உடைந்த சூரியனும் நானும்…

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

ஹேமா(சுவிஸ்)


*******************************************
உடலின் தேவைகளோ
உணர்வின் தேவைகளோ அற்ற
சூன்ய வெளியில்
என்னை முழுதாக்க
உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே
பொருத்தியபடி சூரியக் கைகள்.

சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள்
ஒத்துழைக்காத ஆன்மாவைத்
திணிக்க முயல்கையில்
இசைந்து தராத போராட்டம்
உடைந்த சூரியனுக்கும்
எனக்குமானதாய்.

துருவங்களின் இடைவெளியை
நிரப்ப முயல்கிறேன் நான்.
உணர்வாகிச் சூரியனும்
உடலாகி நானும்
ஒன்றைவிட்டு ஒன்று பிய்தல் குறித்து
சத்தம் போட்டு கதறுகிறேன்
சார்ந்திருத்தலைக் குறித்தே சொல்கிறேன்.

புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.

உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!

Series Navigation

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)