சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்


சமையல் யாகத்தின் பலியாடு ,

கதை ஆசிரியர் நன்றாக ஊசியை சூட்டில் காய்ச்சி பழத்தில் ஏற்றியுள்ளார்.

மீரா நாயரின் ( WATER) திரை படம் பார்த்து போல் இருந்து..ஒன்ணரை மணி நேரம் படத்தை ஒரு பக்கத்தில் ( கதை தமிழ் தேசத்தில் சரியான தளம் )

சமுதாய காவலர்களுக்கோர் சம்மண்டி அடி.
விதவைகளுக்கு போட்ட பட்ட மொட்டை வேஷத்தை வெளிச்சத்திற்கு கொண்டு
வந்துள்ளார்.
அன்று இலங்கை எரிந்து இரவணன் அனுமானின் வாலில் வைத்த தீயினால் அல்ல
சீதா மாதாவின் மனத்தில் கோப கனலே.

சமுதாயத்தில் பெண் அம்மா,மகள் ,தங்கை , அக்கா, தாரம் என எல்லா பரிமாணத்தில் இருந்தவள் , கணவன் இறந்தவுடன் அவள் தனித்துவிட பட்டாள். எல்லா இன்ப நிகழ்ச்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டாள் .
அந்த சீர் கெட்ட சமுதாயக் பெண் கொடுமைகள் தான்
நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையானத்தற்கு முதல் வித்து.
ஆசிரியரின் முயற்சிக்கு நன்றி

ரவிசந்திரன்

Series Navigation

சமையல் யாகத்தின் பலியாடு

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்


காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் , வதக்கும் புகை வெளியில் செல்ல அடுப்போடு கூடிய புகைபோக்கி. அதுவே விலை இருபதாயிரம் ரூபாயாமே? எப்படியோ அவர்களுக்கு எல்லாமே வசதியாக இருந்தது. இதையெல்லாம் வைத்து அவரை பெரிய பணக்காரி என்று முடிவு செய்துவிட வேண்டாம். ஒரு மிகப் பெரிய வியாபாரக் குடும்பத்தின் ஏழைச் சமையற்காரி தான் அவர். ஆச்சி என்றதும் செட்டினாட்டைச் சேர்ந்தவர் என்று தவறாக நினைக்க வேண்டாம், திருநெல்வேலி மாவட்டத்திலும் வயதான பெண்களை ஆச்சி என்று தான் அழைப்பார்கள்.
அவள் சொந்த ஊர் திருநெல்வெலிப் பக்கம் மேலச்செவல். அவள் தாத்தா , அப்பா காலத்தில் பெரிய மிராசுதார் குடும்பம். மேலச்செவலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் உள்ள வயல்கள் எல்லாம் இவர்களுத்தான் சொந்தமாக இருந்தது. வற்றாத தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் தாரளமாக மூன்று போகம் விளையும் நெல் வயல்கள். வீட்டில் பால் கறக்க என நாலு பசுமாடுகள். உழவுக்கென இரண்டு ஜோடி காங்கேயம் காளைகள். வீடு பூராவும் நெல்லும் , வேர்க்கடலையும் இறைந்து கிடக்கும். அப்பாவுக்கு காந்திமதியயையும் சேர்த்து ஆறு பெண்கள். இவள் நான்காவது. இவளுக்கீழே கல்யாணி , அப்புறம் தில்லை நாயகி. நல்லவேளை ஏழாவதாகப் பிறந்தது ஆண் குழந்தை. ஆனால் அந்த ஆண் குழந்தை கட்டியாள எந்த சொத்தும் மிஞ்சியிருக்கவில்லை. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்றால் ஆறு பெண் பெற்ற கேவலம் மேலச்செவல் மிராசுதார் எந்த மூலைக்கு?ஒருவழியாய் ஆறு பெண்களையும் கரையேற்றிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் மிஞ்சியது சொந்த வீடும் , ரெண்டு ஏக்கர் புஞ்சையும் தான். அதை விற்றுக் காசாக்கிக் கொண்டு வடக்கே ரயில் ஏறியவன் தான் காந்திமதி ஆச்சியின் தம்பி , அதற்குப்பிறகு அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை , எந்த நல்லது கெட்டதற்கும் அவன் வரவில்லை.

காந்திமதி ஆச்சி வாழ்க்கைப் பட்டது தென்காசியில். அவள் கணவருக்கு ஒரு மில்லில் மேனேஜர் வேலை. சோற்றுக்கும் , துணிக்கும் கவலையில்லாத வாழ்க்கை. பிறந்த வீட்டின் பெருமை பற்றி ஆச்சி அதிகம் பேச மாட்டார். ஏனென்றால் அது இப்போது காலிப்பெருங்காய டப்பாவாகி விட்டதே? ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு ஐந்து வயதான போது , காந்திமதி ஆச்சியின் கணவர் , ஒரு நாளும் தலைவலி , காய்ச்சல் என்று படுத்தறியாதவர் மாரடைப்பில் பொசுக்கென்று போய்விட்டார். சிறு குழந்தையுடன் தனியாக நின்றவளுக்கு ஆதரவு காட்ட புகுந்த வீட்டினர் முன்வரவில்லை , பிறந்த வீட்டினர் என்று யாரும் இல்லை. சோர்ந்து உட்கார்ந்து விடாமல் , கிடைத்த சொற்பத் தொகையை வங்கியில் போட்டு விட்டு , இட்லி , தொசை முதலியவைகளைச் சுட்டு வீட்டிலேயே வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயே ஒரு பெண் அதுவும் விதவை தனியாக இருந்தால் சமூகம் அவளை எப்படி நடத்தும் என்று உங்களுக்குத் தெரியும் , நாற்பது வருடங்களுக்கு முன் நிலைமை படு மோசம். ஆச்சியைப் பற்றிக் கேவலமாக பேசாதவர்கள் குறைவு. அவளையே ருசி பார்க்க வந்த ஓநாய்களையையும் , அவள் ஒழுக்கத்தின் மேல் தீராத சந்தேகம் கொண்ட சமூகத்தையும் துணிச்சலோடு எதிர் கொண்டு தன் ஒரே மகளின் வாழ்வை கருத்தில் கொண்டு உழைத்தாள். மகளும் நன்கு படித்தாள். காலேஜ் படிப்பு முடிந்தவுடன் நல்ல மாப்பிள்ளையாகத் தேடி மணமுடித்தும் கொடுத்து விட்டாள். மகள் வாழ்கின்ற சென்னைக்கே தானும் வந்து விட்டாள். மகளும் , மாப்பிள்ளையும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற என்ற பழமொழியைச் சொல்லி ,மகள் வீட்டு பக்கத்திலேயே ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டாள்.உழைத்துப் பழகிய உடம்பு என்பதால் அறுபது வயதிலும் ஆரோக்கியமாக இருந்தாள். யார் யாரிடமோ சொல்லி வைத்து இந்த சமையல் வேலைக்கு வந்தாள்.
காலை மணி ஏழுக்கெல்லாம் அவர் வேலை செய்யும் முதலாளி வீட்டில் இருக்க வேண்டும்.முதலாளிக்கு சென்னையில் ஏகப்பட்ட இடங்களில் பெரிய பெரிய ஷப்பிங்க் மால்கள் இருந்தன. அது தவிர வீட்டு உபயோக சாதனங்களின் ஏஜன்சி வேறு பல கிளைகளுடன் இயங்கியது. அவர் கை வைத்த இடத்திலெல்லாம் காசு கொட்டியது. அதனால் அவர் மனைவிக்கு சமையல் வேலை செய்ய நேரமில்லை , மனமும் இல்லை. அப்போது வேலைக்கு வந்தவர்தான் காந்தி மதி ஆச்சி. ஆயிற்று இதோ வருடங்கள் ஏழு ஓடோடி விட்டனன.ஆச்சியின் கைப் பாகத்திற்கு அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அடிமை.சமையல் செய்து வைப்பதோடு ஆச்சியின் வேலை முடிந்தது , பரிமாறுவது எல்லாம் வீட்டின் முதலாளியம்மா அவர்கள் சாப்பிடும் போது ஆச்சி எக்காரணம் கொண்டும் அந்த ரூமுக்கு வரக் கூடாது ஆச்சி மட்டுமல்ல வேறு எந்த வேலைக்காரர்களும் அந்தப் பக்கம் திரும்பவே கூடாது . இந்த விஷயத்தில் அவர்கள் மிகவும் கண்டிப்புடன் இருந்தார்கள். இது ஆச்சிக்கு வேதனை தரும் விஷயமாகவே இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? கை நீட்டி சம்பளம் வாங்குகிறாள் அல்லவா?
அவர்கள் கண்டிப்புடன் இருந்த மற்றொரு விஷயம் சமையல் செய்யும் போது ஆச்சியும் ஆச்சிக்கு உதவும் முருகனும் கண்டிப்பாகத் தலையில் நீண்ட தொப்பி ஒன்று அணிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இவர்களுடைய முடி சாப்பாட்டில் விழுந்து விடக் கூடாது என்பதே காரணமாகச் சொல்லப்பட்டது.இதைத் தவிர வேறு எந்தத் தொந்தரவும் கிடையாது. சரியாக ஒண்ணாம் தேதியன்று சம்பளப் பணம் ரூபாய் நாலாயிரம் சுளையாகக் கைக்கு வந்து விடும். ஆச்சி முதலாளி வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்வதால் பணம் கணிசமாக மீறும். அதை யாருக்கும் கொடுத்து விட மாட்டாள். இந்த விஷயத்தில் ஆச்சியின் மகளுக்குக் கூட கொஞ்சம் வருத்தம் தான். ” சம்பளப் பணத்துல ஒரு ரெண்டாயிரம் எனக்குக் குடுத்தாதான் என்ன? சேத்து சேத்து வச்சு என்ன செய்யப் போறே?” என்பாள். அதற்கு ஆச்சி ” ஒனக்கு சீர் குடுக்க வேண்டியது குடுத்தாச்சு. தீவாளி , பொங்கலுன்னா துணி எடுத்து குடுக்கேன் , பிள்ளைக்கி ரெண்டு பவுன்ல சங்கிலி எடுதுருக்கேன் , இன்னும் என்னட்டி பேராசை படுதே?” என்று கூறி வாயை அடைத்து விடுவார்.
ஆச்சி ஒருத்திக்குத்தான் தெரியும் அவள் என்ன காரத்திற்காக பணம் சேர்க்கிறாள் என்னும் ரகசியம்.ஆச்சியுடைய தந்தை நல்ல நிலையில் இருக்கும் போதே காசிக்குப் போக வேண்டும் என்று ரொம்ப ஆசைப் பட்டார். அது நிறைவேரறாமலே இறந்தும் போனார். தந்தை மேல் அதிகப் பாசம் கொண்ட ஆச்சி காசிக்குப் போவதை தன் வாழ் நாள் லட்சியமாகவே கொண்டு விட்டாள்.காசிக்குப் போவதென்றால் சும்மாப் போவதில்லை. ரயிலில் குளுகுளு வசதியில் போய் அங்கே நல்ல விடுதியில் சுமார் பத்து நாள் தங்கி எல்லா சாமியும் பார்க்க வேண்டும் என்பது ஆச்சியின் கனவு. அது நிறைவேறும் நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வருடம் வேலை செய்தால் காசிக்குப் போய்வந்த பின்னும் வேலை செய்ய வேண்டாம் . இருப்பதை வைத்துக் கொண்டு எஞ்சியிருக்கும் காலத்தை ஓட்டிவிடலாம் என்று ஆச்சி ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தார்.
அவள் வேலை செய்யும் வீட்டில் கொஞ்ச நாட்களாகவே வேலைக்காரர்கள் மத்தியில் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் சுந்தரம் தான் சொன்னான். முதலாளியின் தூரத்து உறவுக்காரர் குடும்பம் ஒன்று விபத்தில் இறந்து போனதாம். அந்த விபத்தில் தப்பிப் பிழைத்த எட்டு வயது பெண் குழந்தையை முதலாளி தானே வளர்க்க எண்ணி வீட்டிற்கு அழைத்து வரப் போகிறாரம் என்பதே அந்தப்பேச்சு. ஆச்சிக்கு இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும் , முதலாளியின் மேல் ஒரு புது மரியாதையையும் ஏற்படுத்தியது.வீட்டு வேலைக்காரர்களை கொஞ்சம் முன்னே பின்னே நடத்தினாலும் முதலாளிக்கு இரக்கமுள்ள மனசு என்று தோன்றியது.இத்தனை நல்ல முதலாளிக்கு தான் நின்றதும் வேறு நல்ல சமையல் ஆளாகக் கிடைக்க வேண்டுமேயென்று கவலைப் பட்டாள்.
அந்தக் குழந்தை வந்தது. பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது ஆச்சிக்கு. கறுப்பாக இருந்தாலும் நல்ல களையாக இருந்தது. நீண்ட முடி ரெட்டை ஜடையாகப் போடப் பட்டு இடுப்பு வரை தொங்கியது.நல்ல அடர்த்தியான முடி. ஆளை விழுங்கும் பெரிய கண்கள். அந்தக் கண்களில் இப்போது பயம் தெரிந்தது. சிறு குழந்தைதானே அதனால் தான் பயப்படுகிறாள் , அதுவும் போக இப்போதுதான் அப்பா , அம்மாவைப் பறிகொடுத்திருக்கிறாள் , எல்லாம் போகப் போகச் சரியாகி விடும் என்று ஆச்சி நினைத்துக் கொண்டாள். மற்ற குழந்தைகளின் அறைக்குப் பக்கத்திலேயே அந்தக் குழந்தைக்கும் ஒரு அறை ஒதுக்குவார்கள் என நினைத்தாள். இல்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்தக் குழந்தையின் பெயர் அர்ச்சனாவோ எதுவோ சொன்னார்கள். ஆச்சியின் வாயில் நுழையவில்லை. அதனால் லட்சுமி என்று அழைத்தாள் ஆச்சி. லட்சுமியின் மேல் ஆச்சிக்குப் பாசம் அதிகம். காரணம் லட்சுமி ஆச்சியின் தாயின் சாடையில் இருந்தாள். அந்தப் பெண்ணும் “பாட்டி,பாட்டி” அழைத்து ஆச்சியையே சுற்றிச் சுற்றி வந்தது.அந்தப் பெண் வந்து சில நாட்கள் ஆயின. “பாட்டி என்னை ஸ்கூல்ல சேக்கறது பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க , என்னை எப்போ ஸ்கூல்ல சேப்பாங்கன்னு கேட்டு சொல்லுங்க பாட்டி” என்றாள் லட்சுமி ஒரு நாள். அதைப் பற்றி ஆச்சியே கூட சில நாட்களாக யோசித்துக் கொண்டு தான் இருந்தாள். “ஒரு வேளை இந்த வருடம் முடிந்து பள்ளிகள் புதிதாகத் திறக்கையில் சேர்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார்களோ? இல்லையே எப்படி இருந்தாலும் கோடை விடுமுறைக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்குமே , பள்ளிகள் இப்போது தானே திறந்திருக்கின்றன இப்படி பல கேள்விகளை மனதுக்குள் போட்டு வெருட்டியவாறு இருந்தாள் ஆச்சி.

ஆச்சியின் எல்லாக் கேள்விகளுக்கும் அடுத்த வாரத்திலேயே பதில் கிடைத்து விட்டது. ஒரு புதன் கிழமை அந்தச் சிறு பெண் அழுதவாறே ஓடி வந்து ஆச்சியைக் கட்டிக் கொண்டது. என்ன ஏது என்று எதுவும் சொல்லாமல் கதறி அழுத வண்ணம் இருந்தது குழந்தை. ஒரு வேளை தன்னுடைய அப்பா , அம்மா ஞாபகம் வந்து வேதனைப் படுகிறதோ? என நினைத்து ஆச்சி அவளுக்குத் தின்பதற்கு நல்ல தின்பண்டங்கள் கொடுத்து சமாதானப் படுத்த முயன்றாள். ம்ஹூம்! அவள் அழுகை எதற்கும் நிற்கவில்லை. ஆச்சிக்கு இது வேறு ஏதோ சமாசாரமாக இருக்குமோவென பொறி தட்டியது. லட்சுமியே மெதுவாக அழுகை குறைந்து பெரிய பெரிய விம்மல்களிடையே விஷயத்தைச் சொன்னாள். அவள் சொன்னதைக் கேட்டதும் ஆச்சியின் மேல் ஆத்தாவே வந்து இறங்கியது போல ஒரு ஆவேசம் வந்தது.
விஷயம் என்னவென்றால் , அந்தக் குழந்தையை அவர்கள் தங்கள் மகள் போல வளர்க்க ஒன்றும் அழைத்து வரவில்லை. அந்த வீட்டிற்கு சம்பளமில்லத வேலைக்காரியாக இருக்கவே அழைத்து வந்திருக்கிறார்கள். அது கூடப் பரவாயில்லை , அவள் சமையல் வேலையில் கூடமாட ஒத்தாசையாக இருக்க வேண்டும் . முதலாலளிகளோ ரொம்ப சுத்தக் காரர்கள் , என்னதான் தொப்பி வைத்துக் கொண்டாலும் , அந்தக் குழந்தையின் நீண்ட முடி சாப்பாட்டில் விழுந்து விட சாத்தியம் இருப்பதால் , அவளுக்கு மொட்டையடிக்க ஏற்பாடு செய்து விட்டார்கள். அது மட்டுமல்ல முடி வளர வளர அதை மழுங்க சிரைத்துக் கொண்டேயிருக்கப் போகிறார்களாம்.
இதையெல்லாம் கேட்ட ஆச்சிக்கு ஆவேசம் கட்டுக்கடங்காமல் போனது. அந்தக் குழந்தையின் கண்ணீரைத் துடைத்தவாறே சிறிது நேரம் யோசனை செய்தாள்.தீர்மானம் எடுத்தவளாய் “லட்சுமி , இந்தப் பாரும்மா , இனுமே நீ அழவே கூடாது , என்னை நீ ஒங்கப்பனப் பெத்தாவளாப் பாத்தாலும் சரி , இல்லே, ஒங்கம்மையப் பெத்தவளாப் பாத்தாலுஞ்சரி , ஒனக்கு நான் பாட்டிதான். இந்த வீட்டுல கெடந்து தலைய மழிச்சுக்கிட்டு , படிப்பும் இல்லாம நீ திண்டாட நான் விட மாட்டேன் , ஒன்ன நான் படிக்க வெச்சு ஆளாக்குதேன் , அதுக்கு என் மகளே எதுத்து நின்னாலும் சரி , காசிக்குப் போறது எப்பவும் பொய்க் கிடலாம் , பிள்ள வாழ்க்கை திரும்ப வருமா?” என்று அந்தக் குழந்தைக்குப் புரிந்ததோ இல்லயோ பொறிந்து தள்ளினாள். முதலாளிக்கும் , முதலாளியம்மவிற்கும் கிடைத்த ஏச்சுக்கள் இங்கு சொல்லத்தரமன்று.
திகைத்து நின்ற வேலைகாரர்களையும் , முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த முதலாளியம்மாவையும் அலட்சியமாக பார்த்த படி லட்சுமியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு அந்த வீட்டின் படியிறங்கினாள் ஆச்சி ஒரு புதிய தலைமுறையையும் நம்பிக்கையயையும் சுமந்து கொண்டு..

Series Navigation