மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


திரு பாலா சத்யா என்ற எழுத்தாளரின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய ஒரு நூல்.,” கறுப்பு வெள்ளை” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. சென்ற வாரம் காந்தி கல்வி நிலயத்தில் திரு வெங்கட்ராமனால் புத்தகம் பற்றிய விமர்சனம் நடைபெற்றது.. (வாரம் தோறும் ஒரு புத்தகம் விமர்சிக்கப்படுகிறது. ) அதில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தொகுத்துள்ளேன்.. ( The Sources of Gandhism in Martin Luther King Jr)..என்ற புத்தகமும் படிக்க கிடைத்தது.. மேலும் பல வலைத்தளங்களும் அறிய உதவின..

நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளையரல்லாதவரை அமெரிக்க அதிபராக நினைத்திருக்க முடியாது.. இன்று அது சாத்யமாகி இருக்கிறது. மக்களின் எண்ணங்களில் நல்ல மாற்றங்கள்.. முக்கியமானது நிறம் என்பது மனிதர்களின் தரத்தை நிர்ணயிப்பதல்ல என்பது.

அவதார புருஷர்கள் பிறப்பதும் .,வாழும் காலமும் குறைவுதான்.. ஆனால் அவர்கள் ஏற்படுத்திச் சென்ற விளைவுகள் என்றென்றும் நீடித்திருக்கக் கூடியன.. நிற வேற்றுமை இன்றும் கொடிகட்டிப் பறக்கும் காலகட்டத்தில்., 1929 இல் பிறந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்த காலகட்டத்தில் கறுப்பின மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதன் வலியோடு தொடங்குகிறது புத்தகம்.

அடிமைகள் விற்பனைக்கு என்ற பெயரில் நீக்ரோக்கள் அடிமைப் படுத்தப்பட்டு மொட்டையடித்து பச்சை குத்தி., திடகாத்திரமானவர்கள்தானா என அறிய அவர்களை குத்திப் பார்த்து., கிள்ளிப் பார்த்து., எலும்புகளை தட்டிப் பார்த்து வாங்கப் பட்டிருக்கிறார்கள்..

அடிமை முறை ஆதரிக்கச் சட்டமே இருந்தது.. தப்பியோடும் அடிமைகளை பிடித்துக் கொடுப்போருக்கு பரிசும் வழங்கப்பட்டது. அடிமைகளிடன் நன்கு உழைப்பை வாங்கிக் கொண்டு உப்பு கலந்த பொரியும் ., குதிரைகளுக்குக் கொடுக்கும் கொள்ளும் உணவாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது..கேட்கும் போதே ரத்தம் கொதிக்கிறது அல்லவா..

இந்த சூழ்நிலையில் மார்ட்டின் லூதர் கிங் அட்லாண்டாவில் பிறந்தார்.. தந்தை மத போதகராயிருந்ததால் அன்பு என்ற நல்ல பண்பு போதிக்கப் பட்டது.. அவரின் சிறுவயதில் நடந்த மூன்று நிகழ்வுகள் அவரை வெள்ளையரை வெறுப்பது என்ற முடிவுக்கு தள்ளுகின்றன..ஆனால் பெற்றோரின் போதனையோ அனைவரையும் நேசிப்பது..

வெள்ளையர் படிக்கும் பள்ளிகளில் கறுப்பின மக்களுக்கு அனுமதி இல்லை.. அரசாங்கம் வெள்ளை இன மக்களுக்காக அதிகம் செலவு செய்தது.. கறுப்பின சிறார்கள் தினமும் பலமணிநேரம் பயணம் செய்து பள்ளி சென்று படிக்க வேண்டும். கறுப்பின மக்களுக்கு ஹோட்டல்களில் அனுமதி இல்லை.. பஸ்களில் கூட முதல் நான்கு இருக்கைகளில் வெள்ளையர்கள்தான் அமரவேண்டும்.. என்ன கொடுமை இது..

பாதிரியாராகவும் ., ஆசிரியராகவும் பணியாற்றிய இவர் மஹாத்மாவின் அஹிம்சை வழிமுறைப்போராட்டம் பற்றி படிக்க நேருகிறது .. ஒரு முறை பேச்சுப் போட்டியில் “நீக்ரோவும் அரசாங்கமும் “ என்ற தலைப்பில் பேச நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியிருந்தது.. டிசம்பர் 1955 இல் பஸ்புறக்கணிப்புப் போராட்டக் குழுவின் பிரசிடெண்டாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்..

மாண்ட்கோமெரி., அலபாமாவில் நீக்ரோக்கள் பஸ்ஸில் முன்னிருக்கைகளில் அமர தடை செய்யப்படுவது குறித்து காந்திய முறையில் எதிர்த்து., பஸ்ஸை புறக்கணித்து ஏறத்தாழ 381 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.. அதை ஆதரித்த ஜூலியட் மோர்கன் என்ற வெள்ளைப் பெண்மணி அடைந்த துயருக்கு அளவில்லை.. அந்த அளவு இனவெறியும் நிறவெறியும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்யுமளவு அவரைத் தூண்டியது. இத்தனைக்கும் காரணம் காந்தியமுறையிலான அகிம்சைப் போராட்டத்தை ஆதரித்து அவர் பத்ரிக்கைக்கு எழுதிய ஒரு கடிதம்..

நாம் வன்முறையில் ஈடுபடக்கூடாது.. நம் எதிரிகளை நேசிக்க வேண்டும் .. நாம் நேசிக்கிறோம் என்பதும் நம் எதிரிகளுக்குத் தெரியவேண்டும்.. இதுவே இந்த சமயங்களில் மார்ட்டினின் வார்த்தைகளாய் இருந்தன..தினமும் அரசாங்கம் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.. அப்போதும் மார்ட்டின் சொன்னது .” ஒருபோதும் வெறுப்புக் காட்டாதீர்கள்.. தொடர்ந்து நாம் கைது செய்யப்பட்டாலும்., வன்முறைக்கு உட்பட்டாலும்., அன்பு என்னும் ஆயுதத்தையே உபயோகியுங்கள்.. நாம் நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கவும்., புரிந்து கொள்ளவும் வேண்டும்”

ஒருமுறை சர்ச்சில் இருந்தபோது அவருக்கு “மார்ட்டின் நீதிக்காக எழுந்து நில்.. உரிமைக்காக எழுந்துநில்..நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் “ என்ற குரல் கேட்டது.. அவருக்கு இரண்டு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்., போனில் மிரட்டல்., மனநோய் பாதித்த பெண் பேனாக்கத்தியால் குத்த முயன்றது என பல தொந்தரவுகள் வந்தபோதும் ஆயுதமேந்திய காவலர்களை வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்.. அஹிம்சை ஒன்றே ஜெயிக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவர் மனதில் வேரூன்றி இருந்தது..

பஸ்போராட்டம் முடிவுக்கு வந்து ரோசா பார்க் என்ற பெண்மணி முன்னிருக்கையில் அமர ஒரு நீக்ரோ ட்ரைவரால் பஸ் இயக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது பெரிய சாதனை.. அடிமையாக வாழ்ந்தவருக்குத்தான் அதன் சுதந்திரமும் புரியும்..

கொள்கைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு காந்தியை நேரில் கண்டிராத மார்ட்டின் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.. ராஜேந்திர பிரசாத்., ஜெயப்ரகாஷ் நாராயண்., போன்ற தலைவர்களையும் காந்தி ஆஸ்ரமத்தையும் பார்த்துச் சென்றிருக்கிறார்.. நம் மக்களை பார்த்தவுடன் தன் மக்களைப் போலவே சகோதர்களாக உணர்ந்திருக்கிறார்.. நல்ல எண்ணங்களுக்குத்தான் எவ்வளவு வலிமை.. அவை நினைக்கப் படும்போதே விதைக்கப் படுகிறன..

‘”OUR STRUGGLE” .. ” MY TRIP TO THE LAND OF GANDHI” ..”PILGRIMAGE TO NONVIOLENCE”.. “WALK FOR FREEDOM”.. “FACING THE CHALLENGE OF NEW AGE” “NON VIOLENCE AND RACIAL JUSTICE””.. STRIDE TOWARD FREEDOM”..”SHOWDOWN FOR NON VIOLENCE” .. “THE QUEST FOR PEACE AND JUSTICE ” இவை மார்ட்டின் லூதர் கிங்கின் நூல்கள் ..

வன்முறைக்குத்தீர்வு வன்முறையாகிவிடாது என தீர்மானமாக எண்ணினார் மார்ட்டின்.. இந்தியா வந்து சென்றபின் வாரம் ஒரு முறையாவது மௌனவிரதம் இருப்பது என்பதை கடைப்பிடித்திருக்கிறார்.. வாழ்க்கை முழுமைக்குமான அஹிம்சைப் போராட்டத்தின் பலனாக இவரின் 35 ஆவது வயதிலேயே உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.. 1964 டிசம்பர் பத்தாம் தேதி இவர் ஆற்றிய உரை “I HVE A DREAM” உலகின் சிறந்த பேச்சுக்களில் ஆறாம் இடத்தில் இருக்கிறது.. அதில் எல்லா மக்களும் ஒன்றாகக் கைகோர்த்து உலவும் கனவும் தனக்கிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.. அன்பால் வெல்வது என்பதை நான் இவரின் வாழ்வு முழுமைக்கும் காணலாம்..

இவரின் நோபல் பரிசு உரை கூட இவர் ”ஆயுதமேந்தாத உண்மை., நிபந்தனையற்ற அன்பு ” என்று நேர்மறை எண்ணங்களை
ஏற்றும் பேச்சாக இருக்கிறது.. வியட்னாம் வாரையும் இவர் ஆதரிக்கவில்லை..

வாளெடுத்தவன் வாளால் சாவான் .. ஆனால் அன்பெனும் ஆயுதமேந்திய மார்ட்டின் ..”ரே” என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.. ஏப்ரல் நான்காம் தேதி துப்புரவுத் தொழிலாளிகளின் ஊதிய உயர்வுக்காக நடந்த தொழிற்சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு “FIGHTERS FOR RIGHT ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியபின் இவரின் மரணம் நிகழ்ந்தது..

நாற்பது வயது வரை வாழ்ந்த மார்ட்டின் ., விவேகானந்தர்., ஆதிசங்கரர்., ஜீசஸ் போல ஒரு அவதார புருஷர்.. அன்பையே தன் ஆயுதமாகக் கொண்ட மாட்டின் கடைசிவரை தன் நிலைப்பாட்டிலேயே வாழ்ந்த்து சென்றார். புண்ணியர்கள் புதைக்கப் படுவதில்லை.. விதைக்கப் படுகிறார்கள்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்