எதிர்பார்ப்பு

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சுஜாதா சோமசுந்தரம்


பள்ளிக்கு செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிய ஆதித்தன் மேசையில் ஆங்காங்கே கிடந்த புத்தகங்களை பையில் பாதியை செருகிக்கொண்டு மீதியைக் கைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக கடந்து நாலே பாய்ச்சலில் கார் பார்க்கை தாண்டி ஓடினான்.

திடாரென்று சாலையில் கிரீச் என்ற சத்தத்துடன் கார் பிரேக் போட ஆங்காங்கே நின்றவர்கள் உறைந்து போய் நிற்க,கண்ணிமைக்கும் நொடியில் காரில் மோதி விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் ஆதித்தன்.சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் குழுமி குசலம் விசாரித்துவிட்டு விலக ஆரம்பித்தது.பெரியவருக்கு பயப்படும்படியாக பலத்த அடி எதுவும் இல்லாததாலும் காரோட்டியின் மேல் தவறு இல்லாததாலும் காயோட்டி வெடுக்கென்று விடைபெற்றான்.

பெரியவரை கைத்தாங்கலாக அணைத்து வந்து அமர வைத்த ஆதித்தன்,பையிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்க கொடுத்தான்.எழுபது வயதைக் கடந்த பெரியவர் முகத்தை நீரால் துடைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்களை வீசி எதையோ தேடினார்.அவருடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டதைப் போல பதுங்கியிருந்த நாய் ஓடிவந்து முகத்தோடு முகம் வைத்து ஏதோ பேசியது.

தாத்தா…குறுக்கே விழுந்து ஓடின நாயைக் காப்பாத்த போறேன்னு நீங்க அடிபட்டிருந்தா என்னாவாயிருக்கும்.நாய் கூட போட்டிபோட்டு ஓட்ற அளவுக்கு மனசில திறன் இருந்தாலும் உடம்புல வலு வேணும்.வயதான காலத்துல வயதுக்கு மீறிய வாலிபம் ஆபத்தானது.அன்புக்குரிய ஒன்றை இழக்குறது கடினமானாலும் அதற்காக கூடவே போய்ட முடியுமா ?

நெற்றியை உயர்த்தி ஆதித்தனை நிமிர்ந்து பார்த்த பெரியவர் தம்பி…என் வாழ்க்கையில் இறுதி காலத்துல கிடைத்த ஓரே ஆறுதல் இந்த ஜிம்மிதான்.இதையும் தொலைச்சிட்டு சொச்ச காலத்துக்கு எப்படி வாழ்றது சொல்லு.முதுமையின் வலி உணராம வாழனும்னா இனிமையான துணையோ,பிள்ளைகளின் அன்போ இருக்கணும். இவைகளுக்கு அனுக்கிரகம் இல்லேன்னா என்ன செய்யிறது ? நாயை தன் மார்போடு அணைத்து நெற்றியை விரல்களால் வருடினார்.

ஆதித்தனுக்கு அவருடன் பேசிய சில நொடிகள் பூர்வ ஷென்ம பந்தம் போல நிறைய அளாவ வேண்டும் என்ற ஆவலை நேரம் மறைத்துக்கொண்டு போராட்டம் செய்தது.அவனின் மெளனம் அவரை நிமிர வைத்தது.

‘ தம்பி…மனிதனுக்கு உறவுகள்தான் ஊட்டச்சத்துங்கிற உண்மை உடம்புல இரத்தம் சுண்டினபின் புரிந்தால் ‘ என் நிலையில திண்டாட வேண்டியதுதான் என்றபடி கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்தார்.

கடிகாரத்தை திருப்பி பார்த்த ஆதித்தன் ஏற்கனவே நாழியாகி விட்டதால் தாத்தா…பள்ளிக்குச் செல்ல நேரமாகுது.நீங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வீட்டுக்குப் போங்க என்றபடி சிதறிய புத்தகங்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பேருந்தை பிடித்து ஏறி அமர்ந்தான்.

‘அடடே…இந்த புள்ளையைப்பற்றி கேட்க இந்த ராகவன் மர மண்டைக்கு மறந்துட்டே. ம்ம்…பிறகு பார்க்கலாம் ‘ ஜிம்மியோடு நடந்தார் ராகவன்.

போகும் வழி முழுவதும் பெரியவரின் விரக்தி வார்த்தைகள் உள்ளுக்குள் வேதனை படுத்தியது.வகுப்பை சரியாக கவனிக்க முடியாமல் தவித்துப்போனான்.வீட்டிற்கு வந்த பிறகும் விருப்பமில்லாமல் சாப்பிட்டு உறங்கினான். ‘முதுமையில் தனிமை மிகவும் கொடுமையானதோ ?அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் தாத்தாவும் பாட்டியும் இதே உணர்வோடுதான் இருப்பார்களோ ? ‘ கண்டிப்பாக இவ்விசயத்தில் உன் தந்தையை குறை கூற முடியாது.

என் அப்பா வாரம் ஒரு முறை இந்தியாவுக்கு போன் செய்வதும்,தன் தம்பிகளுடன் பெற்றோரின் பாசத்தை பங்கு போட முடியாமல் தவிப்பதும் நான் அறிந்ததே.என் தாத்தா பாட்டியைக் கவனித்துக்கொள்ள சித்தாப்பாக்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவதும்,வருடத்திற்கு ஒருமுறை அப்பா இந்தியாவுக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.ஆதித்தன் பலவாறாக யோசித்துப்போட்ட கணக்கில் தந்தையின் மேல் தவறில்லை என்ற சரியான பதில் வந்தது.

இரண்டு நாட்கள் இனம் புரியாத வேகத்தோடு கழிந்தது. ‘அனுபவத்தின் அவசியம் ‘ என்ற கட்டுரையைச் சமர்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் எழுதுவதற்கு வார்த்தைகளை தேடியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.முதுமையைப் பயனுள்ள முறையில் கட்டுரையில் பயன் படுத்த முயன்ற ஆதித்தன் நண்பர்களுடன் எழுத ஆரம்பித்தான்.

‘அனுபவம் என்பது பணத்துக்காக அங்கீகரிக்கப்படும் வார்த்தையா ? ஒரு வேலைக்கு செல்லும்போது அனுபவம் அவசியமாகிறது.அதே வாழ்க்கையென்று வரும் போது துணைவர துடிக்கும் பெரியோர்களை அலட்சியப்படுத்துவது ஏன் ?பெரியவர்கள் கருத்து கருவூலங்கள் இல்லையா ? அந்த கருத்து கருவூலங்கள் காக்கப்பட வேண்டாமா ? நேற்றைய வரலாறுகள் ஏடுகளில் ஏறி அமர்வது எதிர்கால சந்ததியினருக்காக.அந்த ஏடுகளை அலங்கரிக்க வேண்டியவர்கள் அவமதிக்கபடலாமா ? அனுபவம் வாழ்க்கைக்கு வழிக்காட்டக் கூடிய ஆயுதம்.ஆயுதமாக திகழ வேண்டிய பெரியவர்கள் மதிக்ப்பட வேண்டாமா ? ‘ ஆதித்தனின் சிந்தனையில் முளைத்த ஆவேச எண்ணங்களைக் கட்டுப்படுத்தி கூட்டி அள்ளிக் கோர்க்க முடியாமல் குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தான்.நண்பர்கள தட்டி எழுப்பவும் விடைப்பெற்றுக்கொண்டு வீடு வந்தான்.

மது கணக்குப் புத்தகத்தை விரித்து வைத்தபடி வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

ஆதித்தன் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக தனக்கு கணக்கு சொல்லித் தரும்படி நச்சரித்தாள் தங்கை மது. அவளிடம் தலை வலிப்பதாக கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

பள்ளிச் சீருடையைக் கழற்றிக் கொண்டிருந்த போது நாய் குரைக்கும் கேட்டு சன்னல் வெளியே கீழே பார்த்தான். பெரியவர் ராகவன் நாயோடு நடப்பது தெரிய கலற்றிய பொத்தானை மீண்டும் பொருத்தியபடி கீழே ஓடினான்.

தாத்தா…! தாத்தா…என தன்னை யாரோ அழைக்கும் குரலில் திரும்பிய ராகவன் சாப்பாட்டுக் கடையில் அமர்ந்திருந்தார். ஆதித்தனை அருகில் பார்த்ததும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் கையை உயர்த்தி வரவேற்றார்.

என்ன தாத்தா…எப்படி இருக்கீங்க ?உடம்பு வலி இன்னும் எதாவது இருக்கா ?நாயை மடியில் வைத்துக்கொண்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.

வயதான உடம்புலே வலி இல்லாமலா இருக்கும். வழக்கம் போல ஒண்ண விட்டு ஒண்ணு ஏதாவது செய்துட்டுதான் இருக்குது. சரி..நீயும் சாப்பிடுறியப்பா.. ?

வேண்டாம் தாத்தா. விரைவு உணவகம் உடம்புக்கு வீண் பிரச்சனை தரும்னு தெரிந்தே சாப்பிடுறீங்களா ? ஜிம்மி நீயாவது சொல்லக்கூடாதா ? நாயின் முதுகை தடவியபடி அவரை பார்த்தான்.

‘ தன்னிடம் இப்படியொரு கேள்வியை தான் பெற்ற பிள்ளைகளே கேட்க மறுக்கும் போது சின்னப்பையன் இவனால்…இந்த வார்த்தைகளுக்காக எத்தனை நாட்கள் ஏங்கி ஏமாந்து போயிருப்பேன்.ஸ்பூனால் சாப்பாட்டை அள்ள முடியாமல் மனம் திணறியது. ‘

தாத்தா..நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூற காணாமே ?

தம்பி…. வயதான காலத்துல சாமான்களோடு சண்டை போட்ற வலு கிடையாது.காலம் கழிஞ்ச பிறகு கத்துக்கிட்டு என்னவாகப் போவுது. அந்த பதிலின் தொனிவு அவனுள் மிகப்பெரிய பாதிப்பை நிகழ்த்தியது.

தம்பி…உன் பேரு என்னப்பா ?நான் அன்றைக்கே கேட்டிருக்கணும்.படப்படப்புல கேட்க மறந்துட்டேன்.

என் பெயர் ஆதித்தன்.உயர்நிலை நான்கிலே படிக்கிறேன்.நான் பக்கத்து புளோக்குலதான் குடியிருக்கேன்.என் பெற்றோர்கள் பொறியியலாளாராக வேலை செய்யிறாங்க.எனக்கு ஒரு தங்கையும் இருக்கா.பெயர் கேட்டதற்கு ஷாதகத்தையே ஒப்பிவித்ததைக் கண்டு தன்னை மறந்து ரசித்தார்.

‘ஆதித்தன்ங்கிறது யார் பெயர் தெரியுமாப்பா.சோழர்களோட வரலாற்றை ஒரு காலத்துல சோறு தண்ணி செல்லாம படிச்சவன் நான்.சோழர்களைப்பற்றி தவறா பேசினால்கூட சண்டைக்கு நிற்கிற முதல் ஆளும் நானாத்தான் இருப்பேன்.அப்படியொரு பைத்தியம் சோழர்கள் மேல்.பிற்கால சோழ சாம்ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைத்த விஷயாலயச் சோழனின் மகன்தான் ஆதித்தன்.

குறுநில மன்னனான ஆதித்தனின் வீரம் வரலாற்று ஏடுகளிலும்,கல்வெட்டுகளிலும்காலம் காலமா பேசப்பட்டு வருகிறது.வலிமையை மட்டும் மூலதனமா வைத்து சிறு படையுடன் பல்லவ கங்க சேனையையும் அபராஜிதனையும் திருப்புறம்பியங்கிற இடத்திலே வீழ்த்தின சிங்கம்தான் ஆதித்தன். ‘அவனுடைய பேரை வைத்திருக்கிற நீயும் வருங்காலத்துல சிறப்பா வரணும்ப்பா.

தாத்தா..என்னுடைய பெயர்ல இப்படியொரு வீரன் இருந்த வரலாற்றை கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்தேதமிழ்ப்பாட புத்தகங்களைத் தவிர கதை புத்தகம் எதையும் விரும்பி படித்ததில்லை.முதல் முறையா ஆதித்தச்சோழனுடைய வரலாற்றை படிக்கனுங்கிற ஆர்வம் வந்ததற்கு காரணகர்த்தர் நீங்கதான் தாத்தா.உங்ககூட பேசுற ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு காலக் கட்டத்துக்கு கூட்டிட்டு போற உணர்வு தோன்றுது.

ஆதித்தா…தாத்தாவை அதிகமா புகழ்ந்தியன்னா,எனக்கு தலை பெரிசாயிடும்.இருவரும் கலகலவென்று சிரித்தபடி நாயோடு காலார நடந்தனர்.

தாத்தா.. ‘நீங்க தனியாவா இருக்கீங்க.. ? ‘ராகவனுக்கு முன் ஓடிச்சென்று பின்னால் நடந்தபடி கேட்டுவிட்டு உற்றுப்பார்த்தான்.

ஆமாம்ப்பா.என் மனைவி இறந்த பிறகு உலகத்திலே தனித்து விடப்பட்டவனா எண்ணி தவிக்காத நாட்களே கிடையாது. ‘ஏணியா நின்னு ஏத்திவிட்ட பிள்ளைகள்,படியா கிடந்து பாதை காட்டியவனை மறந்துட்டு புதிய உறவுகளை தைடி போயிட்டாங்க ‘. அதுக்காக நான் வருத்தமோ வேதனையோ படலே.ஏன்னா உலக நடைமுறை அது தானே.

தாத்தா… ?

என்னப்பா…உறவுகளின் அர்த்தத்தை மதிக்காத பிள்ளைகள் உலத்திலே ஏராளம்.அதுலே என் பிள்ளைகளும் ஒண்ணுன்னு நினைச்சிட்டு போக வேண்டியதுதான்.

தாத்தா…. ‘உயிர் கொடுத்த உறவின் அர்த்தம் விளங்காதவர்களுக்கு புதிய உறவின் புனிதம் புரியுமா ? ‘

ஆதித்தா… ‘உலகத்தில காலம் கடந்து போன விசயங்களை கற்றுக்கொண்டு ஞாபகம் வைச்சிருக்கிறது எவ்வளவு கடினமோ அதே போலத்தான் நாங்களும்.நேற்றைய நிகழ்வு நாளைக்கு படிப்பாகலாமே தவிர படிப்பினையாகாது.பண்பட்ட பண்பாட்டையும், காலம் காலமா காத்து வந்த கலாசாரத்தையும் தொட்டுக்கிட்டு மேலை நாட்டு நவநாகரிகத்த்தை சாப்பிடுகிற கலாகாலம்ப்பா இது ‘ .

தாத்தா… ‘மாதா,பிதா,குரு,தெய்வம்னு சொல்லி வைச்சிருக்காங்க.இங்கே மாதாவையும் பிதாவையும் உதறிட்டு தெய்வத்தை வழிபடுறது சரியா படுமா தாத்தா ‘ .

பெத்தவங்ககிட்ட எதிர்பார்த்தவையெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து கடவுளை நாடுறது மனித இயல்பு.

அப்படின்னா… ‘பெத்தவங்களுக்கும் பிள்ளைங்ககிட்டே ‘எதிர்பார்ப்புகள் ‘ இருக்கும்தானே என்ற ஆதித்தனிடம் கால் வலிப்பதாக கூறி உட்கார அமைட்டிருந்த கல் கட்டையில் அமர்ந்தார் ‘ .

ஆதித்தனா..என்னால இல்லை என்று ஓரே வார்த்தையால் பொய் சொல்ல முடியலை.அவர் கண்கள் கலங்கவும் சின்னப் பையனிடம் எதையும் காட்ட விரும்பாமல் சுதாரித்துக்கொண்டு பேசலானார்.

‘நாம் தடுக்கி விழுந்தாக்கூட தாங்கி யாராவது தூக்கமாட்டாங்களாங்கிற எதிர்பார்ப்பு இருக்கும் போது பெத்தவங்க பிள்ளைங்ககிட்டே அன்புங்கிற அஸ்திரத்தை எதிர்பார்க்கமாட்டோமா என்ன ? கஸ்டப்பட்டு ஓடி ஓடி உழைச்சு ஒடுங்காப்போன சமயத்துலே உறுதுணையா இருக்க வேண்டிய பிள்ளைகள் ஒதுங்கி நிற்கலாமா ? பிறக்கும்போதே முதுமை எல்லாருக்கும் கட்டாயம்னு முடிவான பிறகு எங்களை முடக்கி விடலாமா ?ஒரு குழந்தையோட மனநிலையிலே தவிக்கிற நான் வயிற்றுக்குக் கூட சமாதானம் சொல்லிடுவேன்.ஆனா பாழாய் போன மனதுக்கு முடியலையே ‘ .

தாத்தா..நீங்க ஏங்குற ஏக்கம்,பேசுறது,நினைச்சு புலம்புறது எல்லாம் உங்க பிள்ளைகளுக்கு புரியாமலா இருக்கும்.

ஆதித்தனா..நீ அசட்டுப் பிள்ளையாவே இருக்கே.இந்த உலகத்தைப் பற்றி சரியா தெளிவா அறியாமே பேசிட்டு இருக்கே.உனக்கொரு கதை சொல்யேன் கேளு. ‘ஒரு பெரிய ஆலமரத்துல நிறைய விழுதுகள் மண்ணைத் தொடுற அளவுக்கு வளர்ந்து நின்னுச்சாம்.மண்ணைத் தொட்ட சின்ன விழுதுகள் மரமாயின.சின்ன விழுதுகள் மரமான மதப்புல எங்கிருந்து வந்தோங்கிறதை மறந்துட்டு எகத்தாளம் பேசினதாம்.வாலிப முறுக்குல பேசினதை பெருந்தன்மையா எடுத்துக்கிட்ட பெரிய மரம் காலப் போக்கிலே வெட்டப்பட்டு விறகாகியது.சின்ன மரம் பெரிய மரமா பதவி உயர்வு அடைந்து, அதை அதோட விழுது எகத்தாளம் பேசினப்ப பழமையை நினைத்து கூனி குறுக மட்டுந்தான் முடிஞ்சது.நாம எதை விதைக்கிறோமோ அதுதான் அறுவடையாகுங்கிற உண்மை அவ்வளவு சீக்கிரம் புரியாததுதான் பிரச்சனையே ‘ .

ஆதித்தா…பொழுது மேற்கே சாய்ந்து வெகுநேரம் ஆயிட்டதால வீட்டுக்கு போகலாம்ப்பா.

சரி தாத்தா என்றபடி நடந்தவன்,தாத்தா…மனசுக்கு பிடிச்சவங்களோட மணி கணக்கா பேசுறதுல ஒரு தனிசுகம் உண்டுங்கிறதை உணர்வுப்பூர்வமா இப்பதான் உணர்ந்திருக்கேன்.

ஆதித்தா…. ‘நானும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு மனசுலே அமுங்கிருந்த குமுறலையெல்லாம் ஒருவித வேகத்துல கொட்டி தீர்த்துட்டேன். ஒரு காலத்துல உறவுகளையெல்லாம் மனசுக்குள்ள மாட்டி வைச்சு மண்ணோடு மண்ணா மக்குறவரை பாதுகாத்தோம். நாகரிக காலத்துலே உறவுகளை கண்ணாடிக்குள்ளே அடைச்சு அழகு காட்டிக்கிட்டு,கலர் மங்கியவுடன் தூக்கி எறிஞ்சிடுறாங்க.இதே நிலை நீடித்தால் காப்பகங்கள் பெருகலாமே தவிர குடும்ப பிணைப்பு அந்தரத்துல தொங்கும் திரிசங்கு சொர்க்கம் போல ஆயிடும். தாத்தா..மனிதர்கள் தங்களோட இயல்பிலேயிருந்து இந்த அளவுக்கு முற்றிலும் மாறிடுவாங்களா ?

நான் எதையும் திட்டவட்டமா சொல்றதுக்கு தீர்க்கதரிசி இல்லேப்பா.காலம் கண்டிப்பா மாறின கதையை மறக்காம சொல்லும். அப்ப இந்த ராகவன் உன்னோட மனசுல ஒரு ஓரத்தில் இருந்தான்னா நினைச்சுப்பாரு.

ஹாய்…எப்படி இருக்கே.. ?என்ற மாமாவின் மகன் அமரை கண்ட வேகத்தில்,நீங்க எப்ப யு.கேயிலலே இருந்து வந்தீங்க ?ஆதித்தன் ஆவல் பொங்க பேசுவதை கண்ட ராகவன் நாசூக்காக பிறகு பார்க்காலாமென விடைபெற்றார்.

ஆதித்தா…எனக்கு யு.கேயில வேலை கிடைச்சிருக்கு.அங்கேயே தங்கிடலாம்னு முடிவெடுத்துருக்கேன்.

அப்ப அத்தையும் மாமாவையும் கூட்டிட்டு போகப்போறீங்களா ? என்ற ஆதித்தனின் கேள்விக்கு அவுங்க ஏன் ? கூட்டிட்டுப்போய் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடவா என்று அவசர அவசரமாக பதில் வந்தது.

ஆதித்தன் அதற்கு மேல் வாயை மூடிக்கொள்ள,அமரன் யு.கே. பெருமையை அளந்தபடி வீட்டிற்கு வந்தான்.ஆதித்தனின் அம்மா அமரை கண்ட வேகத்தில் ஏகபோக விருந்திற்கு சமைக்க ஆரம்பித்தாள். அப்பா வேலை வாய்ப்பு பற்றி விலாவாரியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆதித்தனுக்கு அமரை கண்டதில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.பெற்றவர்கள் மேல் அன்பை மழை போல் பொழியும் அப்பா எங்கே ? உறவுகளை ஒட்டு மொத்தமாக உதறிவிட்டு ஓடத் துடிக்கும் அமரன் எங்கே ?உறவுகள் சூழ்ந்து இருந்தும் உதவ முன்வராமல் ஒத்தையில் தவிக்கும் ராகவன் தாத்தா எங்கே ?உறவுகளே விட்டு ஒரு நிமிடம்கூட தனித்து இருக்க விரும்பாத இந்த ஆதித்தன் எங்கே ? நான்கு பேருடைய வாழ்க்கையிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தேடல் இருக்கிறது.

ஆதித்தன் மற்றவர்களுடைய தனிப்பட்ட கருத்தில் அத்து மீறி நுழைந்து அவர்களின் வாழ்க்கையைச் செதுக்கி சீர்தூக்குவது தவறு என்றாலும், பொது நல பார்வையில் எதார்த்த எண்ணங்களை சிறைப்படுத்தி சீர்படுத்துவதன் மூலம் அவனது சந்ததியின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையாது என்ற திண்ணமான முடிவுதான்.

முற்றும்.

சுஜாதா சோமசுந்தரம் ( 5-9-2004 தமிழ் முரசு சிங்கப்பூர் )

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்

எதிர்பார்ப்பு

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பா.தேவேந்திர பூபதி


நேற்றிலிருந்து

இன்று வரும்

நாளை வரும்

என்றிருந்த நாட்கள்

இன்றுவரை

வரவேயில்லை

தெரு முனையில்

மணியடித்து சிறியதும் பெரியதுமாய்

யார் யாரிடமோ கையெழுத்து வாங்கி

எதை எதையோ

எண்ணிக் கொடுக்கின்ற

நாளை வரும் என்றிருந்த நாட்கள்

இன்று வரை வரவேயில்லை

யாரையோ நிறுத்தி

ஏதேதோ விசாரித்து

கை நீட்டிக் காண்பிப்பது

என்னைப் பார்த்தோ..!

அருகில் வருகிறார்

மனதில்

ஆசைகளின் பிரவாகம்

இன்றைக்காவது எனக்கு வரும்

இன்ன இவர்

என்னைத் தாண்டிச்

சென்று கொண்டே.. ..

நேற்றிருந்து

இன்று வரும்

நாளை வரும் என்றிருந்த

நாட்கள்

வருவதேயில்லை போலும்

{“பெயற்சொல் “ தொகுப்பிலிருந்து)

Series Navigation

பா .தேவேந்திர பூபதி

பா .தேவேந்திர பூபதி

எதிர்பார்ப்பு

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

புஷ்பா கிறிஸ்ரி


காற்றடிக்கிறது,,

மழையும் கொட்டுகிறது

என் கண்களில் கண்ணீர்

வரவிருக்கும் பனிநாட்களை எண்ணும் போது

உதிரும் இலைகள் போல்

என் கண்களின் நீர் உதிர்கின்றது..

எத்தனை நாட்கள் ?

ஓட்டமாய் ஓடி,

குளிரில் நடுங்கி,

பனியில் நனைந்து..

கொட்டிடும் பனியை, குளிரில் தள்ளி

ஐயகோ.. எண்ணிட மனம்

என்னவோ செய்கிறது.

நினைத்தாலே நெஞ்சு வெடித்து விடும்

நிஜமான நாட்கள் அவை..

இதோ,, அருகில் மிக அருகில்..

இன்னும் கொஞ்ச நாட்களில்,,

நிறம் மாறி, மனம் மாறி

மரத்தை விட்டு, கொட்டி விடும் மர இலைகள்

பனிக்கால குளிரைப் புரிந்தும்

புரியாத புதிர்கள், இந்த இலைகள்

மனம் ஏங்குகிறது..

மாரி காலக் குளிர் மழையும்,

பனி கொட்டும் பனிக்காலப் பனியும்

இந்த வட அமெரிக்க நாட்டில்

இனி ஒருகாலம் இல்லாமல் போய்விடும்

அந்த நாளும் வந்திடாதோ ?..

கேள்விக்குறிகளுடன் எங்கள் வாழ்க்கை..

***
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி