சுகம்

This entry is part of 31 in the series 20030406_Issue

பவளமணி பிரகாசம்


உரிக்க உரிக்க வெங்காயமாய்,
நழுவி நழுவி விலாங்கு மீனாய்,
கரைந்து கரைந்து கற்பூரமாய்,
கரையில் நில்லா கடலலையாய்,
அப்பாவி சீதையின் மாயமானாய்,
பாலைவனத்து கானல் நீராய்
வாழ்வின் பொருளே போவதெங்கே ?
மயக்கி மாயமாய் மறைவதென்னே ?
சிக்கென உனைப் பிடித்தே தீருவேன்
செப்படி வித்தை அதுவென்றாலும்-
நாட்காட்டி தாளுடன் கழிந்து விடாத,
கால சரிதத்தில் காலடி பதிக்கும்,
வெருட்டும் வெறுமையை விரட்டும்,
அமுதசுரபியாய் அனுபவங்கள் நிறைந்த
அருமை வாழ்வும் அருகினில் வருமோ ?
எண்ணியும் பாராத எண்ணற்ற பலன்கள்
என்றும் தருமோ ? அதுதான் சுகமோ ?

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation