கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

பிரதாப ருத்ரன்


இதாலிய எழுத்தாளரான இடாலோ கால்வினோவின் பதினெட்டு கதைகளையும், ஒரு கட்டுரையையும் தேர்ந்தெடுத்து திரு.பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இச்சிறுகதைகள் பல்வேறு காலகட்டங்களில், பல மொழிபெயர்ப்பாளர்களால் இதாலிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவை.

நிலவின் தொலைவில்- சிறுகதையில் காலம் காலமாய் மனித உணர்விற்கும், நிலவிற்குமான பூடக உறவு அறிவியல் ரீதியாக உள்ளார்ந்து புனையப்பட்டிருக்கிறது. இருப்பினும், மனித மனங்களின் யதார்த்த செயல்பாடுகளே மிஞ்சி நிற்கிறது. காரணம், இக்கதையின் விவரணையாளனுக்கு தன் காதலி நிலவிலேயே தங்கிவிட்டதினால் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்ப்பிறை தன் காதலியின் மாற்றங்களாகவே தோற்றமளிக்கிறது. இதனால் ஒரு நாயைப் போல் நிலவைப்பார்த்து உளையிடும் அளவிற்கு மனம் பாதிப்பிற்குள்ளாவதை யதார்த்தத்தோடு விவரணையாக்கப்பட்டுள்ளது.

காசனோவாவின் நினைவுக் குறிப்புகளில்- மனித மனங்களின் பன்முகப் பரிமாணங்களும், அது செயல்படும் தளங்களும், செயல்படுவதில் உள்ள சிக்கல்களும் முன்நிறுத்தி பேசப்படுகிறது. மேலும், வாழ்வில் நிலையற்ற அனுபவங்களுக்கு பல பெண்களை நாடிச்செல்கையில் காசனோவா, தான் சந்திக்கும் பெண்களினுடைய உடலோடு மட்டும் தன் பரிச்சயங்களை நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுடைய மனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்குத் தன்னை லிடுபடுத்திக் கொள்வதையே முதன்மையாக்குகிறான்.

பெட்ரோல் நிலையம்- காருக்கு பெட்ரோல் நிரப்பும் சாதாரண செயலிலிருந்து தொடங்கும் கதை, அறிவியல் ரீதியான முன்னேற்றங்களினால் எற்படும் உலகளாவிய இயற்கைவளத் தட்டுப்பாடுகளைப் பற்றிய சிந்தனையாகஞிதியானமாக மாற்றம் பெறுகிறது–கதையின் முடிவு விநோதமானது.

வாத்துக்களின் பறத்தலை போல- நதாலே என்கிற மனநிலை வளர்ச்சி குன்றிய படைவீரனின் உள்மன பாதிப்புகளை பதிவு செய்கிறது. சிறுவயதில் அவன் மீது எற்பட்ட அடக்குமுறைகளை எதிர்க்கவியலாமை அவனை மனப்பிறழ்ச்சி உடையவனாக ஆக்குகிறது. போரைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு சிறு கதை.

ஒரு எழுத்தரின் சாகசத்தில்- யதேச்சையான ஒரு பெண்ணுடனான உடலுறவினைத் தொடர்ந்து, அதன் உணர்வுகளோடு கனவுலகில் லயித்திருந்தவனை திடுமென நிகழ்வுலகத்திற்கு கொண்டு வருகிறது அவனது மேலதிகாரியின் தொலைபேசி அழைப்பு. அன்றாட நிகழ்வுகளின் பாதிப்பிலிருந்து தன்னுடைய அனுபவ உணர்வுகளை தக்கவைத்துக்கொள்ள யத்தனிக்கும் மனிதனின் சிந்தனை அவசியமான அல்லது அவசியமற்றதொரு நிகழ்வினால் தகர்க்கப்படுவதை இக்கதை சித்தரிக்கிறது.

ஒரு திருமணமான தம்பதியினரின் சாகசம்- கணவன் மனைவிக்குமான அன்யோன்ய உறவினை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்லும் யதார்த்த வாழ்வில், இருவரும் இணைந்திருக்கும் பொழுதுகள் மிகக் குறைவானதாகவே இருப்பினும், அவர்களுக்குள்ளான அன்யோன்யம், லிடுபாடு மற்றும் அனுசரித்து போதல் ஆகியவை நம் கண்முன்னே நிகழ்வதாய் எழுதப்பட்டிருக்கிறது.

தெரசா என்று கத்திய மனிதன்- சிறுகதையில் சொல்லப்படும் சம்பவம் பாதிப் புனைவு மீதி யதார்த்தம். கதையின் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும் என்பதான மனப்பதிவினை எற்படுத்துகிறது.

விவரணையார்களே கதை சொல்லிகளாகவும் ஆகியிருக்கின்றனர்.

பெரும்பான்மையான கதைகள், மனித மனங்கள் இயங்குமுறைகளே முதன்மைபடுத்தி எழுதப்பட்டிருக்கின்றன இத்தகைய யதார்த்த ரீதியில் இயங்குதளங்களை கொண்ட சிறுகதைகள் தமிழ் எழுத்துலக வாசகர்களுக்கு புதிய அனுபவத்தை எற்படுத்தும். சில கதைகள் யதார்த்த தளத்தை மிஞ்சியும் இயங்குகின்றன.

புத்தக பதிப்பகத்தார்- யுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை.

பிரதாப ருத்ரன்,

தருமபுரி.

Series Navigation

பிரதாப ருத்ரன்

பிரதாப ருத்ரன்