மத்தளராயன்
இங்கிலாந்தில் டபிள்யூ எச் ஸ்மித் போன்ற பெரிய புத்தகக் கடைகள் நகரம் தோறும் புத்தக விற்பனையில் மும்முரமாக இருந்தாலும் டிஸ்கோ, செயின்ஸ்பெறி போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கொலுப்படி வைத்து சாஸ்திரத்துக்கு நாலு புத்தகம் வைத்து விற்பதைப் பார்த்திருக்கிறேன்.
இப்போது அங்கே சூப்பர் மார்க்கெட்டுகள், உருளைக்கிழங்கு வறுவல் போல் புத்தகங்களையும் வாரிக்கட்டிக் குவித்து வைத்து விற்க ஆர்வம் காட்டுவதாக கார்டியன் பத்திரிகையில் படித்தேன். பதிப்பாளர்களும் இவர்களோடு உறவுக்குக் கை கொடுப்போம் என்று தாண்டிக் குதித்து ஓடுகிறதாகச் செய்தி.
ஷவர பிளேடோ அரை டசன் கோழி முட்டையோ வாங்க வந்தவன் கூடவே ஒரு புத்தகத்தையும் எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு கேஷ் கவுண்டரை நோக்கிப் போக வாய்ப்பளிப்பது நல்லது தான் என்றாலும், இந்தப் பேரங்காடிகளின் வியாபாரத் தந்திரம் படைப்பை உப்பு, புளி, மிளகாய் போலப் பண்டமாக்கி, எழுதியவனை ஓரங்கட்டி நிறுத்தும் நடவடிக்கை.
இப்படிச் சொல்கிற இங்கிலாந்து வாழ் எழுத்தாளர்களில் விக்ரம் சேத் முதல் போன வருடம் ‘செங்கல் சந்து ‘ புத்தகம் மூலம் பிரபலமான பங்களாதேசி மோனிகா அலி வரை உண்டு.
புத்தகத்தின் பின் அட்டையில் எம்.ஆர்.பி என்ற உச்ச சில்லறை விற்பனை விலையைப் போட மாட்டார்களாம் இனிமேல் சூப்பர் மார்க்கெட் மூலம் புத்தகம் விற்கும் பதிப்பாளர்கள். புத்தகம் வெளியாகும்போது ஒரு ரகசிய விலை வைத்து ஆயிரம், ரெண்டாயிரம் பிரதிகள் என்று அவர்கள் அங்காடிக்கு விற்க, அங்காடிகள் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை உணர்ந்து நேரம் பார்த்து விலையை ஏற்றி, தேவையான போது தள்ளுபடி கொடுத்து இறக்கி விற்பனை பிய்த்துக்கொண்டு போக வைப்பார்களாம். அசல் உருளைக் கிழங்கு வறுவல் வியாபாரத் தந்திரம்தான்.
இங்கே தான் இருக்கிறது எழுத்தாளரின் பிரச்சனை. எம் ஆர் பி அடிப்படையில் தான் ராயல்டி இது வரை கணக்கிடப்பட்டு வந்தது. இனி அந்தக் காலம் மலையேறிப்போக, பதிப்பாளர் கொடுக்கும் தொகையைக் கும்பிடு போட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும் எழுத்தாளர். லட்சக் கணக்கில் புத்தகம் விற்றாலும் மூளையைக் கசக்கிப் புத்தகம் எழுதியவருக்குப் பட்டை நாமத்தைப் பரக்கச் சார்த்தி விட்டு மற்றவர்களுக்குத்தான் லாபம் எல்லாம் போய்ச் சேரும்.
இது மட்டுமில்லை. இலக்கியத்துக்கு வரவேற்பு இருந்தால் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் புத்தகம் அலமாரியில் இருக்கும். இல்லாவிட்டால் அதையெல்லாம் நிர்த்தாட்சண்யமாகத் தூக்கி எறிந்து விட்டு, மும்முரமாக விற்பனை ஆகிற புத்தகத்தை – அது எந்தக் குப்பையாக இருந்தாலும் பரவாயில்லை – அலமாரி முழுக்க வைப்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் வெளியாகப் போகும் புத்தகங்களில் நூறு இருநூறை மட்டும் தேர்ந்தெடுத்து ஏகப்பட்ட விளம்பரம் செய்து விற்பனையில் சாதனை படைக்கவும் சூப்பர் மார்க்கெட்டுகள் முன்வந்திருக்கின்றனவாம்.
ராயல்டியை நம்பி எழுத்தையே தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்துவது இனிமேல் முடியாத காரியம் என்கிறார்கள் இங்கிலாந்து எழுத்தாளர்கள்.
அட தேவுடா, இங்கே நாங்க இத்தனை வருஷமா இதைத்தானே சொல்லிக்கிட்டு இருக்கோம்.
****
என்னதான் சொல்லுங்கள். தமிழ் எழுத்தாளர்கள் சாதுப் பிராணிகள். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சாராய பாட்டிலோடு உதார் காட்டினாலும் பாட்டிலுக்கு உள்ளே அமுலோ காம்ப்ளானோ தான் இருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையையும் கட்டுரையையும் ஆயுதமாக்கி இலக்கியப் பத்திரிகையிலோ இணைய இதழிலோ வல்லடி வம்படியாகப் பூமி நடுங்க , கண்டோர் விதிர்விதிர்க்க அடித்துக் கொள்வார்கள். அப்புறம் சாவகாசமாகச் சேர்ந்து நின்று புலியடிதம்பம் மாயழகு டாக்கடையில் இஞ்சி தட்டிப் போட்ட டா குடித்து விட்டு திருப்பாச்சேத்திக்கு வெட்டரிவாள் வாங்கப் போக (வெய்யிக்காலம்லா, பிள்ளைங்களுக்கு இளநீ வாங்கி வெட்டித் தரணும்னு வீட்டுலே சதா நச்சரிப்பு) பஸ்ஸுக்குக் காத்திருப்பார்கள்.
மலையாள எழுத்தாளர்கள் விஷயத்தில் இதெல்லாம் கிடையாது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான்.
எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துள்ள (குஞ்சப்துல்லா) இன்னொரு எழுத்தாளரான டி.பத்மநாபன் மேல் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். சாதா சிவில் வழக்கு இல்லை. கிரிமினல் கேஸாக்கும். பத்மநாபன் ‘பச்ச மலயாளம் ‘ பத்திரிகையில் கடந்த டிசம்பரில் எழுதியது தன்னை அவமானப் படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்று குஞ்சப்துல்லாவின் புகார்.
டி.பத்மநாபன் சீனியர் எழுத்தாளர். நாவலே எழுத மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு முழுக்கச் சிறுகதையில் ஈடுபட்டவர். இவருடைய எந்தக் கதையிலும் முக்கியக் கதாபாத்திரம் ஒரு பெயரில்லத ‘அயாள் ‘ (அவன்) தான். சிறுகதையோடு ரோஜாச் செடி வளர்ப்பதிலும் ஈடுபாடு கொண்ட இந்த ரிடையர்ட் அரசாங்க அதிகாரியை எதிர்க்கும் குஞ்ஞப்துல்லா நாவலாசிரியர். மருத்துவர். வளைகுடா மலையாளி. மாதவிக்குட்டி மதம் மாறியபோது இவரும் மாறி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகக் கேரளச் சட்டசபைக்குப் போட்டியிடப் போவதாகப் பேச்சு எழுந்து ஓசைப்படாமல் அடங்கிப் போனது அப்புறம்.
ஒரு வாரம் முன்பு கோழிக்கோடு மாஜிஸ்ட்றேட் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சாட்சிக் கூண்டில் ஏறியவர் இன்னொரு மலையாள எழுத்தாளரான வி.ஆர். சுதீஷ். தனக்குக் குஞ்சப்துல்லாவோடு பதினைந்து வருட நட்பு உண்டென்றும், முதிர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் பத்மநாபன் மேல் மதிப்பு உண்டென்றும் குறிப்பிட்ட சுதீஷ், குஞ்சப்துல்லாவின் நாவலான ‘பரலோகம் ‘ காப்பியடித்து எழுதப்பட்டது அல்ல என்றும் குஞ்சப்துல்லாவே சுயமாகக் கற்பனை செய்து எழுதியதென்றும் கோர்ட்டாரிடம் தெரிவித்தார். வழக்கு விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
நூறு வருடத்து முன்னால் படைப்பாளிகள் அருட்பா – மருட்பா விஷயமாகப் பிராது கொடுத்து கோர்ட் படியேறியதற்கு அப்புறம் தமிழ்நாட்டில் இப்படி எந்த எழுத்தாளரும் அடிபிடி என்று போனதாகத் தெரியவில்லை. போக நேர்ந்தால், தமிழ்நாட்டின் நிலவரத்தை அனுசரித்து சுவாரசியமான தீர்ப்புக்களை எதிர்பார்க்கலாம் – ‘பிரதிவாதி குற்றவாளி என்று நிரூபணமாகிறது. அவர் வாதி எழுதிய எல்லாப் புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்கி முழுக்கப் படித்து விட்டுப் பரீட்சை எழுத வேண்டும். அறுபத்து மூணு புள்ளி மூணு சதவிகிதத்துக்குக் கீழே மதிப்பெண் வாங்கினால் திரும்பப் படித்தாகணும் ‘.
இந்தக் கடுங்காவல் தண்டனைக்குப் பயந்தே இலக்கிய இதழ்களில் சண்டை சச்சரவு வெகுவாகக் குறைந்து விடலாம். சரிதான், அப்புறம் என்னத்துக்குப் பத்திரிகை நடத்துவதாம் ?
****
ராத்திரி அலுத்துக் களைத்து வந்து படுக்கையில் விழுந்து நிம்மதியாகத் தூங்கும் முன்னால் படித்தோம் ரசித்தோம் மூடிவைத்தோம் என்று பெயர் பண்ண ஒரு அரைமணி நேரம் கையில் எடுப்பது என்னவாக இருந்தாலும், வாழ்க்கை வரலாறாக இருக்கலாகாது. ஆனாலும் இப்படியான லேசான வாசிப்புக்கான கனமான புத்தகமாகத் தற்போது எனக்குக் கிட்டியது கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கமின் ‘மை சைட் ‘ (ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பு) தான்.
பெக்கம் போன ஜூன் வரை இங்கிலாந்தில் மான்செஸ்டர் யுனைடட் குழுவுக்காக விளையாடி அப்புறம் ஸ்பெயினில் ரியல் மாட்ரிட் குழுவில் புகுந்தாலும், அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை குறையாது – என்னையும் சேர்த்து. புத்தகத்தைப் படிக்க எடுக்க அதுவும் ஒரு காரணம்.
தேர்ந்தெடுத்து வாசிக்க வசதியாக விரிவான அட்டவணை புத்தகத்தில் பின் இணைப்பாக இருப்பதால் 1998ல் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்கு முதலில் சாடினேன். பெக்கம் விளையாடிய முதல் இண்டர்நேஷனல் பந்தயம். அவர் ரெஃப்ரியால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதும் அங்கே மட்டும் தான் நடந்தது.
அர்ஜெண்டினாவுக்கும் இங்கிலாந்துக்குமான மோதலில் – இது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் போன்றது என்று சொல்லத் தேவையில்லை – அர்ஜெண்டினா வெற்றி பெற்ற அந்தப் பரபரப்பான பந்தயம் இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே விழுந்தபடி பெக்கம் காலை உதைப்பது போல் நீட்ட, அர்ஜெண்டினா ஆட்டக்காரர் டிகோ சிமியோன் சுருண்டு விழுவார். சக இங்கிலாந்து ஆட்டக்காரர்களான மிக்கேல் ஒவனும், கேரியும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, எதிரணிக்கார பட்டிஸ்டூட்டா ‘..த்தா வேணும்டா உனக்கு மவனே ‘ என்று திருப்தியாகத் தலையசைக்க பெக்கம் முகமெல்லாம் வேதனை தெரிய வெளியேறுவார்.
பின்னாலிருந்து காலைத் தட்டி விழவைத்தான் அந்த எழவெடுத்த சிமியோன். அப்புறம் தலையை அன்போடு தடவற மாதிரிப் போக்குக் காட்டிட்டு முடியைப் பிடித்து இழுத்தான். என்னையறியாமல் காலை ஓங்கிட்டேன். உயிர்த்தலத்துலே உதச்சுக் கூழாக்கினது போல அந்தப் பய சுருண்டு விழுந்து பாவ்லா காட்டினதை எல்லாரும் நம்பிட்டாங்க. நான் அப்பாலே வெளியே போய் எங்க டாடியைக் கட்டிக்கிட்டு ஓன்னு அழுதேன் சின்னப் புள்ளை கணக்கா.
பெக்கம் சொல்வது உண்மையாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் தான் என்ன போச்சு ?
மூட் அவுட் ஆன அந்த தினத்தில் அமெரிக்காவிலிருந்து அவர் மனைவியும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் பாப் இசைக் குழுவில் பாஷ் ஸ்பைஸ் என்ற செல்லப் பெயர் கொண்ட பாடகியுமான விக்டோரியா பெக்கம் தொலைபேசித் தான் பிள்ளையாண்டிருப்பதைச் சொல்வது, பெக்கம் உடனே நியூயார்க் விரைந்து மாடிசன் அவென்யூவில் கச்சேரி கேட்க மேடைக்குப் பின்னால் உட்காருவது, விக்டோரியாவைச் சந்திக்க வந்த பிரபல பாடகி மடோனா பெக்கமைப் பார்த்து ‘நீங்க என்ன விளையாடறீங்க ? ஃபுட்பாலா ? ‘ என்று கால்பந்து பற்றிய அசல் அமெரிக்க அறியாமையோடு கேட்பது என்று நீண்டு கொண்டு போகிறதைப் படிப்பதற்குள் ஹாவ் .. சாவகாசமாக இன்னொரு நாள் சொல்றேன்.
****
போன வாரம் மாத்ருபூமி தினப்பத்திரிகையில் கவனத்தை ஈர்த்த இரண்டு செய்திகள் –
மலையாள பூமியின் முக்கிய நதிகளின் ஒன்றான பாரதப்புழை வரண்டு போய்விட்டது. பாலக்காடு, திருசூர் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளைத் தீர்த்து, கடும் வேனலிலும் தூய்மையான நீரொழுக்கோடு காலம் காலமாகப் பெருகிய பாரதப்புழை இப்போது சேறும் சகதியுமாக ஒரு தேங்கிய குட்டை போல் காட்சியளிக்கிறது. ஐவர் மடம் படித்துறையில் ஈமக்கடன் செய்து பித்ருக்களைக் கரையேற்ற வருகிறவர்கள் ஆற்றில் குளித்துவிட்டுத் திவசம் செய்ய முடியாமல் வீட்டிலேயே குளித்துவிட்டு வந்து, கொஞ்சம்போல் இருக்கும் தண்ணீரில் கால் கழுவிக் கொண்டு தர்ப்பணம் செய்ய உட்கார்வது பார்க்கப் பரிதாபகரமாக இருக்கிறது.
இதைக் கட்டுடைக்க முயன்றபடி படித்த அடுத்த செய்தி –
கல்பற்ற மயிலாடிப்பாறையில், சந்திரநாதசுவாமி கோவிலில் சந்திரநாத தீர்த்தங்கரரின் சிதிலமடைந்த விக்கிரகம் நிலத்தடியிலிருந்து கிடைத்தது. தாம்பூலப் பிரசன்னம் வைத்து இந்தச் சிற்பம் மண்ணில் புதைந்து கிடப்பதாக திக்கோடி முரளீதரப் பணிக்கர் ஆருடம் சொன்னபடிக்கு இது தோண்டி எடுக்கப்பட்டது. நாலாயிரம் வருடம் முந்தைய சிற்பம் என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன் சைவர்களுக்கும் வைணவர்களுக்குமிடையே நடந்த போராட்டத்தில் மேற்படி சிலை உடைக்கப்பட்டதாகவும் ஆருடத்தின் மூலம் அறியப்பட்டது.
பத்திரிகைச் செய்தியில் மாந்திரீக யதார்த்தம் கலப்பதைப் பற்றி எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால், பிரசன்னத்தில் வந்த முன்னோர்களின் ஆவிகளில் ஒன்றுக்குக் கூடவா சந்திரநாதசுவாமி சமண தீர்த்தங்கரர் என்றும் சைவ வைணவ மோதலுக்கும் சமணப்பள்ளியில் சிலை உடைபட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் வரலாறு தெரியாது ? அல்லது ஆவிகளும் ரொமிலா தொப்பார் போன்றவர்களை நரகத்துக்குப் போகும்படி சபித்துவிட்டு, என்.சி.ஈ.ஆர்.டி திருத்தி எழுதிய எட்டாம் கிளாஸ் ஹிஸ்டரி புத்தகத்தை மிதந்து மிதந்து படித்துக் கொண்டிருக்கிறார்களா ?
****
புதுக்கோட்டையிலிருந்து ராமையாத் தேவர் – ரிலீஸ் விவரம் தெரியவில்லை.
கோலாலம்பூருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமேறிப் பறக்க இருந்த புதுக்கோட்டை சரகம் ராமையாத் தேவர் (வயது 70) கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவிக்கிறது. வலி நிவாரண மருந்தைத் துணிப்பையில் வைத்து மலேசியாவுக்குக் கடத்த முயன்றதாகக் குற்றச்சாட்டு.
கோலாலம்பூரில் கிடைக்காத கோடாலித் தைலமா ? பினாங்கில் கிட்டாத டைகர் பாம் களிம்பா ? மூக்கில் வைத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினாலே, நெற்றிப் பொட்டில் ஆவி பறக்கத் தேய்த்தாலே தலைவலி, ஜலதோஷம் எல்லாம் நெட்டோட்டம் ஓடுமே. இந்த மனுஷர் என்னத்துக்காக இங்கேயிருந்து வலி நிவாரண குளிகையை மூட்டை கட்டிக்கொண்டு போனார் ? அதுவும் முப்பத்தய்யாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மாத்திரைகள். எழுபது வயசுக்கு அப்புறம் இருக்கப்பட்ட மிச்ச ஆயுசு முழுக்கக் கைகால் குடைச்சல் வந்தால் சொஸ்தமாக்கவோ, அல்லது அடுத்த தலைமுறைக்கு ஆஸ்தியாக விட்டுப் போகவோ ஏற்பாடா ? புதுக்கோட்டை மருந்துக்கடைகளில் அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்க்கெல்லாம் தலைவலி மாத்திரை தர மாட்டார்களா ?
அது சரி, ஆரெஸ்பதி ஸ்பெஷல் நீலகிரித் தைலம், பயோரியா பல்பொடி, அஞ்சால் அலுப்பு மருந்து, சைபால், மந்தித்தோப்பு மணிகட்டி சுவாமிகள் எண்ணெய், ஒண்டிப்பிலி நன்னாரி சர்பத், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஸ்நானப் பொடி, வல்லாரை லேகியம் போன்ற அரிய பொருட்களை இங்கேயிருந்து கட்டித் தூக்கிக்கொண்டு போகும்போது கஸ்டம்ஸில் பட்டியல் ஒப்பித்து சொந்த உபயோகத்துக்காகத்தான் என்று துண்டைப் போட்டுத் தாண்ட வேண்டுமா ? அந்த குற்றாலத் துண்டையும் பட்டியலில் சேர்த்துக்கலாமா ?
யோசித்து யோசித்துத் தலைவலியும் மூக்கில் நீர்கோர்த்துத் தும்மலும் அதிகமாகி – ஒரு சாரிடான் .. வேணாம், ஆக்ஷன் அஞ்ஞூறு ரெண்டு கொடப்பா.
***
மத்தளராயன்
***
eramurukan@yahoo.com
- ….நடமாடும் நிழல்கள்.
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- எங்கே போகிறேன் ?
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
- கடிதங்கள் மார்ச் 18 2004
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு