அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சித்ரா ரமேஷ் சிங்கப்பூர்


பாட்டுப் பாடி பரிசு வாங்குபவர்கள் உண்டு. பாட்டில் குற்றம் சொல்லியே பரிசு வாங்குபவர்களும் உண்டு. இதைச் சொன்ன தருமியும் நக்கீரன் அளவிற்கு நம் மனதில் நின்றவர்தான். இதே போல் அமெரிக்காவில் ஒரு ‘பாட்டு திறன் ‘ போட்டி.

எஸ் வி ரமணனின் சப்தஸ்வரங்கள் இன்னும் பிரமாண்டமாக நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு போட்டி ‘அமெரிக்கன் ஐடல் ‘என்ற பாட்டுப் போட்டி. திறமைசலிகள் தேர்ந்தெடுக்க பட்டு உலகளாவிய அங்கீகாரம், பிரபல நிறுவனங்களிலிருந்து பாட அழைப்பு, ஒலினாடக்கள், ஆல்பங்கள் என்று வாய்ப்புக்கள் தேடி வரும். ஆனாலும் அமெரிக்க இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அசாத்திய தன்னம்பிக்கை. கர்ண கடூரமாக கத்தி, ஒற்றை குரலும், இரட்டை குரலுமாகப் பாடி தேர்ந்தெடுக்க படவில்லையென்றால் அமெரிக்கன் ஆங்கிலத்தில் நடுவர்களையும் போட்டியையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி கம்பீரமாக வெளியேறுவதுதான் வழக்கம். இந்த முறையும் அதேபோலத்தான். நடுவர்களாக இறுக்கும் சைமோன்கோவெல், பாலா அப்துல்,ராண்டி ஜாக்சன் மூவரின் முக பாவங்களும், கேலியும், நையாண்டியும் பாட்டை விட அதிக ரசிப்பிற்குரியது. சைமோன் பாடி முடித்ததும் ரொம்ப உணர்ச்சிகரமாக ‘அமேசிங் ‘ ‘அமேசிங்லி ட்ரெட்புல் ‘ என்று சொல்வதை கேட்கவே படு காமெடியாக இருக்கும்.

வில்லியம் ஹங் ஹாங்காங் சீனர். ரிக்கி மார்டின் பாடிய பாட்டை ‘ஷி பங்க் ஷி பங்க் ‘ என்று கையை அந்த மூலைக்கும் இந்த மூலைக்கும் அசைத்துப் பாடி எல்லோர் மனதையும் தட்டிச் சென்றார். ஆனால் பாட்டினால் இல்லை. அவர் பாடிய பாட்டை கேட்ட சைமோன் ‘உன்னால் பாட முடியாது, நடனமும் ஆட முடியாது இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய் ‘ என்று கேட்டதற்கு ‘என்னால் முடிந்த அளவிற்கு செய்தேன்.இதில் வருத்த படுவதற்கு ஒன்றுமில்லை ‘ என்று சாதாரணமாகச் சொன்ன பதில் அசாதாரண விளைவை ஏற்படுத்தியது. வில்லியம் ஹங் பாடிய பாட்டும், அவர் சொன்ன பதிலும், அவரது அப்பாவிதத்தனமான முகமும் அவரை பிரபலமாக்கி விட்டது. அமெரிக்கன் ஐடலில் தேர்ந்தெடுக்கபடாவிட்டால் என்ன ? ஏப்ரல் 6-ம் தேதி அவரது இசை வட்டு வெளிவரப்போகிறது. நம் பாஷையில் சொன்னால் பல்லும் பவிஷுமாக இருக்கும் இந்த 18 வயது இளைஞனுக்கு கையையும் காலையும் கோணலாக அசைத்துக் கொண்டு சுருதி தப்பி பாடிய பாட்டுக்கு வெப்சைட்டே இருக்கிறது.

மக்களின் சைக்காலஜியே புரிவதில்லை. தனுஷ் எப்படி பிரபலமானார் ? பொங்கலுக்கு ‘புதுகோட்டையிலிருந்து சரவணன் ‘ ரீலீசாகும் போது ‘விருமாண்டி ‘ ரீலீஸ் செய்ய கமல்ஹாசன் ஒரு நிமிடமாவது யோசித்துத்தான் இிருப்பார்.

எது எப்படியோ அமெரிக்காவிலும் ஒரு ‘மன்மத ராசா ‘ பிரபலமாகி விட்டார். நம் தமிழர்களின் ரசனையும் உலகத்தோடு ஒத்துப் போய் உலகமயமாகும் முயற்சியின் முதல் வெற்றியாக எடுத்துக் கொள்ள வெண்டியதுதான்.

வில்லியம் ஹங், தனுஷ் இருவருக்கும் ஒரு பொது ஒற்றுமை இருப்பதை உணர முடிகிறது. எளிமையோடு கூடிய அப்பாவிதனம். ஆங்கிலத்தில் சொல்வார்களே ‘ரஸ்டிக் பியூட்டி ‘. வில்லியம் ஹங் பல் டாக்டரிடம் போய் பல்லை சரி செய்து கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தையே மாற்றி கொண்டு விடலாம். தனுஷ் இன்னும் இரண்டு பட வெற்றிகளுக்குப் பிறகு இன்னும் சதை போட்டு இளம் பெண்களின் கனவு நாயகனாகி விடலாம். ஆனாலும் இவர்கள் இப்படி இருப்பதுதான் அழகு.

வில்லியம் ஹங் வெப்சைட் முகவரி www.williamhung.net

***

சித்ரா ரமேஷ் சிங்கப்பூர்

***

kjramesh@pacific.net.sg

Series Navigation