தமிழினக் காவலர் பில் கேட்ஸ்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

ஆசாரகீனன்


தமிழில் கலைச் சொல் திட்டம் பற்றி மைக்ரோசாப்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பைக் கண்டேன். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்காக அந் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய தளத்தில் (http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx) சொல்லப்பட்டிருக்கும் தகவல்களோ அதிர்ச்சி தருகின்றன.

மைக்ரோசாப்ட் போன்ற வணிக நிறுவனங்கள் ‘இந்தத் திட்டம் தமிழர்கள் தங்கள் மொழியைக் காக்கவும் வளர்க்கவும் உதவுகிறது ‘ என்றெல்லாம் பேசுவது நல்ல நகைச்சுவை. இந்தியா போன்ற நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையையும், பண வீக்கத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல், தம் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள்களுக்கு விலையாகத் தனிநபர்களிடமிருந்து பல்லாயிரம் ரூபாய்களை வசூலித்துக் கொண்டிருக்கும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் ஏதோ தமிழுக்குத் தொண்டு செய்வது போலப் பேசுவதும், இத் திருத்தொண்டில் ஊதியம் பெறாத தன்னார்வலர்களாக தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் கேட்பது ஆபாசமானது.

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் (பேராசிரியர் ராம.சுந்தரம்) போன்றவை கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது பல்கலைக்கழகங்களுகே உரிய அறிவுசார் மந்தத்தன்மை (Intellectual inertia) தவிர, போதிய நிதியின்மை காரணமாகவும் அண்மைக் காலத்தில் இத்தகைய பணிகள் சரிவர நடப்பதில்லை. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் என்றால் உடனே ஒரு பல்கலைக்கழத்தைப் பிடித்து, அதற்கு மில்லியன் கணக்கில் டாலர்களை அளித்து இப் பணிகளை மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட், இந்திய மொழிகள் என்றால் மட்டும் ஒரு சில லட்சங்களைக் கொடுப்பது என்றால் கூட மூக்கால் அழுகின்றது. இந்த லட்சணத்தில், கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக ‘இந்தக் கலைச்சொற்களை, தமிழ் அறிந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் ‘ என்று பெரிய மனது வைத்து அனுமதி வேறு கொடுக்கிறது. வெட்கக்கேடு.

இப்படிச் சொல்லப்பட்டாலும், மைக்ரோசாப்ட் இன்று துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்தாலும் அதை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே முடியும். இப்போதைக்கு இலவசம் என்று சொன்னாலும், தன்னார்வலர்களின் உழைப்பை உறிஞ்சிய பின்னர் அறிவுசார் சொத்துரிமை எங்களுக்குத் தான் என்று மார்தட்டி, தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கவோ, இந்தக் கலைக் களஞ்சியத்தை சொற்கள் சரிபார்க்கும் மென்பொருளில் இணைக்கவோ, அல்லது மின் படைப்புகளில் தேடுதலுக்கு துணை நூலாகப் பயன்படுத்தவோ ராயல்டி கோரி மைக்ரோசாப்ட் மூக்கை நுழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏற்கனவே, யுனிகோடு (Unicode) விஷயத்தில் இந்திய மொழிகளுக்கு, குறிப்பாகத் தமிழுக்குப் போதுமான அளவு இட ஒதுக்கீடு செய்யப்படாமல் பட்டை நாமத்தை பரக்கச் சாத்தியதன் பின்னணியில் மைக்ரோசாப்டின் பங்களிப்பை மறுக்க முடியாது.

இது கற்பனை அல்ல. இலவசம் என்று அறிவித்த எல்லா மென்பொருள்களும் பரந்த உபயோகத்திற்கு வந்தவுடன், காசு வசூல் செய்வது மைக்ரோசாப்டின் பழகிப் போன வியாபார உத்திகளில் ஒன்று. உதாரணமாக, கணிணித் தகடுகளில் (Disks) கோப்புகளைச் சேமித்து வைக்க உருவாக்கப்பட்ட கோப்பு வடிவங்களை (File format) இதுவரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது திடாரென்று மைக்ரோசாப்ட் இதற்குப் பணம் கேட்கத் தொடங்கி இருக்கிறது. உதாரணமாக, டிஜிட்டல் கேமரா போன்றவற்றில் படத்தை சேமிக்கப் பயன்படும் அதிவேக நினைவுத் தகடுகள் போன்றவற்றின் கோப்பு அமைப்பின் காப்புரிமை மைக்ரோசாப்ட்டுடையதாம். அதைப் பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டுமாம்.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் நிதி உதவியுடன் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொன்விழி (OCR) போன்ற மென்பொருள்களை இப்போது பல ஆயிரம் ரூபாய்கள் விலை கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. இதே போல தமிழனின் கிஸ்திப் பணத்தில் உருவாக்கப்பட்ட ‘லெக்ஸிகன் ‘ போன்றவையும் இலவசமாகக் கிடைப்பதில்லை. இதைப் பற்றியும் இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை.

உள்ளூர் நிறுவனங்களே இப்படி என்றால் பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் பற்றி சொல்லவே வேண்டாம். இது போன்ற தன்னலமற்ற முயற்சிகள் நடைபெறுவது சாத்தியமே அல்ல. தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முந்தைய முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தக் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியைச் செய்வதே சிறந்தது. அதனால், தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களாகத் தங்களைக் கருதும் அனைவரும் மைக்ரோசாப்டின் இந்தத் தன்னார்வ குறுக்கீட்டைப் புறக்கணிக்க வேண்டும்.

தமிழில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த ஒரு மொழியிலும் மென்பொருள்கள் உருவாக்கப்படுவது (மொழிபெயர்க்கப்படுவது) பற்றி எவருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. தமிழைப் பொறுத்தவரை, தனது சந்தைப்படுத்தும் (marketing) திறனைக் கொண்டு, தான் தயாரிக்கும் தமிழ் மென்பொருள்களை

பெருமளவில் தமிழக அரசின் தலையில் கட்டுவதே இந்த நிறுவனத்தின் இலக்கு. இது மைக்ரோசாப்ட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பொருந்தும். அதற்காக வணிக நிறுவனங்கள் மொழி உணர்வைத் தூண்டியும், சாமியாடியும், அதைத் தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்த வரை அறிவுசார் சொத்துரிமை என்பதே ஒரு பெரும் மூலதனமாகி வருகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒரு பொருளை உருவாக்கி விற்பதைவிட, பிற நாடுகளில் – குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்வது எளிமையானதும், விலை குறைவானதும் ஆகும். உற்பத்தித் துறை (Manufacturing Industry)-யின் மூலம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கிடைக்கும் வருவாய் ஏற்கனவே கணிசமான அளவுக்குக் குறைந்துவிட்டது. சீனா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் குறைந்த விலை காரணமாக அவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஆகவே, எதிர்காலத்தில் பிறருக்கு இன்றியமையாததாக இருக்கக்கூடியதாகக் கருதப்படுனவற்றின் (மென்பொருள்கள் உட்பட) காப்புரிமையைத் தன் கையில் வைத்துக் கொண்டு, அதைப் பயன்படுத்த விரும்புபவர்களிடம் ராயல்டி வசூலிப்பது மட்டுமே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் வணிக முன்வடிவாக (Business model) இன்னும் சில பத்தாண்டுகளிலேயே (decades) ஆகி விடும் வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இதைப் பற்றி பல அறிவியல் புனைகதைகள் கூட வெளிவந்துள்ளன. உதாரணமாக, நான்ஸி க்ரெஸ்ஸின் ‘தூங்காதவர்கள் ‘ புத்தக வரிசையைச் சொல்லாம். இதை மனதில் கொண்டே அமெரிக்க அரசாங்கம், காப்புரிமைச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பிற நாடுகளை வற்புறுத்துகிறது.

இத்தகைய தன்னார்வலர்களுக்கான அறிவிப்புகளை வெளியிடும் போது இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவர்கள், இத்தகைய திட்டங்களால் தங்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் (ஊதியம் உட்பட) எதுவும் கிடைப்பதில்லை என்பதையும் குறிப்பிடுவது இன்றியமையாதது.

தமிழ் லினக்ஸ் விஷயத்தில் ரிடையர்ட் விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் குழுவினரின் அறிவுத் திருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள், மைக்ரோசாப்டின் இத்தகைய தந்திரம் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்