விக்ரமாதித்யன்
சைக்கிள் இல்லாமல் கணபதியைப் பார்க்க முடியாது; இப்படிச் சொல்வது கூட தப்பு. சைக்கிள் இல்லாமல் கணபதியால் முடியாது. சைக்கிள் என்றால் கணபதி; கணபதி என்றால் சைக்கிள்.
காலையில் அவன் எழுந்து தேவர் டாக்கடைபோய் டா குடித்துவிட்டு வருவதிலிருந்து ராத்திரி சாப்பாடு முடிந்தானதும் கருப்பையாபிள்ளை கடைக்குப் போய்க்கோழிக்கோடு பழம் வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே சைக்கிளில்தான். கர்ணனை யாரும் கவச குண்டலங்களோடு பார்த்திருக்க முடியுமோ என்னவோ, கணபதியை சைக்கிளும் கையுமாகத்தான் பார்க்கமுடியும். கணபதியின் உயிரே சைக்கிள்தான்.
கணபதியிடம் பேனா இரவல் வாங்கலாம்; புஸ்தகம் கேட்டு வாங்கலாம்; எங்கேயாவது கல்யாணத்துக்குப் போகையில் வாட்ச், மோதிரம் கூட இரவல் வாங்கிக் கொள்ளலாம்; பத்து அம்பது கடன் கூட வாங்கிவிடமுடியும்; சைக்கிள் மட்டும் இரவல் வாங்க முடியாது.
கணபதி சைக்கிளைக் குழந்தைமாதிரி பராமரித்து வைத்திருப்பான்; காலையில் குளித்துவிட்டு வந்ததும் சுத்தமாகத் துடைத்து – வாரத்துக்கு ஒரு நாள் தேங்காயெண்ணெய் போட்டு — வைத்துவிட்டு, பிறகுதான் வெளியே எடுப்பான்.
கணபதிக்கு சைக்கிள் ஏன் இவ்வளவு முக்கியமாக வேண்டும். காரணம் இருக்கிறது. கணபதிக்குக்காலே சைக்கிள் தான். பாபவிநாசம் ஊரில் நாலைந்து கணபதிகள் இருந்தார்கள்; அவனை அடையாளம் சொல்ல ஊர்க்காரர்கள் வைத்த பட்டப்பெயர் நொண்டிக் கணபதி.
கணபதிக்கு இடதுகால் ஒச்சம்; சின்னவயசில் டைப்பாய்ட் காய்ச்சல் வந்து என்னவோ ஊசிபோட்டது ஒத்துக்கொள்ளாமல் இப்படி ஆகிவிட்டதாம். வலது கால் நல்ல உயரம்; அவன் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால் ஊனம் என்றே தெரியாது. ஆள் அம்சமாக இருப்பான்; நல்ல முகத்தீர்க்கம்; கலர்; சுமாரான உயரம்தான்; கொஞ்சம் சதை போட்டிருக்கும் உடம்பு; எட்டு முழவேட்டிதான் உடுத்துவான்; இல்லை, கைலிதான்; (ஏழெட்டு கைலிகள் வைத்திருப்பான்.) ஆஃப் சிலாக் தான் போடுவான்; அதுவும் ப்ளெயினாகத்தான் இருக்கும்; லைட் கலர்தான்; சட்டை லேசாகக்கூட கசங்கியிருக்காது; தலை சீவி நெற்றியில் மூன்ரு பட்டையாக விபூதியும் இட்டு வந்து நின்றால், பார்க்கப் பெரிய இடத்துப்பையன் மாதிரியே இருக்கும். அவனை முதல் தடவை பார்க்கிற யாருக்கும் கடவுளுக்குக் கண் இல்லையோ என்றுதான் தோன்றும். இவ்வளவு லட்சணமான பிள்ளைக்கு இப்படி ஒரு குறையா என்று நிச்சயம் மனசு கஷ்டப்படும். கணபதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறவனே இல்லை; உள்ளுக்குள் வேதனை இருக்குமோ என்னவோ வெளிப்பார்வைக்கு சந்தோஷமாகத்தான் இருந்தான்.
கணபதியின் அம்மா விக்ரமசிங்கபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆஸ்டலில் ‘மேட்ரன் ‘ ; சாப்பாடு போக சம்பளம்; ஆனால் ராவும்பகலும் விடுதியில்தான் இருக்கவேண்டும்; பிள்ளைகளுக்குத் தலைவலி காய்ச்சலென்றால் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவதா, யாராவது எப்பவாவது பெரியமனுஷியாகி விட்டால் ஊரில் கொண்டு போய் வீட்டில் விட்டுவருவதா, எந்த ஒரு காரியத்துக்கும் ராமலக்ஷ்மி அம்மா இல்லாமல் தீராது.
கணபதி ஒத்தை – ஒரு மகன்; அம்மாவுக்கு அவன்தான் எல்லாம். அப்பா பிழைப்புக்காக சிலோன் போயிருந்தார்; கணபதியைக் கண்ணுக்கு கண்ணாக வளர்த்து வந்தாள் அம்மா. ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் மகனை உயர்நிலைப்பள்ளி படிக்கவைத்து, கல்லூரியில் சேர்த்து, பல்கலைக்கழத்துக்கும் அனுப்பி வைப்பது இந்த அன்பினால்தான் சாத்தியமாகியிருக்கும். எலிமெண்டரி ஸ்கூல் படிக்கிறபோதெல்லாம் அம்மாதான் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவாளாம்; வந்துகூட்டிக்கொண்டு போவாளாம்; அம்மாதான் தூக்கிச் சுமந்து கொண்டு போய்விட்டிருக்கிறாள்; கணபதியே சொல்லியிருக்கிறான்.
கணபதி ரொம்ப புத்திசாலிப் பையன்; புத்திசாலியென்றால் பாடப் புஸ்தகத்தில்தான்; மனப்பாடம் பண்ணுவதில் மன்னன்; வகுப்பில் எப்போதும் முதலில் இருப்பான்; பிற்படுத்தப்பட்டோர் உதவித்தொகை வேறு கிடைத்துவந்தது; சரசரவென்று தமிழ் எம்.ஏ. வரமுடிந்தது. பி.ஏ.வில் முதல் வகுப்பு; மதுரைப்பல்கலைக்கழகத்தில் சுலபமாக இடம் கிடைத்தது. சங்க இலக்கியத்திலிருந்து சிற்றிலக்கியம் வரை, தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை எல்லாம் அவனுக்கு அத்துபடி.
விடுமுறைக்காலங்களில் கணபதி ஊருக்கு வரப்போக இருக்க, பெண் சிநேகிதம் ஏற்பட்டு கல்யாணத்தில் முடிந்தது; காதல் திருமணம்; அகப்பாடல்கள் படித்துவிட்டு காதலிக்காமல் இருக்கலாமா ? எம்.ஏ. முடிப்பதற்கு முன்பே கல்யாணமாகி விட்டது. தமிழ்ப் பேராசிரியர்கள் வந்திருந்து வாழ்த்திவிட்டுப் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். வெள்ளிக்கிழமை மத்தியானமானாலே கணபதிக்குப் பரபரப்பு வந்துவிடும்; பஸ்பிடித்து பாபவிநாசம் போய்விடுவான்; திங்கள் கிழமை காலை வகுப்புக்கு வந்துவிடுவான். கணபதியின் காதலோ கல்யாணமோ அவன் படிப்பைப் பாதித்துவிடவில்லை; ஒரு வேளை, அவன் முதல் வகுப்பில் வருவதற்குக்கூட உதவியாக அமைந்திருக்கலாம். இதையெல்லாம் யார் சொல்ல முடியும் ?
*
கணபதி பாபவிநாசத்தில் ஒரு பெரிய பங்களாவில் இருந்தான்; மனைவி கைக்குழந்தை, அவன் மூன்று பேருக்கும் அவ்வளவு பெரிய பங்களா வேண்டியதில்லை; ஆனால் அதுதான் கணபதி. புருஷனும் பொண்டாட்டியும் வாரம் தவறாமல் அம்பாசமுதிரத்துக்கு சினிமா போய்விட்டு வருவார்கள்; கல்யாணவீடு, சடங்கு வீடுகளுக்குத் தவறாமல் போய்ச் செய்துவிட்டு வருவார்கள்; வாழ்க்கையின் எந்த நல்ல விஷயத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான்; அவன் மனைவியும் அதுக்கு ஈடாக நின்றதுதான் ஆச்சரியம். அவளுக்கும் வாடல் வருத்தம் தெரியாது.
அவன் வீட்டுக்கு யார் போனாலும் காலையில் இட்லிவரும்; மதியம் தயிரோடு சாப்பாடு; சாயங்காலமானால் பிஸ்கட்டோடு டா; ராத்திரி சப்பாத்தி அல்லது உப்புமா; எதுவும் வேளை தப்பாது.
கணபதியின் ரசனையே தனி. சோப்பென்றால் மார்கோ; பவுடரென்றால் குடிகூரா; தலைக்குத் தேய்க்க நீலி பிருங்காதி தைலம்; பாமோலிவ் பற்பசை; சங்கு மார்க் கைலி. முகத்தைப் பளபளவென்று வைத்திருப்பான். உதட்டுக்கு மேல் சின்னதாக பட்டையாக மீசை ஒதுக்கியிருப்பான்; ஷெல்ப் ஷேவ்தான்; முடிவெட்டிக் கொள்ள மட்டும்தான் கடைக்குப் போவது; அதுகூட சிசர் கட்டிங்தான் முடிவெட்டியதே தெரியாது வெட்டிக்கொள்வான்.
எம்.ஏ.,வில் நவீன இலக்கியம் ஒரு பகுதி வைத்திருந்ததில், கணபதி தன் ஆர்வத்தில் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தான்; தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், வண்ணநிலவன் இவர்கள் தாம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்; புரியும். மெளனி, சுந்தரராமசாமியெல்லாம் படிப்பான் படித்துவிட்டு வந்து மணிப்பாண்டியனிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பான்.
படிக்கிறவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை; செல்லப்பிள்ளையாகத்தான் அம்மா வளர்த்திருந்தால்; அவன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டதே இல்லை. குடும்பமாயிற்று; குழந்தையாயிற்று; அம்மாதான் நிறை செலுத்திவந்தாள். கணபதிக்கு வேலை இல்லை; தமிழ் எம்.ஏ.,வுக்கு சுலபத்தில் வேலை கிடைக்கிற மாதிரி இல்லை. தமிழ் எம்.ஏ.,படிப்பே வேஸ்ட்தான்.
அம்மாவின் சம்பளத்தில் எவ்வளவுதான் முடியும். கணபதி கண்கலங்கிவிடக்கூடாதே என்று அம்மா கடன் வாங்கினாள்; வீட்டுக்காரி வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாதே என்று கணபதி கடன் வாங்கினான்; ஊரைச் சுற்றி கடன்; யார் யார் தருகிறார்களோ அவர்களிடமெல்லாம் கடன்; எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கெல்லாம் கடன். அடுத்த மாசம் வேலைக்குப் போய்விடுவான் என்று அம்மாவுக்கு நம்பிக்கை; வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்து அடைத்துவிடலாம் என்பது கணபதி நினைப்பு.
கண்ணாடிக்கடை ரவி அண்ணாச்சியிடம் போய் நின்றிருக்கிறான் ஒருநாள். ‘எவ்வளவு பாக்கி தரணும் அண்ணாச்சி ‘ என்று கேட்டிருக்கிறான்; அண்ணாச்சி கணக்கெல்லாம் பார்த்துவிட்டு ‘அறுபத்தேழு ரூபாய் ‘ என்று சொல்லியிருக்கிறார். கொடுக்கிறதுக்குத்தான் கேட்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். டா சொல்லிவிட்டு வந்த கணபதி, ‘மேக்கொண்டு முப்பத்தி மூணு ரூபா குடுங்க அண்ணாச்சி.. நூறு ரூபாயா தந்துர்றேன் ‘ என்று கேட்டிருக்கிறான். அண்ணாச்சி என்ன சொல்ல என்று தெரியாமல் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
ஒரு நாள்.. இவனுடைய சங்கரி சொன்னாள்; ‘என்னத்தான்…கணபதியண்ணன் அம்மா பேர்ல மூணு பில்லு இருக்கு; எட்டு நூறு ரூபாய்க்கு மேல வருது. ‘ஆடிட் வருது, கட்டிருங்கம்மா ‘ ன்னு சொல்லிவிட்டேன்; ‘இப்ப கைல இல்ல.. நீயே கட்டிரு சங்கரி ‘ன்னு அம்மா சொல்லியனுப்பிட்டு, என்ன செய்ய. கைல இருந்து போட்டுக் கட்டிருக்கேன்…என்னிக்கு வாங்க. ‘
*
காலையில் எழுந்து பல்விளக்கிவிட்டு அம்மா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, வில்ஸ் ஃபில்டர் பற்ற வைத்துக்கொண்டு வெளியில் புறப்படுகிற நேரம்; கணபதி பதட்டத்தோடு இவனைத் தேடிக்கொண்டு வந்தான். ‘என்ன ‘ என்பது போலப் பார்த்தான் இவன். ‘மாடிக்கு வாங்க.. ஒரு விஷயம் பேசணும் ‘ என்றான். ஏதோ ஒரு காரியமாக வாசல் பக்கம் வந்த சங்கரி இவர்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு விசாரித்தாள்; இவன் ‘ஒண்ணும் இல்ல…சும்மாதான்… ‘ என்று மழுப்பினான். ஆனால் இவளுக்கு புரிந்து போயிற்று, கணபதியண்ணன் என்னவோ சிக்கலில் மாட்டிக்கொண்டான். இவன் கேட்டான்: ‘என்ன கணபதி ….சொல்லுங்க… ‘
‘இல்ல .. வந்து.. டாணா மைனர் பாண்டியன் சைக்கிள எடுத்திட்டு போயிட்டாரு.. வட்டி கட்டல; சொல்லிட்டிருந்தாரு; காலையில வந்து தூக்கிட்டு போயிட்டாரு. அம்மாட்டயும் சொன்னேன்..இனிமே எங்கியும் கேட்க முடியாது, வாங்க முடியாது; என்னால ஒண்ணும் செய்யக் கழியாதுன்னுட்டாங்க. ஒரு ஐநூறு ரூபா இருந்தா கொடுத்திட்டு சைக்கிள் மீட்டுறலாம்… வர்ற மாசம் அம்மாவுக்கு ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் கிடைக்கும்.. நீங்க வீட்ல சொல்லி வாங்கிக் கொடுத்தீங்கன்னா திருப்பித் தந்துருவேன். ‘
இவன் சங்கரியைப் பார்த்து, ‘என்னடி…எங்கியாவது வாங்கிக் கொடுக்க முடியுமா… ‘ என்று கேட்டான். பொதுவாகச் சொன்னாள்: ‘அண்ணன் தந்துரும்னா பெரியவனுக்கு முடியிறக்கத் திருப்பதி போறதுக்காக வச்சிருக்கத வேணா எடுத்துத் தர்றேன்.. ஆனா அண்ணனைக் காசு விஷயத்தில நம்பமுடியாத. ‘
*
இவளுக்கும் புதன்கிழமை தான் விடுமுறை. அன்றைக்குத்தான் சினிமாவுக்குப் போகமுடியும். இவனும் சங்குவும் தியேட்டரைவிட்டு வெளியே வந்து நடந்து கொண்டிருந்தார்கள். சங்கு இவன் தோளைத் தொட்டு சற்று தள்ளிக் கையைக் காட்டிக் காண்பித்தாள்.
கணபதி சைக்கிளை உந்தித் தள்ளி — ஓடுகிற குதிரையில் ஏறுவதுபோல — ஒரு வேகத்தில் கூடவே போய் ஏறிக் கொண்டான்; கொஞ்சம் தள்ளி மெதுவாக பின்னால் அவன் மனைவி கேரியரில் ஏறிக்கொள்ள, சைக்கிள் மீண்டும் வேகமாகக் கிளம்பியது.
இவன் திரும்பி சங்கு முகத்தைப் பார்க்க, ஒரு அபூர்வமான புன்னகை பளிச்சிட்டது.
==============
- சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6
- விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?
- பல கோடி பிரபஞ்சங்களா ? அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா ?
- ரவி ஸ்ரீநிவாசுக்கு பதில்
- கடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003
- இஸ்லாத்தில் பிரிவினை
- குறிப்புகள் சில-நவம்பர் 6 2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2
- திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் , 6, 2003
- உயிர்ப்பலியும் பெரியாரும்
- பெண்ணில்லா உலகம்.
- மூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்
- அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்
- குலேபகாவலி Vs மிராண்டா
- அமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா ? பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4
- எனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘
- தமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… ?
- உயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து
- கலைஞர்-ஜெயமோகன்
- கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி
- தீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘
- Mr. & Mrs. Iyer
- பாராட்டியே தீரவேண்டும் பாலாவை
- சாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்
- புகாரி நூல் வெளியீடு
- திறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்
- வடஇந்திய மோர்க்கறி அல்லது மோர்க்குழம்பு (தஹி கி கறி)
- வட இந்திய கார கத்திரிக்காய் கறி
- நிறமற்ற ஒரு சுவர்
- ஒரு நாள் மட்டும்……..
- சொந்த மொழி
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி
- விடியும்! – (21)
- குழந்தை
- தெளிவு
- சைக்கிள்
- ரமணன், NRI
- உறவு
- அவரோகணம்
- ஆதம்பூர்க்காரர்கள்
- தெரிந்துகொள்
- ஒரு வரவுக்காய்..
- கவிதைகள் சில
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- இறைவா நீ என்ன சாதி ?
- முனி.
- காய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை
- 3 கவிதைகள்
- சொல்லாத ஒரு சொல்
- தீபங்கள்
- நீயும்–நானும்
- அத்தை மகள்!
- கவிதைகள்
- தயிர் சாதம்
- நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?
- அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘
- சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்