கனவான இனிமைகள்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சந்திரவதனா செல்வகுமாரன்.யேர்மனி


இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை.

நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும், ஊருக்குப் பணம் அனுப்பும் விடயத்தில்தான் ஆரம்பித்தது.

சுமதியின் அம்மாவிடமிருந்து நேற்றுக் கடிதம் வந்திருந்துது. அதில் பொம்பிளைப்பிள்ளையைக் கேட்கக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்யிறது பிள்ளை, என்னாலை ஒண்டையும் சமாளிக்கேலாமல் கிடக்கு. சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு. ஏதாவது உதவி செய் பிள்ளை…. என்று எழுதியிருந்தது.

சுமதி இதைப்பற்றி முதலே கணவன் மாதவனோடு கதைக்கத்தான் விரும்பினாள். ஆனால் மாதவனோ – இவள் இது பற்றிக் கதைத்து விடுவாளே – என்ற பயத்தில் தான் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதுபோல கொம்பியூட்டாின் முன் இருந்து ஏதோ தேடுவது போலவும் ரெலிபோனில் முக்கிய விடயங்கள் பேசுவது போலவும் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தான்.

இவள் காத்திருந்து சலித்து படுக்கைக்குப் போய் அரைமணித்தியாலங்களின் பின்பே அவன் படுக்க வந்தான்.

அம்மாவின் கடிதம், சாப்பாட்டுக்கே காசில்லையென்று, பணம் கேட்டு வந்த நிலையில் எந்த மகளால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும். சுமதி நிம்மதியின்மையோடு படுக்கையில் புரண்ட படியே

இஞ்சருங்கோ….! அம்மான்ரை லெட்டர் பார்த்தனிங்கள்தானே. தம்பியவங்கள் என்ன கஷ்டப் படுறாங்களோ தொியேல்லை. என்ரை இந்த மாசச் சம்பளத்திலை கொஞ்சக் காசு அனுப்பட்டே ? என்று மாதவனிடம் கேட்டாள்.

மாதவனிடமிருந்து மெளனம்தான் பதிலாய் வந்தது.

என்னங்கோ….! சொல்லுங்கோவன்….! அனுப்பட்டே…. ?!

சுமதி கெஞ்சலாய்க் கேட்டாள்.

உன்னோடை பொிய தொல்லை. மனிசன் ராப்பகலா வேலை செய்திட்டு வந்து நிம்மதியாக் கொஞ்ச நேரம் படுப்பம் எண்டால் விடமாட்டாய்….! லைற்றை நிப்பாட்டிப் போட்டுப் படு. – கத்தினான் மாதவன்.

சுமதிக்கும் கோபம் வந்து திருப்பிக் கதைக்க, வாய்ச்சண்டை வலுத்தது.

….!

….!

….!

இறுதியில் – நீயும் உன்ரை குடும்பமும் கறையான்கள் போலை எப்பவும் என்னைக் காசு காசெண்டே அாிச்செடுப்பீங்கள். – மாதவன் இரவென்றும் பாராமல் கத்தினான்.

என்ரை குடும்பத்துக்கு நீங்களென்ன அனுப்பிக் கிளிச்சுப் போட்டாங்கள். நான் வந்து பத்து வருஷமாப் போச்சு. இப்ப மட்டிலை ஒரு ஆயிரம் யூரோ கூட நீங்கள் என்னை அனுப்ப விடேல்லை. நானும் வேலை செய்யிறன்தானே. என்ரை காசை வீட்டுச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உங்கடை காசை உங்கடை அண்ணன்மார் கனடாவிலையும், அமொிக்காவிலையும் வீடு வேண்டுறதுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறீங்கள். – சுமதியும் ஆக்ரோஷமாகச் சீறினாள்.

மாதவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வர – என்ரை குடும்பத்துக்குக் காசு அனுப்புறதைப் பற்றி, நீ என்னடி கதைக்கிறாய். நான் ஆம்பிளை அனுப்புவன். அதைப் பற்றி நீ என்னடி கதைக்கிறது ? – கத்திய படியே எழுந்து, சுமதியின் தலையை கீழே அமத்தி முதுகிலே ஓங்கி ஒரு குத்து விட்டான்.

சுமதி வலி தாளாமல் – அம்மா….! – என்று அலறினாள். மீண்டும் மாதவன் கையை ஓங்க, தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய சுமதி அவன் கைகளை அமத்திப் பிடித்துத் தள்ளினாள்.

என்னடி எனக்கு நுள்ளிறியோடி…. ? உனக்கு அவ்வளவு திமிரோ…. ? மாறி மாறி அவள் நெஞ்சில், கைகளில், முதுகில் என்று தன் பலத்தையெல்லாம் சேர்த்து மாதவன் குத்தினான்.

சுமதியால் வலியைத் தாங்க முடியவில்லை. – மிருகம் – என்று மனதுக்குள் திட்டியவாறு அப்படியே படுத்து விட்டாள்.

மாதவன் விடாமல் திட்டிக் கொண்டே அருகில் படுத்திருந்தான். சுமதி எதுவுமே பேசவில்லை. மெளனமாய் படுத்திருந்தாள் மனதுக்குள் பேசியபடி.

கண்ணீர் கரைந்தோடி தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. மனசை நிறைத்திருந்த சோகம் பெருமூச்சாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

….

சுமதி படுத்திருந்தாள். மாதவனின் திட்டல்கள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.

அப்போது அவள் முன்னே ஒரு அழகிய ஆண்மகன் குளித்து விட்டு ஈரத்தைத் துடைத்த படி, பின்புறமாக நின்றான். திரண்ட புஜங்களுடன் மாநிறமான ஒரு ஆண் மகன் ஈரஞ் சொட்ட நினற போது, சுமதிக்கு அவன் முகத்தைப் பர்ர்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து அந்த ஆண்மகன் சுமதியின் பக்கம் முகத்தைத் திருப்பினான். அழகிய முகம்.

அவன் புன்னகை சுமதியைக் கொள்ளை கொண்டது.

என் இலட்சிய புருஷன் இவன்தான் – சுமதியின் முகம் நினைப்பிலே களிப்புற்றது. சுமதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் இன்னொருவன் வந்து நின்றான். அந்த இன்னொருவனைப் பார்க்கச் சுமதிக்குப் பிடிக்கவில்லை.

தன் மனங்கவர்ந்த முதலாமவனை அவள் தேடினாள். முதலாமவனின் கண்கள் அந்த இன்னொருவனையும் தாண்டி இவளுள் எதையோ தேடின.

தேடியவன் மெதுவாக இவளருகில் வந்தமர்ந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ இடையே வந்து விட அவன் போய் விட்டான்.

அடுத்தநாள் அவன் நினைவுகளுள் மூழ்கியபடியே சுமதி லயித்திருந்தாள். அவன் வந்தான். – எனக்காக, என்னைத் தேடி, எனக்குப் பிாியமான ஒருவன் வந்திருக்கிறான். – என்ற நினைவில் சுமதி மிகவும் சந்தோஷப் பட்டாள்.

அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகளைச் சுமந்த படி – வருவானா..! – என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியோடு , அவள் வீட்டிலிருந்து வெளியேறி ரோட்டிலிறங்கி நடக்கத் தொடங்கினாள்.

அது இரு பக்கமும் மரங்களடர்ந்த ஒரு அமைதியான, அழகான பாதை.

அந்த ரம்மியமான சூழலில், காதலுணர்வுகள் மனதை நிறைக்க, அதில் அவன் நினைவுகளை மிதக்க விட்டபடி சுமதி நடந்து கொண்டிருந்தாள்.

தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பது தொிந்ததும் அவள் இனம் பூியாத இன்பத்தில் மிதந்தாள்.

எனக்காக வருகிறான். எனக்கே எனக்காக வருகிறான். தேநீரோ, சாப்பாடோ கேட்க அவன் வரவில்லை. என்னில் காதல் கொண்டு, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பார்க்க ஆசை கொண்டு வருகிறான். என்னோடு கதைத்துக் கொண்டு இருக்க வருகிறான்.

என்னைச் சமையலறைக்குள் அனுப்பி விட்டு தான் ஒய்யாரமாக இருந்து தொலைக்காட்சி பார்க்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

என்னைச் சாமான்கள் வாங்கக் கடைக்கு அனுப்பி விட்டு, நான் தோள் வலிக்கச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு வரும்போது, ரெலிபோனில் நண்பருடன் அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல், – நான் என்ரை மனிசிக்கு முழுச்சுதந்திரமும் குடுத்திருக்கிறன். – என்று சொல்லுகிற வக்கிரத்தனம் அவனுக்கு இல்லை.

அவனிடம் எந்த சுயநலமும் இல்லை. எனக்கே எனக்காக என்னைப் பார்க்க என்னைத் தேடி வருகிறான். என்னைப் பக்கத்தில் வேலைக்காாி போல வைத்து விட்டு, ஊர்ப் பெண்களுடன் அரட்டை அடித்துத் திாியும் கயமைத் தனம் இவனிடம் இல்லை.

ஆயிரம் நினைவுகள் சுமதியை ஆக்கிரமிக்க ஆவலுடன் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அன்று போல் அவன் அரை குறை ஆடையுடன் இன்று இல்லை. தூய உடை அணிந்திருந்தான். அவன் நெருங்க நெருங்க சுமதி அவனை முழுமையாகப் பார்த்தாள்.

புன்னகையால் அவள் மனதை ஜொலிக்க வைத்த அவன் தலையில், மெலிதாக நரையோடியிருந்தது. சுமதி அவன் வரவில் மகிழ்ந்தாள். வானத்தில் பறந்தாள். ஏதோ தோன்றியவளாய் பக்கத்திலிருந்த பாதையில் திரும்பினாள். அவன் இரண்டு அடி தள்ளி அவள் பின்னே தொடர்ந்தான்.

அது ஒரு பூங்கா. ஆங்கு ஒரு சிறு குடில். அவன் அதனுள் நுழைந்து அங்கிருந்த வாங்கிலில் அமர்ந்து சுமதியைக் கண்களால் அழைத்தான்.

சுமதி அவன் பார்வைக்குக் கட்டுண்டவள் போல், போய் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

அவன் சுமதியின் வலதுகை விரல்களை பூக்களைத் தொடுவது போல், மிகவும் மெதுவாகத் தொட்டுத் தூக்கி, தன் மறுகையில் வைத்தான்.

அவன் தொடுகையில் உடற் பசியைத் தீர்க்கும் அவசரமெதுவும் இல்லை. அன்பு மட்டுமே தொிந்தது.

சுமதியின் வானத்தில் நட்சத்திரங்கள் தொியத்தொடங்கின. அவள் மிகமிகச் சந்தோஷமாயிருந்தாள். வாழ்க்கையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.

திடாரென்று அவளை யாரோ தோளில் பிடித்து உலுப்பியது போல இருந்தது. திடுக்கிட்ட சுமதி விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அங்கே பூங்காவும் இல்லை. புஷ்பங்களும் இல்லை. கனவுக்காதலனும் இல்லை. மாதவன் தான் விழிகளைப் புரட்டியபடி, கோபமாக – அலாம் அடிக்கிறது கூடக் கேட்காமல் அப்பிடியென்ன நித்திரை உனக்கு வேண்டிக் கிடக்கு. எழும்படி. முதல்லை பொம்பிளையா லட்சணமா இருக்கப் பழகு….!

கெதியா தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வா. நான் வேலைக்குப் போகோணும். – கத்தினான்.

ஏதோ – பொம்பிளையளுக்குச் சுதந்திரம் கிடைச்சிட்டு – என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கினம். சுமதிக்குச் சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தமே புரியவில்லை.

அம்மாவின் கடிதம் மேசையில் மடித்த படி இருந்தது. மனசு கனக்க அவள் மெளனமாய் தேத்தண்ணியைப் போடத் தொடங்கினாள்.

உடலெல்லாம் வலித்தது.

அன்றைய கனவு மட்டும் மனதின் ஓரத்தில் அமர்ந்திருந்து, வாழ்க்கையின் இனிமை எங்கோ தொலைந்து விட்டது என்பதை அவளுக்கு உணர்த்தியது.

சந்திரவதனா செல்வகுமாரன்.

யேர்மனி

chandra1200@yahoo.de

Series Navigation