அரவிந்தன் நீலகண்டன்
இன்றைய பாரத குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பாரதத்தை வளர்ச்சி பெற்ற நாடாக்குவது பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள இரு நூல்கள் ‘இந்தியா 2020 ‘ மற்றும் ‘எழுச்சி தீபங்கள் ‘. இவ்விரு நூல்களிலும் சரி அண்மையில் நடத்தப்பட்ட ‘இந்தியா டு டே ‘ கருத்தரங்கிலும் சரி, அவர்கள் கிராமங்கள் சார்ந்த ஓர் மேம்பாட்டிற்கான வழிகாட்டி மாதிரி ஒன்றினை முன்வைத்துள்ளார்கள். ‘புரா ‘ என சுருக்கமாக அழைக்கப்படும் ‘Providing Urban facilities in Rural Area ‘ என்பதே அது. சரி. இதற்கும் சாண எரிவாயு தொழில்நுட்பத்துக்கும் என்ன தொடர்பு ?
சாண எரி வாயு போன்றதோர் முழுமைத்தன்மை கொண்ட தொழில்நுட்பம், நம் மண்ணிற்கு உகந்ததோர் தொழில்நுட்பம் ஏன் இங்கு இன்னமும் அரசின் (குறைந்து வரும்) மானியத் தொகையையும் தன்னார்வ அமைப்புகளின் செயல்திறனையும் நம்பி மட்டுமே செயல்பட வேண்டி உள்ளது ? ஏன் அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட இடங்களில் கூட அத்தொழில்நுட்பம் வேர் பிடித்து வாழ்வுடன் இயையவில்லை ? இதனை ஆராய்கையில் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சாண எரிவாயுவால் கிட்டும் நலன்கள் பொருளாதார வெளிப்படைத்தன்மை கொண்டவை அல்ல எனவே அதற்கு ஒரு பெரும் தொகை முடக்கி வாங்க கிராம இந்தியர்கள் தயாராக இல்லை என்பது முதல் நிகர பொருளாதார இலாபமே இத்தொழில் நுட்பத்தால் இல்லை என்பது வரையிலாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் இரு கிராமங்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு தெரிவிக்கும் உண்மை என்ன ? 15 வருட பயன்பாடு கொண்ட 40 சாண எரிவாயு கலன்கள் ஆண்டொன்றிற்கு வாங்கும் விறகில் (சேகரிக்கப்படும் விறகின் அல்ல) மிச்சப்படுத்திய செலவுத்தொகை மட்டும் வீட்டிற்கு ரூபாய் 2497, முழு கிராமங்களுக்கும் ரூபாய் 99,877/-. இது வெளிப்படையான பொருளாதார நன்மைதான் எனினும் இது அத்தொழில்நுட்ப பரவலுக்கு துணை செய்யவில்லை. அதாவது ஒரு LPG ஏஜென்சியை வர்த்தக ரீதியில் நடத்த முன்வரும் பேர்கள் அதை விட கூடுதல் விலை போகும் பாரத சமுதாயத்துக்கு இலாபம் ஏற்படுத்தும் சாணஎரிவாயு தொழில்நுட்ப வர்த்தக ஏஜென்சி நடத்த முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. அதாவது இன்னமும் மானிய துணையின்றி விலைபோகும் சரக்காக இத்தொழில்நுட்பம் தன் முப்பதாண்டு வரலாற்றில் வடிவமைத்துக் கொள்ளவில்லை. ஏன் ?
இது குறித்து அறிய நம் தேசத்தின் சந்தை முழுக்க முழுக்க நகர மையம் கொண்டதாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய வேண்டும். நம் கிராமங்கள் சார்ந்த ‘நமது சந்தையை ‘ நம் தேச சந்தையை நாம் உருவாக்க வேண்டும். அது சாத்தியமா ? அத்தகைய கிராமங்கள் சார்ந்த சந்தைகள் இலாபமாக இயங்க முடியுமா ? அதனால் நம் தேச முன்னேற்றத்துக்கு எவ்வளவு இலாபம் ? என்ன இலாபம் ? இவை குறித்து கலாம் கூறும் பதில் இதுதான், ‘நூறு கோடி இந்தியர்களான நம் அனைவரிடமும் இருக்கும் மொத்தப்பணமும் ஒரு பெரும் வணிகச் சந்தை நிறுவப் போதுமானது. இவர்களில் 25 கோடி நடுத்தர வகுப்பு இந்தியர்கள் வேண்டுமானால் வெளிநாட்டுப் பொருள்கள் மீது மோகம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் இந்தியர்களோ இந்தியப் பொருள்களால் மிகுந்த திருப்தி அடைபவர்கள். உண்மையில் இந்திய தொழில் நிபுணர்களிடையே பெரிய அளவில் ஏற்றுமதிப்பேராசை அற்றவர்களும் இருக்கக் கூடும். அவர்கள் ஏனைய 77 கோடி ஜனங்களையும் புதியதோர் உள்நாட்டுச் சந்தைக் கலாச்சாரத்திற்கு உருமாற்ற முன் வர வேண்டும். இத்தகைய முன்னொடி இயக்கம் சக்தியுடன் அணி திரண்டுவிட்டால் மொத்த நூறுகோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் கொண்டதோர் பிரம்மாண்ட வணிகத் தளமாக இந்தியா விசுவரூபம் எடுக்கும் ‘ (இந்தியா 2020 பக்.348)
(கலாம் உபநிஷதம் மீண்டும் மீண்டும் நமக்கு தரும் செய்தி இதுதான் நம் உள்ளார்ந்த வலிமைகளை நாம் மீள் உறுதி செய்து ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதே.ஒரு விதத்தில் இது ஸ்வாமி விவேகானந்தர் பாரத சமுதாயத்துக்கு விடுத்த அறைகூவலின் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு எனலாம்.) இச்சந்தை தன்னியல்பிலேயே குவிமையமற்றதாக மேலும் மண் சார்ந்ததாக இருக்கும் என்பது தெளிவு. இச்சந்தையின் உதயம் சாண எரிவாயு தொழில் நுட்பத்தின் முழுபலனையும் நம் தேசம் அனுபவிக்க இன்றியமையாததாகும். இச்சந்தை இன்று பல இலட்சக்கணக்கான சுய உதவிக்குழுக்கள் மூலம் உருவாகத் தொடங்கியுள்ளது. சிறந்த சுரண்டலற்ற கடனுதவி என்பதையும் மீறி இந்த குவிமையமற்ற மக்கள் முதலாளித்துவ இயக்கம் குறிப்பாக மகளிர் மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கலாமின் கனவுச்சந்தை உருவாக முதல் மாத்திரம் போதாது. தகவல் சுழற்சியும் வேண்டும். நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்று நம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள் நகரங்களிலேயே குவிக்கப்பட்டுள்ளன. கிராம மேம்பாட்டிற்கான தொழில்நுட்பம் கூட நகர மையங்களிலேயே நகர சந்தை கலாச்சாரத்தில் பழகியவர்களால் உருவாக்கப்படுகின்றன. சாண எரிவாயு தொழில் நுட்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. பின் அரசின் அல்லது தன்னார்வ அமைப்புகளின் விரிவாக்க மையங்கள் மூலம் அவை கிராம சமுதாயங்களுக்கு எடுத்துச்செல்லப் படுகின்றன. முழுக்க முழுக்க மேலிருந்து கீழ் என நிலை கொண்டதோர் முறைமை இது. தொழில்நுட்ப பரவலில் மாற்றாதிக்கச் சக்திகளுக்கு இலாபம் இருந்தால் ஒழிய இம்முறை தொழில்நுட்ப பரவலுக்கு உகந்ததல்ல. இந்நிலையில் தொழில்நுட்ப தகவல் பரவு மையங்களாக மட்டுமின்றி கிராம பயன்பாட்டாளர்கள் , பாரம்பரிய தொழில்நுட்ப அறிஞர்கள் மற்றும் நவீன பொறியியலாளர்கள் இணைந்தியங்கும் மையங்களாக புராவினை காண்கிறார் கலாம். இன்றைய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கு இதை இன்றைய சந்தை அமைப்பிலேயே கூட இலாபகர சாத்தியமாக்க கூடும். கலிபோர்னிய பல்கலைக்கழக பொருளாதார ஆராய்ச்சி மாணவரான அதாணு தேய் பாரத கிராமங்களில் புரா போன்றதோர் அமைப்பின் சாத்தியங்களை சந்தை பொருளாதார சமன்பாடுகளில் ஆராய்கிறார். கலாமின் சிந்தனையுடன் ஒத்த அலைநீளத்தில் சுயமாக சிந்தித்துள்ள அவர் இந்த அமைப்பினை RISC (Rural Infrastructures and Services Common) என அழைக்கிறார். பின்வருமாறு அதனை விவரிக்கிறார். ‘RISC இரு தளங்கள் கொண்டது. ஒன்று உள்கட்டமைப்பு மற்றது பயன்படுத்துவோர் சேவை தளம். ‘ இத்தகைய மையங்கள் 100,000 பேருக்கு ஒன்று எனும் விகிதத்தில் சாத்தியம் என அனுமானிக்கும் அதாணு இதற்கான சந்தை சாத்தியக்கூறினை பின்வரும் வகையில் விளக்குகிறார், ‘கிராமப்புற பாரதத்தின் ஆண்டுற்பத்தி அளவு அமெரிக்க டாலர்களில் 120 பில்லியன். மிக எளிதாக சாதிக்க முடிந்த 10% கூடுதல் வளர்ச்சி அப்போது 12 பில்லியன் அதிகமாக அளிக்கும். இது ரிஸ்க் மையங்களில் இலாபகரமாக மீள் முதலீடு செய்யப்பட்டால் பின் வளரும் வளமை வட்டம் ஒன்றை உருவாக்குதல் முடியாத ஒன்றல்ல. ‘
தொழில்முனைவோர் மற்றும் பாரத தனியார் துறைகளும் தைரியமாக இதில் இறங்கலாம். பாரத மரபு சார்ந்த காத்தல் தன்மை கொண்ட அறிவமைப்புகள் கிராமங்கள் தோறும் மலிந்து கிடக்கின்றன. நம் நகர்மைய நலமற்ற வளர்ச்சியால் நலிந்து வரும் அவற்றைக் கண்டறிந்து திறமையாக பயன்படுத்தவும் ஆக்கபூர்வமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுடன் இணைவிக்கவுமான வாய்ப்பு மிகச்சிறந்த ஒரு ஆராய்ச்சி மேம்பாட்டு வாய்ப்பு. இதனை நாம் திறம்பட பயன்படுத்தவும் நாமே இன்று வரை உருவாக்கி உள்ள சாண எரி வாயு போன்ற தொழில்நுட்பங்களை மேலும் மேம்பாடடைய வைக்கவும் அவற்றை மக்களிடம் திறம்பட கொண்டுசெல்லவும் இம்மையங்கள் துணைபுரியும். மேலும் பல வளரும் நாடுகளுக்கான பொருந்திய தொழில்நுட்பமாக நாம் இவற்றை ஏற்றுமதி செய்யவும் இது வழி கோலும். ஏன் வளரும் நாடுகள் மட்டும் ? மிகச்சிறந்த முறையில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தை நாம் சர்வ தேச சந்தையில் விற்பனை பொருளாக்க முடிந்தால் வளர்ந்த நாடுகளுக்கே கூட நம்மால் தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யமுடியும் என்பதே உண்மை. 1500 பசுக்களை கொண்டு 1000 வீடுகளுக்கு போதுமானதாக ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து கலிபோர்னிய உழவர் அமைப்பின் அதிகாரி கூறியதாக மே 18,2002 தேதியிட்ட ரெயிட்டர் நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. பொருந்திய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பசுமை முதலாளித்துவம் இன்று மேற்கில் இலாபகரமான ஒன்றாகவும் நாளைய சர்வதேச கட்டுப்பாட்டுக்கு மற்றொரு ஆயுதமாகவும் கூட மேற்கு காண்கிறது. நமக்கோ அது நம் மரபோடிணைந்த புண்ணிய கைங்கரியம். இதுவே நம் வலிமையும் கூட. புண்ணியத்தை மையம் கொண்டதோர் (இலாப மையம் அற்ற) பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புக்கான கருத்தியல் நம்மிடம் உள்ளது. (உதாரணமாக அறம் மீறா இன்ப விளைவும் இறைவெளிப்பாடே என்கிறது கீதை.) ‘புண்ணிய ஆத்மாக்கள், புண்ணிய அதிகாரிகள் புண்ணிய தலைவர்கள் ஆகிய தங்க முக்கோணத்தை நாடு முழுவதும் ‘ உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாகலாம். (இந்தியா 2020, பக். 388) ஏனெனில் மண்ணோடிணைந்த பொருந்திய தொழில்நுட்பமான சாண எரிவாயு போன்றதோர் தொழில் நுட்பத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் அரசு சார்ந்த அமைப்புகளும் , இலாப மையம் கொண்ட நகர்ப்புற சந்தையும் அடைந்த தோல்வி நமக்கு உணர்த்தும் பாடமும் இதுவே.
infidel_hindu@rediffmail.com
- அனுபவக் குறிப்புகளும் ஆனந்தமும்(சிகரங்கள் – வளவ.துரையனுடைய கட்டுரைத்தொகுதி நுால் அறிமுகம்)
- மலராகி மருந்தாகி….
- பிள்ளை-யார் ?
- காதல் கழுமரம்.
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:6 சாண எரி வாயு தொழில்நுட்பத்துக்கான சந்தையை உருவாக்குதல்
- அறிவியல் துளிகள்-23
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டானும் நெய்ல்ஸ் போரும்
- மு.வ. ஒரு படைப்பாளியா ?
- ‘ ‘ நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் ! ‘ ‘
- நான் யார்……
- அன்பாலான உலகம் (து.ராமமூர்த்தியின் ‘அஞ்ஞானம் ‘ ) எனக்குப்பிடித்த கதைகள் – 58
- பாரதி இலக்கிய சங்கம் – சொல் புதிது மீதான விமரிசனம் பற்றிய தொகுப்பு
- தினகப்ஸா – அராஜக சிறப்பிதழ்
- சிலந்தி
- யார் இந்த பாரதிதாசன் ?
- வண்ணம்
- தமிழா கேள்…… தமிழவேள்!
- தாவரக்காதல்
- மீன் சாமியார்
- மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம்
- இயலாமை..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் மூன்று
- கடிதங்கள்
- குதிங்கால் வலியும், அது குணமான விதமும்
- தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது ?
- தீர்வை நோக்கி விரையும் காவிரிப் பிரச்சனை
- ஊழ்
- சுயசவுக்கடிக் கழைக் கூத்தாடிகள் : நம் தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள்
- உலகின் மிகப் பெரிய எதிரி யார்!
- இன்னும் தொலையாத இன்னல்
- வாழப் பழகிய சந்தன மரம்
- வாக்குமுலம்
- ‘பாரதி பாடாத பாட்டு ‘
- எது வரை…….. ?