கோபம்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

நெப்போலியன்


யாராகிலும்
யார்மீதேனும்
யாருடைய
கோபத்தையோ
கொட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள்….
இந்த மழையைப்போல!

இதில்
எனக்கான
உன் கோபமும்
உனக்கான
என் கோபமும்
யாருக்கான
யாருடைய கோபம்….
உச்சி வெயிலைப்போல!

யாரும்
யாரிடத்திலேனும்
யாருக்காகவோ
யாராயிருந்தோ
குமுறிக் கொண்டுதானிருக்கிறார்கள்….
உறக்கத்திலும் குறட்டையைப்போல!

யாரின்
கோபமும்
யாருக்கும்
சொந்தமின்றி
அல்பாயுசு ஆவிகளாய்
அலைகின்றன….
தருணம் பார்த்து
நம்
தலைகளில் அமர!
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்

கோபம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

கவிநயா


அகிலம் யாவும் அழியும் வண்ணம்
ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து
சடசட வென்று கிளைகள் முறித்து
கடகட வென்று காடுகள் அழித்து
தடதட வென்று வேகம் எடுத்து
படபட வென்று வெடியாய் வெடித்து
பாதை நெடுகப் பாறைகள் பெயர்த்து
பார்ப்போ ரெல்லாம் பயந்திடச் சுழித்து
கருணை இன்றிக் கண்டவை மிதித்து
கல்லும் முள்ளும் காலால் பொடித்து
நேசம் மறந்த நெஞ்சாய்க் கொதித்து
நெற்றிக் கண்ணின் நெருப்பாய்த் தகித்து
மனதில் மிகுந்த கருவம் கனன்றிட
மலையைப் புரட்டும் மமதை கொண்டு
பொங்கிப் பாயும் புதுவெள்ள மென
புன்னகை கொன்று பிறந்தது கோபம்


meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா

கோபம்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை


அலுவலகத்தில் சந்திரனுக்கு கோபக்காரன் என்று பெயர் வைத்து விட்டார்கள். காதுபட யாரும் சொல்லாவிட்டாலும், காதில் பட வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள் என்பது தெரிந்தது. அவனுக்குக் கொஞ்சம் முன்கோபம் உண்டுதான். நாமகரணம் சூட்டும் அளவிற்கு உண்டா எனத் தெரியாது. ஆனால் அவன் கோபத்தினால் எவருக்கும் அநியாயம் விளைந்ததாக யாரும் விரல் நீட்ட முடியாது. எந்தக் காரியமானாலும் விசுவாசத்தோடு செய்யும் குணம் விரல் சூப்பிய காலந் தொட்டே அவனிடம் இருந்தது. அதையே மற்றவர்களிடமும் எதிர்;பார்ப்பான். சற்றுப் பிசகி விட்டால் பொத்துக் கொண்டு வந்து விடும். நெத்தியடியாகக் கேட்டு விட்டு பிறகு கவலைப்படுவான். இப்படிக் கோபப்படுவானேன் பிறகு கவலைப்படுவானேன் என்று அடிக்கடி குழம்பியதன் விளைவாக இந்தக் கோபக் குணத்தைக் கொன்று விட வேண்டும் என்னும் கோபம் அவனுக்குள் தீவிரமடையலாயிற்று.

இப்படியாக இருந்து வரும் காலத்தில்தான் சந்திரனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. பிரியாவிடையில் கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும் என்று பலரும் ஐஸ் வைத்து அனுப்பினார்கள். விமானம் ஏறும் கடைசிக் கணம் வந்தது. திரைப்படங்களில் வருவது போல தன்னைக் கட்டிப் பிடித்து கொண்டு மனைவி அழப்போகிறாள் என்று எதிர்பார்த்தான். அத்தான் கடவுளுக்காகக் கேட்கிறன் அங்கயும் போய் ஆரோடையும் கோவிக்காதீங்க என்றாள் அவன் வீட்டுக்காரி.

வெளிநாட்டிற்கு வந்து மூன்று மாதங்களாகின. சந்திரனுக்குக் கோபமே வரவில்லை. கோயிலில் வைத்து மனைவியின் கட்டாயத்தின் பேரில் கையில் கட்டிய கயிறுக்கு நன்றி சொல்ல வேண்டும். (கோபிப்பதற்கு ஒரு ஆளும் அகப்படாதது வேறு விடயம்). ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கோயிலுக்குப் போகத் தயாரானான். சூரியன் சுத்தமாக மேலே ஏறி விட்டான். புழுக்கத்தை நினைத்தால் போகாமலிருப்பது நல்லதெனத் தோன்றியது. நினைத்து விட்டுப் போகாமலிருந்தால்………….கடவுள் பயம் பிடித்துக் கொள்ள அவசரமாய் குளித்துத் தயாராகி பஸ்ஸில் புறப்பட்டான். கோயிலிற்குப் போய் கும்பிட்டு நிமிர பத்து மணியாயிற்று. அடுத்த பஸ் வரும் வரை ஒரு மூலையில் குந்தியிருந்து அங்கு இருந்தவர்களை சும்மா நோட்டமிட்டான். இருந்தவர்கள் எல்லோரும் ஹிந்தியில் பேசினார்கள். யாராவது தமிழில் பேச மாட்டார்களா என்ற உள்ளார்ந்த தவிப்பு.

“சத்தே இங்க குந்திக்கலாம்.”……………சப்தம் கேட்டு இமை பிரித்து நிமிர்கையில் ஒன்றுக்கு இரண்டு தமிழ் முகங்கள் அவனுக்கு நாலடி தள்ளி அமர்வதைக் கண்டான் சந்திரன். தவித்த காதுக்கு சலசலத்து ஓடும் ஆற்று நீரின் இரைச்சலாய் கிராமியம் கவிந்த தாய் மொழி வந்து முட்டிற்று.

“சம்பளம் நாப்பது றியால்னு சொல்லித்தான் கூட்டியாந்தான். மாசம் நாலாச்சு……காசைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன்கிறான். பீடிச் செலவுக்குக் கூட மத்தவங்ககிட்ட கை நீட்ட வேண்டியிருக்கு. கையில தொழிலை வைச்சுகிட்டு புள்ளை குட்டியை விட்டுட்டு ஏன் வந்தோம்னு ஆகிப் போச்சு. கேட்டா ஆறு மாசம் முடியட்டும் மொத்தமாப் பாக்கலாங்கிறான். இன்னிக்குக் கோயிலுக்கு வறதுக்கு கடன் வாங்கிட்டுத்தான் வந்தேன். ஒரு விதமா கப்பல் ஓடிக்கிட்டு இருக்கு”

கரை காணா எதிர்பார்ப்புகளோடு வெளிநாடு வந்து நிதர்சனத்தில் தோற்றுப் போய் நான்கு மாதங்களாய் காகிதக் கப்பல் ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த உருவம் சந்திரனுக்குள் பதிவாகிக் கொண்டிருந்தது. கறுப்பென்றால் அப்படியொரு கறுப்பு. மொத்த உருவத்தில் மனத்தைக் கவ்வியதே அதுதான். அது காணாதென்று வளிய வளிய எண்ணை வைத்து வாரிய தலை. நெற்றியை மூடித் திருநீறு. சட்டி மூக்கு. உடலின் நிறத்திற்கு சற்றேனும் பொருந்தாத கடும் நீலத்தில் சட்டை, அதில் புல் சிலீவ் வேறு…….!

“அப்ப நான் வரட்டா”…………….பக்கத்திலிருந்து கதைத்தவர் எழுந்தார். பேச்சுத்துணை அகன்றதும் எண்ணைக்கறுப்பு கண்ணாடி ஜன்னலால் வெளியே எட்டிப் பார்த்தது. சீப்பை எடுத்து ஏற்கனவே அழுத்தி வாரியிருந்த தலையை இழுக்கப் போனது. கோயிலுக்குள் கூடாது என எண்ணியதோ சீப்பை பையில் வைத்து விட்டு பக்கத்தில் பார்த்தது. அங்குதான் சந்திரன் இருந்து இமை வெட்டாமல் இவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க தமிழ் நாட்டில எந்த ஊர் ?”…..சந்திரன் கேட்க – “நானுங்களா, நான் திருவானைக்காவலுங்க, திருச்சிப் பக்கம்”

“திருவானைக்காவலா, திருநாவுக்கரசுநாயனார் பாட்டுப் பாடின கோயில்தானே”

“யாருங்க அவரு”

“தேவாரம் எல்லாம் பாடினாரே”

“அப்டாங்களா……நான் காணலிங்க”….சந்திரனுக்குச் சிரிப்பு முட்டியது. மறைத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்திற்குள் சந்திரனின் மனதில் முற்றாக நிறைந்து கொண்டான் அவன்.

“வேற நல்ல இடத்தில வேலை கிடைச்சா செய்வீங்களா”

“துட்டு குடுக்கனுங்களா”

“எதுக்கு”

“குடுக்காம எடுப்பாங்களா….நான் இங்க வரதுக்கு பெரிய ரூவா இருபது குடுத்தேங்க”……என்றவன் முகத்தில் நம்பிக்கை வராமலே “சம்பளம் குடுப்பாங்களா” என்று கேட்டான். சந்திரன் சிரித்து விட்டு “100 றியால் கிடைக்கும்” என்றான்.

“ஐயா என்னோட பொன்னுச்சாமி பொன்னுச்சாமின்னு ஒருத்தன் இருக்கானுங்க…ஊர்ல இருந்த நீர்ப்பாச்சல் நிலத்தை வித்துப்புட்டு உழைக்கிற ஆசைல வந்திட்டான். அவனுக்கும் ஒரு வேலை போட்டுக் குடுங்க..உங்களுக்குப் புண்ணியமாப் போகும் ”

சட்டைப் பொத்தானை சரியாக மாட்டாத ஒருவன் வந்து வாசலில் நின்று கூப்பிட “அப்ப நான் வரட்டுங்களா” என்று எழுந்தான்.

“மறக்க வேனாம் வாற வெள்ளிக்கிழமை வரேக்குள்ள உங்கட விபரங்களை கொண்டு வாங்க” என்று சந்திரன் சொல்ல “நல்லதுங்க வர்றனுங்க”……………………..அவன் போய் விட்டான்.

அடுத்த நாள் வெள்ளைக்கார மனேஜரிடம் கதைப்பது என்று தீர்மானித்தான் சந்திரன். தயக்கம் முன்னுக்கு வந்தது. என்ன சொல்வானோ என்ற தவிப்பு முட்டி நின்ற போதும் எண்ணைக்கறுப்பின் பால்முகம் அதனை மழுங்கடிக்க கடைசியில் கேட்டே விட்டான். பச்சைக் கொடி தெரிந்தது. எண்ணைக்கறுப்பு அதிஷ்டக்காரன்தான்.

அடுத்த வெள்ளிக்கிழமை அவனுக்காகவே விரைவாக விடிந்தது போலிருந்தது. கோயில் பஸ்ஸில் ஏறிக் கொண்டான் சந்திரன்;. கோயில் வந்தது. அவசர வணக்கம் செலுத்திய பின் சுற்றிலும் பார்த்தான் சந்திரன். எண்ணைக்கறுப்பைக் காணவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. பஸ் வரும் நேரமாகிக் கொண்டிருந்தது. வெற்றிச் செய்தியை அவனிடம் சொல்லி மகிழும் வாய்ப்பு கை நழுவிப் போகுமோ என்ற அங்கலாய்ப்பு நெஞ்செல்லாம் நிரம்பிற்று.

“பஸ் வர நேரமாயிடிச்சுங்க”…………….எண்ணைக்கறுப்பு வந்து விட்டான். பக்கத்தில் அமர்ந்து கொண்டான். சூரியனார் அவனைக் குறை வைக்காமல் குளிப்பாட்டியிருந்தார். திருநீற்றுப்ப+ச்சில், வியர்வை – வாய்க்கால்கள் போட்டிருந்தன. மணியைப் பார்த்து விட்டு கொண்டு வந்த கடதாசியை எடுத்து எழுதத் தயாராகினான் சந்திரன்.

“எனக்கு பஸ் இப்ப வந்திரும் ……விபரங்களைக் கெதியாச் சொல்லுங்க.. “முழுப் பெயர்”

“மாரி மாரின்னு கூப்பிடுவாங்க”

“கூப்பிடுற பேரெல்லாம் இருக்கட்டும். பதிவுப் பேர் என்ன ?

“மாரியப்பனுங்க”

“அப்பா பேர்”

“உத்தண்ட தேவர் நாட்டாண்மைங்க”

“நாட்டாண்மையும் ஒரு பேரா”

“நம்ம கிராமம் முழுதுக்கும் அப்பாருதான் நாட்டாண்மை….என்னோட ஆறு வயசில மஞ்சள் காமாலைல பொசுக்குன்னு போய்ட்டாருங்க…..அதை நினைச்சாத்தாங்க கவலையாயிருக்கு…….ஆறடி உசரமுங்க”

“எனக்கு இப்ப நேரமில்லை பஸ் வரப் போகுது ….பழய கதையெல்லாம் விட்டுட்டு விபரத்தை மட்டும் சொல்லுங்க………………பிறந்த திகதி”

“பெரிய மந்திரி ராசாசி ஸ்ரீரங்கம் வந்திருக்காரு. நம்ம திருவானைக்காவல் பக்கந்தானுங்களே – அங்கயும் வந்து கோயில் யானைகிட்ட மாலை போட்டுக்கிட்டாரு”.

“அதுக்கு இப்ப என்ன”

“அன்னிக்குத்தான் நான் பிறந்தேனாம் ”

“அட அதை விட்டுட்டு சரியான வயசைச் சொல்லய்யா”

“ஒரு நாப்பந்தைஞ்சு போட்டுக்குங்க”

“என்ன கிளாஸ் படிச்சிருக்கீங்க”

“மூணாங் கிளாசுங்க……அப்பாரு போனதோட” ………என்று மாரியப்பன் தொடர முயல “அதை விடுங்க பாஸ்போட் கொப்பி கொண்டு வந்தீங்களா” என்று கேட்டான் சந்திரன்.

“அது கம்பனியில இருக்கு”

“ஏன் கொண்டு வரேல்லை”

“அவங்க தரமாட்டாங்க”

“அப்ப என்னத்தை வைச்சு நான் அப்ளிகேசன் அடிக்கிறது”

மணி பர்சை எடுத்துத் திறந்து நிறைய மடித்த துண்டுகளை அள்ளி முன்னால் போட்டான் மாரியப்பன். “இதில ஒரு துண்டில இருக்கும் பாருங்க”

“என்ன ?”

“எஞ்ஜினீரு ஐயா பாஸ்போட் நம்பர் குறிச்சுக் குடுத்தாரு ரொம்ப விவரமான ஆளு”

“நீயே எடுத்து வாசி நான் எதையெண்டு தேடுறது………….நேரம் போகுது”

“எனக்கு இங்கிலிசு வாசிக்க வராதுங்க”

“இங்கிலிசு வாசிக்க வராதா!!”

“ஏபீசீடில பத்து வரைக்கும் சொல்லுவனே”…..பெருமையோடு சொன்ன மாதிரிப் பட்டது. சந்திரனுக்கு இடறிற்று. பத்து எழுத்தை வைத்துக் கொண்டு இவன் எப்படி வெள்ளைக்காரன்களோடு சமாளிக்கப்போகிறான்!

“பாசை தெரியாம வெள்ளைக்காரனோட எப்பிடி வேலை செய்யப்போறாய் ?”

“அவங்க ஹிந்தியில கதைச்சா நல்லா விளங்குமுங்க”….அப்போதும் முகத்தில் பெருமையின் கீற்று மின்னியது.

“வெள்ளைக்காரனுக்கு ஹிந்தி தெரியாதேப்பா”

“அப்போ………….தமிழ் ?

கோயில் வாசலில் பஸ் வந்து நிற்கும் நேரமாயிற்று…

“சரி வெள்ளைக்காரன் இங்கிலீசில சொன்னா என்ன வேலை சொல்றான் எண்டு புரிஞ்சு கொள்ளுவியா”

“ஐயா நீங்களும் அங்கதானே வேலை பாக்கிறீங்க…..தமிழில மாத்தி எனக்குச் சொல்லுங்க…..நான் ஜமாய்ச்சுப்பிடுறன்….வெள்ளைக்காரத் துரைங்ககிட்ட சொல்லுங்க…..நான் வேலைல கெட்டின்னு……”

பஸ் வந்த சப்தம் கேட்டது. சந்திரன் எழுந்தான். மாரியப்பன் அவனை நிமிர்ந்து பார்த்தான்;.

“அப்போ வேலை எப்பங்க” ?

“அந்த வேலை உனக்குச் சரிப்பட்டு வராது. உன்னைப் போல வடிகட்டின மண்ணாங்கட்டி மடையனை நம்பி பேப்பர் பென்சிலோட நானும் மெனக்கட்டு வந்தனே…..என்னைச் சொல்ல வேனும்”……..எழுதிய கடதாசியைக் கசக்கி அவன் மடியில் விசுக்கி எறிந்து விட்டு நிற்காமல் நடந்தான் சந்திரன்.

உத்தண்டதேவர் மாரியப்பன் விசயம் விளங்காமல் விழித்தான்.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்