அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)

This entry is part of 36 in the series 20090129_Issue

ப குருநாதன்


ஹாங்காங் இலக்கிய வட்டம், அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1
தமிழ்த் தென்றல் திரு.வி.க.

ப குருநாதன்

(2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் திரு. ப.குருநாதன் பேசியதின் சுருக்கம்.)

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும்போது ‘Ideas that Moved the World’ என்ற ஒரு அருமையான ஆங்கில நூலைப் படிக்கின்ற வாய்ப்பினைப் பெற்றேன். கடந்த பல நூற்றாண்டுகளில் தம்தம் மெய்ஞான தத்துவங்களாலும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளாலும் இப்பூவுலகை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்ற பெரிய மேதைகளைப் பற்றிய புத்தகமது. அதன்பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்னால், கடந்த 20-ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய, கொடை நல்கிய மிகப் பெரிய மேதைகளைப் பற்றிய ஒரு கட்டுரையையும் வாசிக்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. இந்த மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் சற்று கூர்ந்து நோக்கி ஒப்பிட்டால், அவர்கள் எல்லாம் தங்களின் உள்ளத்தின் உந்துதலினாலும், சுய முயற்சியாலும், எண்ணற்ற இடர்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே, இந்த உலகம் உயர்வுற உழைத்தவர்கள்; பங்களித்தவர்கள் என்பது தெளிவாகும். இதில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு எந்த ஒரு அரசோ அல்லது ஒரு அரசு சார்ந்த அமைப்போ அல்லது ஒரு நிறுவனமோ எந்த உதவியும் செய்யவில்லை; அவர்களுக்கு ஓரளவேனும் துணை நிற்கவில்லை என்பதும் புலப்படும். மாறாக, அந்த மேதைகளுக்குக் கிடைத்தெல்லாம் தொல்லைகளும் இடையூறுகளும் மட்டுமே.

அதுபோலவே, கடந்த 200 வருடங்களில் தமிழ்நாட்டில் தமிழ் வாழ்ந்தது, வளர்ந்தது, செழித்தது, செப்பமடைந்தது என்றால் அதற்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் தனி மனிதர்களே. அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளும் இன்னல்களும் எதிர்ப்பும் ஏமாற்றங்களும் ஏராளம். அவர்கள் எதிர்கொண்ட ஏளனமும் மிகவும் தாராளம். அவர்களுக்கும் ஒர் அரசோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, மற்ற நிறுவனங்களோ பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. சமயம் சார்ந்த தமிழ் ஒருசில சமைய அமைப்புகளின் உதவியினால் ஓரளவு வளர்ந்தது, வாழ்ந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ் ஓங்க ஓய்வின்றி உழைத்தப் பெரியோர்களே, நண்பர் திரு. மு. இராமனாதன் ஹாங்காங் இலக்கிய வட்ட உறுபினர்களுக்கு அனுபிய மின்னஞ்சலில் காணப்படுபவர்கள். தன்முனைப்பு, தன்முயற்சி, தன்னார்வம், தன்நிதி, தன்உழைப்பு மட்டுமே துணையாய்க் கொண்டு தமிழ் வாழ, வளர, தளராது உழைத்துச் சாதித்த பெருமைக்குரிய பெரியோர்கள் அவர்கள். எந்த நிறுவனத்தின் துணையுமின்றி, தங்கள் பங்களிப்பால், தங்கள் செயல்களால், தங்கள் தொண்டால், தங்கள் படைப்பால் தாங்களே ஒரு நிறுவனாமாகிப் (institution) போந்த பெரியோர்களே அவர்கள்.

அவர்களின் பெயர்ப் பட்டியலில், ஒவ்வொருவரின் பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருந்த, அவரவர் தோன்றி மறைந்த ஆண்டுகள், அவரவர் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பன. சாதாரணமானவர்களுக்கு அவர்களின் தோற்றமும் மறைவும் வெறும் வாழ்க்கைக் குறிப்பு. ஆனால், இப்பெரியோர்கள் வாழ்ந்தது வெறும் வாழ்க்கையல்ல. அவர்களின் தோற்றமும் மறைவும் வெறும் வாழ்க்கைக்குறிப்புகளும் அல்ல. அவைகள் எல்லாம் வரலாறுகள்! எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது தன் மொழியை, தன் மக்களை, தன் கலையை அல்லது தன் கலாச்சாரத்தை தன் தோளிலேற்றிச் சற்றாவது உயர்த்துகிறானோ அல்லது உயர்த்த உண்மையிலேயே எத்தனிக்கின்றானோ, அவன் வாழ்க்கை வரலாறு ஆகிறது. அத்தகைய வரலாறு படைத்த இப்பெரியோர்கள் தமிழகத்தில் அதிகம் கற்றோராலேயே கூடப் பெரிதும் பேசப்படாதிருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு., தமிழர்களின் வெட்கக்கேடு. பகட்டுக்கும், பசப்பிற்கும், பாசாங்கிற்கும் தமிழன் பறிபோவதும், பலியாவதும் அவன் தலையெழுத்தோ என்று கூட சில சமயம் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

வங்காளத்தில் தாகூரைப் பற்றித் தெரியாதவர்கள், கேரளத்தில் வள்ளத்தோளை அறியாதவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், தமிழகத்தில் பாரதியைப் பற்றி சரியாக அறியாதவர்கள், அவர் பாடல்களில் ஒன்றைக் கூட முழுதும் படிக்காதவர்கள் அதிகம்! திருவள்ளுவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள், ஒரு திருக்குறளாவது முழுமையாகத் தெரியாதவர்கள் மிக அதிகம்! நான் சொல்வது மெத்தப் படித்தவர்களையும் சேர்த்துத்தான்! இந்நிலையில், இந்தப் பட்டியலிலேக் காணப்படும் தமிழ்ப் பெரியோர்கள் பெரும்பாலோர் அதிகம் அறியப்படாமல் அல்லது பேசப்படாமல் இருப்பதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?

ஆனால், பட்டியலில் காணப்படும் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் மாரியை ஒத்தவர்கள். பயன் கருதாது, தன்னலமின்றி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு, காரியமே கண்ணாகி இருந்து, தமிழ்த் தொண்டு செய்தவர்கள்; அரும் படைப்புகளைத் தந்தவர்கள். பிற்காலத்திலே நாம் பேசப்படப் போகின்றோம், பாராட்டப்படப் போகின்றோம் என்றெல்லாம் கருதியொன்றும் அவர்கள் தங்கள் செயற்கரிய செயல்களை ஆற்றவில்லை. நம் இலக்கிய வட்டம் அவர்களில் ஒரு சிலரைப் பற்றியாவது ஓரளவாவது பேச, சிந்திக்க ஏற்பாடு செய்தமைக்கு வட்ட அமைப்பாளர்களுக்கும், அதற்கு மூலகாரணமாய் இருந்த நண்பர் திரு. ராஜேஷ் ஜெயராமன் அவர்களுக்கும் நாம் மிகவும் நன்றி பாராட்டக் கடப்பாடு உற்றவர்கள் ஆனோம். இந்தப் பெரியோர்களைப் பற்றி பேசி, இன்று நம் இலக்கிய வட்டம் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொண்டுள்ளது, உயர்த்திக்கொண்டுள்ளது என்றால் அது எந்தவிதத்திலும் மிகையாகாது.

அடுத்தது, இப்பெரியோர்களைப் பற்றிப் பேசி, அறிந்துகொள்வதால் என்ன பயன், என்ன நன்மை என்ற வினா எழக் கூடும். மூதுரையின்படி நல்லோரைப் பற்றி பேசுவதும், நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று என்று சொல்லலாம். அல்லது, திருக்குறள் வழி நின்று, பெரியோரைத் துணைக்கோடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை நாம் பட்டியலிடலாம். ஆனால், உண்மையில் இந்தத் தமிழிப் பெரியோர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதால், அவர்கள் ஆற்றியத் தொண்டைப் பற்றியும், அவர்களின் படைப்புகளைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய செயற்கரிய செயல்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதால், ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய எழுச்சியும், நாமும் சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் உறுதியும் நம்முள் மிகும். நம்மை நாமே உள்நோக்கிப் பரிசோதித்துக்கொள்ள ஒரு உந்துதல் நமக்குக் கிடைக்கும். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும். இங்கே நாம் பேசுவதெல்லாம் வெறும் பேச்சாக, பொழுதுபோக்காக இருந்துவிடக்கூடாது என்பதுவே என் அவா மற்றும் வேண்டுதல்.

இந்தப் பெரியோர்களிலும், தனக்கே உரிய தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையப் பெருந்தகைதான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரும் பாரதியைப்போல் ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர். பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தேசபக்தர், தேசத்தொண்டர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், வணிகக் கணக்காளர், வள்ளலாரைப்போல் சமரச சன்மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர், இயற்கை உபாசகர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக் குரல் கொடுத்து, உழைத்து, சாதித்தும் காட்டியவர். தான் வாழ்ந்த காலத்தில், வசதியின்றி இருந்தாலும், வறுமையிலே உழன்றாலும், தன் புலமைக்காவும், நாவன்மைக்காகவும், தொண்டிற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர்.

****
இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com

****

guru@nhcl.com.hk

Series Navigation

ப குருநாதன்