நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

சின்னக்கருப்பன்


<**

எனது கட்டுரை அரை மணி நேரத்தில் எழுதப்பட்டது. அதில் இவர் சொல்வது போன்ற உழைப்பெல்லாம் இல்லை. ஏதோ செய்நேர்த்தி இருப்பதாகச் சொல்வதற்கு நன்றி. மனதில் உள்ளதுதான் என் எழுத்தில் வருகிறது. பொய் எழுதுவது என்றால் தான் மிகவும் யோசிக்க வேண்டும். ஒரு கட்டுரையை எழுதும்போது அது இந்துத்வ பாசிசத்துக்குத் துணை போகிறதா அல்லது கம்யூனிஸ பாசிசத்துக்குத் துணை போகிறதா, இஸ்லாமியப்பாசிசத்துக்குத் துணை போகிறதா அல்லது நீதிக்கட்சி பிராம்மண எதிர்ப்பு பாசிசத்துக்குத் துணை போகிறதா என்றெல்லாம் யோசித்து எழுதுவதில்லை நான். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றார் பாரதியார். என் வாக்கினிலே ஒளி இல்லை இருட்டுதான் இருக்கிறது என்று குழலினி கருதினாலும் எனக்கு வருத்தமில்லை. இவ்வாறு ஒருவர் சொல்லிவிடுவாரே என்று மனதில் தோன்றுவதை எழுதாமல் இருக்கவியலாது.

மேலும் என் பெயரில் ஜெயமோகன் எழுதுவதாகச் சொல்லி ஜெயமோகனுக்கு அடி வேறு. ஜெயமோகன் அளவுக்கு நான் எழுதினால் நான் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். நான் ஜெயமோகனுக்கு முன்பிருந்தே பிரபலமில்லாமல் திண்ணையின் ஒரு மூலையில் உட்கார்ந்து என் கருத்துக்களைச் சொல்லி வருகிறேன். பாவம் ஜெயமோகன். ஆனால், ஜெயமோகன் இந்து சமய ஆதரவாளர் அல்லர். எனக்குத் தெரிந்து, அவர் சாக்கிய ஆதரவாளர். நான் தெளிவாகவே வெகுகாலமாகவே இந்து என்ற அடையாளத்துடனும், சாக்கியம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்றும் எழுதியே வந்திருக்கிறேன்.

**>

<**

மேலும் நான் நீதிக்கட்சி இயக்கம், இடதுசாரி சிந்தனை, செமிட்டிய மத சிந்தனைகள் ஆகியவற்றை எதிரிகளாகக் கருதுவதில்லை. அவைகளுக்கு ஒரு காலத்தின், ஒரு பூமிக்கோளத்தின் பகுதித் தேவைகள் இருக்கின்றன. (they are geographical necesscities which are particular to a time and place). பூமிக்கோளத்தின் ஒரு பகுதிக்குப் பொருந்தும் விஷயங்களை கண்மூடித்தனமாக இன்னொரு இடத்தில் பயிரிட்டு ஒட்டுவேலை செய்வதைத்தான் விமர்சிக்கிறேன். சொல்லப்போனால், நான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் எழுதி வந்திருக்கிறேன்.

***>

<*

சிலப்பதிகாரமும், அக்கமாதேவியும் மீராவும் ஆண்டாளும் திருக்குறளும் இந்து/இந்தியப் பாரம்பரியத்தில் வராமல் எந்தப் பாரம்பரியத்தில் வந்தவை ? முஸ்லீம் பாரம்பரியத்திலா அல்லது கிரிஸ்துவப் பாரம்பரியத்திலா அல்லது இடதுசாரி மார்க்ஸியப் பாரம்பரியத்திலா ? இந்து /இந்தியா என்பதனை ஒரே பாரம்பரியமாகத்தான் பார்க்கிறேன். இந்துப் பாரம்பரியத்திலிருந்து வேறுபட்டதாக இந்தியப் பாரம்பரியம் என்ற ஒன்றை உருவாக்கி அதனுள் முஸ்லீம்களையும் கிரிஸ்துவர்களையும் கொண்டுவந்து தேசம் கட்டுவதற்காக காங்கிரசும் பாரதிய ஜனதாவும் முயற்சி செய்கின்றன. நான் அப்படி நம்பவில்லை. இந்தியப்பாரம்பரியம்தான் இந்துப்பாரம்பரியம் இந்துப்பாரம்பரியம்தான் இந்தியப்பாரம்பரியம் என்று நான் வேறொரு சமயத்தில் நேரம் கிடைக்கும்போது வாதிட முயல்கிறேன்.

*>

<**

இந்துமதத்தில் புரூடிஸப் போக்கு இருந்ததற்கு ஒரு ஆதாரமும் காட்டாமல், ஏன் திராவிட இயக்கங்கள் கண்ணகியை முன்னிலைப் படுத்தின என்று குழலினி புரிந்துகொண்டதை கூறிவிட்டு, ‘புரூடிஸப் போக்கு யாருக்கு இருந்தது என்பதைச் சிந்திக்க வேண்டும் ‘ என்று கேட்கிறார். நான் என்ன சொல்வது ?

இந்து மதத்தில், வெள்ளையர் வருகைக்கு முன்னர் இஸ்லாமியர் வருகைக்கு முன்னர் இந்தியாவில் புரூடிஸப் போக்கு இருந்தது என்பதற்கு ஆதாரங்களைத் தாருங்கள். நான் படிக்கிறேன்

கம்பரசம் எழுதிய அண்ணா, அதன் முன்னுரையிலேயே, இதனை எழுதச்சொன்னது பெரியார்தான் என்று குறிப்பிடுகிறார். கம்பரசம் என்ற புத்தகத்தில் அண்ணா என்ன என்னவற்றை எழுதியிருக்கிறார் என்று சற்றே படித்துப்பாருங்கள். எழுதியது கம்பர் என்னும் ஆண். குறிப்பிட்டது சீதை, கைகேயி போன்றோரின் உடல் வர்ணனை. இதுவா கடவுள் என்று கேட்கிறார் அண்ணா. இதைத்தான் பெரியாரும் பல புராணங்களைக் காட்டி கேட்டார்.

என்னுடைய கேள்வி, எதனால் கேட்டார் என்பது ? கடவுளர்கள் பற்றிய பெரியார் அண்ணா போன்றோரின் எதிர்பார்ப்பு எதனை மாதிரியாகக் கொண்டது ? கடவுளர்கள் காமம் காதல் இன்றி ஒற்றை ஆளாக வாழ்ந்து மடியவேண்டும் என்ற எதிர்பார்ப்பினாலா ?

மேலும் செமிட்டிக் என்ற வார்த்தை இஸ்லாம், கிரிஸ்துவம், யூதம் அதன் வழி வந்த இதர மதக்குழுக்கள், அவற்றின் உட்பிரிவுகள் அனைத்தையும் குறிப்பிட பலராலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை. நான் செமிட்டிய உளவியல் என்று கூறுவது இவை அனைத்தையும் குறிப்பிட்டுத்தான். மேலும், மார்க்ஸியம் ஒரு செமிட்டிய உளவியல் கொண்ட ஒரு மதம் என்று பலராலும் இன்று விமர்சிக்கப்படுகிறது. வில் துராண்ட், மார்க்ஸியத்தை அப்படித்தான் வரையறுக்கிறார். செமிட்டிய உளவியலை அப்படியே வைத்துக்கொண்டு, கடவுளை மட்டும் வெளியே எடுத்துவிட்ட மதம் என்று அதனை வரையறுக்கிறார். சமீபத்தில் பல சமூகவியலாய்வாளர்கள் சிந்தனையாளர்கள் இதனை இவ்வாறு விமர்சித்திருக்கிறார்கள். (அவர்கள் என்னைப்போன்ற இந்து அல்லர், அவர்கள் கோல்வல்கர் வழி வந்தோருமல்லர்). மேலும். இந்துமதத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் கிரிஸ்துவ இஸ்லாமிய யூத மதங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா என்ன ?

மேலும் இந்துமதத்தை சர்வரோக நிவாரணி என்று நான் குறிப்பிட்டதாகவும் எனக்குத் தோன்றவில்லை. மேலும் நான் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டது இந்து மத உளவியலை புருடிஸ்ட் என்று வரையறுக்க முடியாது என்பதே. அதற்குப் பதிலாக இடதுசாரிகள், மிஷனரிகள், நீதிக்கட்சி இயக்கதினர் கடந்த 100 வருடங்களாகப் இந்துமதத்தை விமர்சித்து பாடி வரும் அதே பழைய பாடலை மீண்டும் பாடியிருக்கிறார் குழலினி. இதற்கு ரிக் வேதத்தை ஆங்கிலத்துக்கு ஜெர்மானியர் மொழிபெயர்த்ததை தமிழுக்கு மொழி பெயர்த்து நிரூபிக்க முனைகிறார்.

மேலும் தமிழ்நாட்டிலும் இந்தியாவெங்கும் இருக்கும் இந்துக்கள் வேதங்களை தினந்தோறும் படித்துப் பொருளுணர்ந்து விவாதித்து இந்துக்களாக இருக்கவில்லை. அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள், அவ்வளவுதான். மெத்தப்படித்தவர்கள் இத்தனை வழிபாட்டு முறைகளையும் நியாயப்படுத்துகிறார்கள். நியாயப்படுத்தாமல் இது தவறு அது சரி என்று சொல்பவர்களை மக்கள் உதாசீனம் செய்கிறார்கள். அய்யா வைகுந்தர், பஸவண்ணா, கபீர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ராமானுஜர் சங்கரர் மாத்வர் போன்ற இந்துத்துறவிகள் இந்து சமூகத்தில் இருக்கும் குறைகளை தவிர்க்க முயல்கிறார்கள். சில வேளைகளில் வெற்றி பெறுகிறார்கள். சில வேளைகளில் வெற்றி பெற முடிவதில்லை. சமூகக் காரணிகள் அவர்களை வெற்றிபெற அனுமதிப்பதில்லை. இருப்பினும் அவர்கள் இந்து சமூகத்தில் உள்ளவர்களுக்கு பரந்த நோக்கம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை தொடர்ந்து செய்துகொண்டே செல்கிறார்கள்.

இந்துமதம் என்பது செமிட்டிய மதங்கள் போல ஒரு புனிதப்புத்தகம் மட்டுமே என்ற அடிப்படையில் இல்லை என்பது கூட இவ்வாறு விமர்சிப்பவர்களுக்குத் தெரிவதில்லை. செமிட்டிய மனத்தில் ஆழ்ந்து படித்தவர்கள் அது போல இது இல்லை என்று புரிந்து கொள்ளாமல், அதுபோலத்தான் இது என்று வரையறுத்துக்கொண்டு சுத்தியல் வைத்திருப்பவன் பார்ப்பதை எல்லாம் ஆணியாக நினைத்து ஓங்கி அடிப்பதுபோல அடித்துகொண்டிருக்கிறார்கள். இந்துமதம் தொடர்ந்து பரிணமித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு இந்துவின் ஆன்மீக உணர்வும் இதில் இணைய அது தன்னை வளப்படுத்திக்கொண்டுன இந்துக்கள் அனைவரையும் அது வளப்படுத்திக்கொண்டே செல்கிறது. தலைக்காவிரியாய் தோன்றும் சிறு அருவி ஆயிரம் கிளை நதிகளை சேர்த்துக்கொண்டு பொன்னி நதியாய் பெருக்கெடுத்து அனைவரையும் வளப்படுத்தும்போது, பெரியாரும் வெள்ளைக்காரர்களும், இடதுசாரிகளும் அதன் கரையில் நின்று இந்தத்துளி தலைக்காவிரியில் உருவாகவில்லை, இதற்கு ஆதாரமில்லை இது இந்துமதமே அல்ல, இது வெறும் உப்புக்கரிக்கும் சாக்கடை என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதனாலேயே நான் மறைகள், உபநிடதங்கள், திருமூலர் திருமந்திரம், பிரபந்தம், திருவாசகம் என பெருகும் இந்த ஆன்மீக கலந்துரையாடலை புரிந்துகொள்ளும் இந்துத்துறவிகள் எந்தவித மனமாச்சரியமும் இன்றி பிரபந்தத்தை திராவிட வேதம் என அழைக்கிறார்கள். இந்த டைனசார் இந்துமதம் ஏகே47 பிள்ளையாரையும், என்விரோன்மெண்டல் பிள்ளையாரையும் லாப்டாப் பிள்ளையாரையும் உருவாக்கும்போது, இதற்கு புராணங்களில் ஆதாரமில்லை, இது ரிக் வேதத்தில் இல்லை என்று இந்த செமிட்டிய மனம் கொண்டவர்கள் புலம்புகிறார்கள். ஆனால் லாப்டாப் பிள்ளையாரை , ஒரு தமிழக விவசாயி இவர்களை விட மிக எளிதாகவே புரிந்து கொள்கிறார்.

அதனாலேயே அரவாணிகள் மற்ற மதங்களில் ஒதுக்கப்பட்டதுபோல இந்துமதத்தில் ஒதுக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பெரும் தியாகம் செய்த அரவாணின் மனைவியராக அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஈசனையே அர்த்தநாரீஸ்வரராக உருவாக்கி, ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கும் பெண்மையையும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் ஆண்மையையும் நாம் போற்ற வைக்கிறார்கள். இன்றைக்கு சம்னம் மவுசி போன்றோர் அரவாணிகள் அல்லாத பெரும்பான்மை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தம் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தியாவில்தானே நடந்தது ?

ஆனால் உலகமெங்கும் அரவாணிகள் ஏன் கிண்டல் செய்யப்படுகிறார்கள் ? தென்னாப்பிரிக்க குங் பழங்குடி இன மக்களிலிருந்து, அதி நாகரிக அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் வரை ஏன் அரவாணிகளும், இப்படிப்பட்ட சமப்பாலுறவு தேர்வெடுக்கும் சிறுபான்மையினரும் அவமதிக்கப்படுகிறார்கள். இதன் காரணம் நமது வரலாற்றில் இருக்கிறது. அது குங் இன மக்களாக இருந்தாலும் சரி, போரில் புறமுதுகிட்டு ஓடாத ஆண் மகனை வடிவமைக்கும் தமிழ்க் கலாச்சாரமாக இருந்தாலும் சரி, தன் இனம் வாழ தன்னை போரில் புறமுதுகிட்டு ஓடாமல் போர் புரியும் ஆண் மகனை வடித்தெடுக்க வேண்டிய கடமை அந்த இனத்துக்கு இருக்கிறது. புறமுதுகிட்டு ஓடுவதை போற்றும் இனம் வாழுமா, நீங்களே சிந்தியுங்கள். அப்படி ஒரு இனம் இருந்திருந்தால் அது மறைந்திருக்கும். நாம் எவ்வாறு புவியியலின் அடிமைகளோ அதே போல வரலாற்றின் அடிமைகளும் கூட. அப்படிப்பட்ட ஒரு வரலாறு நம்மை ஆண் மகனை விழுப்புண் பெற்று மடியும் ஆண்மகனாகவும், பெண்ணை போரில் புறமுதுகிட்டு ஓடினான் தன் மகன் என்ற சொல் கேட்டு பால் கொடுத்த முலையை அறுத்தெறியும் பெண்மையாகவும் வடித்தெடுக்கிறது. அதனாலேயே பேடி என்பது ஆண் உருவில் இருக்கும் பெண் என்ற விவரணையும் தோன்றுகிறது. இருப்பினும் இந்த சமூகக் காரணங்கள் பொருட்டும் அரவாணிகளை சமூகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழைவுதானே அர்த்தநாரீஸ்வரரை உருவகிக்கிறது ? புலையர்களும் நந்தர்களும் சமூகக் காரணங்களால் கீழ்ப்பட்டிருந்தாலும், அவர்களையும் அணைத்துக்கொள்ள வேண்டுமென்ற இந்து துறவிகளின் விழைவுதானே சங்கரரை புலையர் மூலம் அவமானப்படுத்தியது ? நந்தனை திருநாளைப்போவாராக உருவகித்தது ? சாக்கியநாயனாரை உருவாக்கியது ?

**>

<** காஞ்சி பரமாச்சாரியார் உளறினால் அதற்கு நான் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும் ? அவரும் அடிமை மனப்போக்கில்தான் இருந்திருக்கிறார் என்பது அவர் தன் இளமைக்காலத்தில் எங்கே படித்தார் என்ன படித்தார் என்று தெரிந்துகொண்டால் புரியும்.

சமீபத்தில் இந்து என்ற மதமே வெள்ளைக்காரன் உருவாக்கியதுதான் என்று பேசுபவர்கள் ஆங்கிலம், தமிழ், நீதிக்கட்சி இயக்கத்தினர் என்று பரந்து இருக்கிறார்கள். இந்த மதத்துக்கு வயதே இருநூறு வருடமென்றால், எந்த மதத்தை எதிர்த்து புத்தர் தன் வழியை உருவாக்கினார் ? எந்த மதத்தைக் காப்பாற்ற பக்தி இயக்கம் தோன்றியது ? சாக்கியம் சமணம் அல்ல நம் வழி என்று கூறியவர்கள் எந்த வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள் ? அந்த வழியின் பெயரென்ன ? எந்த மதத்தின் கோவில்களை சோழ அரசர்கள் இந்தோனேஷியத் தீவுகளில் (கடாரம் சுமத்திரா) விஷ்ணு சிவன் உருவங்களோடு எழுப்பினார்கள் ?

***>

<***

இன்னொரு அபத்தம், பக்தி இயக்கம் என்பதே வைதீக வேதாந்த மரபிற்கு எதிர்வினையாக தோன்றியது என்று இவர் எழுதுவது. வைதீக வேதாந்த மரபினை எதிர்த்து எந்த பக்தி இயக்கத்தின் பாடலாவது இருக்கிறதா ? சாக்கியர்களுக்கும் சமணர்களுக்கும் அவர்களது கொள்கைக்கும் எதிராக பல பாடல்கள் தமிழக பக்தி இயக்கத்தின் பாடல்களில் இருக்கின்றன. எந்த இடத்திலாவது பார்ப்பனர்களை இந்தப் பாடல்கள் திட்டியிருக்கின்றனவா ? இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன். சரி வைணவராகவும் சைவராகவும் இவர்கள் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். உண்மைதான். ஆனால் வைணவத்தையும் சைவத்தையும் எதிரெதிர் கொள்கை கொண்டதாகவும் ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எந்தப் பாடல்களாகவது இருக்கின்றனவா ? ஆனால் இருவரது பாடல்களிலும் ஏன் சமணத்துக்கும் சாக்கியத்துக்கும் எதிரான வரிகள் காணப்படுகின்றன ? இதன் பொருள் சைவமும் வைணவமும் சகோதர அல்லது ஒரே மதத்தின் இரு பகுதிகளாகப் பார்க்கப்பட்டதா ? ஷண்மதம் என்று சூர்யம், காணாபத்தியம். சைவம், சாக்கியம் வைணவம், கெளமாரம் என சங்கரர் நிறுவியது எந்த சமயத்துள் ? இது தெரியாமல் முன்னாள் சங்கராச்சாரியார் உளறியிருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் ? மேலும் பெரியார் மட்டும்தான் உளறுவதற்கு உரிமை பெற்றவரா என்ன ? பெரியாரிலிருந்து சங்கராச்சாரியார் வரை எல்லா இந்துக்களுமே உளறுவதற்கு முழு உரிமை பெற்றவர்கள்.

நான் கேட்டது எந்த இடத்திலாவது காமப்பாடல்களை எழுதியதற்காக பெண்கள் கொளுத்தப்பட்டிருக்கிறார்களா என்று. குழலினி கூறுவதோ, சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று. சமணத்துறவிகளில் ஒருபாலார் பெண்கள் என்பதால், நான் பெண்துறவிகள் ‘இந்துமதத்தால் ‘ கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள் என ஒத்துக்கொள்ளவேண்டும் எனக் கோருகிறார். உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. சரி பெண் துறவிகள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் கூட, அதனை நான் ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், காமப்பாடல்களைப் பாடியதற்காக, இந்துமதப் புரூடிஸத்தின் காரணமாக அவர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று எப்படி ஒப்புக்கொள்வது ?

இங்கே யாரையேனும் காம வெறுப்பாளர்கள் என்று சொல்லவேண்டுமென்றால் அது சமணர்களும் சாக்கியர்களும்தானே ? இந்துக்கள் காம வெறுப்பாளர்கள் என்பதற்கு எங்கே ஆதாரம் ?

***

***

இனத்தூய்மை பேணல் என்ற அபத்தமான ரேஸிஸ்ட் இனவாத கருத்தை ஆங்கில மற்றும் ஜெர்மானியர்களிடமிருந்து கடன் வாங்கி இந்து சமூகத்தின் மீதும் இந்து மதத்தின் மீதும் திணிக்கும் (இடதுசாரி, மிஷனரி, நீதிக்கட்சி இயக்க) வேலையை தொடர்ந்து செய்கிறார் குழலினி. எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் இவர்கள் இதுவரை நடந்திருக்கும் எந்த ஒரு மானுடவியல் ஆய்வுகளையோ, அறிவியல் ஆய்வுகளையோ, அல்லது விமர்சனக்கருத்துக்களையோ படித்ததில்லை. அது மட்டுமல்ல, நம் ஊர் கோவிலில் என்ன நடக்கிறது என்ற அரைகுறை அறிவோ அதனை ஆய்வுப்போக்குடன் அணுகும் நேர்மையோ கூட இவர்களுக்கு இல்லை. வெள்ளைக்காரன் வாந்தி என்பது ஓரளவுக்கு உண்மையென்றாலும் இது பழைய வெள்ளைக்காரனின் பழைய வாந்தி. அதனை தொடர்ந்து மறு உபயோகம் செய்து செய்து அதுவே உண்மை என்ற அளவுக்கு மூளை மழுங்கிவிட்ட அறிவுஜீவிகள் நிறைந்த கூட்டம் இது.

சாதீய அடுக்குமானத்துக்கும் தீண்டாமைக்கும் இனத்தூய்மை பேணலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை கடந்த 50 வருடங்களில் நடந்திருக்கும் மானுடவியல் ஆய்வுகளைப் பார்த்திருந்தாலே தெரியும். சாதிய அடுக்குமானத்துக்கு அந்த சமூகம் பெரிய விவசாய அடிப்படை சமூகமாக இருக்கிறதா என்பதும், அது எவ்வளவு மக்களைப் பேணவேண்டி இருக்கிறது என்பதுமே முக்கியம். வேட்டையாடி தின்னும் சமூகம் (hunter gatherer society) ஈகாலிட்டேரியனாகத்தான் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. அது விவசாயத்தையும் பெரும் அணைகளையும், கருவிகளையும் உருவாக்கவேண்டிய தேவை வரும்போது, அதன் மக்கள்தொகை அதிகரிக்கும்போது நடக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளைத் தீர்க்கவும் பல மக்களை விவசாயத்திலிருந்து நிரந்தரமாக விடுவித்து பரம்பரையாக கருவி உற்பத்தி செய்பவர்களாகவும், பரம்பரையாக சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்துபவர்களாகவும், பரம்பரையாக அரசர்களாகவும் ஆன சமூகமாக விரிகிறது. இதுவே தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிலிருந்து தென்னமெரிக்க அரசுகளிலிருந்து ஹவாய் தீவுகளிலிருந்து இந்தோனேஷியத் தீவுகளிலிருந்து உலகமெங்கும் இருக்கிறது. இதற்கும் இனத்தூய்மை என்ற யூத எதிர்ப்பு, கறுப்பின எதிர்ப்பு வாதத்துக்கும் என்ன சம்பந்தம் ? சாதிய அடுக்குமானத்துக்கும் தீண்டாமைக்கும் நமது முந்தைய விவசாயம் சார்ந்த வாழ்க்கையே காரணம், அதற்கு பார்ப்பானையும் இந்துமதத்தையும் காரணமாகச் சொன்னது காலனியாதிக்கக் காலத்து பாமரத்தனம். (நேரம் கிடைத்தால் ஜேரட் டைமண்ட் அவர்கள் எழுதிய கன்ஸ் ஜெர்ம்ஸ் ஸ்டால் புத்தகம் படித்துப்பாருங்கள்).

இனத்தூய்மை இந்துமதத்துக்கு முக்கியமாக இருந்திருந்தால், கறுப்பு கண்ணன், தன் தங்கை கறுப்பு பார்வதியை பொன்னார் மேனியனான ஈசனுக்கு வருடந்தோறும் மதுரையில் திருமணம் செய்விப்பானா ? இனத் தூய்மை முக்கியமாக இருந்திருந்தால், கறுப்பு கிருஷ்ணன் வடக்கிலும் பொன்னார் மேனியன் தெற்கிலும் இஷ்ட தெய்வங்களாக இந்துக்களால் கொண்டாடப்படுவார்களா ? காலனியாதிக்கக் காலத்தில், இந்து மதப் புத்தகங்களை ஆங்கில மொழியாக்கம் செய்த இனவெறி ஜெர்மானியர்கள், காமாலைக்கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாக, பார்க்கும் இடமெல்லாம் இனவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை நாமும் ஒப்புக்கொண்டு இன்னும் எவ்வளவு நாள் வாந்தி எடுக்கப்போகிறோம் ?

**

இன்று நவீனப்போர் ஏகே47இன் டிரிக்கரில் இருக்கிறது. அணுகுண்டின் ஸ்விட்ச்சில் இருக்கிறது. இங்கே ஆண்மகனின் உடல் வலிமை முக்கியமல்ல, அதனாலேயே ஆண்மையை அவ்வாறு கட்டமைக்க வேண்டிய தேவையும் இல்லாதிருக்கிறது. பெண்மையை அப்படி கட்டமைக்க வேண்டிய தேவையுமில்லாதிருக்கிறது.

இந்து என்றாலே ஸ்வஸ்திகாவை நினைத்துப்பார்க்கும்படி பழக்கப்பட்டுவிட்ட மனிதர்கள் என்னைத் திட்டுவது எனக்கு ஒரு கஷ்டமான விஷயமாக இல்லை. பழகிவிட்டது. ஆனால், அவ்வாறு திட்டும்போது கூடவே ஆதாரங்களையும் குறிப்பிட்டுத் திட்டினால், என் அறிவை சற்றே அதிகரித்துக்கொள்ள உதவும்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளுக்கு வணக்கம் செலுத்தி நட்புடன்

சின்னக்கருப்பன்

**>

karuppanchinna at yahoodotcom

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்