This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
“என்ன யோசனை ? ”
“அநாதைகளுக்கு உதவும் சங்கம் இருக்கிறது. அநாதைப் பிணங்களுக்கென சங்கம் என்று நான் கேள்விப்பட்டதில்லை. அயலுக்குள் சாவீடு என்றாலே> பிரேத அடக்கம் எப்போது முடியும் என்று மனம் கிடந்து அலையும். வீட்டிற்குப் போய் தலையில் தண்ணீர் வார்க்க மாட்டோமா என்று அவதிப்படும். மனித இயல்பு இப்படியிருக்கும் போது அநாதைப் பிணங்களை நல்ல முறையில் அடக்கம் பண்ண விரும்பும் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு எப்படிக் கிடைக்கும் ? நடைமுறையில் சாத்தியமேயில்லை. அதுதான் யோசிக்கிறேன்.”
கிட்டத்தான் ஒருக்கா போயிட்டு வருவோம் என்று அருந்தவம் மாமா அழைத்ததைத் தட்ட முடியாமல் அவரோடு புறப்பட்டு வந்திருந்தான் ஜனகன். வெய்யில் சுத்தமாக அடங்கிவிட்ட கண்கூசாத மாலைப் பொழுது. பக்கம் பக்கமாக நடந்து கொண்டு> அவரிடமிருந்து போகிற காரணத்தை ஜீரணித்தபின் இது காரியமாகக் கனியுமா என்று சந்தேகம் தோன்றிற்று அவனுக்கு.
“நீ சொல்வது ஓரளவு சரியாக இருக்கலாம் ஜனகன். இந்த விசயத்தில் ஏற்கனவே பிந்திவிட்ட ஆதங்கம் எனக்கிருக்கிறது. தொடங்கும் போதே கலவரப்பட்டு மொத்தமாகக் கை கழுவி விடுவதை விட முயற்சித்துத் தோற்பது பரவாயில்லை. ஒரு மனிதன் இதனைத் தனித்துச் செய்வது கஷ்டந்தான். ஆனால் செய்யவே இயலாதென்று கூற முடியாது. பத்துப் பதினைந்து பேரிடம் பேசியதில் எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அவர்களுடன் கலந்து கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கத்தான் பள்ளிக்கூடத்திற்கு ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கிறேன்” என்றார் அவர்.
“சில மதம் சார்ந்த அமைப்புகள் தங்கள் சமயத்தைச் சேர்ந்த கோருவோரில்லாத அநாதைப் பிரேதங்களைப் பொறுப்பெடுத்து தங்கள் ஆசாரப்படி அடக்கம் பண்ணுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் மாமா”
“அது சரிதான். இருந்தும் தேடுவாரற்ற அநாதைப் பிணங்கள் இப்போது நம் பகுதியில் பெருகிவிட்டன. ஒருவித ஆசாரமும் கடைப்பிடிக்கப்படாமல் ஆஸ்பத்திரியினால் அவைகள் ஏனோதானோவென்று அடக்கம் செய்யப்பட்டு விடுகின்றன. போன மாதம் எனக்கேற்பட்ட அனுபவத்தைக் கேள்.
அன்று ஞுாயிற்றுக்கிழமை. கொஞ்சம் மழைக்குணம். வாசிகசாலைப் பக்கம் போனேன். கடற்கரை வீதியில் மனித நடமாட்டமேயில்லை. எதிரில் ஆஸ்பத்திரி தள்ளு வண்டி வந்து கொண்டிருந்தது. அதனைத் தனியாகத் தள்ளிக் கொண்டு வந்தவரிடம் கனிவாக ஒரு வார்த்தை பேசினால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் போலத் தோன்றியது.
“ஆரப்பா இதில”
“ஆருக்கு சாமி தெரியும். மோச்சரியில ரெண்டு நாளா ஏன்னு கேட்க ஆளில்லாமக் கிடந்தது. காலைல எங்கிட்ட கொடுத்தாங்க. ஆர் பெத்த பிள்ளையோ. மீசை இப்பதான் சின்னதா முளைச்சிருக்கு. தமிழ்ப் பிள்ளைதான். ஈச்சிலம்பத்தை கிராமமின்னு கதைச்சாங்க.”
வண்டி மூலையில் சொருகியிருந்த சொப்பிங் பையில் கள்ளுப் போத்தலும் வெற்றிலைக் கூறும் தெரிந்தன. அதை முதலில் ஊற்றிக் கொண்டு வெற்றிலையும் போட்டுக் கொண்ட பின்னர் அடக்கம் பண்ணுகிற வேலை ஆரம்பமாகலாம். அல்லது வேலை முடிந்த பின்னர் ஏற்றிக் கொள்ளக் கூடும். நான் மனம் கேளாமல் அவரோடு கூட நடந்தேன்.
“என்ன சாமி செய்யிறது நானும் மனுசந்தான். எனக்கும் பிள்ளை குட்டியிருக்கு. இந்த பச்சை மண்ணைப் பாத்து மனசெல்லாம் வெந்து போச்சு. முளைச்சு மூனு இலை விடாத குருத்து. தண்ணி போட்டாத்தான் மனசைக் கட்டிப் போட்டிட்டு குழி கிண்டிப் புதைக்க முடியுது. ஆனா ஒன்னு சாமி மத்தவங்க மாதிரி கொண்டு போனமா தூக்கிப் போட்டுப் புதைச்சமான்னு சம்பளத்துக்கு அழுகிறவனில்ல நான்.
ஏதோ என்னால முடிஞ்சது ஒரு கட்டு கப்பூரத்தை கால்மாட்டில வெச்சு கும்பிட்டு மரியாதை பண்ணி தேவாரம் பாடித்தான் அடக்கம் பண்ணுவேன். வாழ வேண்டிய வயசில அநாதையாய்ச் செத்துப் போன இந்தப் பிஞ்சுக்கு போற இடத்திலயாவது புண்ணியம் கிடைக்கனும்னு கடவுளை மண்டாடி வேண்டிக்குவேன். செய்த பாவமோ என்னவோ எனக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஆனா நான் வருத்தப்படலை சாமி. அடக்கம் பண்ணிட்டு வந்தப்புறம் ஏதோ புண்ணியம் செஞ்ச மாதிரி ஆறுதல் வருது சாமி.
ஒன்னா ரெண்டா பத்து வருசமா இந்தக் கையால எத்தினை இளங்குருத்துகளை புதைச்சிட்டேன். ஒவ்வொரு முறையும் என் பிள்ளையோ பெண்டாட்டியோ செத்துப் போன மாதிரி நெஞ்சை அடைக்குது. அதான் காலையிலேயே கொஞ்சமா போட்டுக்குவேன். இப்ப கூட ஒன்னு முழுசா ஏத்திட்டுதான் வாறேன். இல்லாட்டி முடியலை சாமி.”
கற்பூரம் கொண்டு வருகிறாவெனப் பார்த்தேன். கள்ளுப் போத்தலைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டே கேட்டேன்.
“கற்பூரம் வாங்கியாச்சா ?”
“என் மகன் கப்பூரம் வத்திக்குச்சி எல்லாம் வாங்கிட்டு பூவும் ஆஞ்சிட்டு பின்னால வந்து சேருவான்.”
“நாளைக்கென்று ஓரு வேளைச் சோறு கூட நிச்சயமில்லாத ஏழைத் தொழிலாளியின் உணர்வு என்னை உலுப்பி விட்டது. இப்படியொரு விசயத்தை ஒருபோதும் எண்ணியிராத என்னை அதுதான் சிந்திக்க வைத்தது” என்று கூறிவிட்டு கைமணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார் அருந்தவம் மாமா.
“மாமா கேட்கிறேனென்று குறை விளங்காதீர்கள். எங்கள் ஊர் மயானத்தைப் பாருங்கள். மேல் நாடுகளைப் போல் பூங்காவாக பராமரிக்க முடியா விட்டாலும் கொஞ்சம் துப்புரவாக வைத்திருக்கலாமல்லவா ? கீழே கால் வைக்க முடியாதபடி நெரிஞ்சி முள்ளுப் பத்தை. அடிப்படை வசதிகள் இல்லை. இதைக் கூடச் சரியாகச் செய்ய முடியாத சமுதாயமா உங்கள் முயற்சிக்குக் கை கொடுக்கப் போகிறது. அப்படியே கொடுத்தாலும் நாளடைவில் உங்களை அநாதையாக்கி விட்டுக் கழன்று விடும்.”
“அப்படிச் சொல்வது தவறு தம்பி. நீயும் நானும் இந்தச் சமுதாயத்தின் அங்கம். இந்த நிலைமைக்கு நாமும் ஒரு வகையில் பொறுப்புத்தானே.”
“மாமா எனக்குள்ளே நிறைய கேள்விகள் எழுகின்றன. மனித உயிர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பிருக்கவில்லை – குறிப்பாக தமிழ் மக்களுக்கு. உயிருள்ள உடம்புக்கே மதிப்புக் கொடுக்காத நாட்டில் அநாதைப் பிணங்களை யார் தேடப் போகிறார்கள் ? உடலை விட்டு உயிர் பிரிந்து போனால் அந்த உடலே அநாதைதானே. அதன் பின் அதை ஆசாரமாய் அடக்கம் பண்ணினால் என்ன பண்ணாவிட்டால் என்ன ? அடுத்த நிமிடமே அழிந்து போகக் கூடிய பொய்யான உடம்பு இது. இதற்காக சங்கம் அமைக்கப் போனால் உங்களை வேலையில்லாதவர் என்று வெட்டித்தனமாய் பேசுவார்கள்.”
அருந்தவம் மாமா அவனை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சொன்னார். “இந்தத் தேகத்தைப் பற்றி நான் படித்தவற்றையும் தெரிந்தவற்றையும் உனக்குச் சொல்கிறேன் கேள். தேகம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபட வேண்டும் என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேகம் ஒரு அற்புதமான இயந்திரமாகத் தெரிகிறது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காரியத்திற்குப் பொறுப்பு. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. கண்ணும் காதும் கிட்டக்கிட்ட இருந்தும் கூட கண்ணால் கேட்க முடிவதில்லை. காதால் பார்க்க முடிவதில்லை. வாய்க்குத்தான் பேச முடிகிறது. நாக்கால்தான் ருசிக்க முடிகிறது.
கையும் விரல்களும் பலவிதமான பொருட்களைப் பிடித்துத் தூக்க வசதியாக அமைந்துள்ளன. இது சற்று வேறு விதமாக இருந்தால் கூட இப்போது நாம் பண்ணுகிற காரியங்களைப் பண்ண முடியாது. நடக்கிற போது கூடிய மட்டும் பூச்சி பூரான் நசுங்காதபடி உள்ளங்கால்களில் குழித்தாற் போல் ஏற்பாடு. சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு. இப்படி எதைப் பார்த்தாலும் இறைவன் எத்தனை சூட்சுமமான கற்பனையோடு சரீரத்தைப் பண்ணியிருக்கிறான் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
ஆகாரத்தைச் செரிக்க ஒன்று. செரித்ததை ரத்தமாக்க ஒன்று. ரத்தத்தை பம்ப் பண்ண ஒன்று. மூச்சு விட ஒன்று. எல்லாவற்றிற்கும் மேலே சகல காரியங்களையும் நெறிப்படுத்த மூளை. இப்படி விசித்திர விசித்திரமாக சரீரத்தை அமைத்திருக்கிறான் இறைவன். ஒவ்வொன்றுக்கும் ஒரு தொழில் ஒரு நோக்கம். உறுதியான எலும்புக்குள் ஓடுகிற ஜீவசத்து. சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றும் ஒரு அற்புத லோகம். ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று இசைவாக சகாயம் செய்து கொள்வது பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
எவரோ லட்சத்தில் ஒருவர் தேகம் பொய் மனசு பொய் என்று புரிந்து கொள்ளும் ஞுானியாக ஆனாலும் மிகுதி எல்லோரும் இந்த மெசினை வைத்துக் கொண்டு நியாயமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவராக இருக்கிறோம். சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்ட வேண்டும். அது என்ன கெடுதல் செய்கிறது ? அது மனசின் கருவி மட்டுந்தானே. மனசு நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும். கண் நல்லதைப் பார்க்கும். வாய் உண்மை பேசும். தர்மத்தைச் செய்ய சரீரந்தானே சாதனமாக இருக்கிறது.
பரமாத்மாவிற்கு இந்த உடம்பே ஆலயம். பகவான் கொடுத்த இந்த அற்புதமான உடலை விட்டு உயிர் போனதும், அதை ஏனோ தானோவென்று அடக்கம் பண்ணுவது முறையா ? இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்;வரனின் ஒரு அம்சமல்லவா ? திருமூலர் சொல்கிறார்.
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நானிருந் தோம்புகின்றேனே
ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த உடலை அதற்குரிய மரியாதை தந்து அடக்கம் பண்ணுவதுதான் நியாயம். அது உயிரோடுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை. படிப்பறிவற்ற அந்த ஏழைத் தொழிலாளி எனக்குக் கற்றுத் தந்த உயர்ந்த பாடம் அதுதான்.”
அவர் விடாமல் பேசிக் கொண்டே வந்ததில் பள்ளிக்கூடம் நாலு எட்டுக்குள் வந்துவிட்டது. ஒரு ஸ்கூட்டரும் ஒரு சைக்கிளும் தாழ்வாரத்தில் தெரிந்தன. வகுப்பறை விறாந்தையில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் மாமாவின் முகத்தில் பெளர்ணமிப் பிரகாசம். ஸ்கூட்டரோடு நின்றவரிடம் கேட்டார் மாமா.
“வந்து கன நேரமோ ? ”
“இப்பதான் வந்தனான். இன்னம் ஒருவரையும் காணேல்லை. எனக்கு ஒரு அவசர வேலையிருக்கு. அதுதான் சொல்லிட்டுப் போக நிக்கிறன். நீங்க எல்லாருமா பேசி ஒரு முடிவெடுத்திட்டு சொல்லியனுப்புங்கோ.”
அருந்தவம் மாமாவின் முகத்தை முறிக்க விரும்பாமல் வெறுமனே தலைகாட்டி விட்டுப் போக வந்தவர் அவர். அந்தப் பொறுப்பு முடிந்ததும் அவர் உடனேயே ஸ்கூட்டரை ஸ்ராட் செய்தார். சைக்கிளில் வந்த மற்றவர் தன் சொந்த வேலையாக பாடசாலைப் பிரின்சிபாலைப் பார்க்க வந்தவராம். ஆக> யாரும் இன்னும் வரவில்லை. வருவார்கள் போலவும் தோன்றவில்லை.
ஏழு மணியாகி பள்ளிக்கூடம் இருளில் மூழ்கிற்று.
மாமா அநாதையாய் நின்றதைப் பார்க்க அவனுக்கு என்னவோ செய்தது.