கடல் வற்றிய வேளை

This entry is part of 45 in the series 20110130_Issue

சத்யானந்தன்


என்னை இறக்கி விட்ட
ஆமை எங்கே சென்றது?
இந்த மணற் பரப்பு நெடுக
நிறைந்திருக்கும் கூட்டத்திடையே
அது மறைந்திருக்கக் கூடும்

குழுமிய கூட்டம் பரபரப்புடன்
முண்டியடித்துப் புலம்பித்தவித்தது
கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது

கடலிருந்த இடத்தைச் சுற்றிக் காவல்
பின்னே தள்ளினர் கூட்டத்தை
எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்?
காவிரிப் பூம்பட்டினம் காணாமற் போகுமோ?

ஒலிபெருக்கி வழி அறிவித்தது அரசாங்கம்
கடல் வற்றியது தற்காலிகமானதே
மெதுவாய் கூட்டம் கலையத் துவங்கிற்று

காத்திருந்து காவல் விலகியதும்
விளிம்பு வரை சென்று எட்டிப் பார்த்தேன்
மேகங்களைக் கலைத்தபடி
மீன்கள் சிறகு விரித்திருந்தன

Series Navigation