கேண்மை

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

ஜெயந்தி சங்கர்


சாயங்காலம் ஜவஹர் வந்திருந்தான். சேஷுவைப் பார்க்காமல், அவனால் ஒரு வாரத்தைக்கூட ஓட்டமுடியாது. சின்ன சமாச்சாரம் முதல் பெரிய சமாச்சாரம் வரை அவனிடம் கலந்தாலோசிப்பது தான் ஜவஹரின் வழக்கம். சீக்கிரமே அவனுக்குக் கல்யாணம். நிச்சயமே கல்யாணமோ என்று வியக்கும்படி கிராண்டாக நடந்தது. லீவு எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை வரை போய்விட்டு வந்திருந்தான் சேஷாத்ரி. எல்லோரும் பரிசுப்பொருளுடன் வந்திருந்தனர். ஆனால், எங்குமே நடந்தறியாதபடி சேஷு அவசரக்கைச்செலவிற்கு ஜவஹரிடமிருந்து பணம் கேட்டு வாங்கிக்கொண்டு வந்தான்.

தன் வீட்டிலும் பெண் வீட்டிலும் அடித்த பத்திரிக்கை தவிர தன் அலுவலக நண்பர்களுக்கென்று தானே தனியாக ஒரு இங்க்லிஷ் இன்விடேஷன் கார்ட் அடிக்கவிருந்தான்.

‘எப்பிடியிருக்கீங்க ? ஊருல அப்பாம்மா செளக்கியமா ? ‘, என்று ஜவஹர் விசாரித்ததும் கோதை, ‘ம்,. நன்னா இருக்கேன்.எல்லாரும் நன்னா இருக்கா, ‘, என்று கூறிவிட்டுக் காப்பிகலக்க சமையலுள்ளுக்குப் போய்விட்டாள்.

‘டேய் எல்லாமே நல்லாத் தானே இருக்கு, எனக்கொண்ணும் செலக்ட் பண்ணத் தெரியல்லடா.எதா இருந்தா என்ன ? ‘

‘ரொம்ப அல்டாத அய்யரே.செலக்ட் பண்ணுன்னு சொல்றேன் என்னவோ ‘எதா இருந்தா என்ன ‘ற ? ‘,

‘ஏய் பாய், ஒனக்கு எத்தன தடவ சொல்லணும், நா ஐய்யரில்ல , ஐயங்கார்டா. ‘முதுகில் ஓங்கி ஒன்று வைத்துச் சொன்னான் சேஷு.

‘ஏதோ ஒண்ணும், படுத்துகிட்டு மூணு, இல்லைன்னா நிக்கவச்சி மூணு, சுளுவா வாயில ஐயருன்னு தான் எனக்கு வருது ‘, முதுகைத் தடவிக்கொண்டே ஜவஹர் கேட்கவும் கோதை காபியைக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

‘ஒரு கார்ட் செலக்ட் பண்ணுவான்னு பாத்தா, இவன் என்னவோ இன்ட்ரெஸ்டே இல்லாமப் பேசிக்கிட்டு இருக்காங்க, நீங்களும் கொஞ்சம் பாருங்களேன். ‘

சிரித்தபடியே சாம்பிள்களைப் பார்த்தாள் கோதை.

‘நீ பேசாம அடையாறு போடா உங்க மாமனார் வீட்டுக்கு. சைராபானு தானேடா பேரு, இருப்பா. அவளவிட்டே செலக்ட் பண்ணச்சொல்லு ‘, சிரித்தபடி கிண்டலில் சேஷு இறங்க

‘பானு இப்ப வீட்டுல இருக்கதுடா. ‘

‘அடப்பாவி, இருந்தா மட்டும் போயிடுவீங்களோ. பானுவோட டைம்டேபிள அப்படியே மனப்பாடம் பண்ணியிருக்கான் பாரேன். இரு இரு. புதுக்கோட்டைக்கு ஒரு போன் போட்டு அம்மாகிட்ட சொல்றேன். ‘

செல் சிணுங்க, ஜவஹர் அதை எடுத்துப் பார்த்ததுமே அசடு வழிய, ‘ம்,.. பானுவா ? ம்,..பேசு, பேசு. அடுத்த ரூமுக்குப் போகணுமா ? ‘

அறையின் மற்றகோடியில் பேசிக்கொண்டிருந்த ஜவஹரின் சிவந்த முகம் திடாரென்று லேசாகக் கருத்தது. ‘சரி, சரி, நா ஒனக்கு ராத்திரி போன் பேசறேன். ம்,வேணாம். இல்ல, இப்பல்ல, பை. ‘

‘நா கிளம்பறேண்டா. திடார்னு இப்பத்தான் ஞாபகம் வருது, ‘சூட்டு ‘க்கு அளவெடுக்க ‘ரேமாண்ட்ஸ் ‘ போகணும். அங்க மாமா வெய்ட் பண்ணுவாங்க. ‘

‘கெளம்பு.அதுக்கேண்டா டல்லாயிட்ட ? ‘

‘ஒண்ணும் இல்லடா, அப்பறம் சொல்றேன். போன் பண்றேன், ம்,..பை ‘, நிற்காமல் கிடுகிடுவென்று கிளம்பி விட்டான்.

OOOO

இரவு பதினொன்றரை மணியிருக்கும். அப்போது தான் சேஷாத்ரி தூங்க ஆரம்பித்திருந்தான். தொலைபேசி அலறியது. எரிச்சலுடன் எடுத்தால், ‘நாந்தாண்டா. தூங்கிட்டியா ? ‘, என்று ஜவஹர் சுரத்தே இல்லாமல் கேட்டதும்தான் அவன் போன் செய்வதாய்ச் சொன்னது நினைவிற்கு வந்தது.

‘இல்ல, இனிமே தான் தூங்கணும். சொல்லு, என்ன விஷயம் ? ‘

‘பிடிக்கல்ல, ஒண்ணும் பிடிக்கல்லடா.எனக்குக் கல்யாணமே வேணாம்னு போன் பண்ணி அம்மாட்ட சொல்லப்போறேன். ‘

‘ஏய் என்னாச்சுடா ? ,.. என்ன ப்ராப்ளம் ? சொல்லு.நீ எங்க இருக்க மொதல்ல அதச்சொல்லு. ரூம்ல தானே இருக்க ? ‘

‘ஆமா. ‘

‘நா கெளம்பி வரேன். நீ அங்கயே இரு ‘.

‘இல்ல, நீ வரவேணாம். நாளைக்கி பேசுவோம். ‘

‘இல்ல, நா இதோ கெளம்பிட்டேன் ‘

உடனே போனை வைத்து விட்டு, பைக் சாவியுடன் கிளம்பினான் சேஷு. அம்மா தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தது தெரிந்தது. என்னவாயிற்று இவனுக்கு. ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் போலிருக்கிறது.

வழியெல்லாம், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்ததே மனதில் ஓடியது. அப்போது சேஷுவும் பேச்சிலர்களோடு ரூமில்தான் இருந்தான்.ஒரு வாரம் ப்ஃளூ ஜுரத்தில் அவன் அவதிப்பட்ட போது ஜவஹர்தான் லீவு எடுத்து மருந்து, கஞ்சி என்று கொடுத்துப் பணிவிடை செய்திருந்தான். ஒரு தம்பி அண்ணனைப்பார்த்துக் கொள்வதற்கும் மேலாகப்பார்த்துக்கொண்டான்.

ரூமிற்குள் நுழைந்ததுமே, ‘என்ன பாய், என்னாச்சு திடார்னு. மாமனார் ஏதும் சொன்னாரா ? ‘

‘இல்ல. பானு தான்,.. ‘

‘என்னவாம் ? நீ அவள ஏதும் சொன்னியா ? ‘

‘இல்ல. நா ஒண்ணும் சொல்லல்ல. ஆனா, அவதான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கறா. இப்பவே இப்பிடி என்னக் கண்ட்ரோல் பண்ண நெனைக்கிறாளே, நாளைக்கி கல்யாணம் ஆனதும் என்னவெல்லாம் செய்வா ?

‘எனக்கு ஒரு மண்ணும் புரியல்ல ‘, கடுப்புடன் வள்ளென்று விழுந்தான் சேஷு.

‘நம்ம பிரெண்ட்ஸ் சர்கிள்ள யாரையுமே பார்க்கவோ பேசவோ விடமாட்டாடா இவ, ‘

‘அப்பிடின்னு அவ சொன்னாளா ? ‘

‘இல்ல. ‘

‘பின்ன ஏண்டா சும்மா கற்பன பண்ணிக்கற ? ஆமா,…என்னாச்சு சொல்லு ? ‘

‘ ‘இன்விடேஷன் ‘ தான் இப்பப் பிரச்சனையே. ‘

‘எது ? இங்க்லிஷ் இன்விடேஷன் அடிக்கணும்னியே அதுவா ? ‘

‘ஆமா. செலக்ட் பண்ணிக் கொடுத்துட்டேன் சாயந்தரமே. ‘

‘சரி. அதுல்ல இப்ப என்ன பிரச்சனை ? ‘

‘ஓ, ஒனக்குத் தெரியாதில்ல. ஸ்ரீராமுக்குத் தெரியும். உனக்கு சஸ்பென்ஸா இருக்கட்டும்னுதான் நான் சொல்லல்ல. அதான் உனக்குப் புரியல்ல. ‘

‘என்னடா பெரிய சஸ்பென்ஸ் ?

‘அது வந்து, ஆபீஸ் ஆளுங்களுக்குக் கொடுக்கத்தானே, அதான் நீ ‘இன்வைட் ‘ பண்றாமாதிரி சிம்பிளா அடிக்கப்போறேன்னு சொல்லியிருந்தேன். அது கூடாதாம். ‘

‘ஓஹோ, ம்,..சரி விட்டுடேன். அவளுக்குப்பிடிச்சாப்ல செலக்ட் பண்ணி உங்க வீட்டுல அழைக்கறாப்ல போட்டுடேன். ‘

‘முடியாதுடா. இதுல மட்டும் விட்டுக்குடுக்க மாட்டேன்.அவளுக்கு நட்புன்னா என்னன்னே தெரியல்லடா. படிச்சிருக்காளே தவிர அவுளுக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குதுடா. என்னன்னவோ பேத்தறா. ‘

‘நீதான் இப்பப்பேத்தற. உனக்கும் எனக்கும்தான் பிரெண்ட்ஷிப்ன்னா, உன்னோட பொண்ணடாட்டி, அவங்க வீட்டுல எல்லாருக்குமா ? இங்க பாரு ஜவஹர், பிரச்சனை பண்ணாம இத்தோட விடு. இதுல என்னடா இருக்கு ? இதெல்லாம் செஞ்சிதான் ‘ப்ரூஃப் ‘ பண்ணணுனா ? பேசாம, மனசப்போட்டுக் கொழப்பிக்காம போய்ப் படு. புரியறதா ? ‘

சொன்னபடி பேசாமல், போய் படுத்தான். சேஷுவும் வீட்டிற்குப்போய் வெகு நேரம் யோசித்தபடியே படுத்திருந்தான். பிறகு விடியற்காலையில் தான் தன்னையறியாமல், கண்ணசந்தான்.

OOOO

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம். அடுப்படியில் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தாள் அம்மா கோதையிடம். அவன் எழுந்ததைத் தெரிந்துகொண்டு காப்பியுடன் வந்தாள் அவன் மனைவி.

‘ஆமா, அம்மா என்ன சொல்றா ? ‘, ஆர்வமாய்க் கேட்டான் சேஷாத்ரி.

‘ம், ஒண்ணுமில்லயே. அம்மாக்கு ஏதோ ஆத்தாமை, என்கிட்ட புலம்பினா ‘, தயங்கித்தயங்கிக் கூறினாள் கோதை.

‘ஓஹோ, என்னப்பத்தி தானே ? ‘, நமட்டுச்சிரிப்போடு தன் புது மனைவியைக்கேட்டான், அவளின் கூச்சத்தையும் வெட்கத்தையும் உள்ளுக்குள்ளே ரசித்தபடி.

‘ஐயோ என்னவிடுங்கோ, அம்மாவாச்சு, பிள்ளையாச்சு ‘, என்றபடி நிற்காமல், குடுகுடுவென்று சமையலறையைப்பார்க்க ஓடினாள்.

அம்மாவிற்கு இப்போதெல்லாம் கோதைதான் பெரிதாகப் போய்விட்டாள். பிள்ளையைவிட நாட்டுப்பெண் வந்த ஆறேழு மாதத்திலேயே அம்மாவிற்கு அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிநேகிதியாகிவிட்டிருந்தாள். சேஷுவுக்கு இதில் மெத்த மகிழ்ச்சிதான். ஆனால், இது தொடர்ந்து நீடிக்கவேண்டுமே என்று தான் மனதிற்குள் பெருமாளை சேவித்துக்கொண்டான். கோதை அம்மாவிடம் ‘சமத்து ‘ என்ற நற்பெயர் வாங்கியது ஒரு சாதனை தான்.

அம்மாவின் குணம் கோதைக்கு இன்னும் தெரியவில்லை. சேஷுவிடம் கோபித்துக்கொண்டு திடாரென்று ஹைதராபாத் கிளம்பிவிடுவாள். அங்கு அண்ணா ராகவனிடம் மனஸ்தாபம் வரும் வரை இருப்பாள். அப்படி வரும் போது மறுபடியும் இருக்கவே இருக்கிறது சென்னை. மன்னியுடன் கூடச் சிலவேளைகளில் சண்டை வருவதுண்டு.

தன்னிடம் தான் பிரச்சனையோ என்று அம்மாவின் இடத்திலிருக்கும் யாரும் யோசிப்பார்கள். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அம்மாவிற்கு அவ்விதச் சிந்தனைகள் இத்தனை வருடங்களில் ஒரு முறைகூட வந்ததாகவே தெரியவில்லை. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அம்மாவின் குணம் நன்கு தெரியும் என்பதால், பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை.

சாயங்காலம் கோவிலில் வைத்துத் தான் கோதை சொன்னாள். அம்மாவிடம் கேட்கக்கூடாது என்று உத்தரவாதத்திற்கப்புறம் தான் சொன்னாள். அம்மாவிற்கு ஜவஹர் கல்யாணத்திற்கு இருவரும் போவது பிடிக்கவில்லை. அதுவும் இன்விடேஷனில் சேஷு அழைப்பது போலப் போடுவது பிடிக்கவில்லை என்று.

‘அம்மா ஏன் தான் இப்பிடி நேரோ மைண்டடா இருக்காளோ, அவாள்ள இதெல்லாம் ஒத்துக்கவே மாட்டா. ‘இந்து ‘ ஒருத்தனோட பேர் போடறதெல்லாம் அவா எப்படி ஒத்துப்பா. இருந்தும் ஜவஹருக்கு என் பேர்ல அபிமானம் ஜாஸ்தி. எப்பியும் அந்தப்பொண்னுக்குப் பிடிக்கல்ல போல்ருக்கு. நானே சொல்லிட்டேன். ஐடியாவ விட்டுடுன்னு. ஆனா, அம்மா என்ன சொன்னாலும் சரி நாம ரெண்டு பேரும் அவங்கல்யாணத்துப் போறோம் ‘, என்று தீர்மானமாய் பிரகாரத்தில் வைத்துக் கோதையிடம் சொல்லிவிட்டான்.

சாதாரணமாகக் கல்யாணமாகி வந்த பெண்ணுக்குத் தான் மாமியாரிடம் ஒத்துப்போகாமல் பிரச்சனை வரும். வந்த மனைவி சிநேகிதர்களோட சுத்தறது பிடிக்காம கோவித்துக்கொள்வாள். இங்கு எல்லாமே தலைகீழ். அம்மா கோதையை நம்பினாள். சேஷுவைத் திட்டினாள். அதுவும் ப்ரெண்ட்ஸ் விஷயத்திற்காக. கோதை இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திருவிழாவில் தொலைந்த குழந்தையாகச் செய்வதறியாது திருதிருவென விழித்தாள்.

OOOO

சேஷு புதிதாய் ஒரு கார் வாங்க நினைத்திருந்தான். வைத்துக்கொண்டிருந்த காரை விற்க உற்ற நண்பன் ஸ்ரீராம் தான் உதவினான். நல்ல விலை வந்தது. அவன் ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்ததால், உடனடியாய் பெரிய தொகை வேண்டியிருந்தது. எதிர்பார்த்த இடத்தில் தாமதப்படுத்தியதால் சேஷு தான் கார்விற்ற பணத்தைக் கொடுத்தான். இது அம்மாவிற்கு துளிக்கூடப் பிடிக்கவில்லை. அம்மா, இதையே ஒரு வாரமாய்ப் பிடித்துக்கொண்டாள். கோதையிடம் புலம்பியதுடன், அவளை மூளைச்சலவை செய்ய முயன்றாள்.

ஹைத்ராபாத் கிளம்ப அம்மாவிற்குப் புதிதாய் ஒரு காரணம் கிடைத்தது.

‘இங்க பாரு கோத, இத்தன நாள் அவன் இருந்தது, பாச்சிலர் லைஃப். இனிமே கொழந்த குட்டின்னு ஏராளமான செலவு வரும். இவன் இதுவரைக்கும் என்ன சம்பாதிச்சான், யாருக்கு என்ன கொடுத்தான்னு ஒண்ணும் எங்களுக்குத் தெரியாது. அவனோட பிரண்ட்ஸ் எல்லாரும் சகஜமா ஆத்துக்குள்ள நொழஞ்சு அவாபாட்டுக்கு அவனோட ‘வாலட் ‘லருந்து பணத்தை உருவிண்டு போவா. இவன் பேசாமப் பார்த்திண்டிருப்பான். நானே பாத்திருக்கேன். அதுவும் இந்த ஸ்ரீராம் இருக்கானே தன்னோட சம்பளத்த என்ன பண்ணுவானோ தெரியாது, முழுக்க முழுக்க இவனோட செலவுலயே ஒட்டுவான். ‘

‘…. ‘

‘நா இதெயெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, இனிமே அப்பிடியெல்லாம் இருக்க முடியாது. நான் முன்னாடியெல்லாம் சொல்லிப்பாத்துட்டேன். ஒண்ணு கத்துவான். இல்லையா ஒரு மொறைப்பு மட்டுமே பதிலா வரும். இப்பல்லாம் சொல்றதேயில்ல. இனிமே நீயாவது கொஞ்சம் சொல்லு. ‘

‘ஐயோ, நானா ? ‘

‘ஆமா, நீதாஞ்சொல்லணும். ‘

‘அம்மா, அவர் கல்யாணம் ஆன ரெண்டு மூணு நாள்ளயே என்னோட பிரண்ட்ஸ் விஷயத்துல அனாவசியமாத் தலையிடக்கூடாதுன்னு சொல்லிட்டார். அதுவும் ஸ்ரீராம்தான் எங்க கல்யாணம் நடக்கவே காரணமாமே… ‘

‘அதுக்கு என்ன பண்ணணுமாம் ? அவன நிக்க வச்சுச்சுத்தி பிரதக்ஷணம் வரச்சொல்றானா ? ‘

‘இல்லம்மா, நா எப்பிடி அவர்கிட்ட சொல்ல, நீங்களே சொல்லுங்கோளேன், ‘

‘என்னவோ போ. எனக்கொண்ணும் பிடிக்கல்ல. வெகுளியா இருந்தா போறாது கோத. கொஞ்சம் சாமர்த்தியமும் வேணும். ‘

இத்தோடு முடியவில்லை அம்மாவின் புலம்பல். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோதையிடம் பழைய கதையை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘கல்யாணத்தும்போது ஜானவாசத்துல போட்டுண்டானே ஒரு சங்கிலி அது இவனோடதே இல்ல, தெரியுமா ஒனக்கு ? ‘

‘ம்,.. அக்கா கூடச் சொன்னா. இவரோடது அவர் ஃப்ரெண்ட் ஜவஹர் கழுத்துல இருக்காமே. இவர் போட்டுண்டிருக்கறது அவரோடதாம். ‘

‘உனக்கும் தெரியுமா ? இந்தச்சங்கிலிய விட கிட்டத்தட்ட ஒரு பவுன் கூட அது. சினேகிதாள்னா, மாத்திக்கறதுக்கெல்லாமும் கூட ஒரு அளவு வேண்டாம், நீயே சொல்லு. ம்,.. லிமிட் தாண்டினா நன்னாவா இருக்கு,ம் ? ‘

அம்மா சலித்துக்கொண்டே கோவிலுக்குக் கிளம்பினாள். அம்மாவிற்கு சொல்லவேண்டுமென்று ஏராளமாய் மனதிற்குள் இருந்தும் சேஷுவிடம் பேசும்போது வாயடைத்து விடும். கொட்டித்தீர்க்க அப்பா இருந்தவரை அவர். பிறகு கோதை அகப்பட்டாள் சமீபமாக. அவளை ஒரு வடிகாலாகப் பயன் படுத்திக்கொண்டாள்.

OOOO

அடுத்த நாளே மாலைச் சிற்றுண்டி தயாரிக்கக் கிளம்பினர் மாமியாரும் நாட்டுப்பெண்ணும். அம்மா சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொடுப்பது வழக்கம். மற்ற எல்லா வேலைகளையும் கோதையே செய்துவிடுவாள். டைனிங் டேபிளில் பிசைந்த மாவை வைத்துவிட்டு அதனை மூட தட்டு எடுக்க சமையலறைக்குள் சென்றாள் அம்மா. சேஷூ ஆபீஸிலிருந்து திரும்பியவன் டைனிங் டேபிளில் இருந்த மாவைப்பார்த்துக் கொண்டே சேரில் உட்கார்ந்தான். ‘என்ன கோதை, யாராவது ஈவினிங் சாப்ட வராளா என்ன ? இவ்வளவு மாவு பிசைஞ்சிருக்க ? ‘, என்று மிகவும் ஜோவியலாகக் கேட்டான்.

இதைக்கேட்டுக்கொண்டே வந்த அம்மா சீரியஸாகி விட்டாள். காபியைக் குடித்து விட்டு சேஷு குளிக்கச் சென்றதும், ‘கோத, எனக்கும் வயசாச்சி. உங்களையெல்லாம் மாதிரி எனக்குச் சிக்கனமா இருக்கத் தெரியல்ல ‘,என்று நாட்டுப்பெண்ணிடம் முறையிட்டாள்.

‘ஐயோ அம்மா, அவர் என்னச் சீண்டறதா நெனச்சிண்டு எதோ சொல்லிட்டார். நீங்கதான் மாவு பிசைஞ்சதுனு தெரிஞ்சிருந்தா ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டார்மா. ‘

‘நீ சப்பக்கட்டுகட்டாத. அவன் எப்பவுமே அப்படித்தான். எனக்குத் தான் பாசம் அடிச்சிக்கறது. அவனுக்கு என்னவோ பிரண்ட்ஸ் போறும்.என்ன மதிக்கறதே இல்ல. நா ஹைத்ராபாதுக்குப் போகணும். என்ன இருந்தாலும் ராகவன் என்ன இப்பிடி ட்ரீட் பண்ணவே மாட்டான். ரயில் டிக்கெட் எடுத்து என்ன ஏத்தி அனுப்பச்சொல்லு ‘,கண்களில் கண்ணீர் பளபளக்கப் பொரிந்து தள்ளுகிறாள்.

‘ஏம்மா அவசரப்படறேள். அடுத்த வாரம் திருப்பதிக்குப் போகப்போறோமேம்மா. ‘அம்மாவும் ரொம்ப நாளாச் சொல்லிண்டிருக்கா ‘னு ப்ளான் பண்ணி, டாக்ஸிக்கெல்லாம் சொல்லிட்டார்மா. ‘

‘ஒண்ணும் வேணாம்.அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். ‘

‘உங்க ப்ளட் டெஸ்ட் ரிஸல்ட் வந்தா இந்த வாரக்கடைசீல டாக்டர் கிட்டக் கூட்டிண்டு போகணும்னு வேற சொல்லிண்டிருந்தார்மா. ‘

‘நா அங்க ராகவனக் கூட்டிண்டு போகச்சொல்லிக்கறேன். ‘

‘அம்மா, மன்னியும் பொறந்தாத்துக்குப் போகப்போறதச் சொல்லிண்டிருந்தா. நீங்க ஏம்மா தனியா அங்க இருந்துண்டு,… ‘

‘இல்ல, நா இதோ கிளம்பியாச்சு ‘, தன் துணிகளையெல்லாம் அப்பவே பரபரவென்று உருவி பெட்டியில் அடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

அடுத்த நாள் கிளம்பும் போது கூட சேஷுவிடம், ‘ இங்க எனக்கு ரொம்ப போரடிக்கறது. அங்க போயி கொழந்தையோட ஒரு மாசம் இருந்துட்டு வரேன்னு தான் கிளம்பினேன் ‘,என்றாள். அம்மா சொன்னதை அப்படியே நம்பினான்.எல்லோரிடமும், அம்மாவுக்கு போரடித்ததால் கிளம்பிப்போனதாச் சொல்லிக்கொண்டிருந்தான். கோதைக்கு நிஜத்தைச் சொல்லி அவன் மனதைப் புண்படுத்த விருப்பமில்லை.

சேஷுவுக்குப் புரியாதது என்னவென்றால், அம்மாவுக்கு ஸ்ரீராமைக்கண்டாலே ஏன் பிடிக்கவில்லை என்பதுதான். ஸ்ரீராமினால் ஆகவேண்டிய வேலையை மட்டும் எப்படி ஏவிக்கொள்கிறாள் என்பதும் துளியும் புரியவில்லை. இறப்பதற்கு முன்னால், அப்பாவிற்கு இண்டெர்னல் ப்ளீடிங் என்று சொல்லி இரண்டு யூனிட் ரத்தம் ‘ஓ பாஸிடிவ் ‘ தேவையாக இருந்தது. அப்போது சேஷு ஒரு யூனிட் கொடுத்தான். இரண்டாவதைக் கொடுத்ததே ஸ்ரீராம் தான்.

இது தவிர மறுபடியும் ஒரு முறை ஒரு யூனிட் வேண்டும் என்றபோதும் ஸ்ரீராம்தான் கொடுத்தான். அப்போது சேஷூ கொல்கத்தாவில் வேலை விஷயமாக மாட்டிக்கொண்டிருந்தான். அப்பா செத்த பிறகும் முழுக்கமுழுக்க அலைந்து திரிந்து சரீரத்தால் உழைத்தது ஸ்ரீராம் தான். வீட்டிற்குள் ஸ்ரீராம் இல்லாமல், அந்த பதின்மூன்று நாட்களும் யாருக்கும் எதுவும் ஓடாது. ஜவஹர் வெளியில் அலையும் வேலையை எல்லாம் பார்த்துக்கொண்டான். ‘கல்யாணச்சாவு ‘ என்று அம்மா எல்லோரிடமும் பீற்றிக்கொண்டது நண்பர்களால்தான் சாத்தியமானது என்பது மட்டும் அம்மாவிற்குப்புரியவேயில்லை.

OOOO

ஒரு வாரம் கழிந்தது.ஜவஹர் புதுக்கோட்டையிலிருந்து திரும்பினான். சனியன்று வழக்கம் போல சாயங்காலம் வீட்டிற்கு வந்தான். ஸ்ரீராமும் உடன் வந்திருந்தான். ஜவஹரின் முகத்தில் புதிய ஓர் உற்சாகம்.

‘என்னடா, அப்பறம் நீ போனே பண்ணல்ல. செக்ஷன்ல கேட்டா புதுக்கோட்டை போயிட்டன்னாங்க. சொல்லவே இல்ல. திடார்னு என்ன விசேஷம் ?அப்பறம், அம்மா எப்பிடியிருக்காங்க ? ‘,சேஷாத்ரி நண்பனின் முதுகில் அடித்துக்கொண்டே கையைப்பிடித்து உள்ளே அழைத்துச்சென்றான்.

‘எல்லாரும் நல்லா இருக்காங்கடா. ரொம்ப விசாரிச்சாங்க. சும்மாதான் திடார்னு கெளம்பிட்டேன். ‘

கோதையை அழைத்து இருவருக்கும் காப்பி கலக்கச் சொன்னான். அவள் வந்ததும், ‘கோதை, எல்லாருக்குமே டிபன் பண்ணு ‘, என்றான் சேஷு.

‘விடுடா. இன்னிக்கு அவளையும் கூட்டிண்டு பேசாம வெளிலபோயி சாப்டுவோம் ‘, ஸ்ரீராம் இடையில் புகுந்து தீர்மானித்தான்.

‘டேய் ஸ்ரீராம், உனக்காக ஹிண்டு, இண்டர்நெட்னு பூந்து பொறப்டுண்டிருக்கா தெரியுமா கோதை. ரெண்டு மூணு பேரு காண்டாக்ட் கூட பண்ணியிருக்காடா. ‘

‘டேய் ஏண்டா, கல்யாணம் ஆனதும் ஆகாததுமா அவளுக்கு இந்த வேலைய கொடுத்துட்டியா ? ‘

‘சும்மா ஆத்துல பொழுதுபோகாம தானே இருக்கா. அதேயேன் கேக்கற, போன வாரம் ஈமெயில்ல யாரோ போன் நம்பர் கொடுத்திருக்கா. இவோ விஜாரிக்கலாம்னு போன் பண்ணினா, அந்தப்பொண்ணே எடுத்திருக்கு. ‘எங்கப்பா அம்மாவுக்கு நா ஒரே பொண், ஆத்தோட மாப்பிள்ளையாத்தான் பாக்கறா.எனக்கு வீடு இருக்கு, வேலையிருக்கு ‘ன்னு அடுக்கியிருக்கு. கோதை மேற்கொண்டு பேசாம ‘பை ‘ சொல்லிட்டு போன வச்சிட்டாளாம். சாயந்தரம் அவ சொல்லச்சொல்ல எனக்கு ஒரே ஆச்சரியம். எங்களுக்கு இது ரொம்பப் புது அனுபவம். விழுந்துவிழுந்து சிரிச்சிருக்கோம் பாரு அன்னிக்கி. என் உயிர் நண்பன பாழுங்கிணத்துல தள்ளிடாதடி பரதேவதன்னு சொன்னேன் இவட்ட. இப்பல்லாம் பொண்கள் படுகெட்டியாயிருக்குப்பா. ‘

உடனே ஜவஹர், ‘ஆமாப்பா, நீதான் இருக்கறதுலயே சீனியர் வேற. ஸ்ரீராம், சீக்கிரம் செட்டில் ஆவணுமில்ல, முனைப்பாப் பார்த்தாத்தான் கூடி வரும் ‘, என்று கூறினான் முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக்கொண்டு.

‘ஓஹோ, போன வாரம் கல்யாணத்தை நிறுத்திடப்போறதாச் சொன்ன ஆளு தானா பேசறது ?ஆமா, அன்னிக்கேக் கேகணும்னு நெனச்சேன்.கல்யாணத்துல எங்களுக்குத் தனியா வெஜிடெபிள் ஐட்டம்ஸ் இருக்குமா ? இல்ல வயித்துல ஈரத்துணிதானா, ரெண்டு நாளைக்கும் ? ‘, சேஷு ஜவஹரைக் கலாய்த்தான்.

‘சொல்லிட்டேன்ல அம்மாகிட்ட, புதுக்கோட்டையியே பேமஸ் சமையல்கார ஐயரிருக்காரு. அட்வான்ஸ் கூட குடுத்துட்டோம்ல. ‘

‘பரவால்ல. சாப்பாடு உண்டுன்ற. வந்தாச்சுடா, உன் முகத்துல கல்யாணக்களை வந்தாச்சு ‘, சேஷு கேலி செய்ய,

‘ம்,.. ஏன் வராது, ஐயா ஊருக்குப்போயி அம்மாகிட்ட பெரிய ரகளையெல்லாம் பண்ணியில்ல ஜெயிச்சிருக்கார். சென்னைக்கு மட்டும் ஒரு இருபதுமுப்பது காலாவது போட்டிருப்பாங்கள்ளடா ரெண்டு நாள்ள. அம்மாவவிட்டு மாமனார்கிட்ட பேசி, அப்பறம் வுட்பீயைச் சம்மதிக்க வச்சி, ஒரு வழியா நெனச்சதச் சாதிச்சுட்டாண்டா ‘, என்று ஸ்ரீராம் கூறியதும், கோதையும் செஷுவும் அவன் முகத்தையே பார்க்க,

‘ம்,ம்,…அதுக்குத் தானே வந்திருக்கோம். எடுத்துக்குடேண்டா ‘

ஜவஹர் எழுந்து, இன்விடேஷன் கார்டை எடுத்து புன்னகையுடன் சேஷு கையில் நீட்டினான்.

‘என்னடா, இந்த ஃபார்மாலிடாஸெல்லாம். நாங்க இல்லாமயா ஒங்கல்யாணம் ? ‘, என்றபடி பிரித்துப் பார்த்தான்.

அழகான வெளிர் மஞ்சள் அட்டையில் சின்னச்சின்னப்பூக்கள். மதச்சின்னம் எதுவுமே இல்லாமல், சின்னதாய் அழகாய் இருந்தது. ‘மிஸிஸ் அண்ட் மிண்டர் சேஷாத்ரி ராஜகோபாலன் ரிக்வெஸ்ட் த ப்ளெஷர் ஆஃப் யுவர் ஃபேமிலி அண்ட் ஃபிரண்ட்ஸ்…. ‘ என்று ஆரம்பித்திருந்த அழைப்பிதழை அதற்குமேல் படிக்க முடியாமல் நெகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் மறைக்க,….

(முற்றும்)

sankari01sg@yahoo.com

sankari01sg@hotmail.com

sankari01sg@sify.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்