ரிஷி
காலநிலைக்கட்டமைப்பு
1 சூரியக்கதிர்வீச்சு
உம்மைச் சுற்றி அந்த ஒரு சொல்லைப்
காற்றில் பரவச் செய்
சிலந்திவலைப் பூச்சிகளாய் சிக்கும்
பல.
நாக்கை நீட்டிச் சுழற்றி
வேண்டியதை உள்ளிழுத்துக்கொள்.
உன் அடியாழ இருளுக்குள்
ஒளிபாய்ச்சித் துழாவும்
சூரியக்கதிர்வீச்சில்லா உலகில்
சிறிதும் கவலையெதற்கு?
2. ஆழிப்பேரலை
அந்த ஒரேயொரு சொல்லைச் சொன்னால் போதும்
முப்பதுக்கு மேலோ கீழோ_
தப்பாது கிடைப்பார்கள்
பத்தரைமாற்றுக்கன்னிகள்
எப்பவும்.
பாதுகாப்புறை தேவையில்லை.
பரிசுகளேதும் பெரிதாகத் தர வேண்டியதில்லை.
ஒரு புன்னகையைத் தங்கள் மனதின் அடியாழங்களில்
பத்திரப்படுத்திக்கொள்ளும் பேதையர்களுக்கு
என்றும் பஞ்சமேயில்லை.
வெப்பம் அதிகரித்து கடல்மட்டம் உயர்ந்து
ஆழிப்பேரலையாக உருவாகிக்கொண்டிருப்பதையறியாமல்
கடற்கரையில் அழகிய கிளிஞ்சல்களைப் பொறுக்கி
அழகுபார்த்துக்கொண்டிருக்கும் அறியாமை நிரம்பியவர்களை
அடையாளங்காணத் தெரிந்துகொள்ளக்
கொஞ்சம் பயின்றுவிட்டால் போதுமானது
3.கடலிடைப் பனிப்பாறைகள்
இரைதேட வாகாய்
நிற்பதற்கு
கடலிடைப் பனிப்பாறைகள் இல்லாதொழிய
அழியாமல் என்ன செய்யும்
பெங்குயின் இனம்?
அது மட்டுமா….
4. அழிக்கப்படும் விளைநிலங்கள்
அகமும் புறமுமாய்
தனது 10 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தருவதில்
கவனமாயிருந்து
பதிலுக்கு 210 சதவிகிதத்தைப்
பெறத் தெரிந்தவர்கள்
வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்
ஆறு வறண்ட்போனால் என்ன?
விளைநிலங்கள் அழிக்கப்பட்டால்தான் என்ன?
வர்த்தக சாம்ராஜ்ய உருவாக்கமும்
விரிவாக்கமுமே குறியாய்.
5. பசுமையில்ல வாயுக்களின் அடர்வு
வளிமண்டலத்தில் அதிகமாகிக்கொண்டே வருகிறது
பசுமையில்ல வாயுக்களின் அடர்வு
புதைபடிவ எரிபொருள்களின் வழி
மண்ணரிப்பின் வரி காடெரிப்பின் வழி
ரயில்பாதைகள், நெடுஞ்சாலைகள் வழி
சுழித்தோடும் ஆறு கடல் நீர் வழி
நீராவி வழி
புகை வழி மாசு வழி
ஆசையாசையாய்
மொழியும் மொழியாச்
சொல் வழி சைகை வழி
நில் வழி செல் வழி
கழியுங் காலம்
அழிவின் நிழலில்.
6. புவிமேலோடு
புவிமேலோட்டுத்தகடுகள்
ஒன்றோடொன்று இடைவிடாமல்
உராய்ந்துகொண்டேயிருக்கின்றன.
விளைவாய்
சில நேரங்களில்
மலைகள் உருவாகின்றன.
சில நேரங்களில்
கண்டம் புதையுண்டு போகிறது.
கடல் கரையாக, கரை கடலாக
உடல்கள் சடலங்களாகும்
எனில்
சடலங்கள் உயிர்தெழுமோ?
7. சூழல் மாசு
அடுக்குமாடி வீடுகளைத் தாண்டி
குடிசைப்பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள
குப்பைக்கூளங்களில்
சாக்கடைகளில்
அப்பிக்கொண்டிருக்கும் கொசுக்களறியா
சாதி சமய
ஏழை பணக்காரப்
பாகுபாடுகள்.
8 வெப்பசுழற்சி
என் குழந்தையைக் கடத்திச் சென்றவரைக் கையுங்களவுமாகப் பிடித்துவிட்டேன்.
எல்லாம் தெரிந்தவர்தான்.
கழுத்தை நெரித்துக்கொல்லவேண்டும் என்ற கொந்தளிப்பை
யடக்கிக்கொண்டு நியாயம் கேட்டேன்.
’உன்னிலிருந்து வந்ததென்றாலும் உன் குழந்தை உன்னுடையதல்ல’
என்று தத்துவம் பேசினார்.
’உன் குழந்தைக்குப் புதுச்சட்டை வாங்கி அணிவித்திருக்கும் என் பெருந்தன்மை கண்ணில் படவில்லையா? ‘ என்றார்.
கதறிக் கன்ணீர் விட்டழுதபடி என்னிடம் ஓடோடிவந்து ஒண்டிக்கொண்ட
குழந்தையைப் பார்த்து
”தொட்டாற்சுருங்கி – தாயைப்பொலவே” என்று கேலிசெய்தார்.
அற்ப விஷயத்திற்கு ஆகாத்தியம் செய்கிறாயே என்றார்.
’மலிவான விளம்பரம் தேடும் முயற்சி இது’ என்றார்.
’நோஞ்சான் பிள்ளை, இதைப் போய் யாராவது கடத்துவார்களா?
போனால் போகிறது என்று தூக்கிக்கொண்டேன்’ என்றார்
’உன் அழகையும் உன் குழந்தையின் அழகையும் கண்ணாடியில் பார்த்துக்கொள்’ என்றார்.
’மனநோயின் அறிகுறி இது, மருத்துவரைப் பார்’ என்றார்.
குறுமதிக்காரி என்றார்
சிறுதுளியும் உன்மேல் மதிப்பில்லை என்றார்.
’மறந்தும் வருத்தம் தெரிவிக்கத் தெரியாத மனிதன்
இவன் கழுத்தைத் தொடுவதும் இழுக்கு’ என்று தோன்றியது.
குழந்தையை இடுப்பில் அப்பிக்கொண்டேன்.
”உன் மதிப்பை உன்னோடு வைத்துக்கொள்” என்று
வாயாரக் காறித்துப்பினேன்.
வழிநடந்தேன்.
9 காலநிலை
அதிகாரபீடத்திலிருக்கும்போதெல்லாம்
புலப்படாத ஆரிய-திராவிட பேதங்கள்
ஒரு நெருக்கடியின்போது
தவறாமல் தட்டுப்படும்.
கரியமிலவாயுவைப் பிராணவாயுவாய்
வெகுமக்களின் நாசிகளுக்குள் வலிந்து திணிக்கும்
வன்முறையின் எதிரில் மட்டும்
இந்தக் காரியக் காமாலைக்கண்கள்
மூடிய பூனைக்கண்களாகிவிடும்.
காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.
10
காலநிலை மாற்றம்
உறையச் செய்யும் குளிர்காலம்.
சுட்டெரிக்கும் கோடை.
மழையற்றுப்போகும் அல்லது
வெள்ளக்காடாகும்.
ஒரு பக்கம் ஆயிரங்கோடிகள் விரயம்
மறுபக்கம் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை
அபரிமிதமாய்ப் பெருகும்.
எழுதுவதற்காய் எழுதப்படும் கவிதைகள் கைத்தட்டல் பெற
எழுதித்தீராமல் எழுதப்படுபவை கல்லடிக்காளாகும்.
முப்பது வருடங்களின் சராசரி வெப்பநிலை
ஒரு பகுதியின் வானிலையாக
எத்தனை வருடங்கள் வாழ வேண்டும்
அன்பு நிலையாக?
பருவமழை, வசந்தகாலம், புயல்-வெள்ளம்
குளிர்காலம் , பிரத்யேக வானிலை நிகழ்வுகள்
யாவும் உள்ளடங்கியது காலநிலையாக
இயற்கை ஒழுங்கமைவில் நேரும் மாற்றங்களால்
சேரும் பேரிடர்கள்.
மழைநீர் சேகரிப்புக்கு முதலில் மழை வேண்டும்
அதுவேயாகுமாம் மனமும்.
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)
- முதல்மழை
- நறுமணமான பாடலொன்று
- அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)
- இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்
- முகமூடி!
- வல்லரசு!
- நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!
- ஓயாத கடலொன்று..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1
- தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ரகசியங்கள்
- சரியாய் உலகில் வாழ்ந்துவிடு
- சாட்சிகளேதுமற்ற மழை
- இருட்டும் தேடலும்
- அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!
- முடிச்சு -குறுநாவல்
- ‘கண்கள் இரண்டும்…..’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6
- வாரிசு
- வன்முறை
- பரிமளவல்லி 22. தேறுதல்
- முள்பாதை 57
- நினைவுகளின் சுவட்டில் – (57)
- விடாது நெருப்பு
- வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!
- தன்னம்பிக்கை
- சருகுகள்
- எதிர்ப்படும் கையகல நீர்மை…
- ’ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை
- கொசு