ப மதியழகன் கவிதைகள்

This entry is part of 41 in the series 20110220_Issue

ப மதியழகன்


நிலாமுற்றம்
================
வானிலுள்ள வெள்ளித்தட்டு
சாதம் பரிமாறுபவர்
கைகளுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி காட்டும்
குழந்தைகள் எட்டிப் பிடிக்கப் பாயும்
தூக்கியெறியப்பட்ட கால்பந்து போல
அந்தரத்தில் நிலவு
நிலாச்சோறு சாப்பிடும்
கூட்டத்தோடு கலந்துவிடும்
பெளர்ணமி அன்று நிலா
கடலலைகளை
உயரெழும்ப வைத்து
வேடிக்கை காட்டும்
வெண்மதி
அமாவாசை அன்று
யார் வீட்டிற்கு
விருந்துக்குச் செல்வான்
சந்திரன்
குழந்தைகளுக்கு சோறூட்டும்
தாயிடம் கை நீட்டும் நிலா
கடைவாயில் வழியும் எச்சிலோடு
தனக்கும் ஒரு கவளம்
வேண்டி
எல்லோரையும் அண்ணாந்து
பார்க்கச் செய்யும்
அம்புலியை யாருக்குத்தான்
பிடிக்காது.

===============================
பித்து
================
சூசகமாய்ச் சொன்னார்கள்
அவளுக்கு கோட்டி பிடித்து விட்டதென
பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தாள்
ஆனால் அவிழ்ந்த கூந்தலும்
கலைந்த சேலையும்
அவளை அவ்வாறாக
எண்ண வைத்தது
காரணத்தை விசாரித்தால்
கதையொன்று சொன்னார்கள்
எல்லை அம்மனை அவமதிச்சா
இப்படித்தான் ஆகுமென்றார்கள்
எனக்குத் தெரிந்த மருத்துவரிடம்
அவளை அழைத்துச் செல்ல
அனுமதி கேட்டால்
மருந்தால சரியாகாது
ஆத்தா மனசு வைச்சாத்தான்
தெளியுமென்றார்கள்
எங்கும் செல்லமுடியாமல்
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
அவளை பார்த்துவிட்டு
வந்த பிறகு
இரவில் கண்ணுறக்கம் வரவில்லை.

Series Navigation