ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

தந்தை பெரியார்


பெரிய பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் அது மாதிரி செய்ய ஆசைப்படுகிறார்கள். சொத்துரிமை இல்லையென்றால் யார் கவலைப்படுகிறார்கள் ? இரஷ்யா போன்ற நாடுகளில் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷப்படுவதுதான் மிச்சம். அங்கே ஒருவன் தன் இல்லக்கிழத்தியை ‘மனைவி ‘ என்று சொல்ல மாட்டான். ‘காதலி ‘ என்றுதான் சொல்லுவான். இருவரும் ஆஃபீஸ் போகும் முன்பு வழக்கப்படி முத்தம் கொடுத்து விட்டுப் போய்விடுவார்கள். அன்று மாலை திரும்பி வரும்பொழுது, மேசையின் மேல் கடிதம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்; அதில் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை; ஆகவே உன்னுடன் செய்துகொண்ட வாழ்க்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்கிறேன் என்று அதில் எழுதியிருக்கும்; சொத்து விஷயமாக அவர்களுக்குள் ஒரு தகராறும் வராது. அப்படி ஏதாவது வந்தால், சாமான் பிரிப்பதில் விவகாரம் வரும்; அதைப் பிரித்துக் கொடுக்க ஒரு ஆஃபீசர் இருக்கிறார்.

இங்கு சொத்து உரிமைக்காகத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இங்கு ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு ஆதாரம் தசரதன். ஆறாயிரம் பட்ட மகிஷிகளை வைத்துக்கொண்டு இருந்திருக்கிறான். கிருஷ்ணன் பல கோபிகாஸ்திரீகளுடன் குலாவியிருக்கிறான். இப்பொழுது ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், அவனுக்கு உடனே சிறை; முன்பு அய்ந்து பெண்கள் இருந்தாலும் ஆறாவது ஒரு பெண்ணைக் கொடுக்க முயற்சி செய்வார்களே. முன்பு மனைவி, வேலைக்காரியைவிட கீழானவள்தானே! வேலைக்காரியாவது வெளியே போவாள். சுதந்தரமாகத் தான் நினைக்கும் இடங்களுக்கெல்லாம் போய் வருவாள். மனைவி அப்படிப் போக முடியுமா ? சற்றுக் கதவு திறந்து இருந்தால் போதுமே. ஏன் திறந்து இருக்கிறது ? எதற்காகத் திறந்து இருக்கிறது ? என்றல்லவா அதிகாரம் செய்வான், மனைவியை.

மனைவி கையில் பணம் ஏதாவது இருந்தால், கணவன் கேட்டவுடன் கொடுத்துவிட வேண்டும்; இல்லாவிட்டால் முதுகில் நான்கு அடிகள் கொடுத்துத் தானே பிடுங்கிக் கொள்வான். ‘உனக்கேது பணம் ? எப்படி வந்தது ? ‘ என்றல்லவா அதிகாரம் செய்தான். இப்பொழுதுதான் தைரியமாக, ‘எங்கள் அம்மா கொடுத்தார்கள், அப்பா கொடுத்தார்கள் ‘ என்று பெண்கள் சொல்லுகிறார்கள். அப்பொழுது இப்படிச் சொல்ல முடியாதே.

ஒரு பெண், தன் தகப்பனார் வீட்டிற்கு வந்தால் முன்பு, அவளது சகோதரனின் மனைவி ஏன் வந்தாய் என்று கேட்டுத் திட்டுவாள். இப்பொழுது இது என் தகப்பனார் வீடு; என் அப்பா வீட்டுக்கு வந்தேன், நீ யார் என்னைக் கேட்பதற்கு ? சொத்தில் எனக்கு பங்கு உண்டு. என் சொத்தை என் இஷ்டப்படி அனுபவிப்பேன் என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது சாஸ்திரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன ? அறிவு வந்த பிறகு கொடுக்காமல் இன்னும் சாஸ்திரம் சொல்லவில்லையென்று சொல்லி வருவது அறிவுடைமையாகுமா ?

இப்பொழுது உலகம் இயற்கையாகவே மாறிக் கொண்டு வருகிறது; முன்பு நாங்கள் இதுமாதிரியான கருத்துகளைச் சொன்னால், நீங்கள் கேட்க மாட்டார்கள். இப்பொழுது எல்லோருக்கும் தானாகவே உணர்ச்சி வந்து கிராமங்களிலும் இம்மாதிரியான திருமணம் நடக்கிறது; இதில் எங்களுக்கு என்ன இலாபம் ? இதில் ஏதாவது கிடைக்கிறதா ? நாம் கெட்டது தான் கெட்டோம்; நம் சந்ததிகளாவது நன்றாக வாழ வேண்டும்; அவர்களுக்கு இம்மாதிரியான அடிமை உணர்ச்சிகள் வரக்கூடாது என்பது தவிர வேறு என்ன ?

நம்மிடையே பரவியிருக்கும் காட்டுமிராண்டிக் கொள்கைகள் ஒழிய வேண்டும். இப்பொழுது இராசகுமாரிக்கும் அரங்கநாதனுக்கும் என் தலைமையில் திருமணம் நடந்தது. இன்னும் கொஞ்சம் நாள்கள் போனால், மணமக்களே, தாங்கள் வாழ்க்கைத் துணைவர்களாக இன்ன நாளிலிருந்து ஆகப்போகிறோம்; அதற்கு நீங்கள் வந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம் ‘ என்று பத்திரிகை எனக்கு இப்பொழுது நிறைய வருகின்றன.

இப்பொழுது யாராவது ஒரு தகப்பனார் தன் மகளைப் பார்த்து, ‘ஏம்மா உனக்கு இந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா ? என்று கேட்டால், உடனே அந்தப் பெண், ‘ஏம்பா, திருமணம் உனக்கா, எனக்கா ? ‘ என்று கேட்கும். ‘எனக்கும் என் கணவனைத் தேடிக்கொள்ளத் தெரியும். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் ‘ என்று சொல்லும். வெள்ளையர்கள் தங்கள் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில்லை. அங்கு எல்லாம் உங்கள் மகனுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்பதே அவமானம். ‘அவனுக்கு இஷ்டமிருந்தால் அவனுக்குப் பிடித்த பெண்ணாகத் திருமணம் செய்துகொள்கிறான். இந்தச் சங்கதியை அவனிடம் கேட்காமல் என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் ? ‘ என்று தகப்பனார் சொல்வார். அப்படி அங்கெல்லாம் மனதுக்குப் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்கிறார்கள். இங்கு பெற்றோர்கள் செய்து வைத்த தம்பதிகளுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் எங்கள் அப்பா பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள் என்றுதானே கூறுகிறார்கள்.

சாஸ்திரம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது, பூ வைத்துக் கேட்பது என்பது எவ்வளவு இழிவான தன்மை! பொருத்தம் என்றால் ஆண், பெண்ணைப் பார்க்க வேண்டும். பெண் தன்னைக் கட்டிக்கொள்ளப் போகும் ஆணைப் பார்க்கவேண்டும். நாம் வண்டிக்கு ஒரு மாடு வாங்க வேண்டுமானால், இருக்கின்ற மாட்டுக்குப் பொருந்துமாறு எவ்வளவு கஷ்டப்பட்டு ஜோடி சேர்க்கிறோம் ? சாதாரணமாக நாய் குட்டி போட வேண்டுமென்றால், நல்ல இரக நாயாகப் பார்த்துத் தானே சேர்க்கிறோம். அதுபோலத்தானே குதிரையும்; ஆனால், மனிதனுக்கு ஜோடி சேர்ப்பதற்கு மாத்திரம் ஏன் அழுக்குப் பிடித்த பார்ப்பானிடம் போய்ப் பொருத்தம் கேட்க வேண்டும் ? மருமகளின் குணம் மாமியாருக்குத் தெரியாது; கணவனின் குணங்கள் மனைவிக்குத் தெரியாது; ஜாதகத்தைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வீட்டைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட்டால் திருமணம் தீர்ந்து போயிற்றா ?

திருமணம் செய்துகொள்பவனுக்கு ஜாதகமே இருக்காது. சோதிடம் பார்ப்பவன், ஜாதகம் இல்லையென்றால் பரவாயில்லை, ‘கையை நீட்டு ‘ என்பான். இப்படிக் கையை நீட்டி விரலைப் பார்த்துப் பொருத்தம் கண்டுபிடித்தால் என்ன அர்த்தம் ? தாய் பெயரைச் சொல்லிப் பூ எடுத்து எறிந்து விடுமா ? இல்லை அக்காள் தங்கை பெயரைச் சொன்னால், ‘என்னை என்ன சோதித்துப் பார்க்கிறாயா ? ‘ என்று கூறி, அடித்து விரட்டுமா, அந்த சாமி ? கழுதை, நாய்க்குட்டி பெயரைச் சொன்னால் இது மிருகத்தின் பெயர் என்று கூறுமா ? இப்படி இந்த 1956-ஆம் ஆண்டிலுமா நாம் இத்தகைய பைத்தியக்காரர்கள் என்று காட்டிக்கொள்வது ?

இப்பொழுதே இப்படியென்றால் இன்னும் பார்ப்பான் அதிகாரம் பெற்று விட்டால் நம்மைப் பேச விடமாட்டான்! ஜோசியம் பார்க்கவில்லை, ஓமம் வளர்க்கவில்லை என்றால், நம் திருமணம் செல்லாது என்று சொல்லிவிடுவான். நேற்று அய்க்கோர்ட்டில் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்! நாரதர் சொன்னபடி, வியாசர் சொன்னபடி, பராசரர் சொன்னபடி திருமணம் நடக்கவில்லை; அதனால் செல்லாது என்று கூறிவிட்டார்களே! யார் கேட்டார்கள், ஸ்லோகத்தைக் கொண்டு வந்து தீர்ப்பில் போடலாம் என்ற 1956-இல் யாராவது நாரதர் என்று சொன்னால் நம்புவானா ? எப்பொழுது இருந்து நாரதன் இருக்கிறான் ? மூன்று கோடி, நான்கு கோடிக்கு முன்பு பார்த்தால் அப்பொழுதுதான் நாரதன் இருக்கிறான். நாரதர் சுமார் 50 பிரம்மாக்களைப் பார்த்திருப்பான் போல் இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கின்றார்கள் என்றால், இது போன்ற திருமணங்கள் நாட்டில் பெருகிப் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பைக் கெடுத்து விட்டது. அதனால் பல வழிகளில் அடக்கப்படுகிறார்கள். எதிர்க்கிறார்கள். இருந்தாலும் இத்திருமணங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன; நின்று விடவில்லை.

சாஸ்திரப்படி செய்துகொண்டவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத்தான் சொத்து சேரும். தகப்பன் இறந்து மற்றவர்கள் யாராவது சொத்துக் கணக்குச் சேரவேண்டும் என்று தகராறு செய்தால், அப்பொழுதுதான் எப்பொழுது திருமணம் நடந்தது ? யார் நடத்தியது ? எப்படி நடந்தது ? என்று கேள்வி வரும். அதற்காகத்தான் சொத்து நமக்கு வராதென்கிற எண்ணத்தால் சிலர் பயப்படுகிறார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று சட்டம் பார்லிமெண்டில் விவாதத்திற்கு வந்தபோது, தமிழ் நாட்டார் ஆட்சேபிக்கவில்லை. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தூண்டி வட நாட்டார்களும் எதிர்த்தார்கள். முதலமைச்சர் நேரு அவர்கள் இராஜினாமா செய்துவிடுவேன் என்று பயமுறுத்திய பிறகுதான் சட்டம் நிறைவேறியது.

அப்படிச் சட்டம் நிறைவேறிவிட்டால், பெண்கள் தங்களுடைய பங்குகளை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். இன்னும் நாம் சீர்திருத்தம் அடையவேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கின்றன. எங்களிடம் அதிகாரம் வந்தால், ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது என்று சட்டம் போட்டுவிடுவோம். மேல் நாடுகளில் ‘டைப் ‘ அடிக்கப் பெண்களை நியமித்து இருக்கிறார்கள். பெண்கள் மாத்திரம் நடத்தும் பள்ளிக்கூடங்கள், ஆஃபீஸ்கள் இருக்கின்றன. ஆனால் நம் பெண்கள் நாற்று நடவும், பார்ப்பனப் பெண்கள் மாத்திரம் இந்தக் காரியங்களில் நடப்பதற்குப் பெண்கள்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். இம்மாதிரியான காரியங்களுக்கு நம் தாய்மார்களும், பெண்களும் இலேசில் ஒப்புக்கொள்வதில்லை. இனிமேல் ஆண்கள் சும்மாயிருந்தாலும் பெண்கள்தான் இம்மாதிரியான காரியங்களுக்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

– ஆகஸ்ட் 26, 1956 அன்று வடசேரியில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ‘விடுதலை ‘ – செப்டம்பர் 7, 1956.

‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஆறாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.70) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன்)

aacharakeen@yahoo.com

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்