PS நரேந்திரன்
எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பழக்கம். நீங்கள் எது சொன்னாலும் அதற்கு எதிராக எதாவது சொல்லி விட்டுதான் ஓய்வார். எப்படி அவருக்கு இந்த பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இவ்வளவிற்கும், நன்கு படித்தவர் அவர்.
உதாரணமாக, ‘முயலுக்கு நாலு கால் இருக்கிறது ‘ என்று நீங்கள் சொன்னால், ‘இல்லவே இல்லை. ஆப்ரிக்காவில் இருக்கும் ‘ஙங்ஙபிங்ங ‘ என்ற முயலுக்கு மூன்றே கால்கள்தான் உண்டு ‘ என்று அடித்துச் சொல்வார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்பதால், பெரும்பாலான சமயங்களில் நான் வாயை மூடிக் கொள்வேன்.
‘நீ ஏன்யா இப்படி இருக்கே ? ‘ என்று கேட்டால், ‘தமிழரின் தனிக் குணம் ‘ என்று மந்தஹாசப் புன்னகையுடன் பதில் வரும்.
தமிழரின் தனிப் பெரும் குணங்கள் என்னென்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. பல நாட்கள் யோசித்து, கடைசியில் மூன்று முக்கிய குணங்களைக் கண்டறிந்தேன்.
1. தாழ்வு மனப்பான்மை.
2. ஒற்றுமையின்மை.
3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
தமிழர்களின் ‘தாழ்வு மனப்பான்மை ‘ உலகப் பிரசித்தி வாய்ந்தது. ‘நாயினும் கடையர்களாக ‘ தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டு அழிந்து கொண்டிருக்கும் இனம், உலகத்தில் தமிழ் இனம் மட்டுமே. நான் பல மாநிலங்களில், நாடுகளில் இருந்திருக்கிறேன். பல இன மக்களுடன் பழகி இருக்கிறேன். தமிழர்களைப் போல ‘தாழ்வுணர்ச்சி ‘ கொண்ட மக்களை இதுவரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்ப்பேனா என்பது சந்தேகமே. Self Confidence என்பது சுத்தமாகக் கிடையாது.
ஒற்றுமையின்மை குறித்து சொல்லவே வேண்டியதில்லை. இந்தியா, பாகிஸ்தானைக் கூட ஒன்று சேர்த்துவிடலாம். பத்து தமிழர்களை ஒன்று சேர்ப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். வெட்டிப் பேச்சு, விதண்டாவாதம் போன்றவையும் ஒற்றுமையின்மையில் அடங்குவதால் அது பற்றி தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை.
தமிழனின் உணர்ச்சியை மிக எளிதாகத் தூண்டமுடியும். தமிழ் சினிமாக்கள் அதற்கு நல்ல உதாரணம். ‘கடா ‘ மீசை வைத்துக் கொண்டு, ‘அம்மா, ஆத்தா ‘ என்று பேடித்தனமாக அழும் சினிமா தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியடையும். கோபம் வந்தால், ஒன்று அரிவாளைத் தூக்குவார்கள் அல்லது கிணற்றில் குதித்து செத்துப் போவார்கள். சாதி, மத, இன, மொழியின் பேரால் தமிழ்நாட்டில் இத்தனை கட்சிகள் இருப்பதும் ‘உணர்ச்சிவசப்படுதலின் ‘ உதாரணமே.
மேற்கூறிய மூன்று குணங்களையும் சிறப்பாக ‘exploit ‘ செய்பவர்கள், தமிழக அரசியல்வாதிகளும், தமிழ் சினிமா நடிகர்களும்தான். தமிழர்களை ஏறக்குறைய ‘கொத்தடிமைகள் ‘ மாதிரி வைத்திருக்கும் ‘வித்தைகள் ‘ அவர்களுக்கு மட்டுமே அத்துபடி.
இன்னும் பல தனிக்குணங்கள் தமிழருக்கு இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லலாம்.
***********
இன்றைக்கு ஏறக்குறைய எட்டுக் கோடி தமிழ் மக்கள் உலகமெங்கும் வாழ்கிறார்கள்.
இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், மலேசிய தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள்…. என்று ஆலமரமாய் விழுது விட்டுப் பரவி இருக்கிறார்கள். அறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வியாபாரிகள், கலைஞர்கள் என்று ஒவ்வொரு துறையிலும் தங்களின் முத்திரையைப் பதித்து, வெற்றிக்கும், கடும் உழைப்பிற்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்கள்.
போற்றத்தக்க அவர்களின் சாதனைகள் தனி மனித சாதனைகள் மட்டுமே.
‘எட்டுக் கோடி மக்கள் கொண்ட ‘ ஒரு இனத்தின் சாதனைகள் அல்ல அவை. என்னைப் பொறுத்தவரை, தமிழர்கள் ஒரு இனமாக தோல்வியடைந்து விட்டார்கள். ஏறக்குறைய, அமெரிக்க ஜனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி இருக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த சாதனைகள் என்று குறிப்பிடத்தக்கவை எதுவுமே இல்லை.
இந்திய சுதந்திரத்திற்குப் பின், தமிழர்களுக்கு நல்ல தலைமை அமையாததும் ஒரு காரணமாக இருக்கலாம். நேர்மையான, ஆண்மையுள்ள, திறமையான, பொதுநல நோக்கம் கொண்ட தலைவர்கள் நமக்குக் கிடைக்காதது ஒரு துரதிருஷ்டமே. காமராஜர், ராஜாஜி போன்ற நேர்மையாளர்கள், நிர்வாகம் தெரிந்தவர்களை தமிழர்கள் மதித்தது இல்லை. சினிமாக் கவர்ச்சியால் உந்தப்பட்டு, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்.
இப்போது இருக்கும், கூத்தணங்கு மற்றும் கருணைத் தம்பிரான் போன்றவர்களை தலைவர்கள் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருக்கிறது. கொள்ளைக் கூட்ட தலைவர்கள் என்று சொல்வது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.
****
தாழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தில், மிக வித்தியாசமாக, நம்பிக்கை தருபவர்களாக இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் மட்டுமே.
மிகவும் துன்பப் பட்ட மக்கள் என்பதால், இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு மாறாத அன்பும், இரக்கமும் உண்டு. நானறிந்தவரை, பரந்த நோக்குடையவர்கள், கல்வியாளர்கள், தமிழுணர்வு கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நிறைய இருக்கிறார்கள். அவர்களூடன் அதிகம் பழகும் (கதைக்கும் ?) வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை எனினும், வேலை நிமித்தமாக இங்கு U.Sல் நான்கைந்து பேர்களைச் சந்தித்திருக்கிறேன். மிகுந்த திறமைசாலிகள்.
உண்மையான சுதந்திரந்தின், விடுதலையின் மதிப்பு அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இலங்கையில் அமைதி திரும்பினால் (திரும்பவேண்டும் என இறைவனை பிரார்த்திப்போமாக), இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றம், தாயகத் தமிழர்கள் ‘மூக்கின் மேல் விரலை வைக்கும்படியாக ‘ இருக்கும்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. வன்முறையால் வரும் வெற்றி, ‘மூடிவைக்கப் பட்ட நெருப்பு ‘ போன்றது என்பது என் கருத்து. மீண்டும் பற்றி எரிய அதிக நேரம் பிடிக்காது. அமைதித்தீர்வே அனைவருக்கும் நல்லது என்பதைச் சண்டையிடும் இரண்டு கட்சிகளும் உணருவார்கள் என நம்புகிறேன்.
புகழ் பெற்ற யாழ்ப்பாண நூலகத்தைக் காண வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. இன்று எறியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டிருந்தாலும் நூலகம் இருந்த இடத்தையாவது பார்த்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கலைமகள் வாழ்ந்த இடமல்லவா அது ?
அடுத்த பத்தாண்டுகளில் நான் செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் யாழ்ப்பாணமும் இருக்கிறது.
‘சொந்தச் சகோதரர்கள், துன்பத்தில் சாகக் கண்டு, சிந்தை இரங்குவது ‘ குற்றமாகக் கருதப்படுகிறது, இன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது ?
இதுபோன்ற செயல்களை நாம் ஒன்றுபட்டு எதிர்த்திருக்க வேண்டும். நமக்குதான் ஒற்றுமை என்பது கிடையாதே ? சொல்லி என்ன பயன் ?
****
‘உலகத்தை திருத்த நினைக்காதீர்கள் ‘ என யாரோ சொன்னார்கள்….(எழுத்தாளர் சுஜாதா என்று நினைக்கிறேன்).
அதுபோல, உலகத்தைத் திருத்துவது என் எண்ணமல்ல. அதற்கான தகுதியும் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. எனக்குச் சரி எனப் பட்டதை உங்களூடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் குப்பை என விட்டுத் தள்ளுங்கள். இதில் என்ன இருக்கிறது ?
சரியானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை சரியானவையுமல்ல. தவறானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை தவறானவையுமல்ல. எல்லாம் பார்வையில்தான் இருக்கிறது.
‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ‘
****
psnarendran@hotmail.com
- எங்கள் கலைக்கூடம் கலைந்தது!
- நீயுமா ?
- முடிக்கு விலையென்ன – உரை வெண்பா
- மீண்டும்
- திரும்பி
- தினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்
- கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)
- ஆசான் விருது ஏற்புரை
- மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
- உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி
- முதல்முதலாய்….
- விழைவோம் வா..
- சுமை
- போரும் அமைதியும்
- தியானம்
- காலத்தில் செல்லும் வார்த்தைகள்
- நரகம்
- பெண் பிறந்தாள்
- ?
- நினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1
- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- படைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்
- கடிதங்கள்
- Tamil Short Film Festival
- அரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)
- தபால்கார அப்துல் காதர்