ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8

This entry is part of 31 in the series 20100312_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Image of Napoleon

“மதம் என்பது கற்பனையில் வந்த ஓர் ஊசி மருந்து (Vaccine of Imagination) ! அம்மருந்து அறிவுக்கு ஒவ்வாத ஆபத்தான நம்பிக்கைகளிலிருந்து காப்பாற்றுகிறது. அறைகுறை அறிவுள்ள ஒரு குரு ஊழியம் செய்யும் ஒருவனை இந்த வாழ்வு வெறும் பயணம் தவிர வேறில்லை என்று சொல்லும் அளவுக்குத் திறமை பெற்றுள்ளான். நன்னம்பிக்கையை மாந்தரிடமிருந்து நீக்கினால்
முடிவாக வழிப்பறிக் கொள்ளைக்காரரை நீ உருவாக்குவாய்.”

நெப்போலியன் (Declaration at the Council of State) (1804)

“நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சாதித்து விட்டோம். பிரான்சுக்கு ஓர் அரசனை நிலைநாட்ட நினைத்தோம். ஆனால் நிலைபெற்றவர் ஒரு சக்ரவர்த்தி.”

ஜார்ஜெஸ் கடவ்தால் (Georges Cadoudal, Royalist Conspirator)

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

Fig. 2
Napoleon & Young Lady

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 3

Young Spy Woman

நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி.

ஹெலினா: போர்முனையில் எப்போதும் வாய்திறந்து பேசுபவை உமது பீரங்கிகள் மட்டும்தான் ! மற்றவை யெல்லாம் அவை பின்னால் அணிவகுத்துச் செல்பவை.

நெப்போலியன்: என்னாசைகள் நிறைவேறும் வரை என் பீரங்கிகள் கண்ணை மூடாது ! வாயை மூடாது ! சுழலும் சக்கரங்களும் ஓயாது ! பய உணர்ச்சி மனிதன் விரும்பிடும் எதையாவது அடையாமல் அவனைத் தடைசெய்கிறதா ? வா என்னோடு, உனக்குக் காட்டுகிறேன் ஒரு கிண்ணப் பிராந்தி வெகுமதிக்கு உயிரையே பணயம் வைக்கும் ஓராயிரம் கோழைகளை ! நீ நினைக்கிறாயா பட்டாளத்தில் மனிதனை விட தைரியமுள்ள மாதர் இல்லை என்று ? மாதரின் மதிப்பும் தகுதியும் மனிதனை விட மிகையானது ! பயமில்லாமல்தான் நீயும் உன் இரட்டைத் தமையனும் எங்கள் அரசாங்கக் கடிதங்களைக் களவாடி என்னைத் திண்டாட வைத்தீர் ?

ஹெலினா: (சிரித்துக் கொண்டு) அப்போது நான் தைரியசாலி என்று பாராட்டுகிறீரா ? அல்லது நீங்கள் கோழையாகி விட்டீர் என்று காட்டுகிறீரா ?
நெப்போலியன்: நான் மகா தீரன் என்று சொல்லமாட்டேன் ! மற்றவர் அப்படிச் சொல்லுவதைக் கேட்கும் என் காதுகள் ! அது உண்மையாக இருக்க வேண்டும் ! இல்லாவிட்டால் பிரென்ச் ஏகாதிபத்தியம் இத்தாலி வரை வந்திருக்காது ! நான் இப்போது பயத்தைப் பற்றி உனக்கு விளக்கம் தர முடியாது !

ஹெலினா: நீங்கள் ஒரு தீரர், வீரர், சூரர் ! அதை நான் சொல்வேன் ஆயிரம் முறை ! ஐரோப்பிய வரலாற்றில் மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு எழுந்த போர்த் தளபதி நீங்கள்தான் !

நெப்போலியன்: ஆசியாவின் மீதும் எனக்கோர் கண்ணுள்ளது ! அதற்குத்தான் சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டமும் உருவாகி வருகிறது ! இந்தியாவில் பிரிட்டீஷ் ஆதிக்கத்தை நான் ஒழித்தாக வேண்டும்.

ஹெலினா: நீங்கள்தான் உலகத்தை விடுவிக்க அளிக்க வந்த ஊழ்விதி மனிதர் !
நெப்போலியன்: ஊழ்விதி மனிதன் ! நல்ல பட்டப் பெயர் ! ஆனால் அப்படி ஒருவன் பூமியில் பிறப்பதில்லை !

ஹெலினா: ஆமாம் உதிப்பதில்லை ! ஆனால் உருவாக முடிகிறது ! அசுர வல்லரசுதான் பிறரது தலைவிதியை எழுதி வைக்கிறது ! எப்படி நீவீர் மாவீரராக மாறினீர் ?


Fig. 4
Napoleon’s Cannon War

நெப்போலியன்: எப்படி நான் மாவீரன் ஆனேன் என்பது எனக்குத் தெரியாது. என் படையாட்கள்தான் என்னை வெற்றி வீரனாய் ஆக்கியவர் !

ஹெலினா: இல்லை ! நீங்கள்தான் பச்சை மனிதரைப் படை வீரராய் மாற்றினீர் ! லோதிப் போரில் வெற்றி அடைந்தீர். அந்த வெற்றி உங்களுக்கா ? அல்லது வேறு யாருக்குமா ?

நெப்போலியன்: ஆம் எனக்குத்தான் ! (சற்று சிந்த்தித்து) இல்லை, இல்லை ! பிரென்ச் குடியரசு மக்களின் ஊழியன் நான் ! அந்நாட்டின் பூர்வீக வரலாற்று நாயகர் வைத்த தடத்தில் நடந்து வந்தவன் நான் ! நான் வெல்வது குடிமக்களுக்கு ! என் நாட்டுக்கு ! வெற்றி எனக்காக இல்லை !

ஹெலினா: அப்படியானால் நீவீர் ஒரு பெண்மைத்தன தீரர்தான் !

நெப்போலியன்: (சற்று கோபத்துடன்) என்ன ? பெண்மைத்தனமா ?
ஹெலினா: என்னைப் போல ! (வருத்தமாக) அரசாங்கக் கடிதங்களை நான் அபகரித்தாகச் சொல்கிறீர் ! அப்படியானால் அது நான் எனக்காகச் செய்தேனா ? அல்லது நாட்டுக்காகச் செய்தேனா ?

நெப்போலியன்: உன் வீரத்தைக் காட்ட நீ செய்தது ! உனக்காகச் செய்தது நீ !
ஹெலினா: ஜெனரல் ! உங்கள் கடிதங்களால் தனிப்பட்ட எனக்கு எந்தப் பயனும் உண்டாகாது ! அப்படி அவை எனக்குப் பயன் தந்தால் நான் உங்களைப் பார்க்கத் தைரியமாய் இந்த விடுதிக்கு வந்திருப்பேனா ? எனது தைரியம் ஓர் அடிமைத்தனமே ! எனக்கு அதில் பலாபலன் ஏதுவும் இல்லை !

நெப்போலியன்: (வெறுப்புடன்) அப்படியானால் ஏன் எங்கள் கடிதங்களைப் பறித்துச் சென்றாய் ?

ஹெலினா: கடிதங்களைக் களவாடியன் என் சகோதரன் ! என்னை ஓர் உதாரணத்துக்கு எடுத்துச் சொன்னேன்,

நெப்போலியன்: மறுபடியும் பொய் பேசுகிறாய் பெண்ணே ! எனக்குக் குழப்பத்தை உண்டாக்கி உள்ளூரக் குதூகலம் அடைகிறாய் நீ !

ஹெலினா: ஒருவனை நான் நேசித்தால், அவனும் என்னை நேசித்தால் மட்டுமே நான் துணிந்து எதையும் செய்வேன் ! தைரியமாய்ச் செய்வேன் ! பொய் சொல்வேன் ! வஞ்சம் செய்வேன் ! ஆனால் உண்மை சொல்வேன் பொய்யை மறைக்க !

நெப்பொலியன்: இல்லை பெண்ணே ! பொய் சொல்கிறாய் நீ உண்மையை மறைக்க ! நீ சொல்வது எது உண்மை, எது பொய்யென்று என்னால் அறிய முடியவில்லை !

ஹெலினா: அது உங்கள் இயலாமை ! எனக்குள்ள ஓர் வல்லமை ! நீங்கள் எத்தனைப் போரில் வெற்றி பெற்றாலும் பெண்ணிடம் தோற்றுத்தான் போகிறீர் ! குடிமக்களுக்காக வெற்றி பெறுவதாய்க் கூறும் நீங்கள் உண்மையில் உங்கள் தலையில் கிரீடத்தை ஏற்றிக் கொள்கிறீர் ! குடிமக்கள் தலையில் முடி சூட்டுவதில்லை ! முத்திரை அடித்த முன்மாதிரி பிரென்ச் மானிடன் நீங்கள் !

நெப்பொலியன்: கீரிடம் ஜிகினா ஒட்டிய ஓர் மர வளையம் ! கீழே குனிந்தால் விழுந்து விடும் ஒரு போலித் தோரணம் ! நிலையற்றது ! நான் பிரென்ச் மானிடன் இல்லை !

ஹெலினா: (ஏளனமாய்) நீங்கள் வெற்றி பெற்றது நாட்டுக்கு என்று சொல்லவில்லையா ? அதனால் உங்களைப் பிரெஞ்சுக்காரர் என்று கூறினேன் !

நெப்பொலியன்: (வெகுண்டு) என் பொறுமையைச் சோதிக்கிறாய் பெண்ணே ! நானொரு பிரெஞ்ச் குடிமகன் ! ஆனால் பிரான்சில் பிறந்தவன் அல்லன் !
ஹெலினா: என்ன ? நீங்கள் பிரான்சில் பிறக்க வில்லையா ? பின் எதற்காக பிரான்சுக்காக போரிடப் போகிறீர் ? எனக்குப் புரியவில்லை ஜெனரல் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 11, 2010)

Series Navigation