ஏழாவது சுவைக்கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

நாகூர் ரூமி


01

வாசல்
====

உள்ளே நுழையவும்
வெளியே போகவும்
உள்ளதுதான் வாசல்
என்றே எண்ணினேன்…

0

வாசல் என்றால்
கதவுகள் வேண்டும்
அவை திறந்திருக்கவும் வேண்டும்
எனினும்
கதவுகள் திறந்திருப்பதனாலேயே
கண்டவரும் நுழைய முடியாது
கண்ணியமான வாசல்களில்

0

காலடி பட்டாலே
கதவுகள் திறக்கின்றன
கலியுக வாசல்களில்

கல்லடி பட்டாலும்
கதவுகள் திறப்பதில்லை
காட்டுமிராண்டி வாசல்களில்

0

முன்வாசலைப் போலவே இருந்தது
பின் வாசலும்
எனினும்
பின்வாசலுக்கு இல்லை
முன்வாசல் மரியாதை

வேண்டியவர்களும் விருந்தினரும்
கடிதங்களும் கவிதைகளும்
முன்வாசல் வழியாக

வேண்டாதவரும் தீண்டாதவரும்
கள்ளர்களும் கோழிகளும்
வசவுகளும் விமர்சனங்களும்
பின்வாசல் வழியாக

ஆனாலும் சமயங்களில்
முன்வாசல் பின்வாசலாகவும்
பின்வாசல் முன்வாசலாகவும்
மாறிப்போவதுண்டு

0

விழித்தவுடன் திறக்க வேண்டும்
வாசல் கதவுகளை
வெளிச்சமும் வருவதற்காக

விடிய விடியத் திறந்திருந்தாலும்
இந்த விதி பொருந்தாது
விடியாத வாசல்களுக்கு

0

சிலந்தி துப்பிய எச்சிலை
துடைக்காத வாசல்கள்
சின்னதாயினும் பெரியதாயினும்
செத்துப்போன வாசல்கள்

0

கருவறைகள் வெளித்துப்பிய
கலைக்கப்பட்ட சிசுக்களுக்கு
ஜனன வாசல்களே
மரண வாசல்கள்

0

வந்தவரை வரவேற்கும்
வீட்டு வாசல்கள்
போனவரை வரவேற்கும்
பூமி வாசல்கள்

0

சுவரெடுத்து வாசல் வைத்தது
அந்தக்காலம்
வாசல்களே சுவர்களாய்
இந்தக் காலம்

சுவர்களையே வாசல்களாக்கும்
செப்பிடு வித்தை தெரியாவிட்டாலும் பரவாயில்லை
சற்றேனும் திறந்து வைக்கவும்
சாளரங்களையாவது

— ஏழாவது சுவை என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகள்.

ruminagore@yahoo.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி