பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

தமிழ்ச்செல்வன்மேலே குறிப்பிடப்பட்டுள்ள www.cathnewsindia.com கிறுத்துவ இணையதளம் மேலும் ஒரு தகவல் தருகிறது. பாதிரியார் சேவியர் தனிநாயகம் என்பவர் ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்” (IATR – International Association of Tamil Research) என்ற அமைப்பை நிறுவி, 1965-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். பின்னர் அது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்து, தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே தமிழ் மொழியை சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றவர் பாதிரியார் தனிநாயகம் தான்” என்று கூறுகிறது அந்த இணைய தளம். தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேச்ச் சங்கத்தை நிறுவியவர் பாதிரியார் தனிநாயகம் என்பது உண்மை தான் என்றாலும், அவருடைய அந்த முயற்ச்சி தான் தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று உரிமை கொண்டாடுவது ஒத்துக்கொள்ள முடியாததாகும். சொல்லப்போனால், ”ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு” நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை மறுத்தது தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் என்கிற உண்மையைச் சொல்லும் தைரியம்கூட அந்தக் கிறுத்துவ இணைய தளத்திற்கு இல்லை. அதை விட்டு, தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு உரிமை கொண்டாடுவதென்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கத்தின் மறுப்பை புறந்தள்ளிய கலைஞர் அவ்வமைப்பைத் தண்டிக்கும் விதமாக “முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்று அறிவித்து நடத்தியதோடு மட்டுமல்லாமல் “உலகத் தொல்காப்பியர் செம்மொழித் தமிழ்ச் சங்கம்” என்ற புதிய அமைப்பையும் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 45 ஆண்டுகளில் எட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாநாடுகள் (1983 & 1992) அ.தி.மு.க மாநாடுகளாகவும், ஒரு மாநாடு (1968) தி.மு.க மாநாடாகவும் மற்ற ஐந்தும் மிகச் சாதாரண மாநாடுகளாகவும் நடந்தேறியுள்ளன. இவற்றினால் தமிழ் மொழிக்கோ, தமிழ் இலக்கியத்திற்கோ, தமிழ் கலாசாரத்திற்கோ, என்ன பயன் ஏற்பட்டுள்ளது? – ஒன்றுமில்லை!
இப்போது கோவையில் நடந்த மாநாடும் தி.மு.க மாநாடே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொலைக்காட்சிகள் தங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலமே கோவையில் நடந்தது கட்சி மாநாடுதான் என்பதைத் தெளிவாக்க் காட்டிவிட்டன. இம்மாநாட்டில் கிறுத்துவ ஆதிக்கம் இருந்ததும் கண்கூடாகத் தெரிந்தது. அதாவது திராவிட-கிறுத்துவ உறவு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
www.transcurrents.com என்கிற மற்றொரு கிறுத்துவ இணைய தளத்தில் பாதிரியர் தமிழ் நேசன் என்பவர் தான் எழுதிய கட்டுரையில், “பாதிரியார் தனிநாயகம் பல ஐரோப்பிய மொழிகளையும் அம்மொழிகளின் இலக்கியங்களையும் கற்றறிந்தமையால் அவற்றுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் மொழியை சர்வதேச அளவில் வளர்ச்சியடையச் செய்தார். அவர் தமிழ் கலாசாரத்தின் தூதுவராக சர்வதேச அரங்கில் விளங்கினார். தமிழ் கலாசாரத்தை உலகெங்கும் கொண்டுசென்ற கத்தோலிக்கப் பாதிரியாராக விளங்கினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களின் தொன்மையையும், செழுமையையும், அழகையும் சர்வதேச அளவில் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், எப்போதும் கர்தரிடம் பக்தியுடைய பாதிரியாராகவே விளங்கினார். இவருடைய கடுமையான அயராத உழைப்பினால் தான் உலகம் தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.” என்று கூறுகிறார். (http://transcurrents.com/tc/2010/06/contribution_of_sri_lankan_tam.html)
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தமிழ் கலாசாரம் என்பது என்ன? கிறுத்துவர்கள் எதைத் தமிழ் கலாசாரம் என்று சொல்கிறார்கள்? அப்படியென்றால் ஹிந்தி கலாசரம், தெலுங்கு கலாசாரம், மராத்தி கலாசாரம், குஜராத்தி கலாசாரம், வங்காள கலாசாரம் என்றெல்லாம் இருக்கின்றனவா என்ன? இமயத்திலிருந்து குமரிமுனை வரை பாரத மொழிகளைப் பேசும் அனைத்து சமூகங்களையும் ஒன்றாக இணைப்பது ஒரே நாகரிகப் பாரம்பரியம் தான். அதுதான் ஹிந்து கலாசாரம். இந்த ஹிந்து பூமியின் கலாசாரம். சில சடங்குகளிலும் சில சம்பிரதாயங்களிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் கலாசாரம் ஒன்று தான். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும், வணங்கும் கடவுள்களும், கொண்டாடும் பண்டிகைகளும், வாழும் முறையும் அனைவருக்கும் ஒன்றாகத்தான் பற்பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம்.
மேலும், பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள், “பல நாடுகளிலும் தமிழ் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுக்குக் காரணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிரியார் தனிநாயகம் என்ற தனிநபரின் கடுமையான உழைப்புதான்” என்று சொல்கிறார். ஆனால் அவர் “தமிழ்” பண்டிகைகள் யாவை என்று கூறவில்லை. இங்கே தமிழ் வருடப் பிறப்பை மாற்றியமைத்த திராவிட இனவாதிகளிடம் கேட்டால், பொங்கல் தான் தமிழர் திருநாள் என்று கூறுவார்கள். பொங்கல் திருநாள் என்பதே ஹிந்துக்களின் “மகர ஸங்கராந்தி” என்கிற பண்டிகை தான் என்பது வேறு விஷயம். அப்படியென்றால் மற்ற பண்டிகைகள் எல்லாம் தமிழ் பண்டிகைகள் கிடையாதா? அவையெல்லாம் ஹிந்துப் பண்டிகைகள் என்றுதானே அர்த்தமாகிறது? அப்புறம் ஏன் பாதிரியார் தமிழ் நேசன் அவற்றைத் தமிழ் பண்டிகைகள் என்று கூறுகிறார்?
பதில் அவருடைய கட்டுரையிலேயே இருக்கிறது. பாதிரியார் தமிழ் நேசன், “பாதிரியார் தனிநாயகம் தமிழ் கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக சர்வதேச அரங்கில் திறம்படப் பணிபுரிந்தார்” என்று சொல்கிறார். உண்மையிலேயே தமிழர்களின் பலவிதமானப் பண்டிகைகளும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு தமிழர்கள் தங்கள் பண்பாடு மிளிர வாழ்ந்து வரும் பட்சத்தில், அவற்றிற்குப் பெரிதும் பாடுபட்டவர் என்ற முறையில், தமிழ்ஹிந்து கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக பாதிரியார் தனிநாயகம் திகழ்ந்தார் என்று கூறுவது தானே? அவ்வாறு சொல்வது மிகவும் பெருமை தரக்கூடியது அல்லவா? அன்றி தமிழ் கலாசாரம் என்று சொல்வது எதனால்? ஹிந்து என்கிற அடையாளத்திலிருந்து தமிழர்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தத்தானே? ஹிந்து கலாசாரம் என்று சொல்வதற்கு விருப்பமில்லையென்றால் இந்திய கலாசாரம் என்று சொல்வது தானே? அப்படிக் கூறினால் தமிழ் என்ற அடையாளம் இருக்காது, தமிழ் அடையாளம் கொடுத்து ஹிந்து அடையாளத்தை அழிக்க முடியாது, தமிழ் மொழியைக் கிறுத்துவத்துடன் இணைக்க முடியாது, தமிழ் கிருத்துவ தேசம் அமைக்கும் அடிப்படை நோக்கமே அடிபட்டுப்போகும், என்பது தானே உண்மை? அதற்காகத்தான் அனைத்து கிறுத்துவ மிஷினரிகளும் தமிழ் மொழிப்பற்றளர்களாகவும், தமிழ் இலக்கியக் காவலர்களாக்வும், தமிழ் பண்பாட்டின் பாதுகாப்பாளர்களாக்வும் முன்நிறுத்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம்.
கட்டுரையில் பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள் ஒரு ஒப்புதல் அறிக்கையே வாசிக்கிறார்:
“…பாதிரியார் தனிநாயகம் தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இறை தூதன் (Zealous Apostle)…இறைவன் தனக்குக் கொடுத்துள்ள மொழி மற்றும் இலக்கியத் திறமைகளைப் பற்றிய தன்னுணர்வோடு இருந்ததோடு மட்டுமல்லாமல் இறைச் சேவைக்காக (அறுவடைக்காக) அவற்றைப் பயன்படுத்தவும் (பயிரிடவும்) செய்தார். ஒரு பாதிரியார் என்கிற முறையில், தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களைச் சென்றடையும் விதத்தில் தன் அதிகாரச் சபைக்காகத் (better for his ministry) தனக்குத் தேவையான உபகரணமாகத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் ஆழமாகக் கற்றார்…தமிழ்க்கல்வியை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்ததில் பாதிரியார் தனிநாயகம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். அவர் தமிழ்கலாசாரத்தைப் பரப்பிய கத்தோலிக்கப் பாதிரியார். கத்தோலிக்கக் கிறுத்துவம் சர்வதேச மதம் என்பதால் அது அவருடைய வாழ்நாள் நோக்கமான தமிழ்க் கல்வியை சர்வதேச அளவில் பரப்புவதற்கு உதவியாக இருந்தது….தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையையும் அழகையும் உலகெங்கும் ஒப்புக்கொள்வதற்கான தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கு இடையேயும், அவர் எப்போதும் இறைவனிடம் விசுவாசம் மிக்க பாதிரியாராகவே திகழ்ந்தார்.”
லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி.ஆர்.பாக்ஸர் என்பவர், “சரியான கருத்துப்படி, பாதிரியார் தனிநாயகம் நான்கு கண்டங்களிலும் ஏழு கடல்களிலும் விரிவான பயணங்கள் மேற்கொண்டவர் என்பதாலும், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கருத்துக்கள் ஆகியவற்றிற்கு அவர் எப்போதும் வரவேற்பு அளித்தவர் என்பதாலும், அவரை “உலக்க் குடிமகன்” என்று சொல்ல்லாம்” என்று கூறியதையும் தமிழ் நேசன் மேற்கோளாகக் காண்பிக்கிறார்.
தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் பாதிரியார் தனிநாயகம் தமிழுக்கு ஆற்றிய “பங்கு” பற்றி நம்பிக்கை ஏற்படாமல் உள்ளனர். அவர்கள், “மதிப்பும் தரமும் மிக்க சஞ்சிகைகளில் பிரசுரிக்கத் தக்கவாறோ, சக அறிஞர்களும் தர்கரீதியான கல்வியாளர்களும் கூர்ந்து ஆராய்ந்து விமரிசனம் செய்யத்தக்க அளவிலோ அவர் ஏன் தமிழ் பங்காற்றவில்லை?” என்று கேட்கின்றனர். மேலும், ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் நிறுவியதிலும், அதைத் திறம்பட நிர்வகித்ததிலும் அவருடைய பங்கு மிகவும் பாராட்டத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அச்சங்கத்தின் வளர்ச்சியிலும், வெற்றியிலும் மற்ற அறிஞர்களின் பெரும்பங்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்தப் புகழ் ஒருவரை மட்டும் சார்ந்த்தல்ல” என்று கூறுகின்றனர்
இதையே, பின்வரும் காலத்திற்கும் வருங்காலத் தலைமுறையினருக்கும் பேருதவியாக சங்க இலக்கியங்களைத் தேடிக் கண்டு பிடித்து ஒருங்கிணைத்து அவற்றை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த உ.வெ.சாமிநாத ஐயர் அவர்களின் சேவையுடனோ, அல்லது நவீன அச்சகங்களை முதன் முதலில் பயன்படுத்தி சங்க இலக்கியங்களை அச்சிட்ட ஆறுமுக நவலரின் சேவையுடனோ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்.
சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான வையாபுரிப் பிள்ளையைப் பொறுத்தவரை, இலக்கணம், சொற்கள் மற்றும் பிற இலக்கியக் குறிப்புகள் முதலியவற்றை கூர்ந்து மதிப்பிட்டு தமிழ் இலக்கியங்களின் காலத்தைக் கணித்த ஒரே அறிஞராகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழ் இலக்கியங்களின் காலங்களைப் பற்றிய அவருடைய கணிப்புகள், கிறுத்துவ மிஷனரிகளால் ஒத்துழைப்பும் ஆதரவும் தரப்பட்ட திராவிட இனவாதிகளின் மிகைப் படுத்தல்களைத் தகர்த்துள்ளன என்பதில் ஐயமில்லை.
முடிவுரை
ராபர்ட்-டி-நொபிலி முதல் ராபர்ட் கால்டுவெல் வரையிலான கிறுத்துவ மிஷனரிகளும், தனிநாயகம் போன்ற பாதிரிமார்களும், தெய்வநாயகம் போன்ற எவாங்கலிக்கர்களும், தமிழ் மொழியைக் கடத்தி, அதன் ஹிந்து அடையாளத்தை அழித்து, தமிழ் மண்ணின் கலாசரத்தை ஒழித்து, தமிழ் மக்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றி, இறுதியாகத் தமிழகம் மற்றும் வட-கிழக்கு இலங்கை சேர்ந்த ஒரு தமிழ் கிறுத்துவ தேசத்தை ஸ்தாபிப்பது ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு இயங்கினர், இயங்கி வருகின்றனர்.
பண்பாட்டுப் பெருமையும், மொழியுணர்வும், தேசப்பற்றும் இல்லாத திராவிட இனவாத இயக்கங்கள் கிறுத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ்ப் பகுதிகளைத் தேசிய நீரோட்டத்திலிருந்து விரோதப்படுத்தி வருகின்றன. தீய சக்திகளின் இந்தச் செயல்பாடுகள் தோற்கடிக்கப்படவேண்டியது அவசியமாகும். தமிழகம் மற்றும் இலங்கையில் தற்போது உள்ள அரசியல் நிலவரம் ஊக்கமளிப்பதாக இல்லை. அரசியல் கட்சிகளும் நம்பகத்தன்மைச் சிறிதும் இல்லாதவையாக இருக்கின்றன. இந்நிலையில், தமிழகம் மற்றும் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வசம் தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அவர்கள் தங்களின் ஹிந்து அடையாளத்தை மீண்டும் நிறுவவேண்டும். பண்பாட்டுப் பெருமை, மொழியுணர்வு, தேசப் பற்று ஆகிய குணங்களுடன் தீவிர விடா முயற்சியுடன் தங்களுடைய ஹிந்துத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். தங்களின் மொழி, இசை, கலை மற்றும் சிற்ப சாஸ்திரங்கள் அனைத்தும், சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரிகத்தின் வழியில் பாரம்பரியமாக வந்த ஹிந்து கலாசாரத்தைச் சேர்ந்தவை தான் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் அடையாளம் என்பது ஹிந்து என்கிற விசாலமான அடையாளத்துடன் தொடர்பு கொண்டது. இந்தத் தொடர்பை நாம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கோவில்கள், சிற்பக்கலை, பண்டைய இலக்கியங்கள், அரசியல், கடல்கடந்த வாணிபம் ஆகியவற்றில் காணலாம். சங்க இலக்கியங்கள் தெளிவாக, விளக்கமாக ஹிந்து விஷயங்களைப் பேசாமல் இருக்கலாம். ஆனால் அவை மதப் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மாயோன் அல்லது விஷ்ணு, சேயோன் அல்லது முருகன், கொற்றவை அல்லது துர்கை, வேந்தன் அல்லது இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள் போன்ற ஹிந்து மதத் தொடர்புகளைக் கண்டுணரலம்.
சங்க காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்ட இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மேலும் விரிவான ஹிந்துத் தத்துவங்களுடன் மிளிர்கின்றன. அவற்றைத் தொடர்ந்து வந்த பக்தி கலாசாரக் காலங்களில் தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்ற இலக்கியங்கள் தமிழ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியையும், தமிழகத்தின் அரசியலையும் பலப்படுத்தி அதன் மூலம் கடல் கடந்த வாணிபத்தையும், தமிழகத்தின் மொத்த அபிவிருத்தியையும் உறுதி செய்தன. அந்தக் காலக் கட்டத்தில் வேளாண்மையும், நீர்பாசனமும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தன. தமிழ் மொழியின் தோற்றமும், வளர்ச்சியும் வரலாற்று நெடுகிலும் விசாலமான ஹிந்து உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த உண்மை தான், தாய்லாந்து மன்னனின் முடிசூட்டு விழாவின் போது ஏன் திருவாசகம் பாடப்படுகிறது… பாரம்பரியமாக சித்திரை (ஏப்ரல்) மாதம் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டுப் பண்டிகை காம்போஜத்திலும், பர்மாவிலும் கூட அதே சமயத்தில் ஏன் கொண்டாடப்படுகிறது… இந்தோனேசியாவின் இந்துமத சிற்ப இயலில் ஏன் தமிழின் பாதிப்பு இருக்கிறது… போன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கிறது. இந்த ஹிந்து அடையாளம் நியூஜிலாந்தைக்கூட இணைத்துள்ளது! நியூஜிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரிக்கள் வில்லியம் கொலென்ஸோ என்கிற பிராடெஸ்டண்டு மிஷனரிக்கு (1836) அன்பளிப்பாக்க் கொடுத்த ஆலய மணியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (Ref: -http://www.tepapa.govt.nz/ResearchAtTePapa/FAQs/Pages/History.aspx#tamilbell )
தமிழ் என்பது ஹிந்து; தமிழ் கலாசாரம் ஹிந்து கலாசரம்; தமிழ் பண்பாடு ஹிந்து பண்பாடு; தமிழ் பாரம்பரியம் சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நாகரிகத்தின் தொடர்ச்சியே!
(முற்றும்).

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

தமிழ்ச்செல்வன்


தமிழ் உரைநடை பற்றிய கட்டுக்கதை
மேற்கூறப்பட்ட கிறுத்துவப் பாதிரிகள்தான் தமிழில் உரைநடையை அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பிரசாரமும் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உரைநடையை அன்னியர் வந்து அறிமுகம் செய்தனர் என்று சொல்வது பச்சைப் புளுகு அன்றி வேறென்ன? ஒவ்வொரு இலக்கியத்திற்கும் உரை எழுதிய உரையாசிரியர்கள் உரைநடையிலன்றி வேறு எவ்வடிவில் எழுதினார்கள்?
தமிழ்மொழி குறைந்த பட்சமாக 2000 வருட வரலாறு உடையது. தமிழ் பாரம்பரியம் என்பது மிகவும் கல்வியறிவு மிக்கதும் இயல் இசை நாடக இலக்கியங்களை எழுதிச் சேமித்து வைத்திருந்ததுமான ஆரோக்கியம் மிகுந்த பாரம்பரியம் ஆகும். கிறுத்துவர்கள் சிலர் பொய்யாக்க் குறிப்பிடுவது போல வாய்மொழிப் பாரம்பரியம் கொண்டதல்ல. தமிழின் எழுத்திலக்கியப் பாரம்பரியமானது, சங்க காலங்களில் பண்டைய அறிஞர்களாலும், இடைக்காலத்தில் பிராம்மண மற்றும் சைவ அறிஞர்களாலும் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இளம்பூரணர், சேனவராயர், பேராசிரியர், பரிமேலழகர், நச்சினார்க்கினியார், தெய்வச்சிலையார் போன்ற பல அறிஞர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது இம்மகோன்னதப் பாரம்பரியம். இங்கே நாம் முகியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஆக்கிரமிப்புகளும் நிலையில்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழ்நிலைகளும் இருந்தபோதுகூட இப்பாரம்பரியம் கடைப்படிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது என்பது தான். சைவ ஆதீனங்கள் தமிழ்ச் செம்மொழி இலக்கியப் பாரம்பரியத்தை பாதுகாக்கப் பேருதவி புரிந்துள்ளார்கள்.
அதன் பிறகு நவீன காலக்கட்டங்களில்கூட உ.வே.சாமிநாத ஐயர், ராமச்சந்திர தீக்ஷிதர், நீலகண்ட சாஸ்திரி, பி.நாராயணசாமி ஐயர், ஆர்.ராகவ ஐயங்கார் போன்ற மிக்க ஈடுபாடு கொண்ட பிராம்மண சமூகத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர், சி.டபிள்யு.தாமோதரம் பிள்ளை, ஸ்வாமி விபுலானந்தா போன்ற தீவிர சைவ சமயப் பற்றாளர்களும் தமிழ்ச் செம்மொழியின் பாரம்பரியத்தை வளர்த்தும் பாதுகாத்தும் வந்தவர்கள் ஆவர். இவர்களுடையத் தியாகங்களுக்கும் பங்களிப்புக்கும் முன்னால் கிறுத்துவ பாதிரிகளின் பங்களிப்பு என்று சொல்லப்படுவது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், முன்னால் கூறப்பட்டவர்களுடைய பங்களிப்பில் மொழி மீது பக்தியும், மொழி வளர்ச்சியின் மீது ஈடுபாடும், மொழி சார்ந்த கலாசாரத்தின் மீது பற்றும், அவற்றிற்காகத் தியாகம் செய்யக்கூடிய மனப்பாங்கும் இருந்தன; கிறுத்துவப் பாதிரிமார்கள் பங்களிப்பில்(?) சுயநலமும் மதமாற்ற நோக்கமும் மட்டுமே இருந்தன.
அகராதி பற்றிய கதை
தமிழ் எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் ஆகியவற்றின் அகராதி முறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கிறுத்துவப் பள்ளிகளில் தான் முதலில் ஆரம்பமானது என்று விளம்புகிறது www.cathnewsindia.com என்கிற கிறுத்துவ இணையதளம். பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசம் என்பவர் தான் இதை கிறுத்துவப் பள்ளிகளில் ஆரம்பித்ததாகவும், அவரைத் தொடர்ந்து பாதிரியார் சிங்கராயர் டேவிட் ஆறு தொகுதிகள் கொண்ட அகராதியை அச்சிட்டு பின்னர் அவற்றை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வழங்கியதாகவும் இந்த இணைய தளம் கூறுகிறது.
பாதிரியார் ஞானப்பிரகாசம் அவர்களை ஒரு தமிழ் அறிஞராகவோ, வரலாற்று ஆசிரியராகவோ ஏற்றுக்கொள்வதில் இலங்கைத் தமிழ் அறிஞர்களிடையே இருவிதமான கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. இவருடைய பல ஆராய்ச்சி முடிவுகள் வரலாற்று ஆதாரங்கள் இல்லாதவ என்று சிலர் கூறுகிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயானது தமிழ் மொழியே என்று இவர் கூறியதை உதாரணமாகச் சொல்லுகிறார்கள்.
உண்மையில் கிறுத்துவ மிஷனரிகள் நம் மண்ணில் கால்வைப்பதற்கு முன்பே வழக்கத்தில் இருந்தன நிகண்டு போன்ற தமிழ் அகராதி முறைகள். “நிகண்டுகள் பாடல் வடிவில் இருக்கும். தமிழில் பல நிகண்டுகள் 11-ஆம் நூற்றாண்டு முதலே இருக்கின்றன. உதாரணமாக
பகவனே ஈசன் மாயோன்
பங்கையன் சினனே புத்தன்
என்பது நிகண்டில் வரும் பாடல் வரிகள். இப்படிப் பாடல்களாக இருந்தால் மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறுகிறார் பல அரிய மரபிலக்கிய சொல்லகராதிகளைத் தொகுத்தளித்தவரும், மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் நேரடி மாணவருமான தமிழறிஞர் புலவர் மணியன் அவர்கள். அவரே, “அகர வரிசைப்படி அகராதியை அமைக்கும் முறையை வெள்ளைக்காரர்கள் தான் கண்டுபிடித்தார்கள். அகர வரிசைப்படியான அகராதியை நமக்குக் கொடுத்தார்கள்” என்றும் கூறுகிறார். (தமிழறிஞர் புலவர் மணியன் அவர்களுடன் நேர்காணல் – ”ரசனை” (ஜூலை 2010) மாத இதழ் – திரிசக்தி குழும்ம், சென்னை)
உண்மை தான். ஆனால் அதற்காக, உரைநடை என்பதே பாதிரிமார்கள் அறிமுகம் செய்தது தான், அவர்கள் பங்களிப்பினால் தான் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் பிழைத்தெழுந்தது, என்றெல்லாம் மிகைபடுத்திக் கூறுவதன் பின்னே உள்ள நோக்கம் தெளிவாகத் தெரிகிறதே! மாபெரும் இலக்கியங்களுக்கு உரை எழுதிய தமிழர்கள், நிகண்டுகள் எழுதிய தமிழர்கள், நாளடைவில் அகர வரிசைப்படியும் அகராதி தயாரித்திருக்க மாட்டார்களா என்ன?
மறுக்கப்பட்ட அச்சுரிமை
உண்மை என்னவென்றால், அயல்நாடுகளிலிருந்து வந்த வெள்ளைக் கிறுத்துவர்கள் அச்சு இயந்திரங்களையும் அச்சடிக்கும் முறையையும் தான் அறிமுகம் செய்தார்கள். அதுவும் எதற்காக? மதமாற்றம் விரைவாக நடக்கவேண்டும் என்பதற்காக.
காகிதமும், அச்சும் அறிமுகம் ஆவதற்கு முன்னால், அதாவது வெள்ளைக்காரர்கள் நம் தேசத்திற்கு வந்து அவற்றை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு வரை, தமிழில் மதிப்பு மிக்க நூல்களெல்லாம் பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, வரிசையாக்க் கோர்க்கப்பட்டு, மரம் அல்லது செப்புத் தகடுகளை மேலும் கீழுமாகக் கொடுத்து கட்டப்பட்டு இருக்கும். ஓலைச் சுவடிகளில் எழுதுவதென்பது பரவலாகவும் பொதுவாகவும் இருந்த ஒரு பழக்கம் என்றாலும், ஒரு சமயத்தில் ஒரு பிரதி தான் செய்யமுடியும். மற்றொரு பிரதி எடுக்க வேண்டுமென்றால் மீண்டும் திருப்பி ஓலைச் சுவடியில் எழுத வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தனக்கு வேண்டிய பாடங்களை ஆசிரியரிடமிருந்து தங்களுக்குறிய பிரதிகளாக மீண்டும் எழுதித் தான் எடுத்துக் கொண்டார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட விவரத்தை பார்க்க வேண்டுமென்றால், கட்டைப் பிரித்து, குறிப்பிட்ட சுவடியைத் தேடி எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஓலைச் சுவடிகளில் எழுதுவதும், பிரதி எடுப்பதும், குறிப்பெடுப்பதும், தமிழ் இந்துக்களுக்குச் சுலபமாக இருந்ததே ஒழிய, அன்னியப் பாதிரிமார்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் இயலாமை அவர்களின் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடைஞ்சலாகவும் இருந்தது. தங்களுடைய பிரசாரக் கருத்துக்களையும், விவிலியக் கருத்துக்களையும், எழுத்து வடிவில் மக்களிடம் சேர்த்தால் ஆன்ம அறுவடைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அச்சு இயந்திரத்தைத் தருவித்தார்கள் பாதிரிமார்கள். இந்தியாவிலேயே அச்சில் வந்த முதல் மொழி தமிழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தரங்கம்பாடியில் தான் முதன் முதலில் ஜெர்மானிய ஒத்துழைப்புடன் டச்சு நிறுவனம் தமிழில் விவிலியத்தை அச்சிட்டது என்பதை பார்த்தலோமியோ ஸீகன் பால்கு என்கிற பாதிரியைப் பற்றிய விவரத்தில் பார்த்தோம். அதே சமயத்தில் ஆங்கிலேயர்கள் சென்னை-வேப்பேரியில் ஒரு அச்சகத்தை நிறுவினர். அதன் பிறகு, பெருமளவில் மதமாற்றம் செய்து ஆன்மாக்கள் அறுவடை செய்வதற்காக, அச்சகங்கள் மெதுவாக ஆங்காங்கே நிறுவப்பட்டன. இந்தியாவில், அச்சிடுதல் வரலாற்றின் துவக்கம் வேதனை மிகுந்ததாகும். அச்சகங்களை வைத்திருந்த கிறுத்துவ மிஷனரிகள் இந்திய இலக்கியங்களையும் உரைநடை நூல்களையும் அச்சிடுவதைத் தவிர்த்து அவற்றை அடக்கி வைத்தனர். இந்திய மொழிகளில் இலக்கியங்கள் மற்றும் உரைநடைகளின் முன்னேற்றத்தை அடக்கு முறையில் தடுத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியர்கள் அச்சகம் தொடங்குவது, இந்திய நூல்களை அச்சிடுவது ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டம் ஒன்றையும் அமல்படுத்தினர். அன்னியரும், கிறுத்துவ மிஷனரிகளும் மட்டுமே அச்சிட அனுமதிக்கப் பட்டனர்.
பின்னர் பல வருடங்கள் கழித்து ஆளுனராக இருந்த தாமஸ் மன்ரோவும் அரசு அதிகாரியாக இருந்த எல்லிஸ் துரையும் மெற்கொண்ட நடவடிக்கைகளினால் 1835-ஆம் ஆண்டு தான் சட்டத் திருத்தம் கொண்டு வந்து இந்தியரும் அச்சகங்கள் வைத்து அச்சிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தடை இல்லாதிருந்தால் 18-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழில் இலக்கியங்களும் உரைநடைகளும் ஏராளமாகப் படைக்கப் பட்டிருக்கும். அடக்கு முறையில் அவற்றைத் தடை செய்து மதமாற்றத்திலும் பெரிதும் ஈடுபட்டு வெற்றி கண்டனர் கிறுத்துவப் பாதிரிமார்கள். (Christianity in India – A Critical study: – Vivekananda Kendra Prakashan)
உண்மை இவ்வாறிருக்க, ஏதோ உரைநடையையே கிறுத்துவப் பாதிரிகள் தான் தமிழருக்கு அறிமுகம் செய்து வைத்துத் தமிழ் மொழிக்கு பெரிய சேவை செய்துள்ளனர் என்று பொய்ப்பிரசாரம் செய்வதை என்னவென்று சொல்வது? தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு அச்சகத்தை சொந்தமாக நிறுவவோ, புத்தகங்களை சொந்தமாக அச்சிடவோ உரிமை இல்லை என்று சட்டம் போட்டு, தமிழ் இலக்கியத்தையும், கலாசாரத்தையும் பெரிதும் அழித்து இருக்கிறார்கள் என்பது மேற்கூறப்பட்ட உண்மையான செய்திகளிலிருந்து தெரிகிறதல்லவா? இது தான் கிறுத்துவப் பாதிரிமார் தமிழுக்குச் செய்த தொண்டின் லட்சணம்!

(தொடரும்…)

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

தமிழ்ச்செல்வன்


இத்தாலிய ஐயரும் அவரின் திருவாசக/மாணிக்கவாசக இழிவுரைகளும்
இவருக்கு அடுத்தபடியாக ஜி.யு.போப் என்கிற போப்பையர் (1820-1907). இவர் திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்றவற்றை மொழிபெயர்த்தவர். இவர் திருவாசகத்தில், கிறுத்துவ இறைத்தூதர் செயிண்ட் பால் மற்றும் அசிசி நாட்டுத் துறவி ”புனித” பிரான்சிஸ் ஆகியோரின் கருத்துக்களைக் கண்டதாகவும், மாணிக்கவாசகப் பெருமானிடம் இவ்விருவரையும் காண்பதாகவும் கூறியுள்ளார். இந்தக் கூற்றை ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக எடுத்துக்கொண்டு சில அப்பாவித் தமிழறிஞர்கள் பூரித்துப் போகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாகச் சில சைவ மடங்கள் கூட இதைப் பெருமையாக நினைக்கின்றன.
சைவ சித்தாந்தத்தில் மிகவும் ஈடுபாடும் புலமையும் கொண்ட ஆராய்ச்சியாளர், தமிழறிஞர் முனைவர் திரு முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜி.யு.போப்பின் மறுமுகத்தை தோலுரித்துக் காட்டுகிறார். ஜி.யு.போப் பின்வருமாறு கூறியுள்ளார்: “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. இதை சுட்டிக்காட்டிய முனைவர் அவர்கள், “தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது” என்று விளக்குகிறார்.
முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் போப்பையரைப் பற்றிப் பின்வருமாறு கூறி, “ஜி.யு.போப்பைப் பற்றி ஒரு கதை திருவாசகப் பேச்சாளர்களால் கூறப்படுகிறது. அவர் தமிழகத்தில் ஒருவருக்குக் கடிதம் எழுதியபோது, தன் வழக்கப்படி திருவாசகப் பாடல் ஒன்றினை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்து சில எழுத்துக்களை அழித்து விட்டதென்றும், திருவாசகத்தால் ஏற்பட்ட புனிதக் கண்ணீர் என்பதால் அழிபட்ட எழுத்துக்கள் மேல் மீண்டும் அவற்றை எழுதாமலேயே கடிதத்தை அனுப்பினார் என்றும் கூறுவர். ஆனால் இன்று வரை, அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே! அவரும் ஏன் செய்யவில்லை?” என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்.
இவ்விட்த்தில் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் பற்றிச் சிலாகித்துக் கூறியதையும் முனைவர் குறிப்பிடுகிறார். கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள், “போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்கு பொக்கிஷங்கள் அடங்கிய திருவாசகத்தின் குகைக்கதவுகளைத் திறந்து விட்டது சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்த்தோடு மட்டுமல்லாமல் தங்களுடைய பழமை குறித்துப் பெருமை கொள்ளுமாறு அவர்களைத் திடுக்கிடவும் செய்தது” என்று கூறியதை நோக்கும்போது, அன்றைய தமிழறிஞர்களின் அப்பாவித்தனமும், ஐரோப்பிய மிஷனரிகளின் உண்மையான நோக்கத்தை அறியாத வெகுளித்தனமும் தெரிகிறது. திரு பாலசுப்ரமணியம் அவர்களும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளவர் என்பதும், மேற்கண்ட ஜி.யு.போப்பின் கடிதக்கதையைப் பற்றி அவர் எந்தவிதமான குறிப்பையும் தரவில்லை என்பதும் இங்கே குறிப்பிட்த்தக்கது.
முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஆதாரங்களுடன் “தமிழ்ஹிந்து” இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், மானிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் எழுதிய பதிகத்துள் ஒன்றான ”நீத்தல் விண்ணப்பம்” என்கிற பதிகத்தை ஜி.யு.போப் எப்படி திரித்து எழுதி அதற்கு அபாண்டமான ஒரு விளக்கமும் கொடுத்து மாணிக்கவாசகப் பெருமானை அவமதித்துள்ளார் என்பதையும் பின்வருமாரு விளக்குகிறார்:
“மாணிக்கவாசகப்பெருமானை திருத்துறைப்பூண்டியில் ஆட்கொண்ட இறைவன் சிவபெருமான், ‘யாத்திரை செய்து திருக்கயிலாயம் வந்தடையுங்கள்; நீங்கள் போய் வழிபடும் இடங்களிலெல்லாம் நான் குருவடிவாய் காட்சி தருவேன்’ என்று சொல்லிய பின்னர், யாத்திரை தொடங்கி உத்தரகோசமங்கை வந்தடைந்த மாணிக்கவாசகர் இறைவனின் காட்சியைப் பெறாமல் பிரிவாற்றாமையால் வருந்தி ‘நீத்தல் விண்ணப்பம்’ என்கிற பதிகத்தைப் பாடுகிறார். இக்கட்டத்தை ஜி.யு.போப், ‘உத்தரகோசமங்கையில் நிலவிய சூழல் மாணிக்கவாசகரின் தவவாழ்க்கைக்குச் சோதனையாக இருந்தது. அவர் இளமையுடன் மதுரையில் வசித்து வந்த போது பாண்டிய மன்னனின் பேரன்பைப் பெற்றும் மகிழ்ச்சியான நிலையில் இல்லற வாழ்வில் ஈடுபட்டதும் அவருக்கு நினைவு வந்ததால், கோவிலில் இருந்த தேவரடியார்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்த சூழலில், மனமயக்கத்தினாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள இயலாததாலும் கழிவிரக்கம் கொண்டு பாடிய ஒப்புதல் வாக்குமூலமே நீத்தல் விண்ணப்பம் எனும் பதிகம்’ என்று அப்பதிகத்தின் அறிமுகவுரையில் எழுதி தமிழ் இந்துக்களுக்கு பேரதிர்ச்சி தருமாறு மாணிக்கவாசகப் பெருமானை அவதூறு செய்துள்ளார்”.
ஜி.யு.போப் கூறியதாவது: “From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, – if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.”
முனைவர் மேலும், “உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி அவர்களுக்காக இறைவனிடம் மனமுருகி வேண்டுதல் இந்து மத்த்தின் பக்தி இலக்கிய மரபு. அதன்படியே, வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக்கொள்ளும் இயல்பைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு இறைவனிடம் மன்றாடுகிறார் மாணிக்கவாசகர். அதைத் திரித்து ஜி.யு.போப் கூறும் இந்த வரலாறு மாணிக்க வாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன்மானம் உள்ள தமிழ் பற்றாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அறிஞர்களும் போப்புக்குப் புகழ்மாலை சூட்டி மாணிக்கவாசகரை ஒழுக்கக்கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?” என்று கேட்கிறார்.
இவ்விட்த்தில், திருவாசகமணி அவர்கள் போப்பின் தூஷணைத் தெரிந்திருந்தும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட்தைக் காடும் விதமாக, “போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்” என்று விளக்குகிறார் முனைவர். (Ref: – http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)
பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரை ஆழ்வார்களும், நாயன்மார்களும், மற்ற இலக்கிய கர்த்தாக்களும், தங்கள் மனதிற்குகந்த தெய்வங்களை நாயகனாகவும், நாயகியாகவும் பாவித்து ஆங்காங்கே சிற்றின்பச் சுவையுடனும் நவரசங்களுடனும் காவியங்களை வடித்து அதன் மூலம் பேரின்ப நிலையை வேண்டி காவியங்களைப் படைக்கும் வழக்கமும் இருந்த்து.
இங்கே திருவாசகத்தைப் பொறுத்தவரை மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பமானது ஜி.யு.போப் சொன்னது போல ஒப்புதல் வாக்குமூலம் அன்று. முனைவர் சுட்டிக் காட்டியதைப்போல உலகத்தார் செய்த பாவங்களைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு, பேரின்ப நிலையாகிய முக்தி வேண்டிப் பாடும் பாடலாகத்தான் இருக்கிறது. இறுதியில் மாணிக்கவாசகர் மாயையான இப்பிரபஞ்சத்திலிருந்து தன்னை விடுவித்து வீடுபேறு தருமாறு விண்ணப்பிக்கிறார்.
அடிப்படையில் ஒரு படைப்பை எப்படிப் புரிந்துகொள்ளுகிறோம், எவ்வாறு அர்த்தம் கொள்ளுகிறோம் என்பது முக்கியமான விஷயம். இங்கே ஜி.யு.போப் செய்துள்ளது அப்பட்டமான கிறுத்துவ அடிப்படைவாதம் அன்றி வேறில்லை.
சைவசித்தாந்தத்தைப் போற்றுமிடத்து உருவ வழிபாட்டைக் குறையும் கூறியுள்ளார் ஜி.யு.போப். சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அவ்வளவிற்கு ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார். அவர் கூறியதாவது: “There is in them (Saiva Saints) a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in Saiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen one another. The more philosophical and refined the Saivite becomes the more enthusiastic does he often appears to be in the performance of the incongruous rites of the popular worship”.
இங்கு உருவ வழிபாட்டை முட்டாள் தனமான செயல் என்று தூஷணை செய்வதன் மூலம் ஜி.யு.போப் மீண்டும் தன்னுடைய கிறுத்துவ தீவிரவாத்த்தைத்தான் முன்நிறுத்துகிறார். “குரு ஸ்துதியே முழுவதுமாக இருக்கும் திருவாசகத்தில் உருவ வழிபாட்டைக் கொச்சை படுத்துகின்ற போப்பின் செயல் சரி தானா” என்றும் கேட்கிறார் முனைவர்.
தன்னுடைய திருவாசக மொழிபெயர்ப்பில் ஜி.யு.போப் மீண்டும் ஒரு இட்த்தில் மாணிக்கவாச்கரை அவதூறு செய்வதைச் சுட்டிக்காட்டுகின்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள், “மாணிக்கவாசகருக்காக இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். இறைவனின் திருவிளையாடலைப் பின்னர் அறிந்துகொண்ட மன்னன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டு அவர் விருப்பப்படி அவர் பாண்டிய நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கிறான். ஆனால் இவ்வரலாறை, ‘மதுரைக்கோவிலுக்கும் தில்லைக்கோவிலுக்கும் பிரச்சனை இருந்தது. மதுரையை விட்டுத் தில்லைக்குச் சென்ற மாணிக்கவாசகர், பின்னர் மதுரைக்குத் திரும்பவே இல்லை. குதிரை வாங்குவதற்காக மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் கவர்ந்து கொண்டதால் மன்னன் அவரை மன்னிக்கவேயில்லை என்பதனால் அவர் மதுரைக்குத் திரும்பவில்லை’ என்று திரித்துக் கூறியுள்ளார் போப்” என்று கூறுகிறார்.
ஜி.யு.போப் அவர்களின் கூற்று: “It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses.” திருவாசகத்தின் மீதான போப்பின் பற்றும் மாணிக்கவாசகரின் மீதான அவருடைய அன்பும் என்னவென்று சொல்வது!
முனைவர் மேலும் சொல்கிறார், “போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். (Ref: http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)
இத்தாலிய ஐயரின் திருக்குறள்/திருவள்ளுவ இழிவுரைகள்
ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டார். போப் வாழ்ந்த காலத்தில் வள்ளுவர் பற்றி, “அவருக்குக் கப்பல் தலைவன் ஒருவர் நண்பராக இருந்தார்” என்கிற ஒரு கர்ண பரம்பரைக் கதை நிலவி வந்த்து. இதை அப்படியே ஏற்றுக்கொண்டார் போப். அதோடு மட்டுமல்லாமல், வள்ளுவர் காலத்திலேயே மைலாபூரிலும் அதைச் சுற்றியும் பல குடும்பங்களை புனித தாமஸ் கிறுத்துவ மத்த்திற்கு மாற்றியுள்ளார் என்றும் நம்பியவர் போப். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, தன்னுடைய திருக்குறள் மொழிபெயற்பிற்கு பின்வருமாறு முன்னுரை வரைந்துள்ளார் ஜி.யு.போப்:
“வள்ளுவர் எல்லா வகைகளிலும் அறிவைச் சேகரிப்பதில் முனைந்து வந்தார். அவருடைய ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும், அவர் நண்பரும் கப்பல் தலைவருமான அவர் அன்பர் வள்ளுவருக்குச் செய்தி அனுப்புவார். பல வெளிநாட்டார் அக்கப்பல் தலைவர் தோணியிலேயே ஸ்ரீலங்கா மூலம் மயிலைக்கு வந்திருக்கலாம். அப்படி வந்த கிறுத்துவர்களிடமிருந்து அவர்களோடு கடற்கரையில் உலாவி வந்த வள்ளுவர் செய்திகளைச் சேகரித்த்தை நான் என் மனக்கண் முன்னால் காண்கிறேன். கிறுத்துவக் கோட்பாடுகளை அதிலும் அலெக்சாந்திரியக் கோட்பாடுகளையும் நுணுக்கங்களையும் நாளும் நாளும் வள்ளுவர் உசாவி அறிந்து வந்திருக்கிறார். அவற்றைத் தம் திருக்குறளில் வடித்து வைத்திருக்கிறார். வள்ளுவர் வாழ்ந்து வந்த இட்த்திற்குப் பக்கத்தில் நிலவி வந்த கிறுத்துவக் கோட்பாட்டுத் த்த்துவம் குறளில் தெளிவாகத் தெரிகிறது. வள்ளுவர் கி.பி.800க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்தவர். கிறுத்துவ மறை நூல்கள் நிச்சயமாக அவர் வரைந்த குறளுக்கான ஆதாரங்களில் ஒன்று. கிறுத்துவ வேத்த்திலிருந்தே வள்ளுவர் உத்வேகம் பெற்றிருக்கிறார்”. (சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் டி.என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வியத்தகு ஆரிய நாகரிகம்’ என்ற கட்டுரை – “தமிழக அந்தணர் வரலாறு” தொகுதி-2 பக்கம் 641-643. – எல்.கே.எம். ப்ப்ளிகேஷன், சென்னை, ஜூன்2005)
ஜி.யு.போப் திருக்குறளுக்கு அளித்துள்ள இந்த அருவருக்கத் தக்க முன்னுரையானது, அவருடைய கிறுத்துவத் தீவிரவாத மனப்போக்கையும், அவருடைய தமிழ் பற்றின் பின்னால் இருந்த தீய நோக்கத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.
தமிழ் மாணவன் கதை
மேலும் ஜி.யு.போப் பற்றி தமிழகத்தில் மற்றொரு கட்டுக்கதைப் பரப்பப் பட்டுள்ளது. ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று போப் தனது கல்லறையில் எழுதச்சொல்ல, அவ்வாறு எழுதியது இன்றும் உள்ளது என்பது தான் அந்தக் கதை.
“சில ஆர்வக்கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையைச் சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய்ப்பார்த்து அப்படி ஒன்றும் இல்லை, அதச் சாதாரணக் கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும் பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாக மதிப்பிற்குறிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது” என்று கூறுகிறார் ஜடாயு என்கிற தமிழ் வலைப்பதிவர் (jataayu.blogspot.com ) – மேலும் ஜி.யு.போப்பின் கல்லறைப்படங்களை இங்கே காணலாம். http://www.flickr.com/photos/93039296@N00/759184087/
மேற்கண்டவாறு மாணிக்க வாசகப் பெருமானையும், தெய்வப்புலவர் திருவள்ளுவரையும், அவதூறும் அவமரியாதையும் செய்து, அவர்களது அற்புதப் படைப்புகளையும் கொச்சைப் படுத்திய போப்பிற்கு சென்னைக் கடற்கரையில் சிலை வைத்துக் கொண்டாடியுள்ள திராவிட இனவாதக் கூட்டம் தாங்கள் நடத்திய செம்மொழி மாநாட்டில் சைவ வைணவ இலக்கியங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளாமல் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் கிறுத்துவப் பாதிரிமார்களுக்குப் புகழாரம் சூட்டியதிலும் ஒன்றும் ஆச்சரியமில்லையே! இந்த லட்சணத்தில் மாநாட்டின் இலச்சினையில் திருவள்ளுவர் சிலை வேறு!
(தொடரும்…)

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

தமிழ்ச்செல்வன்


கட்டுரைத் தொடரின் பொருள்
நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், அதன் தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் வாயிலாகவும், கிறுத்துவப் பாதிரிமார்கள் வந்து தமிழுக்கு உயிர் கொடுத்திருக்காவிட்டால் தமிழ் மொழி இறந்து போயிருக்கும் என்பது போலவும் ‘தமிழ் உரைநடை’ என்பதே கிறுத்துவப் பாதிரிமார்கள் தமிழ் மொழிக்குக் கொடுத்த கொடை என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரசாரத்திற்கு, மாநாட்டை நடத்திய திராவிட இனவாதக் கூட்டமும், மாநாட்டிற்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பங்காற்றிக் கொண்டு, அக்கூட்டதிற்கு ஜால்ரா போட்ட கூட்டமும், பூரண ஆதரவு அளித்தன. ஆனால் உண்மையான தமிழ்பற்று கொண்டவர்களும், நடுநிலையாளர்களும், பாரத மொழிகளுக்கிடையே உள்ள உறவும் அவ்வுறவினால் பின்னிப் பிணையப்பட்டுள்ள மகோன்னதமான பாரத கலாசாரத்தின் பெருமையை உணர்ந்தவர்களும், தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிறவர்களும், இப்பிரசாரத்தை பொய்யென அடியோடு வெறுத்துப் புறந்தள்ளுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. (cathnewsindia மற்றும் Hindu மற்றும் expressbuzz ).

இந்தப் பொய்ப்பிரசாரத்தைப் பரப்புபவர்கள் தமிழ் மொழிக்கு உயிர்கொடுத்தவர்களாக முன் நிறுத்துபவர்கள் ஜி.யு.போப், கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி, ராபர்ட் கால்டுவெல், பார்த்தலோமியோ ஸீகன் பால்கு, டாக்டர் சாமுவேல் கிரீன், இரேனியஸ் மற்றும் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியவர்கள்தான். மேற்சொன்னவர்களில் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் எல்லிஸ் துரை என்று வழங்கப்பட்ட ஆங்கிலேய அரசு அதிகாரியாக இந்தியாவிலும், சாமுவேல் கிரீன் மருத்துவராக இலங்கையிலும் பணியாற்றி பாதிரிமார்களின் மதமாற்றத்திற்குத் துணை நின்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் பெருமளவில் மதமாற்றம் புரிந்து இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை கிறுத்துவ தேசமாக ஆக்கவேண்டும் என்கிற “புனித” நோக்கத்தோடு இங்கே காலூன்றியவர்கள் தான். எழுத்தாளர் முனைவர் கே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தன்னுடைய “ஐரோப்பிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கு” (The contribution of European scholars to Tamil- K. Meenakshisundaram) என்ற புத்தகத்தில் கிறுத்துவ மிஷனரிகள் காலத்தைப் ”பொற்காலம்” என்று வேறு போற்றுகிறார்! இந்தப் புத்தகமானது அவர் 1966-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்திற்காகத் தன்னுடைய வியாசமாக (Thesis) அளித்தகட்டுரைதான் இது. (http://www.hindu.com/2010/06/25/stories/2010062554000700.htm ) எனவே இந்தப் பிரசாரம் உண்மைதானா என்று ஆராய்ந்து நோக்குவது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை பயக்கும்.

மிஷனரிகளும் அவர்கள் நோக்கமும்

இம்மண்ணின் மைந்தர்களான தமிழ் இந்துக்களிடம் உரையாட இயலாததாலும், பேச்சுத் தொடர்பும் கருத்துப் பரிமாற்றமும் வைத்துக்கொள்ள முடியாததாலும், தங்களின் முக்கியக் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடையூராக இருப்பது மொழிப்பிரச்சனை தான் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். தமிழர்களிடம் பேசாமலும், கருத்துக்களைப் பரிமாற்றாமலும் அவர்களை மதமாற்றம் செய்ய முடியாது என்கிற ஒரே காரணத்தால்தான் தமிழ் மொழியைக் கற்றனர். ஆயினும், இயல், இசை, நாடகம் என்று அனைத்தும் ஊறிய ஆன்மீக மற்றும் காலசாரப் பாரம்பரியம் மிக்க தமிழ் இந்துக்களை வெறுமனே தமிழ் மொழியில் பேசி மதமாற்றம் செய்ய முடியாது என்பதை விரைவில் புரிந்துகொண்ட காரணத்தால் தான், தமிழ் இலக்கியத்தின் பால் அவர்கள் கவனம் சென்றது.

ஒரு தேசத்தின் மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படித்தால் தான் அத்தேசத்தின் பண்பாடும், கலாசாரமும், ஆன்மீகப் பாரம்பரியமும் புரிபடும். அப்போது தான் அதற்கு ஏற்றாற் போல் தங்களுடைய மதமாற்றத் தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிற களவு மனப்பான்மையுடன் தான் இவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றார்களே தவிர, தமிழின் பால் கொண்ட ஈர்ப்போ, ஈடுபாடோ, பற்றோ, பாசமோ அல்ல.

மேலும், இந்த நாட்டின் பண்பாடும், கலாசாரமும், பாரம்பரியமும் எப்பேர்பட்டன, எவ்வாறு இருக்கின்றன என்பதை இவர்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, இவர்களை ‘மதமாற்றம்’ எனும் “புனித” ஊழியத்திற்கு அனுப்பிய நிறுவனங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றைத் தங்கள் மொழிகளில் மொழிபெயற்பும் செய்தார்கள். தலைமை நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரமும் பாரம்பரியமும் புரிந்தால் தான், அவற்றை உடைத்து மதமாற்றம் செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று உணர்வர். அதற்கு ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என்பதையும் புரிந்து கொள்வர். அப்போது தான் தாம் வந்த வேலை முடிவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என்கிற நோக்கிலும் இப்பாதிரியர்கள் செயல்பட்டுள்ளனர்.
ஆப்பிரஹாமிய மதங்கள் “அரசியல் மதங்கள்”; உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் முதன்மையான நோக்கம்; மதத்தைப் பரப்புவதற்காக அரசியல் சக்தி பெற்று ஆட்சியமைக்க முற்படுவார்கள்; என்கிற உண்மைகளைப் புரிந்துகொண்டோமானால், மேற்கண்ட மத போதகர்கள் எதற்காக நம் மண்ணில் இறங்கினார்கள் (இறக்கப்பட்டார்கள்), எதற்காக நம் மொழியைக் கற்று நம் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார்கள் என்பதை உணர முடியும்.
ஐரோப்பிய நிறுவனங்கள்
16-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த கிறுத்துவ ஆக்கிரமிப்பு மெதுவாகப் பரவியது. போர்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஜெர்மானிய மற்றும் ஆங்கிலேய கிறுத்துவ மத நிறுவனங்கள், வியாபார நோக்கிலும், மத ஊழிய நோக்கிலும் கோவா, கேரளம், தமிழகம், வட கிழக்கு, வங்காளம் என்று இந்தியாவின் பல இடங்களில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் பின்னே அந்நாடுகளின் படையெடுப்பும் தொடர்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் காலத்திலிருந்தே அடக்குமுறை ஆரம்பமாகிவிட்டது. 1858-ஆம் ஆண்டு அரசியல் சக்தி பெற்று ஆங்கிலேயர் ஆட்சி அமைத்தனர். அரசியல் சக்தி அடைந்தவுடன் மத நிறுவனங்களுக்கு ஏராளமான நிலங்களும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தது ஆங்கிலேய அரசாங்கம். அரசு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் விரைவில் பலன் கிட்டும் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். சுதந்திரம் பெற்ற பின்னும் இந்தியர்கள் விழித்துக் கொள்ளவில்லையாதலால், அரசியல் சக்தியும், ஆட்சி பலமும் அவர்கள் கையிலேயே தொடர்கின்றது என்பதை, சோனியாவின் தலைமையின் கீழும், அமெரிக்காவின் ஆலோசனையின் பேரிலும் ஆட்சி நடப்பதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் திராவிட மாயையில் கட்டுண்டு கிடப்பதற்கு அடித்தளம் இட்டவர்கள் அன்னிய தேசங்களிலிருந்து வந்த பாதிரிமார்கள் தான் என்றும், ஹிந்து மதம் உயிரோட்டத்துடன் இருக்கும் வரை இந்தியரை அடிமைப் படுத்த முடியாது என்பதே கிறுத்துவ மிஷனரிகளின் நோக்கம் என்றும் பத்திரிகையாளர்/எழுத்தாளர் சுப்பு அவர்கள் தன் “திராவிட மாயை” புத்தகத்தில் கூறுகிறார். “டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப்பட்டினத்திலும் (1647), நாகைப் பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்கு கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620) தங்கள் முகாமை ஏற்படுத்தினர்.” என்று கிறுத்துவ ஆக்கிரமிப்பின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டிய சுப்பு அவர்கள், “ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறுத்துவப் பாதிரிமார்கள் இறங்கிய போது, இன்னொரு பக்கம் கிறுத்துவத்தை முன்னிலைப் படுத்தாமல் இந்துக்களைப் பிளவு படுத்தும் முயற்சியும் தொடங்கியது” என்று கூறி, “கால்டுவெல்லின் தாயாதிகள்” என்கிற அத்தியாயத்தில் தமிழகத்தில் கிறுத்துவப் பாதிரிகள் மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கைகளையும், ஹிந்துக்களைப் பிளவு படுத்த அவர்கள் கையாண்ட யுக்திகளையும் விளக்குகிறார். [திராவிட மாயை (இரண்டாம் அத்தியாயம்; பக்கம் 20-28) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]
ஆகவே, 16-ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் கால் வைத்த பாதிரிமார்கள் மதம் வளர்க்க வந்தவர்கள், அரசியல் சக்தி பெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வந்தவர்கள், அதற்காகத் தான் நம் மொழியைக் கற்றார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் இவர்களுக்கே உரிய களவு மனப்பான்மையினால், மதமாற்றம் செய்வதற்காகக் “கலாசாரக் களவு” (Inculturation) முறையும் செய்தார்கள். (Ref: ‘Inculturation’ – A danger to communal amity! – http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8512 )
ரோமானிய பிராம்மணர் நொபிலி
இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் இத்தாலி நாட்டில் இருந்து வந்த ராபர்ட்-டி-நொபிலி (1577-1656) என்கிற கிறுத்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம்/தமிழ் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொண்டு தன்னை ’ரோமாபுரி பிராம்மணர்’ என்றும் சொல்லிக்கொண்டார். காவியுடை தரித்து, சிறிய சிலுவை இணைத்த ஒரு பூணூலையும் அணிந்துகொண்டு, நெற்றியில் சந்தனம் இட்டுக்கொண்டு, மதுரையில் ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக் கொண்டார். உணவுப் பழக்கத்தில் சுத்த சைவராகவும் மாறினார். நடப்பதற்குக் கால்களில் மரத்தாலான பாதுகைகளே உபயோகித்தார். பல நூற்றண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன, கர்த்தர் எனும் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட, வேதம்தான் பைபிள் என்று சாதித்தார். காவியுடை தரித்து, பூணூல் அணிந்து, குடில் ஒன்றில் ஆசிரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய கலாசாரக் களவு முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு அந்தச் சமயத்தில் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. இவருடைய மதமாற்ற வழிமுறைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால், மதுரையிலிருந்து வெளியேறி, திருச்சி, சேலம் முதலிய ஊர்களுக்குச் சென்று இறுதியில் சென்னை சாந்தோம் அருகே ஒரு சிறிய வீட்டில் 1656-ஆம் ஆண்டு இறந்து போனார். (Ref: – “The Portuguese in India”, Orient Longman, Hyderabad, 1990 and “Christianity in India-A critical study” – Vivekananda Kendra Prakasham).
இவர், 15 புத்தகங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவை மட்டுமல்லாமல் போர்சுகீசிய-தமிழ் அகராதி ஒன்றையும் தயாரித்துள்ளார். மேலும் தமிழில் பல விவிலிய வார்த்தைகளையும் புகுத்தியிருக்கிறார். இதனால் ‘தமிழ்’ வளர்ச்சி அடைந்ததா அல்லது ‘கிறுத்துவம்’ வளர்ச்சி அடைந்ததா என்று பார்த்தால் கிறுத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கும்.
தீண்டாமையைக் கடுமையாக ஆதரித்த இவர், “கிறுத்துவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை, கிறுத்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப்போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறுத்துவ சமயம் பரவுவதற்கு இடையூராக இருப்பது இப்போதனையே” என்று 1650-ல் தான் எழுதிய ஒரு கடிதத்தில் தன் குறிக்கோளைத் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் நொபிலி என்று காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘கிறுத்துவமும் சாதியும்’ என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். [திராவிட மாயை (முதல் அத்தியாயம்; பக்கம் 19) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]
இத்தாலிய முனிவர் பெஸ்கி
இவருக்கு அடுத்தவர் கான்ஸ்டண்டைன் ஜோசெஃப் பெஸ்கி (1680-1746) என்கிற வீரமாமுனிவர். ராபர்ட்-டி-நொபிலி தன்னைப் பிராம்மணர் என்று சொல்லிக் கொண்டதைப்போல் இவர் தன்னை முனிவராக்கிக் கொண்டார். அதுவும் வீரமுள்ள மாமுனிவராக! அவரைப்போலவே, இவரும் தன்னை ஒரு ஹிந்து சன்யாஸியைப் போலக் காட்டிக்கொண்டார். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மதமாற்றங்களில் ஈடுபட்டார். இவர் தமிழுக்குச் செய்த தொண்டு “தேம்பாவணி” என்னும் உரைநடையில் எழுதப்பட்ட புனித ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு. கம்ப ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து அதைப்போல் கிறுத்துவத்திலும் ஒரு காப்பியம் வேண்டும் என்று எண்ணி தேம்பாவணியை இயற்றினாராம். தேம்பாவணியால் தமிழ் வளர்ந்ததா அல்லது கிறுத்துவம் வளர்ந்ததா என்று பார்த்தால், கிறுத்துவம் வளர்ந்து, புனித ஜோசப் பெயரும் தமிழகத்தில் நிலைநாட்டப் பட்டது, என்பதுதான் உண்மை. இந்தத் தேம்பாவணியால் தமிழுக்கு எதுவும் பிரயோசனம் இருந்ததாகத் தெரியவில்லை. இவர் அதோடு நிறுத்தவில்லை தன் தமிழ்ப் பணியை! நம் பாரத தேசத்தில் வேத காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வந்த குரு-சிஷ்ய பரம்பரை என்று போற்றப்பட்ட கல்வி முறையைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும்’ என்ற நூலையும் எழுதினார். முனிவர் என்று பெயர் வைத்துக்கொண்டு குரு-சிஷ்ய பரம்பரையைக் கிண்டல் செய்தவரைத் தமிழுக்குச் சேவை புரிந்துள்ளார் என்று கொண்டாடிய திராவிட இனவெறியாளர்கள், இவருக்குச் சென்னைக் கடற்கரையில் சிலையும் எடுத்தனர்.
ஜெர்மானிய ஐயர் ஸீகன்பால்கு
ஜோஸஃப் பெஸ்கி காலத்தைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, மற்றொரு பாதிரி பார்த்தலோமியோ ஸீகன் பால்கு (1683-1719) என்கிற ஸீகன் பால்கு ஐயர். ஆம், பிராம்மணர், முனிவர் வரிசையில் அடுத்ததாக ஐயர்! இவர் ஜெர்மனியிலிருந்து வந்த பிராடஸ்டண்டு பாதிரியார். 1706-ல் தரங்கம்பாடியில் வந்து இறங்கிய ஸீகன்பால்கு, அங்கு ஏற்கனவே இருந்த ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த அச்சு இயந்திரங்களை வைத்து அச்சகம் நட்த்திக்கொண்டிருந்த ஒரு டேனிஷ் கத்தோலிக்க நிறுவனம் சார்பாக, விவிலியத்தின் புதிய ஏற்பாடை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். பெருமளவில் மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வந்திறங்கிய இவருக்கு டேனிஷ் (Danish) கத்தோலிக்கர்களுடன் சண்டை போடுவதிலேயே பாதி நாட்கள் கழிந்தது. டேனிஷ் நிறுவனம் இவரைச் சிறையிலும் அடைத்தது.
பிராம்மணர்களிடம் மற்ற சமூகத்தவர்கள் வெறுப்பு கொள்ளுமாறு பிராம்மண துவேஷத்தை முதன் முதலில் தமிழகத்தில் உண்டாக்கியவர் என்கிற “பெருமை” உடையவர் இந்தப் பாதிரி. அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்ட இவர் 1719-ல் தன்னுடைய 36-வது வயதில் இறந்து போனபோது, தரங்கம்பாடியில் இரண்டு சர்ச்சுகளும், இந்தியப் பாதிரிமார்களுக்கான பயிற்சி மையத்தையும், தன்னால் மதமாற்றம் செய்யப்பட்ட 250 இந்தியக் கிறுத்துவர்களையும் விட்டுச் சென்றார். இவர் சார்ந்திருந்த “லுதெரன் சர்ச்சு” பெருமளவு வளர்ந்து ஜூலை 2006-ல் இவர் வரவின் 300-வது ஆண்டு விழாவை சென்னையில் விமரிசையாக்க் கொண்டாடியபோது, தமிழக கவர்னர் சுருஜித் சிங் பர்னாலா இவருடைய “சேவையை” பாராட்டிப் பேசினார். இவர் நினைவாகத் தபால் தலையும் வெளியிடப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg )
1906-ல் ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஆங்கிலேய அரசு கூட இவர் வரவின் 200-வது ஆண்டைக் கொண்டாடவில்லை. ஆனால் இந்திய மண்ணிற்கு வந்து, இந்திய மக்களிடையே ஜாதித் துவேஷங்களை வளர்த்து, மதமாற்றம் செய்து, இம்மண்ணின் கலாசாரத்திற்குப் பாதகம் செய்த ஒருவருக்கு லுதெரன் சர்ச்சு நிறுவனம் இந்திய மண்ணில் விழா எடுக்க அதில் இந்திய அரசியல் பதவி வகிக்கின்ற ஒரு தலைவரே கலந்து கொள்வதென்பது எவ்வளவு வேதனையான விஷயம்! மற்றபடி இவர் தமிழில் மொழி பெயர்த்த விவிலியத்தால் தமிழ் வளரவில்லை, கிறுத்துவம் மட்டுமே வளர்ந்தது!
(தொடரும்…)

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்