This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue
நாகரத்தினம் கிருஷ்ணா
‘ரங்கப்பா யார் வந்திருக்கிறது பாரு ? ‘
குரல் வந்த திசையில் ரங்கப்பா திரும்பிப் பார்க்கிறார். கதவிடுக்கில் நுழைந்து எட்டிப்பார்த்துப் பின் உள்வாங்கும் வெளிச்சத்தலைகள், அவர் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பொறுமை இழந்துவிட்டிருந்தன. புகை நிழலாய் பிம்பங்கள். எச்சரிக்கையாய் எட்டியே நிற்கும் பிம்பங்கள். அடைபட்ட ஒளியைப்போல, வெளியேறுவதற்குத் தயாராக. படுக்கையில் கிடக்கும் அவருக்கென ஒழுங்கு செய்யப்பட்ட அந்த அறை அவரைப் போலவே மங்கிய பல்பில் சோர்ந்து, கழிவுகளில் மணந்து, மனிதர்களின் காலடிகளில் சதா மிதிபட்டுப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
‘தாத்தா இப்படிப் பாருங்க. தேவி வந்திருக்கன். தெரியுதா ‘ அவரது தம்பி பேர்த்தி தேவி எனப்படும் தேவயானி, பூனாவிலிருந்து இவரது அந்திமத்தில் கலந்து கொள்ள அக்கறையாக வந்திருக்கிறாள்.
‘தெரியாதா என்ன ? எல்லா ஞாபகமும் இருக்கத்தான் செய்யுது ‘, என யாரோ முணுமுணுப்பது கூட ரங்கப்பா காதில் விழத்தான் செய்யுது. அவரைப் பொறுத்தவரையில், ‘என்னைத் தெரியுதா ? ‘ எனக் கேட்கின்ற கேள்விதோறும், அந்நியமே தூக்கலாக இருக்க அவற்றை அலட்சியம் செய்யவே விரும்பினார்.
‘ பத்துநாளா இப்படித்தான். பேச்சில்லை. எல்லாம் கை ஜாடைதான். வீட்டுல வேறு வேலைகளைக் கவனிக்க முடியலை. பம்பு செட்ல பிரச்சினை. மனுஷன் சுத்தி சுத்தி வர்ராரு. நட்ட நடவு காயுது. இந்தக்கிழவன் கண்ணை மூடமாட்டேன்னு அடம் பிடிக்குது. எம்பசங்க வேற, ஒரு வாரமா பாண்டியிலிருந்து மெனக்கெட்டு வந்து இருந்துட்டு காலமை பஸ்ஸுலத்தான் போனாங்க ‘. ரங்கப்பன் தம்பி சம்சாரம் அலமேலு இவர் காதுபடச் சலித்துக் கொண்டாள். இவர் வீட்டில் இருக்கிறார் என்றால் ஒருகாலத்தில் அதிர்ந்து பேசாதவள்.
‘கஷ்டம்தான் ‘ என்ன மனசுல இருக்குதோ ? மகராசனத்தான் வாழ்ந்தாரு. யாருக்கும் தொந்தரவு கொடுக்காமப் போறதுக்குக் கொடுப்பனை இல்லை. ம்.. நம்ம கையில என்ன இருக்குது. மேல இருக்கிறவன் கூப்பிடணும் ‘ என்றவோர் அநாமதேயக் குரலைத் தொடர்ந்து கூட்டம் மொத்தமும் கலைகிறது.
அவரைப் பொறுத்தவரையில் எல்ல ‘மே முடிந்துவிட்டது. கைக்கு, காலுக்கு, இதயத்திற்கு மொத்தத்தில் உடம்பிற்கு என எல்லாமே முடிந்து விட்டிருந்தது. சிந்தனைமட்டும் அப்போதைக்கப்போது ஏதோ இரையைக் கண்டுவிட்ட எறும்புபோல பரபரத்து ஓடுவதும் பின்னர் சோர்வதுமாயிருக்கிறது. வயது ஏற ஏறப் பிறவி குறித்த அதன் வளர்ச்சி குறித்த, அதன் இயலாமை குறித்த சுய விமர்சனம் செய்யும் பக்குவம் வந்து விடுகிறது. அவரது வேண்டும், வேண்டாமைகள் கூட அவரது இயலாமையால் காத்திருக்கும் நிர்ப்பந்தம்.
ரங்கப்பா, ரங்கண்ணா, பெரியவர் என அவதாரமெடுத்து அந்தக் குடும்பத்தில் ஆட்சி செய்தவர். பங்காளிகளின், கிராமத்தின்- காதுகுத்தலிருந்து கருமாதி வரை, கூட்டத்தின் முன் வரிசையில் உட்கார்ந்து நாலு பேருக்குத் தாம்பூலம் கெ ‘டுத்துக் கோலோச்சிய அவரது நாட்டாமைக்குச் சோர்வு.
காற்றும் மழையும் கூட ரங்கப்பனைக் கடந்த மாதம் வரை கேட்டே செயற்பட்டிருக்கின்றன. அவரது உணர்வோடு ஒத்துப்போகாத வயதின் ரஸவாதத்தை அவர் முதுமை என நினைக்க மற்றவர்கள் சூஸகமாக ‘இயலாமை ‘ என அறிவித்தார்கள். அவரது அந்த வயது கொடுத்த ‘இயலாமை ‘யை அவரைவிட மற்றவர்களே அதிகமாக உணர்ந்திருந்தார்கள். எப்போது அந்த ‘இயலாமை ‘ அவருக்கு உணர்த்தப்பட்டது. அதற்குத் தேதியோ நேரமோ சொல்ல முடியுமா ? அவருக்குச் சரியாக ஞாபகமில்லை. அனேக விஷயங்களில், செயல்பாடுகளில் அவரைச் சுற்றியிருந்தவர்கள் சொல்லிவந்திருக்கிறார்கள். இவருக்குத்தான் புரிந்துகொள்ளக் காலதாமதம்.
சாப்பிட உட்காரும்போது, இவர் மார்புவரை நீர் தெளிக்க ‘ணங் ‘ என வைக்கப்படும் நீர்க்குவளை. பிற்பகல் குறட்டையின்போது, எரிச்சற்படுத்துகின்ற வீட்டுப் பெண்களில் சிரிப்பு. தன் பெண்ணின் வளைகாப்புச் செய்தியை சொல்லவந்த மாரியப்பக் கவுண்டர், நடையில் விசுப்பலகையில் உட்கார்ந்திருந்த இவரைக் கண்டும் காணததுபோல அவரது தம்பி கோவிந்துவைத் தேடி உள்ளே போனது என, அனைத்துமே அவரது ‘இயலாமை ‘யை உணர்த்தவந்த சமீபகால அடையாளங்கள்.
ஆனால் சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர், ஏதோ ஒன்றிற்காக ‘இயலாமைக் ‘ கைதியாகி இந்த நேரம் வரை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
அன்றைக்குச் சூரியன் மேற்காலே படர்ந்திருந்த ஆலமரத்தின் பின்னே பதுங்கிப் பார்க்கும் நேரம். முழங்கால்கள், சேற்றில் மூழ்க வயலில் களையெடுத்த பெண்கள் ஒவ்வொருவராக வெளியேறி வாய்க்காலில் கை கால்களைக் கழுவிக்கொண்டு புறப்பட, வரப்பில் உட்கார்ந்திருந்த ரங்கப்பனும் வீடு திரும்ப பிரயத்தனப்பட்டார். பக்கத்திலிருந்த கூஜாவை எடுத்தபோதுதான் கொஞ்சம் காபிதண்ணி எஞ்சி இருப்பது புரிந்தது. குடித்து முடித்து, கூஜாவை கழுவுவதற்காக, கிணற்றருகே இருந்த கொட்டகைக்குப் போனார். மின்சார இணைப்பு இல்லாத காலம். மண்ணெண்ணையில் நீர் இறைப்பு இயந்திரம் ‘ பட பட ‘ வென சத்தமிட்டுக்கொண்டு சீராக ஓடிக் கொண்டிருந்தது. ரங்கப்பன் நீர் இறைக்கப்படும் தொட்டியில் கழுவுவதற்காகக் குனிந்தார்.
‘பெரிய ஆண்டை இப்படிக் கொடுங்க. நான் கழுவிக் கொடுக்கிறேன் ‘. தண்ணீர் இறைக்கும் இயந்திர சத்தத்தையும் மீறியக் குரல். ரங்கப்பன் திரும்பிப் பார்த்தார்.
‘பவுணுங்க.. உங்கப் படியாளு தேசன் பொண்ணு. கூசாவை நீங்க அப்படி வையுங்க நான் கழுவித் தரேன் ‘. அவள் நெருங்கி வந்தாள்.அவள் பதிலில் வேறு ஒன்று இருந்தது.
‘ஏய் .. ஏய். அப்படியே நில்லு. ‘ ரங்கப்பன் பதறினார்.
‘ஏன் ?..தீட்டு ஒட்டிக்குமா ? ‘
‘தெரியுமில்ல .. என்ன கேள்வி இது ? யாராவது பார்க்கப் போறாங்க. தள்ளி நில்லு… ‘ ரங்கப்பன் சுற்றும் முற்றும் பார்த்தார்.
ஏன் ?.. ஏன் ? யாரும் பார்க்கலைன்னா தீட்டு இல்லையா ?. என இடைவெளியைக் குறைத்து, அவள் பேச்சிலும், பார்வையிலும் காமத்தை நிரப்பிக்கொண்டு இலைபோட்டபோது, இவர் இளமைக்கு அகோரப்பசி. இந்திரியங்கள் விழித்துக் கொண்டு வெகு நேரமாகியிருந்தது. சரிந்து விட்டார்.
‘இதுக்கெல்லாம் தீட்டு இல்லைங்களா ? ‘ நமட்டுச் சிரிப்போடு அவள், இடையில் கேட்டபோது, இவருக்கு உச்சி முடியைப் பிடித்து இழுத்தது போல இருந்தது. விடுபட்டு எழுந்து கொண்டார்.
‘ஏன் என்ன ஆச்சு ‘ ?
ரங்கப்பனுக்குக் குழப்பமாக இருந்தது.
‘வேண்டாம், ஏதோ தவறு நடந்து போச்சு ‘
‘ ஏலலையா ? என்று கேட்டுவிட்டு அவள் தொடர்ந்து சிரித்தது, அவர்வீடு திரும்பும்வரை எதிரொலித்தது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவருக்குத் திருமணம் என்ற பேச்செடுக்கும் போதெல்லாம் ‘இதுக்கெல்லாம் தீட்டு இல்லைங்களா ? ‘ என்ற கேள்வியே திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. தாயார் செங்கமலமும் கடைசிவரை அவரது கல்யாணத்தைப் பார்க்காமலேயே கண்களை மூடிவிட்டாள். ரங்கப்பனுக்கு உள்ளூர்ல தொடுப்பு வெளியூர்ல தொடுப்பு என ஆளாளுக்குக் காரணம் சேர்த்தார்கள். அண்ணனுக்கு வாரிசு இல்லாததில் தம்பி குடும்பத்திற்கு ஒருவகையில் சந்தோஷம். குடும்ப நிர்வாகத்தைத் தாரைவார்த்து ரங்கப்பனிடம் கொடுத்துவிட்டு, கைகட்டி வாய் புதைத்தார்கள்.
மற்றவர்கள் முன்னே பீஷ்மனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, பிரம்மச்சாரி புரியைச் சுமந்து, தன் அபிலாஷைகளை மற்றவர்கள் புரிதலுக்காகக் கொன்று நாட்களைத் தள்ளுவது அவர் மட்டுமே அறிந்த ரகசியம். அந்த ரகசியம் சீழ்பிடித்து இன்றைக்குப் புரையோடிவிட்டிருந்தது.
‘இதுக்கெல்லாம் தீட்டு இல்லைங்களா ‘ என மறுபடியும், மறுபடியும் துரத்தி, நெஞ்சக் குழாய் இறுக அவரைச் சுவாசிக்க விடாமல் சுமையாகி இறுக்கும் அந்தக் கேள்விப்பாறையை அகற்ற நெம்புகோலுக்காக இன்றுவரை காத்திருக்கிறார். துரத்திச் சீண்டும் அந்தக் கேள்வியைப் பலம் கொண்டமட்டும் தள்ளிப் பார்க்கிறார். உள்நாக்கு ஒட்டிக்கொண்டு, காற்று மட்டுமே உச்சரிப்பில் ஓசையில்லாமல் வந்து விழுகிறது. எழுந்த வலதுகரம் மறுபடியும் பெண்டுலம்போலப் புறப்பட்ட இடத்திற்கே வந்து விழும்போது, நெஞ்சத்தில் அழுத்தும் சுமை காரணமாக, கண்களின் இரப்பையை மெள்ள முட்டி கன்ன மேட்டின் வரண்ட தோலில் வெது வெதுப்பாக இறங்கும் கண்ணீர்த் துளிகளைப் பரவவிடுவதில் சுகமிருக்க அனுமதித்தார்.
சாளரத்தின் வழியே ஆக்ரோஷமான வெளிச்சக் கதிர்கள் திடு திப்பென உள்ளே நுழைந்தன. காலையா மாலையா என்று விளங்கிக் கொள்ள முடியாதக் குழப்பத்தில் தலையை உயர்த்தி அவர் விட்டத்தில் பார்க்க, பல்லி யொன்று தலைக்கு மேலே ஒரு சிறிய வெள்ளைப்பட்டாம் பூச்சியொன்றை ஜாக்கிரதையாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரங்கப்பன்கூட ஒரு வகையில் அந்தப் பல்லியிடமிருந்து தப்ப இயலாத பூச்சிமாதிரிதான்.
கதவு திறக்கும் சத்தம். மறுபடியும் நிழல்கள்.
‘பவுணு வந்திருக்கிறா. கொஞ்சம் சுத்தம் பண்ணணும். துணிகளையும் துவைச்சுப் போட வேண்டியிருக்குது ‘ அவரது தம்பி மனைவி அலமேலுவின் பழக்கப்பட்டக் குரல், சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. அந்த உச்சரிப்பினூடே வந்து விழுந்த ‘பவுணு ‘ என்ற வார்த்தை மின்சாரமாய்த் தாக்க, அதிர்ச்சியிலிருந்து மீளாமல், நிழல் உருவத்தை நிஜமாக்க முயன்றார். அந்த நிஜத்தின் கைகள் அவரைத் தொட நெருங்கியபோது, எங்கிருந்துதான் ரங்கப்பனுக்கு அந்தச் சக்திவந்ததோ விசுக்கென எழுந்து உட்கார்ந்தார். அங்கே அவரும் ‘நிஜ ‘மும் தான். மறுபடியும் ‘பயப்படாதீங்க இதுக்கெல்லாம் தீட்டு இல்லை ‘. என்ற முணுமுணுப்பு அவர் காதருகே. அதில் இருப்பது ‘அக்கறையா ? கேலியா ? என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத அவரது அந்திமக் கால இயலாமை.
அந்த நிஜத்தின் தீண்டலுக்கு அனிச்சையாய், அவரது இயலாமை இடம் கொடுத்தாலும், ‘ என்னைத் தொடாத.. தொடாத. ‘ என அவரது வாய் தொடர்ந்து முணுமுணுத்து ஓய்ந்து விட்டது. மேலே விட்டத்தில் பல்லியின் வாயில் அகப்பட்டுக் கொண்ட அந்தச் சிறிய வெள்ளைப் பட்டாம்பூச்சி, கடைசியாகத் தன் இறக்கைகளைப் படபடத்துவிட்டு ஓய்ந்திருந்தது.