நிலை

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

குட்டி செல்வன்


தொடர்ந்து பேசுவதற்கு
ஒன்றுமில்லையெனினும்
உனது மௌனம் தருகின்றது
தாங்க முடியாத வலிகளை

நீளும் நிசப்தமுடைத்து
இயல்பாகக் கேட்கின்றாய்
இந்நாட்களில் ஏன் எப்பொழுதும்
அமைதியாகவே இருக்கின்றாயென

உன்னிடம் பதிலென்று சொல்ல
ஏதுமிருப்பதில்லை

நிலையில்லாத‌ க‌ண்ணாடியில்
பிம்ப‌ங்க‌ள் ச‌ரியாக‌ விழுவ‌தில்லைதான்

சருகெனத் தூக்கி தூர வீசினாலும்
உன் கதவுகளைச் சட்டென்று மூடிவிட்டாலும்
திரும்ப உன் கால்சுற்றியே வருவேனென்றும்
உன்னைவிட்டால் எனக்கு உறவென்று
வேறு யவருமில்லை யெனவும்
உன் நம்பிக்கைகள் வலிதாக உருகியிருப்ப‌து
என் பிரியங்களால் மட்டுமே

எனக்கு தெரியும்
நீ பெற்றுக்கொள்ளத் தயங்கினாலும்
அதை ஒருபோதும் வெறுக்கமாட்டாயென

ஆயினும்
என‌த‌னுமான‌ங்க‌ள் தேய்ந்து
காணாமல் போகுமொரு தின‌த்தில்
என் கூட்டை உடைத்து
எங்கோ ப‌ற‌ந்துவிடப் போகிறேன்


kutty.selvan@live.com

Series Navigation

குட்டி செல்வன்

குட்டி செல்வன்

நிலை

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

பா.சத்தியமோகன்.


—————————

பெரும்பாலான மக்கள்
தவறாகத்தான் நம்புகின்றனர்
தவறாகத்தான் செல்கின்றனர்
தவறுக்குள் ஒரு சரியைக் கண்டடைய
ஓயாது வாழ்கின்றனர்
ஓயாது வாழ்ந்து இறக்கும் போது
அவர்களது வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்கின்றனர்
மீளவே முடியாத பல்லாயிரக்கணக்கான சரிகளை.
——————————————————————
pa_sathiyamohan@yahoo.co.in>

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

நிலை

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

பூமணி


வழி நெடுக நினைவுகளைத் தூவிக்கொண்டே போனான். கனமேறும் இருட்டில் துல்லியப் படாத தார் ரோட்டு வளைவுகளை அடிக்கடி லாரி விளக்குகள் தேடிப் பாய்ந்தன.

மூத்த பையன் அவன் விரலுடன் கொக்கி மாட்டிக் கொண்டு நடந்தான். ஓரத்தில் லூசி கொடுங்கையிலும் வயிற்றிலுமாக அசைந்தாள். பாதையிறக்கத்தில் சர்ச் டவரின் சிலுவை ஜோதி பக்கத்து முகடுகளில் பரவியிருந்தது.

காலையில் பாஸ்டர் திடாரென்று வந்துவிட்டார். சொல்லிக் கொண்டு வந்திருக்கலாம். அவனுக்கு ஒண்ணுமே ஓடவில்லை. வாரம் மூணு முறை பார்க்கும் பாஸ்டர் தான். என்றாலும் இப்படி எதிர்பாராமல் வீடுதேடி வந்தது புதுசு. நல்ல வேளை பழைய சோற்றை கொஞ்சம் முந்தியே சாப்பிட்டு முடித்திருந்தான். சிறு பிளேட்டில் ஊறுகாயின் சுவடுகூட இல்லை. கீழே பருக்கைகளும் சிந்தியிருக்கவில்லை.

‘என்ன மிஸ்டர் ஜேக்கப் எப்படியிருக்கீங்க. ‘

வராண்டாவில் நாலு செருப்புக்களைத் தாண்டி பாஸ்டர் நுழையும்போதே எச்சுப் பிளேட்டைக் கவனித்து விட்டுத்தான் கட்டிலில் உட்கார்ந்தார். உட்கார்ந்த பின்னும் அங்கி கரண்டைக் கால்வரை மூடியிருந்தது. அதற்குக் கீழே ஷ்உ பளபளப்பாக.

அவன் ஓடிப்போய் சட்டை மாட்டிக் கொண்டு வந்து பாய் போட்டுக் கீழே உட்கார்ந்தான். லூசி கர்ப்பக் கிறக்கத்திலும் வெளிறிய ஸ்தோத்திரம் சொல்லிவிட்டு பிளேட்டை அப்புறப்படுத்துவதில் அவசரப்பட்டாள். இந்த நாலு வருசமாக பாஸ்டரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை அவள். கருப்பும் வெள்ளையுமாகக் கலந்த மயிர்களை எண்ணெய் மினுங்க வாரிவிட்டு புருவங்கள் தேவ இறக்கை மாதிரி படிந்தவாக்கில் எதிலும் கூர்மைப்பட்டு.. இப்படிப் பார்க்கச் சந்தர்ப்பம் இருந்ததில்லைதான்.

‘சும்மாதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தென். ஒங்களுக்கு இன்றைக்கு ஆபீஸ் உண்டில்லையா ஜேக்கப். ‘

பேச்சுக்கொருக்க கேண்டில் விரல்களை மூடிமூடி விரித்தார்.

அது முக்கியமில்லை என்பது போல் அவன் சொன்னான்.

‘பெறகு போயிறக்கிறலாம். ‘

‘ஓ டைம் இருக்கு அப்ப. ‘

அவர் பார்வை ஷெல்பில் பைபிளின் சாயமடித்த பேப்பர் நுனியில் விழுந்தது. வாசலுக்கு மேல் ஏசுவின் இருதயம் திறந்த வாக்கில் ரத்தக் குழம்பாக படம் தொடங்கியது. அதற்குக் கீழே ரெண்டு வசனங்கள் தெளிவாகத் தெரிந்தன.

‘கொழந்தைகளை எங்க காணும். ‘

லூசிக்கு முகம் களைப்பை மறந்திருந்தது.

‘மூத்தவன் ஸ்கூலுக்குப் போயிருக்கான். பொண்ணு தூங்குதுங்கய்யா ‘

‘காலையிலுமா தூக்கம். ‘

பாஸ்டர் முகம் மலர்த்தினார்.

‘தூங்கித்தான் வீட்ல வேல பாக்க முடியிது. ‘

லூசி சுவர் மூலையில் பிடரியை உரசி கண்ணை மூடிச் சிரித்தாள்.

அவளுக்கு உள்ளூர சந்தோசம். முந்தியெல்லாம் எதிர்த்த வீட்டிற்கு பாஸ்டர் அடிக்கடி வந்தாலும் இந்தப் பக்கம் வருவதேயில்லை. அங்கே வராண்டாவில் சேர் போட்டு அல்போன்சும் அவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டுக் கூடச் செல்வதுண்டு. அவனாக அங்கு போய் ரெண்டு வார்த்தை பேசினால் கொஞ்ச நேரம் கூட உட்காரலாம்.

அல்போன்சுக்கு சொந்த வீடு. எல்லாவற்றிலும் நல்ல வசதியாக இருக்கும்.

பாஸ்டருக்கு ஒரு லிம்காவாவது வாங்கிக் கொடுக்கலாமென்றால் கடைகளும் பக்கத்தில் இல்லை. பஜாருக்குப் போய்த் திரும்ப எப்படியும் அரை மணி நேரமாகும். பாட்டிலோடு தருவானோ என்னமோ அதுவரை பாஸ்டர் காத்திருக்கணும். ‘

‘பாஸ்டர் ஏதாச்சும் சாப்பிடுறீங்களா. ‘

‘நோ தாங்ஸ். எல்லாம் முடிச்சிட்டுத்தான் வறேன். எனக்காக ஒண்ணும் சிரமப்பட வேண்டாம். ‘

என்ன இருந்தாலும் வீட்டுக்கு வந்த பாஸ்டருக்கு செய்தனுப்பத்தான் வேணும். ஞாயிறுகளில் சில வீடுகளுக்கு மொத்தமாக பிரேயருக்குச் சென்றால் என்னமாகச் செய்கிறார்கள். அல்போன்ஸ் வீட்டில் எல்லாவற்றுக்கும் மேல். நானூறு சம்பளத்தில் எப்படித்தான் செலவு செய்ய முடிகிறதோ. கோயிலுக்குக் காணிக்கை கொஞ்சமா போடுகிறார்கள்.

எல்லாரையும் ஒரு நாள் பிரேயருக்கு அழைக்கலாம். செலவு பெரிசில்லை. வாடகை வீடு போதுமானதாக இராதென்றாலும் ஒரு நாளைக்குச் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இதுவரை யாரும் சும்மாகூடக் கேட்டுப் பார்த்ததில்லை. தானாக எப்படி அழைப்பது மற்ற வீடுகளுக்கென்றால் பாஸ்டரே புரோகிராம் போட்டு விடுவார். ஒரு வேளை இனிமேல் சொல்லுவாரோ என்னமோ.

பாஸ்டர் இருமினார்.

‘நம்ம சபையிலருந்து கோயிலுக்கு காம்பவுண்டு கட்டலாம்னு திட்டம். கர்த்தர் பேரால அந்தக் காரியத்த நல்லாச் செய்யணும். என்ன சொல்றீங்க ஜேக்கப். ‘

‘கண்டிப்பாச் செய்யணும் ‘

உள்ளே தொட்டிலில் தூங்கிய குழந்தை அழுதது. லூசி நகன்று போய் இழுத்துவிட்டு வந்து பழைய இடத்திலேயே உட்கார்ந்தாள். அவள் வந்த பிறகே பாஸ்டர் சொன்னார்.

‘எல்லாருமாச் சேந்து காணிக்க குடுத்தா இதுல தடையிருக்காது. ‘

‘அப்படித்தான் அத முடிக்கணும். ‘

‘பெரும்பாலான வீட்ல சொல்லீட்டென். சபைக்காரங்க எல்லாம் இந்தப் புனிதப் பணிக்கு ஆதரவு தந்தாச்சு. இருநூறு முன்னூறுன்னு தராங்க. அல்போன்ஸ் நூறு ஈவினிங் சர்வீசுக்குக் கொண்டு வந்து கொடுக்கிறதாச் சொல்லீட்டாரு. மனசு எவ்வளவு ஆனந்தமாயிருக்கு தெரியுமா. நீங்களும் இயன்றதக் குடுங்க கர்த்தருக்கு. ‘

பாஸ்டர் லூசியையும் பார்த்தார். அவள் அவன் முகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

‘அல்போன்ஸ் வீட்ல நூறா. அப்ப நானும் அவ்வளவு தந்துறென் ஈவினிங். ‘

இப்போது அவன் லூசிக்குத் திரும்பினான். அவள் சமையலறையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

‘அப்ப நான் வரட்டுமா ஜேக்கப் தாங்க்ஸ். ‘

பாஸ்டருக்கு முன்னால் அவர்கள் மண்டியிட்டு ஜபித்தார்கள். அவரும் ஜபம் செய்து ஆசீர்வதித்து விட்டுப் போனார். அவர் கிரிச் கிரிச்சென்று போன பிறகும் அவரது சிரிப்பு சிறிது நேரம் வீட்டுக்குள் இருந்தது.

கோயில் மணியின் ஒலித்திண்ணமும் உள்ளதிர்வுத் தேய்வும் கலந்து மெல்லப் பரவியது.

பையில் ரூபாய்த் தாள்களைப் பிதுக்கிப் பார்த்துக் கொண்டான். அதை எடுத்து வரவே பெரும்பாடாகப் போயிற்று.

அவளுக்கென்றால் செயினுக்கு வட்டி கட்ட வேண்டுமென்று. அதுக்காகவே சண்டை போட்டு இந்த மாதம் எல்லாச் செலவுகளையும் சுருக்கி தனியாக நூறு ரூபாய் எடுத்து வைத்திருந்தாள். அவள் அப்பா வந்திருந்தால் இதற்குள் அது அடகுக் கடைக்குப் போயிருக்கும். அவர்தான் அடகு வைத்துக் கொடுத்து சீட்டையும் கொண்டு போனார். போன கிறிஸ்துமஸ்ஸ்உக்கு துணிமணியெடுத்து பெரிசாகக் கொண்டாடியது. இனி இந்த வருசப் பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் மாச ஆரம்பத்திலேயே தசம பாகம் வேறு கொடுத்தாயிற்று.

பணத்தை எடுத்துக் கொடுக்க அவளுக்கு மனசே இல்லை. அதற்காக அடுத்தவனெல்லாம் கொடுக்கும்போது சும்மா இருக்க முடியுமா. பாஸ்டரிடம் உறுதி சொல்லிவிட்டு சும்மா போனால் நாளைக்கு சபையில் மதிக்க மாட்டார்கள்.

சர்ச்சுக்குள் சர்வீஸ் ஆரம்பமாகியிருந்தது. மண்டியிட்டு ஜபிக்க லூசி கஷ்டப்பட்டாள். முக்காட்டை லேசாக விலக்கி விட்டுக் கொண்டபோது மயிரொட்டி சிலுசிலுவென்று காற்று விசிறியது.

அவன் சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். அல்போன்ஸ் குடும்பம் இன்னும் வந்திருக்கவில்லை. முந்திப் போய் பாஸ்டரைப் பார்த்து காணிக்கையைக் கொடுத்துவிட்ட எண்ணினான்.

ஆர்மோனியத்தின் இசை சுண்டிச் சுண்டி உள்ளே நிறைய குரல்கள் ஒண்ணுக்கொண்ணு துணை பிடித்து ஏறின.

‘புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே – ஆதிநாதா ஜோதிநீ

புத்திதா நான் புதிதாய் உய்யவே. ‘

ஜபக் குரல்கள் கேண்டில் ஜோதியின் விளிம்பைத் தீண்டி எங்கும் உள்நாதமாக வியாபித்துக் கலந்தன.

பாஸ்டர் நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டு பைபிளைத் திறந்தார்.

‘1 கொரிந்தியர் அதிகாரம் 16 ‘ என்று ஆரம்பித்து வசனங்களை வாசித்து முடித்த பின் திருச்சபை ஏற்கவிருக்கும் புனிதப்பணி பற்ரி பிரசங்கத்தில் ரெம்ப் நேரம் சொன்னார். இப்போது அல்போன்ஸ் குடும்பம் பின்னால் உட்கார்ந்திருப்பதை நோட்டத்தில் கவனித்தான் அவன். லூசியிடம் அதைச் சொன்னான். அவளுக்கென்றால் வயிற்றுப் பாரத்தை முகத்தில் சுளிக்கவே சரியாக இருந்தது.

நூறு ரூபாயைக் காணிக்கை கொடுத்து பாஸ்டரின் ஆசீர்வாதத்துடன் திரும்பியபோதுதான் நிம்மதி அவனுக்கு. சர்வீஸ் முடிந்து வருகையில் வாசலோரம் அல்போன்ஸ் நின்றிருந்தார்.

‘ஹலோ சார் இன்னும் காணிக்கை குடுக்கலயா. நாங்க குடுத்தாச்சு. ‘

அல்போன்ஸ் பட்டும் படாமல் சிரித்தார்.

லூசி கைக்குழந்தையை அவனிடம் மாற்றினான். இருவரும் ஆஸ்பத்திரி மேடேறுகையில் சர்ச் மணியின் ஜபநாதம் அதற்குள்ளேயே கரைந்து கொண்டிருந்தது. முன்னால் சென்ற மூத்தபையனைப் பார்த்து லூசி சொன்னாள்.

‘அடே பாதையப் பாத்து மெதுவா போடா. ‘

‘என்ன கட்டில்ல மொடக்கியாச்சு ஆபீசுக்குப் போகலயா. ‘

‘போகணும். ‘

‘அப்பக் கெளம்ப வேண்டியதுதான நேரங்காணாதா. ‘

‘இண்ணைக்கு கேம்ப் போகணும் திருனவேலிக்கு. ‘

‘அப்படியா… பிள்ளையப் பிடிங்க ரெண்டு வெறகெடுத்து அடுப்பில வச்சிட்டு வந்துறென். ‘

லூசி இடுப்பில் கை வைத்துக் கொண்டாள். அவன் பிள்ளையை வாங்கிக் கட்டிலில் இருத்தினான். அது சிணுங்க ஆரம்பித்தது.

‘இந்தா பிடி இவள. நம்மகிட்ட ஆகாது. ‘

குழந்தையை இறக்கிவிட்டு எதிரே பார்த்தான். அல்போன்ஸ் சைக்கிளில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ரெண்டு குழந்தைகள் வழியனுப்பின.

உள்ளிருந்து லூசி சொன்னாள்.

‘அப்பா மேல அவ்வளவு பாசம். ‘

‘ஆமா இப்ப அது ஒண்ணுதான் பாக்கி. ‘

‘ஏன் பேசமாட்டாங்க. ‘

‘மொதல்ல நான் போயித் தொலையணும். ‘

‘எந்தப் பணம் வச்சிருக்கீங்க கனமாத் தூக்கிட்டுப் போக. ‘

‘நீயொண்ணும் கேட்டு வாங்கீட்டு வர வேண்டாம். ‘

‘இல்ல அப்படியும் சொல்லுங்களேன். எதிர்த்த வீட்ல வாயக்காட்டி வாங்கி வான்னு. அவங்கள விட நம்ம பணக்காரங்க காணிக்கைக்கு நூறத் தூக்கிக் குடுக்கொம். ‘

‘இப்ப அதுக்கென்ன. அவங்க எவ்வளவு குடுத்தாங்களாம். ‘

‘கேட்டுப்பாருங்க தெரியும். ‘

‘என்ன. ‘

‘ஐம்பது குடுத்திருக்காங்க. நீங்கதான் என்னமோ பெரிசாக் குடுத்திட்டாங்க. கோயில்லதான் ஏற்கனவே வேண்டிய பணம் இருக்குதாமில்ல. சரி நம்ம குடுத்து ஒருமாசம் ஆகுதில்லையா. அதுக்குப் பெறகும் எத்தனையோ கூட்டத்துல காணிக்கை காணிக்கன்னு சொல்லீட்டுத் தான் இருக்காங்க. ‘

‘பணம் எவ்வளவு இருக்குதுன்னு இவளுக்குத்தான் தெரியும். ‘

‘இல்ல நீங்கதான் கணக்குவழக்கு பாத்துட்டு வந்தீங்களாக்கும். ஒங்களத்தான் கிட்ட அண்ட விடமாட்டங்கிறாங்ளே. ஒயர எட்டி அந்தக் குத்துச் சட்டிய எடுங்க. அரிசியரிக்கணும். ‘

‘ஒனக்கு ஒண்ணுந் தெரியாது. பாஸ்டரப் பத்தி அப்படியெல்லாம் நெனைக்காத. இப்பக்கூட வின்சென்ட் பையன் கிட்ட லட்டர் குடுத்தனுப்பியிருக்கென் ஒரு பத்து ரூவா பணங்கேட்டு. ‘

‘அப்படியா வெசயம். இது எத்தன நாளா. ‘

‘இண்ணைக்குத்தான். அவன் இப்ப வந்துருவான். கர்த்தர் அண்ணண்ணைக்குக் குடுக்காமலா விட்ருவார். ‘

வராண்டா வரை வந்து லாந்தி பாமாலையின் கண்ணியொன்றை முனகினான்.

‘உம் சிலுவைப் பொருட்டே யாவும் நஷ்டம் எனவே… ‘

லூசி கட்டிலோரம் குழந்தையைப் போட்டு முதுகில் தட்டித் தூங்கச் செய்தாள்.

சற்று நேரத்தில் வின்சென்ட் வந்தான். அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. கொடியில் சட்டையையும் ஜன்னலில் சீப்பையும் பார்த்தான்.

‘என்னடா சீக்கிரம் வந்தாச்சு. பாஸ்டர் இருந்தாரா. ‘

‘இருந்தாரு. ‘

பேச்சோடு கால்ச்சட்டைப் பைக்குள்ளிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். லூசி மெல்ல இமையுயர்த்திய போது அவன் உதட்டில் சிரிப்பு நீண்டிருந்தது.

‘லெட்டரக் குடுக்கவும் என்ன சொன்னாரு. ஒடனே பணங் குடுத்துட்டாருல்ல. ‘

பையன் தயங்கிச் சொன்னான்.

‘ஏன் அவரு வரமாட்டாரோ. லெட்டரெல்லாம் கொண்டு வரக் கூடாது. அடுத்த மாதம் இத மறக்காம கையில் குத்துறணும்னு சொன்னாரு. ‘

‘அப்படியா சரி நீ போ. ‘

லூசி இன்னும் குழந்தையைத் தட்டிக் கொண்டிருந்தாள். ஜன்னலில் கிடந்த சீப்பை யெடுத்து வறட்வறட்டென்று சீவினான் அவன். வேட்டியை கொடியில் வீசியெறிந்துவிட்டு இன்னொண்ணு எடுத்துக் கட்டிக் கொண்டான். இது அதை விடக் கொஞ்சம் அழுக்கு கம்மியாக இருந்தது.

‘ஏன் மண்ணா உக்காந்திருக்க. போயி தண்ணி கொண்டு வா. நான் கெளம்பி தொலைக்கணும். ‘

‘எல்லாத்துக்கும் நான் ஒருத்தி இருக்கன்ல கொட்டித் தீத்துக்கிறதுக்கு. ‘

லூசி முழுக்க ஏறிட்டுப் பார்த்தாள். முகத்தில் கோவம் அழுகையை மீறியிருந்தது. அப்போதும் எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தாள்.

***

Series Navigation

பூமணி

பூமணி