சாளரங்கள்
கலாசுரன்
ஒரு
மேசையின்
மேல்ப்பகுதியை
முன்வைத்தபடி
அமர்ந்திருக்கிறேன்
அதன் முகத்தில்
ஒன்றின் மேல் ஒன்றாக
பல சாளரங்களை
இரு விரலசைவுகளில்
திறந்து வைக்கிறேன்
புனைவுகள்
சித்திரங்கள்
வரலாறுகள்
சிந்தனைகள்
தகவல்களென
ஒவ்வொரு சாளரமும்
தங்களை
அறிமுகப் படுத்திக்கொண்டன
எதிலும்
திருப்தி வராத மனமுமாய்
திறந்தவை
ஒவ்வொன்றாய்
மூடிவிட்டு
மேசை முகத்தையும்
கீழிழுத்து
மூடினேன்
சலிப்புடன்
திரும்பிப் பார்க்கிறேன்
திறந்திருக்கும்
என் வீட்டுச் சாளரம் வழியாக
எட்டிப்பார்த்த
நட்சத்திரங்கள்
குதூகலமாகக்
கண் சிமிட்டின..
*
***
கலாசுரன்