This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue
தமிழில்: கௌரிகிருபானந்தன்
வாழ்க்கையில் என்றுமே விமானத்தில் கூட ஏறியிராதவளுக்கு திடீரென்று ராக்கெட்டில் சந்திரமண்டலத்திற்குப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உண்டாகும், பயமும், உத்வேகமும் என்னை ஆட்கொண்டன. பஸ் வேகமாக போய்க் கொண்டிருந்தது. பெரியப் பெரிய கட்டிடங்கள் பின்னோக்கி போய்க் கொண்டிருந்தன. மூளை மரத்துப் போய் விட்டதால் அவற்றையெல்லாம் கவனிக்கும் நிலையில் நான் இருக்கவில்லை.
“அடுத்த ஸ்டாப்பிங்தான் இறங்கணும் மாமீ.”
சீனுவின் குரலைக் கேட்டு யோசனைகளிலிருந்து மீண்டேன். பரீட்சை சமயம் நெருங்கி விட்டது போல் என் இதயம் வேகமாக படபடக்கத் தொடங்கியது. இயந்திரகதியில் பஸ்ஸை விட்டு இறங்கி சீனுவின் பின்னால் நடந்தேன்.
“சீனூ! நீ ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஒன்றைரை மணி நேரம் கழித்து வா. நான் இல்லாவிட்டாலும் இங்கேயே எனக்காகக் காத்திரு” என்றேன்.
என் வாழ்க்கை ரொம்ப சாதாரணமானது. ஏழைக் குடும்பத்தில் மூன்றாவது பெண். அப்பா பள்ளிக்கூட வாத்தியார். எனக்கு ஓரளவு ஆங்கில மொழியில் தேர்ச்சி இருப்பதற்குக் காரணம் அவர் இங்கிலீஷ் டீச்சராக இருந்ததுதான். இத்ததை வருட வாழ்க்கையில் எனக்காக, என்னுடைய திருப்திக்காக நான் செய்யும் துணிச்சலான காரியம் இது. இந்த வயதில் மனதில் துளிர்ந்த இந்த விருப்பம், அடக்க முடியாத ஆர்வம் யாருக்கும் சிரிப்பை வரவழைக்கக் கூடும். வாழ்வதற்காகவே உயிரோடு இருக்கும் என்னைப் போன்றவளுக்கு எப்போதாவது, ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு சின்ன துணிச்சலான காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விருப்பம் ஏற்படுவது தவறு இல்லையே.
கையில் ஒரு பொட்டலத்தைப் பிடித்துக் கொண்டு அந்தப் பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நுழைந்தேன். ரொம்பப் பெரிய ஹால் அது. ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட் ·போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். தடுமாறும் நடையுடன் அவள் அருகில் சென்றேன்.
“யெஸ்” என்றாள், வாயில் புடவையில் ரொம்ப சாதாரணமாகக் காட்சி தரும் எனக்கு இந்த ஸ்டார் ஹோட்டலில் என்ன வேலை இருக்கக் கூடும் என்பது போல் சந்தேகத்துடன். வைரக் கற்கள் பதித்த நெக்லெஸ்ஸிற்கு நடுவில் கண்ணாடித் துண்டு தென்பட்டுவிட்டது போல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னிக்கு இதுபோல் சந்தேகமும், வியப்பும் நிறைந்த பார்வைகளை நிறைய சந்திக்க வேண்டியிருக்கும் என்று தோன்றியது.
“ரூம் நம்பர் 205க்குப் போகணும்” என்றேன் ஆங்கில உரையாடலுக்கு அஸ்திவாரம் போட்டபடி.
“ஓ …மிஸ் க்ரிஸ்டீனாவைச் சந்திக்கணுமா?” புரிந்து விட்டது போல் பார்த்தாள். “அந்தப் பக்கமாகப் போங்க. ப்க்கத்திலேயே லி·ப்ட் இருக்கு” என்றாள்.
“எந்த ·ப்ளோர்?” கேட்டேன்.
“செகண்ட் ·ப்ளோர்.” சரியான பட்டிக்காடு என்பது போல் அவள் முகத்தில் லேசான சிரிப்பு.
அதைப் பொருட்படுத்தாமல்,”தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு அவள் காட்டிய திசையில் நடந்தேன் .வாழ்க்கையில் லி·ப்டில் ஏறியதே ஒரு தடவைதான். அப்பொழுது பக்கத்தில் என் கணவர் இருந்தார்.
ரிசப்ஷனிஸ்ட் ·போனில் சொல்லிக் கொண்டிருந்தாள். “உன்னிடம் சொன்னேன் இல்லையா, க்ரிஸ்டீனா என்று ஸ்வீடனிலிருந்து ஒருத்தி வந்திருக்கிறாள். ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறாள். அதற்காகத்தான் போலும் பட்டிக்காட்டு பொம்பிளை ஒருத்தி வந்திருக்கிறாள். நாடெங்கும் செய்திகள் எவ்வளவு வேகமாகப் பரவிக்கிட்டு இருக்கு பார்த்தியா?”
திரட்டி வைத்துக் கொண்டிருந்த தைரியம் திடீரென்று ஓடிப் போய்விட்டது போன்ற உணர்வு. நடை தடுமாறியது. கையில் இருந்து நழுவப் போன பொட்டலத்தை மார்போடு அணைத்துக் கொண்டேன். வெங்கடகிரி ஜரிகைப் புடவை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வருடமாகக் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய பொருள்.
பக்கத்து அறையிலிருந்து வெயிட்டர் ட்ரேயுடன் வெளியே வந்தான். என்னுடைய தோற்றம், தயங்கி நிற்கும் தோரணை அவனுள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவன் மேற்கொண்டு கேள்வி கேட்கும் வாய்ப்பைத் தராமல் கதவை வேகமாகத் தட்டினேன்.
“ஹ¤ ஈஸ் இட்? கமின்.” பெண்ணா ஆணா என்று இனம் காண முடியாத குரல்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே அடியெடுத்து வைத்தேன்.
“யார் நீங்க? என்ன வேண்டும்?” ஆங்கிலத்தில் கேட்டாள் அவள். அறையில் தனியாகத்தான் இருந்தாள்.
“மிஸ் க்ரிஸ்டீனா” என்றேன் எப்படியோ வாயைத் திறந்து.
“நான்தான். வாங்க. உட்காருங்க” என்றாள் முறுவலுடன்.
மௌனமாக நடந்து போய் சோபாவின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்திலேயே இன்னொரு அறை இருப்பதை அப்பொழுதுதான் கவனித்தேன். என்னுடைய பயத்தையும், பதற்றத்தையும் உணர்ந்து கொண்டாள் போலும். நட்பு கலந்த முறுவலை உதிர்த்தாள்.
“கொஞ்சம் டீ குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“ஊம்” என்றேன். சூடான டீ ஓரளவுக்காவது என்னுடைய உத்வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடும்.
·பிளாஸ்கிலிருந்து டீயைக் கோப்பையில் ஊற்றி என்னிடம் தந்தாள். டீயைக் குடித்துக் கொண்டே அவள் பக்கம் பார்த்தேன். வயதில் என்னை விடச் சிறியவள்தான். ரோஜா நிறத்தில் மேனி. தேன் கலரில் அன்பைப் பொழியும் கண்கள்.
“நான் டீ அதிகமாகக் குடிப்பேன். அரைமணிக்கொரு தடவை ஒரு கப் குடிப்பது என் வழக்கம்” என்றாள் க்ரிஸ்டீனா, அறிமுகத்தை வளர்த்துக் கொள்ளும் தோரணையில்.
டீயைக் குடித்த பிறகு உண்மையிலேயே கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.
“நான் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருக்கிறேன். கேதாவரி நதிக்கரை பக்கத்தில் சிறிய டவுன் எங்களுடையது. என் பெயர் சாந்தா” என்றேன்.
“ஆந்திர மாநிலம் என்றால் நீங்கள் பேசும் மொழி தெலுங்கு இல்லையா? எங்கள் நாட்டில் நான் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் ஒரு தெலுங்கு டாக்டர் இருக்கிறார். அவரிடம் ஓரளவுக்கு தெலுங்கு பேசக் கற்றுக் கொண்டோம்.” உற்சாகத்துடன் சொன்னாள்.
“நான் அதிகம் படிக்கவில்லை. ஆங்கில அறிவு அவ்வளவாக இல்லை” என்றேன்.
“பரவாயில்லை. ஒருவரின் எண்ணங்களை மற்றொருவருக்குப் புரியும்படி செய்வதுதான் மொழியின் பரமார்த்தம். உங்களுடைய எண்ணம் எதிராளிக்குப் புரியும் போது அதில் இருக்கும் குற்றம், குறைகளைப் பற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லை.” அவளுடைய குரல் கனிவுடன் ஒலித்தது. ஒவ்வொரு வார்த்தையாகப் பிரித்து ஸ்பஷ்டமாகச் சொன்னாள்.
“ஒரு தெலுங்குப் பத்திரிகையில் நீங்கள் கொடுத்த பேட்டியைப் படித்தேன். ரொம்ப நெகிழ்ந்து போய் விட்டேன். உங்களைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினேன். அதான் நேரில் வந்தேன்” என்றேன்.
“தெலுங்குப் பத்திரிகையிலா? நான் தமிழ்ப் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தது உண்மைதான். அதை தெலுங்கில் மொழிபெயர்த்துப் போட்டிருப்பார்கள். என் மகள் ஜெனி·பர் பற்றியும் எழுதியிருக்காங்க இல்லையா?”
“ஆமாம். உங்கள் மகள் … அதான் ஜெனி·பருக்காகக் கொண்டு வந்தேன்.” பாக்கெட்டை நீட்டினேன். “இது மரத்தால் செய்யப்பட்ட யானை அம்பாரி பொம்மை. ஆந்திராவில் கொண்டபள்ளி என்ற கிராமத்தில் செய்வார்கள்.”
“ஓ.. தாங்க்யூ. ஜென்னி குளித்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கு. அவளுக்கு இது போன்ற பொருட்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனால் அன்பளிப்புகள் எதுக்கு?”
“அப்படிச் சொல்லாதீங்க. ஏதோ சின்ன அன்பளிப்பு, என் சந்தோஷத்திற்காக.”
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” க்ரிஸ்டீனா கேட்டாள்.
“மூன்று குழந்தைகள்.” சொல்லும்போதே என் குரல் நடுங்கியது.
“அதில் யாராவது ஹேண்டிகேப்ட்.. அதாவது ஊனமுற்றவர்கள் …. சாரி, நான் இப்படி கேட்டிருக்கக் கூடாது இல்லையா?”
“பரவாயில்லை. ஆனால் அப்படி எதுவும் இல்லை. என் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள்.”
அவளுடைய சந்தேகம் புரிந்தது. ரிசப்ஷனிஸ்டை போலவே நான் குழந்தையை தத்துக் கொடுப்பதற்கு வந்திருப்பதாக நினைத்து விட்டிருக்கிறாள். அவளுடைய சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுமென்று நினைத்தேன்.
“எங்க எதிர் வீட்டில் இருப்பவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் மகன் ஊனமுற்றவன். நடக்கவும் முடியாது. எல்லாம் படுக்கையில்தான். அந்தப் பையனைப் பார்த்துக் கொள்வதற்காக அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. சரியான தூக்கமும் இருக்காது. அவர்களுடைய வேதனையைப் பார்த்த பிறகு குழந்தையே பிறக்காவிட்டாலும் பரவாயில்லை. இரு போன்ற குழந்தைகள் மட்டும் வேண்டவே வேண்டம் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இருக்கும் போது நீங்க உடல் ஊனமுற்ற ஒரு பெண் குழந்தையை வளர்த்து வர்றீங்க. இன்னொரு குழந்தையை, அதுவும் ஊனமுற்ற குழந்தையைத் தத்து எடுக்க வேண்டுமென்று விரும்பறீங்க. இதிலிருந்தே உங்களுடைய பரந்த மனப்பான்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதான் உங்களையும், உங்க ஜென்னியையும் பார்க்கணும் என்றும், அந்தக் குழந்தையை நீங்க எப்படி வளர்த்தீங்களோ என்று தெரிந்து கொள்ளணும் என்றும் வந்தேன்.” மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டு நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டேன்.
“அவளை வளர்க்க கஷ்டப்பட்டேன் என்பது உண்மைதான் என்றாலும் அதில் என்னுடைய பெருந்தன்மை எதுவும் இல்லை சாந்தா. மனிதப் பிறவி எடுத்திக்கிறோம், வாழ்க்கையை நல்லவிதமாகப் பயன்படுத்துவதற்குக் கடவுள் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தந்திருக்கிறார். அதை விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். அவ்வளவுதான். தொழில்ரீதியாக நான் ஒரு நர்ஸாக இருப்பதால் குழந்தையின் உடல் நலக் குறையும், ஊனமும் என்னை பயமுறுத்தவில்லை.” க்ரிஸ்டீனா சொன்னாள்.
“இந்தக் குழந்தையை இந்த நாட்டிலிருந்துதான் அழைத்துப் போனதாக சொல்லியிருக்கீங்க. உண்மைதானா?”
“ஆமாம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தேன். ஏறத்தாழ பத்துப் பேர் சேர்ந்து ஒரு குழுவாக வந்தோம். டில்லி, ஆக்ரா, மதுரா, பிருந்தாவன் எல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு கல்கத்தா போனோம். காசி என்ற இடம் ஹிந்துக்களுக்கு மிகப் பெரிய புண்ய§க்ஷத்ரம் என்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்றும் சொன்னார்கள். அதையும் பார்த்து விடலாம் என்று பனாரஸ் போய்ச் சேர்ந்தோம். அங்கே என் சிநேகிதிக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. நான் அவளுக்குத் துணையாக ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்தேன்.
அப்பொழுதான் பார்ததேன் இந்தப் பெண் குழந்தையை. ஒரு வயது இருக்கலாம். போலியோ பாதிப்பினால் சரியான வளர்ச்சி இல்லை. ஆஸ்துமா வேறு. சரியாக மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். ஜுரத்தில் உடல் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது. குளிப்பாட்டி எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ தெரியாது. உடல் முழுவதும் அழுக்குப் படித்து, தலைமுடி பிசுக்கும் சடையுமாக இருந்தது. இது போதாது என்று ஒரு கண்ணில் காயம். காய்ந்து போயிருக்கும் இரத்தக் கறையைக் கூட நர்ஸ்கள் சரியாகச் சுத்தம் செய்யவில்லை. கங்கை நதிக் கரையில் அநாதையாக விடப்பட்ட குழந்தையாம்.
“எந்த நிமிடத்திலும் செத்துப் போய்விடும்” என்று தங்களுக்குக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஸ்பெஷல் ரூமுக்குக் குழந்தையை எடுத்து வந்தேன். முதலில் உடலைத் துடைத்து சுத்தம் செய்து உடைகளை மாற்றினேன். ஜுரத்திற்கு மருந்துகளை வரவழைத்துக் கொடுத்தேன். கண்ணுக்கு பாண்டேஜ் போட்டேன். எந்தப் பறவையோ கொத்தியதில் கண்பார்வை போய் விட்டது என்று டாக்டர் தெரிவித்தார்.
மேலும் இரண்டு நாடகள் கழிந்த பின்பு ஜுரம் குறைந்தது. ஆனால் குழந்தைக்குப் பிறவியிலிருந்தே காது கேட்கவில்லை என்று தெரிந்தது. அதான் கங்கைக் கரையில் விட்டு விட்டுப் போய் விட்டார்கள் அந்தப் பெற்றோர்கள். அந்த அரசு மருத்துமனையில் நர்ஸ்கள், டாக்டர்கள் யாருமே குழந்தையிடம் அக்கறை காட்டவில்லை.
எனக்கு ஏனோ அந்தக் குழந்தையிடம் பிரியம் ஏற்பட்டது. சாவுடன் போராடி ஜெயித்திருக்கிறாள். எத்தனை கசப்பு மருந்துகளைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் விழுங்குவாள். எத்தனை ஊசிகளைப் போட்டாலும் சிணுங்க மாட்டாள். ஒற்றைக் கண்ணால் தீனமாக பார்ப்பாள். அவ்வளவுதான். அந்தக் குழந்தையை நான் தத்து எடுத்துக் கொள்வதாகச் சொன்னதும் எல்லோரும் ஒரு பைத்தியத்தைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்கள். “ஆரோக்கியமாக இருக்கும் அநாதைக் குழந்தைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். காட்டுகிறோம்” என்றார்கள். நான்தான் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களை யார் வேண்டுமானாலும் வளர்ப்பார்கள். இல்லையா எப்படியாவது அவர்களால் வாழ முடியும். குழந்தையை முறையாக தத்து எடுத்துக் கொண்டு ஸ்வீடனுக்கு அழைத்துப் போய் விட்டேன்.
ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ரொம்பச் சிரமப்பட்டேன். இரவும் பகலும் சிசுரூஷை செய்தேன். போலியோவுக்கு மருந்து மாத்திரைகளுடன் உடற்பயிற்சியும் செய்ய வைத்தேன். காதுக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவளால் கேட்க முடிந்தது. அத்துடன் பேசவும் கற்றுக் கொண்டாள். மருந்துகளைப் பயன்படுத்தியதில் ஆஸ்துமா குறைந்தது. முழுவதுமாக குணமாகிவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அவளுடைய உடல்நலம் இப்போது நன்றாகத் தேவலை என்றுதான் சொல்லணும். நான் நர்ஸ் ஆக இருப்பதால் இதையெல்லாம் என்னால் சுலபமாகச் செய்ய முடிந்தது. இப்போ தன்னுடைய வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள்.” க்ரிஸ்டீனா சொல்லி முடித்தாள்.
“படிப்பு விஷயம்?” என்று கேட்டேன்.
“நன்றாக படிப்பாள். இவர்களுக்காக ஸ்பெஷல் பள்ளிக்கூடங்கள் இருக்கு. வகுப்பில் அவள்தான் முதல் ரேங்க். அதோடு பெயிண்டிங் என்றால் ரொம்ப விருப்பம். அதற்காக வேறு ஸ்கூலுக்கு அனுப்புகிறேன். ரொம்ப நன்றாக ஓவியம் வரைவாள்.”
“நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லையா?” மிஸ் என்று படித்தது நினைவுக்கு வந்தது.
“என்னை பேட்டி எடுக்கறீங்களா?” க்ரிஸடீனா முறுவலித்தாள். “எங்கள் நாட்டில் திருமணத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை சாந்தா. திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழலாம். குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம். குழந்தைகளின் பொறுப்பு மட்டும் இருவருடையது. பிறப்புக்குக் காரணமாக இருந்தவன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க மறுத்தால் அரசாங்கம் அவன் மீது நடவடிக்கை எடுக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அரசாங்கமே குழந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். எனக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருந்தார்கள். ஆனால் குழந்தையை தத்து எடுத்துக் கொண்ட பிறகு என் கவனம் அந்தப் பக்கம் போகவில்லை. ஜென்னி வளர்ந்து விட்டாள் இல்லையா. அதான் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்.”
“ஆனால் மறுபடியும் இந்த நாட்டுக்கே வந்திருக்கீங்க. அதுவும் ஊனமுள்ள பெண்குழந்தை வேண்டுமென்று விரும்புவதாக பேட்டியில் படித்தேன்.” கேட்டு விட்டேன்.
“சொன்னேன் இல்லையா. அங்கே குழந்தைகளின் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். அவர்களை தத்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.”
புரிந்து கொண்டேன். இங்கே அரசாங்கத்திற்கு மட்டுமே இல்லை. சில பெற்றோர்களுக்கும் இது போன்ற குழந்தைகள் தேவையில்லை.
“குட் மார்னிங் மம்மீ!” காதிற்கு இனிமையாக இருந்தது அந்தக் குரல். தலையைத் திருப்பிப் பார்த்தேன். அதற்குள் குளித்து முடித்துவிட்டு நேர்த்தியான உடைகளுடன் ஜென்னி அங்கே வந்தாள். நிறம் கொஞ்சம் மட்டு என்றாலும் களையான முகம். சுருட்டைத் தலைமுடியை போனிடெயில் கட்டியிருந்தாள். எழுந்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் எத்தனை திட்டினாலும் பல் கூடத் தேய்க்கப் போகாத என் சின்ன மகள் நினைவுக்கு வந்தாள்.
ஜென்னி நடந்து வரும் போது கவனித்தேன். கம்பிகள் இணைத்த கனமான ஷ¤க்களுடன் கால்களை இலேசாக இழுத்தபடி நடந்து வந்தாள். இடது கண் பாதி மூடிய நிலையில் ஒளியில்லாமல் தென்பட்டது. காதில் மெஷின் இருந்தது.
“குட் மார்னிங் பேபீ!” க்ரிஸ்டீனா ஜென்னியை அருகில் இழுத்துக் கொண்டு நெற்றியில் முத்தம் பத்தித்து விட்டு பக்கத்தில் அமரச் செய்தாள். அவளுடைய ஒவ்வொரு செயலிலும் தாயின் அன்பும், கருணையும் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
“இந்த ஆன்ட்டீ ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாம். வணக்கம் சொல்லு.” க்ரிஸ்டீனா சொன்னாள்.
இரண்டு கைகளையும் ஜோடித்து, “வணக்கம் ஆன்ட்டீ! உங்களுடைய பெயர் என்ன?” என்றாள் ஜென்னி.
என் விழிகளில் நீர் சுழன்றது. எத்தனை முயற்சி செய்தாலும், ஆரோக்கியமாக இருக்கும் என் குழந்தைகளுக்கு இது போன்ற ஒழுக்கதைக் கற்றுக் கொடுக்க என்னால் முடியவில்லை.
“என் பெயர் சாந்தா. காட் ப்ளெஸ் யூ ஜென்னி” என்றேன். அதைவிட என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை.
“ஆன்டிக்கு நீ வரைந்த பொம்மைகளை கொண்டு வந்து காட்டு ஜென்னி.” க்ரிஸ்டீனா சொன்னாள்.
ஜென்னி உற்சாகத்துடன் எழுந்து அடுத்த அறைக்குச் சென்றாள்.
“ஊனமுற்றக் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தேவையானவை பொறுமையும், தைரியமும்தான் சாந்தா. உன் எதிர் வீட்டுக்காரர்களிடம் சொல்லு. இந்தக் குழந்தைகளுக்கு செய்து விட்ட அநியாயத்திற்கு வருத்தப்பட்டு வேறுவிதமான திறமைகளைக் கடவுள் அவர்களுக்கு வழங்கியிருப்பார். அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டுபிடித்து அந்தத் துறையில் அவர்களை ஊக்கப்படுத்தணும். முக்கியமாக அந்தப் பெற்றோர்கள் தம் துரதிரஷ்டத்தை நினைத்து இடிந்து போய் விடக் கூடாது. அவர்கள் அப்படி நொந்துகொள்ளும் போது குழந்தைகளிடம் சுய இரக்கம் ஏற்படும். அது அவர்களை மேலும் பலவீனப்படுத்தும்.” க்ரிஸ்டீனா சொல்லிக் கொண்டே போனாள்.
“நான் ஒன்பது மாதம் கஷ்டப்பட்டு சுமந்து குழந்தையைப் பெறவில்லை சாந்தா. ஆனால் ஒரு தாயாக அன்பு காட்டுவதற்கு சொந்தக் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்பை, பாசத்தை பகிர்ந்து கொடுப்பது பெண்களின் இயற்கைக் குணம். ஒவ்வொரு பெண்ணும் தன்னிடம் இருக்கும் கருணையைப் பாகுபாடு இல்லாமல் எல்லாக் குழந்தைகளிடமும் பகிர்ந்துகொள்ளலாம்.”
என்னையும் சேர்த்து, லட்சக்கணக்கான தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடத்தை திருமணம் செய்து கொள்ளாத, குழந்தையைப் பெறாத ஒரு தாய் சொல்லித் தருகிறாள். கல்யாணமும், கணவனும் தாய்மையின் தகுதி இல்லை என்றும், அன்பைப் பகிர்ந்து கொள்ளும் இதயம் மட்டும்தான் என்பதையும் பறைசாற்றுகிறாள்.
“ஆன்டீ!” ஜென்னியின் அழைப்புக்குத் திரும்பினேன். தான் வரைந்த படங்களின் ஆல்பத்தைக் கொண்டு வந்தாள். பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக காண்பித்து அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் இயற்கைக் காட்சிகள்தான். இவ்வளவு சின்ன வயதில், ஒற்றைக் கண்ணால் தான் பார்த்த இயற்கையின் எழிலை உயிரோட்டத்துடன் வரைந்திருந்தாள்.
“இவை இருண்டும் இந்தியாவைப் பற்றி வரைந்தவை.” இரண்டு ஓவியங்களைக் காண்பித்தாள். ஒன்று ஜவஹர்லால் நேரு குழந்தைகளுடன் வி¨யாடும் காட்சி. இன்னொன்று தாயின் மடியில் படுத்துக் கொண்டு பொக்கை வாய் சிரிப்புடன் விளையாடும் குழந்தை. அந்தத் தாய் புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் திருமாங்கல்யம். குழந்தை அதைப் பிடித்துக் கொண்டு விளையாடுவது போன்ற காட்சி. ஜென்னியை அணைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிடாமல் என்னால் இருக்க முடியவில்லை.
“ஒரு முறை உங்களுடைய பாத்ரூமை பயன்படுத்திக் கொள்ளலாமா?” என்று கேட்டேன்.
“ஓ … ஷ்யூர்.” க்ரிஸ்டீனா உள்ளே அழைத்துச் சென்றாள். அடுத்த அறையில் எதிரே ஒரு ·போட்டோ. ஜென்னி ஒரு வயது குழந்தையாக இருந்த போது எடுத்தது. ஒருக்கால் க்ரிஸ்டீனா தத்து எடுத்துக் கொண்ட போது எடுத்த ·போட்டோவாக இருக்கலாம்.
பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டேன். குழாயை முழுவதுமாகத் திருப்பினேன். அந்தச் சத்தத்தில் என் அழுகை வெளியே கேட்காது என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு இரண்டு கைகளாலேயும் முகத்தை மூடிக் கொண்டேன். அணுகுண்டு வெடித்தது போல் என் இதயம் சுக்கு நூறாகி துக்கம் மடைதிறந்த வெள்ளமாகப் பொங்கியது.
இத்தனை நாளாக எனக்குள்ளேயே புதைந்து வைத்திருந்த கசப்பு உண்மையை இன்று உங்கள் முன்னால் வெளிப்படுத்தப் போகிறேன். அதைக் கேட்ட பிறகு அருவெறுப்பு அடைந்து என்னிடமிருந்து விலகிப் போகும் முன் ஒரே ஒரு வேண்டுகோள். என்னுடைய நிலைமையை நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். நிம்மதியின்றி பிசாசாக அலைந்து கொண்டிருக்கும் என் கடந்த காலத்திற்குக் கொஞ்சமாவது பரிகாரம் கிடைக்க வழிசெய்யுங்கள்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டாள் என்று நினைத்த மகள் இன்று உயிருடன் எதிரே வந்து நின்றால் முன்பின் தெரியாதவள் போல் நடித்து, கண்ணீர் வெளியில் வந்து விடாமல் உள்ளேயே அடக்கி, முறுவலுடன் உரையாடி சிறந்த நடிகையாகி விட்டேன்.
என்னுள் இருக்கும் வேதனை, வருத்தம், குற்ற உணர்ச்சி எல்லாம் கண்ணீர் வடிவத்தில் இன்று உங்கள் முன்னால் பாயட்டும்.
இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு எத்தனையோ ஆசையுடன் எதிர்பார்த்தும் மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது. பேரனைப் பார்க்க வேண்டுமென்ற மாமியாரின் முணுமுணுப்பு அதிகரித்தது. அதற்குத் தகுந்தாற்போல் பிறந்தது முதல் குழந்தைக்கு உடல்நலக் குறைவு. மருந்துகள், ஊசிகள் என்று தகுதிக்கு மீறிய செலவுகள். கணவரின் எரிச்சல். “இவளை எதற்கு என் வயிற்றில் பிறக்கச் செய்தாய் கடவுளே!” என்று தினமும் நொந்து கொள்வதுதான் என் வேலை.
சிரத்தை எடுத்துக் கொள்ளாததாலோ என்னவோ போலியோ பாதிப்பு வேறு. அந்தத் துக்கத்தில் இருந்த போதே ஆட்குறைப்பு என்ற பெயரில் என் கணவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். “எல்லாம் இந்தக் குழந்தை பிறந்த நேரம்” என்று எல்லோரும் பழித்தார்கள். அது உண்மைதான் என்று நிரூபிப்பது போல் ஆரோக்கியமாக இருந்த மாமனாரின் திடீர் மரணம். அந்த வேதனையிலிருந்து மீளும் முன்பே குழந்தை செவிடும், ஊமையும் என்று டாக்டர் தெரிவித்த போது தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. வீட்டில் எப்போதும் கஷ்டங்கள். யார் மீது என்று தெரியாத எரிச்சல். கழுத்தை நெறித்துக் குழந்தையைக் கொன்று விட்டால் என்ன என்ற அளவுக்கு ஆத்திரம்.
அன்றைய தினம் எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. மாமனாரின் கடைசி விருப்பம் என்பதால் அவருடைய அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக காசிக்குப் போனோம். காலையில் சடங்குகள் முடிந்து விட்டன. இரவு ஊருக்குத் திரும்ப வேண்டும். திடீரென்று குழந்தைக்கு ஜுரம் வந்து விட்டது. ஆஸ்துமா அட்டாக்கும் சேர்ந்து கொண்டதில் கண்களை நிலை குத்தி விட்டன. அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் காட்டி விட்டு வருவதாக சொல்லிவிட்டு அழைத்துப் போனார் அவர். நோய் வாய்ப்பட்ட குழந்தையைப் பார்த்தப் பார்த்து சலிப்படைந்திருந்த நான் சூட்கேஸை எடுத்து வைப்பதில் மும்முரமாக இருந்து விட்டேன். ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் போது வெறும் கையுடன் திரும்பி வந்தார்.
“டாக்டர்கள் ரொம்ப முயற்சி செய்தார்கள். இன்னும் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ இருந்தால் பெரிய விஷயம் என்று சொல்லி விட்டார்கள். அட்மிட் செய்து கொள்ளவில்லை. அழைத்துப் போகச் சொல்லிவிட்டார்கள்.”
“பின்னே குழந்தை இங்கே?” என்று கேட்டேன்.
“கங்கைக் கரையில் விட்டு விட்டு வந்தேன்.” சுருக்கமாகப் பற்றற்ற குரலில் சொன்னார்.
“ஐயோ ….இன்னும் உயிரோடு இருக்கும் போதேவா?” பயத்தினால் என் உடல் நடுங்கியது.
“சாந்தா! அந்தக் குழந்தையின் பாரத்தை நம்மால் சுமக்க முடியாது. இந்த ஒரு குழந்தைக்காக மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் அநியாயம் செய்து வருகிறோம். இவளுக்கு ஆகும் மருந்துச் செலவில் அவ்விருவருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடாவது போட முடியும். நன்றாக யோசித்துப் பாரு. பெண் குழந்தை. உடல் ஊனத்தோடு காது கேட்காது. வாய் பேச முடியாது. நம்மால் அவளுக்குப் படிப்பு சொல்லித் தர முடியாது. வரதட்சணைக் கொடுத்து கல்யாணம் செய்து வைக்க முடியாது. நமக்குப் பின்னால் அவள் எல்லோருக்கும் பாரமாக இருக்க வேண்டிய நிலைமை. உயிரோடு இருந்து தினமும் சாவதை விட இப்படி ஒரேயடியாக செத்துப் போவது உத்தமம். புனிதமான கங்கை நதிக் கரையில் குழந்தையின் உயிர் இந்நேரத்திற்குப் போயிருக்கும். குழந்தையை கண்ணெதிரில் வைத்துக் கொண்டு சாவுக்காகக் காத்திருப்பது நம்மால் முடியாத காரியம். எழுந்து போய் தலைக்குக் குளித்துவிட்டு வா. ரயிலுக்கு நேரமாகி விட்டது” என்றார்.
நான் தலையில் அடித்துக் கொண்டு அழவில்லை. ஏன் இப்படி செய்தீங்க என்று அவரைக் கேட்கவும் இல்லை. அந்தக் கசப்பு உண்மையை ஜீரணித்துக் கொண்டு விட்டேன். தாயின் அன்பை, மனிதத் தன்மையை தரித்திரம் வெற்றிக் கொண்டு விட்ட தருணம் அது.
தலை மூழ்கிவிட்டு, அந்தக் குழந்தையின் நினைவுகளையும் காசியில் விட்டு விட்டு ஊர் போய்ச் சேர்ந்தோம். உடல் நலக் குறைவினால் குழந்தை இறந்து போய் விட்டதாக எல்லோரிடமும் சொன்னோம். ஒரு மாதம் திரும்புவதற்குள் என் கணவருக்கு மறுபடியும் வேலை கிடைத்துவிட்டது.
“குழந்தை போனதும் உங்களைப் பிடித்தக் கொண்டிருந்த சனியும் போய்விட்டது.” ஊர் மக்கள் சொன்னார்கள். என் இதயத்தை யாரோ அறுப்பது போன்ற வேதனை. ஆனால் வாயைத் திறக்கவில்லை. செய்த தவறுக்கு சூழ்நிலைதான் காரணம் என்று மனதை ஏமாற்றிக்கொண்டு, திருப்திப் பட்டுக் கொள்ளும் லோயர் மிடில் கிளாஸைச் சேர்ந்த இல்லத்தரசி நான்.
மறுபடியும் கருவுற்றேன். என்னுள் பயம், செய்த தவறுக்குக் கடவுள் எனக்கு எந்தத் தண்டனை கொடுக்கப் போகிறாரோ என்று. அதிர்ஷ்டவசமாக மகன் பிறந்தான். லட்சணமாக, ஆரோக்கியமாக இருந்தான். தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு ஓரளவுக்கு நீங்கியது. கடவுள் கூட எங்களை மன்னித்து விட்டதாக நினைத்தோம்.
பத்துநாட்கள் முன்பு யார் வீட்டுக்கோ போன போது, யதேச்சையாக ஒரு பத்திரிகையில் க்ரிஸ்டீனாவின் பேட்டியைப் படித்தேன். என்னுள் சந்தேகம். யோசித்துப் பார்த்த போது தேதிகள் கூட ஒன்றாக இருந்தது என் சந்தேகத்தை மேலும் வளர்த்தது. அந்த நிமிடம் முதல் என் உள் மனதில் போராட்டம். இப்போ என்ன செய்வது? கணவரிடம் சொல்லி விடலாமா என்று முதலில் நினைத்தேன். ஆனால் விவேகம் என்னைத் தடுத்துவிட்டது. சொன்னால் என்ன செய்வார்? செய்த தவறை பத்து பேருக்கு முன்னால் ஒப்புக் கொண்டு குழந்தையைத் திருப்பித் தரச்சொல்லி கேட்பாரா? நிச்சியமாக அப்படிச் செய்யமாட்டார். எங்களுடைய பொருளாதார நிலைமை அவரை அப்படிச் செய்யவிடாது.
“ஏதோ ஒரு இடத்தில் சந்தோஷமாக இருக்கிறாள். அது போறாதா?” என்பார். மேலும் யாருக்காவது தெரிந்து விடுமோ என்று பயப்படுவார். நன்றாக யோசித்த பிறகு எனக்கு ஒன்றுதான் தோன்றியது. க்ரிஸ்டீனாவையும், அந்தக் குழந்தையையும் பார்க்கணும். ஒரு தாயாக அன்பு பீறிட்டுக் கொண்டு வந்ததால் இல்லை. அவள் சுகமாக வாழ்ந்து வருவதைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்ளும் எண்ணமும் இல்லை. பெற்ற மகளின் கால்களில் விழுந்து “குழந்தாய்! என்னை மன்னித்துவிடு” என்று கேட்கக் கூடிய துணிச்சலும் இல்லை.
“அம்மா! இவள் நான் பெற்ற குழந்தை. யமனுக்கு தாரை வார்த்துவிட்ட குழந்தைக்கு உயிர்பிச்சைக் கொடுத்து, புது வாழ்க்கையைத் தந்த தெய்வம் நீ தான். என் கண்ணீரால் உன் பாதங்களை கழுவி செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்ளும் வாய்ப்பு கொடு” என்று க்ரிஸ்டீனாவிடம் வேண்டுகோள் விடும் எண்ணமும் இல்லை. எந்த நிலைமையில் நாங்கள் அந்தக் காரியத்தை செய்தோம் என்று தெரிந்தால், அவர்கள் புரிந்து கொண்டு எங்களை மன்னிக்கக் கூடும். அந்த விதமாக என் பாவத்திற்கு கொஞ்சமாவது பரிகாரம் கிடைக்கும்.
ஆனால் அப்படி நடக்கக் கூடாது. க்ரிஸ்டீனா மற்றும் ஜென்னியிடம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தெரிந்தே நான் செய்யும் மற்றொரு குற்றம். அந்த குற்றம் ஒவ்வொரு நாளும் என் நினைவுக்கு வர வேண்டும். யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் எனக்குள் நானே அழுது அதுத சாகணும். இந்த ரகசியம் என் மனதைத் துளைத்துக் கொண்டே இருக்கணும். வாழ்நாள் முழுவதும் அந்த நரகத்தை நான் அனுபவிக்கணும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இதழ்களில் முறுவலை ஒட்ட வைத்துக் கொண்டு வெளியே வந்தேன். இனி விடைபெறுவது நல்லது என்று தோன்றியது.
“போய் வருகிறேன்.” க்ரிஸ்டீனாவிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஜென்னி நான் கொடுத்த யானை அம்பாரி பொம்மையை பார்த்து வரைந்து கொண்டிருந்தாள். அருகில் சென்று முத்தம் பதித்தேன். நிமிர்ந்து பார்த்துவிட்டு முறுவல் பூத்தாள்.
கதவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தேன்.
“அம்மா!”
திடீரென்று இந்த அழைப்பு ஏன்? என் ரகசியம் வெளிப்பட்டு விட்டதா? என் இதயத்தை யாரோ முறுக்கிப் பிழிவது போன்ற வேதனை. வேண்டாம். அந்தத் தகுதி எனக்கு இல்லை. என்னை யாரும் மன்னிக்க வேண்டியதில்லை.
ஜென்னி அருகில் வந்து ஒரு பாக்கெட்டைத் தந்தாள். க்ரிஸ்டீனா முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன இது?” கேட்டேன்.
“ஒன்றுமில்லை. எங்கள் சார்பில் சின்ன அன்பளிப்பு, நம்முடைய அறிமுகத்திற்கு அடையாளமாக. உங்க குழந்தைகளிடம் கொடுங்கள்.” க்ரிஸ்டீனா சொன்னாள்.
“தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
சீனு எனக்காக காத்திருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் நிம்மதி தென்பட்டது. போகும் போது இருந்த பதற்றம் இப்போ என்னிடம் இல்லை. வேதனை மறுபடியும் அடி மனதில் புதைந்து விட்டது.
மறுநாள் வைசாக் போகும் ரயிலில் ஏறினேன். கண்களின் முன்னால் ஒரே ஒரு காட்சி தென்பட்டுக் கொண்டிருந்தது.
கால்களை அசைக்க முடியாத இயலாமை. ஜுரத்துடன் அனலாக தகிக்கும் உடல். ஒரு சின்னஞ்சிறு பிஞ்சு மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டு அம்மாவின் மடிகாக ஏங்கியபடி வாயால் சொல்ல முடியாமல் கைகளை அசைத்து ஜாடை காட்டிக் கொண்டிருந்த போது, பறந்து வந்து மேலே உட்கார்ந்த பறவை எத்தனையோ நாட்களுக்குப் பிறகு உயிரோடு கிடைத்த உணவை சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட முற்பட்டபோது …..
வேதனையுடன், பயத்துடன் திணறிக் கொண்டு அந்தப் பிஞ்சு உயிர் அம்மாவுக்காகத் தேடியிருக்கும். பறவை கண்ணைக் குத்தியதும் அந்தக் குழந்தை கத்திய கத்தல் …. நான் பயணம் செய்து கொண்டிருந்த ரயிலின் சத்தத்தோடு கலந்து போயிருக்கும்.
மனதைத் திடபடுத்திக் கொண்டு எண்ணங்களைத் திசை திருப்பும் முயற்சியாக ஜென்னி தந்த பாக்கெட்டைப் பிரித்தேன். வாட்ச்கள், சில எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள். வாழ்க்கையில் நான் என்றைக்குமே வாங்கித் தர முடியாத பொருட்கள். என் விழிகளில் நீர் சுழன்றது. யாரும் பார்த்து விடாமல் உடனே துடைத்துக் கொணடேன். உள்ளே இருந்த பெரிய கவரைத் திறந்தேன். ஜென்னி வரைந்த தாயும் சேயும் ஓவியம், என் பாவத்தைப் பரிகாசம் செய்வது போல். ஆமாம். இதைப் பார்க்கும் போது நான் செய்த தவறை ஒவ்வொரு நிமிடமும் இது நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். நினைவுப்படுத்தத்தான் வேண்டும். நான் கொடுத்த மரணதண்டனையை முறுவலுடன் ஏற்றுக் கொண்டு என் செல்ல மகள் எனக்குத் தந்த பரிசு.
ஓவியத்தைத் திரும்பவும் கவருக்குள் வைக்கப் போன போது, கடிதம் தென்பட்டது. எடுத்துப் பார்த்தேன். டைப் செய்யபட்டிருந்தது.
“சாந்தா,
நீ ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னதுமே எனக்கு சநதேகம் வந்தது. ஜென்னி கிடைத்த போது கழுத்தில் இருந்த தாயத்தைப் பார்த்த டாக்டர், “இவை தெலுங்கு எழுத்துக்கள், ஒருக்கால் குழந்தை தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கக் கூடும்” என்றார். அதான் ஜென்னிக்கு தெலுங்கு மொழியை கற்றுக் கொடுக்கச் செய்தேன்.
குழந்தை உன்னுடையது என்று திருப்பி கேட்க வந்திருக்கிறாயோ என்ற எண்ணம் என்னை பயமுறுத்தியது. ஆனால் உண்மை எங்களுக்குத் தெரியக் கூடாது என்று நீ செய்த முயற்சி உண்மையிலேயே பாராட்டிற்குரியது. தான் பெற்ற குழந்தையை நேரில் பார்த்த பிறகு எந்தத் தாயாலும் வெறுமே அப்படி உட்கார்ந்திருக்க முடியாது. எங்கள் இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை கலைக்கக் கூடாது என்று நீ எவ்வவளவு கஷ்டப்பட்டாயோ, மனதுடன் எப்படி போராடி இருப்பாயோ நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது.
என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக ஜென்னியின் சிறு வயது போட்டோவை உன் கண்ணில் படும்படி எதிரே வைத்தேன். அதைப் பார்த்ததும் உன் முகத்தில் வினாடி நேரம் தோன்றி மறைந்த வேதனையின் நிழல் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. உன் உயர்ந்த பண்புக்கு என் பாராட்டுகள்.
சாந்தா!மனிதன் சூழ்நிலைக்கு அடிமை. நடந்து போன்றவற்றுக்கு ஒரு நாளும் வருத்தப்படாதே. நீ செய்த அந்தக் காரியத்தினால் என்னைப் போன்ற அநாதைக்கு நல்ல துணை கிடைத்தது. உனக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரே ஒரு வேண்டுகோள்.
பொருளாதார ரீதியில் நீ ஏழையாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற குழந்தைகள் பத்து பேருக்காவது பகிர்ந்து கொடுக்கும் அன்பும், கருணையும் உன்னிடம் தாராளமாக இருக்கு. நீ சொன்ன எதிர்வீட்டுக் குழந்தையின் கதை உண்மை என்றால், உன் அன்பை அந்தக் குழந்தையிடம் பகிர்ந்து கொள்வதுடன் அந்த நல்ல காரியத்தைத் தொடங்கு.
இது போன்ற குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதில் கிடைக்கும் ஆத்மதிருப்தி உன்னுள் இருக்கும் குற்ற உணர்ச்சியைப் போக்கிவிடும். புதிய உற்சாகத்தைத் தரும். உன் எதிர்காலம் சுகமயமாக இருக்க வாழ்த்துகிறேன்.”
என்னை மன்னித்து விட்டதோடு ஒரு தியாகியாகவும் உருவகப்படுத்திய க்ரிஸ்டீனா நான் விரும்பியதை விட பெரிய தண்டனையை எனக்கு வழங்கி விட்டாள். எனக்குத் துக்கம் பொங்கி வந்தது. இந்த முறை அதை மறைத்துக் கொள்ளும் முயற்சி எதுவும் செய்யவில்லை. சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்கள் என்னை ஆர்வத்துடன், பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
என் கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்த வெள்ளமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
முற்றும்
மங்கையர்மலர் செப்டம்பர் 2004 இதழில் சிறப்புச் சிறுகதையாக வெளிவந்த கதை
இந்தியத் திருநாட்டில் நாற்பத்திரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒருவர் கொல்லப்படுகிறார், அதில் ஆறு சதவீதம் மட்டுமே விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. – ( செய்தி: தினமணி, 30-11-2004.)
குற்றங்கள் நிகழக்கூடாது என்பது எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று. குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டிக்கப்படவேண்டும். குற்றங்கள் நிகழ்வதை அடியோடு ஒழிக்கமுடியாது, ஆனால் கட்டுப்படுத்தமுடியும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. குற்றம் புரிவது மனித இயல்புகளில் ஒன்று, என்றாலும் இப்பொதெல்லாம் குற்றம் புரிவதே வாழ்க்கையாகி பாவபுண்ணியமெல்லாம் வெறும் பிதற்றல், பைத்தியக்காரத் தனம் என்றாகிவிட்டது.
குற்றம் செய்யும் ஒருவர், அக்குற்றத்தை அவர்தான் செய்தார் என்று உறுதியாகிவிட்டபிறகு தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சட்டம் எப்போதுமே உறுதியாக இருந்துவருகிறது. நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதும் அதன் உறுதியானக் கொள்கை. ஆனால் தான் அளிக்கும் தண்டனையினால் குற்ற வாளிமட்டுமல்ல குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்களும் பயப்படவேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. மாறாக குற்றம் செய்தவர் திருந்த வாய்ப்பளிக்கவேண்டும் என்ற இரக்க சிந்தனையை தன்னுள் வைத்திருக்கிறது. இதனால் அது நினைக்கும் அளவுக்கு குற்றவாளிகள் திருந்தவுமில்லை, குற்றங்கள் குறையவுமில்லை. இந்த சிந்தனையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பல குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு சாரார் என்றால் மறுசாரார் ஒரே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்து மீண்டும் மீண்டும் அதே தண்டனையை அனுபவித்து, அதை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆக்கிக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இந்த வாழ்க்கையைவிட அந்த(தண்டனை) வாழ்க்கை மேலானதாக இருக்கிறது.
சுருங்கச் சொன்னால் நாம் உருவாக்கிய சட்டங்கள் பல திருத்தங்கள் செய்தபிறகும் தன் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இது ஒரு நாட்டுக்குமட்டுமல்ல உலகலவில் இந்த அவல நிலை நிலவிவருகிறது. இன்னிலையில்…
எக்காலத்தும் யாராலும் மாற்றமுடியாத இறைச் சட்டத்தைப் பற்றி அறியாமல், இஸ்லாத்தில் கையாளப்படுகின்ற ஷரீஅத் தண்டனைகளை தற்காலத்திலும் கையாள வேண்டுமா ? இது மனிதாபிமானமில்லாததுமட்டுமல்ல மிருகத்தனதாயிற்றே, ஐந்து ரூபாய்க்காக ஒரு திருடனின் கையை துண்டிக்கமுடியுமா ? விபச்சாரத்திற்காக கல்லெறிந்து கொல்ல வேண்டுமா ? என்று கடந்த நூற்றாண்டிலிருந்தே உலகளவில் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது அவசியமா இல்லையா என்று தீர்மாணிக்குமுன் அவன் இழைத்த குற்றத்துக்கு அவன் எந்த அளவுக்கு பொறுப்பாளியாகின்றான் என்பதை தீர்மானிப்பதே மிக முக்கியமான பிரச்சினையாகும். இப்பிரச்சினைப் பற்றி அதாவது குற்றமும் தண்டனையும் பற்றிய பிரச்சினையில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் தாறுமாறாகத் தண்டனைகளை விதிக்கவுமில்லை, ஈவிரக்கமின்றி அவற்றை நிறைவேற்றவுமில்லை. இத்துறையில் இஸ்லாம் கடைபிடிக்கும் கொள்கையை கூர்ந்து பார்க்கவேண்டும்.
இஸ்லாம் நீதியின் துலாக்கோலைச் சரியாகப்பிடித்துக் குற்றச்செயலுக்கு வழிகோலிய அனைத்து சந்தர்ப்பசூழ்நிலைகளையும் முற்றிலுமாக சீர்தூக்கிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு குற்றச்செயலை ஆராயும்போது அது ஒரே பார்வையில் இரண்டு அம்சங்களை நோக்குகிறது. ஒன்று குற்றவாளியின் நிலை, மற்றொன்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த சமூகத்தின் நிலை. இவ்விரண்டையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் நியாயமான தண்டனையை விதிக்கிறது. இஸ்லாத்தில் விதிக்கப்படும் தண்டனைகளை மேலெழுந்தவாரியாகவோ போதியளவு ஆழமாக ஆராயாமலோ நோக்கினால் அவை பயங்கரமானவையாகவும் கொடூரமானதாகவும் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் குற்றச்சாட்டு நியாமற்றதாகவோ குற்றவாளி அக்குற்றத்தைப் புரிவதற்கு எவ்வகையிலும் நிர்பந்திக்கப்படவில்லையெனவோ திட்டவட்டமாக முடிவு செய்யப்படாவிட்டால் இஸ்லாம் அத்தண்டனையை நிறைவேற்றுவதில்லை.
திருடனின் கையை துண்டிக்கவேண்டுமென்பது இஸ்லாத்தின் தண்டனையாகும். ஆனால் திருடனுக்குத் திருட்டைச் செய்யத்தூண்டியது அவனுடைய பசி, வேறு வழியில்லை என்ற காரணம் சிறிய அளவில் உண்டானால்கூட அவனுக்குத் தண்டனை அளிக்கப்படக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
இஸ்லாத்தின் தலை சிறந்த ஆட்சியாளரும் ஷரீஅத் சட்டங்களை நிறைவேற்றுவதில் மிகக்கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றவருமான இரண்டாம் கலீஃபா ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஹாதிப் இப்னு அலீ பால்த்ஆவிடம் பணிபுரிந்த சில சிறுவர்கள் வேறொருவரின் பெண் ஒட்டகையைத் திருடி புசித்துவிட்டார்கள். இது ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது, தாங்கள் திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். கைகளை துண்டிக்குமாறு தீர்ப்பளிக்குமுன் காரணத்தை அராய்ந்து, ‘இறைவன் மீது ஆணையாக, இப்பையன்களை வேலைக்கமர்த்தி அவர்களைப் பட்டினிப்போட்டதன் காரணமாக அவர்கள் ஒட்டகையைத் திருடிப்புசிக்க நீர் காரணமாயிருந்ததை நான் அறிந்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்களின் கைகளைத் துண்டிக்குமாறு தீர்ப்பளித்திருப்பேன் ‘ எனக்கூறி திருடப்பட்ட ஒட்டகையின் விலையைப் போல் இருமடங்கு விலையை ஒட்டக உரிமையாளருக்குக் கொடுக்குமாறு அச்சிறுவர்களின் எஜமானருக்கு தீர்ப்பளித்துவிட்டு சிறுவர்களை விடுதலைச் செய்தார்கள். மேலும் அவர்கள் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டபஞ்சத்தின்போது பசியின் காரணமாக மக்கள் திருடக்கூடும் என்ற நிலை ஏற்பட்டிருந்ததால் அப்போது திருட்டுக்குரிய தண்டனையை நிறைவேற்றாது விட்டுவிட்டார்கள்.
இது, தண்டனை வழங்கப்படுவதற்குமுன் காரண காரியத்தை இஸ்லாம் எப்படி ஆராய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
இதெல்லாம் அந்த காலத்திற்கு வேண்டுமானல் பொருந்தும், இன்றைய முன்னேற்ற உலகிற்கு உதவாது என்று சிலர் வாதிடுகிறார்கள். சிலரென்ன பலருடைய கருத்தும் கண்ணோட்டமும் அதுவாகத்தானிருக்கிறது.
இந்தியா சுதந்திரமுள்ள குடியரசு நாடு. பொது இடங்களில் துப்புவது குற்றம், ‘பொது இடங்களில் துப்பாதே, மீறினால் ரூ.500/ அபராதம் ‘ என்று எச்சரிக்கைப் பலகை வைத்தால், அந்த பலகையைப்பார்த்து துப்புவார்கள். இது சிலரின் இயல்பு. பிடிபட்டால், ‘சார் சார் தெரியாமல் துப்பிட்டேன், அடுத்தவாட்டி துப்பமாட்டேன், வேணும்னா நூறோ எறநூறோ வாங்கிக்கிட்டு ஆளைவிடுங்க ‘ என்று சொல்வார்கள். இதே எச்சரிக்கை சிங்கப்பூரில் இருக்கிறது. அதுவும் குடியரசு நாடுதான். அங்கே துப்புவார்களா ? எச்சிலே வராது! காரணம் சட்டத்தின் வேகம். சுருங்கச் சொன்னால் மக்கள் பயப்படுவது சட்டம் என்ற புத்தகத்திற்கல்ல, அதன் கடுமையான தாக்குதலுக்கு.
கஞ்சா, பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருள்களை வைத்திருந்தாலோ அல்லது கடத்தல் செய்தாலோ சவுதி அரேபியாவைப் பொருத்தவரை பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்வது அங்குள்ள தண்டனை. இத்தகையத் தண்டனைகளால் குற்றங்களின் புள்ளிவிபரங்களை நோக்கினால் உண்மை புரியும்.
விபச்சாரம் செய்யும் ஆணையும் பெண்ணையும் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற தண்டனையை இஸ்லாம் வித்துள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகமானவர்களாகவும் அக்குற்றம் புரிவதை நேரடியாகக்கண்ட உண்மையான நான்கு சாட்சிகள் இல்லாமலிருந்தால் விபச்சாரத்திற்குரிய அத்தண்டனை அளிக்க அனுமதி இல்லை. அதாவது விவாகமான இருவர் வெட்கமற்ற முறையில் பகிரங்கமாக அக்குற்றத்தைப் புரிந்தால் மாத்திரமே மேற்படித் தண்டனை அளிக்கப்படவேண்டும்.
இஸ்லாம் பாலியல் ஊக்கத்தின் வலிமையையும் அதன் அவாவையும் மதிக்கின்றது. ஆனால் அவ்வூக்கத்தை திருமண பந்தத்தின் மூலம் சட்டப்பூர்வமாகப் பூர்த்தி செய்துக்கொள்வதையே விரும்புகிறது. இதற்காக இளம்வயதில் திருமணம் செய்துக்கொள்வதை அனுமதிக்கிறது. திருமணம் செய்துக்கொள்ள வசதியற்றவர்களுக்கு ‘ ‘பைத்துல்மால் ‘ ‘ என்ற பொது நிதியிலிருந்து நிதியுதவி வழங்குமாறு உத்திரவிடுகிறது. இச்சைகளைத் தூண்டக்கூடிய சகல காரணிகளையும் (ஹராம் என்று) வெறுத்தொதுக்கியுள்ளது. உடல் வலிமையும் வசதியுமிருந்தால் நான்கு திருமணங்கள் செய்துக்கொள்ள அனுமதிக்கும் அதே நேரத்தில் ஒவ்வொரு மனைவியிடமும் நீதமாக நடந்துக்கொள்ளுங்கள் என்ற உத்திரவும் இடுகிறது. குற்றம் புரிவதற்கான தூண்டுதல்கள் அனைத்தியும் ஒழிப்பதற்கான வழிமுறைகளை தந்தபின்னும் ஒருவன் பகிரங்கமாக விபச்சாரம் செய்யுமளவுக்கு மிருகத்தன்மைக்கு தாழ்ந்துவிட்டாலொழிய அக்குற்றவாளிக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை விதிப்பதற்கு இஸ்லாம் அவசரப்படுவதில்லை.
இன்று நிலவும் சமூக, பொருளாதார ஒழுக்க சீர்கேட்டினாலும் பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய மீடியாக்கள் போன்றவற்றினால் வழி தவறிப்போக வாய்ப்புள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். அதனால் இஸ்லாம் தண்டனை வழங்குமுன் குற்றச் செயல்களுக்கு இழுத்துச்செல்கின்ற வழிமுறைகளை தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
நிரபராதிகளுக்குத் தண்டனை வழங்கக்கூடாது என்பதில் இஸ்லாம் மிக எச்சரிக்கையாகவே இருக்கிறது. களங்கமற்ற பெண்மீது அவதூறு வழங்கி அது நிருபிக்கப்படவில்லையானால் அவதூறு பேசியவர்கள் மீது 80 கசையடி கொடுக்க வலியுறுத்துகிறது. தவிர அத்தகையவர்களின் சாட்சியங்களை எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறுகிறது.
இத்தகைய தண்டனைகள் அளிப்பதின் நோக்கமே இதுபோன்ற குற்றங்கள் நிகழக்கூடாது என்பதற்காகத்தான். (ஆனால் இதைவிட மிக மோசமான தண்டனை ஒன்று மிக அமைதியாக உலகமுழுவதும் நடந்துகொண்டிருக்கிறதே ? ஆம்! AIDS என்ற தண்டனை. அது இருவரைமட்டும் தாக்கவில்லை தொடர்புள்ளவர்கள் அனைவரும் அனுபவிக்கிறார்களே! உறை போட்டுக்கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்களே ஒழிய ‘விபச்சாரம் ‘ செய்யாதீர்கள் என்று சொல்ல வில்லையே!). கொலைக் குற்றங்களுக்காகக் கொடுக்கப்படும் மரண தண்டனையை மறைவாக கொடுக்காமல் பொதுமக்கள் முன்னிலையில் கொடுங்கள், குற்றங்களின் எண்ணிக்கை குறைவதை நீங்களே பார்க்கலாம்.
உதாரணமாக கூலிப்படைகளை வைத்து சிலரைக் கொலை செய்கிறார்கள். கொலையாளிகளுக்கும் கொல்லப்படுவர்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் கிடையாது, முன்பின் விரோதமும் கிடையாது, சந்தர்ப்பவசமாகக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருந்தும் கொடூரமான முறையில் கொலை செய்கிறார்கள். எதற்காக ? வெறும் கூலிப்பணம்! ஒரு சில லட்சம்! ஒருவரின் உயிரைப் பற்றியோ அல்லது அவதிப்படப்போகும் குடும்பத்தைப் பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அத்தகையவர்களை விசாரித்து ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை கொடுப்பதைவிட பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்யுங்கள். அதுவும், எப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதோ காலதாமதப் படுத்தாமல் விரைவாக தண்டனையை நிறைவேற்றுங்கள். மற்ற குண்டர்கள் எங்கே போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, தண்டணைகள் அளிக்கும் விஷயத்தில் உற்றார், உறவினர், அரசியல் தலைவர், சமூக அமைப்பின் தலைவர் என்ற பாரபட்சம் காட்டக்கூடாது என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் உறுதிப்பட்டை கடைபிடிக்கவும் வேண்டும்.
அதேபோல் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கப்படுத்தும் காவலர்களை, சில அமைப்புகள் அல்லது அந்த சமூகம் போர்கொடி தூக்கியதன்பின் தற்கால பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இதனால் குற்றம் செய்த அவர்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாவதில்ல, ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடல்லாமல் சிலர் தற்கொலைகூட செய்துகொள்கின்றர். அதனால் அவருடைய குடும்பத்தவர் எந்த அளவுக்கு பாக்திக்கப்படுகின்றனர் என்று சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
மோசடி, திருட்டுக் குற்றம் போன்றவைகள் மேம்போக்காகப் பார்த்தால் சாதாரணமான குற்றமாகத் தெரியலாம். ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களின் கனவுகள், கற்பனைகள், திட்டங்கள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப்போய் வாழ்க்கையின் போக்கே திசைமாறி விபரீத விளைவுகளுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள் என்பதை கண்கூடாகக் காணும்போது அவைகள் எவ்வளவு கொடுமையானது என்பது புரியும்.
‘திருட்டுத் தொழில் உள்பட பயங்கரமான குற்றங்களுக்கு திருக்குர்ஆன் வழங்கும் தண்டனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் உலகமே குற்றமற்று வாழமுடியும். ‘ என்று சட்ட நிபுணர் ஸர் சி.பி.ராமசாமி ஐயர் அவர்களும், ‘சாதாரண மனிதனிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் வரை இஸ்லாமிய சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆழ்ந்த அறிவு, நுட்பம், அபூர்வமான மிகச் சிறந்த சட்டவியல் ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டு உலகத்தில் இதுவரை காணப்படாத சிறப்புமிகு சட்டமாக இஸ்லாமிய சட்டம் திகழ்கிறது. ‘ என்று எட்மண்டு பர்க் என்ற அறிஞரும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றி கூறுகிறார்கள்.
எங்கெல்லாம் இஸ்லாமிய ஷரீஅத் குற்றவியல் தண்டனை செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் குற்றங்கள் குறைவாகவே நிகழ்கின்றன. எனவே குற்றங்கள் குறையவேண்டுமானல் ஷரீஅத் குற்றவியல் தண்டனை அமுல் படுத்துவது சாலச் சிறந்ததாகும். இதை சட்டத்துறை நிபுணர்களும், மனிதநேய அமைப்புகளும், அரசுகளும் ‘இஸ்லாம் ‘ என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் பொதுவான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.