வைரமுத்துவின் இதிகாசம்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

ஜெயமோகன்


வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அதை சிபாரிசு செய்த ‘ வல்லிக்கண்ணன் அதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்கிறார். ஏற்கனவே அகிலனின் சித்திரப்பாவையை பேரிலக்கியம் என்று சொன்ன இவர் , தி க சிவசங்கரனை மாபெரும் விமரிசகராக முன்னிறுத்தும் இவர் அப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை. தி. க.சிவசங்கரன் வல்லிக்கண்ணனை ஆதரிப்பதிலும் வியப்பில்லை.

கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு முதிர்ச்சி இல்லாத ஆக்கம் என்பதே என் எண்ணம். அதற்களிக்கப்பட்ட பரிசு இலக்கிய மதிப்பிடுகளை உயர்த்த உதவுவதல்ல. இத்தகைய கருத்தை இப்போது சொல்லும்போது ஏற்படும் பொதுவான எதிர்வினைகளென்ன ?

அ. எல்லாமே இலக்கியம்தானே ? ஒருவகை இலக்கியத்துக்கு பரிசு கொடுத்தல் பிறர் ஏன் கோபம் கொள்ளவேண்டும் ? ஒரு பரிசை விமரிசிப்பது கேவலம் அல்லவா ?

எல்லாமே இலக்கியம் என்றால் இலக்கியமே தேவையில்லை என்பதே பொருள் . ஒன்றை ஏற்று பிறிதை நிராகரித்துத்தான் வாசிப்பு எப்போதும் நிகழ்கிறது. எல்லா படைப்பும் சமம் என்றால் பரிசு என்பதற்கே பொருள் இல்லை. மேலும் இங்கே அரசு ‘இதுதான் இலக்கியம் ‘ என்று அடையாளம் காட்டுகிறது. இல்லை, இதை நான் ஏற்கவில்லை என்கிறேன். இது என் உரிமை. இலக்கியம் என்பது என்ன என்பதைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் ஒரு சமூகத்தில் இருக்கலாம். அவற்றின் மோதல் மூலமே இலக்கியம் பற்றிய பொதுவான தெளிவு உருவாக முடியும். இவ்வாறு விருது அளிக்கப்படும் தருணங்கள் இலக்கிய மதிப்பிடுகளை முன்வைக்கவேண்டிய தருணங்கள். உண்மையில் கடந்தகாலங்களில் அகிலன் உள்ளிட்ட வணிக எழுத்தாளர்களுக்கு பரிசளிக்கப்பட்ட்போது எழுந்த எதிர்ப்புகள் வழியாகவே இலக்கியம் பற்றிய தீவிரக் கருத்துக்கள் மக்களிடையே சென்றன

பரிசு என்பது ஓர் இலக்கிய மதிப்பிடு உருவாகும் நிகழ்வு. அம்மதிப்பீடை விமரிசிப்பதே நியாயம். அந்தக் கணத்தில் தனக்கு ஒரு விமரிசனம் இருந்தால் அதை சொல்வதே நாகரீகம். அது ஒரு மங்கல நிகழ்வு என்று என்ணும் இலக்கியமறியா பேதைகளே விமரிசனம் கூடாதுஎ என்கிறார்கள்.

2] எது இலக்கியம் என்பதை ஏன் காலத்திந் முடிவுக்கு விடக்கூடாது ?

கவிப்பேரரசு என்ற பட்டமோ , விருதோ காலத்தால் அளிக்கப்பட்டது அல்லவே. அதை அளிக்கும் இலக்கிய மதிப்பீட்டை மறுப்பதே இவ்விமரிசனம்.

3] வெகுசிலர் வாசிக்கும் படைப்பா இலக்கியம் ? மக்கள் விரும்பும் படைப்புக்கு ஏன் பரிசளிக்க கூடாது ?

சுந்தர ராமசாமியைவிட மக்கள் வைரமுத்துவை விரும்புகிறார்கள் என்பது உண்மை. ஆனால் கருத்துக்கணிப்பு எடுத்தால் மக்கள் அதைவிட நாஞ்சில் பி டி சாமியை விரும்பக்கூடும். பரிசு மக்களால் விரும்பப்பட்ட இலக்கியம் என அளிக்கபடவில்லை, இலக்கியத்தரம் என்ற ஒன்றை சுட்டியே அளிக்கப்படுகிறது. அந்த சுட்டலையே மறுக்கிறோம். வெகுசிலர் மட்டும் வாசிக்கிறார்கள் என்றால் அது தமிழில் உள்ள அவல நிலை. வெகுசிலர் மட்டுமே படிக்கவேண்டும் என்ற நோக்குடன் எவரும் எழுதுவதில்லை . படைப்புகளை படிக்காமல் இருந்துவிட்டு அப்படி படிக்காமலிருப்பதையே அப்படைப்பை நிராகரிக்கும் காரணமாகச் சொல்வது தமிழுக்கு மட்டுமே உள்ல மூடத்தனம். மேலும் ‘வாசியுங்கள் ‘என்று சொல்லி அடையாளம் காட்ட இதுதானே தருணம் ?

இவ்விமரிசனத்தை எனது நீண்ட திறனாய்வு அணுகுமுறையின் பின்புலத்தில் சொல்கிறேன். என் கருத்துக்களுக்கான ஆய்வுமுறைமை என் பொது நோக்கு ஆகியவற்றை விரிவாக ஏற்கனவே எழுதியுள்ளேன்.

4 எல்லாரும் ஒரு அங்கீகாரத்தை ஏற்கவே மாட்டார்களா ?

எந்த ஒரு படைப்பாளியையும் எல்லாரும் ஏற்கவேண்டிய அவசியமே இல்லை . எங்கும் அது அப்படித்தான். ஒரு ஜனநாயகநாட்டில் பலவித கருத்துநிலைகள் இருக்கலாம். நான் தமிழின் பெரும்படைப்பாளியாக கருதும் அசோகமித்திரனை ஒரு தீவிர இடதுசாரிப் போராளி முற்றாக நிராகரிக்கக் கூடும். அதை நான் இயல்பான ஒன்றாகவே காண்கிறேன்.

வைரமுத்துவின் இலக்கிய இடம்

வைரமுத்து கவிஞராக ,பாடலாசிரியராக , புனைகதையாளாராக முறையே தோற்றமளித்தவர். இம்மூன்று தளங்களிலும் அவரது இலக்கிய இடம் என்ன ?

கவிஞராக வைரமுத்து வானம்பாடி இயக்கத்தின் தூவானத்துளி . வானம்பாடி இயக்கத்தின் முக்கிய கூறுகள் இரண்டு. கவிதையை சமூக அரசியல் ஆயுதமாக ஆக்க முயன்றது மற்றும் கவிமொழியை சொல்லணித்தன்மை [Rhetorical] கொண்டதாக ஆக்கியது . முந்தைய கூறு தமிழ்ச்சூழலில் ஓரளவு சாதகமான விளைவுகளை உருவாக்கியது என்பதே என் எண்ணம். பிந்தையது கவிதையின் தனிமொழியை சிதைத்து அதை ஒருவகை மேடைப்பேச்சாக மாற்றியது . வைரமுத்து இரண்டாம் கூறை மட்டும் பெற்றுக்கொண்டவர். வானம்பாடிகளீலேயே அதிகமான அளவுக்கு மொழியாளுமை கொண்டவர் அவரே. அதேசமயம் அவருக்கு என அரசியல் ஏதும் இல்லை. ‘சேர்ந்துழ சேர்ந்துழி நிறத்தைச் சார்ந்தலான் ‘ அது ஓர்ந்துணர்வு இல்லாத மனம்தான். தமிழின் மேடைப்பேச்சாளர்கள் மேடைகளில் பொதுவாக எது மூற்போக்காக கருதப்படுகிறதோ அதை வித்தாரமாக சொல்வது வழக்கம், அதுவே வைரமுத்துவின் அரசியல்.

அவரது கவிதை என்பது முழுக்கமுழுக்க மேடைப்பேச்சின் அழகியல் கொண்டது. உரையாட்சிப் பயிற்சியை [Rhetoric] நம்பியே இயங்குவது. உரையாட்சியை வகுத்த அரிஸ்டாடிலே அதை கவிதைக்கு நேர்மாறான ஒன்றாகவே வகுத்துள்ளார். இலக்கியத்தில் உரையாட்சியின் உத்திகளை பயன்படுத்துவது உலக இலக்கியத்தில் எங்குமே நுண்வாசகர்களால் ஏற்கப்படாத ஒன்று. ஏனெனில் இலக்கியம் எங்குமே ஒருவகை தன்னிச்சையான வெளிப்பாடாகவே கருதப்படுகிறது , மொழித்தொழில்நுட்பமாக அல்ல. வைரமுத்து அவர் பின்தொடர்ந்த கவிமரபான வானம்பாடிகளின் சாயலிலும் , வானம்பாடிகளின் முன்னுதாரணமாக அமைந்த கலீல் கிப்ரான், பாப்லோ நெரூதா , வால்ட் விட்மான் ஆகியோரின் சாயலிலும் சில கவனம் பெறத்தக்க வரிகளை எழுதியுள்ளார். ஆனால் கவிதையில் எப்போதுமே ஒரு ‘முன்பிலாத தன்மை ‘[Novelty ]முக்கியமான அளவுகோலகும். தமிழ்க் கவிஞர்களின் மிகப்பெரிய பட்டியலில்கூட நான் வைரமுத்துவை சேர்க்கமாட்டேன். அவரது மொழித்திறனில் நூற்றில் ஒரு பங்குகூட இல்லாத பலரை சேர்க்கக்கூடும்.

வைரமுத்து ஒரு பாடலாசிரியராக முக்கியமானவர். பாடலை கவிதையுடன் சேர்த்துக் கொள்ளலாகாது. பாடலில் முக்கிய தொடர்புக்கூறு இசையே. இசையின் மொழிவடிவமே பாடல். இசையின் மனநிலையை அது பிரதிபலித்தாகவேண்டும். இசைக்கு எந்நிலையிலும் ஒரு உணர்வெழுச்சித்தன்மை , கனவுத்தன்மை உள்ளது. ஆகவே பாடல்களில் அது தவிர்க்கமுடியாதது. இந்த அம்சத்தை பாவியல்பு [Lyricism] என்கிறோம். ‘இசைப்பாடல் ‘ அல்லது ‘பா ‘வுக்கு இந்த ஒரே மனநிலைதான் உள்ளது . கவிதையின் பலவகையான உணர்ச்சிநிலைகள், குறியீட்டாழம், சமநிலை முதலியவற்றை இசைப்பாடல்அடையமுடியாது . ஆகவே அதை கவிதை என்று கொள்ளமுடியாது. அது எடுத்தாள்கவிதை [Applied Poetry ] மட்டுமே. நல்ல இசைப்பாடல் தன் கவிமரபின் சாரத்தை உறிஞ்சி மறுஆக்கம் செய்து இசையுடன் இணைக்கிறது. தியாகராஜர் , புரந்தர தாசர் பாடல்கள் மட்டுமல்ல இசைப்பாடலின் சிகரங்களில் ஒன்று எனப்படும் ஜெயதேவரின் அஷ்டபதிக்கு கூட இலக்கிய மதிப்பு ஏதும் மாபெரும் திறனாய்வாளர்களால் அளிக்கபட்டது இல்லை.மாரிமுத்தாபிள்ளை , கோபாலகிருஷ்ண பாரதி , சுப்ரமணிய பாரதி கண்ணதாசன் ஆகியோரின் இசைப்பாடல்களுக்கும் இலக்கிய முக்கியத்துவம் இல்லை. பாரதியை கவிஞனாக்கியது அவரது கவிதை, அவரது பாடல்கள் கவிஞனால் எழுதப்பட்ட பாடல்கள் என்பதனாலேயே முக்கியமானவை. . வைரமுத்து தமிழ் மரபு உருவாக்கிய சிறந்த இசைப்பாடலாசிரியர்களில் ஒருவர்.

வைரமுத்துவின் இசைப்பாடல்களில் நம் வளமான செவ்விலக்கியமரபின் கம்பீரமும் நாட்டார் பாடல்களின் சரளமும் நளினமும் கைகோர்க்கின்றன. அவற்றை பிசிறின்றி இணைக்கும் மொழித்தொழில்நுட்பம் அவருக்கு மிகச்சிறப்பாக கைகூடியுள்ளது. என் எல்லைக்குட்பட்ட இசையறிவை வைத்து அவற்றின் இசை மதிப்பை சொல்ல தயங்குகிறேன். ஆனால் பாரதியின் இசைபாடல்களைவிட கண்ணதாசன் வைரமுத்து ஆகியோரின் இசைப்பாடல்கள் ஒருபடி மேலானவை என்று கருதுகிறேன். பாரதியின் இசைப்பாடல்கள் அஷ்டபதியின் நிழலில் நிற்பவை. ஒரேவகையானவை. கண்ணதாசன் வைரமுத்து ஆகியோரின் வகைகளூம் அழகுகளும் அவரில் இல்லை . கோபாலகிருஷ்ணபாரதியிடம் நாட்டார்மரபின் அழகுகள் உள்ளன, செவ்வியல் கம்பீரம் இல்லை. பாரதியால் நாட்டார்மரபை முழுக்க உள்வாங்க இயலவில்லை. ஆகவே கண்ணதாசன் வைரமுத்து இருவரையும் தமிழ் மரபு உருவாக்கிய ஆகச்சிறந்த இசைப்பாடலாசிரியர்கள் என்று சொல்ல தயங்கமாட்டேன். என் தனிப்பட்ட ரசனையில் வைரமுத்து மேலும் ஒருபடி உயரம்.

வைரமுத்து ஓர் உரைநடையாசிரியராக, புனைகதைக்காரராக அறிமுக கட்டத்தை தாண்டாத படைப்பாளி. கவிதையை ஒருவகை உரையாட்சிக்கலையாக காண்பவர் , அதன் நீர்த்துப்போன வடிவமாகவே உரைநடையையும் காண்கிறார். ஆகவே சொல்லணியின் செயற்கையான ஒலியால் காதுபுளிக்கும் தன்மை கொண்டது அவரது நடை. மேலும் உரைநடை என்பது சிந்தனையின் நேரடியான பிரதிபலிப்பு கொண்டது. தர்க்கபூர்வமாகவும் உள்ளுணர்வுசார்ந்தும் மனம் கொள்ளும் எல்லா நகர்வுகளையும்உரைநடை பிரதிபலிக்கும். வைரமுத்துவின் உரைநடையில் அவரது அலங்கார நோக்கம் மட்டுமே வெளிப்படுகிறது. நவீன உரைநடை அவரிடம் இல்லை என்றால் நவீன இலக்கியத்துடன் நவீன சிந்தனைகளுடன் அவருக்கு உறவில்லை என்பதே காரணம்.

கள்ளிீக்காட்டு இதிகாசம்

கள்ளிகாட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன ?

1] அழகியல் ரீதியாக அது செம்மையும் ஒத்திசைவும் உள்ளதல்ல. அது எடுத்துக் கொண்ட கரு நம் அன்றாடவாழ்க்கையின் தளத்தை சேர்ந்தது. அணைகட்டப்படுதல், மக்கள் அன்னியமாதல். இதை நாவலாக ஆக்கும்போது முதல் தேவை அதை நம்பகத்தன்மையுடன் முன்வைப்பதே. இது உண்மை என்ற நம்பிக்கையை , அவ்வுண்மைக்குள் சென்று வாழ்ந்து மீண்ட உணர்வை வாசகனில் உருவாக்குவது. இதற்கு இலக்கியம் பயன்படுத்தும் அழகியல் முறை ஒன்று யதார்த்தவாதம் [ Realism] இன்னொன்று இயல்புவாதம் [Naturalism] யதார்த்தவாதம் அதன் ஆசிரியனின் தரப்பை, உணர்வுகளையும் புறவய யதார்த்த சித்தரிப்புடன் நம்பகமாக சேர்த்து முன்வைக்கும். புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் ,நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால் , இலட்சுமணப்பெருமாள் , அழகியபெரியவன் எழுதுவதுபோல.

இயல்புவாதம் வெறும் தகவல்களை மட்டும் உணர்ச்சியே இல்லாமல் சொல்வது போன்ற பாவனையில் எழுதப்படும். ஆர் ஷண்முகசுந்தரம், பூமணி, பெருமாள்முருகன், கண்மணி குணசேகரன் போல. புறவய உலகை சொல்லி நின்றுவிடும். இவ்விரு தளங்களிலும் தமிழில் சாதனைப் படைப்புகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றின் சாயலைக்கூட அடையமுடியாத பயிற்சியில்லா ஆக்கம் கள்ளிக்காட்டு இதிகாசம். இதற்களிக்கப்படும் பரிசு அப்படைப்புகளை சிறுமைப்படுத்துகிறது என்பதே என் முக்கிய விமரிசனம் .

கள்ளிக்காட்டு இதிகாசம் மேற்கண்ட இரு அழகியல் வடிவங்களையும் கொண்டதல்ல. யதார்த்தவாதமாக தன்னை அது கற்பனை செய்து கொள்கிறது. ஆனால் தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை ஆரம்பித்துவிடுகிறது . அதன் கூறுமுறை, நிகழ்வுகள் அனைத்துமே ஆர்ப்பாட்டமானவை, மிகையானவை, அலங்காரமானவை. வைரமுத்துவின் தமிழ்நடையை சசிகலாவின் நகையலங்காரத்தை ரசிப்பவர்களே ரசிக்க முடியும். உணர்வுகள் நம் கற்பனை மூலம் நம்மில் நிகழ அவர் அனுமதிப்பது இல்லை. அவரே அழுது கர்ஜித்து குமுறுகிறார். இதன் கலைரீதியான போதாமை என்ன ? இப்படித்தான் நம் ‘சோக காவிய ‘ சினிமாக்கள் உள்ளன. மன வலிமை இல்லாதவர்களை அவை ஒருவகையான சுய பச்சாதாபம் நோக்கி தள்ளுகின்றன. துட்டிவீட்டில் நாமும் காரணமின்றி கண்கலங்குவதுபோல .அழுது முடிக்கும்போது எல்லாம் முடிவுக்கு வந்துவிடுகிறது. இத்தகைய புனைவுகளின் மிகைநவிர்ச்சியே நமது வெகுஜனக்கலையின் மிக மிக முக்கியமான குறைபாடாகும். அது இதெல்லாமே கதை என்று நம் மனதை நம்பவைத்து விடுகின்றது. . எல்லாருமே கதாபாத்திரங்கள். புனைவில்மட்டுமே சாத்தியமான உலகம். அங்கே புரட்சி வெடிக்கலாம், எல்லாமே அழியவும் செய்யலாம். வெளியே ஒரு திவலைகூட தெறிக்காது . இதனால்தான் பூமணி கொடுமையிலும் கொடுமையான பகடைகளின் வாழ்க்கையை சொல்ல மிக மிக உணர்ச்சியற்ற ‘அறிக்கை ‘ போன்ற கூறுமுறையை கையாள்கிறார். அது நம்மை அமைதியிழக்க செய்கிறது. அடிப்படையான கேள்விகள் நம்முள் எழுவதன் மூலம் உருவாகும் அமைதியின்மை அது. அதுதான் கலையின் வழிமுறை

கள்ளிகாட்டு இதிகாசத்தின் வடிவில் மிக தாழ்ந்த தர புத்தெழுச்சிவாதம் [Romanticism] கலந்துள்ளது. எல்லா உணர்ச்சிகளும் புத்தெழுச்சிவாதத்தின் மிகையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் நடை புத்தெழுச்சிவாதத்தின் அணிகளும் அலங்காரங்களும் நிரம்பிய அணிநடை[ Euphuism] ஆனால் புத்தெழுச்சிவாதம் தன்னளவில் குறையுடையதல்ல. இன்னும்சொல்லப்போனால் அது இலக்கியத்தின் ஆதார அழகியல்களில் ஒன்று. ஆனால் அது மேன்மைப்படுத்தப்பட வேண்டியவற்றை , நுட்பமாக சொல்லவேண்டியவற்றை சொல்வதற்கான வடிவம். ‘ தீக்குள் விரலை விட்டால் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதையே ‘ [பாரதி] போல. ‘கண்ணாடியில் பிம்பம் விழும் தொனி எனக்கு கேட்கிறதே அதை நீ அறிவாயோ ‘ [லா.ச.ரா] போல. அசாதாரணமான , அதி உத்வேகமான உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டிய வடிவம் அது. உருவகங்கள், ஆன்மீக அகத்தேடல்கள் ஆகியவற்றுக்கான அழகியல் அது.

புத்தெழுச்சிவாதத்தின் சிக்கலே அதை நம்பகத்தன்மையுடன் சொல்வது மிக மிகச் சிரமம் என்பதுதான். சொல்லப்படும் உணர்வில் சிறிய அளவில் பொய் அல்லது பாவனை இருந்தால் கூட அது காட்டிக் கொடுத்துவிடும். ஆகவே கவிதையில்தான் புத்தெழுச்சிவாதம் சிறப்பாக சாத்தியம். ஓர் மன எழுச்சி நிகழ்ந்ததுமே அதை மொழியாக ஆக்கிவிட்டால் தீர்ந்தது . புனைகதையில் அது எளிய விஷயமல்ல. புனைகதைகளில்வரும் உச்சங்களில் மட்டுமே புத்தெழுச்சிவாதம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும். மற்ற இடங்களில் செயற்கையான அழுகையை காணும் மனத்தொந்தரவையே நமக்கு அளிக்கும்.ஆகவே உலகப்புகழ்பெற்ற புத்தெழுச்சிவாத எழுத்தாளர்களின் நாவல்களில் கூட [உதாரணம் விக்தர் யூகோ] அவற்றின் சாதாரண கதைத்தளம் யதார்த்தமாக இருக்கும். உச்சம் மட்டும் புத்தெழுச்சித்தளம் நோக்கி சென்று மீளும்.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அப்படிப்பட்ட நுட்பமான கலைப்பார்வையே இல்லை . அது எங்கும் அதே மிகையான ,செயற்கையான நடையை கையாள்கிறது. அது எந்த நுட்பமான வாசகனையும் சலிப்பூட்டும் என்றே நான் எண்ணுகிறேன். மேலும் அந்நாவல் முன்வைக்கும் உண்மையான மக்கள் பிரச்சினையையே அது பொய்யாக ஆக்கிக் காட்டுகிறது. ஓர் உண்மையை பொய்யான நடையில் சொல்லுவதே உண்மையைக் கொல்வதற்கான சிறந்த வழி. இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம். இதனால் அதை முதிரா அழகியல்கொண்ட ஆக்கம் என்கிறேன்

2] கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பார்வை மிகத் தட்டையான ஒன்று. ஒரு நாவல் அது பேசும் கரு சார்ந்து விரிவான காரணகாரிய தர்க்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. காரணம் நாவல் ஒரு வகை ‘தீஸிஸ் ‘ . ஆய்வுஅறிக்கை . இப்படிப்பட்ட ஒரு நாவல் வளர்ச்சி என்றால் என்ன என்ற வினாவிலிருந்து தொடங்கும். அணைக்கட்டு இல்லாமல் விவசாயம் இல்லை, விவசாயம் இல்லாமல் நாகரீகம் இல்லை. அதே அணக்கட்டு அழிவையும் உருவாக்குகிறது. அப்படியானால் நாம் இன்று நாகரீகம் என்று கொண்டிருக்கும் மனச்சித்திரம் எப்படிப்பட்டது ? படிப்படியாக நம்மை அழித்துத்தான் நாம் நாகரிக்கமாக வாழமுடியுமா ? இக்கேள்வியின் மாறுபட்ட தளங்களை சுட்டி இந்நாவல் விரிந்திருக்கவேண்டும். அரசியல் பண்பாட்டுத்தளங்களில் பதில்கள் தேடப்பட்டிருக்கவேண்டும்.

இதன் அடுத்த கட்டமே இந்த அணையை ஒரு குறியீடாகவும் வாசிக்கும் வாய்ப்பை வாசகனுக்கு அளித்து இயற்கைமீதான மனிதவன்முறை நோக்கி, மனிதனிின் ‘கட்டியெழுப்பும் ‘ பண்பாடு நோக்கி அவனது மனம் நகரும்படி செய்வது . அதாவது ஒரு நல்ல நாவலில் சொல்லப்படுவதெல்லாம் சொல்லப்படாதவற்றின் பிரதிநிதிகளே. வாசகன் மனதில் முளைக்கும் விதைகளே அதில் உள்ளன. ஹெமிங்வே திமிங்கலச்சுறா பற்றி எழுதினால் அது மீன் மட்டுமல்ல. அசோகமித்திரன் தண்ணீர் பற்றி எழுதினால் அது தண்ணீர் மட்டுமல்ல. சொல்லப்படும் ஒன்று சொல்லாத நூறுவிஷயங்களை சுட்டிநிற்பதே இலக்கியப்படைப்பின் ஆதார வலிமை. இதே கரு கொண்ட ஒரு மலையாள சினிமா உண்டு. எளிமையான சினிமா . ஜேசி இயக்கிய ‘புறப்பாடு ‘ ஆனால் அதுகூட இப்படிப்பட்ட ஒரு இடப்பெயர்வை மனிதகுலத்தின் இடைவிடாத வரலாற்று நகர்வின் குறியீடாகக் காட்ட முயனறது . இதேகரு இந்திய இலக்கியத்தில் மிகச் செறிவாக பலமுறை சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில்கூட விட்டல் ராவ் எழுதிய ‘போக்கிடம் ‘ என்ற நாவல் இதைவிட மிக முக்கியமான ஆக்கம். க. சுப்ரமணியம் எழுதிய கல்லும் மண்ணும் இதே கருவை நிதானமாக கையாண்டுள்ளது. ‘ கள்ளிக்காட்டு இதிகாசம் ‘ மிகையுணர்ச்சிகளிலேயே ‘ நின்றுவிடும் தட்டையான அறிவுத்தளம் கொண்ட ஆக்கம்.

ஆகவே கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு கொடுக்கப்பட்ட விருது இலக்கியம் குறித்த முதிராத அணுகுமுறையை மற்றும் மறைமுக ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியப்பிரக்ஞை கொண்டோரால் நிரகாரிக்கத்தக்கது. சிலர் சொல்வது போல இது ஒருவர் விருது பெறும்போது பிறர் குமுறும் சில்லறை விஷயமல்ல. அப்படி சொல்லும் பாமரர்கள் இலக்கியத் திறனாய்வு பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாதவர்கள். இது இலக்கிய மதிப்பு பற்றிய சிக்கல். ஒரு மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது. அதை நான் மறுக்கிறேன். நான் முன்வைத்துவரும் இலக்கிய மதிப்பீடுகளின்படி வைரமுத்து ஒரு சிறந்த இசைப்பாடலாசிரியர் மட்டுமே , கவிஞரோ நாவலாசிரியரோ அல்ல.

[ தீம்தரிகிட மார்ச் இதழில் வெளிவந்த கட்டுரை ]

jeyamoohannn@rediffmail.com

Series Navigation