நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘எகிப்தியரின் வடிவெண்கள் [Egyptian Hieroglyphs], பாபிலோனியனின், சுமேரியன் [Babylonians & Sumerians] கல்வெட்டுக் கணித அட்டவணைகள் [Cuneiform Mathematical Tables] ஆகியவை கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருத்தியான முற்போக்குக் கணித, விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டுகின்றன. கணித மேதை பித்தகோரஸ், எரடோஸ்தனிஸ், ஹிப்பார்ச்சஸ் [Pythogoras, Eratothenes, Hipparchus], மற்ற கிரேக்க மேதைகள் அனைவரும் எங்கோ வாழ்ந்த பெயர் தெரியாதப் பண்டைக் கால வல்லுநரிடம், கணித விஞ்ஞான அறிவுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். ‘

பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]

‘பூர்வீக எகிப்தியர் ஒரு காலத்தில் நிலவின் வளர்பிறை, தேய்பிறைச் சுற்றை அடிப்படையாக வைத்து வருட நாட்காட்டியைத் தயாரித்தனர். பிறகு அம்முறையில் வருடச் சுற்று நாட்கள் பொருத்தமாக அமையாது போனதால், பரிதி நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நிலவு நாட்காட்டியை விடச் சற்று முற்போக்கான வருட நாட்காட்டியைக் கணித்தனர். ஓராண்டுக்கு 365 நாட்கள் என எடுத்துக் கொண்டு, முப்பெரும் கால நிலைகள் [Seasons] சுற்றி மீண்டும் வரும், பரிதி நாட்காட்டியை ஆக்கினர். பரிதி நாட்காட்டியில் ஒவ்வொரு கால நிலைக்கும் நான்கு மாதங்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் 30 தினங்கள் உள்ளதாக அனுமானம் செய்தனர். ‘

‘மகா பிரமிட் கூம்பகம் ஓர் ‘அண்டவெளி நோக்ககம் ‘ [Celestical Observatory] போல அமைக்கப் பட்டிருந்தது! அந்த கூம்பகம் விண்மீன்களின் அரைக் கோளத்தின் [Steller Hemisphere] படங்களையும், நகர்ச்சி அட்டவணைகளையும் வரைவதற்கு ஏதுவான விபரங்கள் கொண்டதாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது. வடதிசைப் பூகோள அரைக் கோளத்தைத் [Northern Hemisphere] திரையிடத் தக்க முழு விபரங்கள், முற்போக்கான முறையில் அங்கே அடங்கி யிருந்தன. ‘

‘பிரமிடைத் திட்டமிட்டக் கட்டட ஞானிகள், அதற்கு முன்பாகவே பூமியின் சுற்றளவு, பரிதியைப் பூமி சுற்றிவரும் சுழல்வீதியின் சராசரித் தூரம், பூமியின் தனித்துவத் திணிவு [Specific Density], புவியீர்ப்பால் ஏற்படும் வேக வளர்ச்சி [Acceleration due to Earth ‘s Gravity] ஆகியவற்றை அறிந்திருக்கக் கூடும் என்று நாம் யூகிக்கச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன! ‘

ஆன்டிரு போர்மிஸ்டிராஃப் [Andrew Bourmistroff, Egyptian Decans]

‘கீஸாவிலுள்ள மாபெரும் கூஃபூ பிரமிடின் காலச் சக்கிரத்தில் ஓர் எதிர்கால அபாய முன்னறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது! 2004 ஆண்டுக்கு மேல் 2023 ஆண்டுவரை [+3 or -3 துல்லிமம்] நவயுகப் பொருள்மய நாகரீகத்தில் பேரிழப்புகள் நேருமென்று சொல்லி யிருக்கிறது. ‘

[அந்த முன்னறிவிப்பில் 2001 (9/11) ஆண்டு மூர்க்கரின் நியூ யார்க் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு உலக மெங்கும் மூர்க்கரின் பிலாஸ்டிக் வெடிப் பேரழிவுகள் பன்மடங்கு மிகுந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது! அடுத்து 2004 தென்னாசியச் சுனாமிப் பேரழிவுகள், 2005 செப்டம்பரில் கேட்ரினா ஹரிக்கேன் அடித்து நியூ ஆர்லின்ஸ் நகரம் முழுவதும் நாசம் அடைந்ததைக் கூறலாம்.]

பீட்டர் லெமிசூரியர் [Peter Lemesurier]

பிரமிட் கூம்பக அமைப்பில் கணித, வானியல் நுணுக்கங்கள்

பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட கூம்பகம் பண்டை கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.

வருடப் பஞ்சாங்க விபரங்கள் (வருடக் கால நிலை, பரிதி, நிலா நகர்ச்சிகளைக் காட்டும் தயாரிப்பு) [Almanac] அறிவதற்கும் பிரமிட் திட்டமிட்டுக் கட்டப் பட்டது என்று சொல்லும் எகிப்திய ஞான நிபுணரும் உள்ளார். வருடத்தின் நாட்கள் நீட்சியை நான்கு தசமத் துல்லிமத்தில் (365.2422 நாட்கள்) அதாவது ஒரு நாளின் பின்னத்தில், பிரமிட் மூலமாகக் கணக்கிட முடியும் என்று தெரிந்து கொள்ளப் பட்டுள்ளது.

ஃபாரோ மன்னன், கூஃபு [King Khufu] பேருயரத்தில் தனக்காகக் கட்டிய உலக விந்தை எனப் பெயர் பெற்ற மகா பிரமிடில் [The Great Pyramid] கீழ்க்காணும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டுள்ளன!

1. மகா பிரமிட் பூகோளத்தின் நிலைத்துவ அமைப்பாக மகத்தான நிலச் சின்னத்தில் [Geodetic Landmark] கட்டப் பட்டிருக்கிறது!

2. மகா பிரமிட் கூம்பகம் ஓர் ‘அண்டவெளி நோக்ககம் ‘ [Celestical Observatory] போல அமைக்கப்பட் டுள்ளது! அந்த கூம்பகம் விண்மீன்கள் அரைக் கோளத்தின் [Steller Hemisphere] படங்களையும், நகர்ச்சி அட்டவணைகளையும் வரைவதற்கு ஏதுவான விபரங்கள் கொண்டதாகத் திட்டமிடப் பட்டிருக்கிறது. வடதிசை அரைப் பூகோளத்தைத் [Northern Hemisphere] திரையிடத் தக்க முழு விபரங்கள் (கோணங்கள், நீளங்கள்) முற்போக்கான முறையில் அங்கே அடங்கி யுள்ளன. பூகோளக் கோணங்கள் குறிக்கப்பட்ட மட்டரேகை [Lattitude], தீர்க்கரேகை [Longitude] குறிக்கப்பாடு ஓர் அளவுப்பட, மெய்யான மாதிரியாக [Scale Model] வரையப் பட்டிருக்கிறது.

3. புராதன உலகுமயமான எடை, அளப்பு முறைகள் [Ancient Universal Weights & Measures] கூறும் மாதிரி ஏற்பாடுகள் பிரமிடில் கையாளப் பட்டிருந்தன!

4. பூகோள அச்சின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் வானியல் மேதை ஸர் ஜான் ஹெர்செல் [Sir John Herschel] நூறாண்டுகளுக்கு முன்பே

விளக்கிய நேர்போக்கு, நிலைநோக்கு அளப்பு விதிகளைப் [Linear & Temporal Measurements] போன்ற ஒரு மாதிரி முறை, பிரமிடில் காணப் படுகிறது.

உலகப் புகழ் பெற்ற பிரமிடில் காணும் பொறியியல் மகத்துவம்

மகா பிரமிடின் நுணுக்கமான கணித, வானியல் விதிப்பாடுகளைத் திறமை மிக்க பல எகிப்தியவாதிகள் மெய்வருந்தி ஆராய்ச்சிகள் செய்து கீழ்க்காணும் வியப்பான கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

1. பிரமிட் கட்டட நிபுணர்கள் நிச்சயமாகப் பூமியின் சுற்றளவை அறிந்திருப்பதாகத் தெரிகிறது! அதுபோல் பூமி பரிதியைச் சுற்றும் ஓராண்டு காலத்தின் நாட்களைப் பல தசமத் துல்லிமத்தில் [Sidereal Year: 365.2564 days] கணித்திருக்கிறார் என்றும் தெரிகிறது. [சைடெரல் ஆண்டு என்பது வருட நாட்களைத் துல்லியமாக எண்ண ஒரே விண்மீனை இரண்டு முறை, வானில் நோக்கி வருட நாட்களைக் கணிப்பது.]

2. மகா பிரமிட் கூம்பகம் ஓராண்டு காலத்து நாட்களின் எண்ணிக்கையை நான்கு தசமத் துல்லிம அளவுக்கு நோக்கிக் கணிக்கும் [365.2422] வசதியும், சாதனங்களும் கொண்டுள்ளது.

3. மகா பிரமிடின் திசைநோக்குக் காந்தமுள் நுனி [Compass Pointer] நேர் வடக்கை நோக்கி வைக்கப் பட்டிருக்கிறது. மேலும் பிரமிட் பூகோளத்தின் நில எடை நடுவில் [Geocentric Center of Earth ‘s Land mass] கட்டப் பட்டுள்ளது. தகர்க்க முடியாத அமைப்பில் பதிக்கப் பட்டிருக்கும், பிரமிடின் தளப்பண்பு நோக்குக் கருவி [Survey Instrument] மிகத் துல்லியமானது.

4. மகா பிரமிடின் சாய்வு பக்கங்கள், அவற்றின் கோணங்கள் ஆகியவற்றின் மூலம் வடபுறப் பாதி பூகோளத்தைத் [Northern Geohemisphere] திரையிட்டு வரைய வழிமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரமிடின் கூம்பக உச்சி பூகோளத்தின் வட துருவத்தைக் குறிப்பிடுகிறது. பிரமிடின் தளச் சுற்றளவு, ஒப்பளவில் பூகோளத்தின் மத்திய ரேகையைக் [Equator] குறிப்பிடுகிறது. பிரமிடின் ஒவ்வொரு சாய்வு தளமும், அரைப் பூகோளத்தின் நான்கில் ஒரு சுளைப் பகுதியாகக் [One Spherical Quadrant (90 degree) of the Hemisphere] கருதப்படுகிறது. சாய்வு தளமும், கோளத்தின் வளைந்த சுளையும் பொருந்த வேண்டு மென்றால், அவை யிரண்டும் ‘பை ‘ [Pi: A Contant, Related to the Circle] என்னும் நிலை யிலக்கத்துடன் சார்ந்திருப்பது அவசியம். அரைக் கோளத்தின் பரப்பு: (Pi)D^2/2 [D: Earth ‘s mean Diameter] மகா பிரமிடின் உயரம்: H, தளப்பக்கம்: S என்று வைத்துக் கொண்டால், உயரமும் (S), பக்கமும் (H) Pi என்னும் வட்டத்தின் நிலை யிலக்கத்துடன் (S/2H = Pi/4) சம்பந்தப் பட்டுள்ளது. மகா பிரமிடின் உயரம் (H): 480 அடி, தளப்பக்கம் (S): 754 அடி Tan(A)=480/372 [2H/S], சாய்வு தளக்கோணம் = 52 டிகிரி என்று அறியலாம்.

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ www.artchive.com/artchive/E/egyptian.html] From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

22 Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)

23 History Topic: An Overview of Egyptian Mathematics.

24 The Ancient Egyptian Number System By: Caroline Seawright (March 19, 2001)

25. Parameter A & The Egyptian Decans By: Andrew Bourmistroff.

26 The Great Pyramids – The Library of Xalexandria.

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 8, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘

கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]

‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று ? ‘

‘உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா ? மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லாவற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது! கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின்களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களை கண்டுபிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது!

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)

‘எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை! அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை! பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். ‘

பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]

முன்னுரை: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.

எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை

4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!

எகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்

விஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான ‘ஆல்கெமி ‘ [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

தற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:

எண்: 1 …. ஒற்றைக் கோடு

எண்: 10 …. ஒரு லாடம்

எண்: 100 …. C எழுத்து போல் ஒரு சுருள்

எண்: 1000 …. தாமரை மொட்டு

எண்: 10,000 …. ஒரு விரல்

எண்: 100,000 …. ஒரு தவளை

எண்: 1000,000 …. கை உயர்த்திய ஒரு கடவுள்

எகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள்

4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.

முதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.

இரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7

கூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு

கிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.

பிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

மாபெரும் கீஸா பிரமிடில் மகத்தானக் கணிதக் கண்டுபிடிப்புகள்

ஃபாரோ மன்னன் கூஃபூ [King Khufu] எழுப்பிய பிரமிட்தான் எல்லாவற்றிலும் பெரியது; உலகத்தின் ஏழு விந்தைகளில் ஒன்றாகப் பாராட்டப் படுவது. அந்த கற்பாறைக் கூம்பகம் மிகத் துல்லியமான பாறைக் கற்களின் அமைப்புகளால் உருவாக்கப் பட்டது. அதன் பீடத்தளச் சதுரப் பக்கம் 230 மீடர். நான்கு பக்கங்களின் மட்டநிலை நீளம் ஒன்றுக் கொன்று 20 செ.மீ. வேறுபாட்டில் உள்ளதென்றால், கட்டடக் கலை வல்லுநரின் நுணுக்க ஆற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியாது! உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன்! பாறைக் கற்கள் நுணுக்கமாகச் செதுக்கப் பட்டு அமைக்கப்பட்ட அவ்வடுக்கின் ஊடே ஒரு மெல்லிய இழைத் தகடு கூடச் செலுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது!

கீஸா பிரமிடில் உள்ளதாக அறியப்படும் கணித மகத்துவங்கள்

1. பிரமிடின் பீடச் சுற்றளவு: 230×4=920 மீடர். எகிப்தியர் முழங்கை [cubit measure: 40 செ.மீ] அளவுக்கு

920/40= வருவது சுமார்: 365! அதாவது ஓராண்டின் நாட்கள் [ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிப்பிடப் பிரமிட் நீளம்: 230 மீடர் [230/40= 575] அதாவது 575 முழங்கை அளவு திட்டமிடப் பட்டது.

2. பிரமிட் பீடச் சுற்றளவை 230×4=920, இரட்டை உயரத்தால் [2×150] வகுத்தால் வருவது வட்ட நிலை இலக்கம் பையின் [Pi] மதிப்பு= 3.14 வருகிறது.

3. பிரமிடின் உயரத்தை 10^9 [10 to the power of 9] எண்ணால் பெருக்கினால், சுமார் பூமிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம் கிடைக்கிறது.

4. பிரமிட் எடையைப் 10^15 எண்ணால் பெருக்கினால், பூமியின் சுமாரான எடை வருகிறது.

5. பிரமிட் உள்ளே அமைக்கப்பட்ட மன்னர் அடக்க மாளிகைகள் பித்தகோரியன் முக்கோணங்களான, [3-4-5] அல்லது [2-5-3] ஆகிய கணித விதியில் ஆக்கப் பட்டுள்ளன.

சில ஐரோப்பிய வல்லுநர்கள் இந்தப் பொருத்தங்களில் [3], [4] கூற்றுக்களை எகிப்தியர், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம், பூமியின் எடை ஆகியவற்றை யூகித்துப் பிரமிடைக் கட்டி யிருக்கிறார் என்று பூரணமாக நம்புவதில்லை!

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ www.artchive.com/artchive/E/egyptian.html] From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

22 Secrets of the Great Pyramid By: Peter Tompkins (1978)

23 History Topic: An Overview of Egyptian Mathematics.

24 The Ancient Egyptian Number Sytem By: Caroline Seawright (March 19, 2001)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 1, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன. ‘

அரபிய முதுமொழி

‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான பிரமிட் கூரிய கோணங்களுடன் நிற்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகு மாயத்திரை ஒன்று நம் முன்பு விழுகிறது. பிரமிடின் வலப்புறமும், இடப்புறமும் சில சமயங்களில் எருமை மாடுகள் புல் மேய்ந்து கொண்டுள்ளன. சில சமயம் கொக்கு அல்லது பெலிகன் பறவைகள் பறந்து செல்கின்றன. பாதி உடை அணிந்த வேளாண்மைக் காரர் தமது அன்றாடப் பணியில் முனைந்துள்ளனர். ‘

ஜியார்க் ஈபர்ஸ், தொல்பொருள் ஆய்வாளி [Georhe Ebers, Archaeologists]

‘ஓவியக் கலையை ஒருவர் வெறுத்தால் அவர் வேதாந்தத்தையோ அல்லது இயற்கை வனப்பையோ நேசிக்க மாட்டார். கண்கள் காணும் இயற்கையின் எல்லா வேலைப்பாடுகளையும் ஓவியம் பிரதிபலிக்கிறது. அத்தகைய ஓவியக் கலையை நீ வெறுப்பாயானால் இயற்கையின் விளைவானக் கடல், நிலம், பயிரினம், புல்லினம், பூவினம், விலங்கினம் அனைத்தின் கண்டுபிடிப்பையும், மனிதரின் ஆர்வத்தையும் மெய்யாக ஒதுக்குவதாய் அர்த்தம். ‘

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி

முன்னுரை: தனித்துவ முறையில் நுணுக்கமாக ஓரிடத்தில் மனிதர் கட்டிய பிரம்மாண்டமான எகிப்தின் காஸா பிரமிட் ஒன்றுதான் உலகிலே மாபெரும் அற்புதக் கணிதச் சாதனையாக கருதப்படுகிறது! கிறித்துவ யுகக் கடிகார முள் சுற்றி நாட்களைக் கணக்கிடுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீகச் சின்னமான பிரமிட்கள் தோன்றி விட்டன! கோடிக் கணக்கான எகிப்தியப் பொறியாளர், கட்டடப் பணியாளர், கல் சிற்பிகள், கல்தச்சர், மரத்தச்சர், ஊழியர், அடிமைகள், கடவுளாகக் கருதப்படும் அவரது மன்னருக்காகப் பிரமிட் ஆக்கப் பணிகளில் கலந்து கொண்டார் என்று அறியப் படுகின்றது. சியாப்ஸ் பிரமிட் [Pyramid of Cheops] கட்டுவதற்கு ஃபாரோ பரம்பரையின் கூஃபூ வேந்தன் [Pharaoh King Khufu] 7 மில்லியன் நபர்களை வேலை செய்ய வைத்துக் கொண்டதாயும், அதைக் கட்ட 30 ஆண்டுகள் ஆயின வென்றும் எகிப்தியத் தகவல் ஒன்று கூறுகிறது! வலிமையும், செல்வமும் படைத்த கூஃபூ மன்னன் அத்தனை பேருக்கும், பிரமிட் கட்டும் போது உணவு, உடை, வீடு, கூலி அனைத்தும் கொடுத்துப் பேணியதாக அறியப் படுகிறது!

பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர்! ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரை கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை

4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்த் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!

பிரமிட்களின் பரிமாணம் அகத்திலும் சரி, புறத்திலும் சரி அந்த அளவுகள், கல்லறைகளின் நேரமைப்புகள் [Orientations of Stone Compartments], பல்வேறு கோணங்கள் [Various Angles] ஆகியவைத் துல்லியமாய் நிறுவப்பட்டுத் தொடர்ந்து ‘பூரணத்துவ நியதி ‘ [Perfection] கடைப்பிடிக்கப் பட்டது! கற்பாறைகள் 70 டன் உச்ச எடையில் உடைக்கப் பட்டுப் பத்திலொரு பங்கு மில்லி மீடர் துல்லிமத்துக்குத் [1/10 of a millimeter Accuracy] தேய்த்து உராயப் பட்டன! கிஸா பீடத்தில் [Giza Plateau] மாபெரும் பரிமாணத்தில் உள்ள பிரமிடின் தனிச் சிறப்பு: மன்னன் ‘புதைப்பரண் ‘ [Burial Chamber] மூன்றில் ஓரளவு உயரத்தில் பிரமிட் உள்ளே துல்லியமாக அமைக்கப் பட்டிருக்கிறது! மேலும் புதையரண்களை அடையும் ‘வாயுப்பாதைகள் ‘ [Airshafts] எனப்படும் குடைவு வழிகளும் மிகத் துல்லிய பரிமாணத்தில் நிறுவப் பட்டுள்ளன! தற்காலத்தில் லேஸர் ஒளிக்கருவி போன்று நமது பொறி நுணுக்க முறைகள் மிக மிகத் துல்லியதாயினும், கற்கட்டடக் கலையில் எகிப்தியர் கையாண்ட நிபுணத்தை, நம்மால் மீண்டும் செய்து காட்ட முடியாது!

கட்டடச் சிற்பக் கலையின் முப்பெரும் பிரிவுகள்

எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான, வல்லமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கற்கலைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். கண்ணாடிக் குவளைகள் ஆக்கவும், அவற்றில் நிரந்தர ஓவிய உருவங்கள் வரையவும் தெரிந்திருந்தனர். முப்பெரும் காலப் பிரிவுகளில் எகிப்தியர் முடித்தக் கட்டடப் படைப்பு வேலைகளைப் பகுக்கலாம். முதலாவது கட்டடத் துறைக்காலம்: பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 5000-3000). இரண்டாவது கட்டடத் துறைக்காலம்: இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 3000-1700). மூன்றாவது கட்டடத் துறைக்காலம்: புதிய பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 1700-350)

பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலத்தில்தான் ஃபாரோ மன்னர்களால் பிரமிடுகள் கட்டப்பட்டன. இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலங்களில்தான் குன்றுகளைக் குடைந்து புதைப்பரண்கள் உண்டாக்கப் பட்டன. புதிய பேராட்சிப் படைப்புகள்: அப்போதுதான் கார்னாக், லுக்ஸர், எட்ஃபெள [Karnak, Luxor, Edfou] போன்ற கற்கோயில்கள் கட்டப் பட்டன. பிரமிட்கள் சிறந்த வரலாற்றைக் கூறினாலும், மூன்றாவது பிரிவில் கட்டிய ஆலயங்களும், ஆலயச் சிற்பங்களும் எல்லாவற்றையும் விட உன்னத பொலிவுச் சின்னங்களாகக் கருதப் படுகின்றன.

கட்டடச் சிற்பக் கலைகளின் தனித்துவப் பண்புகள்

எகிப்திய நாகரீகச் சின்னங்கள் ஐம்பெரும் பண்புகளில் காணப் பட்டன. முதலாவது தனித்துவப் பண்பு: சின்னங்களின் வடிவும், பளுவும். மனித உயரம், எடையை விடப் பல மடங்கு மிகையான வடிவம், நிறை கொண்டவை அவை! கற்பாறை சில சமயங்களில் 25 அடி நீளத்தையும் மிஞ்சிய பரிமாணம்! எடையில் கூடியது 70 டன் பளுவான ஒற்றைக் கற்பாறை. அவை குன்றுகளில் குடைந்து வெட்டப் பட்டுக் கடத்திக் கொண்டு வரப்பட வேண்டும். இரண்டாவது தனித்துவப் பண்பு: குறிப்பிட்ட முறையில் ஒயிலாகச் செதுக்கப் பட்ட தூண்கள், சிற்பக் கீறல் ஓவிய வேலைப்பாடுகள் கொண்டவை. மூன்றாவது தனித்துவப் பண்பு: அவரது சிற்ப ஓவிய வடிவங்கள் பல பன்னிறக் கலைத்துவ நளினம் பெற்றிருந்தன. பிரமிட், ஆலயங்களில் உள்ள கட்டடச் சுவர்கள், பெரும்பான்மையான தூண்கள் அனைத்திலும் ஒப்பனைகள், ஓவியங்கள், சின்னங்கள், வேலைப்பாடுகள் வரலாறுகளாய் பொறிக்கப் பட்டுள்ளன.

அனைத்துச் சின்னங்களும், சிற்ப ஓவியங்களும் எகிப்தை ஆண்ட பூர்வீக வேந்தர்களின் வரலாறுகளாய் உள்ளன. அவற்றில் எகிப்தியர் பயன்படுத்திய வண்ணக் கலவைகள் ஆயிரக் கணக்கான் ஆண்டுகளாய் கால வெள்ளம் அழிக்காதபடி யிருப்பது ஓர் தனித்துவப் பண்பாகும். நான்காவது தனித்துவப் பண்பு: கோயில் மேற்தளம், புதைப்பரண்களின் மேற்தளம், வாசல், பலகணி ஆகியவை அமைக்கப் பளுதாங்க உதவும் பாறை மேற்தட்டு போன்றவை மட்டநிலை உத்தரங்களைப் பயன்படுத்தின. நிறுவப்படும் அனைத்துக் கட்டடமும், திட்டமிடும் ‘கட்டமைப்பு ‘ [Structure] முறைகள், நேரமைப்புகள், சீரமைப்புகள் [Orientations & Alignments] ஆகிய சீரியச் செவ்வமைப்பு முறைகளைச் சார்ந்துள்ளன. ஐந்தாவது தனித்துவப் பண்பு: பிரமிட் கூம்பகத்தின் பக்கங்கள் சாய்ந்தவை! எத்தனை பெரிய பூகம்பம் நேர்ந்தாலும், உட்புறமுள்ள புதைப்பரணுக்கு எவ்விதப் பாதிப்பும் விளையாது! ஆலயச் சுவர்கள் சரிந்த வடிவத்தில் உள்ளதால், அவற்றுக்கும் நிலைத்துவம் [Stability] மிகுதியாக இருக்கிறது!

பிரமிட்கள் இரண்டு விதத் தனித்து ஏழில் பண்புகளில் உலகச் சிறப்புற்றவை. ஒன்று: எளிமை வடிவம் [Simplicity]; மற்றொன்று: சீர்ச் செம்மை உடமை [Symmetry]. அதாவது எப்புறம் நோக்கினும் சீரான கோணம், சீரான சரிவு, சீரான பரப்பு, சீரான பக்கம், சீரான மட்டம், சீரான அமைப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ள ஓர் அற்புதக் காட்சி. பிறகு அவற்றுள் இருந்த ஒற்றுமை: பிரமிக்கத் தக்க தோற்றம்! ஈரடிப்பில்லாத வரட்சியான பாலைவனக் கால நிலையில் எகிப்த் நாடு இருப்பதால், பிரமிடுக்குள் புதைத்து வைத்த மன்னர்களின் சடலங்கள், உடைகள், நகைகள், மரச் சாதனங்கள் போன்றவை கறை படாமல், கசங்கிப் போகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாப்பாய் இருந்தன.

ஒரு நாட்டு மக்களின் தனித்துவ நுட்பக் கலைத்துவத் திறமைகள் அவரது ஓவியம், சிற்பம், கட்டடம், காவியம், கானம், நாட்டியம் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுகின்றன. அவற்றின் ஆக்க முறைகளை நோக்கினால் அவை அனைத்தையும் ‘படைக்கும் நியதி ‘ [Law of Composition] ஒன்றே ஒன்றுதான். இசைக் கீதத்தைப் படைத்தால் என்ன ? திரைத் துகிலில் ஓவியத்தைத் தூரிகையால் தீட்டினால் என்ன ? காவிய நூலை ஒருவன் ஆக்கினால் என்ன ? கற்பாறையில் சிற்பம் ஒன்றைச் சிற்பி செதுக்கினால் என்ன ? பூமித் தளத்தைச் சீர்ப்படுத்தி ஓர் மாளிகையைக் கட்டடக் கலைஞன் கட்டினால் என்ன ? நர்த்தகி தாளத்திற்கு ஏற்றபடி நாட்டியம் ஆடினால் என்ன ? பிரமிடை எகிப்தியர் திட்டமிட்டு நிறுவினால் என்ன ? எல்லாப் படைப்புகளுமே ஒரே ஓர் ஒழுக்க நெறியைத்தான், அதாவது ஒரே ஒரு படைப்பு நியதியைத்தான் பின்பற்றுகிறது. ஓவியம் சிறியது, ஒருவர் படைப்பது! ஆனால் பிரமிட் பிரம்மாண்டமானது! பல்லாயிரம் பேர் கூடிப் பணிபுரிந்து படைப்பது!

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ www.artchive.com/artchive/E/egyptian.html] From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 17, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


எத்தனை கோடி இன்பம் வைத்தாய், எங்கள்

இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு

சேரும் ஐபூதத்து வியனுல கமைத்தாய்!

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்

ஆகப் பலபல நல் அழகுகள் சமைத்தாய்!

மகாகவி பாரதியார்

‘ஒவ்வோர் அங்கமும் தனித்து நீங்கி, தனது முழுமையற்ற குறை நிலையிலிருந்து தப்பிச் சென்று, வேறோர் முழு தோற்றத்தைத் தேடிப் பிடித்து அந்த வடிவத்தை நிரப்பிக் கொள்கிறது! ‘

‘கலைஞன் கூட்டத்தில் கலந்து தன் சிந்தனைக் குவிப்பைச் சிதறவிடக் கூடாது! ஆனால் இயற்கை உலகின் முழுச் சீரியற் பண்பில் மூழ்கும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் வாழ்ந்து இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தில் நுழைந்து, அதன் உட்புறக் கருவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ‘

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி

முன்னுரை: எகிப்து என்னும் பெயர் நம் செவிகளில் பட்டதுமே பிரம்மாண்டமான பிரமிட்கள்தான் நமது கண்கள் முன்பாகத் தோன்றுகின்றன! குன்று போல் குவிக்கப்பட்ட அந்தப் பாறைக் கட்டிகள் தேய்து போன எகிப்தின் நாகரீகச் சின்னங்களாகத் தெரிந்தாலும், அவை அனைத்தும் வரலாற்றுச் சிற்பங்களாய், வண்ணப் படங்களாய் எகிப்தியரின் ஒப்பற்ற நுணுக்கத் திறமைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பறைசாற்றி வருகின்றன! அந்த மாபெரும் சின்னங்களைப் புரிந்து கொள்ளச் சற்று மர்மமாய், சிரமமாய் இருந்தாலும், அவை எகிப்தியரின் தனித்துவப் பண்பை, கலாச்சாரத்தை நமக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றன! அந்த நாகரீகப் படைப்புகள் யாவும் நூதனக் கணித வடிவில், பொறி நுணுக்க முறைகளில் சீரான கட்டுமானப் பணிகளில் உருவாக்கப் பட்டுள்ளன! எண்ணற்ற அவ்வரிய கலைக் களஞ்சியப் படைப்புக்களை ஆக்கியவன் ஒற்றை ஃபாரோ அரசன் மட்டும் அல்லன்! ஃபாரோ பரம்பரையின் ஆற்றல் மிக்க, செல்வம் செழித்த, கடவுளாக மதிக்கப் பட்ட அரசர்கள் பலர், பல நூற்றாண்டுகளாய்த் திட்டமிட்டுக் கட்டியவை! ஆயிரக் கணக்கான பணியாட்களும், அடிமைகளும் அரசரின் நேரடிக் கண்காணிப்பில் அல்லும், பகலும் ஒழுக்க நெறியில் பல்லாண்டுகள் இயங்கிப் படைத்தவை!

எகிப்தியரின் இயற்கையுடன் ஒத்த கலைத்துவப் படைப்புகள்

இயற்கை வனப்புகளும், வடிவங்களுமே எகிப்தியரின் கலைத்துவப் படைப்புகளில் பெரும்பான்மையாகக் காணப் பட்டன. எகிப்தின் பற்பல வண்ண ஓவியங்களிலும், கட்டட மாளிகைகளிலும் இயற்கை மற்றும் இயற்கை மயமான இயக்கங்களின் சின்னங்களைக் கண்டு களிக்க முடிகிறது. எகிப்தியரின் அன்றாட இயற்கை வழங்கிய வாழ்க்கை முறைகளை அவற்றில் அறிகிறோம். நைல் நதியைச் சுற்றிலும் விதைக்கப் பட்டு, மலர்ச்சியும், வளர்ச்சியும் பெற்ற அந்தக் கலை வடிவான நாகரீகம், நைல் நதியின் நீர் வெள்ள ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, ஒருமைப்பாடுடன் பிணைந்து ஆண்டு தோறும் மாறி வந்தது! நைல் நதியின் நீரோட்டம் சீராக நிலவிய போது, எகிப்தியர் வேளாண்மையைத் தொடர்ந்து விருத்தி செய்தார்கள். பருவ காலங்களில் நதியில் வெள்ளம் பெருகிக் கரை மீறி நிலங்களை மூழ்க்கி வேளாண்மை வேலைகள் தடைபடும் போது, குடியானவர் அனைவரும் ஃபாரோ மன்னர் கட்டும் பிரமிட்கள் அல்லது ஆலயப் பணிகளில் பங்கு கொண்டதாக அறியப் படுகிறது! அத்தகைய இயற்கை மரபு ஒட்டிய வாழ்க்கையை எகிப்தியர் கடைப்பிடித்து ஒழுகி வந்தது அவரது ஓவியப் படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.

பண்டை கால எகிப்தில் மக்களின் மதமும், கலாச்சாரமும் இயற்கையுடன் பிணைந்து கலந்திருந்தன. எகிப்தியர் ‘ரே ‘ எனப்படும் சூரியக் கடவுளை [Sun God: Re] வணங்கி வந்தனர். அத்துடன் பாரதத்தின் விநாயக மூர்த்தி போல, விலங்கினத்தின் தலை கொண்ட அநேக தெய்வங்கள் எகிப்தியரின் கலை, கலாச்சார, மத விழாக்களில் வணங்கப் பட்டன. ஃபாரோ பரம்பரையின் நான்காவது இனவாரி மன்னர் ‘ஸ்ஃபிங்ஸ் ‘ [Spinx] எனப்படும் பிரமிக்கத் தக்க மனிதத் தலைச் சிங்கத்தை வடித்தார். அன்னங்கள் போன்ற வண்ண வாத்துக்கள் ஒயிலாக நடக்கும் சுவர்ப்படப் படைப்புகளை [Frieze: Geese of Meidum (கி.மு.2530)] எகிப்து பிரமிட்களிலும், மற்ற ஆலயச் சுவர்களிலும் காணலாம். விலங்குகளும், பறவைகளும் மதிப்புடனும், பரிவுடனும் நடத்தப்பட்டன என்பது அவரது ஓவியப் படங்களிலும், எழுத்துப் படைப்புகளிலும் தெரிகிறது. அவரது ‘பறவை வளர்ப்புக் காட்சி ‘ [Fowling Scene (கி.மு.1450)] ஓவியத்தில் எகிப்தின் பலவிதப் பறவைகள் பரிவாக நடத்தப்பட்டதைக் காணலாம். இயற்கையின் அம்ச அமைப்புகளை அமென்-மத்-கொன்ஸூ ஆலயத்தில் [Temple: Amen-Met-Khonsu (கி.மு.1370)] பாபிரஸ் செடி, தாமரைப் பூச் சூடிய போன்ற தூண்கள் ஏந்தியுள்ளன.

எகிப்தியரின் கட்டடக் கலைத்துவம்

நைல் நதியின் கரைகளில் பாறைக் குன்றுகள் நிரம்பிய மலைச் சரிவுப் பாலைவனம் பல மைல்களுக்குப் பரவி யுள்ளன! பாறை அரங்குகளில் கட்டிகளை வெட்டி எடுத்து அவையே கோடான, கோடிச் செங்கற்கள் போல பிரமிட்களில் பயன்படுத்தப் பட்டன! வடிவங்களை உருவங்களாகச் செதுக்கி வடிக்கப் பாறை வெட்டுத் துண்டுகளே உபயோக மாயின. பாறை வெட்டுகள் குன்றுகளில் குடைந்து துண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகள் மூலம் நைல் நதியில் கடத்திக் கொண்டு வரப்பட்டதாக அறியப் படுகின்றது. கடினப் பாறைகள், சுண்ணக் கற்கள், மென்மைக் கற்கள் [Granite, Limestone, Sandstone] எனப்படும் பலவிதப் பாறைகள், கற்கள் சிற்பப் பணிகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் பெருந் துண்டங்களாய் வெட்டி எடுக்கப் பட்டன. கட்டிடக் கலைஞர் காரை என்னும் சுண்ணக் கலவையைப் [Mortar] பயன்படுத்தாமல், பாறைத் துண்டுகள் துல்லியமாக மட்டம் செய்யப்பட்டு ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொள்ளும்படி வெகு அற்புதமாய் அடுக்கப்பட்டுக் கட்டப் பட்டுள்ளன!

மாளிகைகளின் கனமான மட்டநிலை மேற்தளத் தட்டுகளை [Terrace Stone Plates] யானைத் தூண்கள் தாங்கும்படி நிறுத்தப் பட்டன. எகிப்தின் கார்னாக் ஆலயத் தூண்கள் [Karnak Temple Pillars], காண்போர் தலை சுற்றும்படிப் பிரமிக்கத் தக்க வடிவில் நிறுத்தப் பட்டவை! அந்தத் தூண்களின் மேலே ஏறிச் செல்லவும், பாறைத் தட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்லவும் செங்கற்களை வைத்துச் சாய்வுத் தளம் [Ramp] கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில தூண்கள் ஒருவித வேலைப்பாடு இல்லாமல் உள்ளன. சில தூண்களில் சிற்ப ஓவியங்கள் நுணுக்கமாகக் கீறப்பட்டு உள்ளன. ஃபாரோ மன்னன் மகுடம் சூடிப் பட்டம் ஏற்றக் கொண்டபின், அவனுக்குத் தனிப்பட்ட புதைப்புப் பிரமிட் கட்டும் பெரும்பணி திட்டமிடப் படுகிறது. கட்டடக் கலைஞர்களும், ஓவியச் சிற்பக் கலைஞர்களும் சேர்ந்து ஃபாரோவின் பிந்தைய நாட்கள் முழுவதும் பணி செய்கிறார்கள். ஃபாரோ மன்னன் மரணம் அடைந்த பின் பிரமிட் வேலைகள் அனைத்தும் நிறுத்தம் அடைகின்றன!

எகிப்தியரின் அடிப்படைப் பணிகள் கலைப் படைப்பாயின

பண்டைக் கால எகிப்தியரின் கலைகள் [ஓவியங்கள், சிற்பங்கள், பாறைக் கீறல் படங்கள், நடனங்கள்] யாவும் பெரும்பான்மையாக அவரது மீன் பிடித்தல், படகு ஓட்டல், வாணிபம் செய்தல், ரொட்டி தயாரித்தல், கூட்டுக் குழு விழா போன்ற அனுதின வாழ்க்கைப் போக்கின் ஒவ்வொரு பழக்கத்தையே பிரதிபலித்தது. பிரமிட் உள்ளறைச் சுவர்கள், புதையறைச் சுவர்கள், ஆலய மதில்கள் ஆகியவற்றில் வரையப் பட்ட ஓவியங்கள் அவரது அனுதின வாழ்க்கை நிகழ்ச்சிகளைத்தான் காட்டின. அந்தக் கால மாந்தரின் நடை, உடை, பிழைப்பு, தொழில், நடனம் ஆகியவை சுவர்களில், தூண்களில் வரையப் பட்டுள்ளன. இறந்தவர் அணிந்திருந்த விலை மதிப்பற்ற வண்ணக் கற்கள் பதித்த தங்க நகைகள், ஒளியோடு புதைப் பேழையில் கிடந்தன. பயன்படுத்தப் பட்ட அரச கலசங்களில் விலங்குகளின் படங்கள், வண்ண ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.

எகிப்தியரின் பிரமிட் மதில், ஆலயச் சுவர், தூண்கள் மீது வெகு நுணுக்கமாக வரையப்பட்ட படங்கள், ஓவியக் கீறல்கள் யாவும் உலகப் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னங்கள். செத்தவர் கடவுளைக் காணச் சென்று, நீடித்த சொர்க்கபுரி வாழ்க்கை பெற அவர் செய்த நற்பணிகளும், அந்த வரை படங்களும் உதவி செய்யும் என்று எகிப்தியர் நம்பினர். அவரது உணவு, உடை, பணியாட்கள், அடிமைகள் ஆகியோரின் படங்கள் வரையப் பட்டு புதை பேழைக்குள் வைக்கப் பட்டுள்ளன.

சிற்பக் கலைஞர், பானைக் குயவர் புரிந்த பணிகள்

சிற்பக் கலைஞர்கள் பண்டை எகிப்தில் மிகவும் தேவையான வல்லுநராகக் கருதப் பட்டனர். நாட்டின் ஃபாரோ மன்னர், அவரது மனைவிமார், அரச வரலாறு பதிப்பாளி, ஆண், பெண் கடவுள்கள், விலங்குகள் ஆகிய வடிவங்களின் சிற்பங்களைச் செதுக்க வேலைக்கு வைத்துக் கொள்ளப் பட்டார்கள். கருங்கற்கள் சிற்பங்கள் போல, வேறு அலபாஸ்டர் எனப்படும் ஒளி மங்கி ஊடுறுவும் பளிங்குக் கற்களும் [Alabaster, a White Translucent Stone] பானைகள், கலங்கள் செய்யவும், சிற்ப வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டன. பானைப் பண்டங்கள் செய்ய செராமிக்ஸ் [Ceramics], களிமண் உபயோக மாயின. அப்பாண்டங்களில் தாதுக் கற்கள் [Mineral Beads] பலவித வண்ணங்களில் கலைத்துவ முறையில் பதிக்கப் பட்டன. கைக்கலை வடிப்பாளிகள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களை உபயோகித்து நகைகள், கத்திகள், ஆயுதங்கள், ஈட்டிகள் செய்தனர்.

எகிப்தியரின் இலக்கியத்தில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது! பிரார்த்தனைப் பாடல்களும், துதிப்பாக்களும் கடவுளை உயர்த்தி எழுதிப் படைக்கப் பட்டவை! அவற்றில் யாவற்றையும் விட முக்கியமான நூல்: ‘மாண்டோரின் சுவடி ‘ [The Book of the Dead] அந்நூலில் செத்தோர் பிற்காலத்தால் மேலுலகில் நீண்ட நெறி வாழ்வை அடைவதற்கு வேண்டிய 200 துதிப் பாசுரங்கள், மந்திர விதிகள் எழுதப் பட்டுள்ளன. எகிப்தியர் மேலும் துணிச்சல் கதைகள், தேவதைக் கதைகள், காதல் கதைகள், பழமொழிகள், பாடல்கள், பொன்மொழிகள், புனைந்துரைக் கதைகள் ஆகியவையும் ஆக்கியதாக அறியப்படுகிறது.

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ www.artchive.com/artchive/E/egyptian.html] From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

17 Egyptian Dancers [From Websites].

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 10, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய விழைந்தால், அந்த வேட்கைக்கும் அவனே அதிபதி! பிரபஞ்சத்தில் எந்த ஓர் உருவமும் மகத்துவத்தில், தோற்றத்தில், கற்பனையில் உதயமாகி நிலைத்தாலும், முதலில் ஓவியன் தன் மனதில் படம் பிடித்த பிறகுதான் கையால் வரையத் துவங்குகிறான்! ‘

ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி

ஓவியக் கலை வடிப்பில் அற்புதர்!

கற்பாறை செதுக்கிய வல்லுநர்!

ஆலய வடிப்பில் உன்னத வித்தகர்!

சிற்பம், சிலைகள், சித்திரச் சிற்பிகள்!

நைல் நதி நாகரிகப் பிறவிகள்!

பூர்வீக உலகில் மலர்ந்த கலைத்துவப் புரட்சிகள்!

5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்து வந்துள்ளன.

புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறுகளில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலிகளும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

நைல் நதி நாகரீக ஓவியப் படைப்புகளின் அம்சங்கள்

3000 ஆண்டுகளாக பண்டை காலத்திய எகிப்தியக் கலைஞர்கள் தமது தனித்துவ ஓவியச் சிற்பக் கட்டிடக் கலைகளில் முனைந்திருந்தனர். அவையே பின்னால் எகிப்திய நாகரீகச் சின்னங்களாக அவரது வரலாற்றையும் வாழ்க்கை முறைகளையும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த 3000 ஆண்டுகளில் எகிப்தியர் கையாண்ட ஓவியப் பாணிகள் அனைத்திலும் வண்ணங்கள், வடிவ அமைப்புகள் யாவும் ஓர் உயர்ந்த ஒருமைப்பாடு கொண்டிருந்தன. எகிப்தியர் ஒரு தனித்துவக் கலவை நிறங்களைப் பயன்படுத்தினர். அவரது ஒவ்வொரு வண்ணமும், மாந்தரின் வெவ்வேறு பண்பைச் சுட்டிக் காட்டியது! ஓவியத்தில் பண்டை எகிப்தியர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருமை, வெண்மை ஆகிய ஆறு நிறங்களைப் பயன்படுத்தினர். அவற்றின் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் அவ்வண்ணத் திரவங்கள் யாவும் உலோகவியத் தாதுக் கலவைகளிலிருந்து [Mineral Compounds] எடுக்கப் பட்டவை! நீர் கலந்த நிறக் கலவைகள் அல்ல!

வண்ணங்கள் அனைத்தும் உலோகவியக் கலவையாக இருந்ததால்தான் ஓவியங்கள் இன்னும் பழுதடையாமல், அழிந்து போகாமல் 3000 ஆண்டுகளாக நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன! பச்சை நிறம் பசுமை, செழுமை, வளர்ச்சி, பயிரினம் ஆகியவற்றைக் காட்டின. மரணக் கடவுளான ஓஸிரிஸ் [Osiris, God of the Dead] பச்சை நிற மேனி கொண்டதாக வரையப் பட்டிருந்தது! சிவப்பு நிறம் ஆற்றலை வலியுறுத்தும். ஆதிக்கம், ஆணவம், ஆங்காரம், வெற்றி, தீக்கனல் ஆகியவற்றைக் காட்டவும் செந்நிறம் கையாளப் பட்டது! கடவுள் இஸிஸ் [God Isis] அதன் குருதி இரண்டும் சிவப்பு நிறத்தில் வரையப் பட்டன. சாத்தான் என அழைக்கப்படும் சேத் தெய்வமான [God Set] கெட்ட துர்காவுக்குச் செந்நிறம் அளிக்கப் பட்டது. சேத் எனப்படும் துர்கா கேடுகளை விளைவிப்பதுடன், எகிப்தில் பெரும் மணற் புயலை [Sand Storms] உண்டாக்கும் தெய்வமாகவும் அஞ்சப்பட்டது! நீல நிறம் நீர்வளத்தைக் காட்டியது. அத்துடன் உலகப் படைப்பு, சொர்க்கபுரி ஆகியவற்றைக் காட்ட நீல நிறம் பயன்பட்டது.

படைப்புக் கடவுளாகக் கருதப்படும் எகிப்திய பிரம்மா, அமுன் [God Amun, The Creator] நீல நிற முகத்துடன் உள்ளதாக வரையப் பட்டிருக்கிறார். மஞ்சள் வண்ணத்தில் காட்டப் பட்ட அத்தனையும் அழிவற்ற நிரந்தர நிலையுறும் சிறப்பு பெற்றவை! தங்கத்தின் நிறம் மஞ்சள். பரிதியின் நிறம் மஞ்சள். ஆனால் பரியின் கனல் சிவப்பு. கடவுளாகக் கருதப்படும் ஃபாரோ மன்னர்கள் மஞ்சள் நிறத்தில் வரையப் பட்டனர். மரணத்தின் நிறம் கருமை. இரவைக் குறிக்கவும், அடித்தளப் பூமியைக் காட்டவும் கருமை நிறம் பயன்படுத்தப் பட்டது. ஓஸிரிஸ் மரணக் கடவுள், இறப்பிற்குப் பிறகு அடையும் வாழ்க்கை ஆகியவைக் கருமை வடிவில் வர்ணிக்கப் பட்டன. வெண்மை நிறம் புனிதம், தூய்மை, புண்ணிய பணிகள், தெய்வாம்சம் ஆகியற்றைக் காட்டியது. ஆலயப் பூசாரிகள் பயன்படுத்தும் பண்டங்கள், கருவிகள் வெள்ளை நிறத்தில் வரையப் பட்டன.

எகிப்திய ஓவியங்களில் காணப்படும் உருவங்கள்

பன்னிற வண்ணங்கள் எகிப்தின் தனித்துவப் பண்புகளைக் குறிப்பிட்டதைப் போல, உருவங்களின் அமைப்புகள் தனித்துவ அம்சங்களைக் காட்டின. சுவர், தூண் ஓவிய வடிவங்கள் அசையாமல் நேராக நின்றன. அல்லது நடந்தன. மற்றும் சில பொது அமைப்புகளை எகிப்திய ஓவியங்களில் நாம் காண முடிகிறது. ஓவிய மாந்தரின் முகங்கள் ஒரு கண் தெரியும்படிக் பக்க வாட்டில் வரையப் பட்டுள்ளன. மாந்தரின் கை, கால்கள் முழுவதும் காட்டப் பட்டன. மனித வடிவத்தின் நடுவுடல் எப்போதும் முன்நோக்கியே இருந்தது. ஃபாரோ மன்னரின் உடம்பைக் காட்டும் போது, அவரது தெய்வீக அம்சத்தையும், உன்னத நிலையைப் போற்றவும் மற்ற நாட்டு மாந்தரைவிட ஓவியத்தில் பெரிதாகக் காட்டினார்கள்.

எகிப்தியர் தமது கலை ஓவியங்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கைக் காட்டினார்கள். தமது ஆலயச் சுவர்களிலும், மரணக் கல்லறைகளிலும் தாம் வாழ்ந்த அன்றாட நிகழ்ச்சிகளை வரைந்தார்கள். தமது நாட்டு மனித இனம், தம்மிடம் வளரும் விலங்கினங்கள் ஆகியவற்றை ஓவியங்களாகவும், சிற்ப வடிவங்களாகவும் வடித்தார்கள். தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை ஆகிய உலோகங்களில் மானிட, விலங்கின வடிவங்கள், நகைகள், பயன்படுத்திய கலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். எல்லாவற்றிலும், அவரது சுவர் ஓவியங்களும், தூண் ஓவியங்களும் எழிலானவை. பலரும் அறிந்து புகழப் பெற்றவை. அந்த அரிய ஓவியங்களில் எகிப்திய மாந்தர் அனுதினமும் செய்யும் உணவு தயாரிப்புகள், வாணிபங்கள், மீன் பிடிப்பு, படகோட்டல், கப்பல் மிதப்பு, குடும்பச் சந்திப்பு ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.

அந்த ஓவியங்களில் சில மரண மடைந்தோர் மேலுலகில் அழியாத நிரந்தர நிலை பெறுவதற்கு வேண்டிய உதவிகளும் செய்பவை. மரணப் பேழையில் வைக்கப்படும் உயிர் பிரிந்த உடலைச் சுற்றிலும், அவர் புரிந்த நற்பணிகள் எழுதப்பட்டுப் பதிவாதி புதைக்கப் படுகின்றன. மாண்ட பின்பு ஆன்மாவுக்கு வழிகாட்டி உதவ செய்யப் பல தகவல் மரணப் பெட்டிக்குள் வைக்கப் பட்டன! அத்துடன் செத்தவரின் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் ஓவியப் படங்களும், அவரது உணவு, உடை போன்றைகளும் உள்ளே புதைக்கப் பட்டன. அப்படி எகிப்தியர் செய்ததின் காரணம் என்ன ? மரண மடைந்த நபர் உயிரோடு உள்ள போது, அவருடன் வாழ்ந்தோரும், அவருக்குத் தேவைப் பட்டவையும், அவரது மரணத்திற்குப் பிறகும் வேண்டி யுள்ளன என்பது பண்டைக் கால எகிப்தியரின் நம்பிக்கை.

எகிப்தியர் தீட்டிய அரிய ஓவியங்கள்

பலவித நோக்கமைப்புகள் [Perspectives] இணைந்து எகிப்தியர் தமது ஓவியங்களைத் தீட்டி யுள்ளார்கள். பெரும்பான்மையாக பக்க வடிவுத் தோற்றங்களே [Side View] பல ஓவியங்களில் காண முடிகிறது! மரணம் எய்திய ஒரு மாந்தரின் வரலாற்றை, சிவப்பு, ஆரஞ்ச், நீலம், வெண்மை நிறங்களில் ஒளிரும் வண்ண ஓவியங்களாக வரைந்து, அவரது உடலுடன் வைத்தார்கள். முதலில் ஓவியக் கலைஞன் கரித் துண்டால் பானை ஒன்றின் மீது வரைந்து, பயிற்சி அடைந்த பிறகு அதைப் பெரிதாக்கிச் சுவரில் மறுபடியும் கரியில் வரைகிறான். முதலில் தெளிவற்று வரையவும், அழிக்கவும், மீண்டும் சிறப்பாக்கவும் கரித்துண்டு மிகவும் ஏதுவானது. பிறகு வண்ணக் கலவைகள் சுவர் ஓவியங்களில் படக் கோடுகளின் உள்ளே நிரப்பப் படுகின்றன. எகிப்தியர் பயன்படுத்திய தூரிகை எவ்விதம் செய்யப் பட்டது ? நார் நாரான மரக் குச்சிகளின் முனை தூரிகையாகக் கலைஞனுக்கு உபயோக மானது. சுவர்கள் முதலில் மண்ணில் கட்டப்பட்டுப் பிறகு சுண்ணத்தால் பூசப்பட்டவை. ஃபாரோ மன்னர் காலத்திய ஓவியர்கள் வண்ண அலைகளை வரைந்து, அடுக்கடுக்கான விளைவுகளைக் காட்டினர். மேலும் சுவர் ஓவியங்களைப் பாதுகாக்க எகிப்தியர் ஒருவித வர்ணக் காப்பு ஆயிலைப் [Varvish] உபயோகித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது எதிலிருந்து உண்டானது அல்லது எப்பண்டங்கள் சேர்ந்து கலக்கப் பட்டது என்பது அறிய முடியாமல் ஒரு புதிராகவே உள்ளது!

அடுத்து எகிப்தியரின் ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றிக் காண்போம்.

(தொடரும்)

தகவல்:

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

13 Egyptian Art & Paintings [Several Websites]

14 Egypt: Art & Architecture [Several Websites]

15 Egyptian Art [ www.artchive.com/artchive/E/egyptian.html] From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 3, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


ஓ! உறங்குகிறாய் நீயோ!

உறக்கம் என்ப தென்ன ?

இறப்பின் எதிர்ப் பிம்பம் அது!

சிறப்பாக உன்னதப் படைப்புகள்

பிறக்கட்டும்,

மறைந்த பிறகு நின் பிம்பம்

இறவாத ஓர்

நிரந்தரம் நிலை

பெறுவதற்கு!

ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி

‘உன் மண்டை ஓட்டை எடு; எலும்புகளை சேகரி; மற்ற உடற் கூறுகளையும் சேர்த்து ஒட்டியுள்ள மண்ணை உடற் சதையிலிருந்து உலுக்கி விட்டு நீக்கு! …. உந்தன் கரங்களைப் பற்றி உன்னை சொர்க்க புரிக்கு அழைத்துப் போக, வாசல் காப்போன் உன்னை நோக்கி வெளியிலிருந்து வருகின்றான்! ‘

பண்டைப் பேராட்சிப் பிரமிட் வாசகம்

மூவாயிர வயது தாண்டிய ஆலயம்!

ஆபூ சிம்பள் ஆலயச் சிற்பகம்!

சிற்பம், சிலைகள், சித்திரத் களஞ்சியம்.

கற்பாறை குடைந்து கட்டிய அற்புதம்!

நைல் நதி நாகரிகப் பிறப்பகம்!

ஆபூ சிம்பள் கற்குகை ஆலயங்களின் சிறப்புகள்

5000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கையான பாறைக் குன்றுகளைக் குடைந்து பிரமிக்கத் தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கிய ஆபூ சிம்பள் ஆலயங்கள் [Abu Simbel Temples] போன்று உலகிலே வேறு எந்த நாட்டிலும் காண முடியாது! அப்பெரும் இரண்டு ஆலயங்களை ஃபாரோ வேந்தன் ராம்ஸிஸ் [Ramses II] கி.மு.(1279-1213) ஆண்டுகளில் தனது பராக்கிரமத்தையும், தெய்வீக உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட ரா-ஹாராக்டே [Ra-Harakhte] ஞாபகமாகவும், மனைவி நெஃபர்டாரி [Nefertari] நினைவாகவும் அமைத்ததாக அறியப்படுகிறது. 1813 ஆம் ஆண்டில் எகிப்தின் நைல் நதி நாகரீகத்தைக் காண வந்த ஜே.எல் புர்காரெட் [J.L. Burckhardt] என்பவர் நைல் நதியைக் கடந்து குன்றுகளைப் பார்வை யிட்ட போது, மணல் மூடிய அழகிய ஓர் ஆலயத்தை நவீன சூடான் எல்லைப் பகுதியில் கண்டுபிடித்தார். நைல் நதியில் அமைக்கப் பட்டுள்ள உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் உயர்ந்த பேரணையிலிருந்து சுமார் 170 மைல் தூரத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற அப்பெரும் இரண்டு ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

ராம்ஸிஸ் வேந்தர் தனக்காகக் கட்டிய முதல் ஆபூ சிம்பள் ஆலயத்தின் வாசலில் 67 அடி உயரமுள்ள நான்கு பூத வடிவான சிற்பச்சிலை மன்னர் வீற்றிருக்கும் கம்பீரமான காட்சி காண்போரைப் பெரு வியப்பில் தள்ளிவிடும்! ஆலய முகப்பில் சிற்பச் சிலைகள் வீற்றிருக்கும் தளப்பகுதி மட்டும் 120 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்டது! வேந்தரின் இரண்டு கற்சிலைகள் வலது புறமும், அவற்றைப் போல் இரண்டு கற்சிலைகள் இடது புறமும் பிரம்மாண்டமாக அமர்ந்துள்ளன. நான்கு பூதச் சிலைகளில் இடப்புறத்தில் உள்ள ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப் படுகிறது! அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் நேரமைப்பு [Temple Alignment] முதலில் துல்லியமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை பரிதி கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் உள்ளிருக்கும் சன்னிதியில் இருக்கும் தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப் பட்டுள்ளது!

ஆபூ சிம்பளின் அடுத்த ஆலயம் ஹாதுர் [Hathur] என்னும் எழில் தேவதைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அதை ராமெஸிஸ் வேந்தன் காதல், எழில் தேவதையான ஹாதுருக்கு [Hathur] அர்ப்பணம் செய்ததோடு, தனது மனைவி நெஃபர்டாரி நினைவாகவும் கட்டியதாக அறியப்படுகிறது. காதலிசை ஆலயத்தின் முன்பு 33 அடி உயரத்தில் பிரமிக்கத் தக்க ஆறு சிற்பச் சிலைகள் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கின்றன! அப்பெரும் சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அந்த இரண்டு கோயில்கள் சூடானின் எல்லையில் இருப்பதால் பல நூற்றாண்டுகள் பலரும் அறியாத வண்ணம் 1813 ஆண்டுவரை மறைந்தே இருந்து விட்டன. 1817 இல் இரண்டு ஆலயங்களையும் இத்தாலிய எகிப்திய புதைச் சின்னவாதி [Egyptologist] கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி [Giovanni Batissta Belzoni] என்பரால் துருவி ஆராயப் பட்டு ஃபாரோ அரசர், அரசிகளின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சிற்பங்கள், சிலைகள், சித்திரங்கள் யாவும் சீராக்கப் பட்டு, உலகிலே மிக உன்னத நாகரீகச் சின்னக் களஞ்சியங்களாய்ப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!

ஆபூ சிம்பளில் உள்ள பேராலயம்

ஃபாரோ பரம்பரை மன்னன் இரண்டாம் ராம்ஸெஸ் கட்டிய ஆபூ சிம்பள் ஆலயங்களைப் பின்வந்த மதங்கள் எவையும் மாற்றமோ அல்லது சிதைவோ செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 2001 மே 2 ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானில் மூடத்தனமான தாலிபான் மூர்க்கர்கள் உலகப் பெரும் உயரம் கொண்ட 2000 ஆண்டு வயது கடந்த புத்தச் சிலையை இஸ்லாமுக்குப் புறம்பானது என்று இகழ்ந்து தகர்த்துச் சிதைத்தது வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு வன்மை நிகழ்ச்சியாகும்! ஆபூ சிம்பள் ஆலய முகப்பின் சிகரத்தில் வரிசையாக ஆஃப்ரிகன் குரங்குகளின் சிலைகள் சூரியோதயத்தை வரவேற்றுச் சிரிப்பவை போல அமைக்கப் பட்டுள்ளன! ஆலயக் கதவின் அருகே அரசரின் பெயர் ‘செர்மாத்ரா ‘ [Ser-Ma ‘at-Ra] என்று எழிலுடன் எழுதப் பட்டிருக்கிறது. முகப்புக்கு அருகில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான இரண்டாம் ராம்ஸெஸ் சிலையின் கால்களுக்கிடையே சிறு சிறு சிலைகளாக அவரது அன்னை முத்தூய் [Mut-tuy], மனைவி நெஃபர்டாரி, [Nefertari] புதல்வர், புதல்வியர் ஆக்கியோர் சிலைகளும் அமைந்துள்ளன. ராம்ஸெஸ்ஸின் திருமண நிகழ்ச்சிகள், அவரது போர் முறைகள் கூட சித்திரங்களாகச் சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ளன. ஹிட்டைட்ஸ் மன்னனின் மகளை ஃபாரோ வேந்தன் ராம்ஸெஸ் [King of the Hittites] திருமணம் புரிந்த நிகழ்ச்சி கூட ஒரு சுவரில் வரையப் பட்டிருக்கிறது.

ஆலய வாசற் படிகளைத் தாண்டி உள்ளே நுழைந்தால், எட்டுத் தூண்கள் தாங்கிய பெரு மண்டபம் ஒன்று எதிர்ப்படுகிறது. எட்டுத் தூண்களிலும் இரண்டாம் ராம்ஸெஸ்ஸின் சிலைகள் ஃபாரோ பரம்பரை மன்னரின் மரணக் கடவுளான, ‘ஓஸிரிஸ் ‘ [Osiris, God of the Dead] வடிவத்தில் செதுக்கப் பட்டுள்ளன! ஃபாரோ பரம்பரை மன்னர்களின் முதலான தெய்வம் சூரியக் கடவுள் என்று அறியப் படுகிறது. அதுபோல் மன்னர்கள் மரணக் கடவுளான ஓஸிரிஸ் தெய்வத்தின் மீதும் மதிப்பு வைத்திருந்தது காணப்படுகிறது. பண்டைக் கால எகிப்தில், ஃபாரோ மன்னர்கள் உள்பட ஏனைய எகிப்தியர்களும் மரணக் கடவுளையும் தொழுது வந்ததாகத் தெரிகிறது. புராண எகிப்து மத நூல்களில் ஓஸிரிஸ் தேவன் மனிதனாக இருந்து, மண்ணிலே வாழ்ந்து எப்படியோ மனித ஆற்றலுக்கும் மேலான ஓர் அசுர சக்தியைப் பெற்று, மரணத்துக்குப் பிறகு மாபெரும் பிரதேசத்தை ஆண்டதாகவும், அவரைப் போல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தோர் அனைவரும் தமது மரணத்திற்குப் பிறகு அவரது பிரதேசத்தில் வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது!

அந்த எழில் உள் மாளிகைச் சுவர்களில் இரண்டாம் ராம்ஸெஸ் கதேஷ்ப் போரில் [Battle os Kadesh] ஹிட்டைட்ஸ் மன்னருடன் புரிந்த போர் ஓவியமாக வரையப் பட்டிருக்கிறது. ராம்ஸெஸ் பெரிய மாளிகையைத் தாண்டி இன்னும் உள்ளே சென்று சிறு மாளிகைக்குள் நுழைந்தால், அங்கே நான்கு சதுரத் தூண்களைக் காணலாம். அந்த சிறு மாளிகை ‘கோமகனார் மாளிகை ‘ [Hall of the Nobles] என்று குறிப்பிடப் படுகிறது. இறுதியில் சன்னதியின் புனித இடத்திற்கு வருகிறோம். அங்குதான் ரா-ஹாரக்டே, பிரா, அமுன்-ரா, ராம்ஸெஸ் வேந்தர் [Ra-Harakhte, Prah, Amun-Ra, King Ramses] ஆகிய நான்கு சிலைகள் உள்ளன. அபூ சிம்பள் முதல் ஆலயத்தின் சிறப்பு: ஆண்டுக்கு இரண்டு முறைகள் [பிப்ரவரி 21, அக்டோபர் 22] பரிதியின் ஒளி நேரடியாகப் புனிதச் சன்னதியின் மேல் படுகிறது. அந்த தேதிகளின் முக்கியத்துவம் என்ன ? பிப்ரவரி 21 ஆம் தேதி ராம்ஸெஸ் மன்னர் பிறந்த நாள்! அடுத்து அக்டோபர் 22 ஆம் தேதி மன்னர் மகுடம் சூடிய நாள்.

ஆபூ சிம்பளில் உள்ள சிற்றாலயம்

இரண்டாம் ராம்ஸெஸ் தனக்குக் கட்டிய பேராலயத்திற்கு வடக்கில் சிற்றாலயத்தைத் தன் எழில் மனைவி நெஃபர்டாரிக்குக் கட்டியுள்ளதாக அறியப் படுகிறது. ஆலயம் காதல் எழில் தேவதையான ஹாதுருக்கு [Hathur] அர்ப்பணம் செய்யப்பட்டது! ஆலய முன் முகப்பில் ஆறு சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. அவற்றில் நான் கு சிலைகள் இரண்டாம் ராம்ஸெஸ் மன்னருக்கும், இரண்டு சிலைகள் அவரது மனைவி நெஃபர்டாரிக்கும் செதுக்கப் பட்டிருக்கின்றன. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் ஆறு தூண்கள் நிற்கும் ஒரு மாளிகைக் காணலாம். ஆறு தூண்களிலும் ஹாதுர் பெண் தேவதையின் தலைகள் அமைந்துள்ளன. கிழக்குத் திக்கில் உள்ள சுவரில் ராம்ஸெஸ் மன்னன் ரா-ஹாரக்டே, அமுன்-ரா தேவர்கள் முன்பாக எதிரிகளைத் தாக்கி வீழ்த்தும் காட்சி வரையப் பட்டிருக்கிறது! மற்றுள்ள சுவர்களில் ராம்ஸெஸ் மன்னனும், மனைவி நெஃபர்டாரியும் தெய்வங்களுக்குப் பூசை செய்து தொழும் நிகழ்ச்சி காட்டப் பட்டுள்ளது. உள்ளே சன்னதியில் மாபெரும் ஹாதுர் பெண் தெய்வச்சிலைக் காண்போரைப் பிரமிக்க வைக்கிறது. அதன் மேலேதான் மனிதன் செதுக்கிப் படைத்த, மிக உயர்ந்த செயற்கையான வளை கோபுரம் அற்புதமாய்ப் பார்ப்போரை ஊர்ந்திடும் எறும்புகளாக ஆக்குகிறது!

அடுத்து எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் பற்றியும், ஒப்பற்றக் கட்டிடக் கலைத்துவம் பற்றியும் காண்போம்.

(தொடரும்)

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 27, 2005)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க மனிதச் சிங்கம், ஆலயங்கள் -3 (The Great Sphinx & Abu Simbel Temples of Egypt)

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


சிரம் தூக்கிப் படுத்துள்ள மனிதச் சிங்கம்!

ஆபூ சிம்பெல் ஆலயச் சிற்பகம்!

நைல் நதி நாகரிகத் தோரணம்!

மூவாயிர வயது தாண்டிய ஆலயம்!

சிற்பம், சித்திரம் நிற்கும் களஞ்சியம்.

கற்பாறை குடைந்து கட்டிய அற்புதம்!

‘உலகின் அற்புதங்களைக் காண்பதற்குப் பிற தேசங்களுக்குப் பயணம் செய்ய உங்களின் நட்பு எனக்கு வேண்டுமே தவிர, சோம்பித் திரிந்து கொண்டு வீட்டுக்குள்ளே முடங்கி மங்கிப் போய் முதுமையில் தேய்ந்து போக மாட்டேன். ‘

வில்லியம் ஷேக்ஸ்பியர் [In Two Gentlemen at Verona]

எகிப்தில் உள்ள உலகப் பெரும் மனித முகச் சிங்கம்

1798 ஆம் ஆண்டில் நெப்போலியனின் படை வீரர்கள் எகிப்தின் குறுக்கே சென்ற போது, மகாப் பெரும் மனிதத் தலைச் சிங்கம் மண்மூடி இருப்பது மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது. புராண சிங்கத்தின் கட்டுமானக் காலம் கி.மு.2540 என்றும், அதனைக் கட்டியவர் கீஸாவில் இரண்டாவது பிரமிட் அமைத்த ஃபாரோ வேந்தரான காஃபிரேவாக [Pharao King Khafre] இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது! வெஸ்ட், ஸ்கோக் என்பவர் இருவரும் [John Anthony West & Robert Schock] சிங்க வடிவில் நீர் அரித்த தடங்களைக் [Water Erosion Marks] கண்டுபிடித்து ஸ்ஃபிங்ஸ் (7000-10,000) ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப் பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள்! ஸ்ஃபிங்ஸ் என்று சொல்லும் போது, பலர் எகிப்தின் மகாப் பெரும் மனிதத் தலை சிங்கம் ஒன்றைத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எகிப்தில் மற்ற சிறு சிறு மனிதத் தலைச் சிங்கங்கள் பிற கிரேக்க, ரஷ்யக் கலாச்சாரங்களிலும் அவற்றைப் போல் இருப்பதாக அறியப் படுகிறது. 1854 இல் நினெவே என்னும் இடத்தில் [Nineveh (Assyria)] ஓர் அரண்மனையின் வாசல் புறத்தைத் தோண்டிய போது, 5 அடி நீளம், 5 அடி உயரமுள்ள இரண்டு அலபாஸ்டர் ஸ்ஃபிங்ஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டன என்று லேயார்டு [British Archaeological Pioneer, Austen Henry Layard] என்பவர் எழுதுகிறார். அந்த அதிசயச் சிங்கங்களுக்கு இறக்கைகள் இருந்ததோடு, ஆபரண மகுடமும், தாடி யில்லாமையும் தெரிந்தன!

எகிப்தின் பல்வேறு முகச் சிங்கங்கள்

மூன்று வித முகங்கள் கொண்ட சிங்கங்கள் எகிப்தில் இருந்ததை நாம் இப்போது அறிகிறோம். 1. கிரிஸோஃபிங்ஸ் என்னும் ஆட்டுத் தலைச் சிங்கம் [Crisophinx (Lion Body with Ram Head)] 2. ஹையரோஸ்ஃபிங்ஸ் என்னும் கழுகுத் தலைச் சிங்கம் [Hierocosphinx (Lion Body with Hawk Head)] 3. ஆன்ரோஸ்ஃபிங்ஸ் என்னும் மனிதத் தலைச் சிங்கம் [Androsphinx (Lion Body with Human Head)]. கோயில் வாசல்களில் பாதுகாப்பு வடிவங்களாய் வரிசையாக அமைக்கப் பட்டிருக்கும் சிங்கங்கள் சாதாரணமானவை. வரிசையாக அமர்ந்திருக்கும் ஆட்டுத் தலைச் சிங்கச் சிலைகளை எகிப்தின் லக்ஸர், கார்நாக் [Luxor & Karnak in Egypt] என்னும் இடங்களில் காணலாம். பல்லாயிரம் ஆண்டுகள் மணற்புயலில் மூழ்கிப் போன பண்டைய சிங்கச் சிலைகளும் புதிதாய்க் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

1994 ஆம் ஆண்டில் ஜான் வெஸ் எம்பரர் [Jean Yves Empereur] அலெக்ஸாண்டிரா துறைமுகத்தின் கடற்தளத்தைத் தோண்டி ஆராய்ந்ததில் ஃபாரோ காலத்திய கலங்கரைக் கோபுரத்தின் [Light House Tower] சிதைவுப் பகுதிகளைக் கண்டெடுத்தார். அத்துடன் 26 ஸ்ஃபிங்ஸ் சிற்பங்களைப் [From: 12 Dynasty Sesostris III (B.C.1991-1786) To 26 Dynasty Psamtik III (B.C.525)] புதைகடலில் கண்டெடுத்தார். ஸ்ஃபிங்ஸ் என்றால் கிரேக்க மொழியில் ‘கழுத்தை முறி ‘ என்று அர்த்தம் கொடுக்கும். அகப்படும் விலங்குகளின் கழுத்தைத் திருகிக் கொல்லும் சிங்கத்தைக் குறிப்பிடவே, கிரேக்கர் அவ்விதம் பெயரிட்டுஅழைத்தனர்.

பூத மனிதச் சிங்கத்தின் வயதும், வடிவமும்

கெய்ரோவுக்கு ஆறு மைல் மேற்கே உள்ள எகிப்தின் கீஸா பீட பூமியில் எல்லாவற்றுக்கும் பெரிய மனித முகச் சிங்கம் கட்டப் பட்டிருக்கிறது. அது ஃபாரோ வேந்தர்களின் பண்டைய தலைநகரான மெம்ஃபிஸ் [Memphis] பகுதியிலே கிழக்கு நோக்கி உள்ளது. அங்குதான் கூஃபு, காஃபிரே, மென்கெளரா [Khufu, Khafre, Menkaura] எனப்படும் முப்பெரும் பிரமிட்கள் நிறுவகமாகி யுள்ளன. கீஸாதான் எகிப்தின் பண்பாட்டுக் கலாச்சார நாகரீகம் செழித்த பகுதியாகக் கருதப் படுகிறது. வேந்தருக்குரிய பெரிய பிரமிட்களின் அருகே அவரது பட்டதரசிகளின் சிறிய பிரமிட்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன.

மகாப் பெரிய ஸ்ஃபிங்ஸ் உடல் ஆண் சிங்கத்தைப் போன்றும், சிரம் மனித முகத்தைப் பெற்றும், 241 அடி நீளம், 66 அடி உயரமும் கொண்டு பிரம்மாண்டமான தோற்றமுடன் படுத்திருக்கிறது. கீஸா பீட பூமியைத் தோண்டி, இயற்கையாக உள்ளமைந்த மென்மையான சுண்ணக் கல்லில் [Lime Stone] சிற்பமாய்ச் செதுக்கப் பட்டது. சிங்கத்தின் மனிதத் தலை மீது ஒரு காலத்தில் ‘நாக மகுடம் ‘ [Uraeus (Rearing Cobra Headpiece)] ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. கிளியோபாத்ராவின் கிரீடத்தில் உள்ளது போல் இருந்த தலை தூக்கிய சிங்கத்தின் நாகம், தீய சக்திகளிலிருந்து நாட்டைக் காப்பதற்கு வைக்கப் பட்டிருந்ததாகக் கருதப் படுகிறது. சிங்கத்தின் முன்பாக நீட்டிய கால்களுக்கிடையில் கி.மு.(1400-1390) ஆண்டில் ஆண்டு வந்த துத்மோஸ் [Thutmose IV] வேந்தனின் கல்வெட்டுத் தட்டு [Granite Stela] ஒன்று நிறுத்தப் பட்டுள்ளது. மேலும் கல்வெட்டுக்கு முன்பாக கி.மு.(1279-1213) இல் ஆண்ட வேந்தன் ராமிஸிஸ் [Rameses II] காலத்துக் கோயிற் பீடம் ஒன்றும் வரலாற்றுச் சின்னமாய் இருக்கிறது.

கி.மு.2540 இல் ஃபாரோ மன்னர்களின் பரம்பரையான காஃபிரி வேந்தன் கீஸாவில் தனக்குரிய பிரமிடைக் கட்டியதோடு அருகே, பிரமிக்கத் தக்க அந்த மனிதச் சிங்கத்தையும் அமைத்தான் என்று எகிப்திய வரலாறு ஒன்று கூறுகிறது. பிரிட்டாஷ் பூதளவாதி அண்டனி வெஸ்ட் எகிப்தின் பல நூற்றாண்டு காலநிலைச் சீர்போக்குகளை ஆய்ந்து, பாலைவனத்தில் அடிக்கும் மணற்புயலால் [Sand Storm] ஏற்படாது, நீர் அரிப்பால் [Water Erosion] மனிதத் தலைச் சிங்கத்தின் வடிவம் சீர்குலைந்து போனது என்று குறிப்பிடுகிறார். அக்கூற்றைப் பூதளவாதி ராபர்ட் ஸ்கோக்கும் சரியென்றே ஒப்புக் கொள்கிறார். மேலும் வெஸ்ட், ஸ்கோக் இருவரும் பூத வடிவான ஸ்ஃபிங்ஸ் (7000-10,000) ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்னும் வேறுபட்ட ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருகிறார்கள்!

பிரம்மாண்டமான ஆபூ சிம்பள் கற்குகை ஆலயங்கள்

5000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்கையான பாறைக் குன்றுகளைக் குடைந்து பிரமிக்கத் தக்க முறையில் பேரெழிலுடன் செதுக்கிய அபூ சிம்பள் ஆலயங்கள் [Abu Simbel Temples] போன்று உலகிலே வேறு எந்த நாட்டிலும் காண முடியாது! அப்பெரும் இரண்டு ஆலயங்களை ஃபாரோ வேந்தன் ராமெஸிஸ் [Ramesses II] கி.மு.(1279-1213) ஆண்டுகளில் தனது பராக்கிரமத்தையும், தெய்வீக உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட ரிஹாராக்தே [Reharakhte] ஞாபகமாகவும், மனைவி நெஃபிர்டாரி [Nefertari] நினைவாகவும் அமைத்ததாக அறியப்படுகிறது. 1813 ஆம் ஆண்டில் எகிப்தின் நைல் நதி நாகரீகத்தைக் காண வந்த ஜே.எல் பர்காரெட் [J.L. Burckhardt] என்பவர் நைல் நதியைக் கடந்து குன்றுகளைப் பார்வை யிட்ட போது, மணல் மூடிய அழகிய ஓர் ஆலயத்தை நவீன சூடான் எல்லைப் பகுதியில் கண்டுபிடித்தார். நைல் நதியில் அமைக்கப் பட்டுள்ள உலகப் பெரும் அணைகளில் ஒன்றான அஸ்வான் உயர்ந்த பேரணையிலிருந்து சுமார் 170 மைல் தூரத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற அப்பெரும் இரண்டு ஆலயங்கள் கட்டப் பட்டிருகின்றன.

ராமெஸ்ஸிஸ் வேந்தர் தனக்காகக் கட்டிய முதல் ஆபூ சிம்பள் ஆலயத்தின் வாசலில் 67 அடி உயரமுள்ள நான்கு பூத வடிவான சிற்பச்சிலை மன்னர்கள் வீற்றிருக்கும் கம்பீரமான காட்சி காண்போரை பெரு வியப்பில் தள்ளிவிடும்! ஆலய முகப்பில் சிற்பச் சிலைகள் வீற்றிருக்கும் தளப்பகுதி மட்டும் 120 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்டது! வேந்தரின் இரண்டு கற்சிலைகள் வலது புறமும், அவற்றைப் போல் இரண்டு கற்சிலைகள் இடது புறமும் பிரம்மாண்டமாக அமர்ந்துள்ளன. நான்கு பூதச் சிலைகளில் இடப்புறத்தில் உள்ள ஒன்று மட்டும் பூகம்பத்தால் உடைந்து போனதாக அறியப் படுகிறது! அந்த ஆலயம் கிழக்கு நோக்கி நிற்கிறது. சூரியக் கடவுளின் சிற்பம் தலை வாயிலின் மேலே உயரத்தில் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் நேரமைப்பு [Temple Alignment] முதலில் துள்ளயமாக நகர்த்தப் பட்டு, ஆண்டுக்கு இருமுறை பரிதி கடக்கும் போது, அதன் ஒளிக்கதிர்கள் உள்ளிருக்கும் சன்னிதியில் இருக்கும் தெய்வங்கள் மீது நேராக விழும்படி நூதனப் பொறியியற் திறமையுடன் கட்டப் பட்டுள்ளது!

நவீன உலகில் நைல் நதி தீரத்தில் அஸ்வான் உயரப் பேரணை [Aswan High Dam] கட்டப்பட்ட சமயத்தில் (1960-1970) நாஸர் ஏரியில் [Lake Nasser] நீர் மட்டம் உயர்ந்து, உலகப் புகழ்பெற்ற அவ்விரு புராதனக் கோயில்களையும் நிரந்தரமாய் மூழ்க்கிவிடப் பயமுறுத்தியது! உடனே எகிப்தின் அரசாங்கம் ஆலயத்தை மாற்றி அமைக்க ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானக் கலாச்சாரக் கல்விக் குழுவின் [UNESCO (United Nation Educational, Scientific, Cultural Organization)] உதவியை நாடியது. உதவியும் கிடைத்து (1964-1968) ஆண்டுகளில், இரண்டு கோயில்களும் பிரித்து நீக்கப்பட்டு, நாஸர் ஏரிக்கு அப்பால் 200 அடி [60 மீடர்] உயரத்தில் இருக்கும் மணற் பாறைக் குன்றின் மீது அமைக்கப்பட்டு, வரலாற்றிலே மகத்தான மீள்படைப்பு நிகழ்ச்சி நடத்திக் காட்டப் பட்டது!

ஆபூ சிம்பளின் அடுத்த ஆலயம் ஹாதர் [Hathor] என்னும் இடத்தில் உள்ளது. அதை ராமெஸிஸ் வேந்தன் காதலிசைத் தேவதைக்குச் சமர்ப்பணம் செய்து, தனது மனைவி நெஃபர்டாரி நினைவிற்குக் கட்டியதாக அறியப்படுகிறது. காதலிசை ஆலயத்தின் முன்பு 33 அடி உயரத்தில் ஆறு தூண்களில் பிரமிக்கத் தக்க ஆறு சிற்பச் சிலைகள் செதுக்கப்பட்டு கம்பீரமாக நிற்கின்றன! அப்பெரும் சிற்பங்களின் கீழே அவரது குழந்தைகளின் வடிவச் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அக்கோயில்கள் சூடானின் எல்லையில் இருப்பதால் பல நூற்றாண்டுகள் பலரும் அறியாத வண்ணம் 1813 ஆண்டுவரை மறைந்தே இருந்து விட்டன. 1817 இல் இரண்டு ஆலயங்களையும் இத்தாலிய எகிப்திய புதைச் சின்னவாதி [Egyptologist] கியோவன்னி பாட்டிஸ்டா பெல்ஸானி [Giovanni Batissta Belzoni] என்பரால் துருவி ஆராயப் பட்டு ஃபாரோ அரசர், அரசிகளின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சிற்பங்கள், சிலைகள், சித்திரங்கள் சீராக்கப் பட்டு, உலகிலே மிக உன்னத நாகரீகக் களஞ்சியங்களாய்ப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன!

(தொடரும்)

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 22, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்!

ஒயில் மிகும் கணிதக் கூம்பகம்,

நைல் நதி நாகரிகக் கோபுரம்.

ஐயாயிர வயது தாண்டிய கோணகம்,

சதுரப் பீடம்மேல் சாய்ந்த மேடகம்.

புரவலர் உடல்களைப் புதைத்த பெட்டகம்,

சிற்பம், சின்னம் அடங்கிய களஞ்சியம்.

கற்பாறை அடுக்கிக் கட்டிய சிற்பகம்,

அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்!

‘புராதன எகிப்திய நிபுணர் போன்று, இதுவரைப் பண்டைய அல்லது நவீன மாந்தர் தேசீய மயமான ஓர் உன்னதக் கட்டிடக் கலைத்துவத் திறனைச் சிறுமை சிறிது மின்றி, மகத்தான முறையில் பிரம்மாண்டமாகச் சிந்தையில் கொண்டு படைத்தவர், எவரும் இந்த உலகிலே கிடையாது. ‘

ஜான் ஃபிராங்காய்ஸ் சாம்பொலையன் [Jean Francois Champollion, Founder of Modern Egyptology]

வரலாற்றைக் கூறும் பிரமிட் கோபுரங்கள்

5000 ஆண்டுகளாக உலகத்தின் புராதன ஏழு விந்தைகளில் ஒன்றான எகிப்தின் பிரமிட் ஒன்றுதான் கால வெள்ளம் தகர்த்து அழிக்காதபடிக் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது! மற்ற ஆறு விந்தைகளும் அழிந்து இப்போது நமக்குத் தெரியாமல் போய்விட்டன. பிரமிட் கோபுரங்களைக் கட்டிய ஃபாரோ சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கு முன்பு, எகிப்தின் நைல் நதி தீரத்தைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். புராதன எகிப்தியர் தமது செழிப்பான நிலப்படுகையைக் ‘கீமெத் ‘ [Kemet] என்று அழைத்தனர். கீமெத் என்றால் கருமண் என்று பொருள். ஒவ்வோர் ஆண்டிலும் மழைக் காலத்தில் நைல் நதி நீரோட்டத்தால் நிரம்பி வழிந்தபின், வயல்களில் தங்கிப் போன செழிப்பான கரிய களிமண்ணையே கீமெத் குறிப்பிடுகிறது. எகிப்திய பாலைவன மணலின் நிறம் மஞ்சள் கலந்த செந்நிறம். அவர்கள் பாலைவனத்தை அந்த நாளில் ‘டெஸ்ரெட் ‘ [Deshret] என்று குறிப்பிட்டார்கள். டெஸ்ரெட் என்றால் செந்நிறம் என்று அர்த்தம். அச்சொல்லே பின்னால் டெஸர்ட் [Desert] என்று யாவராலும் அழைக்கப் பட்டது.

கி.மு.3000 ஆண்டு காலத்தில் தலைதூக்கி வளர்ச்சி அடைந்துள்ள எகிப்தின் நாகரீக வரலாற்றை, அதன் பொற்கால யுகம் என்று குறிப்பிடலாம். அந்த காலத்து வேந்தர் உடலைப் புதைக்க பிரம்மாண்டமாகக் கட்டிய பிரமிட் கோபுரங்கள் அவற்றுக்குச் சான்றுகளைப் பறைசாற்றுகின்றன. பாலைவனச் செந்நிற மண் படலம் எகிப்த் நாட்டின் பரப்பில் 95% பகுதியைச் சிவப்புக் கம்பளம் போல் ஆக்கிரமித்துள்ளது. இடையே உள்ள நைல் நதியின் செழிப்பான இருபுறக் கரைகளிலும் பசுமைக் கம்பளங்கள் செழிப்பாய் விரிக்கப் பட்டுள்ளன. உலகிலே மிக நீளமான நைல் நதி 4160 மைல் தூரம் ஓடி, ஆஃபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரீக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்திருக்கிறது.

எகிப்த் நாட்டில் உறுதியான பீடங்களின் மீது எழுப்பி யிருக்கும் 104 பிரமிட் கோபுரங்கள் நாகரீகச் சின்னங்களாய் அசையாமல், அழியாமல் பல்லாயிரம் ஆண்டுகளாய் நின்று கொண்டிருக்கின்றன. மேலும் வெறும் அடித்தளக் கட்டிடங்களோடு முழுமை பெறாது 54 பிரமிட் கோபுரங்களும் சில இடங்களில் நிற்கின்றன. அந்த மகத்தான கோபுரங்களைக் கட்டியவர் அங்கே ஒரு காலத்தில் வாழ்ந்த யூதர்கள் அல்லர்! அழிந்து போன ஒரு நாகரீக இனத்தின் முன்னோர்கள் அல்லர். அவர்கள் யாவரும் வேறு கண்டத்திலிருந்தோ அல்லது அண்ட கோளத்திலிருந்தோ அந்த பூமிக்கு வந்தவரும் அல்லர். சீரும், சிறப்பாகவும் வாழ்ந்த அவர்கள் முழுக்க முழுக்க அக்கால எகிப்திய இனத்தவர்களே. புதைக்கப் பட்ட அவர்களது எலும்புக் கூடுகளைப் பின்னால் சோதித்த அறிவியலார், மருத்துவ ஆய்வாளர், புதைச்சின்ன நோக்காளர் ஆகியோரது கருத்துகள் மூலம் தெரிந்தது, அவர் அனைவரும் எகிப்தியர் என்பதுதான்.

பிரமிட் யுகத்தின் கடவுளான ஃபாரோ சக்ரவர்த்திகள்

கி.மு.3000 இல் எகிப்த் நாடு வடபுற, தென்புறப் பகுதிகள் ஒன்றாய் இணைந்து, ஓர் ஐக்கியப் பேரரசாய் இயங்கி வந்தது. அப்போதுதான் ஃபாரோ பேரரசர்களின் பரம்பரை அரசாட்சி [Pharaoh Dynasity] மேலோங்கி மிளிர்ந்து இருந்ததது. வல்லமையும், ஞானமும் மிக்க ஃபாரோ மன்னர்கள் அனைவரும் அக்கால மக்களால் கடவுளாக மதிக்கப் பட்டவர். ஃபாரோ ராஜியத்தின் முதல் மன்னன் பெயர், மெனெஸ் [Menes] என்பது. மெனெஸைப் பின் தொடர்ந்து முப்பத்தி ஒன்று அரச சந்ததிகள் கி.மு.3188 முதல் கி.மு.332 வரை எகிப்தை ஆண்டு வந்தன. அவரது காலத்திலிருந்துதான் ஃபாரோ வேந்தர்களின் புதைப்பு மாளிகையிலும், களஞ்சியங்களிலும் அவரது வாழ்க்கை வரலாறுகளைப் பொறிக்கும் பண்பாடு ஆரம்பித்தது. எகிப்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே இருக்கும் செழிப்பான தளத்தில், மெனெஸ் தனது புகழ் பெற்ற தலைநகரைக் கோட்டைச் சுவருடன் நிறுவினார். அந்த நகருக்கு அவர் ‘வெள்ளை மதில்கள் ‘ [White Walls] என்ற பெயரை இட்டார். இப்போது அது மெம்ஃபிஸ் [Memphis] என்ற கிரேக்கப் பெயருடன் நிலவி வருகிறது.

சுமார் 3000 ஆண்டுகளாக மெம்ஃபிஸ் நாகரீக நகரம் ஃபாரோ வேந்தர்களின் தலைநகராக கொடிகட்டி ஓங்கி இருந்தது. மெம்ஃபிஸ் நகருக்கு வடக்கே 20 மைல் தூரத்தில்தான் தற்போதைய தலைநகர் கெய்ரோ இருக்கிறது. எகிப்தின் முதல் கரடு முரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. புகழ் பெற்ற கீஸாவின் [Giza] மூன்று பிரமிட்களும், மனிதத் தலை கொண்ட பூதச்சிங்கமும் [Sphynx] நாலாவது தலைமுறை ஃபாரோ வேந்தனால் அமைக்கப் பட்டன.

பூதச்சிங்கம் ஃபாரோ மன்னர்களின் பராக்கிரமச் சின்னமாகக் கருதப் பட்டது. கூஃபு வேந்தன் நாலாவது சந்ததியில் இரண்டாவது மன்னன். எல்லாவற்றிலும் பெரிய பிரமிட்டை கீஸாவில் கட்ட சுமார் 20 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. அந்த பிரம்மாண்டமான கோபுரத்திற்கு கற்களை 480 அடி உயரம் வரை ஏற்றிச் செல்லும் சாய்வுத் தளத்தை [Ramp] நைல் நதி தீரத்திலிருந்து அமைக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அடுத்துப் பட்டம் சூடிய கூஃபுவின் மகன் காஃப்ரி [Khafre] தான் அடக்கமாகப் போகும் இரண்டாம் பிரமிட்டைப் பூதச்சிங்கத்துடன் கீஸாவில் கட்டினான். பிறகு காஃபிரியின் மகன் மென்கெளரி [Menkaure] மூன்றாவது சிறிய பிரமிட்டைத் தனக்காக அமைத்தான்.

பிரமிட்டிற்குக் கற்பாறைகள் எவ்விதம் கொண்டு வரப்பட்டன ?

கூஃபு பேரரசன் தனக்காகக் கட்டிய எல்லாவற்றிலும் பெரிய பிரமிடில் சுமார் 2,300,000 பாறைத் துண்டுகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. பாறைக் கற்களின் சராசரி எடை 2.5 டன் என்றும் உச்ச எடை 15 டன்னாகவும் கணிக்கப் பட்டுள்ளன. கூஃபு வேந்தன் அடக்கம் ஆகியிருக்கும் புதை மாளிகையின் மேல்தளக் கூரைத் தட்டு 40-60 டன் எடை உள்ளதாய் காணப்பட்டன. எண்ணிக்கையிலும், எடையிலும் உயர்ந்த இத்தனைப் பாறைக் கற்கள் எந்த மலைக் குன்றுகளில் வெட்டி எடுக்கப் பட்டன என்பது முதல் விந்தை! அங்கிருந்து அவை அனைத்தும் எவ்விதம் நகர்த்தப் பட்டுக் கொண்டு வரப்பட்டன என்பது அடுத்த விந்தை! பிரமிட் தளத்திற்கு அருகிலும், 500 மைல் தூரத்திற்கு அப்பாலும் உள்ள பாறை வெட்டுக் குழிகளிலிருந்து [Stone Quarries], செம்மை செய்யப்பட்ட பாதைகள், சாய்வுத் தளங்கள் மீது உருளைத் தூண்கள் மூலமாக நகர்த்தப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. பாறைக் கற்களை இழுக்க பெரிய வடங்கள், பாபிரஸ் முறுக்கு நாண்கள் [Papyrus Twines] பயன்பட்டிருப்பதாகத் அறியப் படுகின்றது.

நைல் நதியில் கட்டுமரம் கட்டி மிதக்க விட்டுப் பெரும் பாறைகள் பிரமிட் கட்டுமான வேலைகளுக்குக் கொண்டு வரப்பட்டன. ஆண்டு தோறும் நைல் நதியில் வெள்ளம் மிகுந்து கரைவயற் பகுதிகளில் நீர் நிரம்பிய போது, வேளாண்மைப் பணியாட்கள் வேலை யில்லாத சமயங்களில், பிரமிட் கட்ட முன்வந்ததாக அறியப்படுகிறது. வெள்ளம் வந்த காலங்களில் ஒரு தற்காலிய துறைமுகத் தளம் உண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகளில் கற்பாறைகள் கொண்டு வரப்பட்டன. சில சுண்ணக் கற்கள் தூரா [Lime Stones from Tura] என்னும் இடத்திலிருந்தும், கனத்த பாறைகள் அஸ்வான் [Aswan] பகுதியிலும், கருவிகளுக்குப் பயன்படும் தாமிர உலோகம் சினாய் மலைக் குன்றிலும் [Copper Metal from Mount Sinai] கிடைத்தன. பிரமிட் திட்ட வேலைகளுக்கும், மரப் படகுகளுக்கும் தேவையான மரக் கம்பங்கள் [Cedar] லெபனானிலிருந்து கிடைத்தன. கல் கொத்தனார்களுக்கு பாறைக் கற்களை வெட்டுவதற்குத் தாமிரக் கொத்திகள், செதுக்கிகள் பயன்பட்டன.

பிரமிட்களின் அடித்தளம் வெளிப்புற அமைப்புகள்

பிரமிட்களின் அடித்தளங்கள் கொத்தனார் தாமிரச் செதுக்கிகளால் [Copper Chisels] வெட்டிய சுண்ணக்கல் கட்டிகளால் [Limestone Blocks] கட்டுமானம் ஆனவை. எகிப்தின் மணல் பூமிமேல் எழுப்பப் பட்டுள்ளது என்று எண்ணும் பொதுநபர் கருத்துக்கு மாறாகப் பிரமிட் கோபுரம் பாறைப் பீடத்தின் மீது உறுதியாகக் கட்டப் பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கூஃபு பிரமிட் ஒரு உட்தளக் குன்றின் மீது அமர்ந்துள்ளது. முக்கியமாகச் சுண்ணக் கற்களாலும், பாறைக் கற்களாலும் அது கட்டப் பட்டது. அதற்கு முன்னோடியாகவும் மற்றும் பின்னோடியாகவும் கட்டப்பட்ட சிறிய பிரமிட்களில் எண்ணற்ற செங்கற்கள் பயன்பட்டன. அடுத்து காஃபிரி, மென்கெளரி கட்டிய பிரமிட்களில் கீழடுக்கு வரிசைகளில் பாறைக் கற்களும், மேலடுக்கில் சுண்ணக் கற்களும் உபயோகப் படுத்தப் பட்டன. கீஸா பிரமிட்களின் வெளிப்புறச் சாய்வு சுற்றுப் புறங்களில் பளபளக்கும் வெந்நிறச் சுண்ணக் கற்கள் அமைக்கப் பட்டு, பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாய்ப் பால் நிறத்தில் அவை மிளிர்ந்தன.

காஃபிரி பிரமிடின் கூம்புத் தலைப் பகுதியைத் தவிர, பளபளக்கும் பால்நிறச் சுண்ணக் கற்கள் யாவும் மூன்று பிரமிட்களிலிருந்தும் பிற்காலத்தில் களவு போய்விட்டன. அதே சமயத்தில் அவற்றில் சில பல்லாயிரம் ஆண்டுகளில் அடுத்தடுத்து அடித்த பாலைவன மணற்புயல் காற்றில் [Desert Sand Storm] நேர்ந்த உராய்வுத் தேய்வால் [Erosion] சிறுகச் சிறுகக் கரைந்து போயின என்றும் கருத இட மிருக்கிறது. வெள்ளைத் தட்டுகள் பிரமிட்களிலிருந்து உரித்து எடுக்கப்பட்டு, கெய்ரோவின் பெரிய மாளிகைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. காஃபிரி பிரமிடின் கீழடுக்குப் பாறைக் கற்கள் யாவும், எகிப்தின் 19 ஆவது ஃபாரோ சந்ததியினர் காலத்தில் சிறிதும், கி.பி.12 ஆம் நூற்றாண்டில் சிறிதுமாகக் களவு போய் விட்டன என்று அறியப் படுகின்றது! கெய்ரோ நகரக் கட்டிடங்களைக் கட்டி அலங்கரிக்க கீஸா பிரமிட்களின் சுண்ணக் கற்களும் நாளடைவில் திருடப் பட்டுள்ளன என்று தெரிய வருகிறது!

(தொடரும்)

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. A History of Invention & Engineering from Pyramids to Space Shuttle, Works of Man By: Ronald W. Clark [1985]

10. Selections from National Geographic, Death on the Nile [2004]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 15, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் – 1 (The Great Pyramids of Egypt)

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


நைல் நதி நாகரீகக் கோபுரம்!

ஐயாயிரம் வயது தாண்டும் மேடகம்!

ஒயில் மிக்க உன்னத கூம்பகம்!

சதுரப் பீடம்மேல் சாய்ந்த ஓர் கோணகம்!

புரவலர் உடல்களைப் புதைத்த பெட்டகம்!

சிற்பமும், சின்னமும் புதைந்த ஓர் களஞ்சியம்!

கற்பாறை அடுக்கிக் கட்டிய ஓர் அற்புதம்!

பூர்வீக உலகில் நாகரீக உதயம்!

5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின! இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின! அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன! நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டின.

புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறுகளில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலிகளும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

சிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது! தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே!

எகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.

பிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது! தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.

5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன! கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள்! எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன! ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.

பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன ?

எகிப்தின் முதல் கரடு முரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோண சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை! அவை பிரம்மாண்டமானவை! பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை! கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்!

பிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர்! பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.

ஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது! பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது! பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன! பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் படுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.

பிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 1, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா