நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

செங்காளி


நான் இந்தப் புதிய நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன. பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனம், கடந்த சில வருடங்களாக மேல் நாட்டு முதலீட்டினால் விரிவடைந்து பெரிய அளவில் மேல் நாட்டு பாணியிலேயே நடந்து வருகின்ற ஒன்று. என்னையும் சேர்த்து மொத்தம் எழுபது பேர் இங்கே வேலை செய்கின்றோம். அதிலே முப்பதுபேர் பெண்கள். அவர்களிலே கெளசல்யா, ஸ்டெல்லா, மாலதி மற்றும் ஆகிய ரேவதி நால்வரிடமும் எனக்கு நன்கு பழக்கமாகிவிட்டது. கெளசல்யா, ஸ்டெல்லா, மாலதி மூவரும் இதே நிறுவனத்தில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். ரேவதி சேர்ந்தது என்னைப்போல மூன்று மாதங்களுக்கு முன்னர்தான்.

விற்பனைப் பிரிவில் இருக்கும் கெளசல்யா இந்த நிறுவனத்தில் உள்ள பெண்களுக்கெல்லாம் அவர்தான் ராணி என்பதுபோல் நடந்துகொள்வார். அவர் வாயில் சிக்காத ஆண்களோ பெண்களோ எங்கள் அலுவலகத்தில் கிடையாது. அதுவும் மத்திய உணவு வேளை சமயத்தில்தான் அவருடைய அரசாங்கம் கொடிகட்டிப் பறக்கும். புதிதான நானும் ரேவதியும் ஆவலோடு கேட்க எல்லாரைப்பற்றியும் அலசித்தள்ளுவார். அவருடைய வாய்க்குப் பயந்துகொண்டே மற்ற பெண்கள் அவர் எதிரில் ஒன்றும் அதிகமாகப் பேசமாட்டார்கள்.

ஆனால் ஸ்டெல்லா மட்டும் இதற்கு விதிவிலக்கு. கெளசல்யாவின் வார்த்தைக்கு வார்த்தை ஈடு கொடுப்பவர். ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஸ்டெல்லா பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் தமிழ் கொஞ்சம் தகராறுதான். எல்லோரையும் அது இது என்றுதான் சொல்லுவார். ஏதும் கோபம் வந்துவிட்டால் மட்டும் பேச்சு ஆங்கிலத்துக்கு மாறிவிடும்; விளாசித்தள்ளிவிடுவார்.

மாலதி எப்பொழுதும் அமைதியாக இருப்பவர். ஆனால் மனதில் உள்ளதை பயப்படாமல் சொல்பவர்.

ரேவதிக்கு எதிலுமே கொஞ்சம் அவசரம்; படபடப்பு, வாய்த்துடிப்பு அதிகம். கிட்டத்தட்ட சின்ன கெளசல்யா என்றே சொல்லலாம்.

அது ஏனோ தெரியவில்லை கெளசல்யாவின் காரமெல்லாம் அதிகமாகப் பாய்வது கார்த்திகேயன் பேரில்தான். கார்த்திகேயன் நிதிப்பிரிவில் பெரிய அதிகாரி.

இப்படித்தான் ஒரு நாள் எல்லாருடைய ஊதியத்தைப் பற்றி பொதுவான பேச்சு வந்தபொழுது, திடாரென்று கெளசல்யா, ‘நல்ல சம்பளம்.. ஆனா பெரிய கஞ்சப்பிசினாரி.. ஏந்தான் அந்த ஆளு இப்படிப் பணத்தை சேத்து வச்சுக்கிட்டிருக்குதோத் தெரியல்ல.. கொழந்த குட்டி ஒண்ணுமில்லே.. என்ன செய்யுமோ சம்பாரிக்கற பணத்தையெல்லாம்..’ என்று அவரைப்பற்றி பொரிந்து தள்ளினார்.

இதேமாதிரி, தீபாவளி சமயத்தில் ஒரு நாள்.. சாப்பாட்டு வேளை.. ‘பாரு..பண்டிகை வருது.. ஆனா அந்த மனுசன் அதே பழைய blue pant, blue shirt ல்தான் அப்பவும் வருவாரு.. ஒரு புதுத்துணி எடுத்துப் போட்டுக்கக்கூடாதா.. அதான் எக்கசக்கமா சம்பாதிக்குதே.. தனக்குன்னு ஒரு காரு வாங்கிக்கக்கூடாது.. பழைய மோட்டர் சைக்கிள்தான்..’ என்று கார்த்திகேயனைப்பற்றி அடுக்கிக்கொண்டே போனார் கெளசல்யா.

கார்த்திகேயன் பேரில் அவருக்கு ஏன் இவ்வளவு கோபம் என்பது புரியவில்லை. ஒரு சில சமயங்களில் கெளசல்யா சொல்வதை மற்றவர்கள் ஆதரித்து பேசும்போதெல்லாம் கார்த்திகேயன் மேலிருக்கும் பொறாமையினால்தான் எல்லோரும் இப்படிப் பேசுகிறார்கள் என்பது போலும் தோன்றியது.

நான் கார்த்திகேயனை முதன் முதலாகப் பார்த்தது நிறுவனத்தில் சேர்ந்த அடுத்த நாளன்று. எங்கள் பிரிவின் மேலாளர் மற்ற பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் என்னை அழைத்துச் சென்று எல்லோரையும் அறிமுகம் செய்துவைத்தபொழுதுதான். அவரை அன்று சரியாகக்கூட பார்க்கவில்லை.

அவரை நன்றாகப் பார்த்தது, பேசியது எல்லாம் ஒரு விற்பனை சம்பந்தப்பட்ட கோப்பில் இருந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக அவரிடம் சென்றபோதுதான். அன்றக்கு நான் அவருடைய அறைக்குச் சென்றபொழுது அவர் கணினியில் ஏதோ ஒரு கோப்பை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தார். நல்ல உயரம். சிகப்பு மேனி. கெளசல்யா சொன்னதுபோல் கருநீலத்தில் முழுக்கால் சட்டை, வெளிர் நீலத்தில் மேல்சட்டை. வயது நாற்பத்தைந்து என்று எல்லாரும் சொன்னாலும் பார்ப்பதற்கு நாற்பதுக்கும் குறைவாக இருப்பதுபோல் தோன்றினார். நான் வந்த சத்தம் கேட்டவுடனே நிமிர்ந்து பார்த்தவர், ‘உட்காருங்க..ஒரு நிமிடம்.. இதை முடிச்சுடறேன்’ என்றார். சிறிது நேரம் கழித்து , ‘என்ன சொல்லுங்க’ என்றார். நான் வந்த காரணத்தைச் சொல்ல, அவர் எனக்கு வேண்டியதையெல்லாம் மிகத்தெளிவாக விளக்கியதோடு, பழகப்பழக எல்லாம் எளிதாகிவிடுமென்றும் தைரியம் சொன்னார்.

அடுத்த தடவை வேறு ஒரு வேலையாக அவரிடம் போனபோது, ‘என்ன.. புது இடம் பிடிச்சிருக்குங்களா’ என்று விசாரித்தவர், பின்னர், ‘உங்களுக்கு யாரு சாருகேசின்னு பேரு வச்சது..உங்க குடும்பத்திலெ சங்கீதம் தெரிஞ்சவங்க யாரும் இருக்கறாங்களா’ என்று கேட்டார். நான் ‘எங்க அம்மாதான்..முறையாக் கத்துக்கிட்டவங்க..நல்லாப் பாடுவாங்க’ என்றேன். அதைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராய், சாருகேசி இராகத்தை மெல்லிய குரலில் இனிமையாகப் பாடிக் காட்டினார்.

நான் மறுபடியும் ஒருநாள் அவரைப் பார்க்கப்போனபொழுது சாப்பிட்டுகொண்டிருந்தார். நாலு அடுக்குப் பாத்திரம். விதவிதமான சாப்பாடு. ஒரு எவர்சில்வர் தட்டிலே வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ‘ஒரு வேலை செஞ்சுகிட்டே கொஞ்சம் நேரமாயிடுச்சு..அதான் இப்ப சாப்பிடறேன்.. கொஞ்சம் சாப்பிடறீங்களா.. இதிலே வடை இருக்குது பாருங்க..எடுத்துக்குங்க’ என்று சொல்லிக்கொண்டே, ஒரு அடுக்கை எடுத்து என் முன்னால் வைத்தார். இதையெல்லாம் பார்த்தவுடனே எனக்கு கெளசல்யா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘அந்த ஆளு இப்படி இருக்கிறாருன்னா அதற்கு வீட்டுக்காரிதான் காரணமாயிருக்கும். ரொம்ப கெடுபிடியா இருப்பா போல. இவ்வளவு சிக்கனமா இருக்கறவங்க சரியா சாப்பிடுவாங்களோ என்னமோ’ என்று கெளசல்யா சொன்னதிற்கும் இங்கு பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.

நான் ஒரு வடையை எடுத்து சாப்பிடுவதைப் பார்த்தவுடனே அவர் சொன்னார், ‘செளந்தரம் நல்லா சமைப்பாங்க.. நான் என்ன சொன்னாலும் கேட்காம நெறைய அனுப்பி வச்சிருவாங்க’ என்றார். அவருடைய மனைவியைப் பற்றி இப்படிப் பெருமையுடனும் மரியாதையுடனும் அவர் சொன்னதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

வேறொருநாள் பிறந்த நாளைக் கொண்டாடுவது பற்றி எங்களிடையே பேச்சு வந்தது. அன்று கெளசல்யாவுக்கும் ஸ்டெல்லாவுக்கும் பெரிய வாக்குவாதமே நடந்தது. வழக்கம்போல் பேச்சு கார்த்திகேயனப்பற்றி வர, ‘பெரிய கருமி, ஒரு கேக்குக்குக்கூட செலவு செய்யமாட்டான் அந்த ஆளு..’ என்று கெளசல்யா சொல்ல, ‘எத்தனை பேரு இங்க பிறந்த நாளைக் கொண்டாடறாங்க, நீங்க அவரை மாத்தரம் சொல்லறீங்க’ என்று விமலா அதை மறுத்துச் சொன்னார். ஸ்டெல்லாவும் விமலா சொன்னதை ஆமோதிப்பதுபோல் ‘This is something personal.. whether one celebrates his birthday or not. For that matter, I don’t celebrate my birthday here.. why do you pick on Karthi alone ?’ என்றார். இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்த நான், என் பிறந்த நாளன்று இதைப்பற்றி கார்த்திகேயனிடமே கேட்டுவிடலாம் என்று இருந்தேன்.

அந்த நாளும் வந்தது. கார்த்திகேயனைத் தவிர எல்லோரும் கூடி வாழ்த்துக்களைக் கூற, கெளசல்யா மேற்பார்வையில் நான் வாங்கிவந்த கேக்கையும் வெட்டியாகிவிட்டது. அதில் ஒரு துண்டை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அவர் அறைக்குப் போனேன். என்னைப் பார்த்தவுடனே, ‘என்ன.. பிறந்த நாளா.. வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க’ என்றார். தட்டை அவரிடம் நீட்ட, ‘அப்படி வையுங்க, அப்பறம் சாப்பிடறேன்’ என்றார். தட்டை மேசை மேல் ஒரு பக்கமாய் வைத்துவிட்டு, ‘உங்களை ஒண்ணு கேக்கலாமா’ என்றேன். ‘என்னா.. என்ன கேக்கப்போறீங்க.. ஏன் எல்லாரையும் மாதிரி நான் பிறந்த நாள் அது இதுன்னு கொண்டாடறது இல்லைங்கிறதுதானே..’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார். பிறகு அவரே, ‘ நான் என்ன சின்னக் குழந்தையா, இல்லை உங்க மாதிரி சின்னப்பொண்ணா..இந்த மாதிரியெல்லாம் கொண்டாடறத்துக்கு’ என்றார்.

நான் உடனே, ‘இல்ல..இல்ல இதுக்கு வேற எதோ காரணம் இருக்குது’ என்றேன். ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க..பிறந்த நாளுன்னா என்ன.. நமக்கு ஒரு வயது அதிகமாயிட்டுதுன்னு அது நினைவுபடுத்துது.. அந்த நாளைக் கொண்டாடறம்னா நமக்கு அதற்குத் தகுந்தபடி அறிவு வளர்ந்திட்டுதுன்னு அர்த்தமா அல்லது ஆண்டவன் இதுவரைக்கும் நம்ம காப்பாத்தினதை நெனைச்சு கொண்டாடறமா.. சொல்லுங்க.. இரண்டாவதுதான் காரணம்னா நாம கடவுளுக்கு தினந்தினம் நன்றி சொல்லிக்கிட்டிருக்கணும்.. அதைத்தான் நான் செஞ்சுகிட்டிருக்கிறேன்’ என்றார். எனக்கு அவர் சொன்ன காரணம் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது. அன்றைக்கு அதற்குமேல் அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்று வந்துவிட்டேன்.

வருடா வருடம் ஏதாவது ஒரு இடத்திற்கு எல்லாரும் சுற்றுலா போவது வழக்கமாம். இந்த வருடம் ஊட்டிக்குப் போவது என்று எங்கள் பொழுதுபோக்குச் சங்கத்தில் முடிவு செய்து, செயலாளரும் வருவோர் பட்டியலைத் தயார் செய்துகொண்டிருந்தார். இரண்டு நாட்கள் ஊட்டியில் தங்கியிருப்பதற்கும் போகவர செலவுக்குமாக ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்றும் முடிவாகியது. இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது, கெளசல்யா ‘எப்பவாவது கார்த்திகேயன் இதுக்கெல்லாம் வந்திருக்கிறாரான்னு கேட்டுப்பாரு’ என்று சொல்ல, ‘இந்தத் தடவை அவரை வரும்படி நான் செய்யறேன் பாருங்க’ என்று சொன்னேன். இப்பொழுது அவரிடம் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டதினால் எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தேன்.

துணிந்து அவரிடம் ஒருநாள் கேட்டும்விட்டேன், ‘என்னங்க சார்.. அடுத்த மாதம் எல்லாரும் ஊட்டிக்கு சுற்றுலாப் போகத் திட்டம் போட்டிருக்கிறாங்களே.. நீங்க வரலையா..’

‘இல்லீங்க நமக்கு இங்கே வேற வேலை இருக்குது’ என்றார்.

‘எப்பொழுதும் வேலைதானா.. சரி உங்களுக்கு வேண்டாம்.. வீட்டில அவுங்களுக்குப் போகணும்னு தோனாதா’

‘ரெண்டுபேருக்கும்தாங்க வேலை இருக்குது’

‘அப்படியே இருந்தாலும் அழகான இடங்களையெல்லாம் பாக்கணும்னு உங்களுக்குத் தோனாதா..’

‘அழகைத்தேடி ஏங்க நாம அவ்வளவு தூரம் போகணும்.. அழகு எல்லா இடத்திலேயுந்தான் இருக்குது.. நாம்தான் நம்ம கண்ணை நல்லாத் திறந்து பாக்கறதில்லை.. இப்ப வெளியே கொஞ்சம் பாருங்க.. அதிசயமா இன்னக்கி மழை தூருது.. மழைத்துளிகள் செடிகள்ள இருக்கிற இலைகள் மேலெ பட்டுத்தெரிக்கிறதையும் இலைகள் லேசா ஆடறதையும் பார்த்தா அழகா இல்ல.. நாள் முழுதும் இதைப் பாத்துக்கிட்டே இருக்கலாமே.. அத்தோட ஈர மண் வாசனை வேற.. எவ்வளவு சுகமா இருக்குது..’ என்று ஏதோ கனவு உலகத்தில் இருப்பதுபோல் வெளியே பார்த்துக்கொண்டு சொன்னார்.

சரி, இன்னொரு நாளைக்கு மறுபடியும் இதைப்பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.

நான் திரும்பி வந்து ரேவதியிடம் நடந்ததைச் சொல்ல, அவளோ, ‘செலவுக்குப் பயந்துகிட்டு அவரு என்னென்னமோ சொல்லியிருக்கறாரு’ என்றாள். எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த எனக்கு அவர் ஒரு புதிராகவே இருந்தார். நல்ல சம்பளம். ஆனால் மிகவும் எளிமையாக இருக்கின்றார். வேலையைத் திறமையுடன் செய்கின்றார். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுகின்றார். இப்படி இருப்பவர் ஏன் பண விசயத்தில் மட்டும் இவ்வளவு கெட்டியாய் இருக்கின்றார். அவர் கூறும் காரணங்கள் சரியாகப்பட்டாலும் என் மனம் மட்டும் ஏனோ சமாதானம் அடையவில்லை. ஏன் அவரைப்பற்றி இவ்வளவு கவலைப்படுகின்றேன் என்றும் புரியவில்லை.

இப்படி இருந்த நாட்களில் ஒருநாள் திடாரென்று ஊரிலிருந்து வந்திருந்த மாமா அன்று காலையில் நான் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கையில், ‘சாரு நீ எனக்கு ஒரு உதவி செய்யவேணும்மா ‘ என்றார். ‘என்னங்கா மாமா’ என்றவுடன், ‘நான் இன்னக்கே ஊருக்குத் திரும்பணும். அதனாலெ நான் போகவேண்டிய ஒரு எடத்துக்குப் போகமுடியல.. எனக்காக நீ கொஞ்சம் அங்கே போயிட்டு வரணுமே’ என்றார். ‘எங்க போகணும் சொல்லுங்க’ என்றவுடன், ‘நவலடின்னு ஒரு குழந்தைகள் காப்பகம் இருக்குது. அதாவது பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள், தங்களால் வளர்க்கமுடியாது என்று பெற்றோர்கள் கொண்டுவந்து விட்ட குழந்தைகள் இவர்களைப் பார்த்துக்கிற இடம் அது.. இதோ இதுதான் முகவரி.. தாம்பரம் இரயிலடியிலிருந்து ஒரு அரைக்கல் தொலைவு. அங்கே போயி இந்த ஆயிரம் ரூபாயக் கொடுத்திட்டு வரணும்’ என்றார். நான் ‘வர்ற ஞாயித்துகிழமைப் போனால் போதுமா’ என்று கேட்க, ‘அது போதும்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் அன்றைக்கு அலுவலகத்திற்கு வந்தவுடன், ரேவதியிடம் அந்த இடத்தைப்பற்றிக் கேட்டவுடன், அவள் தனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னாள். நான் அங்கு போகப்போவதைப்பற்றி சொல்ல அவளும் வருவதாக ஒப்புக்கொண்டாள். அதன்படியே ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் இரயிலடி வந்து சேர்ந்தோம். அங்கேயே ஒருவரிடம் வழி கேட்டுக்கொண்டு ‘நவலடி’க்கு வந்து சேரும்பொழுது கிட்டத்தட்ட மணி ஆறாகிவிட்டது.

மரங்கள் சூழ்ந்த அழகான சிறுசிறு கட்டிடங்களைக் கொண்ட இடம். தாம்பரத்தில் இவ்வளவு பெரிய இடம் எப்படி இவர்களுக்குக் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே நடந்தோம். திறந்தேயிருந்த நுழைவாயிலைத் தாண்டி ஒரு முப்பதடி தூரத்தில் அலுவலகத்தைப் போன்றிருந்த கட்டிடத்தை நோக்கிப் பாதி தூரம் நடந்திருப்போம்.. நீலநிறத்தில் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்த ஒருவர் பக்கத்தில் நிறுத்தியிருந்த காரின் பக்கம் போவது தெரிந்தது. பார்ப்பதற்கு கார்த்திகேயனைப் போலத் தோன்றியது. ‘அவரைப்பார்த்தா நம்ம கார்த்திகேயனைப் போல இல்ல’ என்று நான் ரேவதியைக் கேட்க, ‘அவரு எதுக்கு இங்கெ வரப்போறாரு.. ஒருவெளை செலவுக்குப் பயந்துகிட்டு தன்னுடைய கொழந்தகளை இங்கே விட்டுட்டு தனக்குக் கொழந்தைகள் இல்லேன்னு சொல்லிக்கிட்டிருக்கிறாரோ என்னவோ’ என்று ரேவதி சொன்னாள். ‘சீச்சீ.. அப்படியெலாம் சொல்லாதடி’ என்று நான் சொல்லிக்கொண்டே அந்தக் கட்டிடத்திற்குள் நெருங்குவதற்கும் உள்ளேயிருந்து ஒரு பெண்மணி வருவதற்கும் சரியாக இருந்தது.

அழகென்றால் அழகு, அப்படிப்பட்ட ஒரு அழகு. அவருக்கு வயது நாற்பதுக்குக் குறைவாகத்தான் இருக்கும். அளவான உயரம், கோதுமை நிறம். கழுத்தில் தாலிக்கொடி மட்டும். காதிலே சிறிய தோடுகள். மின்னும் மூக்குத்தி. திருநீற்றுக்கீற்று. அளவான பொட்டு. சாதாரண நூற்சேலை. பார்த்தவர்கள் மரியாதை கொடுக்கும் அமைதியான ஆனால் வசீகரமான தோற்றம். அப்படியே கட்டிபிடித்துக்கொள்ளலாமா என்று எண்ணத் தூண்டும் வடிவம். எங்களைப் பார்த்தவுடன் மென்மையாகச் சிரித்துக்கொண்டே எங்களைக் கடந்து சென்றார். அவரும் அந்தக் காரை நோக்கித்தான் நடந்தார். அவரைத் திரும்பிப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தோம்.

வலது பக்கத்தில் ஒரு சிறிய அறையில் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. எங்களைப் பார்த்தவுடன் ‘வாங்கம்மா.. வாங்க…‘ என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தார். நான் வந்த காரியத்தைப்பற்றி சொல்ல, ‘ரொம்ப மகிழ்ச்சி’ என்று சொல்லிவிட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கான ஒரு ரசீதையும் தந்தார். பிறகு ‘உங்க மாமா மாதிரி பெரிய மனதுடையவர்கள் இருப்பதினால்தான் இந்த இல்லமே நடந்துகொண்டிருக்கிறது’ என்றவர் தொடர்ந்து சொன்னார், ‘இங்கே பிறந்த குழந்தை முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் இருக்கின்றார்கள். மொத்தம் தொன்னூறு பேர். இவர்களுக்கு இருக்க இடம், மூன்று வேளைச் சாப்பாடு, பள்ளிக்கூட வசதி எல்லாம் உண்டு. இவங்களைப் பார்த்துக்கொள்ள நாங்க பத்துபேர் இருக்கிறோம். நாங்களும் இங்கேயே தங்கியிருக்கிறோம். நாங்கள் ஊதியம் ஒண்ணும் வாங்கிக்கிறதில்லை.. எங்களைத்தவிர நெறைய பேரு தாங்களாகவே வந்து உதவி செய்யறாங்க’ என்றார். பிறகு எங்களைக் கூட்டிச் சென்று, சமயலறை முதற்கொண்டு, வகுப்புகள், விளையாடுமிடம், இறை வழிபாடு செய்யும் இடம், படுக்கை வசதி எல்லாவற்றையும் காண்பித்தார். எல்லாமே தூய்மையாகவும் அழகாகவும் இருந்தன. குழந்தைகளும் தங்களுக்கு யாருமில்லை என்பதே நினைவில்லாதமாதிரி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

பிறகு, அவரை முதலில் பார்த்த அறைக்கு திரும்ப வந்து சேர்ந்தோம். விடைபெற்றுக்கொள்ளும் சமயம். அவரைப்பார்த்து மெதுவாக ‘உங்களை ஒண்ணு கேட்கலாமா’ என்றேன். ‘என்ன வேணும்னாலும் தயங்காமல் கேளுங்க’ என்றார். ‘நாங்க உள்ளே வர்றப்போ ரெண்டுபேர் வெளியே போனாங்களே..’ என்று நான் கேட்டு முடிப்பதற்குள், ‘ஓ கார்த்தி அய்யாவும் செளந்தரம் அம்மாவுமா’ என்றவர் ‘அவர்களை உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் ரேவதி முந்திக்கொண்டு, ‘ஓ தெரியுமே.. அவரோட குழந்தைகள் யாரும் இங்கே இருக்கறாங்களா’ என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள். ‘அவருக்கு இங்கே இருக்கறவங்க எல்லாருமே குழந்தைகள்தான்’ என்றவர் தொடர்ந்து ‘ஏன் அப்படிக் கேட்டாங்க..’ என்று கேட்டார். அதற்கு ‘இல்லே அவரு காசு விசயத்திலே ரொம்ப கெட்டியாச்சே’ என்றாள் ரேவதி.

இதுவரை மிகவும் சாந்தமாக இருந்த அவருடைய முகம் இதைக் கேட்டவுடன் மிகவும் இறுகிப்போய்விட்டது. கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார். ஏதோ சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதைப்போலத் தோன்றியது. பிறகு கொஞ்சம் படபடப்பாகப் பேச ஆரம்பித்தார். ‘நீங்க இப்படிச் சொன்னதினாலே நாங்க அவருக்குக் கொடுத்த வாக்கையே மீறவேண்டியிருக்குது.. அவரைப்பத்தி உங்களுக்கு இப்படி ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கிறதைப் போக்கறத்துக்காகத்தான் இதைச் சொல்லப்போறேன்’ என்றார். இதைக் கேட்டவுடனேயே ரேவதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

‘அவரும் செளந்தரம் அம்மாவும் இல்லைனா இந்த இல்லமே இருக்காது..’ என்றவர், மறுபடியும் கொஞ்சம் தயங்கினார்..ஏதோ கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவர்போல் தொடர்ந்தார். ‘மாதாமாதம் பத்தாயிரம் ரூபா கொடுத்திடுவாங்க..பொங்கல்.. தீபாவளி இப்படிப் பண்டிகையின்னா இங்கேயிருக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் எங்களுக்கும் புதுத்துணியெல்லாம் வாங்கிக்கொடுப்பாங்க.. அதுமாத்திரம் இல்லை.. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையிலேயே வந்திருவாங்க.. சாயங்காலம்வரை இங்கேதான் இருப்பாங்க. எல்லா வேலைகளிலும் எங்களுக்கு உதவியா இருப்பாங்க. அன்னைக்கி இங்கேதான் சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கார்த்தி அய்யா சங்கீதமும்..செளந்தரம் அம்மா நாட்டியமும் கத்துக்கொடுப்பாங்க…’ என்று சொல்லி நிறுத்தினார்.

என்னை யாரோ சாட்டையால் அடித்தமாதிரி இருந்தது. ரேவதியோ அப்படியே அசந்துபோய் பேச்சற்று நின்றுவிட்டாள். எனக்கு, சிறிது அவமானமாகக்கூட இருந்தது. இவ்வளவு தாராள மனமுடையவரையா அவ்வளவு தப்பாக எல்லாரும் எடை போட்டுள்ளோம் என்று எண்ணவே உடம்பு கூசியது.

நாங்கள் பேச்சற்று நிற்பதைப் பார்த்த அவர் தொடர்ந்து சொன்னார், ‘அவர்களைப்போல ஒருவரையொருவர் புரிந்துகொண்ட தம்பதிகளைப் பார்ப்பது கடினம். கார்த்தி அய்யாவை செளந்தரம் அம்மா ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொள்வார். இருவரும் எதற்கும் பதட்டப்படமாட்டார்கள். அவர்கள் இருக்குமிடத்தில் அப்படி ஒரு அமைதியும் அன்பும் தவழும்.. இங்கே இருக்கின்ற அத்தனை குழந்தைகளுக்கும் அவர்கள்தான் அப்பாவும் அம்மாவும்’. சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, ‘அப்பா முருகா அவர்கள் இருவருக்கும் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பா..’ என்று நாங்கள் அங்கு இருப்பதையே மறந்தவர்போல் வேண்டிக்கொண்டார். இதைச் சொல்லும்போது அவர் கண்கள் கலங்கிவிட்டன.

ஏதோ ஆசிரியரிடம் திட்டு வாங்கிய இரண்டு மாணவிகளைப்போல நின்றுகொண்டிருந்த எங்களைப் பார்த்துத் திடாரென்று அவர் கேட்டார், ‘அப்படான்னா உங்களுக்கு ஸ்டெல்லா அம்மாவையும் தெரிஞ்சிருக்குமே.. அவர் வருடத்திற்கு நாலைந்து தடவைகள் வருவார். அவருடைய கணவரையும் இரண்டு குழந்தைகளையும் கூடவே அழைத்து வருவார். ஒவ்வொரு தடவை வரும்பொழுதும் ஒரு பெரிய கேக்கைக் கொண்டுவருவாங்க. அவர்கள் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டந்தான். அவ்வளவு கலகலப்பு’ என்று முடித்தார். கடைசியாக, ‘தயவுசெய்து நான் சொன்னதையெல்லாம் யாருக்கும் சொல்லவேண்டாம்’ என்றார்.

பெரிய அதிர்ச்சியிலிருந்து விடுபட்டதைபோல உணர்ந்த நான், ‘இதையெல்லாம் சொன்னா மற்றவர்களுக்கும் இதே மாதிரி செய்யத்தோனுமில்ல’ என்றேன். ‘நீங்க சொல்வது சரிதான்.. ஆனா கார்த்தி அய்யாவோ ஒருத்தர் சொல்லித்தான் இதெல்லாம் செய்யணுங்கிறதில்ல..அது ஒவ்வொருத்தர் மனதைப்பொருத்தது.. அதுவுமில்லாமே நாங்க என்ன பெரிசா செஞ்சிட்டோம்.. இதையெல்லாம் போயி சொல்லிக்கிட்டு என்பார்’ என்றார்.

சிறிது நேரம் எல்லாருமே மெளனமாக இருந்தோம். ‘சரி நாங்க புறப்படறோம்’ என்று சொன்னவுடனே அவர், ‘ரொம்ப நன்றீங்கம்மா.. நீங்க வேணும்னா இந்த இடத்தப்பத்தி மட்டும் எல்லாருக்கும் சொல்லுங்க..உங்களாலெ முடிஞ்சதையும் செய்யுங்க’ என்றார். அவரிடம் ‘அப்படியே செய்கிறோம்’ என்று சொல்லிவிட்டு வரும்வழியில் அதிகமாக ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அவரவர் எண்ணங்களுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

நான் வரும் வழியிலேயே ஒரு முடிவு செய்துவிட்டென். அதை, கெளசல்யாவிடம் சொன்னால் அவர் என்னிடம் எப்படி நடந்துகொள்வார் என்று நினைத்தவுடன் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. நான் ஊட்டிக்கு அவர்களோடு போகப்போவதில்லை என்பதுதான் அது. அந்தச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தைத்தான் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவலடி இல்லத்திற்குக் கொடுக்கப்போகிறேன். அந்த எண்ணமே இனித்தது. அதோடு செளந்திரா அவர்களைச் சந்திக்கப்போகிறேன், அவருடன் பேசப்போகிறேன் என்ற நினைவு அந்த இனிப்பை இன்னும் அதிகமாக்கியது.

ஆனால், இன்றுவரை கெளசல்யாவுக்கு ஏன் கார்த்திகேயன்மேல் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்பது மட்டும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

***

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி