• Home »
  • அரசியலும் சமூகமும் »
  • இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2001 (கிருஷ்ணசாமி, பான் மசாலா, போக்குவரத்து ஊழியர், ஆஃப்கானிஸ்தான், நோம் சோம்ஸ்கி)

இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2001 (கிருஷ்ணசாமி, பான் மசாலா, போக்குவரத்து ஊழியர், ஆஃப்கானிஸ்தான், நோம் சோம்ஸ்கி)

This entry is part of 19 in the series 20011125_Issue

மஞ்சுளா நவநீதன்


கிருஷ்ணசாமி கைது

பொய்வழக்குப் புகழ் அ தி மு க ஆட்சியில் ஒருவர் கைது செய்யப் பட்ட வுடனேயே அவருடைய கைதுக்கு ‘உண்மைக் காரணம் ‘ என்னவாய் ஒருக்கும் என்று தான் எல்லோரும் யோசிக்கிறார்களே தவிர, உண்மையான காரணத்திற்காக ஒருவர் கைது செய்யப்படக் கூடும் என்று எவருமே எண்ணுவதில்லை. கிருஷ்ண சாமி கைது விவகாரமும் அப்படித் தானா ? வால்பாறைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு போனஸ் கேட்டுப் போராட்டத்தில் இவர் தன்னை இணைத்துக் கொண்டதால் இந்த கைது நாடகமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

***********

பான் மசாலாவுக்குத் தடை : வாழ்க புத்திசாலிகள்

எந்த புத்திசாலி பான் மசாலா விற்பனைக்குத் தடை விதிக்கிற எண்ணம் மேற்கொண்டார் என்று தெரியவில்லை. எப்படித் தான் இவர்களுக்கு இப்படியெல்லாம் யோசனை வருகிறதோ ? பொது இடங்களில் சிகரெட் புகைக்கத் தடிஅ விதித்த சரியான செயலுடன் கூடவே இதையும் செய்திருக்கிறார்கள். பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்குக் கெடுதி என்ற விஷயம் காரணமாய் அதை நாம் வரவேற்க வேண்டும். புகை பிடிக்காதவரின் சுதந்திரத்தின் தலையீடு என்ற அளவில் அப்படிப்ப்பட்ட தடை இருப்பது நல்லதே. ஆனால், பான் மசாலா அப்படியல்ல. புகையிலையினால் ஏற்படும் உடல்நலக் கேடு பற்றி அரசாங்கம் முடிந்தவரையில் கல்வியின் மூலமாகவும் மற்று பொது நல அறிவிப்புகளின் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர வயதுக்கு வந்தவர்களின் சொந்த வாழ்க்கையில் இப்படி தலையீடு செய்வது நாகரிக சமூகத்தின் அடையாளம் அல்ல. நல்ல வேளையாக , உயர் நீதி மன்றம் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

உண்மையில் மக்கள் நலன் நோக்கமென்றால் பான் மசாலாவில் உள்ள புகையிலை விகிதாசாரத்தைக் கட்டுப்படுத்தலாம். தடை செய்யக் கூடாது.

இத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய விஷயம் சென்னையில் டிஸ்கொதேக்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை. இது என்ன தாலிபான் நாடா ?

************

போக்குவரத்து ஊழியர் போராட்டம் : தொடரும் துயரம்.

தி மு க அரசின் போது 25 சதவீத போனசிற்காககப் போராடுவோம் என்று அறிவித்த வெட்கம் கெட்ட அ தி மு க இன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தவுடன், அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய போனஸ் கூடக் கொடுக்க மறுக்கிறது.

ஒரு வழியாக வேலை நிறுத்தம் நின்று பணியாளர்கள் வெலைக்குத் திரும்பவிருக்கிறார்கள். இப்போதைக்கு 8.33 சதவீதமும் பின்பு பாக்கித் தொகையையும் தரவிருப்பதாய் அறிகிறேன்.

*********

வார்டு தேர்தல்களில் அ தி மு க வெற்றி

மக்கள் மீண்டும் மீண்டும் அ தி மு க மீது நம்பிக்கை வைப்பது ஒரு விதத்தில் வியப்பு அளித்தாலும், இன்னொரு வகையில் புரிந்து கொள்ளக் கூடியதே. எப்படியாவது தி மு க முழுமையான அதிகாரம் பெற்று விடக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வேறு வழியில்லாமல் அ தி மு க – விற்கு வாக்களிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. சென்னயின் வார்டு தேர்தலில் அ தி மு க வெற்றி பெற்றிருப்பதை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். அதில்லாமல் பெண்கள் ஜெயலலிதாவின் வெற்றியில் தம்முடைய வெற்றியை இனங்காண்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. மூன்றாவது அணி தொடங்குமுன்பே காற்றில் போய் விட்டது போலும்

********

விஜய காந்த் – கமல் ஹாசன் கட்சி அரசியலில் ? ?

கமல் ஹாசன் ஆளவந்தார் பட வெளியீட்டு விழாவில் தான் அரசியலில் வரவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். விஜய காந்தும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனை. அரசியல் பண்ணிப் பணமும், அதிகாரமும் பண்ண வேண்டிய அவசியமில்லாத கமல் ஹாசனும், விஜய் காந்தும் அரசியலுக்கு வருவது நிச்சயம் அரசியலில் மாறுதலைக் கொண்டு வரும். கூடவே ரஜனி காந்தும் இணைய வேண்டும். கட்சி அரசியல் என்றில்லாமல் ஒரு பொதுச் செயல் திட்டத்தை வைத்துச் செயல் படலாம். உதாரணமாக ப சிதம்பரம் முதல்வர் அல்லது நிதி அமைச்சர். குமரி அனந்தன் உள்ளாட்சித் துறை . வைகோ சமீப காலத்தில் அரசியலில் சற்று முதிர்ச்சி பெற்று வருகிற அடையாளம் தெரிகிறது. தனியாய் நின்றது, நடைமுறையுடன் ஒத்துப் போகாத செயல் என்றாலும் தம்முடைய அணுகுமுறையில் , கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டு செயல் படுகிற ஒரு போக்கும் தெரிகிறது. மத அரசியலும், சாதி அரசியலும் பண்ணாத அதே சமயம் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் வண்ணம் செயல் படும் நூறு பேர் கூடவா தேற மாட்டார்கள் ?

இவர்களை முன்னமேயே அறிவித்து விட்டு , தேர்தலில் ஈடுபட வேண்டும். இந்த மூவரும் இணைந்தால் இது சாத்தியமே. ஆனால் , தொழில் முறை அரசியல் கட்சிகள் வீசி எறியும் சகதியைத் தாங்கும் மன உறுதியும் வேண்டும். செய்வார்களா ?

(இப்படியெல்லாம் பெரிதாக நம்பித்தான் எம் ஜி ஆருக்கும் நாங்கள் வாக்களித்தோம் அதன் தொடர்ச்சி எங்கே வந்து நிற்கிறது என்று பார்த்த பிறகுமா இப்படியொரு யோசனை என்று ஒரு சினேகிதி சொன்னாள். எனக்கு நம்பிக்கை மட்டும் வற்றுவதே இல்லை.)

*******

ஆஃப்கானிஸ்தான் தலைவிதி பெர்லினில் நிச்சயிக்கப் படுமா ?

மீண்டும் ஒரு தவறான நடவடிக்கை. ஆஃகானிஸ்தானில் எப்படிப் பட்ட ஆட்சி நடைபெற வேண்டும் என்று பெர்லினில் கூடிப் பேசப் போகிறார்களாம். வடக்கு முன்னணி இது வரையிலும் தாலிபன் தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்து வந்திருக்கிறது. வடக்குக் கூட்டணி இப்படி உயிருடன் இருந்திருக்க வில்லையென்றால், தாலிபன் இப்போது கூடத் தோல்வி பெற்றிருக்காது. எனவே வடக்குக் கூட்டணி ஆஃப்கானிஸ்தான் ஆட்சியில் முக்கிய பங்கு பெற வேண்டும்.

பாகிஸ்தானின் ஆதரவு தாலிபனுக்கு இல்லையென்றால், வடக்கு முன்னணி தான் கடந்த ஐந்து வருடங்களும் ஆட்சி செய்திருக்கும். ஆனால், பாகிஸ்தான் இப்போது திடாரென்று ‘மிதவாத ‘ தாலிபனுக்கு ஆட்சியில் இடம் வேண்டும் என்று கோருகிறது. தன் பிடியை ஆஃப்கானிஸ்தான் மீது தக்க வைத்துக் கொள்ள பாகிஸ்தான் செய்யும் இந்த முயற்சிக்கு இடம் அளிக்கலாகாது.

***********

நோம் சாம்ஸ்கி : இடதுசாரிகளின் புதிய ரட்சகர் ?

இந்துக்கள் காசியாத்திரை போவது போல், இடது சாரிகள் எல்லாம் நோம் சாம்ஸ்கியின் பேச்சைக் கேட்பதற்காக அணி திரண்டு போயிருக்கிறார்கள். மேலை நாடுகளில் எப்படி செய்திகள் சுதந்திரமானவை அல்ல என்பது பற்றியும், செய்திகள் எப்படி நடப்பட்டு அரசிற்குச் சாதகமாய் திசை திருப்பப் படுகின்றன என்பது பற்றியும் சில முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தவர் நோம் சாம்ஸ்கி. ஆனால் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போல ஒரு சிறப்பான ஆளுமையையோ இயக்கத்திற்குத் தலைமை தாங்கிச் செலுத்தும் உணர்வையோ அவர் அளிக்கவில்லை. இதன் காரணம், ஒரு விதத்தில் குருட்டுத் தனமான அமெரிக்க எதிர்ப்பும், — இடது சாரிகள் இவர் பின்னால் போவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம் — மற்ற கலாசாரங்களைப் புரிந்து கொள்கிற உணர்வின்மையும், வன்முறைக்கு எதிரான திட்ட வட்டமான ஒரு நிலைபாட்டை எடுக்காததும் என்று சொல்லலாம். போல் போட் போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சியைக் கூட வரவேற்றவர் இவர் என்று அறியும் போது அவர் மீது வைக்கிற மரியாதை பொடியாகிப் போகிறது. இன்றைய மேனாடுகளின் போக்கை விமர்சிக்க ரஸ்ஸல் போன்ற ஒருவர் தான் தேவை.

இந்தியாவில் வந்து காஷ்மீர் பற்றிக் கருத்துத் தெரிவித்து விட்டு பாகிஸ்தான் சென்றிருக்கிறார். அங்கு ஜனநாயகப் படுகொலை பற்றியும், சிறுபான்மையினருக்கு இரண்டாம் தரக் குடிமகன் அந்தஸ்துக் கூட இல்லாமல் இருப்பதையும் பற்றிப் பேசுவாரா என்று தெரியவில்லை.

*********

போக்குவரத்துத் துறையில் ஏன் நட்டம் ?

எனக்குத் தெரிந்து என்னுடைய ஊரில் இரண்டு பஸ் வைத்திருப்பவர்கள் கூடப் பெரும் பணக்காரர்களாகி விட்டார்கள். ஒரு பஸ் தடம் அனுமதி வாங்குவதற்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுக்கவும் தயாராய் இருக்கிறார்கள். பொதுவாக சிறிய அளவில் செய்யப்படும் பொருளாதார முனைவுகள் , பெருமளவில் செய்யப் பட்டால் லாபம் அதிகமாகும் என்பது பொருளாதார விதி. அரசாங்கம் மேற்கொண்டுள்ள போக்குவரத்துத் துறையில் மட்டும் நட்டம் ஏன் ஏற்படுகிறது என்று யாரும் சொல்ல முடியுமா ? இது பற்றி தொழிற்சங்கங்கள், அதிகார வர்க்கம் போன்றவை ஏதும் வெள்ளை அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளனவா ?

********

Series Navigation