அன்பு

This entry is part of 45 in the series 20080501_Issue

ஆதிராஜ்அன்பெனப் படுவதே ஆவியின் கவசம்1
அன்பேனப் படுவதே அவனியின் ஜீவன்!
அன்புடை வாழ்க்கை அறிவுடை வாழ்க்கை!
அன்புள உளமே அமுதுள கலசம்!

புத்தன் என்னும் புண்ணியன் புவிக்குச்
சத்துள மருந்தெனச் சாற்றிய தன்பே!
காந்தி மகானின் கவர்ச்சியும் அன்பே!
சாந்தியின் உண்மைச் சாரமும் அன்பே!

வள்ளலார் ஏற்றிய ஜோதியும் அன்பே!
கள்ளமில்லாத காதலும் அன்பே!
பொய்யாமொழியார் புகழ்ந்ததும் அன்பே!
மெய்யாய் மறைகள் மெச்சினதன்பே!

வர்த்தமானர் காட்டிய நெறியிலே
அர்த்தம் நிறைந்த அகிம்சையும் அன்பும்!
அஞ்சன விழிகள் அழகுறும் அன்பால்!
வெஞ்சினம் வெல்லும் வேற்படை அன்பே!

கன்மனம் கரையும் கயமையும் மறையும்!
பொன்மனக் குளத்தில் பூத்திடும் அன்பால்!
அன்பு செய்வோர்க்கே அனைவரும் சொந்தம்!
அன்பு செய்வோர்க்கே அவனியே சொந்தம்!

அன்பு செய்வீரே! அன்பு செய்வீரே!
அறிவுடையோரே அன்பு செய்வீரே!

– ஆதிராஜ்

Series Navigation