சத்தியின் கவிக்கட்டு 2

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

சத்தி சக்திதாசன்


தமிழ்த் தந்தையே

நூறோடு ஒரு ஆறு கடந்ததுவே தமிழன்னை
நமக்காக உனையளித்து தந்தையே

விடிவற்றுத் தவித்த ஈழத்தமிழர்தம் வாழ்வினிலே
விடிவெள்ளியாய் முளைத்த செல்வாவே
வாழ்வற்றுத் தவித்த மலையக மக்களின்
வரலாற்றைத் திசைதிருப்ப போர்க்கொடி ஏந்தியவனே

ஏழையல்ல பிறப்பால் என்றாலும் உன் மக்கள் தவிக்கையிலே
எளிமைதான் உன்வாழ்வென ஏனையோர்க்குக் கட்டியவனே

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் தோன்றாரே – இப்புவியில்
ஜயா உன்போலே இலட்சியப் புருஷர்கள் !
அஞ்சாத சிங்கமென சாத்வீகப் போராட்டத்தை உன்
ஆயுதமாய்க் கொண்டு அராஜகத்தை எதிர்த்தவனே

தோட்டத் தொழிலாளர்கள் இழந்தார் தம் வாக்குரிமையை
துடித்தெழுந்த தலைவன் நீ இழந்தாய் உன் பொறுமையை
பிறந்தது தமிழர்க்கு வீடெனும் ஓர் தமிழரசுக் கட்சி
பெற்றார் முகவரியை முகம் இழந்த மனிதர்கள்

ஒரே நாடு ஆயினும் வேண்டுமொரு சுயாட்சி என
ஓங்காரமிட்ட எங்களினத் தலைவன் நீ – சிங்களரின்
பிடிவாதம் கண்டு பொற்தலைவா சீற்றம் நீ கொண்டனையே
பிறப்பித்தார் உன் மக்கள் தமிழ் ஈழமெனும் ஆணையுனக்கு

காலங்கள் மறைந்தன காலன் உனைப் பறித்தெடுத்தான்
காட்சிகள் மட்டும்தான் மாறியதேயொழிய – மாறவில்லை
ஈழத்தமிழர்தம் இன்னல் நிறைந்த சரித்திரமே
இன்றுமட்டும் எமக்கு விடிவில்லை ஓலமது கேட்டிடுவாய்

சாகாவரம் பெற்று ஜெயித்தவன் வேண்டுமுன் ஆசியெமக்கு
சாஜேவே எனும் தந்தை செல்வத்தின் நாயகனே
உலகத்தமிழர் அனைவரும் செலுத்திடுவார் அஞ்சலிகள்
உண்மைத் தமிழ் தலவைன் தந்தை செல்வாவுனக்கே !

0000

விடுமுறை ஒன்று கேட்டேன்

விடுதலை கேட்டேன் கொஞ்சம் விடுமுறை கேட்டேன்
மனமெனும் சிறையில் மயங்கிடும்
நினைவுகளுக்கு காயமாற்றும் ஓர்
நிதர்சனம் கேட்டேன்

தேடிய வாழ்க்கை கிடைத்ததுமே
நாடிய செல்வங்களை அடைந்ததுமே
ஆத்மா அலைய ஆன்மா விழித்தது
உருளும் இந்த உலகச் சிக்களிலிருந்து
ஒரே ஒரு முறை விடுமுறை கேட்டேன்

விபரமற்ற உலகினிலே விற்கமுடியா சிந்தனைகள்
வியாபார உலகினிலே வீணான சந்தைகள்
விந்தையான மனிதன் என என்னை ஏனோ
வினாக்களால் விரட்டுவர் ; அறிவரோ
முட்டாளின் மூளை ஒரு பூந்தோட்டம்
முழுதாக வேண்டும் எனக்கொரு
முடிவில்லா விடுமுறை.

வளமற்ற உள்ளங்களின் வாழ்வில்
வழியற்ற விடிவுகளின் மத்தியில்
மகிழ்வற்ற வாழ்வின் ஜீவன்கள்
மாற்றம் காண ஏங்கும் காட்சிகளை
முற்றாய் என் நிகழ்காலத்தினின்று – அகற்றவே
மனித உலகை சில நிமிஷங்கள் மறக்க
விடுமுறை ஒன்று வேண்டுமே

உலகம் உருள்வதன் நோக்கம் விளங்குமா
உனக்கும் எனக்கும் ?

தரையில் உருளும் சக்கரங்கள்
தாங்கிச் செல்லும் வண்டிகள்
மனதில் உருளும் வேதனைகள்
தங்கிச் செல்லுமா ஏழை உயிர்கள்

உருவமற்ற சோக நினவுகளிலிருந்து
உள்ளத்திற்கு வேண்டும் ஓர் விடுமுறை

விடுமுறையில் விடுபட்ட துயரங்கள்
விடைபெறவேண்டும் வேறு உலகிற்கு
வருந்தும் மனக்களின் வேதனை காலங்கள்
மறந்தும் இனியும் அருகே அருகாது

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்