வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சந்திரலேகா வாமதேவா


இளம் பிள்ளைகள் இல்லாத வீடுகள் மிகக் குறைவு. Adolescent பருவத்தில் அதாவது வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளiத்துச் சரியான வழியில் வளர்ப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான வேலை. எமது நாட்டில் என்றால் பெற்றோரது சொற்களுக்குக் கட்டுப்படாத பிள்ளைகளை தகப்பனின் சகோதரன் அல்லது தாயின் சகோதரனிடம் அனுப்பி நான் சொன்னா இவன் துப்பரவாய் கேட்கிறானில்லை. நீங்கள் எண்டாலும் ஒருக்கா புத்திமதி சொல்லுங்கோவன் என்று சொல்வதுண்டு. தமது சொல்லைக் கேட்காவிடினும் மாமனின் அல்லது பெரிய அல்லது சிறிய தகப்பனின் சொற்களைப் பிள்ளைகள் கேட்டு நடப்பார்கள் என்று பெற்றோருக்கு நம்பிக்கை. அது பெருமளவில் உண்மையும் கூட. உறவினரிடையே நெருக்கமான பந்தம்f வளர்ந்திருந்ததால் பிள்ளைகள் பெற்றோரின் சகோதரர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களுடன் கதைப்பது பெற்றோருடன் கதைப்பதை விட பிள்ளைகளுக்கு இலகுவாக இருந்தது. சில பெற்றோர் பிள்ளைகளுடன் கடுமையாக நடப்பதும் சில சமயங்களiல் அடிப்பதும் உண்டு. விடலைப் பருவம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்தப் வளரிளமைப் பருவத்தில் ஒருவரின் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அறிவாலும் உடலாலும் பெருமளவில் இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி ஏற்படுகிறது. Peer pressure எனப்படும் நண்பர்களiன் அழுத்தம் அதிகம் இடம் பெறுவதால் பெற்றோர் சொல்வது வேண்டாத விஷயங்களாகவே பெருமளவில் தென்படும். என்ன நெடுக friendsஓட சுத்திக் கொண்டிருக்கிறாய். சோதினை வருகுதில்லே. வீட்டில இருந்து ஒழுங்காய் படியன் என்று பெற்றோர் கூறுவதும், சும்மா எந்த நேரமும் படி படி எண்டு சொல்லிறதைத் தவிர இவைக்கு வேறை ஒண்டும் தெரியாது என்று பிள்ளைகள் வாய்க்குள் முணுமுணுப்பதும் நாளாந்தம் யாழ்ப்பாண வீடுகளiல் நடைபெறுவது ஒன்றே. இந்தப் பருவத்தில் பிள்ளைகள் நண்பர்களுடன் தம்மை அடையாளம் காணுவதால் அவர்கள் கூறுகிற விஷயங்களே அவர்களுக்கு வேத வாக்காகப்படும்.

புலம் பெயர்ந்த பின்னர் இந்த வளரிளமைப் பருவப் பிள்ளைகளுடன் பழகுவது பெற்றோருக்கு இன்னும் சிக்கல் நிறைந்ததாக ஆகியுள்ளது. இரண்டு கலாச்சாரத்தில் பிள்ளைகள் வாழ்வதால் அவர்கள் இந்தப் பருவத்தில் பாடசாலையிலும் வெளiயிலும் தாம் பழகும் பெரும்பான்மை இன பிள்ளைகளுடன் தம்மை இனம் காண முற்படுகின்றனர். இதனால் பிள்ளைகள் தங்களது கலாசாரத்தை விட்டுத் தவறான வழியில் போய்விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. பிள்ளைகளுக்கும் தமது தமிழ் பெற்றோர் கூறும் விஷயங்கள் வேண்டாதவையாகப் படுகின்றன. மொழி பண்பாடு பற்றிய பெற்றோரின் அறிவுரைகள் அவர்களை எரிச்சலுட்டுகின்றன. எல்லாப் பிள்ளைகளும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்றில்லை. பெற்றோரது மனம் கோணாது அவர்களது விருப்பப்படி நடக்கும் பிள்ளைகள் சிலர் இருப்பார்கள்f. பலர் இந்த மாற்றங்களiனூடாகச் செல்லும் போது வேறு விதமாகவே பெரும்பாலும் நடந்து கொள்வார்கள். சில பிள்ளைகள் தமது பெற்றோரை நாகரிகமற்றவராகக் கருதி அவர்களைத் தமது நண்பர்கள் காணுவதையே விரும்ப மாட்டார்கள். இது பல ஆங்கிலக் குடும்பங்களiலும் நடைபெறுவதுண்டு. இது இந்த வயதில் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒரு உணர்வு. பிள்ளைகள் மாற்றங்களiனூடாக வளர்ச்சி அடைகிறார்கள் என்பதை உணர்ந்து பெற்றோர் அவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இத்துறையில் ஆய்வு செய்த அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே இன்று இந்த வளரிளமைப் பருவத்தில் இடம் பெறும் மாற்றங்கள் என்ன என்று சிறிது விளங்கிக் கொள்வோம்.

வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம் அதாவது adolescent பருவம் எல்லோரது வாழ்விலும் வருவதொன்றாகும். இப்பருவம் பற்றி நாம் பூரணமாக அறிந்து கொண்டால் தான் ஒவ்வொருவரும் தத்தமது பிள்ளைகள் இப்பருவத்தைக் கடக்கும் போது அவர்களது நிலையை நன்குணர்ந்து அவர்களுக்கு உதவ முடியும். Adolescence என்ற ஆங்கிலச் சொல் adolescere என்ற லற்றீன் சொல்லிலிருந்து உருவாகியதாகும். இந்த லற்றீன் சொல்லின் பொருள் வளர்ச்சி அல்லது முதிர்ச்சி பெறுதல் என்பதாகும். வளரிளமை பருவம் என்பது ஒருவர் பிள்ளை நிலையிலிருந்து வளர்ந்தோர் நிலையையடையும் மாற்றத்திற்குரிய பருவமாகும். இப்பருவத்திற்குரிய வயதெல்லை 10 தொடக்கம் 20 வயது வரை என்றும் 12 தொடக்கம் 18 வரை என்றும் இரு வேறு கருத்துக்கள் அறிஞரிடையே காணப்படுகின்றன. இப்பருவத்தில் உடலிலும் எண்ணப்போக்கிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம் மாற்றங்கள் அனைத்தும் அவரவர் சமூக, குடும்பப் பின்னணிக்கேற்பவே நடைபெறுகின்றன.

இக் காலத்தில் உடலில் விரைவான வளர்ச்சியும் மாற்றங்களும் ஏற்படுகின்றன. பொதுவாக பெண்களுக்கு 11 வயதிலும் ஆண்பிள்ளைகளுக்கு 13 வயதிலும் இம்மாற்றங்கள் இடம்பெற ஆரம்பிக்கும். 12-15 வயதுகளுக்கிடையில் பெண்களiன் உயரம் ஏறக்குறைய 5 அங்குலங்களும் எடை 12 கிலோக்களும், ஆண்பிள்ளைகளiன் உயரம் ஏறக்குறைய 9 அங்குலங்களும் எடை 25 கிலோக்களும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாற்றங்களiன் உச்சமாகப் பூப்படைதல் நிகழ்கிறது. இது பொதுவாகப் பெண்களுக்கு 12 வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் இடம்பெறும்.

வளரிளம் பருவத்தினரது இந்த உடல் வளர்ச்சியானது அவர்களது சுய கருத்து உருவாக்கத்திற்கு உதவுகிறது. பண்டைக்காலத்தில், உடல்ரீதியான வளர்ச்சியும் பாலுணர்வு வளர்ச்சியும் மட்டுமே இந்த வளரிளம் பருவத்தில் ஏற்படுவதாக நம்பப்பட்டது. ஆனால் இன்றைய ஆய்வுகளiன் படி இந்த வளர்ச்சிகள் மட்டுமன்றி தமக்கென உலகத்தில் ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்வதற்காகத் தம்மை மதிப்பீடு செய்தலும், ஒன்றைச் சாதிப்பதற்கு உறுதி பூணுதலும் இப்பருவத்தில் இடம்பெறுகின்றன எனக் கருதப்படுகிறது.

இப்பருவத்தில் பிள்ளைகள் பலவித மனவியல்புகளைக் கொண்டிருப்பார்கள். அவையாவன-

1. எளiதிற் புண்படக் கூடிய மனநிலை பெற்றோர் சிறிய விஷயங்களுக்கு கண்டித்தால் அதைப் பெரிய விஷயமாக எடுத்துத் துன்புறுவார்கள்.

2. தாங்கள் செய்வது சரி என்ற மனப்பான்மை. அதாவது நண்பர்களுடன் தாம் போக விரும்பும் இடத்திற்குப் போக பெற்றோர் அனுமதிக்காவிடின் தாம் போக வேண்டும் என்றும் அப்படிப் போக விரும்புவது சரி என்றும் வாதாடுவார்கள்.

3. அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்கும் விருப்பம். உதாரணமாக நெருப்புச் சுடும் என்று அனுபவப்பட்டவர்கள் கூறினாலும் உண்மையில் சுடும்தானா என்று பரீட்சித்துப் பார்ப்பது இப்பருவத்திற்குரிய இயல்பாகும்.

4. பெற்றோருக்கும் மற்றோருக்கும் பணியாத தன்மை.

5. செயல்முறைக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற தீவிரம்.

6. வலுவற்ற அதாவது fragile மனம். அதாவது தெரியாதவர்களுக்கு நடைபெறும் துன்பங்கள் கூட மனதைப் பாதிக்கும். வீட்டில் பெற்றோருடன் ஏற்படும் சிறிய சச்சரவுகளுக்கு மனமுடைந்து போவார்கள்.

7. பெற்றோர் ஆசிரியரில் பிழை கண்டுபிடிக்கும் உள்ளப்போக்கு.

8. உலகத்தில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு. உதாரணமாக பூமி வெப்பமடைதல், சூழல் மாசடைதல், ஆபிரிக்க நாடுகளiல் பஞ்சத்தால் மனிதர் இறத்தல், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆகியன பற்றி அறிந்து அது பற்றித் தீவிரமாகச் சிந்திப்பார்கள்.

9. தான் என்ற தனித்துவ உணர்வு ஏற்படுதல். அதாவது இதுவரை பெற்றோரின் கவனிப்புக்குக் கீழ் தம்மைப் பற்றிய உணர்வின்றி இருந்தவர்கள் இப்பருவத்தில் தங்களது தனித்துவம் பற்றிச் சிந்திப்பார்கள்.

10. தொடர்பு சாதனங்களiன் மூலம் பிரசித்தி பெற்றவர்களiல் ஒருவித மனப்பதிவு ஏற்படும். சினிமா நடிகர்கள், பிரசித்தி பெற்ற பாடகர்கள், வேறும் பல பிரசித்தி பெற்றவர்கள் இப்பருவத்தவர்களது சிந்தனையில் அதிக இடத்தைப் பெற்றுக் கொள்வர்.

11. வீட்டிலும் வெளiயிலும் தமக்குள்ள உரிமைகள் எவையென அறிந்து அவற்றைப் பெற முயற்சிப்பார்கள்.

12. மனநிலை (mood) அடிக்கடி மாற்றமடையும். எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்.

13. தமது தோற்றம் பற்றிய உணர்ச்சி முனைப்புடையவர்களாக இருப்பதுடன் தம்மைக் கவனிக்கும் பார்வையாளர்கள் இருப்பதாக எப்போதும்f கற்பனை செய்வார்கள். தமது சகபாடிகள் உடுப்பது போன்ற ஆடைகளையே அணிய விரும்புவதுடன் அப்படி அணியாவிடின் அவர்கள் கேலி செய்வார்கள் என்று மனதுக்குள் எண்ணுவார்கள்.

14. நேர்மை உணர்வு உடையவர்களாக இருப்பார்கள். அதாவது பெற்றோர் பொய் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்ல நேர்ந்தால் இப்பருவப் பிள்ளைகள் ஏன் பொய் சொல்கிறீர்கள் என்று அவர்களைக் கண்டிப்பார்கள்.

15. இரண்டு வேறுபட்ட நிலைகளiல் எதில் தான் இருப்பது என்ற குழப்பம் (pole confusion) ஏற்படும். அதாவது தமிழ்ப் பிள்ளையாயின் தான் தமிழரைப் போல இருப்பதா அல்லது அவுஸ்திரேலியர் போல இருப்பதா என்ற குழப்பம் ஏற்படும். அதே போல தந்தை வைத்தியராயின் அவரைப் போல வைத்தியராவதா அல்லது தனக்கு விருப்பமானதைப் படிப்பதா என்ற குழப்பமும் ஏற்படும்.

16. தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை அறுதியாக மறுப்பார்கள்.

17. விபத்து போன்ற அவல நிகழ்ச்சிகள் அவர்களது மனதில் நன்கு பதியும்.

18. பெற்ரோரது கருத்துக்களை மறுப்பதுடன் அவர்களை விட தமது சகபாடிகளுடன் அதிக பாதுகாப்பு உணர்வைப் பெறுவார்கள். இதன் காரணமாகவே சிலர் பெற்றோரை விட்டு விலகித் தமது சகபாடிகளுடன் வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இப்பருவகாலத்தில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெறுகின்றன. சுய அடையாளத்தை உருவாக்குவதற்கு இப்பருவம் மிக முக்கிய காலகட்டமாகும். இப்பருவத்தினரின் பழக்க வழக்கங்களiல் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தைப் பருவம் முதல் பெற்றோரின் விருப்பப்படி அவர்களது குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வந்த பிள்ளைகள் இப்பருவத்தை அடைந்ததும் தமது சமவயதினர் அல்லது சகபாடிகளiன் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். பொதுவாகச் சகபாடிகளiன் மொழி, இசை, ஆடை போன்றவை இப்பருவத்தினரைத் தமது செல்வாக்குக்கு உட்படுத்தும். உதாரணமாக ஒரு பிள்ளை சிறு வயது முதல் தமிழ் மொழியைப் பேசி வருமாயின், இப்பருவத்தில் அம்மொழியைத் தொடர்ந்து பேச விரும்பாது தனது சகபாடிகளiன் ஆங்கில மொழியையே எப்போதும் பேச விரும்பும். அதே போல ஆங்கில இசையை விரும்பிக் கேட்பதுடன் தனது சகாக்களைப் பின்பற்றித் தலைமயிரை அலங்கரித்து அவர்கள் அணியும் அதே ஆடை வகைகளை அணிய முற்படும்.

இப்பருவத்தில் கிரகிக்கும் விஷயங்களை அப்படியே ஏற்காது அதனை ஆராய்ந்து பார்ப்பது அவர்களது இயல்பாகிறது. தங்களுக்கு விருப்பமான பொப்பாடகர்களைப் போல தம்மைக் கற்பனை செய்து அவர்களைப் போல இருக்க முயல்வதும் இப்பருவத்தில் நிகழ்கிறது. அவர்கள் திறமைகளைப் பெற்று வளர்ந்தோருக்குரிய பங்கை நிலைநிறுத்தும் வேளையிலே, தமக்குரிய எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், தாம் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் இப்பருவம் உரிய காலமாகிறது. அவர்கள் உணர்வு ரீதியாகவும், நடத்தை ரீதியாகவும் சுதந்திரமாக இயங்க ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அத்துடன் ஆண்-பெண் வேறுபாட்டையும் பகுத்துணர்கின்றனர். எதிர்ப்பாலாருடன் பழகுவதற்கான திறமையைப் பெறுகின்றனர். தங்களுக்குரிய வாழ்க்கைத் துணை எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அத்துடன் வளர்ந்தோருக்குரிய பங்கை வகிப்பதற்குத் தேவையான கல்வியையும் அனுபவங்களையும் இப்பருவத்திலேயே பெறுகின்றனர். பெறுமதிகள் பற்றித் தீர்வு காணுவதும்f இந்தப் பருவத்திலேயே நடை பெறுகின்றது.

வளரிளம் பருவத்தில் சிலர், பெற்றோர், அல்லது முக்கிய உறவினர், அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது சகாக்கள் ஆகியோர் அவர்களுக்காகச் செய்யும் முடிவுகளை ஏற்று எவ்வித குழப்பங்களும் இன்றித் தமது இலக்குகளை அடைவார்கள். உதாரணமாகப் பெற்றோர் என்ன துறையில் படிக்கவேண்டும் கூறுகிறார்களோ அதை ஏற்று அதன்படி படிப்பார்கள். ஆயினும் இப்பருவத்தில் அனைவரும் பெற்றோரோ மற்றோரோ தமக்காக எடுக்கும் முடிவுகளை எளiதாக ஏற்று விடுவதில்லை. அவர்கள் எதிர்காலத்தில் தாம் எவ்வாறான பங்கை வகிக்க வேண்டுமென்பதில் மிகுந்த குழப்பமடைகின்றனர். அவர்களுள் சிலர் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினாலும் பலர் இக்குழப்பங்களiனூடே தமது முயற்சியினால் தமது எதிர்காலம் பற்றிய முடிவுகளைப் பின்னர் எடுப்பார்கள். இம்முடிவுகளுள் தமக்கென ஒரு திடமான கருத்தை உருவாக்குதல், தமது தொழில் இலக்கு, சமுகத்தில் தாம் ஆற்றவேண்டிய பங்கு என்பன முக்கியமானவை. இதுவே குழப்பத்தை வெற்றிகரமாகக் கடப்பதற்கு வழியாகும். இவ்வாறு தமது முயற்சியால் குழப்பத்தைக் கடந்தவர்கள் மற்றவர்களiலும் பார்க்க பல விஷயங்களiல் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. உதாரணமாக கல்வித் துறையில் சாதனைகள் புரிவார்கள். எல்லாவற்றையும் உற்சாகத்துடன் செய்வார்கள். மற்றவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வெற்றிகரமாக ஏற்படுத்திக் கொள்வதுடன், அழுத்தங்களiன் மத்தியிலும் எதனையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் உடையவர்களாவார்கள்.

இந்த வளரிளம் பருவத்தில் பிள்ளைகள் தமது சூழலில் உள்ள பல விஷயங்களால் செல்வாக்குறுகின்றனர். பாடசாலை, குடும்பம், சமயம், அரசியல், நண்பர்கள், விளையாட்டுகள், தொடர்பு சாதனங்கள், மது, குழுக்கள் அதாவது gangs, நாகரிகம், வரையறையற்ற ஆண் பெண்ணுறவு ஆகியன முக்கியமாக இப்பருவத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றுள் பாடசாலை, குடும்பம்f, சமயம் என்பனவே அடிப்படையில் உள்ளவை. இதனால் பெற்றோரதும் ஆசிரியரதும் பங்களiப்புகள் மிக முக்கியமானவை. இப்பருவத்தில் உள்ள பிள்ளைகளுடன் பெற்றோர் சரியான முறையில் தொடர்பு வைத்திருத்தலின் அவசியம் பற்றி இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வலியுறுத்திக் கூறுகின்றனர். அந்த தொடர்பு எவ்வாறு அமைந்தால் ஆரோக்கியமான விளங்கும் என்பது பற்றி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

வ இரு பகுதியினரும் ஒருவர் சொல்வதை மற்றவர் நன்கு கேட்க வேண்டும்.

வ பிரச்சினைகள் ஏற்படும் போது பெற்றோரும் பிள்ளைகளும் பேசித் தீர்த்தல் மிக முக்கியமானது. சிலவற்றில் பெற்றோரும் சிலவற்றில் பிள்ளைகளும் விட்டுக் கொடுக்கவேண்டும்.

வ பிள்ளைகள் கூறுவதை எப்போதும் நன்கு அவதானித்து பெற்றோர் விடையளiக் வேண்டும்.

வ தமக்குப் பெற்றோரின் ஆதரவு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையை அவர்கள் பிள்ளைகளுக்கு அளiக்கவேண்டும்.

வ பெற்றோர் தமது பிள்ளைகளுக்குப் பொதுவான மனிதப் பெறுமதிகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வ தாயும் தந்தையும் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும். உதாரணமாக புகை பிடிக்கும் தந்தை தனது மகனுக்கு புகைத்தலால் ஏற்படும் தீமைகள் பற்றிக் கூறும் தகுதியை இழக்கிறார். அதே போல சதா சிடுசிடுக்கும் தாய் தனது மகளுக்கு சாந்தமாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்த முடியாது. எப்போதும் பிள்ளைகளiன் முன்னால் வாதிடும் பெற்றோர் நல்ல உதாரணமாக விளங்க முடியாது.

இப்பருவத்தில் பல குழப்ப நிலைகள் இடம் பெற்ற போதும் கல்வி கற்றல் என்பது இக்காலத்திலேயே நடைபெறுகிறது. உயர்நிலைக் கல்வி முழுவதும் இக்காலத்திலேயே இடம்பெறுகிறது. எனவே குழப்பங்களை நீக்கி பிள்ளைகள் மன அமைதியுடன் கற்பதற்கான சூழலை அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகிறது. பெற்றோரின் கவனிபபையும் ஆதரவையும் இழந்த பிள்ளைகள் படிப்பிலும் பின்தங்குகின்றனர். அவுஸ்திரேலியரிடையே அளவுக்கு அதிகமாக விவாகரத்துகள் இடம்பெறுவதனால் இளம்பிள்ளைகளது மனநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அவர்கள் தமது விரக்தியையும் இயலாமையையும் தமது கட்டுக்கடங்காத இயல்புகளால் பாடசாலைகளiல் காட்டுகிறார்கள். அத்துடன் முந்திய காலத்தில் குடும்பங்களiல் தாய் வீட்டிலிருந்ததால் பிள்ளைகளுக்குத் தாயின் அரவணைப்பு முழுமையாகக் கிடைத்து வந்தது. அதனால் அவர்கள் இந்தப் பருவத்தை எளiதாகக் கடந்து நல்ல பிரஜைகளாக உருவானார்கள். இன்றைய பொருளாதார நிலை பெண்கள் வேலை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வளர்ந்த பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவர்களால் முடிவதில்லை. இவ்வாறான பல காரணங்களால் இங்குள்ள இளம் சந்ததியினரில் ஒரு பகுதியினர் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத நிலையில் வளர்ந்து வருகின்றனர்.

தமிழ்க் குடும்பங்கள் பலவற்றில் பெரும்பாலும் குடும்ப உறவு பலமாக இருப்பதனால் பிள்ளைகள் இந்த வளரிளமைப் பருவத்தில் பெற்றோரின் அதிக கவனிப்பையும் ஆதரவையும் பெறுகின்றனர். ஆயினும் இந்தப் பருவத்தில் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் போக்குவதற்கு எந்த நேரத்திலும் எந்த விஷயத்தையும் பெற்றோருடன் மனம் விட்டுக் கதைக்கலாம் என்ற நம்பிக்கையைப் பிள்ளைகள் மனதில் அவர்கள் ஏற்படுத்துதல் முக்கியமானது. பிள்ளைகள் போதை மருந்து, மதுபானம், புகைத்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகாது தடுக்க பெற்றோருடனான இந்த சுமுகமான உறவு பெருமளவில் உதவும். பெற்றோர் பிள்ளைகளுடன் தினமும் ஓரளவு நேரத்தைச் செலவளiத்தல் நல்லது. அவர்களது தேவைகள் மனக் குறைகள் ஆகியன பற்றி அப்போது மனம் திறந்து உரையாடலாம். தினமும் ஒரு நேரச் சாப்பாட்டை குடும்பத்தவர் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது குடும்ப ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும். பெற்றோர் தாம் வாழ்ந்த நாட்டிலிருந்து முற்றாக வேறுபட்ட நாட்டில் வாழ்கிறார்கள், காலம் மாறுகிறது, அதற்கேற்ப தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

இளம் பிள்ளைகள் உள்ள பெற்றோர் பிள்ளைகளiன் பயங்களையும் குழப்பங்களையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு பெருமித்தைச் சொல்லிக் கொடுத்தல் நல்லது. பிள்ளைகள் எவ்வளவு பெறுமதி வாய்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறியும்படி செய்தல் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள இடைவெளiயைக் குறைத்து அவர்களiடையே சுமுகமான உறவை ஏற்படுத்தும். வாழ்வின் முக்கியமான அம்சம் மகிழ்ச்சி. பிள்ளைகள் உரிய வயதில் அதை அனுபவிக்காவிடின் பின் அவர்களால் அதை ஒருபோதும் பெற முடியாமல் போகும். இரு பகுதியினரிடையேயும் உள்ள சாதகமான தொடர்பு, பிள்ளைகளுக்குள்ள விருப்பங்களையும் பெற்றோர் தமக்குள்ள விருப்பங்களையும் ஆராய்ந்து நியாயமான முறையில் நடக்க வழி செய்யும்.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் இருசாராரிடையேயும் நட்புறவு இருத்தல் நல்லது. பிள்ளைகள் எந்த விஷயத்தையும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளலாம், அவர்களது ஆலோசனையைப் பெறலாம் என்ற நம்பிக்கையை இதனால் பெறுவார்கள். பிள்ளைகளது கருத்துக்கள், இலட்சியங்கள், தனித்துவம் ஆகியவற்றை பெற்றோர் மதிப்பதும், எப்போதும் அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேட்பதும் அவர்களுடன் நல்ல உறவுக்கு வழிவகுக்கும். கல்வியைப் பொறுத்த வரை அவர்களது பரீட்சை முடிவுகள் பற்றி அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாத வகையில் சிறந்த முடிவுகள் எடுத்தால் மனம் திறந்து பாராட்டலாம். குறைவான முடிவுகளாயின் பெற்றோர் தமது ஆதரவையும் அன்பையும் கொடுக்கலாம். அவர்களுக்கு விருப்பமில்லாததைப் படிக்கும் படி வற்புறுத்துதல் பிள்ளைகளது மனதில் சலிப்பை ஏற்படுத்தும். அவர்களது பிரச்சினைகளை அவர்களே தீர்க்க உதவுதல் நல்ல விளைவை ஏற்படுத்தும். அவர்கள் தம்மைப் பற்றிய சில முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிப்பதன் மூலம் அவர்களது சுயநம்பிக்கை பலப்பட உதவலாம். அதே நேரம் அவர்கள் தாம் சரியான முடிவை எடுத்தார்களா இல்லையா என்று சந்தேகமுற்றால் பெற்றோர் தமது முழுமையான ஆதரவை அவர்களுக்கு அளiக்கலாம். மேற்படிப்புக்காக தம்மால் எவ்வளவு பணம் உதவமுடியும் என்பதைப் பெற்றோர் மனம் திறந்து கூறி, பிள்ளைகள் சிறிய வேலைகள் மூலம் தமக்குத் தேவையான மிகுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளை ஊக்குவிக்கலாம். தமது பணத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டுமென்பதையும் தமது கடமைகளைத் தாமே எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும், சிறு வயதிலிருந்தே பழக்குதல் பிள்ளைகளiன் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும். நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் செலவழித்தல் என்பதை சிறிய வயது முதல் பழக்கிவரின் அவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகாது கல்வியையும் பின் வேலையையும் சுமுகமாகச் செய்வார்கள்.

kcvamadeva@bigpond.com

Series Navigation

சந்திரலேகா வாமதேவா

சந்திரலேகா வாமதேவா