அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

நரேந்திரன்


‘Together we will build a prosperity … where we create jobs here at home and where we shut down every loophole, every incentive, every reward that goes to some Benedict Arnold CEO or company that take the jobs overseas and stick Americans with the bill. ‘ — Sen. John Kerry (D-Mass.), after winning the New Hampshire presidential primary, Jan. 27, 2004.

செனட்டர் ஜான் கெர்ரியின் முழக்கத்திற்குக்கான காரணம் பற்றி ஆராய்வதற்கு முன், யாரிந்த ‘பெனடிக்ட் ஆர்னால்ட் ‘ என்று பார்க்கலாம்.

பிரிட்டிஷ் ஆளுகைக்கு எதிரான அமெரிக்கப் புரட்சி உச்சத்தில் இருந்த 1780-ஆம் வருடம், அமெரிக்க ராணுவத்தின் ‘வெஸ்ட் பாயிண்ட் ‘ கோட்டையில் மேஜர் ஜெனரலாக இருந்தவர்தான் இந்த Benedict Arnold (இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த ராணுவப் பயிற்சி மையங்களில் ஒன்று West Point). பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் ரகசியமாக இருபதினாயிரம் பவுண்ட் (ீ20,000) கையூட்டு வாங்கிக் கொண்டு 3000 அமெரிக்க ராணுவத்தினரையும், வெஸ்ட் பாயிண்ட் கோட்டையயும் அவர்களிடம் விட்டுக் கொடுக்கத் தீட்டிய சதித்திட்டம் அம்பலமானவுடன், இங்கிலாந்திற்கு ஓடிப்போனார். அவரே பின்னாளில், பிரிட்டிஷ் ஜெனரலாகப் பதவி பெற்று அமெரிக்கப் புரட்சியாளர்களை எதிர்த்துச் சண்டையிட்டார் என்பது வரலாறு.

அவர் செய்த ‘தேசத் துரோகத் ‘தினை அமெரிக்கர்கள் இன்றுவரை மறக்கவில்லை. அமெரிக்க நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எவரும், traitor எனப் பொருள்படும், ‘பெனடிக்ட் ஆர்னால்ட் ‘ என அழைக்கப்படுவார்கள். அமெரிக்கர்களைப் பொருத்தவரை அவ்வாறு அழைக்கப்படுவதை விடக் கேவலமானது வேறொன்றும் இல்லை.

அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு வேலைகளை ஏற்றுமதி செய்வதற்கு முக்கியக் காரணம் cheap மற்றும் quality labor என்பது நாமனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த சர்ச்சை இந்த வருடம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முக்கிய boiling point ஆக மாறி இருக்கிறது. இரண்டு கட்சிகளிலில் இருந்தும் சரமாரியான வசைகளும், எதிர் வசைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன (மூன்றாவதாக, ‘சந்தில் சிந்து பாடும் ‘ Ralph Nader-இன் புலம்பலையும் சேர்த்துக் கொள்க). தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், இணையதளங்கள் என்று எதைத் திறந்தாலும் outsourcing பற்றிய வாத, விவாதங்களைச் சலிப்பூட்டும் வகையில் பார்க்க, படிக்க நேரிடுகிறது.

வெளியே அதிகம் தெரியாத இன்னொரு காரணம், அமெரிக்கக் கம்பெனிகள் வெளிநாடுகளில் செய்யும் முதலீடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் வரிச்சலுகை. அமெரிக்க செனட்டில் பத்து வருடங்களுக்கு முன்னால் இயற்றப்பட்ட ஒரு சட்டமானது, வெளிநாட்டு முதலீடுகளில் கிடைக்கும் இலாபத்திற்கு உள்நாட்டை விடக் குறைந்த அளவிலேயே வரி விதிக்க வழி செய்கிறது. இதனால் மிச்சப்படும் ஏராளமான வரிப் பணம் மீண்டும் அக் கம்பெனிகளால் அமெரிக்காவில் முதலீடு செய்யப்பட்டுப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக வாதிடுகின்றனர் மிகப்பெரும் அமெரிக்கக் கம்பெனிகளான Pfizer, IBM, General Electric போன்றவற்றின் CEOக்கள். இல்லவே இல்லை என்பது எதிரணியினரின், ஜான் கெர்ரி போன்றவர்களின் கருத்து.

உதாரணமாக, இந்தியா போன்ற வெளிநாட்டில் முதலீடு செய்து $100 மில்லியன் டாலர் இலாபம் சம்பாதித்திருக்கும் ஒரு அமெரிக்கக் கம்பெனிக்கு, 20% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது அமெரிக்க அரசாங்கத்தினால். அதே அளவு லாபத்திற்கு உள்நாட்டில் 35% கார்ப்பரேட் வரி செலுத்தியாக வேண்டும். இதன் மூலம் அந்தக் கம்பெனிக்கு மிச்சமான பணம் $15 மில்லியன் டாலர்கள். அது மட்டுமில்லை. வெளிநாட்டில் ஈட்டிய $100 மில்லியன் லாபத்தை அந்த குறிப்பிட்ட கம்பெனியானது அங்கேயே, வெளிநாட்டில் இருக்கும் தனது foreign subsidiaryயிலேயே வைத்திருக்கும் வரை, அமெரிக்க அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரியான $15 மில்லியனையும் கட்ட வேண்டியதில்லை என்கின்ற உண்மை பல அமெரிக்க பொருளாதார வல்லுனர்களை அதிரச் செய்திருக்கிறது.

அமெரிக்கக் கார்ப்பரேட் சட்டத்தில் காணப்படும் இந்த மிகப் பெரிய ஓட்டையே பெரும்பாலான அமெரிக்கக் கம்பெனிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு, வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்பது பெரும்பாலான economistகளின் கணிப்பு. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் செனட்டர் ஜான் கெர்ரியின் மேற்கூறிய முழக்கத்திற்குக் காரணமும் அதுதான்.

அதே சமயம், வெளிநாட்டு subsidiary வைத்திருக்கும் பெரும்பாலான U.S. கம்பெனிகளின் வாதம் வேறு விதமாக இருக்கிறது. வெளிநாட்டில் பெறப்பட்ட லாபமானது, அந்தக் கம்பெனியின் விற்பனை மற்றும் விரிவடையும் வெளிநாட்டு மார்க்கெட்டினை பிரதிபலிக்கிறது என்கின்றனர் பல CEOக்கள். மேலும், அந்தந்த நாடுகளில் ஈட்டிய லாபத்தை அங்கேயே முதலீடு செய்வதன் மூலம் அங்குள்ள போட்டியாளர்களை எதிர்கொள்ளவதும் எளிதாக இருக்கிறது. பெரும்பாலான உள்நாட்டு போட்டியாளர்களுக்கு அந்தந்த நாடுகளில் விதிக்கப்படும் குறைந்த அளவு வரி விதிப்பும் ஒரு காரணம்.

கடந்த சில வருடங்களில் Pfizer போன்ற U.S. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மிகப்பெரும் லாபம் சம்பாதித்திருக்கின்றன. ஏறக்குறைய $29 பில்லியன் (மில்லியன் இல்லை) அளவிற்கு லாபம் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதில் சிறிதளவு கூட அமெரிக்காவிற்கு எடுத்து வரப்படவில்லை. இதன் காரணமாக Pfizer-இன் கார்ப்பரேட் வரி விகிதம் 2002 ஆம் வருடத்தில் 22% அளவிற்குக் குறைந்திருக்கிறது. அதுபோலவே GE எனப்படும் General Electric $21 பில்லியன் டாலர்களும், Intel $7 பில்லியன் டாலர்களும் தனது ‘ஓவர் சீஸ் ‘ ஆபரேஷன்கள் மூலம் ஈட்டியிருக்கிறது. இதில் GE தனது லாபங்களை அமெரிக்காவிற்கு மீண்டும் கொண்டுவருவதில்லை என உறுதிபடக் கூறி இருக்கிறது. இதனால் GE செலுத்த வேண்டிய tax bracket 21% ஆகி இருக்கிறது.

இவ்வாறு அமெரிக்கக் கம்பெனிகள் தங்களின் வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் சம்பாதித்த, மீண்டும் U.S.க்கு எடுத்து வராத மொத்தப் பணம், 2002-ஆம் ஆண்டுக் கணக்கின்படி $639 பில்லியன் டாலர்கள். பெரும்பாலான பணம் outsourcing மற்றும் manufacturing வேலைகளை வெளிநாட்டில் செய்ததன் மூலம் பெறப்பட்டதே. 1999ஆம் ஆண்டில் $400 பில்லியன்களாக இருந்த லாபம் மூன்றே ஆண்டுகளில் $239 பில்லியன்கள் அதிகரித்திருக்கிறது. இம்மாதிரியான அமெரிக்க வெளிநாட்டு மூலதனம் மற்ற நாடுகளில் பெருகப் பெருகத் தனது ஆளுமையை அந்தந்த நாடுகளில் அமெரிக்க அரசாங்கத்தினால் அதிகரிக்கவும் இது வழி வகுக்கிறது.

Benedict Arnold அமெரிக்காவை விட்டுத் தப்பி இங்கிலாந்திற்கு ஓடாமல் இருந்திருந்தால் அவரை அமெரிக்கர்கள் கொன்றிருக்கலாம். அவர் செய்த குற்றம் அத்தகையது. ஆனால், வெளிநாடுகளுக்கு வேலைகளை அனுப்பும் CEOக்களை அந்த ரகத்தில் சேர்ப்பது சரியானதா என்பது விவாதத்திற்குரியது. செனட்டர் ஜான் கெர்ரியைத் தவிர வேறு யாரும் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறவில்லை. வெளிநாடுகளுக்கு வேலைகளை அனுப்பும் CEOக்களின் செயல் சட்டத்திற்குப் புறம்பானதில்லை என்பதை அவரே ஒத்துக் கொள்வார்.

ஒரு விவாதத்திற்காக, அவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இருபது வருடங்களுக்கும் மேலாக அமெரிக்க செனட்டராக இருந்த ஜான் கெர்ரி இதைப்பற்றி ஏன் ஒருமுறை கூடப் பேசவில்லை என்பது கேள்விக்குறி. அவர் உறுப்பினராக இருந்த போதுதானே மேற்கண்ட சர்ச்சைக்குரிய சட்டங்களும் இயற்றப்பட்டன ? ஏன் அவர் அதனைத் தடுக்க முயலவில்லை ? அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கலாம்.

****

அமெரிக்கர்களின் Out Sourcing பற்றிய கவலை வெறும் I.T துறையுடன் நின்று விடவில்லை. Manufacturing வேலைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. பல சிறு தொழில் அதிபர்களும், லேபர் யூனியன்களும், சிறு வியாபாரிகள் மற்றும் கணிப்பொறி துறை சார்ந்தவர்களும் ஒன்றுபட்டுப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் வேலைகளின் அளவைக் குறைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது. இன்னொரு கோரிக்கை, ஃபெடரல் கவர்மெண்டின் வேலைகளை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இருக்கச் செய்வது மற்றும் ஒரு குறிப்பிட்ட வேலையை வெளிநாட்டிற்கு அனுப்பு முன் அந்த் வேலையைச் செய்து வந்த அமெரிக்கருக்குக் குறைந்த பட்சம் மூன்று மாத நோட்டாஸ் அளிப்பது போன்றவைகள். இவற்றில் ஃபெடரல் அரசாங்க வேலைகள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்கும் சட்டம் ஒன்று சமீபத்தில் அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட பொருள்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக 76% அமெரிக்கர்கள் கூறி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சீனாவிலிருந்து தயாராகும் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. எங்கு நோக்கினும். இப்படியே போனால், முன்பு ஒருமுறை அமெரிக்கர்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்ட ‘Buy American ‘ தூசி தட்டி எடுக்கப்படலாம். இன்றைய நிலையில் அதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. அதிகமான தயாரிப்புச் செலவுடன் தயாரிக்கப்படும் உள்நாட்டுப் பொருள்களை எத்தனை அமெரிக்கர்களால் வாங்க இயலும் ?

வேலை இழப்பு அமெரிக்கர்களின் மத்தியில் மிகப் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பி இருக்கிறது. பெரும்பாலான அமெரிக்க கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள். இதன் பாதிப்பு இன்னும் முழுமையாக வெளியே தெரியவில்லை எனினும் பெரும்பாலோனோரை இது குறித்துக் கவலை கொள்ளச் செய்திருப்பது உண்மை. அமெரிக்க வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றும் விதமாக பல சட்டங்கள் அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப் பட இருக்கின்றன. The Defending American Jobs of 2004 என்ற ஒரு சட்டமானது 50 அமெரிக்க செனட்டர்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. செனட்டர் ஜான் கெர்ரி போன்றவர்களின் எதிர்ப்புக் குரலும் இந்த ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.

அதே நேரத்தில், பெரும்பாலான அமெரிக்கக் கம்பெனிகள் out-sourcing விவகாரத்தில் செனட்டர் ஜான் கெர்ரியின் நிலைப்பாடு குறித்து கவலைப்படுவதில்லை. அவரின் இந்த rhetoric வெறும் பேச்சு மட்டுமே என்பது பல political analyst-களின் கருத்து.

‘செனட்டர் கெர்ரிக்கு வாஷிங்டனில் நடக்கும் அரசியல் விளையாட்டு நன்றாகத் தெரியும். பல மல்டி-நேஷனல் கம்பெனிகளுடன் இருபது வருடங்களுக்கும் மேலாக அவருக்குத் தொடர்பு இருக்கிறது. காலம் வரும்போது அவரும் அதே விளையாட்டை விளையாடுவார் ‘ என்கிறார் Washington Analysis-ஐச் சேர்ந்த Joe Lieber.

குறிப்பு : இந்தக் கட்டுரையில் காணப்படும் பல தகவல்கள், CNBC மற்றும் கம்ப்யூட்டர் வோர்ல்டின் இணையதளங்களிலிருந்து திரட்டப்பட்டவை.

***

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்