இன்னும் கொஞ்சம் தூங்கவிடு!

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

பசுபதி


இன்னும் கொஞ்சம் என்னைத் தூங்கவிடு! –ஈசா!
இரவுக் கனவின் இறுதி பார்க்கவிடு!

பைநிறைய சுவடிகளைச் சுமந்து நின்றார் –முனிவர்
. . பக்கத்தில் வாசுகியும் பைய வந்தாள்;
ஜைனரோ ?பின் சைவரோ ?நீர் என்று கேட்டேன் — நகைத்து,
. . சைகைசெய்து கூப்பிட்டார்; அருகில் சென்றேன். (1) (இன்னும்)

ஆரணியார்^ வடுவூரின்^ கூட்டு நாவல் — ஆகா!
. . ஆழ்வார்#தன் கடைக்குள்ளே உண்டு, என்றார்!
‘பாரெங்கும் துப்பறியச் செல்வோன் நாமம் — அதனில்
. . பசுபதியே ‘ என்றுசொல்லித் தேடச் சென்றார். (2) (இன்னும்)

வந்தியத் தேவனுடன் காதற் போட்டி — கடும்
. . வாட்போரில் சரிநிகராய்ப் பொருதி நின்றேன்.
குந்தவை கண்களிலோர் குழப்பம் கண்டேன் — கையில்
. . கோலமலர் மாலையுடன் கிட்டே வந்தாள். (3) (இன்னும்)

பண்டொருநாள் பள்ளியிலே வெண்பாப் போட்டி -ஈற்றடி
. . ‘பசுபதியோர் சின்னப்ப யலெ ‘ன்றார் ஆசான்;
முண்டாசு நண்பனொரு நகையு திர்த்தான் — ‘பாண்டியா!
. . முழிக்காமல் எழுதெ ‘ன்று வாய்தி றந்தான்! (4) (இன்னும்)

இனியதமிழ் அறிவோங்க மருந்து வேண்டி– நான்
. . ஏங்கிநிற்கும் போதிலொரு சிறுவன் வந்தான்.
‘குனிந்துன்றன் நாநீட்டு ! தருவேன் ‘ என்றான் — ஒரு
. . கூர்வேலும் அவன்கையில் மின்னக் கண்டேன். (5) (இன்னும் )

அன்றொருநாள் இணையத்தில் மேயும் போது — ஒரு
. . யமலோகச் சோதிடரின் சுட்டி கண்டேன்.
என்பெயரின் கீழ்ஆயுள் தேடும் போது — பாவி
. . எருமையொன்று, அலறிடவே கண்வி ழித்தேன் ! (6)

இன்னும் கொஞ்சம் இம்மை நீட்டிவிடு! –ஈசா!
இறுதிக் கனவைத் தள்ளிப் போட்டுவிடு!
=======

^ஆரணி= ஆரணி குப்புசாமி முதலியார்)(1867-1925);
வடுவூர்= வடுவூர் துரைசாமி ஐயங்கார்(1880-1940); தமிழில் துப்பறியும்
கதைகள் எழுதிய முன்னோடிகள்.
#ஆழ்வார் கடை= சென்னையில் இருக்கும் பிரபல பழைய புத்தகக்கடை .
பசுபதி
~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி