நோன்பு

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

T.V.ராதாகிருஷ்ணன்


சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும்,
வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்
வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக்
கொண்டிருந்தது.

பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார்.

கருமை நிறம் அதிகமா…அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில்
கேசக்கற்றைகள்.சாந்தமே..உருவான..புன்முறுவலுடன் காணப்படும் அந்த முகம்..
இன்று சற்றே வாடிய ரோஜாப்போல…கண்மூடிக்கிடந்தது.மேல் உதடுகள்
மீதும்..நெற்றிப்பரப்பிலும்..முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.தன்
கையில் இருந்த கைகுட்டையால் அவற்றை ஒற்றி எடுத்தார்.

இப்பொது அவர் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.

அவள்..அவர் வீட்டில்..அவர் மனைவியாய் காலடி வைத்தது முதல்..நேற்று மாலை
வரை பம்பரமாய் சுழன்றவள்.ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாத உயிர்…

அவள் அப்படியிருந்ததால் தான், பிரகாசத்திற்கு வீட்டுக் கவலைகளை மறக்க முடிந்தது.,

அவள் அப்படியிருந்ததால் தான்..அவரால்..தன் இரு
சகோதரிகளுக்கும்.மகளுக்கும் திருமணம் செய்துவைக்க முடிந்தது.

தொகுதி எம்.எல்.ஏ., வரும்போது…அல்லக்கைகள் படை சூழ
வருவதுபோல..சிவகாமியை கவனிக்கும் மருத்துவருடன்..உதவியாளர்கள் என்ற
சிறுகூட்டம் உள்ளே நுழைந்தது.

சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்…நர்ஸிடம்..’டிரிப்ஸ் ஏற்றுவதை
நிறுத்த வேண்டாம்…ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாராய் வைத்திருங்கள்’என்றார்.

பிரகாசம்..தயங்கியவாறு அவரைப் பார்த்து..’டாக்டர்..’என இழுத்தார்.

புருவங்களை உயர்த்தி ‘என்ன’ என்பது போல பார்த்தவர் ‘இப்ப ஒன்னும் சொல்ல
முடியாது.இருபத்து நாலு மணி நேரம் தாண்ட வேண்டும்’என இயந்திரத் தனமாய்
பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.பிரகாசம்..கடைசியாய் போன மருத்துவரைப்
பார்த்து..பரிதாப சிரிப்பு சிரித்தார்.

உதவியாளருக்கு என்ன தோன்றியதோ..அவர் பிரகாசத்தின் தோள்களைத் தட்டி
‘இனி எல்லாம் அந்த ஆண்டன் கையில்..’என மேலே கையைக் காட்டிவிட்டு
நகர்ந்தார்.

ஆண்டவன்..என்ற வார்த்தையைக் கேட்டதும்..சிவகாமியின் முகத்தைப் பார்த்தார் பிரகாசம்.

‘அவர் ஆயுள் நீடிக்க வேண்டும்..அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..என
வரலட்சுமி நோன்பும்,கனுப்பொங்கலும்,வெள்ளிக்கிழமைகளில் விரதமும்..என
சதா சர்வகாலமும்..தன் கணவனின் நலத்தையே
எண்ணிக்கொண்டிருந்தாளே..சிவகாமி..அவள் நலத்தைப் பற்றி..தான் என்றாவது
நினைத்ததுண்டா?இது நாள் அவளை ஒரு மனிஷியாகக் கூட நினைக்கவில்லையே..ஒரு
இயந்தரம் போலத்தானே..நினைத்திருந்தார்..’

‘ஆண்டவா..இவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே! அவள் நலனுக்காக இனி நான்
விரதம் இருக்கிறேன்..நான் அவளுக்காக நோன்பு எடுக்கிறேன்..மனைவி
நலத்துக்காக..கணவன் நோன்பு எடுக்கக்கூடாது என எங்கே எழுதி
வைத்திருக்கிறது? அவளில்லாமல் ஒரு வினாடிக்கூட இருக்க முடியாது..என
உணர்ந்துக் கொண்டேன்’ என அரற்றத் தொடங்கினார்.

வாடிய ரோஜா..சற்று சிரிப்பது போல இருந்தது.

Series Navigation

நோன்பு

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


பொறாமையை
பொறுமையாக்கும்
நோன்பு

வக்கி¢ரத்தை
வாஞ்சையாக்கும்
நோன்பு

கோபங்களை
சாந்தமாக்கும்
நோன்பு

தண்டிப்பை
மன்னிப்பாக்கும்
நோன்பு

இகழ்ச்சிகளை
புகழ்ச்சியாக்கும்
நோன்பு

கள்ளங்களை
வெல்லமாக்கும்
நோன்பு

வசைகளை
இசைகளாக்கும்
நோன்பு

பகைமையை
நட்புகளாக்கும்
நோன்பு

உறங்கும் ஆன்மீகத்தை
உசுப்பிவிடுவது
நோன்பு

பட்டினி கிடந்துதான்
பட்டாம் பூச்சி யாகிறது
கூட்டுப் புழு

rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்