தவிக்கிறாள் தமிழ் அன்னை !

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அமரர் தமிழ்வாணன் ஒரு முறை சொன்னார்: ‘ பலரும் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழை வைத்து இவர்கள்தான் வளர்ந்துகொண்டி ருக்கிறார்கள்! ‘ என்று. இது பேருண்மையாகும். ஆனால் தமிழை வைத்து இந்நாளில் வளர்ந்து கொண்டும் வாழ்ந்துகொண்டும் இருப்பவர்கள் – ‘தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன், என் தாயை நேசிப்பதைவிடவும் நான் தமிழன்னையையே அதிகமாக நேசிக்கிறேன் என்றெல்லாம் அளக்கும் இவர்கள் ‘ – உண்மையிலேயே அப்படிப்பட்டவர்கள்தானா என்றால் – அந்தோ! – அறவே இல்லை என்கிற பதிலைத்தான் சொல்லவேண்டிய திருக்கிறது.

இக்கட்டுரையை எழுதுகிறவள் தமிழில் புலமை பெற்றவள் அல்லள். ஆனால் தமிழைப் பிழையின்றி எழுத முயல்பவள். அப்படி எழுதும் ஆர்வம் உள்ளவள். இக்கட்டுரையை எழுதுவதற்கு இதைத்தவிர பிற தகுதி வேறேதும் இல்லாதவள். ஆனால், ‘ தகுதியின் அடிப்படையிலா இன்று இந்த நாட்டில் எல்லாரும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் ? ‘ என்கிற வசதியான கேள்வியைத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டபின்- அப்படி ஒரு நிலை இன்றில்லை எனும் பதிலையும் சொல்லிக்கொண்டபின் – துணிச்சலோடு இதை எழுதமுற்பட்டவள். (இக்கட்டுரையில் இருக்கக்கூடிய இலக்கணப் பிழைகளைத் தமிழ்ப் புலவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுபவள்.)

இன்று நம் நாட்டில் வெளியாகும் தமிழ் இதழ்களைப் படிக்கும் உண்மையான தமிழ்ப் பற்று உள்ளவர் நெஞ்சங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் மலிந்துள்ள பிழைகள் எண்ணற்றவை. கல்வி கற்பிக்கும் மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும், இல்லாவிடில் தமிழ் அழிந்து போகும் என்று பத்திரிகைகளில் தமிழுக்கு வக்காலத்து வாங்கி எழுதப்படும், கட்டுரைகளிலும் தலையங்கங்களிலும் எண்ணற்ற பிழைகள்! ‘க் ‘ , ‘ச் ‘, ‘ப் ‘ ஆகிய சந்தி எழுத்துகள் விடுபட்டுப் போவது பற்றியோ, இருக்கக்கூடாத இடங்களில் இருப்பது பற்றியோ இவர்களுக்குக் கவலையே கிடையாது. அடுத்தாற்போல் ஆங்கிலத்தில் வெளியாகும் இதழ்களையும் பாருங்கள். அவற்றில் பிழைகளே தென்படுவதில்லை. தவறற்ற மொழிநடைக்கும் இலக்கணப் பிழைகள் அறவே இல்லாமைக்கும் புகழ் பற்ற ஓர் ஆங்கில இதழில் இப்போது கொஞ்ச நாள்களாகத்தான் ஓரிரு பிழைகள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. ஆயினும். மொத்தத்தில், தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒப்பிட்டால், ஆங்கிலப் பத்திரிகைகள் மிகச் சிறப்பான முறையில் வெளியாகின்றன என்று சொல்லலாம்.

‘ஒரு ‘ என்பதை எங்கெங்கு எழுத வேண்டும், ‘ஓர் ‘ என்பதை எங்கெங்கு எழுத வேண்டும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன் ‘ஓர் ‘ என்றும், மெய்யழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன் ‘ ஒரு ‘ என்றும் எழுத வேண்டும். (உ-ம்) ஓர் ஆடு, ஓர் ஊர். ஓர் இடம், ஓர் ஏடு – ஒரு மாடு, ஒரு வீடு, ஒரு புத்தகம். சிலர், ‘ ஏன் ? ஒரு ஆடு என்று எழுதினால் புரியாதா ? ‘ என்று குதர்க்கம் பேசக்கூடும். ஆனால். தமிழைப்பொறுத்தவரையில் இவ்வாறு கேட்பவர்கள், ஆங்கிலத்தில் எழுதும்போது, a ant, a eagle, a Indian, an table, an chair, an cow என்றெல்லாம் ஒருபோதும் எழுதமட்டார்கள். யாரேனும் இவ்வாறு எழுதினால் – பேசினாலே கூட மனத்துள் – விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பேசுவதும் எழுதுவதும் மற்றவர்க்குப் புரிந்தால் போதும், இலக்கணத்துள் மொழியைத்திணித்துப் புரியாதபடி எழுதக் கூடாது என்று சிலர் சொல்லக்கூடும். இதில் ஓரளவு உண்மை இருப்பினும், அதற்காக எளிய அடிப்படை இலக்கண விதிகளை நாம் மீறலாகாது.

மற்ற இலக்கணப் பிழைகளை விட்டுத்தள்ளுங்கள். ஒருமை, பன்மை விதிகளைக் கூட நாம் அலட்சியப்படுத்தலாகுமா ? ‘தெருவில் எண்ணற்ற வண்டிகள் போய்க்கொண்டிருந்தது ‘ என்று எழுதலாமா ? ‘My children is in Madurai ‘, ‘They was fighting among one another ‘, ‘I doesn ‘t go out after 8 O ‘clock ‘ , ‘ My wife have gone to the temple ‘ என்றெல்லாம் எழுதினால், ‘ அபத்தம், அபத்தம்! ‘ என்று தலையில் அடித்துக்கொள்ளத் தயாராக இருக்கும் நாம், தமிழை

எழுதவேண்டிய முறையையும் அதன் அடிப்படை விதிகளையும் கற்கத்தவறினோம் என்பதற்காக அதைத் தப்புந் தவறுமாய் எழுதுவதோடு அதை நியாயப்படுத்தியும் பேசலாகுமா ? நாம் எழுதுகின்ற மொழியின் மீது நமக்கு மரியாதை இருத்தல் வேண்டாமா ? (தற்போது ‘ ‘வேண்டாம் ‘ என்கிற சொல்லையே எல்லா இடங்களிலும் நாம் எழுதுகிறோம். ‘வேண்டா ‘ என்னும் சொல் வழக்கொழிந்த நிலையை அடைந்துள்ளது. வழக்கொழியும் நிலையை ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால், எளிய இலக்கணவிதிகளையும் கூட இடைவிடாது மீறுவதன் வாயிலாக அவற்றை வழக்கொழிந்தவையாக்கும் போக்கை நாம் அனுமதித்தலாகாது.)

தமிழைத் தவறின்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டதால், அதை முறையாகப் பயிலாத நான், அமரர் கி.வா.ஜ. அவர்களுக்கு என ஐயங்களைத் தெரிவித்து விளக்கம் வேண்டுவது வழக்கம். ( உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர் ஆசிரியராக இருந்து நடத்திய ‘ கலைமகளை ‘ ப் படித்துத்தான் ஓரளவுக்கேனும் பிழையற்று எழுதக் கற்றுக்கொண்டேன். ஏனெனில் நான் தமிழை முறையாய்ப் பயின்றவள் அல்லேன். இந்த இடத்தில் ஓர் ஐயம் ஏற்படுகிறது. ‘ நான் ‘ என்பது இவ் வாக்கியத்தில் எழுவாயாதலால் ‘ அல்லள் ‘ என்று சொல்லக்கூடாது என்று தோன்றுகிறது. ‘ நான் அல்லள் ‘ என்று தமிழில் எழுதுதல், ‘I is not well-versed in Tamil grammar ‘ என்று எழுதுவதில் உள்ள அபத்தத்தை உள்ளடக்கியது என்று தோன்றுகிறது. எனவே, ‘ அவன் … அல்லன் ‘. ‘ அவள்… அல்லள் ‘, ‘அவை… அல்ல ‘, ‘அவர்கள் … அல்லர் ‘, ‘ நாம் அல்லோம் ‘, ‘நான் அல்லேன் ‘ ஆகியவையே பிழையற்றவை என்று தோன்றுகின்றன. இவ்வாறு நினைப்பது சரியா தவறா என்பதைத் தமிழறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.)

80

‘ அன்று ‘ என்பது ஒருமை. ‘அல்ல ‘ என்பது பன்மை. ஆனால் நாம் எல்லா இடங்களிலும் ‘ அல்ல ‘ என்றே எழுதுகிறோம். ‘ இந்தப் புத்தகம் என்னுடையது அன்று ‘ என்றுதான் எழுத வேண்டும். ‘ இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல ‘ என்று எழுதுதல், ஆங்கிலத்தில், ‘ This book are not mine ‘ என்று எழுதும் அபத்தத்துக்கு நிகரானது!

‘ இது சரியா அல்லது தவறா என்பதைத் தமிழறிஞர்கள்தான் விளக்க வேண்டும் ‘ எனும் வாக்கியத்தில் உள்ள ‘ தமிழறிஞர்கள்தான் ‘ என்பது தவறு; ‘ தமிழறிஞர்கள் தாம் ‘ என்பதே இலக்கணப்படி முறையானது என்று சில புலவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அண்மையில் காலஞ்சென்ற தமிழறிஞர் முத்து. கண்ணப்பர் ‘அழுத்தம் ‘ கொடுப்பதற்குப் பயன்படுத்துகையில், ‘தாம் ‘ என்னும் சொல்லைச் சேர்க்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். உதாரணமாக, ‘இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்கள் அவர்கள் ‘தான் ‘ என்று கூறுதலே சரி. ‘தாமே அத் திட்டத்தைச் செயல்படுத்தியதாக அவர் கூறினார் ‘, ‘தாம் விரைவில் வருவதாக அவர் கூறினார் ‘, ‘தாங்களே திருமணச் செலவை ஏற்பதாகப் பிள்ளை வீட்டார் கூறினர் ‘, ‘தங்களால் அரை மணிப் பொழுதுக்கு மேல் காத்திருக்க முடியாது என்று அவர்கள் சொன்னார்கள் ‘ என்பன போன்ற வாக்கியங்களில்தான் ‘தாம், தங்கள், தங்களுடைய ‘ போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பெரியவர் ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது அவரைத் தாங்கள் என்று குறிப்பிட்டு எழுதுவதுதான் முறை என்று நாம் எண்ணுகிறோம். ‘நீங்கள் ‘ என்பதைவிடவும், ‘தாங்கள் ‘ என்பது அதிக மரியாதையானது என்னும் எண்ணம் தவறானது என்பார் முத்து. கண்னப்பர். எனவே, இவரது கருத்தின்படி, ‘தங்கள் சித்தம் என் பாக்கியம் ‘ என்னும் நடைமுறை வாக்கியம் பிழையானது! எனினும் பழக்கத்தில் அப்படி வந்துவிட்டதால், அதைப் பின்பற்றுவதில் தவறில்லை என்பது இவரது கருத்தாகும். அமரர் நா.பார்த்தசாரதி அவர்களும் இதே கருத்துள்ளவர்.

பன்மைக்காகச் சில சொற்களுடன் ‘கள் ‘ என்பதையும் வேறு சில சொற்களுடன் ‘க்கள் ‘ என்பதையும் சேர்க்கிறோமல்லவா ? இவற்றில் எதை எவ்வெப்போது சேர்க்கவேண்டும் என்பதற்குரிய விதி பற்றிய விளக்கத்தை அமரர் கி.வா.ஜ. அவர்களிடம் கேட்டபோது அவர், தமக்கே உரிய சிலேடையுடன், ‘… ‘கள் ‘ எப்போதுமே மயக்கம் தரக்கூடியதுதான்… ‘ என்று தொடங்கி அது பற்றிய விளக்கத்தை அளித்தார்!

அமரர் கி.வ.ஜ. அவர்கள் மிகப் பெரிய மனிதர் என்பதால், அவரது நேரத்தின் மதிப்புக் கருதி, எனக்குக் கடிதம் எழுதும் வேலை வைக்காமல், இரண்டு வரிசைகளில் சொற்களை எழுதி அனுப்புவேன். இரண்டு விதங்களில் எழுதப்பட்டுள்ள சொற்களில், எது சரி, எது தவறு என்பதைக் குறியிட்டுக் காட்டினால் போதுமானது என்னும் குறிப்புடன் அவரது பதிலுக்காக ஓர் உறையையும் இணைப்பேன்.

மறு அஞ்சலில் அவரது பதில் வந்துவிடும். அவ்வாறு அவரிடமிருந்தும், நா.பா அவர்களிடமிருந்தும், இன்னும் சில தமிழ் நூல்களிலிருந்தும் தெரிந்துகொண்டவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

சரி தவறு

தட்டித்தடுமாறி –/– தட்டுத்தடுமாறி

எல்லாரும் –/– எல்லோரும்

ஏழைமை –/– ஏழ்மை

ஒருகால் –/– ஒருக்கால்

பதினொரு –/– பதினோரு

இரண்டாம் வகுப்பு –/– இரண்டாவது வகுப்பு

பதற்றம் –/– பதட்டம்

மனத்தத்துவம் –/– மனோதத்துவம்

அண்மை –/– அருகாமை

மனத்தில் –/– மனதில்

மனம், மனசு –/– மனது

கயிற்றை –/– கயிறை

அடையாற்றில் –/– அடையாறில்

ஆர்க்காடு –/– ஆற்காடு

தவற்றை –/– தவறை

இடப்பக்கம், வலப்பக்கம் –/– இடது பக்கம், வலது பக்கம்

சின்ன பெண் –/– சின்னப் பெண்

முயன்றான், முயற்சி செய்தான்–/– முயற்சித்தான்

முயல, முயற்சி செய்ய –/– முயற்சிக்க

நாகரிகம் –/– நாகரீகம்

கத்தரிக்கோல் –/– கத்திரிக்கோல்

சித்திரிக்க –/– சித்தரிக்க

இன்று, அன்று –/– இன்றைய தினம், அன்றைய தினம்

மெய்ம்மறத்தல் –/– மெய்மறத்தல்

செய்ந்நன்றி –/– செய்நன்றி

இருபத்துநான்கு –/– இருபத்திநான்கு

உயிர்கொல்லி நோய் –/– உயிர்க்கொல்லி நோய்

அழத்தொடங்கினாள் –/– அழுகத்தொடங்கினாள்

அவன் எழுந்தான் –/– அவன் எழுந்திருந்தான்

எழ முற்பட்டான் –/– எழுந்திருக்க முற்பட்டான்

எழுத்துகள் –/– எழுத்துக்கள்

கண்ணீர் துளித்தது –/– கண்ணீர் துளிர்த்தது

இலைமறை காய் –/– இலை மறைவு காய் மறைவு

பழுதை (கயிறு) –/– பழுது

என் மகன், என்னுடைய மகன் –/– எனது மகன்

கூர்கெட்ட –/– கூறுகெட்ட

செலவு –/– சிலவு

ஒருத்தி –/– ஒருவள்

ஒருவன் –/– ஒருத்தன்

வல்லுநர் –/– வல்லுனர்

ஏற்கெனவே –/– ஏற்கனவே

கோக்க –/– கோர்க்க

கருமை. கறுப்பு –/– கருப்பு

புனைபெயர் –/– புனைப்பெயர்

எண்ணெய் –/– எண்ணை

எண்ணெய்யை –/– எண்ணையை

ஒரு நாளுக்கு –/– ஒரு நாளைக்கு

சுவரில் –/– சுவற்றில்


‘என்கிற ‘, ‘என்னும் ‘ ஆகிய சொற்களுக்குப் பதிலாகப் பலரும் ‘என்ற ‘ என்னும் சொல்லை எழுதிவருகிறார்கள். இது தவறாகும். ஏனெனில், ‘என்ற ‘ என்பதற்கு ‘என்று சொன்ன ‘ என்பது பொருளாகும். (உ-ம்) ‘பிறகு வருகிறேன், ‘ என்ற இராமன் புறப்பட்டான்; ‘பெரியார் என்கிற சொல் ஈ.வே.ரா. அவர்களையே குறிக்கும் ‘ ஆகியவை.

பகிர்ந்துகொள்ள, இன்னும் எத்தனையோ உள்ளன. ஆனால், நினைவுக்கு வந்தவை இவை மட்டுமே. தமிழ்ப் புலவர்கள் இக்கட்டுரையில் இருக்கக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா