பித்து

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

பவளமணி பிரகாசம்


ஊமை கண்ட கனவாக
உரைத்திட இயலாமல்
உவப்பாக அசை போட
உறுதியாக வளருது
உருவான உன் நினைவே.
திகட்டாத உன் நினைவில்
திளைத்துக் கொண்டிருக்கையில்
திடுக்கிட்டுப் போகுது
திடாரென யாரும் வருகையில்.
குளிர் சுரம் போல் இருக்குது
குப்பென்று வேர்க்குது
குழப்பமாய் இருக்குது
பெரிய மூச்சாய் வருகுது
பெரும் அவதி ஆகுது
துன்பமாய் இருக்குது
இன்பம் போலும் தோணுது.
‘உனக்கும் இந்த உணர்விருக்கா ?
என்னை உனக்கு பிடித்திருக்கா ?
எனக்கு உன் வீட்டில் இடமிருக்கா ?
ஏற்கெனவே அங்கு ஆளிருக்கா ?
சேர்ந்து வாழ தோதிருக்கா ?
கஞ்சி குடிக்க வழியிருக்கா ?
கும்பிடும் தெய்வமோ
குலவழி பழக்கமோ
குறுக்கே வந்து நிற்குமோ ?
கூடி வாழும் ஆசைதான்
கூட வருமோ இறுதிவரை ? ‘…
அப்பப்பா! முடிவில்லா கேள்விகள்!
அறிவு இடித்துத் தடுக்குது-
ஆனாலும் அவை அத்தனையும்
வாத்தின் முதுகில் விட்ட நீரானது
வாதம் செய்தல் வீணானது-
பித்துப் பிடித்த நிலையிது.
அன்னத்தை அனுப்பவோ ?
தாமரையிலையில் கிறுக்கவோ ?
தோழியைத் தூதாக்கவோ ?
காகிதத்தில் எழுதவோ ?
கணிணியிலே தட்டவோ ?
முத்திப் போன வியாதிக்கு
முடிவென்று காணுவேன் ?
இரண்டிலொன்று தெரிய வேண்டும்
எந்தன் மனம் தெளிய வேண்டும்.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்