பரதநாட்டியம் – சில குறிப்புகள் – 3

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

வைஷாலி


அபிநயம்:-

கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம் ஆகும். அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் ,பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப்பயன்படுகின்றன. அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவை-

1. ஸ்ருங்காரம் (வெட்கம்)

2. வீரம்

3. கருணை

4. அற்புதம்

5. ஹாஸ்யம்(சிரிப்பு)

6. பயானகம் (பயம்)

7. பீபல்சம் (அருவருப்பு)

8. ரெளத்ரம் (கோபம்)

9. சாந்தம் (அமைதி)

இவை நவரஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நவரசங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைவதுதான் சப்தம், வர்ணம், பதம் ஆகும்.

இப்பொழுது வர்ணம் பற்றி :-

நடனத்தில் மிகவும் இன்றியமையாத உருப்படி, வர்ணம் ஆகும். ஏனெனில் இசை, பாவம், நடனம் ஆகிய மூன்று அம்சத்தையும் உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கும். இந்த வர்ணம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று பூர்வாங்கம் மற்றொன்று உத்ராங்கம்.

பூர்வாங்கம் என்பது பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம், மீண்டும் பல்லவி இந்த வரிசையைக் கொண்டது.

உத்ராங்கம் என்பது எத்துக்கடை பல்லவியையும், சரணங்களையும் கொண்டது.

வர்ணம் மூன்று காலத்திலும்(speed) ஆடப்படும். அடவு கோர்வைகளால் ஆன தீர்மானத்துடன் ஆரம்பிக்கும். பெரும்பாலான வர்ணங்கள் சிருங்கார ரஸம் நிறைந்ததாக விளங்குகிறது.

பதம் :-

அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து ஆடப்படும் நடனம் பதம் எனப்படும். பதங்களை லோக தர்மி, நாடக தர்மி ஆகிய இருமுறைகளிலும் அபிநயிக்கலாம். பதத்தின் நாயகன் பரமாத்மாவாகவும், நாயகி ஜீவாத்மாவாகவும், சகி குருவாகவும் இருந்து மோட்சத்தை அடையும் மார்க்கத்திற்கு வேண்டிய தத்துவ உண்மைகளை வெளிப்படுத்துவர். சேத்ரக்ஞர் என்பவர் 4500 பதங்களை இயற்றி ஒரு தனி பாணியை உருவாக்கினார். பெரும்பாலான தெலுங்கு பதங்களில் கிருஷ்ணனை நாயகனாகவும், தமிழ் பதங்களில் முருகனை நாயகனாகவும் வைத்துப் பாடுவது வழக்கம். தமிழில் கிருஷ்ணனை நாயகனாக வைத்துப் பாடப்படும் ‘அலைபாயுதே கண்ணா ‘ பாடல் பதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

பதத்திற்கு அடுத்தபடியாகப் பயிற்றுவிக்கப்படுவது தில்லானா. இது சொற்கட்டுகளையே மையமாகக் கொண்டு இயற்றப்படும் உருப்பு. இது ஜதி போல உச்சரிக்கப்படாமல் பாடப்படும் இசை உருப்படியாகும். பல்லவி அனுபல்லவி அல்லது பல்லவி, சரணம் இதன் அங்கங்களாகும். ஆடும்பொழுது பல்லவியை பலமுறை பாடிக்கொண்டே போவர். இதற்கு தாளவின்யாஸ் முறை என்று பெயர். பலவிதமான அடவு ஜதிகளை கோர்வைகளாக ஆடுவதைக் காணலாம். விறுவிறுப்பு நிறைந்த தில்லானாவோடு நிகழ்ச்சிகளை முடிப்பது வழக்கம்.

தசாவதார வகைகள் பற்றி சில கருத்துக்கள்:-

1. மத்ஸ்ய அவதாரம்

2. கூர்ம அவதாரம்

3. வராக அவதாரம்

4. நரசிம்ம அவதாரம்

5. வாமன அவதாரம்

6. பரசுராமர் அவதாரம்

7. இராமர் அவதாரம்

8. பலராமர் அவதாரம்

9. கிருஷ்ணர் அவதாரம்

10. கல்கி அவதாரம்.

இந்த ஒவ்வொரு அவதாரத்தை குறிப்பதற்கும் முத்திரைகள் உண்டு.

இந்த அவதாரங்கள் எடுத்ததற்கான காரணங்கள்:-

மத்ஸ்யம் :- பிரம்ம தேவரிடம் இருந்து வேதத்தை அபகரித்துக் கொண்ட சோமகாசுரன் சமுத்திரத்தில் ஓடி ஒளிய குறை ஒழித்து இரட்சிப்பதற்காக திருமால் மீனாக அவதரித்து சோமகாசுரனை வதம் செய்து பிறகு பிதாமகனிடத்தில் வேதத்தை ஒப்படைத்தார்.

கூர்ம அவதாரம் :- தேவர்களும் அசுரர்களும் மத்திர்கிர் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் கொண்டு பார்கடலை கடைந்த போது மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து மத்திர்கிர்க்கு கீழிருந்து பூமியை தாங்கினார்.

வராக அவதாரம்:- இரண்யாட்சன் என்னும் அசுரனால் பாயாக சுருட்டி பாதாள லோகத்திற்கு கொண்டு போகப் பட்ட இந்த பூமியை திருமாள் பன்றியாக அவதரித்து பாதாளலோகம் சென்று இரண்யாட்சனை கொன்று பூமியை முன்பிருந்த இடத்திற்கே கொண்டு வந்தார்.

நரசிம்ம அவதாரம் :- இரண்யசுசிகு என்னும் அசுரனை அவன் பெற்றிருந்த வரத்திற்கு விரோதம் வராமல் விஷ்ணு கம்பத்தில் இருந்து நரசிம்ம வடிவமாக அவதரித்து வாயினாலும் நகங்களினாலும் அவனை கிழித்து கொன்று லோகத்திற்கு மிகுந்த நன்மையை உண்டாக்கினார்.

வாமன அவதாரம்:- மஹாபல்லி அரசனின் கர்வத்தை அடக்க திருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்று படி யாசித்து திருவுருவம் எடுத்து வானம், பூமி, பாதாளம் ஆகிய ஒவ்வொன்றையும் தமது இரண்டு அடிகளால் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் இல்லாது நிற்க மஹாபல்லி அரசன் தன்தலையை தர பாதாளத்தில் தள்ளி உலகை இரட்சித்தார்.

பரசுராம அவதாரம்:- விஷ்ணு மூர்த்தி ஜமதகனி மகரிசிக்கு மகனாக பிறந்து பரசுராமன் என்னும் நாமத்துடன் வளர்ந்தார். கார்த்தாவிர் யார்ஷனனை கண்டித்து சத்ரியர்களை கருவருத்து அவர்களின் இரத்தத்தை மடுவாக தேக்கி அதில் தமது தந்தைக்கு திலதர்பனம் செய்து மகிழ்ந்தார்.

இராமர் அவதாரம்:- தசரத அரசனது குறை நீங்க இறைவன் அயோத்தியா புரியில் இராமனாக அவதரித்து தண்டகாரணிய வாசகிக்கு வாக்குதகம் செய்த வண்ணம் இராவண, கும்பகர்ணாதி அசுரர்களை அழித்து அனேக அற்புதங்களை செய்தார்.

பலராம் அவதாரம்:- தேவர்கள் வேண்டி கொண்டதுக்கு ஏற்ப ஆதிசேஷ பகவான் நந்த கோருடைய ரோகினிக்கு மகனாய் பலராமனாக அவதரித்து அனேக அரசர்களை அழித்தார். இவர் கிருஷ்ணனுக்கு மூத்தவராவார்.

கிருஷ்ணர் அவதாரம் :- கிருஷ்ணன் வாசுதேவன் தேவகி என்ற தம்பதிக்கு மகனாய் அவதரித்து சிசுவதம் செய்வதை ஒழித்தார். காலிங்க நர்த்தனம் இந்த அவதாரத்தில் தான் நடந்தது.

கல்கி அவதாரம் :- ஊழி கால முடிவில் இறைவன் தவறு செய்பவர்களை தண்டிப்பார் என்ற கருத்தில் தோற்றுவிக்கப்பட்ட பத்தாவது அவதாரம்தான் குதிரை முக விஷ்ணு.

ஒவ்வொருஅவதாரத்திற்கும் ஒரு முத்திரை இருப்பதைப் போல ஒவ்வொரு கடவுளை குறிப்பதற்கும் ஒரு முத்திரை உண்டு. அதாவது கிருஷ்ணனைக் குறிக்க அவர் புல்லாங்குழல் வைத்திருப்பதைபோன்ற முத்திரை உண்டு. அதே போல ஸ்ரீராமரைக் குறிக்க அவர் வில்லை வைத்திருப்பதைப்போன்ற முத்திரை உண்டு. இப்படி ப்ரம்மா, சிவன், திருமாள், சரஸ்வதி, பார்வதி, லஷ்மி, கணபதி, முருகன், மன்மதன், இந்திரன், அக்னி, தர்மன், வாயு, குபேரன், எமன் ஆகியோருக்கும் முத்திரைகள் கற்றுத்தரப்படும்.

அரங்கேற்றம் :- முறையான அடவு பயிற்சி முழுவதுமாய் முடிந்த பின் முதல் முறையாக மேடையேறி அவையோர் முன் ஆடுவது அரங்கேற்றமாகும்.

அரங்கேற்றம் அவையோருக்கு புதிய நடனக் கலைஞரை அறிமுகமாக்கும் விழாவாகும். நல்ல அவைத்தலைவரும் ரசிகர்களும் உள்ள அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு முன் சதங்கையை முதன்முதலில் இறைவழிபாட்டில் வைத்து பின்பு கட்டிக் கொள்ள வேண்டும். மாணவி ஆசிரியருக்கும் உடன் பயின்ற இசைக்கலைஞர்களுக்கும் தன் மரியாதையை உணர்த்தும் வகையில் புத்தாடைகளும் இயன்ற அன்பளிப்புகளும் வழங்கி வணங்கலாம். கலைவாழ்வில் நல்லதொரு தொடக்கமே அரங்கேற்றமாகும். ஒன்பது வகை அரங்கங்கள் பண்டைய பாரதத்தில் இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. தற்போது அரங்கங்கள் மிகப் பெரியதாகக் கட்டப்பட்டு ஒலி பெருக்கியின் உதவியாளும் நவீன ஒளி அமைப்பின் உதவியாளும், பாடலை நன்கு கேட்கும் வண்ணமும் முகமெய்ப்பாடுகளை பார்க்கும் வண்ணமும் அமைக்கப்படுகின்றன. அரங்கம் அழகிய சிலைகளும் இன்பியல் ஓவியங்களும் நுட்பமான கலை எழில் கொண்ட தூண்களும் அமைக்கப்பெற்றதாக இருக்கவேண்டும் என்கிறார் பாரத முனி. ஒப்பனை அறைகள் மேடையின் இருபக்கங்களிலும் அமைதல் நல்லது. இவ்வாறு சிறப்பாக அமையப்பெற்ற மேடையில் நல்ல கலை ரசிகர்களின் மத்தியில் நடைபெறும் இந்த அரங்கேற்றம் கலைவாழ்விற்கு சிறப்பான தொடக்கத்தை தரும். மேற்கூறிய இந்த நடனங்கள் மட்டுமே பரதநாட்டியத்தில் கற்றுத் தரப்படவில்லை. இவை சிறிளவே ஆகும். வரையறுக்க இயலாத அளவிற்கு பரதநாட்டியத்தில் பல அம்சங்கள் உள்ளன.

*****

(தொடரும்)

Series Navigation

பரதநாட்டியம் – சில குறிப்புகள் -2

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

வைஷாலி


பரதத்தில் முதல்பாடமாக தட்டிக்கும்பிடுதல் அதாவது நமக்கு பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை வணங்குதல் கற்றுத் தரப்படும். பின் இறைவனை வணங்குவதற்காக ஒரு தியான ஸ்லோகம் ஒன்றும் கற்றுத் தரப்படும். பின் முறையே அடவுகள் கற்றுத்தரப்படும். அடவுகளில் தட்டடவு, நாட்டடவு, பரவளடவு, குதித்து மெட்டடவு, முழுமண்டியடவு முதலில் கற்றுத் தரப்படும். மேலும் ஸ்லோகங்களும் கற்றுத் தரப்படும். இதில் கழுத்தின் அசைவுகள்,கண் அசைவுகள், தலை அசைவுகள், ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகள் ஆகியன கற்றுத் தரப்படும். இந்த ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகளில் கற்றுத் தரப்படும் ஒவ்வொரு முத்திரையும் அது பயன்படுத்தும் முறையின் படி அர்த்தம் கொடுக்கும்.

அதாவது ஒற்றைக்கை முத்திரையில் பதாகஸ் என்னும் முத்திரை (நாம் வணங்கும்போதும் இருகைகளையும் இணைத்து கும்பிடுவோம். அதில் ஒரு கையின் முத்திரைதான் பதாகஸ்) காடு, கதவை மூடுதல், சபதம் செய்தல், உறங்குதல், வெப்பம், நிலவு போன்ற பல அர்த்தங்களைக் குறிக்கும். அதே போல இரட்டைக்கையில் செய்யப்படும் முத்திரைகளும் பல அர்த்தங்களைத் தருவதாக இருக்கும். நாட்டியத்தில் அடவுகளுக்கு உபயோகிக்கக் கூடிய முத்திரைகள் எளிர்கை என்றும், அபிநயத்திற்கு உபயோகிக்கக்கூடிய முத்திரைகள் தொழிர்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நாட்டியத்தின் உட்பிரிவுகள் மூன்று. அவை:- நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்.

நிருத்தம் :-

நிருத்தம் பாவாபி நய ஹினம்து

நிருத்தம் இதி அபிதியதே

பொருள்: பாவம் அபிநயம் முதலிய உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தாளக்கட்டுடன் மட்டுமே ஆடும் நடனம் நிருத்தம் எனப்படும்.

நிருத்தியம்:-

நிருத்திம் ரச பாவ வ்யஞ்ஜன அதியுக்தம்

நிருத்தியமி தீர்யதே

பொருள்:- உணர்ச்சிகளும் அபிநயங்களும் நன்கு கலந்து ஆடப்படும் நடனம் நிருத்தியம் எனப்படும்.

நாட்டியம்:-

நாட்டியம் தந் நாடகம் சைவ புஜியம்

பூவக தாயதம்

பொருள்:- நாட்டியம் அல்லது நாடகம் என்பது முன்பே தெரிந்து புகழ்மிக்க வணங்கத்தக்க கதைகளை தன்னுள் கொண்ட கலையை நடித்துக் காட்டுவதாகும்.

அடவுகளுக்குப் பின்னர் முதல் உருப்படியாக, அலாரிப்பும், அதற்கடுத்ததாக ஜதீஸ்வரமும் கற்றுத் தரப்படும். இவை இரண்டும் நிருத்த வகையை சார்ந்தன.

அலாரிப்பு :-

நாட்டிய அரங்குகளில் விறுவிறுப்புத் தோன்றுவதற்காக முதன் முதலாக ஆடப்படும் நடனம் அலாரிப்பு ஆகும். ஐந்து நிமிடத்திற்குள் ஆடப்படும் இது தத்தகார சொற்கட்டுகளால் ஆனது. இறைவனுக்கும், குருவுக்கும், சபையோருக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். அலாரிப்பை முகசாலி என்றும் கூறுவார்கள். இறுதியில் சிறு தீர்மானத்துடன் முடிக்கப்படும். தீர்மானம் என்பது பல அடவுகளை கோர்வையாக செய்து மிருதங்க சொற்களுக்கு ஏற்ப தாளத்தைப் போடுவது ஆகும்.

ஜதீஸ்வரம் :-

ஜதி என்பது அடவின் சொற்களை மிருதங்க சொல்லாக சொல்வதாகும். அலாரிப்புக்கு அடுத்தபடியாக ஆடப்படும் ஜதீஸ்வரம் ஸ்வர வரிசைகளைக் கொண்டதாகும். இது இசையுடன் அமைந்த தொனிப்பாதலால் ஜதீஸ்வரம், என்றும், துவக்கத்தில் அல்லது இறுதியில் ஜதிகள் இணைக்கப்பட்டிருப்பதால் ஜதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தம்:-

ஜதீஸ்வரத்திற்கு அடுத்தபடியாக ஆடக்கூடிய சப்தத்தில் தான் முதல்முதலாக அபிநயம் வெளிப்படுத்தப்படுகிறது. சப்தம் என்றால் சொல் என்று பொருள். இதற்கான சாஹித்தியங்களில் தெய்வம், அரசன் அல்லது தலைவன் புகழ் பாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக முடிவுறும். சப்தத்தில் ஆட்டத்திற்கான ஜதிகளும் சாஹித்திய அடிகளும் கலந்து வரும். அநேகமான சப்தங்கள் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளன. சாகித்திய வரிகளை பாடும்போது ஆடல் நங்கை அதற்கான பாவங்களைப் பற்பலவித அபிநயங்களுடன் தெளிவாக வெளிப்படுத்துவாள். இதில் நர்த்தகியின் மனோதர்மத்தையும், கலைத்திறமையையும் அளவிட முடிகின்றது. மண்டுக சப்தம், கோதண்டராமர் சப்தம் போன்ற சப்தங்கள் மிகவும் பிரபலமானவை. அநேகமான சப்தங்கள் காம்போஜி ராகத்திலேயே பாடப்பட்டவையாகும். இன்று பல தமிழ் சப்தங்களை மற்ற ராகங்களிலும் பாடி ஆடி வருகின்றனர்.

சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும். அபிநயம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…..

Series Navigation