This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue
சேவியர்
சில பயங்களின் சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப் பறந்துப் பழக்கப்பட்டது தான் மனித இனம்.
அப்பாவின் குரலின் கம்பீரத்தில் மருளும் விழிகள் வழிய அவசர அவசரமாய் இரவு உணவு அருந்திய சிறு வயதுப் பயம்…
வகுப்புக்கணக்கைப் போட மறந்து கணக்கு வாத்தியாாின் பிரம்பின் நினைவில் காய்ச்சல் வருத்திக்கொண்ட பள்ளிக்கூடப் பயம்…
தேர்வு முடிவுக்கு முன்னிரவில் துரத்தும் யானைமுன் நகர்த்தமுடியா கால்களுமாய் விழுந்துகிடப்பதாகவும், ஏதோ ஓர் நீர்நிலைக்குள் கால்கள் கட்டப்பட்டு மூழ்கித்தவிப்பதாகவும் கனவு கண்டு பயந்து…..
வேலை… குடும்பம்.. எதிர்காலம் என்று பக்கத்துக்குப் பக்கம் பயத்தை பிள்ளையார் சுழியாய்ப் போட்ட வாழ்க்கை.
என் சிறுவயது மகனாவது இந்த பயமில்லாத வாழ்க்கை வாழவேண்டும், கோலி விளையாடிக் கொண்டிருந்தவனை அணைத்துக் கொண்டு சொன்னேன்… மெதுவாய் என் முகம் பார்த்தான். அப்பா சொல் காப்பாற்ற முடியுமா என்னும் பயம் அவன் கண்களில் மிதப்பது தொிந்தது…
This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue
நீல. பத்மநாபன்
அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது.
கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும் இயற்கைக் கன்னியை விழிகளால் துழாவியபடி சிட் அவுட்டில் அவன் உட்கார்ந்திருந்தான். அவள் தடித்த காமபீடத்தின் உள்நுனியாய் வெகுதொலைவில் செந்தீ அடிக்கடி தெரிந்து மறைந்து கொண்டிருந்தது.
காற்றில் லேசாய் அவனுக்குப் பழக்கமான அந்த மனிதசதை, மயிர் கரியும் நெடி…
புது வீடு கட்ட மனசுக்குள் கட்டிக்காத்து வைத்திருந்த சங்கற்பங்கள் அனைத்துக்கும் சாட்சாத்காரமான ஒரு இடம் தேடி அலைந்த அவன் கடைசியில் இந்தக் குன்றின் மீது இந்த இடத்தை தேர்ந்தெடுத்தபோது எல்லோரும் கேலி பண்ணினார்கள்.
‘இந்த அழகான ஊரில் புது வீடு கட்ட உனக்கு வேறு மனையே கிடைக்கல்லையா… ‘ சுடுகாட்டைப் பார்த்திருக்கும் இந்த பித்தன்குன்றின் மீதா வீடு கட்டப் போகிறாயடா பாவி… ? ‘
ஆனால்…யாரிடமும் எதையும் பேசிபுரிய வைக்க மெனக்கெடுவதில்லை என்ற தன் சுபாவத்திலேயே அவன் நிலைத்து நின்றான்.
இங்கே நின்றுகொண்டு கீழே எங்கெங்கே திரும்பிப் பார்த்தாலும் மரங்களின் உச்சி முனைகள் ஒன்று சேர்ந்து பச்சைபசேலென்று ஒரு போர்வையாய் தெரியும்…அந்த போர்வைக்குள் முடங்கிப் போய்விட்ட ஊரின் காங்கிரீட் கட்டிடங்கள், கன்னங்கரிய தார் ரோடுகள்…. ‘ வெகு தொலைவில் கோயில் கோபுரத்தின் தங்கக் கலசங்கள்… அதை மீறி, நீலக்கடலில் சங்கமித்து நிற்கும் தொடுவான விளிம்பின் மங்கியக் காட்சி…பிறகு எங்கெங்கே பார்த்தாலும் விரிந்த வானம். வானம் ஜிலுஜிலுவென்ற வென்ற காற்று…பெயர் தெரியாத பறவைகளின் சமீபத்தை உணர்த்தும் ஒலி அதிசயங்கள்…தன்னிச்சையாய் வளர்ந்து செழித்த பசும் தழைகளின் ஒளடத வீரிய மிக்க நெடி…
இத்தனை மகிமைகளின் இடையில், கீழே வெகு தொலைவில் சிலநாட்களில், சிலபொழுதுகளில் புகை நடுவில் தெரியும் செந்தீயும், காற்றில் லேசாய் தெரிந்தும் தெரியாமலும் வரும் மனிதசதை, மயிர் கரியும் வாடையும் அவனுக்கு ஒரு பெரிய குறையாய்த் தெரியவில்லை.
அவன் மனைவிக்கும் இந்த இடம் வெகுவாய்ப் பிடித்துப் போய்விட்டது. ஊரில் சந்தடிமிக்க குடியிருப்பு காலனிகளில் ஐந்து செண்டுக்கு ஆகும் விலையில் இங்கே இருபது சென்ட் வாங்க முடிந்தது. சுற்றிலும் ஏராளாம் இடம்போட்டு கட்டப்பட்ட சகல வசதிகளும் மிக்க இந்த நவீன வீடு தன்னைப்போல் எல்லாவிதத்திலும் அவளையும் கிறுகிறுக்க வைத்ததைக் காண அவனுக்கு ஒரே சந்தோஷம். வீட்டைவிட்டு கடை, நண்பரின் வீடு, கிளப் இப்படி வெளியே எங்குமே செல்லத் தோன்றாத ஒரு அபூர்வ பிடிப்பு. எந்த நேரமும் இந்த சிட் அவுட்டில் உட்கார்ந்து கொண்டு இந்த ஊரைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதில் ஒரு பரவசம். இந்த மோனத்தின் ராகத்தை செவிமடுப்பதில் ஒரு லயம்.
குபீரென்று காற்று வீசியது. பனியில் குளிர்ந்த காற்றில் ஒரு வாசனை. முல்லைப்பூவின் சுகந்தம். கீழே எங்கோ ஒரு நாயின் நீட்டி ஆலாபனை செய்யும் ஊளை. வெளியில் சருகுகளில் கால் சுவடுகள் பதிவதைப் போன்ற சலசலப்பு மெல்ல மெல்ல கிட்டெ கிட்டெ வருவது போல்….
அவனுக்கு மயிர் கூச்செறிந்தது.
சடக்கென்று எழுந்து வீட்டினுள் புகுந்து கொண்டு கதவை அடைத்துத் தாழிட்டான்.
அறைக்குள் மின் வெளிச்சம் நிறைந்து நின்றும்கூட, திறந்துகிடந்த ஜன்னலில் தெரியும் வெளியுலகின் இருள் அவனைப் பயப்படுத்தியது. கையைக் கம்பிகளின் இடைவழி வெளியே நீட்டி ஜன்னல் கதவுகளை அடைப்பதற்கிடையில், வெளியில் நிற்கும் ஏதோ தன் கையைப் பிடித்திழுக்கப் போவதாய் ஒரு கிலி. வீட்டின் உள்ளையும் வெளியையும் தொடர்பு படுத்தும் ஜன்னல்கள், வாசல்கள் கதவுகள் அனைத்தையும் சாத்தி தாழிட்ட பிறகும் நெஞ்சுக்குள் பயம் முழுசாய் மறைந்ததாய்த் தெரியவில்லை.
சுவர் கடிகாரம் அடிக்கத் தொடங்கிய சத்தம். பனிரெண்டு தடவை அது அடித்துவிட்டு ஓய்ந்தபோது ஒரு பீதி நிரம்பிய நிசப்தம். அவன் பெருமூச்செறிந்தான். பொழுது புலர குறைந்தது இன்னும் ஐந்து மணி நேரமாவது வேண்டும் ‘ அவ்வளவு நேரத்தையும் எப்படி இங்கே தனிமையில் செலவிடுவது.
அன்றைய பத்திரிகையையும் எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு வந்தான். சாளரங்கள் அடைத்துக் கிடந்ததால் ஒரே புழுக்கம்…மின் விசிறியைப் போட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான்.
மெத்தையிலிருந்து அந்த மணம் இன்னும் விலகிப் போய்விடவில்லை. இன்னதென்று விளக்கிச் சொல்லத் தெரியாத இந்த வாசனை அவளுக்கு மட்டுமே சொந்தம்.
அறைக்குள் இந்த வாசனை தவிர, கொடியில் மேஜை மீது எல்லாம் அவள் விட்டுச் சென்ற அடையாளங்கள் அப்படி அப்படியே இருக்கின்றன….
ஆனால்….
அவள்… ?
கல்யாணமாகி நான்காமாண்டு இந்த புது வீட்டில் குடித்தனம் ஆரம்பமானது. இப்போ மூன்று ஆண்டு கூட ஆகியிராது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒருநாள்.
கடையைப் பூட்டிவிட்டு இவன் வரும்போது, தூரத்திலிருந்தே கவனித்தான். வழக்கம் போல் சிட் அவுட் சோபாவில் அவள் இல்லை என்பதை ‘
செம்மண் பாதை வழி மேலேமேலே ஏறிக்கொண்டிருக்கையில், மனசுக்குள் ஏனோ சொல்லத்தெரியாத ஒரு கிலேசம். எதையோ எங்கோ வைத்துவிட்டு, எடுக்க மறந்து விட்டதைப் போன்று உள்ளுக்குள் ஒரு அரிப்பு.
படிகள் ஏறி சிட் அவுட்டில் நுழைந்ததும், வழக்கத்தை மீறி அவனுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. சாத்தியிருந்த பிளஷ்டோரைத் தள்ளித் திறந்து அவன் ஹாலில் பிரவேசித்ததும் கமகமவென்று சற்றுமுன் அனுபவமானதைப் போன்ற முல்லைப்பூவின் கனமான வாசனை.
ஒரு கணம் விக்கித்துப் போய் நின்றான். சாதாரணமாக வீட்டினுள்ளே பூஜை அறையில் நூலிழையாய்ப் புகைந்து கொண்டிருக்கும் ஊதுவத்தியின் ஒரு லேசான மணம்தான் கமழும்; இன்று ஏன் இப்படி.
சமையலறையில் அவளைக் காணவில்லை. படுக்கை அறையில் அவன் வந்து பார்த்தபோது, முதலில் அறையில் படித்திருந்த மூவந்திநேர மங்கலில் ஒன்றுமே தெரியவில்லை. ஸ்விட்சைத் தட்டியதும், கீழே விழுந்து நொறுங்கும் புட்டிப் பாலாய் அறையில் மின்வெளிச்சம் சிதறியது.
அந்த ஒளியில்,
இதோ, தான் இப்போது படுத்திருக்கும் கட்டிலில் அவள் மல்லாந்து படுத்திருக்கிறாள்.
இவன் திடுக்கிட்டான்.
நாபிக்குழியிலிருந்து காரணம் தெரியாத ஒரு பீதி சரசரவென்று மேலே மேலே ஏறி ஈயக்குண்டாய் நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொண்டது.
மெல்ல அவள் அருகில் வந்தான் இவன். அவள் விழிகள் திறந்திருந்தன. தன்னையே வெறித்துப் பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை.
‘பிரேமா… ‘
தன் குரல் நடுங்குவது அவனுக்குத் தெரிந்தது.
அவள் அசையவில்லை.
இவன் கூர்ந்து பார்த்தான்.
அவள் உடம்பிலிருந்து ரத்தம் முழுதும் வடிந்துப் போய்விட்டது போல் விளறிப்போய்க் கிடந்தாள்.
அவள் உடம்பைத் தொட்டான்.
ஜில்லிட்டுப் போயிருந்தது.
த்ச்…த்ச்….த்ச்
அறைக்குள் ஒரு பல்லி ஓலமிட்டது. இவன் தன்னுணர்வு அடைந்தான்.
சடங்குகள் யாவும் முடிவடைந்து இன்றுதான் உறவுக்காரங்க எல்லோரும் தத்தம் வீடுகளுக்கு போனார்கள்.
இப்போது…
நான்–
நான் மட்டும்…
சடக்கென்று மின் விளக்குகள் அனைத்தும் அணைந்தன….கும்மிருட்டு…
இவன் திடுக்கிட்டான்.
கணநேரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படுக்கையிலிருந்து
கீழே குதித்தான்.
அந்த நாயின் ஊளைச்சத்தம் மறுபடியும் கேட்கிறது.
உலர்ந்த சருகுகளில் கால்படும் ஓசை…
இப்போது அறைக்குள் குப்பென்று முல்லைப் பூவின் மணம். அதனுடன் சதை மயிர் கரியும் வாடையும்…
பயத்தில் தலைக்குள் ரத்தம் குபுகுபுவென்று பீறிட்டுப் பாய்வது தெரிகிறது.
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு நடுக்கம்…
பீரோவிலிருந்து டார்சைப் போய் எடுக்க மனம் கூக்குரலிடுகிறதேயானாலும் கால்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன.
திடாரென்று அறைக்குள் கும்மிருட்டில் என்னவோ ஒரு நிழலாட்டம்.
படுக்கையில் அன்று கண்டதுபோல் அவள் சயனித்திருப்பதைப் போல் ஒரு
தோற்றம்.
துணுக்குற்று இவன் திரும்பியபோது யார் மீதோ மோதிக் கொண்டதைப் போல்…
பயம் இப்போது முழுமூச்சாய் எலும்புக்கள், சந்தி பந்தங்கள் யாவும் மொடமொட வென்று நொறுங்க இவனை ஆரத்தழுவியபோது, இவனுக்கு மூச்சடைத்தது..
இன்னும் சற்று நேரத்தில் நிற்கப் போவதற்கு முன் என்பதைப் போல் இதயம் அவசரம் அவசரமாய் அடித்துக் கொள்வது கேட்கிறது. நாடி நரம்புகளில் செங்குருதி நுரை ததும்ப பொங்கி பிரவகித்து, ஓட துடித்தெழுந்து முழு வடிவில் விகசித்து, விமுக்தி மார்க்கம் தேடி அடியாடையை முட்டி மோதிச் சீறிக்கொண்டு நின்றது குறி….
திடாரென்று அவனிடத்தில் ஒரு வெறி…யாருடைய ராட்சஸப் பிடியிலிருந்தோ தன்னை விடுவித்துக் கொள்ள என்பதைப் போல், வெள்ளத்திலிருந்து கரையேறிய சடை நாயாய் உடம்பை உதறிக் கொண்டான். ஒரு கணம் அடங்கி ஒடுங்கியபோது தன் வெளியாடை, உள்ளாடை எல்லாவற்றையும் அறையின் ஒரு மூலையில் வீசியெறிந்தான்.
ஜிவ்வென்று அவன் பெளருஷம் மேலெழும்பி எதையும் யாரையும் நேருக்கு நேர் எதிரிட்டு கீழ்ப்படுத்த விசுவரூபம் தரித்து, வா….வா…நீ ஆண் பிசாசா, இல்லை பெண் பிசாசா, யாரானாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்று உக்கிரமான ஒரு ரத்த ரக்ஷஸாய் தலையாட்டி நின்றது.
இப்போது இத்தனை நேரமாய் அவன் நெஞ்சில் கனத்துக் கொண்டிருந்த பயமெல்லாம் வடிந்துபோய், அங்கே எதையும் எதிரிட்டு நிற்கத் தகுந்த ஒரு ஆணவம் பாற்கடலாய் அலை மோதுவதை அவனால் நன்கு உணர முடிகிறது.