சி. ஜெயபாரதன்
முடிவை நோக்கிச் சீதா
இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.
நேரம்: மாலை வேளை
பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது.
(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)
லவா, குசா: [தரையில் கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.
இராமன்: [கனிவுடன்] அருமைப் பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத் தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும் அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!
லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ? போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது! எடுங்கள் உங்கள் வில்லை!
இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.
லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ? எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?
[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]
வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!
லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே போடுகிறார்கள்)
இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.) வணக்கம் மகரிஷி!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள் அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள் கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள் அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால், தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும் தவிர்த்திருப்பேன்!
லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத் தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ? எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான் யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள் பிதாவா ?
இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத் தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.
குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன் எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக் காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள் தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள் தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்! [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா ? உங்கள் புதல்வர் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]
வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர் உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!
இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என் புதல்வர்களா ?
லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு] சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும் தந்தைக்குக் குறைய வில்லையே!
வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே! அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என் ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக் கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும் இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!
[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன் முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]
மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல், சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின் எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன் எங்கள் சந்திப்பு!
இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில் பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச் சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார் ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும் எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள் அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன், அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன் பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின் இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!
லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன் அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.
வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.
லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக் கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ? தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?
இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!
லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின் கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன், இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)
வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம் முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.
சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள் ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி!
வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள் உன் மடிமீது விளையாட வேண்டியவர், இப்புழுதி மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!
இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய் உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும் எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ? எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.
பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.
இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி! லவா, குசா இருவரையும் நிச்சயம் கூட்டிச் செல்கிறேன்.
இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவு, கண்ணியம், கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்தபோது ஜனக மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும் அறத்துடன் நடப்போம்.
லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால் அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப் போவதில்லை. இதுவரை தந்தைக் காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக் காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ? தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல் என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!
இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள் வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!
லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர் எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டார்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள் கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.
வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.
இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான் மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும் அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக் கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?
சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ தீண்டப்படாதவள் ஆகிவிட்டேன்! அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள் பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்! (கோவென்று அழுகிறாள்)
லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள் பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால் உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண் தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும் தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?
சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல் மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது! ஆனால் அவரது நெஞ்சில் யாரில்லாத பாலை வனம்தான் உள்ளது. ஊர் மக்களுக்கு ஏக பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச் சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக அரண்மனையில் காட்சி தரக் கூடாது!
இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை அகற்றி விடுகிறேன்.
வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?
சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர் விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர் என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை! அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப் போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான் முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம் அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில் போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான் கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப் பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி! கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும் இடம்பெற முடியவில்லை!
வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?
இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி! மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப் போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத் துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள் வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன். மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! .. ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப் பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில் இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ? நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!
வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று கனவு கூடக் காணவில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப் பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவைச் சிறைத் தண்டனை, பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில் அதிகம்!
சீதா: வேண்டாம் மகரிஷி! என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில் என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே இருக்கட்டும்.
பரதன்: அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டார்கள்! அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்! பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்! உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும் புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.
அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம் இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத் திரும்பப் போகிறேன்.
லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால் உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும் வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் தங்கிக் கொள்கிறோம்.
வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப் போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள் புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று அழைத்துச் செல்லுங்கள்.
சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம் என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்! அப்போது எல்லாரது பிரச்சனைகளும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) …. அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்….நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!.. நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப் பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான் தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … [வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக் குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் பாறையில் அடிபட்டு அவளது ஆத்மா பிரிகிறது].
லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?
வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான் நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை சாய்கிறார்].
[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி அழுகிறார்கள்]
இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப் பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர் துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்! வாழப் பிறந்தவர் நீங்கள்!
பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும் உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள் நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தமன் என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரியாமலும் போகலாம்.
அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர் துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?
[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].
வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின் துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.
[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா, குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]
(நாடக முடிவு) (நாடகத்தின் பின்னுரை அடுத்த வாரத் திண்ணையில்)
****
தகவல்:
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ‘s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001]
3. The Wonder that was India By: A.L. Basham [1959]
Picture Credits: Kishan Lal Verma
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 4, 2005]
- அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை
- கவிதைத் தோழி
- நேசி மலரை, மனசை
- எம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை
- விதி
- பண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod
- சமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
- தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17
- ஜெயகாந்தனும் எனது பாவனைகளும்
- ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது
- தொடர்வாயா….
- மலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்
- 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்
- பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு
- விஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…
- கலைச்செல்வன் நினைவுக் கூடல்
- கடிதம் ஏப்ரல் 8,2005
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு
- டார்ஃபர் – தொடரும் அவலம்
- கவிதை
- மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்
- து ை ண 9 – (இறுதிப் பகுதி)
- எதிர்காலம் என்று ஒன்று….! (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- சர்தார் சிங்கின் நாய்குட்டி
- வானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- அம்மா பேசினாள்
- வன்றொடர் குற்றியலுகரம்
- படகு அல்லது ஜெயபால்
- மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்
- ஒரு மொழிபெயர்ப்பின் கதை
- பாலை நிலத்து ஒட்டகம்
- வாக்குமூலம்
- சிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்
- பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு
- போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா
- புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்
- தயிர்
- கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)
- கவிதை