குப் புகையிலைவாங்க வந்த அயலிலுள்ள சின்னத்தம்பிக்கிழவன் நெற்றியைச்; சுருக்கிக்கொண்டு வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: ‘ திக்குகள் நல்லாய்க் காணன்….ம்ம்ம் , கெட்ட ஊதற்காற்றொன்று தெல்லுமாறிமாறி வீசுதுகாண்…. புயலொன்று இறங்கலாங்காண். ‘
அக்குடியேற்றக் கிராமத்தில் யாருக்கும் காய்ச்சல் , குணங்கல் என்று வந்தால் பார்வை பார்த்து, ‘ விடுவிடு சங்கரி…. இறுஇறு சங்கரி…. பொறுபொறு சங்கரி…. கடுகடு சங்கரி…. நறுநறு சங்கரி ‘என்று விபூதி மந்திரிச்சுக்கொடுப்பது கிழவன்தான்.
கிழவன் வீட்டுக்குப் போய் ஒரு கால் மணியாகியிராது.
நாலைந்து மழைத்துளிகள் என் முகத்தில் குளிர்ந்தன.
‘ அட மழை வருகுது உள்ள வா .. .. .. ‘ என்று அம்மா மீண்டும் கூவினார். தென் மேற்கில் மின்னித்தெரிய மழை மெல்ல மெல்ல இறங்கத்தொடங்கியது. சற்றைக்கெல்லாம் பலமான காற்றும் வீசத்தொடங்கியது. மழை மெல்ல வலுக்கத் தொடங்கியதும் காற்றும் ஆர்ப்பரித்துப் பலமாக வீசத்தொடங்கியது.
கொலனி குடியேற்ற வாசிகளுக்கு ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் இலவசமாக கட்டித்தந்த இரண்டு அறைகளும் முன்பின்னாக ஆளோடியாக ஒடுங்கிய இரண்டு விறாந்தைகளையுங்கொண்ட சிறுவீடுகள் அவை. அனேகமானோர் வீட்டின் முன்னுக்கும் பின்னுக்கும் அமைந்த விறாந்தைகளில் சாய்வு பத்திகள் இறக்கியிருந்தார்கள். உள் அறைகளில் ஒன்றுக்கு மட்டுமே நிலத்திற்கு சீமெந்து இடப்பட்டுள்ளதால் அனேகமானோருக்கு அதுவே படுக்கை அறை. காற்று வேகம்பிடிக்க ஜன்னல்கள் படபடவென அடிக்கத்தொடங்கின. திறாங்குகள் உடைந்துபோயிருந்த ஜன்னல்களை அவை திறந்து திறந்து அடிக்காதபடிக்கு இழைக்கயிற்றால் வரிந்து கட்டினோம்.
முதலில் காற்று கிழக்கு மேற்காக வீசியது. எமது வீட்டின் கிழக்குப் பக்கமாக ஆடுகள் கட்டவும் விறகு சேமித்து வைத்திருக்கவும் போட்டிருந்த ஒத்தாப்பின் கூரை கப்புகளுடன் பிடுங்குப்பட்டு வீசப்பட அங்கே கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து அலறிக்கொண்டு மேற்கு விறாந்தைக்கு வந்து சேர்ந்தன. அம்மா விறாந்தையிலிருந்த மேசை ஒன்றைச் சரித்துப் போட்டு எரிப்பதற்காக வைத்திருந்த இரண்டு புறவெட்டுப் பலகைகளையும் மேசையுடன் சேர்த்து ஒரு மாதிரி அண்டைகட்டி ஆடுகளை அதற்குள் நிற்பதற்கு வசதி பண்ணிவிட்டார்.
ஒரு கணம் காற்று வேகம் குறைவது போலிருந்தது. அடுத்து பத்து நிமிஷத்தில் நான் சும்மா என்பதுபோல் காற்று மீண்டும் ஆர்முடுகித்தன் திசையையும் மாற்றி இப்போது தென்மேற்கிலிருந்து அசுரத்தனமாக வீசியது. அச் சிறுவீடுகள் தனியார் ஒப்பந்தக்காரர்களால் பாலியாற்றுக் குறுமணல் நிறைவீதத்தில் கலந்து அரிந்த கொங்கிறீட் கற்களால் கட்டப்பட்டவை.
அணை ஒன்றைத் திறந்துவிட்டதைப்போல வானம் பிரிந்து சாய்கோணத்தில் சாந்து பூசப்படாத அச்சுவர்களில் கொட்டவும் கேட்பானேன், மழைநீர் சுவரூடாக தங்குதடையின்றி நுழைந்து வீட்டுக்குள் பெருகியது.
போதிய கோணிசாக்குகள் இல்லாததால் கடந்தபோக அறுவடையின் நெல்லு ஐம்பது புசல் வரையில் சீமெந்துத்தரை அறையில் தரையில் கொட்டப்பட்டிருந்தது. சுவர் ஊறி உள்ளே வந்த நீரால் நெல்லு நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா துக்கம் தாளாது அழவேதொடங்கிவிட்டார்.
அதற்குள் முன் விட்டு மணி ஆறு பிள்ளைகளுடன் என்னதான் செய்தாளோ அவள் புருஷனும் யாழ்ப்பாணம் போய்விட்டார், பக்கத்து வீட்டு நல்லையர் குடும்பம் என்ன செய்துதுகளோ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார். இரண்டு வீடுகளும் ஒரு நூற்றைம்பது மீட்டர் தள்ளியே இருந்தன. காற்று வீசிய வேகத்தில் வெளியே கால் வைத்தால் உருட்டிச் செல்லப்பட்டுவிடும் அபாயம். அவர்களைப் போய் பார்க்கவும் முடியவில்லை.
அதற்குள் அப்பாவும் பூநகரிக்கோ முறிகண்டிக்கோ கரி சுடப்போயிருந்தார்.
மன்னார்க்கடலிலிருந்து பிரளயக்கூவலுடன் வீசிய சூறாவளியில் ஆத்தி மரம் தலையைச்சுற்றி அருள் வந்ததுபோல் ஆடியது. அதன் சுழற்சிவேகத்தில் நுனிமரம் சுழன்று சுழன்று தரையை அடித்தது. சற்றைக்குள் ஆத்தி வேருடன் பிடுங்கப்பட்டு காற்றிலே ஒரு துரும்பைப்போலும் பறப்பதைப் பார்ப்போம் என்றிருந்தது. மரம் வீட்டில் வேறு மோதித்தொலைத்தால் என்ன விபரீதம் நடக்குமோவென்று பயமாகவுமிருந்தது.
அத்தனை அமளிதுமளிக்குள்ளும் அம்மா குசினிக்குள் புகுந்து சோற்றுப்பானையையும் , கறிச்சட்டிகளையும் மற்ற அறைக்குள் தூக்கிவந்து காரமான ஆரதக்கறிகள், தயிருடன் கொஞ்சம் சோறு குழைத்து எனக்கு கையில் தந்தாரென்பது ஞாபகம். எல்லோரது அம்மாக்களைப்போலவும் எனது அம்மாவும் ஆரதக்கறிவகைகள் சமைப்பதில் மிகவும் கெட்டிக்காரி. சாப்பாடான பின் சூடாக தேனீர் குடித்தால் இன்னும் தெம்பாக இருக்கும்போலிருந்தது. அடுப்புக்கால்கள் உட்பட குசினி நனைந்து தெப்பலாயிருந்தது.
நான் நனையாத நெல்லை அறையின் மற்றப்பக்கத்திற்கு மண்வெட்டியால் வாரிவிட்டு அதன்மேல் பாயைப்போட்டு படுக்க முயற்சித்தேன்.
அம்மா டிரங்குப்பெட்டியைத் திறந்து தோய்த்து உலர்ந்த தனது நூல்சேலைகள் இரண்டை எடுத்துத் தந்து ‘ நல்லாய் போர்…. ‘ என்றார்.
காற்று மீண்டுமொருமுறை தன் திசையை மாற்றவும் தெற்கு விறாந்தையின் ஓடுகள் எடுத்து வீசப்பட்டுத் தரையில் விழுந்து படபடவென நொருங்கும் சப்தம் கேட்டது.
ஜலப்பிரளயம் வந்துவிட்டதாக எண்ணிய அம்மா
‘காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி னோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க…. ‘
என்று கந்தசஷ்டிகவசத்தைப் பாடலானார்.
வடக்கின் குடியேற்றக் கிராமங்களிலெல்லாம் மணிக்கூடுகள் அவ்வளவுக்கு புழக்கத்திலிருக்கவில்லை. நேரம் தெரியவில்லை. ‘அம்மா இரண்டு மணியிருக்கும் ‘ ‘ என்றார்.
பளீரென்று ஒரு பெரு மின்னல் தெறித்து வானந்தான் பற்றி எரிந்ததோ உலகமே பளீர்சிவப்பாகியிருக்க நீண்ட நேரத்துக்கு இடி இடித்து எதிரொலித்தது. சற்றுநேரம் எத்திசையில் நோக்கிலும் கண்களில் சிவப்பே தெரிந்தது.
காற்று ஒருவித தாளகதியுடன் தன் வேகத்தை ஏற்றியிறக்கிக்கொண்டு ‘ஓ.. .. ஓ.. .. . ‘.வென்று வீசவும் ஆத்திமரம் தன் கேசத்தை வீசிப்பேயாடுவதுபோல் சுழன்றாடுவதைப் பார்க்க படுபயங்கரமாக இருந்தது. மீண்டும் ஒருதரம் வான வாவி தலைகீழாகப் புரண்டு கொட்டவும் பெருவெள்ளம் வீட்டினுள் இதோ நுழைகிறேன் நுழைகிறேன் என்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல்போலவே தெரிந்ததில் பாக்குக்கடல்தான் மன்னாரை மேவியிங்கு வந்துவிட்டதோ என்றிருந்தது. இந்த அவலம் வன்னியில் யோகபுரத்துக்கு மட்டுமேயானதா இல்லை முழு உலகத்துக்குமாவென்றுந் தெரியவில்லை. இனி வீட்டின் சுவர்கள் சரிந்துவிடக் காற்றில் அடிபட்டுவிடுவோமோ ? கெடுதியும் அவலமும் விளைவிக்கவென்றே அவதாரம் எடுத்த ஒரு அசுரனைப்போலவும், ஊழிக்காற்றாக வந்து சுழன்றாடிக்கொண்டிருக்கும் புயல் மேலும் என்னவெல்லாம் செய்ப்போகிறது என்று தெரியாததால் நான் உள்ளுரப் பயத்தால் உறைந்துபோயிருந்தேன். அனேகமாக அப்பா இனி எங்களைப் பார்க்கமாட்டார், எனது அடுத்த பிறந்த நாள் இனி வரவேவராது என்று நம்பினேனாயினும் வெகு இயல்பாக இருப்பது போலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு புயலை அனுபவிப்பது வாழ்வில் இதுதான் முதன்முறை.
காணிநிலம் இல்லாத எளிய மக்களுக்கே குடியேற்றக்காணிகளைப் பங்கீடு செய்வதில் முதலிடம் கொடுப்பார்கள். அப்படிக் கிடைத்த காணியில் குடும்பமாக குடியேறியிருந்து விவசாயம் செய்யாவிட்டால் அக்காணியின் பெர்மிட்டை ரத்துச்செய்துவிடுவோம் என காணிக்காரியாலய அதிகாரிகள் பயமுறுத்தவும், யாழ்ப்பாணக்கல்லூரி ஒன்றில் ஒழுங்காகவே படித்துக்கொண்டிருந்த என்னை கல்லூரி அதிபர் எவ்வளவோ தடுத்தும் கேளாது அப்பா விடுத்துக்கொண்டுவந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க கதிரை மேசை வசதிகள்கூட இல்லாத யோகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.
அங்கு வந்த ஆரம்பத்தில் அப்பா செய்வித்துத்தந்த நாலுசில்லு வண்டியைத் தரதரவென இழுத்துக்கொண்டு திரிவதில் ஏதோ ‘ஃபெறாறி ஸ்பைடரில் ‘ உல்லாசிப்பதுபோலும் எனது புலன்கள் அனைத்தும் ஒன்றிச் சுகித்திருந்தன. பின் அவ்வன்னிப்பிரதேசத்தில் அடிக்கடி மிகமலிவாகக் கிடைக்கக்கூடிய மான், மரை, பன்றியிறைச்சிகளில் என் கவனம் திருப்பப்பட்டிருந்ததில் எனது கல்வியின் இழப்பு அவ்வளவாகத் தோற்றவில்ைலை. பின்னர் அப்படித்தான் படிப்புத் தொலைந்து போனாலும் ஒரு டிராக்டரை வாங்கிவைத்துக்கொண்டு அங்கேயே பிழைத்துவிடலாமென்று பாமரத்தனமாக என்னை நானே சமாதானம் பண்ணிக்கொண்டேன்.
வாரவிடுமுறைகளை ஊரில் அனுபவிக்கவேண்டி வெள்ளிக்கிழமை மதியமே யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடும் ஆசிரியர்களின் கைப்பையையோ, பொதியையோ மல்லாவிச்சந்திக்குச் சுமக்க நேர்கையில் பல தடவைகள் அப்பாவின் தொலைநோக்கில்லாத செயலுக்காக மனம் வருந்தியதுண்டு.
தவணைவிடுமுறைகளின் போது ஊர் செல்லும்போதெல்லாம் பாட்டி ‘அடுத்த ஆண்டு அவனை இங்கேகொண்டு சேர்த்துவிடுங்கோ நான் பார்த்துக்கொள்றன் ‘ என்பார். எனக்கும் கண்களில் முட்டிக்கொண்டு வந்துவிடும்.
நாளைய நமது இருத்தல் பற்றித்தெரியாதபோது வவுனிக்குளம் வர நேர்ந்தமை எனக்குள் மீண்டும் இப்போது அழுகையைக்கொண்டு வந்தது.
இருந்த அத்தனை சேலைகளால் போர்த்தியபோதும் ஊசிக்குளிரால் உடம்பு வெடவெடத்தது. நான் படுத்திருந்த பாயில் உட்கார்ந்திருந்த அம்மா அதுவரை ஊறாதிருந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும் ஊடுசுவரின்மீது ஒரு சாக்கினால் போர்த்துக்கொண்டு; ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார். அவர் வாயில் இன்னும் கந்த சஷ்டிகவசம். ‘இவ்வளவு துன்பம் செய்கிற கடவுளை எதற்குத்தான் பாடுகிறாரோ ‘ என்றிருக்கிறது எனக்கு. இவ்வளவு பயங்கரத்துள்ளும் தூக்கம் வேறு வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறது. எப்போதுதான் அயர்ந்தேனோ, கண்விழித்தபோது காற்றும் மழையும் சற்றுக் குறைந்திருந்தன. அம்மா ‘இனி புயல் ஓய்ந்துவிடும் ‘ என்றார். மேலும் ஒரு மணி நேரத்தில் காற்றின் வேகம் தணிந்தது ஆனாலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது.
நிலம் வெளுத்த பின்னாலும் மழை பெய்துகொண்டிருந்ததால் அயலவர்கள் என்னசெய்கிறார்கள் என்று போய்ப்பார்க்க முடியவில்லை. ஒருவாறாக ஏழு மணிவரையில் மழை ஓய்ந்தது. சூரியனும் வெளியில் வந்து ஊரைப்பார்க்கத் தயங்கிக்கொண்டிருந்தது.
சின்னத்தம்பிக்கிழவன் கையில் அவரது கைப்பிடியில் எலிசபெத்மகாராணி எடின்பறோ கோமகன் இணையின் படம் போட்ட, நாற்பதாம் ஆண்டில் கறுப்பாயிருந்த குடையுடன் வந்தார்.
‘என்னுடைய குடிலையும் நாம்பனுகளையும் காணேல்லை ‘ என்றவர் ‘இராசையாவின் பட்டறைக்கொட்டில் கூரைத்தகரங்கள் கிழிக்கப்பட்டுப் பணியாரக்குள கலிங்கில அங்கங்கே விசிறப்பட்டுக்கிடக்காம் ‘ என்றார்.
வெள்ளம் வடிய சனங்கள் மெல்ல மெல்ல சகதிக்குள்ளால் வெளியில் நடமாடத்தொடங்கினர். அனேகமானோரின் வீடுகளின் கூரை ஓடுகள் முக்காற் பங்கும் காற்றில் பறந்துவிட்டிருந்தன.
ஊர் குருசேஷ்த்திரமாகி பெருமரங்கள் எல்லாமே சாய்ந்திருந்தன. பிடுங்கப்பட்டவை முறிக்கப்பட்டவை ஏதோவொரு ஒழுங்கில் ஒன்று கூட்டப்பட்டு ஆங்காங்கு குவிக்கப்பட்டிருந்தன. முருங்கைகள் வாழைகளின் கதைகள் சொல்ல வேண்டியதில்லை.
ஊர் முழுவதற்கும் பயன் தந்துகொண்டிருந்த இராசையா ஆசாரியார் வீட்டு ஜம்புநாவலும், கறிவேம்பும் சாய்ந்திருந்ததைக் கண்டு அவர் தாயார் தலையிலடித்துக்கொண்டு அழுதார். அவர்களிடம் திருத்த வேலைக்கு வந்திருந்த மாட்டுவண்டிகள் அடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டுபோய் முள்ளுக்கம்பிவேலிக்கு அப்பால் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன.
எங்குதான் வீசப்பட்டுதோ வளவுக்குள் நின்ற கொண்டல் மரத்தை அங்குரத்துடன் காணவில்லை. வாழைகள் குட்டியும் குலையுமாக முறுக்கித் திருகப்பட்டு நார்களாக்கப்பட்டிருந்தன.
கூரைகளோ, பத்திகளோ இறக்கப்படாது தனித்து நின்ற வீடுகள் பலவும் கூரைஓடுகளை முற்றாகவே இழந்திருந்தன.
எமக்கு தெற்கு விறாந்தையில் இரண்டு நிரை (இருபத்தைந்து முப்பது) ஓடுகளைத் தவிர ஆத்திமரம் ஒதுக்கமாய் நின்றிருந்த வடக்குப் பக்கத்து ஓடுகள் அப்பிடியே இருந்தது யோகபுரத்தில் எல்லாருக்கும் படு ஆச்சர்யம்.
‘வங்காளவிரிகுடாவில் திடாரென ஏற்பட்ட பவனமணடல அமுக்க மாற்றத்தால்
கிளம்பிய புயலே இப்படி வடமேற்காகச் சுழன்று குமரிமாவட்டத்திலும் , வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாம். ‘
இப்புயலின்போது இராமேஸ்வரத்தையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் பாம்பன்பாலம் தகர்ந்துபோனது.
இலங்கை – கிழக்கு மாகாணக் கடற்கரையோரத்தில் குடிசை போட்டு வாழ்ந்த பல மீனவக் குடும்பங்கள் உட்பட அங்கே பத்தாயிரம்பேர்கள் வீட்டையும் கூரையையும் இழந்தார்கள்.
வவுனிக்குளப் பிரதேச குடியேற்றத்திட்டத்தின் பிதாமகரான அப்போதைய அரசாங்க அதிபர் ஆழ்வார்ப்பிள்ளை நேரில் வந்து சேதங்களைப் பார்வையிட்டார். அவருடன் கூடவந்த அலுவலர்கள்; பட்டாளம் சிறுசிறுகுழுக்களாகப் பிரிந்து எல்லா கொலனி யூனிட்டுகளுக்கும் சென்று ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஏற்பட்ட நஷ்டங்களைக் கணக்கெடுத்தார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் முதல் நிவாரணமாக பல லொறிகளில் ஓடுகளும், மூலை ஓடுகளை வைத்துக்கட்ட சீமெந்தும், கோதுமைமா மூடைகளும் வந்திறங்கின.
மாங்குளம் துணுக்காய் கிறவல் வீதியைத் தவிர்த்து யோகபுரம், ஒட்டன்குளம் , கொத்தம்பியாகுளம், துணுக்காய் எப்பகுதியுள்ளுமே லொறிகள் போகமுடியாதாகையால் யோகபுரம் முதலாம் யூனிட் பல நோக்க கூட்டுறவுச் சங்க வளவினுள்ளும், இரண்டாம் யூனிட் நெற்சங்க வளவிலும் , மூன்றாம் யூனிட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் அவை இறக்கப்பட்டு கொலனிவாசிகளுக்கு விநியோகிக்கப்பட மக்கள் மாட்டு வண்டிகளிலும், தலைச்சுமையாகவும் அவற்றை எடுத்துச் சென்றார்கள்.
எமக்கும் நாற்பது ஓடுகள் தந்திருந்தார்கள், அவற்றையொரு சாக்கில் போட்டுக்கட்டி சைக்கிளில் இரண்டு நடைகளில் சகதியில் தாண்டிமிதந்து எடுத்து வந்திருந்தேன். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இவ்வுடனடி நிவாரணம் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
இவ்வேளை பாலியாற்றங்கரைக்கு மேற்காகவுள்ள பாண்டியன்குளத்தில் காடுவெட்டுவதற்கு வந்த (அப்பாவுக்குத் தெரிந்த) ஒப்பந்தக்காரர் ஒருவர் புயல் அனர்த்தங்களுடன் சற்று ஓய்வுவேண்டிப்போலும் தன் பட்டாலியனுடன் காடுவெட்டும் நீண்டபிடியுடனான கத்திகள், பளபளவென மின்னும் கோடாரிகளெனப் பல ஆயுதங்களை எங்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கேயோ போயிருந்தார். அவற்றுள் பளீரென்று வாதாரை மின்னிக்கொண்டிருந்த கூரிய கோடரியைப் பார்த்ததும் மீண்டும் எனக்குள்ளான சைத்தான் உயிர்பெற்றுக் கைகளைப் பரபரக்க வைக்கவும் கோடரியில் ஒன்றை எடுத்துச்சென்று ஆத்தியில் இடுப்பில் போட்டேன். பச்சை வெட்டுச்சிராய்கள் ‘ஷ்யுக்… ஷ்யுக் ‘ என்று பறக்கப் பறக்க கோடரி ‘சதக்…சதக் ‘கென்று இறங்குகிறது. ஒரு சுற்று இறங்கியதும் மேற்பட்டையை அடுத்துள்ள உட்பகுதியிலிருந்து பாலும் உதிரமும் கலந்தது போல் திரவம் வடியவும் மனதை ஏதோ பண்ணுகிறது.
மீசை கறுக்காதா, கிருதா நெடுக்காதா என்ற ஏக்கங்கள் படிந்திருந்த பருவத்தில் மரத்தைத் தனியாக வெட்டுவதுதென்பது ஒரு வித ‘ பெரியஆள்த்தனமாகவே ‘ படுகிறது. தொடங்கிய காரியத்தை இடைநிறுத்துவதா ? தொடர்ந்து வெட்டினேன். பச்சையும் உயிருமாயிருந்த ஆத்தி காற்றில் ‘ஓ ‘ வென்று இரைந்துகொண்டு பாட்டில் சாய்கிறது.
பாட்டத்தில் சாய்ந்த ஆத்தியைப் பார்க்கவும் நெஞ்சில் கழிவிரக்கம் பிறக்கிறது. அதன் இருப்பின் கம்பீரம் இல்லையென்றாகி அவ்விடத்தில் பாழ்வெளி! மனது ஒப்புகின்றதில்லை , பிசைபடுகின்றது. ஜடமோ உயிரோ ஒன்றின் வீழ்ச்சியை பார்க்க நேர்வது அவலம். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ…. ? நெஞ்சில் ஒருவகை அவசமும், அந்தகாரம் நிறைகிறது.
உட்பாவாடை அணியாமல் சேலை கட்டுவதற்கோ, பாடி இல்லாமல் ரவிக்கை போடுவதற்காகவோ அம்மாவால் தனியாக ஓரங்கட்டப்பட்டு அடிக்கடி அர்ச்சிக்கப்படும் அயல்வீட்டுத் திலகம்மாமி மரம் சாய்ந்ததும் இதற்காகவே காத்திருந்தவர்போல விரைந்து வந்து தன் ஆடுகளுக்காக இலைகளை ஒடித்துச் சாக்குகளில் அடைந்தார்.
வயலுக்குப் போய் வரம்புகளை வெட்டி வெள்ளத்தைக் கடத்திவிட்டுவந்த சின்னத்தம்பிக்கிழவன் மட்டும் ஆத்தி சாய்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு
‘ சின்னப்பெடியா! ‘ என்றார்.
‘ என்னப்பா ? ‘
‘என்னொரு மடைவேலை செய்துபோட்டாய் காண்…. திடாரெண்டு என்ன வந்ததுனக்கு ? ‘
‘ இல்லையப்பா அது புயல்ப்போது சுழன்றாடின ஆட்டத்துக்கு முறிஞ்சிருந்துதேயென்றால் வீட்டையொரு பக்கம் பெயர்த்துக் கொண்டு போயிருக்கும்…. ? ‘
‘ ஆனால் அது அப்பிடி ஒன்றுஞ்செய்யேல்லையே கிளி…. வீரையென்றால் கிழிஞ்சிருக்கும்…. முதிரையென்றால் முறிஞ்சிருக்கும்…. பாலையென்றால் சரிஞ்சிருக்கும்…. இந்த ஆத்தி நார்மரமாயும் கோறையாய் இருந்ததாலுந்தான் இந்தப்புயலிலே அப்பிடிக் கசங்கியும் பிழைச்சு நிண்டது காண் …. ‘
‘ஆமோ…. ? ‘
‘ ஆத்தியின்ரை ஒதுக்கிலதான் உன்ரை வீட்டு ஓடுகள் தப்பினது காண்….! ‘
பண்ணியது முழுமுட்டாள்த்தனந்தான். சின்னத்தம்பிக்கிழவன் ‘காண் காண் காண் ‘ எனவும் எனக்குள் துக்கம் அதிகரித்தது.
‘அவள் நினைவுகள் என்னால் ஒதுக்கிவிட முடியாதபடி என்னுள் தோன்றித்தோன்றித் துன்பம் செய்கின்றனவே…. என்றோ ஒருநாள் நான் அறியாமல் செய்துவிட்ட ஒரு பாவத்தைப்போல…. ‘ என்று ஒரு உருதுக் கவிதையின் வரிகள் வரும். (நன்றி. அப்துல் ரஃகுமான்)
பச்சைமரத்தின் அருமை புரிந்த நாள்முதலாய் என் நினைவில் தொடர்ந்தும் படர்ந்தும் வரும் அவ் ஆத்திமத்தின் பவிசு இப்போதும் என்னை வருத்தாத நாளேயில்லை.
மூடாப்பு மந்தாரம் குறைந்து சற்றே வெய்யில் மினுங்கவும் மக்கள் தம்மிடம் நனையாதிருந்த தானியங்களுடன், கிழங்கு போன்றவற்றைப் பண்டமாற்றுச்செய்து உணவுப்பிரச்சையைச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.
புயல் அடித்து ஓய்ந்து ஒரு வாரம் ஆகியிராது.
‘ நட்டாங்கண்டல் , வவுனிக்குளம் , மூன்றுமுறிப்பு, பன்றிவிரிச்சான், இரணைக்குளம் , பனங்காமம், ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, பகுதிகளில் இன்றைக்கு மீண்டும் லேசாய் புயலடிக்கப்போகுதாம். ‘ என்ற செய்தி விதானையார் வீட்டு டிரான்சிஸ்டர் றேடியோவிலிருந்து வவுனிக்குளப்பகுதி முழுவதும் பரவியது.
முன்னரைப்போல பல பயங்கரமாய் இருக்காதெனும்…. மன்னார், கள்ளியடி, வெள்ளாங்குளம் மீனவர்களைக் கடலுக்குப் போகவேண்டாமென்று எச்சரிக்கப் பட்டிருப்பதாவும் சொன்னார்கள்.
சுட்ட கரியை லொறி வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு எமக்கு என்னாச்சோ ஏதாச்சோவென்ற பரிதவிப்போடு அப்பாவும் வந்துசேர்ந்திருந்தார்.
ஊரில் யாருமே ஓடுகளை அதற்குள் வேய்ந்திருக்கவில்லை. எமக்கு இரண்டு நிரை ஓடுகள்தானே கொண்டுவந்தவுடனேயே அப்பா எடுத்து ஒவ்வொன்றாக மேலே தரத்தர நான் வேய்ந்து முடித்துவிட்டேன்.
மக்கள் பத்திகளையும் ஒத்தாப்புகளையும் சரிசெய்து தாம் சேகரித்த சொற்ப விறகுகளையும், தானியங்களையும், மழையிலிருந்து காப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.
மாலையானதும் மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நடுவானத்திலிருந்து தரையைத்தொட வெளிர் நீலத்தில் இறங்கிய நீண்ட மின்னற்கொடிகள் செவ்வூதாவாகி செஞ்சிவப்பாகிப் பொறித்ததில் பர்வதமொன்று பிளந்து உருண்டதுபோலும் அண்டம் உலுக்கப்பட்டு அதன் அதிர்வுகள் வியாபித்து வாழ்ந்தன. மழை மெல்ல மெல்ல வலுத்து நடுநசியில் உக்கிரமாகியது. சூறாவளியும் தன்னை மக்கள் சீக்கிரத்தில் மறந்து விடுதலாகாதென்று பின்னிரவில் மீண்டும் கோதாவுக்கு வந்திறங்கித் தன் வீரப்பிரதாபங்கள் அனைத்தையும் காட்டிச் சுழன்று சுழன்று சமராடியது.
வடக்குத் தெற்காக வீசிக்கொண்டிருந்த சூறாவளி ஒரு தரம் உச்சிவிட்டு தெற்கு வடக்காக சுழன்று பாட்டத்தில் கிடந்த ஆத்தியை உருட்டி வளவின் மூலையில் எங்கோகொண்டுபோய் ஒதுக்க, எங்கள் வீட்டு ஓடுகள் முழுவதும் காற்றுடன் அப்பளமாய் எழுந்து பறக்குந்தட்டுக்களாய் பறந்து முற்றத்தில் ‘கலிங் கலிங் ‘ கென விழுந்து நொறுங்கிக்கொண்டிருக்க, வானச்சமுத்திரம் தலைகீழாகப் புரண்டு வீட்டினுள் நேராகப் பிரவகித்தது.
.. .. .. .. .. .. ..
03.02.2001 பெர்லின். (காலம் மே- 2002– கனடா)
***
karunaharamoorthy@yahoo.ie
- ….நடமாடும் நிழல்கள்.
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- எங்கே போகிறேன் ?
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
- கடிதங்கள் மார்ச் 18 2004
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு